உறைப்புளி

பங்குனி உத்திர வழிபாட்டை முடித்துக்கொண்டு காரில் கோவை திரும்பிக்கொண்டிருந்தோம். நான் முன் சீட்டில். பல தரப்பட்ட பாடல்களை மனம் போன போக்கில்  ஒலிபரப்பிக் கொண்டிருந்தேன். ஒருவகையான கழனிக் கச்சேரி. பிள்ளைகள் பின் சீட்டில் கச்சக்காலடித்துக்கொண்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் ஒட்டன்சத்திரம் வழியாகச் செல்லும் பாதையை திருக்குறளரசி திண்டுக்கல் விலக்கில் கோட்டை விட்டு விட்டாள். கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகும். கொஞ்சமாச்சும் அறிவிருக்கா என கோபித்துக்கொள்ள முடியாது. யோசிக்காமல் நடுரோட்டில் இறக்கிவிட்டு விடுவாள். நமக்கு வண்டியையும் வாயால்தான் ஓட்ட ஏலும். காருடைத்த காலம்தொட்டு அவளே சாரதி.

அரவக்குறிச்சி வழியாகச் சென்ற கார் கன்னிவாடிக்குள் நுழைந்தது. ஊர் எல்லையிலேயே ஓர் உதறல். அண்ணன் இருந்த போது வராத ஊர். கசீசி இறந்த செய்தி குறுஞ்செய்தியாக வந்தடைந்த நாள் இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை மட்டும்தான்  திரு சாம்பார் வைப்பாள். அவரை துவரை முருங்கை கேரட் முள்ளங்கி என சகல காய்கறிகளும் கொண்ட  உக்கிர சாம்பார். மாங்காய் மிக முக்கியம். சீசன் இல்லையென்றால் வெளிநாட்டிலிருந்து கூட மாங்காய் வரவழைப்பாள். அன்று மட்டும்தான் கொஞ்சம் மெத்தென்றிருக்கும் இளம்தோசை கிடைக்கும். மற்ற நாட்களில் சல்லாத்துணி சன்னத்தில் காற்றடித்தால் பறக்கும் தோசை. பிரதி வெள்ளிக்கிழமை மூன்று வேளைகளுமே சாம்பார்தான். இப்படி சமைப்பதும் உண்பதும் அவளது மரபல்ல. நினைவில் வாழும் மாமியாருக்கான ஒரு சடங்கு போல இதைச் செய்கிறாளென இப்போது  தோன்றுகிறது.

அன்றும் தட்டில் கிடந்த தோசை மேல் கொதிக்கும் சாம்பாரை ஊற்றியபடியே சிவக்குமார் அண்ணன் செத்துட்டாராமே என்றாள். சலனமில்லாமல் இருந்தது அவள் முகம். அவரு இப்படிச் சாவறது பத்தாவது தடவைல்லா என்றேன். இரு அவருகிட்டயே எப்படிவே செத்திரூன்னு கேப்போம் என போனை எடுத்தேன்.  க.சீ.சி-1 துவங்கி க.சீ.சி 13 வரை என்னிடம் எண்கள் இருந்தன. அவர் ஒவ்வொரு எண்களையும் மாற்றும் போதும் இப்படி சேமித்துக் கொள்வது வழக்கம். நள்ளிரவில் எந்த எண்ணிலிருந்து அழைத்தாலும் எடுக்காமலிருக்கத்தான் இப்படி சேமித்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் இப்போது வருத்தமாக இருக்கிறது. க.சீ.சி பெங்களூரு ஆக்சுவல் என சேமித்திருந்த எண்களைத் தேடியெடுப்பதற்குள் செய்தியை உறுதிப்படுத்தி இன்னொரு அண்ணனிடமிருந்து தகவல் வந்தது. முதலில் திகைப்பாக இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவர் குடிநோயிலிருந்து மீண்டு வந்த செய்தித் தொகுப்பினை டிவியில் ஒளிபரப்பினார்கள். அதில் அவர் உடை மாற்றும் காட்சிகளெல்லாம் கூட இருந்தது எனக்கு புன்னகை வரவழைத்தது. சாமானிய முகத்தில் ரோமானிய சாயல் எனும் அவரது புகழ்மிக்க வரி ஒன்றை நினைவு கூர்ந்து சிரித்திருந்தோம்.

துக்கத்திற்குப் பதிலாக கோபம் வந்தது. எல்லாத்தையும் பாதில விட்டுப் போயிட்டியே குடிகார நாயே என உள்ளுக்குள் ஒரு கேவல் வந்தது. திரு ஆறுதலாக கையைப் பற்றினாள். நான் அழப்போறதில்ல திரு.. எவனுக்காகவும் அழப்போறதில்லை. அந்த மயிராண்டி (குமரகுருபரன்) வந்தான். பஸ் ஏத்தி விட்ட மறுநாளே செத்துட்டான்னு தகவல் வருது.. இப்போ இந்த மயிராண்டி செத்துட்டான். இவனுகளால துக்கம்தானே எனக்கு மிச்சம். இன்னொரு தோசையை போடுடி. எனக்கு இந்த எழவு கிடையாது. அம்மா செத்த அன்னிக்கே நான் பட்டினி கிடக்கல என்றேன் ஆத்திரமாக.

நிறைய அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. எனக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்திருந்த நண்பர்கள். எதையும் ஏற்கவில்லை. கசீசி, பாஸ்கர், ரமேஷ் - எனக்கு வெறும் எழுத்தாளர்கள் மட்டும் கிடையாது. என் சொந்த அண்ணன்களாகவே ஆகிவிட்டவர்கள். பொறுப்பில்லாமல் செத்து விட்ட கசீசிக்கு நான் துக்கப்பட கூடாது என வறட்டு பிடிவாதத்தில் இருந்தேன். அஞ்சலி கட்டுரைகள் எதையும் வாசிக்கவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு செய்தித்தாள்கள் பார்க்கவில்லை. ஃபேஸ்புக் பக்கம் வரவில்லை. நான்கைந்து நாட்களில் இயல்புக்குத் திரும்பி அன்றாடத்தில் கரைந்து போய்விட்டேன்.

அடுத்த பத்து நாட்களில் முத்தியம்மா நூலை வெளியிட்டுப் பேச திருவண்ணாமலைக்குச்  செல்ல வேண்டியிருந்தது. வம்சி இல்லம் பல வகைகளில் கசீசியின் நினைவைத் தூண்டியது. அவரது பல நூல்களை பவா வெளியிட்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மானசியின் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். உறக்கம் இல்லை. மானசி பாதி வாசித்துப் போட்டிருந்த தி டேல் ஆஃப் டூ சிட்டி மேஜையில் கவிழ்ந்து கிடந்தது. எழுந்தமர்ந்து வாசித்தேன். மனம் ஒட்டவில்லை. நினைவுகள் பொங்கிக்கொண்டே இருந்தன. ஜன்னலுக்கு வெளியே மலை விரிந்து கிடந்தது. நிலவொளியில் அதன் விளிம்புகள் மட்டும் துலங்கி நெருங்கி வருவது போலிருந்தது. குதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் என கொடைக்கானல் தற்கொலை முனையில் எழுதி வைக்க வேண்டுமென கசீசி ஒரு புத்தாண்டு தினத்தன்று போனில் சொன்னது நினைவுக்கு வந்தது. விடிய விடிய நினைவுகள்.  மறுநாள் நூலை வெளியிட்டு பேசும்போது ‘நாளென ஒன்றுபோற் காட்டி’ குறளின் வழியாக கசீசியை நினைவு கூர்ந்தேன்.

காருக்குள் நான் ஈர விழிகளுடன் இருப்பதைக் கண்ட திரு தண்ணீர் தந்து ஆற்றுப்படுத்தினாள். சிவக்குமார் அண்ணனோட முதல் கதை இந்தியா டுடேல வரும்போது அவருக்கு இருவத்தஞ்சு வயசுதான் இருக்கும் திரு. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட இருபது வருசமா இலக்கியத்துக்குள்ளேயே இருந்தாரு. ஆனாலும் பெருசா எழுதலை. பெரிய பெரிய திட்டங்கள் இருந்தது.. விகடன் மாதிரி இதழ்கள்தான் அவரை முழுங்கிருச்சுன்னு இப்ப தோணுது. தன் எழுத்துக்கள் பெருவாரியால படிக்கப்படணும்கிற ஓர்மை அவர்கிட்ட இருந்துக்கிட்டே இருந்துச்சு. வணிக இதழ்களின் பக்க எல்லை, உரை நடை சாத்தியங்களுக்குள்ளார நின்னுக்கிட்டு நவீன கதைகளை அவர் எழுதிப்பார்த்திருக்கிறார். ஒருவகையில அவரை இடைநிலை எழுத்தாளர்னு சொல்லலாம். அவர் பீரியட்ல அவரளவுக்கு ஃப்ளோ இருந்த ரைட்டர்ஸ் ரொம்ப கம்மி. மொழி விளையாட்டுக்கள். நக்கல் நையாண்டிகள். செய்யுளுக்கு நிகரான நெருக்கமான நடை.  குறிப்பா அவர் கதைகளோட முதல் வரிகள் எல்லாமே அற்புதங்கள் (வீடில்லாததும் ஈடில்லாததுமான எங்கள் நாய்) ஆனா திரு, நக்கலும் நையாண்டியும் சிறிய மனிதர்களின் ஆயுதங்கள். ப்ளேஃபுல் நடை ஒரு வரமும் சாபமும். அவரு கடைசி வரைக்கும் நகைச்சுவைங்கிற நட்டை மட்டுமே திருகிட்டு இருந்துட்டாரோன்னு தோணுது. நானும் கூட எளிய ஸ்பார்டனாத்தான் தேஞ்சு மறைஞ்சுடுவேன்னு தோணுது என்றேன். நீ ஒரு கமர்ஸியலான ஆளு.. லெளகீகன். எங்களுக்கு ஒழச்சே தேஞ்சுடுவ. இலக்கியமெல்லாம் உன் வியாபார மனசுக்கு ஒரு சின்ன சொஸ்தம். சற்றே செலவினம் பிடித்த ஒரு பொழுதுபோக்கு என்றாள் சாலையிலிருந்து பார்வையை விலக்காமல். நான் மெளனமாக என் உள்ளங்கைகளைப் பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன்.

கார் குறுகலான சந்துகளில் திரும்பி திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்தது. எனக்கு அந்த ஊரைத் தெரியும். அதன் நீல வானத்தை, இண்டு இடுக்கான தெருக்களை, குணச்சித்தர்களை, சிடுக்கான உறவுகளை, வானம்பார்த்த விளை நிலங்களை என அனைத்தையும் தெரியும். கசீசி செத்த பிறகு வந்த நூலைத் தவிர அனைத்தையும் வாசித்தவன் என்கிற வகையில் நான் வாழ்ந்த ஊர்தான் இது.  திடீரென “ங்கோத்தா .. சின்ன ரைட்டரோ பெரிய ரைட்டரோ.. இருவத்தஞ்சு வருஷம் எழுதியிருக்கான்.. இல்லன்னா இந்தப் புழுத்த ஊரைப் பத்தி எனக்கெப்படி தெரியும்.. தமிழ்நாட்டுக்கு எப்படி தெரியும்.. எழுத்தாளன் க.சீ.சிவக்குமார் பிறந்த ஊர்னு ஒரு போர்டு எழுதி வைக்க மாட்டானுகளா.. இந்த ஊர்ல பொறந்த எவனையும் விட என் அண்ணன் பெரிய மனுஷன்.. வக்காளி அவனுக்கு சாவே கிடையாது.. இளவெயினியும் இளம்பிறையும் கூட அவனை வாசிப்பாங்க.. வாசிக்கச் சொல்லுவேன்” என் மூச்சு வாங்கியது. பொல பொலவென்று கண்ணீர் சட்டையை நனைத்தது. திரு வண்டியை ஒரு போஸ்ட் ஆபிஸ் அருகே ஓரம் கட்டினாள். நான் நிறுத்தாதே .. ப்ளீஸ் நிறுத்தாதே.. இங்கேதான் அவர் அப்பா வேலை பார்த்தாரு என்றேன். திருவுக்கு என்னை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. வண்டி தயங்கி தயங்கி முன்னேறிக்கொண்டிருந்தது. இளவெயினி குழம்பிய முகத்துடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். இளம்பிறை மடி மீது தாவி ஏறி கன்னத்து நீரை துடைத்து முத்தம் வைத்தாள். 

     ஊர் எல்லையில் ரோட்டோரம் இருந்த டீக்கடை வாசலில் ஒரு போர்டு இருந்தது. க.சீ.சிவக்குமார் டீக்கடை. திரு கூவினாள். டேய்.. இங்க பாரு அவரு பேருல ஒருத்தர் டீக்கடை வச்சிருக்கார். காரை ஓரம் கட்டி இறங்கினோம். ஒரு பெட்டிக்கடை. தொட்டாற் போல ஒரு டீக்கடை. அடுத்து ஒரு இடுகலான வீடு. அதற்கடுத்து ஒரு புரோட்டாக் கடை. பரோட்டா மாஸ்டர் ஈர விறகில் பொங்கும் புகைக்கு கண்களை இடுக்கிக்கொண்டே மாவை காற்றில் துவைத்துக்கொண்டிருந்தார்.

டீக்கடை வாசலில் ப்ளாஸ்டிக் நாற்காலியில் ஒரு காமராஜர் இருந்தார். முழங்கை தொடும் கதர் சட்டை கதர் வேட்டி. அச்சு அசல் பனையேறி நாடாருக்கேயுரிய கருமையும் தோரணையும். எந்த மகமைன்னு தெரியலையே..நான் அவரை நெருங்கி தயங்கின குரலில் டீ கிடைக்குமா என்றேன். டீ முடிஞ்சுருச்சு. பிள்ளைகளுக்கு வேணுமானா பால் சுட வச்சித் தரட்டுமா என்றார். நான் மெள்ள இந்த கடையோட பேரு.. என இழுத்தேன். ஆமா இது க.சீ.சிவக்குமார் முதன் முதல்ல நடத்தின டீக்கடை. அவரு நினைவா இருக்கட்டும்னு இந்தப் பேர வச்சிருக்கோம். நீங்க யாரு என்றார். நான் அவரோட வாசக.. திரு அவசரமாக இடை மறித்து தம்பிங்க.. கசீசிவக்குமாருக்க தம்பி... நாங்கூட தங்கச்சிங்க.. என்றாள். பெரியவர் வினோதமாக எங்களைப் பார்த்தார். அவர் அப்பா கூட போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்த்தாரு.. அண்ணியும் கூட தெரியும்..பேசியிருக்கேன் என்றேன் படபடப்பாக. பெரியவர் வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சிவக்குமாருக்கு வேண்டியவங்க வந்திருக்காங்க என குரல் கொடுத்தார். திரும்பி எங்களைப் பார்த்து நான் சிவக்குமாருக்கு அப்பாங்க.. சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கின.

பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு ஒரு அம்மா வந்தார். சுங்கிடி கட்டிய அசல் கொங்குப் பெண்மணி. கருணை பொழியும் கண்கள். உக்காரு ராசா. இதுக என் பேத்திகளா என்றார். அவரைக் கண்டதும் என் பதினான்கு மாத துக்கம் வெடித்துக்கொண்டு கிளம்பியது.. அவரது கரங்களைப் பிடித்துக்கொண்டு குலுங்கி அழத் துவங்கினேன். சாலை வழி சென்றவர்கள் எங்களை வினோதமாகப் பார்த்தபடி நகர்ந்தனர். அம்மாவே என்னை தேற்றியமரச் செய்தார். பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று விளையாட ஆரம்பித்தார்கள். நான் கசிசீயுடனான என் நினைவுகள் அனைத்தையும் - கோபங்கள் உட்பட கொட்டித் தீர்த்தேன். அம்மா வீட்டிற்குள் சென்று ஒரு பழைய நோட்டை எடுத்து வந்தார்கள். கசீசியின் புகைப்படம் ஒன்று உள்ளே இருந்தது. நீல வான நிற பின்னணியில் எடுக்கப்பட்ட படம். இன்னொரு நோட்டில் சிவக்குமார் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகள், ஸ்வேதாவின் நூல் பற்றிய செய்திகள் கத்தரித்து ஒட்டப்பட்டிருந்தன. பிள்ளைகளுக்கு ஜூஸும் பழங்களும் தின்பண்டங்களும் வந்துகொண்டே இருந்தன. இளவெயினி ஓடிவந்து இதுவும் நம்ம தாத்தா வீடாப்பா என்றாள்.

அப்பா ஒரு ரூமைக் காட்டி இந்த ரூமுலதான் பாஸ்கரு ரமேஷுல்லாம் வந்தா படுத்துக் கெடப்பாங்க.. தோட்டத்துக்குப் போகறதுன்னா பசங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவர் ஹோட்டல்காரரிடம்  மகன் வந்துருக்கான் புரோட்டாவும் மட்டன் சுக்காவும் ரெடி பண்ணு என்றார். நான் அவசரமாக மறுத்தேன். எங்கள் காரில் போதுமான அளவிற்கு ஊண் உணவும் தின்பண்டங்களும் இருந்தன. அதற்குள் அம்மா காரில் புளி, தேங்காய் போன்றவற்றை ஏற்றி விட்டார். இவ்வளவு புளியை சமைக்கிறதுக்கு ஒரு வருஷம் ஆகுமேம்மா என திரு அங்கலாய்த்தாள். நம்ம தோட்டத்துப் புளிதான்..இருக்கட்டும் என்றார் அம்மா. இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் வீட்டையே எழுதிக் கொடுத்து விடுவார்கள் போலிருந்தது. உபசரிப்பின் கணம் தாளவில்லை. ஸ்வேதாவின் எண்களைப் பெற்று அங்கிருந்தே அழைத்தேன். பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் என்பதால் அவள் அழைப்பை ஏற்கவில்லை. நரேனுக்காக வாங்கி வைத்திருந்த ஜெயமோகன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு காரில் இருந்தது. பிரிய மகள் மகாஸ்வேதாதேவிக்கு என எழுதி அப்பாவிடம் கொடுத்தேன். இந்நேரம் புத்தகம் அவள் கையில் கிடைத்திருக்கும். அப்பாவை ஆரத் தழுவி அம்மாவின் பாதம் தொட்டு பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.

ஊர் திரும்பிய மறுதினம் திரு கருவாட்டுக் குழம்பு வைத்தாள். சப்பென இருந்தது. மசாலாவே ஏறலை என சிணுங்கினேன். நிறைய காரம் போட்டேனே என்றாள். மறுநாள் மீன் சமைத்தாள். லேசான இனிப்பு. முறைத்தேன். என்னைப் பார்க்காதே.. ரெண்டு ஸ்பூன் மிளகாப்பொடி அதிகம் போட்டேன் என்றாள். பொய். பிள்ளைகளுக்காக காரமில்லாமல் சமைத்துவிட்டு கபட நாடகம் ஆடுகிறாளென நினைத்துக்கொண்டேன். இரண்டொரு நாள் கழித்து மொச்சைக் குழம்பு. மீண்டும் தித்திப்பு. என்னடி நடக்குது.. குழம்புல உப்புக்குப் பதிலா சீனி போடறியாடி..என உறுமினேன்.

நான் என்ன செய்யட்டு உங்க அண்ணன் தோட்டத்துப் புளி இனிக்குது.. சரிதான்.. அவனுக்கு இனிப்பைத் தவிர வேறு என்ன தெரியும்?!

Comments

Popular Posts