துவைத்தலும் துவைபடுதலும்

ன்னை நானே ரொம்ப பிஸியான ஆளாக கற்பிதம் செய்துகொண்டு என் துணிகளை துவைத்துபோட ஒரு வயதான பெண்ணை பணித்திருந்தேன். எங்களுக்குள் போட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தபடி மூன்று நாட்களுக்கு ஒரு முறை துணிகளை சலவைத்துள் கலந்த நீரில் ஊறவைத்துவிடுவது என் பொறுப்பு. மேற்படி துணிகளை செவ்வனே துவைத்து காயப்போடுவது கிழவியின் பணி. இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வாரத்திலிருந்தே கடமை தவற ஆரம்பித்தாள் கிழவி. மூன்று நாட்கள் என்பது ஒரு வாரமாகி, சமயங்களில் பத்துநாட்களுக்கு ஒரு முறை வருவதும் துவைத்தபின் ஏதேச்சதிகரமாக காயப் போடாமல் வைத்துவிட்டு எஸ்கேப் ஆவது என கிழவியின் அழிச்சாட்டியங்கள் நாளுக்கு நாள் அதிகமானது.

தவிரவும், காலர் அழுக்குகளுக்கு யாதொரு பங்கமும் வராமல் துவைப்பது, சட்டை பட்டன்கள் தெறித்து விழும்வரை துணிகளை வெறிகொண்டு அடிப்பது போன்ற சேட்டைகளையும் தட்டிக்கேட்க வழியற்றவனாய் இருந்தேன். இதற்கெல்லாம் உச்ச கட்டமாக இஸ்திரி போட கொடுத்த துணிகள் அழுக்கானவை என்றும் துவைக்காத துணியை கடைப்பக்கம் கொண்டுவராதீர்கள் என்றும் எனது ஆஸ்தான அயனர் அய்யனார் கோபம் கொப்பளிக்க கத்திய ஒரு ஞாயிறு மாலையில் அந்த மிக முக்கிய தீர்மானத்தை எடுத்தேன். இனிமேல் எந்தக்கிழவியின் உதவியையும் நாடாது எனது துணிகளை நானே துவைப்பது என்று.

துணி துவைக்கும் தொழில்நுட்பம் ஒன்றும் நான் அறியாதது அல்ல. துணியின் சகல பாகங்களிலில் இருக்கும் அழுக்கை நீக்கும் வண்ணம் துவைப்பது ஒரு வகை என்றால், காலர், கை இடுக்கு, போன்ற இடங்களில் மட்டும் சற்று கவனம் அதிகம் செலுத்தி துவைத்த துணி போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தி விடுவது இன்னொரு வகை. முன்னதை விட பின்னது சுலபம். பத்தாம் வகுப்புவரை படிப்பில் படுசுட்டி என்பது போன்ற ஒரு கற்பிதத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி வந்ததில் என்னுடைய துணிமணிகள் அம்மாவினாலோ, அக்காக்களினாலோ துவைத்து தரப்பட்டு வந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு துரதிர்ஷ்ட தினத்தில் இருந்து என்னுடைய துணிகளை நானே துவைப்பது, காய போடுவது, எடுத்து மடிப்பது, இஸ்திரி போடுவது, பட்டன் போய்விட்டால் நானே தைப்பது என்ற கடும்போக்கு எனது வீட்டில் கடைபிடிக்கப்பட்டது. ‘சீட்டுக்காரன விட மோசமான பய...’ என்று அப்பத்தா அப்பட்டமாக அறிவித்தாள். ஸ்கூல் பர்ஸ்ட் எடுப்பேன் என நம்பவைத்து நூழிலையில் பாஸ் செய்தேன் என்ற கோபம் அவர்களுக்கு.

சாப்பிடுவது, காபி குடிப்பது, பயணிப்பது, படிப்பது, காலாற நடந்து போய் பெருமாள் கோவில் பேட்டையில் ஒண்ணுக்கடிப்பது என்றால் கூட எனக்கு ஒரு கம்பெனியன் வேண்டும். இந்த பிரச்சனை துணி துவைக்கையிலும் ஏற்படுகையில் எனக்கு சிக்கியவன் விஸ்வம் மட்டும்தான். ஞாயிறன்று துணிகளை ஊறவைத்தபின் விஸ்வத்தை வீடு தேடி சென்று ஏதாவது பொய் சொல்லி அழைத்து வருவேன். ‘ஒரு அஞ்சு நிமிஷம்டா... துணி துவைச்சிக்கிறேன்’ என அவனை அருகே அமர்த்திவிட்டு துவைக்க ஆரம்பிப்பேன். விஸ்வம் எனும் புத்தகப்பாம்பிற்கும் என்னை விட்டால் படித்ததை வாந்தியெடுக்க வேறு ஆள் இல்லை என்பதால், இந்தியா டூடே, வாஸந்தி, விஸ்லவா சிம்போர்ஸ்கா, சங்கசித்திரங்கள் என ஆரம்பித்து சென்றவார உலகம் வாசிப்பான். அவனது பேச்சு சுவாரஸ்யத்தில் துணி துவைக்கும் எரிச்சலே தெரியாது.

அதையே இப்போதும் கடைபிடிக்கலாம் என முடிவு செய்து பக்கத்து ரூம் சிவாவை ‘வாங்க பாஸ்... கொஞ்சம் கம்பெனி கொடுங்க... துணி துவைக்கற வரைக்கும்’ என்றேன். என்னை ஒரு தினுசாக பார்த்தவர் ‘பாஸூ லேசா தலை வலிக்குது’ என்று மாயமாய் மறைந்தார். சைத்தான் கி பச்சா என சபித்துவிட்டு காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு துணி துவைக்க ஆரம்பித்த போதுதான், துணி துவைத்தல் என்பது எத்தனை சிரமமான பணி என்ற உண்மை உறைத்தது. என்னுடைய துணிகளை துவைத்தலே இத்தனை சிரமம் என்றால் ஒரு குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களின் துணிகளையும் துவைக்கும் வீட்டுப்பெண்களின் சிரமம் புத்தியில் உறைக்கிறது. இத்தனை சிரமமான பணியை நம் பாட்டியின் வயதொத்த ஒரு கிழவியிடம் ஒப்படைத்து விட்டு அதிலும் ஆயிரம் நொட்டை சொல்கிறோமே...ச்சே எத்தனைக் கொடுமை? மனிதாபிமானமே இல்லாதவனாக நடந்து இருக்கிறோமே எனக் குற்ற உணர்ச்சி வாட்டியது.

அந்த சமயத்தில் துவைக்கும் கல்லை கடந்து போன பிரதாப் சேட்டனிடம் நம்முடைய மகாச்சிந்தனையை பகிர்ந்து கொள்ளலாமே என்றழைத்து எனது அபிப்ராயத்தை பகிர்ந்து கொண்டேன். விழிகள் சிவக்க ஆத்திரத்துடன் என்னிடம் சொன்னார் “போய் பணி நோக்கடா மோனே...”

Comments

ஹைய்யோஓஓஓ...

ஆருமையான நீரோட்டம்போல ஒரு நடை செல்வா.

ரசித்தேன்.

டீச்சரா ஆனதால் ஒன்னே ஒன்னு.

நூழிலையில் = நூலிழையில்

நூல் + இழை
selventhiran said…
வாங்க கோபால் சார்... இந்த பக்கம் ரொம்ப நாளா வரத்தே இல்லை. தவறைத் திருத்தியதற்கு நன்றி.
உள், வெளி குத்துகள் இல்லை
ஆனா, செம குத்தால்ல இருக்கு பதிவு.

சின்ன சின்ன விஷயங்களை கூட அழகாக பதிவு செய்கிறீர்கள்.
ரி said…
சலவக் காரி கட்டுர அயகு! மெக்ஸிகோ சலவக்காரி சோக் மாரியே ரீஜன்டா கீது.
இத்தப் படிக்க சொல்லோ எனுக்கு ஒன்னு கேவகம் வருதுமே! அந்தக் காலத்திலே சரோசாதேவின்னு ஒரு பொம்மனாட்டி நெரிய புக் எயுதுவா. பொம்பாடா இக்கும். சுஸ்தாய்ப் பூடும்! அத்தினி அட்டூலியத்தையும் வெலாவரியா எய்திட்டுக் கடேசீலே சொல்வா பாரு…
இதெல்லாம் ரொம்ப ராங்கு! இலைநருங்கோ ஒயுக்கமா வாயனும் அப்டி சொல்லி முடிப்பா.

ஒன்னொட கட்டுரயிலும் இஸ்டார்டிங்குலே கெயவியோட டிரிக்கையெல்லாம் காரி மீஞ்சிட்டுக் கடேசீலே டச்சிங்கா முட்ச்சிட்டே! பீலிங் ஆவுதும்மே மெய்யாலுமே!

Popular Posts