புகழோங்கித் திகழ்தல்


 

உலகின் பிரபலமான அச்சங்களுள் ஒன்று மேடை பயம். ஆனால், இந்நூலை நீங்கள் வாசிக்கத் தேர்ந்ததில், உங்களுக்குப் பேச்சில் பிரியம் உண்டு என்பதைப் புரிந்துகொள்கிறேன். சில தயக்கங்கள், மெல்லிய குழப்பங்கள், ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் இருக்கலாம். அவை எளிதான பயிற்சிகளின் வழியாக சுலபமாகத் தாண்டக் கூடியவையே. சற்று சவாலான சில தடைகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்நூல் அதிகமும் பேசுகிறது. 


ஓர் அறிவியக்கமாகத் திகழ்ந்த தமிழ் மேடைகளின் தரம் இன்று பெருமளவில் தாழ்த்தப்பட்டுள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே சிறந்த உரைகளை நல்குகிறார்கள். பாமரர்களையும் சிந்திக்கத் தூண்டும் பொறுப்புடைய அறிஞர்களெல்லாம், ஒரு கோமாளியின் அளவிற்குக் கீழிறங்கி கூத்தடிக்கிறார்கள். ஆழமான உரையாளர்களுக்குரிய இடத்தைத் தங்கள் கேளிக்கைச் செயல்பாடுகளால் இல்லாமல் ஆக்குகிறார்கள். நமது மேடைகளைக் கவனிக்கிற வெளியாள் நமது சமூகத்தின் அறிவுத்தரம் மீதான நம்பிக்கையை இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. 


 இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் ஆழமான உரைகளை வழங்க முடியும். 


நவீன வாழ்க்கையில் நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசியே ஆகவேண்டிய தருணங்கள் அமைந்துகொண்டே இருக்கும். இந்நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எல்லா வகையான உரைகளுக்கும் பொருந்தக்கூடிய ஆதார விதிகள்தான். ஆகவே இது அனைவருக்குமான புத்தகம்தான். 


இந்தப் புத்தகத்தில் சபை வணக்கம், உள்ளடக்கம்,– உரை தயாரிப்பு, உள்ளடக்கத் தொழில்நுட்பங்கள், உச்சரிப்பு, தன்னியல்பாக அடையும் உச்சங்கள், மேடை நாகரீகங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கவித்துவ இறுதி என பல்வேறு விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன். இவை ஓர் எளிய அடிப்படை மட்டுமே. மேலதிக ஆர்வம் உள்ளவர்களுக்கென ஆயிரக்கணக்கான புத்தகங்களும் நூற்றுக்கணக்கான பயிற்சி வகுப்புகளும் உள்ளன. 


8 வயதில் மேடையேறினேன். அதன் பிறகான முப்பதாண்டுகளில் ஆன்மிகச் சொற்பொழிவாளனாக, பட்டிமன்றப் பேச்சாளனாக, இலக்கிய உரைகளை நிகழ்த்துபவனாக, அரசியல் உரைகளைத் தயாரித்துக் கொடுப்பவனாக, பேச்சுப் பயிற்சி அளிப்பவனாக என்று அந்தந்த வயதிற்கும், காலகட்டத்திற்கும் ஏற்ப மேடைகளோடு ஒட்டி ஒழுகிய வாழ்க்கை என்னுடையது. இவற்றையெல்லாம் தாண்டி இந்நூலை எழுத எனக்கிருக்கும் தகுதியாக நான் கருதுவது, கடந்த ஒரு நூற்றாண்டின் மேடை உரைகளை வாசித்தும் கேட்டும் அவதானித்தும் ஆய்வுகளைச் செய்ததுதான். 


தோன்றிற் புகழோடு தோன்றுக என்றால் பிறக்கும்போதே பெருமையோடு பிறக்கவேண்டும் என்று பொருளல்ல. அது மன்னர் மகன்களுக்குத்தான் சாத்தியம். ஓர் அவையில் தோன்றுவதாக இருந்தால், ஒரு மேடையில் தோன்றுவதாக இருந்தால், அதற்குரிய தகுதியோடும் புகழோடும் தோன்றுக என்பதே இதன் மெய்ப்பொருள். இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் தோன்றும் சபைகளில், மேடைகளில் நீங்கள் புகழோங்கித் திகழ்வீர்கள்.


இந்தப் புத்தகம் நீட்டி முழக்காமல் வளவளத்துக்கொண்டிராமல், ஒரு க்ராஷ் கோர்ஸ் போல பயன்பட வேண்டுமென்று விரும்பினேன். முடிந்த மட்டும் மிகச்சுருக்கமாக எழுதி இருக்கிறேன். என்னுடைய இலக்கிய உரைகள் சிலவற்றை இணைத்துள்ளேன்.  


வாசித்து கருத்துரைத்த காளி ப்ரசாத்துக்கும், அட்டைப்படம் நல்கிய சந்தோஷ் நாராயணனுக்கும், கிண்டில் நூலாக வெளியிட உதவிய அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கும், அச்சுப் புத்தகமாக வெளியிடும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ராம்ஜீக்கும் காயத்ரிக்கும் புத்தக வடிவமைப்பு செய்த விஜயனுக்கும் உற்சாகமூட்டிய ஜீரோ டிகிரி வித்யாவுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். 


தலை சிறந்த பேச்சாளராகவும் தன்னை நிறுவிக்கொண்ட என்னுடைய ஆசிரியர் ஜெயமோகனுக்கு இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன். 

- செல்வேந்திரன்

k.selventhiran@gmail.com

 புத்தகம் வாங்க: https://tinyurl.com/mva4nb7e

கிண்டிலில் வாசிக்க: https://www.amazon.in/dp/B0BSR6JH7C


Comments

Popular Posts