மேடைப்பேச்சின் பொன்விதிகள் - கட்டணமில்லா பயிற்சி வகுப்பு


 முன்பு ‘ஆனந்த் சார்’ என்பவர் ரியாலிட்டி ஷோக்களில் பாடுகிறவர்களுக்குப் பயிற்சி அளிப்பார்  இல்லையா அதுபோல இப்போது பேச்சு நிகழ்ச்சிகளுக்கு நான். 


தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, திமுக நூற்றாண்டு பொறியாளர் அணி பேச்சுப்போட்டி, யான் குறளின் குரல், கொழும்பு றோயல் கல்லூரி, தமிழோடு உறவாடு என இளம்தலைமுறைப் பேச்சாளர்களை அடையாளம் காணவும் பயிற்சி அளிக்கவும் காலம் எனக்கு சில வாய்ப்புகளை அளித்திருக்கிறது. 


என்னை நான் சிறந்த பேச்சாளனாகக் கருதியதில்லை. அதற்குரிய குரல் ஆளுமை, மொழிவளம், உச்சரிப்பு, இலக்கியத் தேர்ச்சி எனக்குக் கிடையாது. நான் நிலைகொண்டிருப்பது  என்னுடைய முன் தயாரிப்பினால் மட்டுமே. 


கருத்துக்களை வெளிப்படுத்துவதே பேச்சின் நோக்கம். ஓர் உரை அதன் விளைவுகளால் அளவிடப்பட வேண்டியவை. சொற்பொழிவுகள் கேட்டு மகிழ்வதற்கானவை அல்ல. ஏற்றும் மறுத்தும் முன் நகர்கிற சிந்தனைப்புள்ளிகளை அளிப்பதே காலத்தின் தேவை. 


புதுயுகம் தொலைக்காட்சி ‘தமிழோடு உறவாடு’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஞாயிறன்று நிறைவடைந்தது. பல கட்ட சவால்களுக்குப் பிறகு தேர்வான 14 இளம் போட்டியாளர்கள். முனைவர் கு. ஞானசம்பந்தன், தம்பி முத்துக்குமரன் ஆகியோருடன் நானும் ஒரு நடுவர். தொகுப்பு அனிதா சம்பத். எங்களுக்கு இது ரீயூனியன். கன்னியப்பன் மட்டும்தான் மிஸ்ஸிங்.  


நிகழ்ச்சியை வடிவமைத்தது, தலைப்புகளை இறுதி செய்தது, முழுவீச்சாக முன்நின்று நடத்தி முடித்தது வலையுலக மார்க்கண்டேயர் பரிசல் கிருஷ்ணா. திருப்பூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நிர்வகித்த அனுபவத்தோடு, ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம், சோஷியல் மீடியா நாடி அறிந்த விவேகத்துடன் அவர் சுழன்றடித்தார். 


இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரே நாளில் 5 எபிஸோடுகளைப் படம்பிடித்தவர் எனும் புதிய சாதனையை பரிசல் அன்று படைத்தார். நான் பிக்பாஸில் எஸ்டிஆருடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது, வெந்து தணிந்தது காடு படப்படிப்பும் நடந்துகொண்டிருந்து. சண்டைப் படம். ‘குறைஞ்ச பட்சம் ஒரு எலும்பு முறிஞ்சாதான் ஜிவிஎம் ஷாட் ஓகே பண்ணுவார்’ என்பார் எஸ்டிஆர் வேடிக்கையாக. மிருதங்கச் சக்கரவர்த்தி க்ளைமாக்ஸ் மாதிரி நடுவர்களின் கடைவாயில் ரத்தம் கசியத்துவங்கிய பிறகுதான் பரிசல் படப்பிடிப்பை நிறைவு செய்தார். 


புதுயுகம் அலுவலகத்தில் இறங்கியதில் இருந்து சன்மானம் வாங்கிக்கொண்டு கிளம்பும்வரை அவர்கள் போடும் ‘விஜய் காரில் ஏறி விட்டார்; கதவைச் சாத்திவிட்டார்; வீட்டிலிருந்து சீறிப்பாய்ந்த விஜய் கார்; இது காரா இல்லை தேவலோகத் தேரா? ரீதியிலான ஃபோட்டோ கார்டுகள் எனக்கு ஜிலுஜிலுப்பாக இருந்தது.                                              


பேச்சுத்துறையில் முன்னேற விரும்பும் இளையோருக்கான என்னுடைய டிப்ஸ்: 


ராணுவ ஒழுங்கு அவசியம். அன்றாடம் பல மணி நேரங்களைப் பரந்துபட்ட வாசிப்புக்கு ஒதுக்கியே ஆகவேண்டும். சிந்தனைப் பயிற்சி முக்கியம். குறிப்பிட்ட சில துறைகளிலேனும் ஆழங்காற்பட்ட அறிவைத் திரட்டிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அதிகம் தொந்தரவு செய்யாத ஒரு நிரந்தர வேலை அவசியம். 


அறிவுக்கான மேடைகள் அருகிவருகின்றன.  எஞ்சிய மேடைகளிலும் காமெடியன்களும், ஆள்வோர்க்கு அணுக்கமானவர்களுக்கும்தான் நிறைந்திருக்கிறார்கள்.  ஒரொரு சொல்லையும் அரசியல்சரியுடன் பேசியாக வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் அடிவெளுத்துவிடுவார்கள். மன்னாதிமன்னர்களெல்லாம் கூட ஏதேனும் அரசியல் சிக்கலில் மாட்டி சில நாட்கள் மேடையேற முடியாமற் போய்விடுவதுண்டு. ஆகவே, பத்தாம் தேதியாவது அக்கவுண்டில் சம்பளம் வந்துவிழுவது லிவருக்கு நல்லது. 


வருகிற ஜனவரி 18 ஆம் தேதியுடன் ‘மேடைப்பேச்சின் பொன்விதிகள்’ வெளியாகி இரண்டாண்டுகள் நிறைவடைகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக அதே நாளில் (18-01-2026 - ஞாயிறு மாலை 6 மணிக்கு) ஆன்லைனில் கட்டணமில்லா பேச்சுப் பயிற்சி அளிக்கலாமென நினைக்கிறேன். அதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள கூகிள் ஃபார்மில் விண்ணப்பிக்கலாம்.  


கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்க

Comments

Popular Posts