மறவோம் - Remembering Bapuji உரை

 மதிப்புக்குரிய ஆசிரியர் திரு. கமல்ஹாசன் ஒருங்கிணைத்த “மறவோம் - Remembering Bapuji & Brothers” நிகழ்வில் செல்வேந்திரன் ஆற்றிய துவக்க உரை: 


அனைவருக்கும் வணக்கம்.


காந்தியாரை மிகவும் நேசித்த ஜெயகாந்தனுடைய வரிகளோடு இந்த உரையை துவங்குவது பொருத்தமாக இருக்கும். 


“கும்பல் என்பது கூடிக் கலைவது; 

கூட்டம் என்பது கூடி வாழ்வது. 

கும்பல் என்பது கூடி அழிப்பது, 

கூட்டம் என்பது கூடி உருவாக்குவது.

வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. 

கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.” என்கிறார். 


இங்கே திரண்டிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு கூட்டம்தான். 


நண்பர்களே, 


ஒரு விடுதலைப் போரை, மக்கள் புரட்சியை தலைமையேற்று  நடத்தியவர்கள் அந்த நாட்டின் அதிபராக, பிரதமராக ஆட்சி செய்வார்கள்.  உலக வரலாற்றிலேயே  அதற்கு ஒரேயொரு விதிவிலக்கு காந்திதான். 


காந்தி மதுரைக்கு 6 தடவைகள் வந்திருக்கிறார். 


முதல்முறை வந்தபோது அவருக்கு வயது 50. ரொளலட் சட்டத்தை எதிர்த்து மக்களை குறிப்பாக இளைஞர்களைத் திரட்டுவதற்காக வந்தார்.


இரண்டாவது வருகை ஒத்துழையாமை இயக்கத்தின் பிரச்சாரத்துக்காக. அப்போது அவர் மேலமாசி வீதியில் ராம்ஜி என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். மதுரை சுற்றுவட்டாரப் பகுதி  விவசாயிகளையும் சாமானிய மக்களையும் கண்டார். அவர்களிடம் உடுத்துவதற்குக் கூட முழுமையான உடைகள் இல்லாததைக் கண்டு மனம் நொந்தார். தனது குஜராத்தி ஆடைகளைத் துறந்து முழங்கால் அளவுள்ள கதராடைக்கு மாறினார். காந்தியின் ‘அரையாடைப் பக்கிரி’ தோற்றம் மதுரையில்தான் உருவானது. உலகமெங்கும் ஒடுக்கப்படுகிறவர்களின் ஓர் அடையாளச்சின்னமாக காந்தியைக் கொண்டு சேர்த்தது அந்தத் தோற்றம்தான். 


காந்தியின் மூன்றாவது மதுரை வருகையும் ஆடை தொடர்பானதுதான்.கதராடை உற்பத்தியை ஊக்குவிக்கவும் அதற்காக நிதி திரட்டவும் வந்தார். அப்போது அவருக்கு வயது 58. (திரு. கமல்ஹாசன் அவர்கள் நமது கதராடைகளை மேற்குலகிற்கு அறிமுகம் செய்யும் KH house of Khadar எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்) 


நான்காவது வருகை 1934ல். தீண்டாமை ஒழிப்புப் பயணம். உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுமாறு காந்தியை அவரது நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆலயத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்கும் வரை, நானும் இந்தக் கோயிலுக்குள் நுழைய மாட்டேன்" என்று உறுதியாக மறுத்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 65. 


ஐந்தாவது வருகை 1946ல். இடைக்காலத்தில் ஐயா கக்கனும், வைத்தியநாத ஐயரும் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேச போராட்டத்தின் விளைவாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனைத்துத் தரப்பு மக்களும் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதனால் மனம் மகிழ்ந்த காந்தி தனது ஐந்தாவது வருகையின் போதுதான் முதல்முறையாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அப்போது அவருக்கு வயது 77.


ஆறாவது முறையாக காந்தி மதுரைக்கு விமானத்திலோ, ரயிலிலோ, காரிலோ வரவில்லை. ஏன்.. நேரில் கூட வரவில்லை. மாறாக, அவர் இங்கே வந்து சேர்ந்தது குருதி படிந்த ஆடைகளாக. சுதந்திர இந்தியாவில், ஓர் இந்தியக் குடிமகனால், சுட்டுக்கொல்லப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து அவரது ரத்தக்கறை படிந்த ஆடைகள் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து வந்தன. 


அந்த இடத்தில் நின்றுதான், காந்தியின் பேரனான கமல்ஹாசன் ‘மறவோம்’ என நீதி கேட்கிறார். 


காந்தியின் தமிழ்நாடு வருகையின் போது வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தவர் ‘யாகூப் ஹாசன்’. சென்னை மாகாணத்தில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்க மூதறிஞர் ராஜாஜியுடன் தோளோடு தோள் நின்று பல போராட்டங்களை நடத்தியவர். கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றவர். அவருக்கு சீனிவாச அய்யங்கார் என்றொரு வக்கீல் நண்பர் இருந்தார். அவரும் ஒரு விடுதலை வீரர். தன் நண்பன் மீது கொண்ட அன்பினால் தன் பிள்ளைகளுக்கு சாரு ஹாசன், சந்திர ஹாசன், கமல் ஹாசன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 


வரலாற்றுப் பாடத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். மதுரை மண்ணுக்கும், காந்திக்கும், கமல்ஹாசனுக்கும் இருக்கும் தொடர்பு இப்போது புரிந்திருக்கும். 


‘மிருதுவாகப் பேசிய காந்தியின் குரல்தான் இந்தியாவெங்கும் எதிரொலித்தது’ அதைப்போலவே இப்போது தெற்கிலிருந்து ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரச் செய்கிறது. சமத்துவமும் சமூகநீதியும்தான் நாங்கள் தேர்ந்து கொண்ட பாதை என ஒலிக்கின்ற ஒரு குரல், வளர்ச்சிப்பாதையில் ஒருவர் கூட பின் தங்கி விட அனுமதிக்கமாட்டோம் என்கிற குரல், மாநில சுயாட்சி எங்கள் பிறப்புரிமை அதை அடைந்தே தீருவோம் என்று முழங்குகிற குரல், அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற குரல். அவர் இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று நடத்துவது மிகப்பொருத்தமானது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கமல் பண்பாட்டு மையம் சார்பாக வரவேற்கிறோம். 


ஜனநாயகத்தின் மீதும், சமத்துவத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்ட பல  அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் இங்கே வருகை தந்திருக்கிறார்கள். 


திராவிட இயக்கத்தின் போர்வாள், நாடாளுமன்றப் புலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ


மதச்சார்பின்மைக் கொள்கையில் சிறிதும் வழுவாத காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர், ஆற்றல் மிக்க பேச்சாளர், திரு. கு. செல்வப்பெருந்தகை


மலைவாழ் மக்கள், விவசாயத் தோழர்களின் நலன்களுக்காக உழைப்பவர், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் 30 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்றுத் தந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் பெ. சண்முகம் 


ஆகச்சிறந்த சிந்தனையாளர், ஆற்றல் மிகு பேச்சாளர், உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாக ஒலிப்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன்


தன்னேரிலாத தமிழர், களங்கமற்ற கருப்பு வைரம் என்று திரு. கமல்ஹாசனால் புகழாரம் சூட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. தொல் திருமாவளவன்


சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும், சமூக நல்லிணத்துக்காகவும் களமாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர், கண்ணியம் மிக்க பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன்


சிறுபான்மை மக்களின் நலன்கள் முதல் சிறைவாசிகளின் மறுவாழ்வு வரை மனசாட்சியின் குரலாக ஒலிக்கும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா


கொங்கு பகுதி மக்களின் நலன்களுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் எழுப்புகிற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திரு. கே. நித்யானந்தம்


தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக தீரத்துடன் செயலாற்றும் ஆற்றல் மிக்கப் பேச்சாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் திரு. தி. வேல்முருகன்


உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் உங்கள் சார்பாகவும், கமல் பண்பாட்டு மையம் சார்பாகவும் வரவேற்கிறோம். 


இந்நிகழ்வுக்கு வருகை தந்து முன்னிலை வகிக்கிற காந்தியச் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கமல் பண்பாட்டு மைய நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காவல்துறை நண்பர்கள், முன்களப்பணியாளர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம். 


நண்பர்களே, கமல் பண்பாட்டு மையம் ஓர் அரசியல் சார்பற்ற அமைப்பு. அதன் நிறுவன தலைவர் திரு. கமல்ஹாசன். அரசுப்பள்ளிகளின் மேம்பாடு, இளைஞர்களின் திறன் மேம்பாடு, ஏழை எளியவர்களுக்கு மருத்துவ உதவிகள், சகலவசதிகளும் கொண்ட நம்மவர் படிப்பகங்கள், மொழிபெயர்ப்பு முகாம், நூல் வெளியீடு என மிகத் தீவிரமாக இயங்கி வரும் பண்பாட்டு அமைப்பு இது. 


அதன் சார்பாக நடைபெறுகிற ‘மறவோம்’ நிகழ்வின் நோக்கம் என்ன? 


தன்னலமற்ற நமது முன்னோர்கள் கண்ணீரும், செந்நீரும் சிந்தி போராடி நமக்கொரு சுதந்திர தேசத்தைத் தந்து சென்றிருக்கிறார்கள். தேசத்தந்தை காந்தியடிகளும், அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் உருவாக்க நினைத்த “அனைவருக்குமான இந்தியா” எனும் பெருங்கனவிலிருந்து நாம் வேக வேகமாக விலகிக்கொண்டிருக்கிறோம். 


இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் முரண்களுக்கும், நமது தனி வாழ்வில் ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கும் காந்தியாரின் தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது. 


காந்தியார் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசுபவர்கள் ஒருபுறம். அவர் மனிதரே அல்ல புனிதரென காந்தியாரை வழிபாட்டுப் பொருளாக மாற்றுகிறவர்கள் மறுபுறம்.  இரண்டுமே தவறானவை. காந்தியம் என்பது ஓர் அரசியல் கூச்சல் அல்ல. அது ஒரு ஃபேஷன் அல்ல. அஃதொரு வாழ்க்கை முறையும் அல்ல.


காந்தி ஒரு வரலாற்றுச் சவால். நெஞ்சில் வீரமும், ஈரமும் இருந்தால், துணிவிருந்தால், முயன்றால் நீயும் என்னைப் போல ஆகலாம் என மானுடத்தை நோக்கிய அறைகூவல்தான் காந்தி. 


எந்த சித்தாந்தங்களையும் விட மக்களின் நலன்களே முக்கியமானது என்பதுதான் மய்யவாதச் சிந்தனையின் அடிப்படைக் கட்டுமானம். மய்யவாதம் எதிர் தரப்பை எதிரி தரப்பு என்று பார்க்காது. எதிரிகளை வீழ்த்துவதை விட அவர்களின் மனசாட்சியோடு உரையாடுவதுதான் அதன் நோக்கம். இந்த அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதத்தின் நகல் இருக்கிறது. Dear Friend - அன்பு நண்பரே என்றுதான் அந்தக் கடிதத்தைக் காந்தியார் துவங்குகிறார். பரஸ்பர அன்பும், மதிப்பும், ஒத்துழைப்பும் மய்யவாதத்தின் செயல்திட்டங்கள். உலக வரலாற்றில் அதை அப்படியே கடைப்பிடித்த அரசியல் செயற்பாட்டாளர் காந்திதான். 


ஆசியாவின் ஒரே மய்யவாதச் சிந்தனையாளர்கள் எனும் வகையில் காந்தியாரின் நினைவுகளையும் அவரது சமகால சகாக்களாகத் திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களைப் போற்றுவதும்தான் “மறவோம் - Remembering Bapuji & Brothers” எனும் நிகழ்ச்சியின் ஆதார நோக்கம். இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் சார்பில்லாத நிகழ்ச்சி. ஆனால் நண்பர்களே, அடிப்படையில் காந்தி ஓர் அரசியல்வாதி என்பதை யாரும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது. 


காந்தியைப் பற்றி எடுக்கப்பட்ட சிறப்பான படங்கள் இரண்டு. ஒன்று ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. காந்தி யார் என்று உலகிற்குக் காட்டிய திரைப்படம் அது. இன்னொன்று திரு. கமல்ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’. அது காந்தி யார் என்று இந்தியர்களுக்குக் காட்டியது. சமீபத்தில் திரு. கமல்ஹாசன் இயக்கிய ‘Leadon Gandhi’ குறும்படம் இன்றைய ரீல்ஸ் தலைமுறைக்கு காந்தியை கொண்டு சேர்க்கிறது. 


காந்தி வெறுப்பாளராகத் துவங்கி, காந்தியை நேசிப்பவராக மாறி, முழுதாகக் காந்தியை உள்வாங்கிக்கொண்டு, தானே ஒரு காந்தியாக மாறும் பயணத்தில் இருக்கிறார் திரு. கமல்ஹாசன். அதன் ஒரு படிநிலையாகத்தான் இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன். 


நாடு, மொழி, மாநிலம், இனம், கட்சி, சித்தாந்தம், மதம், ஜாதி, ஏழை, பணக்காரன் போன்ற வர்த்தமானங்களைப் புறந்தள்ளிவிட்டு “மானுடம் வெல்லும்” எனும் கனவோடு முன்நகரும் ஒவ்வொருவருக்குமான அழைப்புதான் இந்த நிகழ்ச்சி என நான் புரிந்துகொள்கிறேன். 


வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம். 

Comments