பெற்றியார்ப் பேணிக் கொளல்!
தீவிரமான வாசிப்பு, தொடர்ந்த உரையாடல்கள் இரண்டின் மூலமும் ‘இலக்கிய வாசகனெனும்’ அந்தஸ்தினை அடையத் துடிக்கும் அரங்கசாமி, அருண், சந்திரகுமார் இவர்களோடு நானும் சேக்காளி. நாங்கள் நால்வரும் நேர்கோட்டில் சந்திப்பது ஜெயமோகன் எனும் ஒற்றைப் புள்ளியில். முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.
அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும் இருக்கக் கூடாது. ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ உருவானது. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பிரதியை முன்னிறுத்தி இலக்கிய அமைப்பு உருவாவது அனேகமாக இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் சுகுமாரன்.
தகுதியுள்ள ஆளுமைகள் உரிய முறையில் மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஜெயமோகன். வேதசகாயகுமார், நாஞ்சில் நாடன், நீல. பத்மநாபன், அ. கா. பெருமாள் போன்ற ஆளுமைகளுக்குத் தன் சொந்தச் செலவில் விழா எடுத்ததை தமிழுலகம் அறியும். அவ்விழாக்களைத் தொடர்வதும், கொங்கு மண்டலத்தில் இலக்கியச் செயல்பாடுகளை அதிகரிப்பதும் மட்டுமே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பிரதான நோக்கங்கள். எங்களது செயல்பாடுகள் அனைத்திலும் இலக்கிய மூப்பர் மரபின் மைந்தன் முத்தையா துணை நிற்கிறார்.
***
கலாப்ரியாவிற்கு இது அறுபதாவது ஆண்டு. நாற்பதாண்டு காலமாகக் கனலும் கவித்துவத்தோடும் உயிர்ப்போடும் இயங்கி வரும் இந்தத் தாமிரபரணிக் கலைஞனைக் கொண்டாடுவது எங்களது கடமையெனப்பட்டது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் இரண்டாவது நிகழ்வாக ‘கலாப்ரியா படைப்புக் களம்’ உருப்பெற்றது.
தமிழின் மூத்த படைப்பாளுமைகளான நாஞ்சில் நாடன், வண்ணதாசன், சுகுமாரன், ஜெயமோகன் ஆகியோருடன் மரபின் வழி நிற்கின்ற முத்தையாவும் இளம்தலைமுறைப் படைப்பாளிகளான அ. வெண்ணிலாவும், வா. மணிகண்டனும், கருத்துரை வழங்க, கலாப்ரியாவின் ஏற்புரையோடு இனிதே நடைபெற்றது விழா.
***
திருப்பூரிலிருந்து தன் பரிவாரங்களோடு வந்திருந்த வெயிலான், அண்ணாச்சி, சஞ்ஜெய், தமிழ்பயணி சிவா, ஈரோடு நண்பர்கள், உடுமலைப்பேட்டை நண்பர்கள், தியாகு புக் செண்டர் நண்பர்கள், இவர்களோடு உள்ளூர் இலக்கியப் பிரமுகர்களான பாலை நிலவன், அவை நாயகம், மயூரா ரத்தினசாமி, வா. ஸ்ரீனிவாசன், விஜயா வேலாயுதம், தென்பாண்டியன், இசைக்கவி ரமணன் மற்றும் பலர் வருகை தந்திருந்தது உற்சாகமும், உத்வேகமும் தந்தது.
***
உரையாடலின் ருசி அறிய ஜெயமோகனுடன் இருக்க வேண்டும். சனிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு இரவு வரை அவரது முகத்தில் நிலை கொண்ட என் பார்வையை விலக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்ததையெல்லாம் வாசகனுக்குக் கடத்துவதில் ஜெ. அளவிற்கு வீச்சோடு இயங்குபவர் தமிழ்ச் சூழலில் இல்லை. அவ்வப்போது அவரே தயாரித்துத் தந்த தேனீரோடு இரண்டு நாட்களும் இலக்கிய இன்பம்.
***
சுகுமாரன் எனக்கு மிக முக்கியமான நபர். காதலிக்க, மேடையில் முழங்க, உலக இலக்கியங்களில் பரிச்சயமுள்ளவனாகக் காட்டிக்கொள்ள எனப் பலவிதங்களிலும் அவரது ‘கவிதையின் திசைகள்’ உதவி இருக்கிறது.
அகவலோசைக் கவிஞர்களிடத்தே தேங்கி இருந்த சமயத்தில் கையில் கிடைத்த அப்புத்தகம் நெரூடா, ஹியூஸ், ஆக்டேவியா பாஸ், செஸார், நசீம் ஹிக்மத், விஸ்லவா சிம்போர்ஸ்கா, குந்தர் க்ராஸ், பெஞ்சமின் ஸஃபானியா போன்ற மகாகவிகளைத் தரிசிக்க உதவியது. அப்புத்தகத்தின் வழியேதான் நவீன கவிதைகளுக்குள் நுழைந்தேன்.
சுகுமாரனின் கவிதைகளைக் காட்டிலும் பத்தி எழுத்துக்களில் புத்தி மயங்கினவன் நான். தொடர்ந்த கேள்விகளால் அவரை இம்சித்துக்கொண்டே இருந்தேன். அன்பான ஆசிரியனைப் போலச் சொல்லிக்கொடுத்தார்.
***
கலாப்ரியாவிற்கும் எனக்கும் கண்ணுக்குத் தெரியாத அன்பின் இழைகளால் ஆன உயிர்ப்பாலம் எப்போதும் இருக்கிறது. விழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தபோதுதான் காற்றில் வந்து சேர்ந்தது ‘சுஜாதா விருது’ தகவல். அவரது முதல் உரைநடை முயற்சியே விருதைத் தட்டி வந்திருப்பதில் வாசகனாகவும் அவரது நண்பனாகவும் எனக்குப் பெருமை. மனைவியோடு வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தார்.
***
வண்ணதாசனைப் பார்த்ததும் மனதிற்குள் அன்பும், கண்களில் நீரும் சுரப்பது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆதுரமாக, இறுக்கமாக கரங்களைப் பற்றி அவர் பேசுகையில் மனதில் மகிழ்வலைகள். விகடனில் ‘அகம் புறம்’ துவங்கிய அற்புத தினத்தில்தான் முடியலத்துவமும் துவங்கியது. அவரது ‘பெருநகரைப் பழிக்காமல் இருக்கச் சில வழிகள்’ வெளிவரும் முன்னே சென்னையை விட்டு ஓடி வந்து விட்டேன். வாசித்திருந்தால் அங்கேயே இருந்திருப்பேன்
பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீட்டைப்போல மண்டபத்தை அழகாக்கியது அவரது இருப்பு.
***
நாஞ்சிலும் ஜெயனும் சேர்ந்திருக்கிற தருணம் அழகானது. இருவரும் அடிக்கிற லூட்டிகள் சிரித்து மாளாது. கணேஷ், வஸந்த் என அவர்களுக்குச் செல்லப் பெயர் வைத்திருக்கிறேன். வசந்த் எப்போதும் கும்பமுனிதான்.
குட்டியூண்டு சாம்பிள்:
கும்பமுனியோடு காபி குடிக்கச் சென்றோம். காபி தம்ளரில் கால் இஞ்சுக்கு கரையாத சீனி. ‘கட்டி கொடுத்துருங்க... வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்’
***
கலாப்ரியாவிற்கு விழா என்றதும் கைக்காசைப் போட்டு ஓடி வந்தார் வா. மணிகண்டன். மொத்தக் கவிதைகளையும் படித்து அழகானக் கட்டுரையோடு வந்திருந்தார். மேடைப் பதட்டங்களில் அவரது பேச்சு அவ்வளவாக எடுபடவில்லையெனினும் ஆளுமைகள் நிறைந்திருக்கிற அவையில் அவரது துணிச்சலான விமர்சனங்கள் ஆச்சர்யம் தந்தது.
***
வெண்ணிலாவின் பேச்சு அவரது கவிதைகளைப் போல மயிலிறகு. நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களோடு கலாப்ரியாவின் கவிதைத் தருணங்களை இணைத்துப் பேசினார்.
***
விழா மிகுந்த பார்மலாக நடந்ததும், கலாப்ரியாவின் துள்ளலான காதல் கவிதைகளையும், எள்ளலான கிண்டல் கவிதைகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதிலும் எனக்குக் கொஞ்சம் அதிருப்தி. நான் விசாரித்த வரையில் எண்பதுகளில் கலாப்ரியாவைத் துணைக்கழைக்காமல் காதலித்தவர்களே இல்லை என்கிறார்கள். 2005ல் நான் கூட ‘என் நினைவெனும் எருமைக்கன்று உன் நிழலைத்தான் யாசிக்கிறது’ என்றுதான் பிட்டைப் போட்டேன்.
‘கலாப்ரியாவும் காதலும்’ என்றொரு கட்டுரையை நமக்கு நாமே மாமே திட்டப்படி எழுதி வருகிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.
புகைப்படம்:சஞ்ஜெய்
Comments
தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் நல்வாழ்த்துகள்.
- பொன்.வாசுதேவன்
வண்ணதாசன், நாஞ்சில்நாடன் என் ப்ரிய எழுத்தாளர்கள். ஏனையோர் பெருமையை அறிவேன்.
நெல்லை மண் தந்த கலாப்பிரியாவுக்கு கோவையில் பாராட்டு நிகழ்வு, நெகிழ்வு. இதைப்போல பல நிகழ்வுகளை 'விஷ்ணுபுரம்' முன்னெடுத்து நிகழ்த்த என் விருப்பமும் வாழ்த்துகளும்.!
//பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீட்டைப்போல மண்டபத்தை அழகாக்கியது அவரது இருப்பு.//
ரசித்தேன்!
//கும்பமுனியோடு காபி குடிக்கச் சென்றோம். காபி தம்ளரில் கால் இஞ்சுக்கு கரையாத சீனி. ‘கட்டி கொடுத்துருங்க... வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்’
//
சிரித்தேன். :)
விழாவிற்கு வர முடியாத குறையை தீர்த்து வைத்ததற்கு நன்றி!
கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?
உண்மை. உணர்ந்தேன்.
கூட்டமும், கூட்டத்துக்கு பிந்தைய கூடலும், பல நண்பர்களின் அறிமுகமும், வண்ணதாசன், நாஞ்சில் அண்ணாச்சியைப் பார்க்கும் வாய்ப்பும் ஒருங்கே அமையப் பெற்றமைக்கு விஷ்ணுபுரத்துக்கு நன்றி!
நன்றி கார்க்கி!
அடுத்த முறை தவறாமல் வாருங்கள் ஆமூகி!
வாங்க காயத்ரி சித்தார்த், பண்டம் சுடுகிற வாசனை வண்ணதாசனுடையது. எடுத்தாண்டேன்.
நன்றி செல்வராஜ் ஜெகதீஷன்!
லேய் குசும்பா, ஃபீல் பண்ற மாதிரி நடிச்சுட்டு... பார்ட் - 2 போட்டுடாதே...! :))
அரங்கசாமி, நீர்தானய்யா பின்னாலிருந்து இயக்கும் சக்தி :))
கிருஷ்ணகிருஷ்ணா நன்றி!
வெயிலான் அண்ணே, நீங்க பதிவுலக நண்பர்களோடு வந்து கலந்துகிட்டது இன்ப அதிர்ச்சி! பலரது பெயர்கள் தெரியாததால் மொத்தமாகக் குறிப்பிட்டு விட்டேன்.
என்ன கொடுமை , உம்மை பின்னாலிருந்து தள்ளும் சக்திக்கு கேண்டி என்றல்லவா பெயர் சொன்னீர் :)
மகிழ்வாய் உணர்கிறேன் செல்வா... அடுத்தடுத்த நிகழ்வுகளையும் சிறப்பாய் நிகழ்த்த வாழ்த்துக்கள்...
நான் மிஸ் பண்ணிட்டேன், ஆனாலும் வெயிலான் மூலமாக வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி
///பலரது பெயர்கள் தெரியாததால் மொத்தமாகக் குறிப்பிட்டு விட்டேன்.//
அப்போ என் பேரு தெரியாது? ம்ம்ம்....
ஆஹா.. உங்களுக்கு கமெண்ட் போடும்போது மட்டும் இந்த நெட் ஏன் இவ்ளோ சொதப்பனும்? ஒரே கமெண்ட்டை நிறைய முறை போஸ்ட்டிட்டேனா?//
நீ சொல்ற பொய்யை கம்ப்யூட்டராலேயே தாங்கிக்க முடியலைப் போல.. :)
நல்ல பதிவு சாரு
இந்த நிகழ்வு மூலம் பெற்றுக் கொண்ட செய்திகள் நிறைய
மிக்க சந்தோஷமும் அன்பும்
அனுஜன்யா
வண்ணதாசன்,ஜெயமோகன்,நாஞ்சில் நாடன்,கலாப்ரியா என தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பங்கு பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கின்றது.
உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்..:-)
என்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. தங்கள் பகிர்தலுக்கு நன்றி. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல் நிறைய செய்வீர்களாக. மன்னிக்கணும் செய்வோமாக.
தொடரட்டும் தங்கள் பயணம்..
அடிக்கடி நடக்கட்டும்
உங்களுடைய முயற்சிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
Firthouse Rajakumaaren
Coimbatore-8
வரத்தான் முடியவில்லை. அடுத்த முறை நிச்சயம் நானும் உங்களுடன் பங்குக்கொள்கிறேன்.
வந்திருந்த படைப்பாளிகளின் படைப்புக்களை ஒரளவாவது வாசித்திருந்தது மிகுந்த ஆசுவாசத்தை தந்தது...ஆனால் நிகழ்ச்சி மிக விரைவில் முடிந்துவிட்டதாக நினைக்கிறேன்.பிடித்த எழுத்தாளர்களுடன் சிறிது நேரம் அளவளாம் என்ற என்னுடைய எண்ணம் பலிக்காததில் சிறிது வருத்தமே.எனினும் சுகுமாரன்,நாஞ்சில்,கலாப்பிரியா,ஜெ.மோ மற்றும் மணிகண்டனுடன் ஒரிரு வார்த்தைகள் பேசியது மிகுந்த மகிழ்ச்சி.திரு.நாஞ்சிலிடம் ஒரு கோரிக்கையொன்றை நானும் இன்னொரு வாசகரும் வைத்தோம்.அது பற்றி பின்னால்..மேலும் சுகுமாரன் அவர்களைப் பற்றி கவலைதோய்ந்த என் ஐயமொன்றும் விலகியது..
நன்றி..மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
ஒரு நிகழ்ச்சியை document செய்ய புதிய வடிவம் உருவாகிறது.
வாழ்த்துக்கள்.
கொஞ்சம் டெம்ப்ளேட்ட கவனிங்க செல்வா. முதல் பாதி தெரிவதில்லை.
இதுபோன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்பதே என்னைப்போன்றவர்களின் ஆவல்
அடுத்த முறையாகிலும் கோவையில் நடக்கும் போது நேரில் நிச்சயம் பங்கேற்கும் ஆவலுடன்.
தோழமையுடன்,
ராகவேந்திரன்,தம்மம்பட்டி