நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

கம்பார்ட்மெண்ட் முழுக்க நிலக்கடலை தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்கு பீலியும், தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் என கிடக்கலாம்.

டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லி குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ என கடுப்பை கிளப்பி இருப்பார்.

சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா டிரெய்னிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று மேட்ச் ஆனால் போதும் என்பது இதில் பயணிப்பவர்களின் பொது அபிப்ராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்றதில்லை. ‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயி கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடுக்க...’ (நான் சிலமுறை ‘பிரதிவாதி’ சீட்டில் இருக்கும் எண்ணிற்கான பர்த்தில் போயாவது சென்று படுத்துவிடலாமென முயற்சித்தால், அங்கனக்குள்ளயும் ஒரு அண்ணாச்சி சாமியாடிக்கொண்டிருப்பார்)

சாப்பாட்டு பொட்டலத்தை அவிழ்த்து விட்டு அநியாய விலை கொடுத்து வாங்கின அக்குவாபீனாவை ஓபன் பண்ணிய அடுத்த நிமிடமே ‘தண்ணீ கொஞ்சம் கிடைக்குமா தம்பீ...’ என சர்வ நிச்சயமாக ஒருவர் கேட்பார். வாங்கி மடக் மடக்கென குடித்து விட்டு மிச்ச தண்ணீரில் கை கழுவி வாயும் கொப்பளித்து விட்டு கடமையுணர்ச்சியோடு காலி பாட்டிலைத் திரும்ப தருவார் ‘எந்த ஊர் தண்ணீடே... எழவு சப்புன்னுல்லா இருக்கு’ எனும் ஒருவரி விமர்சனம் பதிலீடாகக் கிடைக்கலாம்.

‘விஎஸ்கே செட்டுல டின்னு வருதுடே. கச்சாத்துல எத்தனைன்னு பாத்து எண்ணி எறக்கி வைய்யி. லோடு மேன் நான் இல்லண்ணா டின்னுக்கு ஆறு ரூவா கேப்பான் தாயோளீ... அவனுக்கு 5 ரூவாய்க்கி மேல சல்லிப்பைசா கொடுக்காத... கடய எடுத்து வெக்கயில வெங்காய மூடய மறந்து தொலச்சிடாதல. தக்காளி கெடந்து நாறுது. சவம் மீனாட்சி ஓட்டல்காரன் கேட்டான்னா ரெண்டு, மூனு கொறச்சி தள்ளிடு...ஏய்... அண்ணாச்சி ஊர்ல இல்லன்னு சாயங்காலமே கடய சாத்திராதீங்கலே... சாவிய பத்திரமா அக்காட்ட கொடுத்து வீட்டுக்குப் போங்க...கம்பெனிக்காரன் எவன் வந்தாலும் அண்ணாச்சி ஊர்ல இல்ல.. பெறவு வான்னு சொல்லு...ரெகுலர் ஆளுககிட்ட பதனமா பேசுங்கலே. எவன் கேட்டாலும் ஓசி சிரெட்டு கொடுக்காதீய... ’ என ஒவ்வொரு பெட்டிக்கும் உச்சஸ்தாயில் ஏதாவது ஒரு அண்ணாச்சி இருந்த இடத்திலிருந்தபடியே தன் அப்பரஸெண்டுகளிடம் மன்றாடிக்கொண்டிருப்பார். ஆனால், செல்போன் என்பது ஒலிபெருக்கி அல்ல. அதில் மெதுவாகப் பேசினாலே, எதிர்முனைக்கு கேட்கும் என்பதை ஏன் இதுவரை யாரும் அவருக்குச் சொல்லிக்கொடுக்க முயலவில்லை என்பதுதான் எனக்கு புரியாத புதிர்.

கழிப்பறைக்கு வெளியே இருந்து திறப்பதற்கான ஒரு கொண்டி தவிர, உள்ளேயிருப்பவர்கள் பூட்டிக்கொள்ள ஒரு கொண்டி இருப்பது முட்டாள்தனமன்றி வேறென்ன?! முன் யோசனை இன்றி கதவைத் திறந்துவிட்டால், இடுப்பு வரை ஏற்றி விட்ட வேட்டியும், தோளில் கோடு போட்ட அன்- டிராயர் சகிதமாக அண்ணாச்சி ‘குத்தவெச்சாசனம்’ செய்து கொண்டிருப்பார். வெளியே வந்ததும் ‘கொள்ளக்கி இருக்குதவன எட்டிப்பாக்கியே அறிவு இருக்காலே... செத்த மூதி...’ என்பார்.

புத்தகத்தை எடுத்து அட்டையைப் புரட்டியிருக்க மாட்டோம். சட்டென்று பாய்ந்து விளக்கையணைத்து விட்டு பிறகு உத்தமரைப் போல ‘தம்பீ... வாசிக்கியளோ’ என பதமாக கேட்பார்கள். இவர்களாவது பரவாயில்லை. ஒருமுறை ஒரு பெரியவர் ‘வெள்ளனே எதும் பரீச்சயா’ என்றார். நான் இல்லையென தலையாட்டி கதை புஸ்தகம் என்றேன். அப்புறம் என்ன எழவுக்குடே லைட்ட போட்டு எரிக்குதே... கரண்டு பில்லு எவம்லே கட்டுகது’

லேசாகப் பேச்சுக்கொடுப்பவர்கள் பெருசாக ஆப்படிப்பார்கள். தம்பி எந்த ஊருக்குப் போறீய என துவங்குவார்கள். ‘கோயம்புத்தூரா... எம்மவன் வேல்முருகன் அங்கனதான கட வச்சிருக்கான். நெல்லை ஸ்டோர்ஸூன்னு. தெரியுமா அவன?!’ ஆகச் சிக்கலான கேள்வி. கோவையில் தடுக்கி விழுந்தால், ஒரு நெல்லை ஸ்டோர்ஸ்தான். எந்த ஏரியாவுல என மையமாக கேட்டு வைப்பேன். மேட்டுப்பாளையம் ரோட்டுல என பதில் வரும். மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் ரோடுதான்... எந்த ஏரியான்னு சொல்லுங்க என சொன்னால் ஆச்சு. ‘ஏய்... எத்தன வருசமாட்டு எனக்க மவன் அங்க இருக்கான்... மேட்டுப்பாளையம் ரோடு நெல்லை ஸ்டோருன்னு கேட்டா தொட்டில்ல கெடக்க புள்ள கூட சொல்லுமே... மெயினான எடத்துல இருக்க அவங்கடய தெரியல்லங்க... நீயெல்லாம் என்னத்தப் பொழச்சி...’ கோவை வரும்வரை நம்மை எரிச்சலாகவேப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரிசர்வில் ஏறி படுத்துக்கொள்ளுபவர்கள். டிடிஆரையும், பயணிகளையும் படுத்தும்பாடு சொல்லில் ஒளிரும் சுடர். ஒருமுறை முழங்கை வரைக்குமான தொள, தொள சட்டையும், கதர் வேட்டியும் அணிந்த பெரியவர் ஒருவர் ஓபன் டிக்கெட்டோடு அப்பர் பர்த்தில் படுத்துக்கொண்டார். தன்னுடைய ரிசர்வ்டு டிக்கெட்டைக் காட்டி அவரோடு மன்றாடிக்கொண்டிருந்தார் ஒருவர். ‘வெள்ளக்காரங்கிட்ட சண்டயப் போட்டு வண்டிய வாங்கி வுட்டவம்ல நாங்கள்லாம்... செம்பகராமம்பிள்ளன்னு ஆரல்வாய்மொழில வந்து கேட்டுப்பாருல... உன்னய மாதி காசு கொடுத்துதாம்ல நானும் ஏறியிருக்கன். இவ்வளவு சீட்டு சும்மா கெடக்குதுல்லா... அங்கன போயி கட்டய சாயில... இங்கன வந்து கேறுகே...தூமைவுல்லா...’

அப்பர் பெர்த் என்றால் காற்றாடியைப் போட்டதும் சாணி மணம் கமழும். காரணம் வேறொன்றும் இல்லை. தங்களது பாதரட்சைகளின் பாதுகாப்பு கருதி அவற்றை ஃபேனின் மேல் கச்சிதமாகச் சொருகி வைத்திருப்பார்கள்.

ஆனபோதும், ஆனபோதும்… கோவையிலிருந்து கிளம்பும்போதும் சரி, திருநெல்வேலியிலிருந்து திரும்பும்போதும் சரி ‘ஏல, லேய், ஏய் மக்கா, மக்களே, தம்பீ, அண்ணாச்சி’ என ஏதோவொரு பதத்தில் விளித்து... ஏழெட்டு கேள்விகளில் நமக்கும் அவருக்குமான பொது மனிதர் ஒருவரைக் கண்டுபிடித்து ‘அவாள் நல்லாருக்காளா... தங்கமான மனியனாச்சே’ என விசாரித்து ஊர் கதை, குடும்ப கதைகளைக் கேட்டறிந்து...பனங்கிழங்கையோ, முந்திரிக்கொத்தையோ தின்னக் கொடுத்து, தாண்டவன்காடு வந்தீங்கன்னா தவசி நாடார் வீடு எதுன்னு கேட்டு வாங்க...தசரா ஜே..ஜேன்னு இருக்கும் என அழைக்கவும் தவறாமல், இறங்கும் போது தோளைத் தட்டி ‘தம்பீ...அப்பா, அம்மாக்கள வயசான காலத்துல வச்சி காப்பாத்துங்கடே...அவாள் மனசு குளிர்ந்தாதான் வாழ்க்கைல முன்னுக்கு வரமுடியும்’ என புத்திமதி சொல்லி விடைபெறும் மனிதர்கள் இந்த ரயிலெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு சாயலில், சிறு அசைவில், எச்சில் தெறிக்க சிரிக்கும் சிரிப்பில் பெரியப்பாவை, சின்ன தாத்தாவை, கடையநல்லூர் மாமாவை, அப்பாவை, பெரிய அத்தானை, எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை, பருவம் பார்க்கும் ஏசுவடியானை நினைவுபடுத்துபவர்களாக இருந்துவிடுவது என்றும் பிடிபடாத ஆச்சர்யம்.

Comments

sakthi said…
நகுதற் பொருட்டு
நன்றாகவே நகைத்தோம்
நன்றிங்கோ செல்வா ::))
மதார் said…
வழக்கமா நான் ஊருக்கு போரபோதேல்லாம் ரசிக்கும் விஷயங்கள் நிறைய நீங்க சொன்னதுல இருக்கு . ஊரு ஊருதான் ......பயணம் இனிமைதான் .
நெல்லை எக்ஸ்பிரஸ் போய்பாருங்க நம்ம சொந்த பந்தங்களோட போற மாதிரி அம்புட்டு சந்தோசமா இருக்கும் .
பாசமும் நேசமும் மனதில் கொண்ட எங்கள் மக்களை படம் பிடித்து காட்டியதற்கு நன்றி நண்பரே. எங்கள் ஊர் மனமும், மக்களும், பேச்சும் இந்த பாலை வனத்தில் ......................... இருக்கும் இடம் விதி என்பதை தவிர வேறு என்ன சொல்வது ?
விஜி said…
செமையா இருக்கு செல்வா.. வரவர நான் சொல்லித்தந்த மாதிரியே எழுதறே :)))
Romeoboy said…
அடுத்த மாசம் இந்த வண்டியில்தான் போகலாம்ன்னு இருக்கிறேன்.. இப்பவே கிர்ர்ர்ன்னு இருக்கு :)))
கோவையில் இருந்துகொண்டு நெல்லைத்தமிழ் நடையை வைத்து ஒரு அனுபவ மற்றும் அருமையான பதிவு..!!
KSGOA said…
ரொம்ப நல்ல்லாயிருக்கு.வட்டார வழக்கு
அருமை.
மணிஜி said…
அபாரம்டா தம்பி...நாஞ்சிலார் நினைவுக்கு வருகிறார்....
RAMYA said…
நல்லா எழுதி இருக்கீங்க செல்வா... நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையா ஒரு பதிவு:)
mcp chennai. said…
ரொம்ப நல்ல எழுத்து நடை செல்வா..ஒப்ப்னை இல்லாத வார்த்தைகள்..முடிவில் ஒரு நல்ல டச்சிங்.. வாழ்த்துக்கள்..
Rekha raghavan said…
அருமையான விவரிப்பு. நானும் அதே ரயிலில் பயணித்த மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தியதுதான் உங்கள் எழுத்தின் வெற்றி.
Vijayashankar said…
யார் ஏசுவடியான்? உ மீன் க்ரைஸ்ட்?
தலைப்பைப் போலவே எக்ஸ்பிரஸ் வேகத்தில அருமையான நடை செல்வா. அடிக்கடி எழுதேன்.
manjoorraja said…
நல்லதொரு பதிவு. பாராட்டுகள்
பிரமாதமான பதிவு... கிட்டத்தட்ட அத்தணையுமே கண்ணாரப் பார்த்திருக்கிறேன்...

கண்டக்டர் தம்பி மேட்டர், அப்பர் பெர்த் ஆசாமி, பேன்ல செருப்ப மாட்டி வக்கிற அண்ணாச்சி அத்துணையுமே...

ஆனால் என்றும் நம்மூர்க்காரர்கள் வெள்ளந்திதான்... உள்ள ஒண்ணு வெளிய ஒண்ணு பேசத் தெரியாதவர்கள்...
jalli said…
nalla irukku annachi...oru nalla
"screenplay"..develep pannunka ..
"vallyoor santhippu" endra peyaril
padam pannalaam.

appuram..oru kurai.."thaayozhi""
dialough..ellam veandam.

by. jallipatti palanisamy.
pvr said…
Excellent Selva.
மக்க நல்ல இருக்குலே :)
maithriim said…
Excellently written. Should visit your blog more often!
amas32
குமரி மண்ணின் வாசம் வீசுகிறது தென்றலாய்..... ரயில் அனுபவத்தை ஆழமாய் உள்வாங்கி அழகாய் தந்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்
Anand said…
அண்ணாச்சி ரொம்ப அருமை அண்ணாச்சி.. நான் கொஞ்ச நாள் முன்னாடி கண்ணிய குமரி எக்ஸ்பிரஸ் ல போன அதே பீல் குடுத்தீங்க..
Raasa said…
அருமையான எழுத்த நடை. நல்ல பயண அனுபவம். ஒரே ஒரு கருத்து. நம் மக்கள் இதை படிக்கும் போது பெரும்பாலானோர் அந்த மண்ணையும் மக்களையும் ஏளனமாக எண்ணாதவாறும், அந்த மக்களையும் மண்ணையும் ரசிக்கும்படியும் எழுத்து நடையை மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துக்கள்
ஆரல்வாய்மொழில should be araamli
Anonymous said…
//விஜி said...
செமையா இருக்கு செல்வா.. வரவர நான் சொல்லித்தந்த மாதிரியே எழுதறே :)))//

ஒருத்தர் உருப்படியா எழுதினால் உனக்கு பொருக்காதே விஜி..
shri Prajna said…
சுவாரசியமாகவும் இல்லாமலும் விஷயங்கள் நடந்தாலும் அந்த window seat மட்டும் கிடைத்து விட்டால் அந்த ரயில் பயனம் தான் எவ்ளோ இனிமையானது.பயனிக்கும் அத்துனை பேரையும் தாலட்டும் சுகமே தனிதான்.சில விஷயங்களில் ரயில்வே துறையும் சிலவிஷயங்களில் பொதுஜனமும் அக்கரை கொண்டால்(புகைப்பது,ரிசர்வேஷனில் உட்கார்ந்து எழமறுப்பது) tension இல்லாமல் நன்றாய் இருக்கும்..good sharing ...
VG said…
நல்ல பதிவு. இதேபோல் அருமையான நிகழ்வுகள் நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் லயும் நடக்கும். ஒவ்வொரு நாளும் அந்த எக்ஸ்பிரஸ் மும்பை CST இல்; இருந்து கிளம்பும் முன்பாக அந்த area வை பார்த்தால் மும்பை போலவே இருக்காது. ஏதோ திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருப்பது போல் தோன்றும். மேலும் அந்த இரண்டு நாள் பயணம், நீங்கள் கூறியது போல் எண்ணில் அடங்கா சம்பவங்கள்... பதிவை படித்தவுடன் எனக்கு அவை தான் ஞாபகத்துக்கு வந்தது ......

கிரி, பஞ்சாப்.
selventhiran said…
காரண காரியங்களின்றிதான் பல நாட்கள் எழுதாமல் இருந்தேன். ஏனோ சேர்ந்தாற் போல சில வரிகள் கூட எழுத முடியாமல் இருந்தது. நண்பர்கள் இந்த கட்டுரைக்கு அளித்த உற்சாகம் தொடர்ந்து எழுதும் உத்வேகம் தருகிறது. அனைவருக்குமென் நன்றிகள் உரித்தாகுக...!
ரொம்ப நல்லா இருக்குங்க மொழிநடை :) :)
நல்லாருக்கு செல்வேந்திரன்!
Kumky said…
ஓவ்வொரு ரயிலிலும் கொண்டுசெல்லும் மகிழ்வென்ன,துக்கங்கள் என்ன , காரண காரியங்கள் என்ன..
தத்தம் உடமைகளும், அதற்கான பாதுகாப்புகளும், பதற்றங்களும்...

பெரும் மனித கடலல்லவா அது.

கோவை முதல் நெல்லை வரை பயணித்தேன் அண்ணாச்சி...

நன்றி.
Unknown said…
யப்பு, இது என்ன ரகம். சிறுகதையா, அனுபவப் பகிர்வா, நாட்டு நடப்பா? இது வரைக்கும் ஏழு கதையைத் தொகுத்திருக்கேன். எட்டாவதா இதையும் சேத்துக்கிறவா?
ஆயிரம் தான் ரயில் பயணத்தில் இந்த மாதிரி கஷ்டப்பட்டாலும் , நாம் ஊருகாரங்ககிட்ட பேசிகிட்டு வார சுகமே தனிதான் . நல்ல பயணப் பதிவு
தம்பி பட்டைய கிளப்பிட போ . . , , ""எட்டாம் வகுப்பெடுத்த பால்துரை சாரை"",
குறிப்பா நம்ம வாத்தியார கொண்டு வந்த பாரு அதுல தான் நீ நிக்கிர போ. . அருமை சகோதரம் வாழ்த்துகள் ..
செல்வேந்திரன்:

நாஞ்சில் நாடன் மகள் கல்யாணத்துக்கு நாகர்கோவில் போய்விட்டு, நானும் நாகர்கோவில் எக்ஸ்பிரசில் தான் திரும்பினேன். எனக்கு ஏன் இப்படிப்பட்ட சுவையான அனுபவங்கள் பார்க்கக்கிடைக்கவில்லை?

இதுக்குத்தான் ‘கொடுப்பினை’ வேணுங்கிறது!!
Aranga said…
மறுபடியும் படித்தேன் , நிசமாவே ரொம்ப நல்லா எழுதறீங்க மிஸ்டர்
ஆஹா. பிரமாதம். நான்தான் ரொம்ப லேட்டா பாலோ பண்ணுறேன்.
Prof.AV said…
மிக நன்றாக ௭ழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள்.

Popular Posts