கொலையுண்ட தெய்வங்களின் குரல்

 

ஓர் உரையாடலின் போது கமல்ஹாசன் சொன்னார், ‘கலையில் எந்தளவுக்கு பண்பாட்டு வேர்களுக்குள் ஆழமாகச் செல்கிறோமோ அந்தளவிற்கு அது சர்வதேசத்தன்மை வாய்ந்ததாக அமையும்’ என்று. more ethnicity means more international. 

உலகம் முழுக்கவே முதன்மைப் படைப்பாளிகள் தங்களது தொன்மங்களை மறுஆக்கம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஐரோப்பிய எழுத்தாளர்கள் கதைகளின் விளைநிலமான தங்கள் ‘பாகன்’ பண்பாட்டை மீள மீள எழுதுகிறார்கள்.  

இன்றைய வாழ்வின் முரண்களை மேலும் நுணுகி அறிந்துகொள்ள அர்த்த உருவேற்றப்பட்ட குறியீட்டுத்தன்மை வாய்ந்த தொல்படிமங்கள் அவசியமாகின்றன. அதற்குகந்த கலைக்கருவிகளில் சிறுகதை எனும் வடிவம்  நன்றாகத் தொழில்படுகிறது.  தமிழில் தொன்மங்களைக் கலையம்சம் குறையாமல் மறுஆக்கம் செய்வதைப் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்து 90 ஆண்டுகளாகிவிட்டன. வெண்முரசு அத்தொடர்ச்சியின் உச்சபட்ச கலைச்சாதனையாகத் திகழ்கிறது. 

அன்றாடத்தின் தாளவியலாத சலிப்பு நிறைந்திருக்கும் நவீன மனிதனுக்கு யதார்த்த கதைகள் அலுப்பூட்டுகின்றன. ஆகவே, புதிய படிமங்களும், உருவகங்களும், தொன்மங்களும் அவனுக்குத் தேவையாக இருக்கிறது. அதன் வழியாக வெவ்வேறு வினாக்களை எழுப்பி இதுவரை அறிந்தவற்றை மறுவரை செய்ய முயல்கையில் அது இன்றைய நவீன மனிதனுக்கான கலைப்படைப்பாக மாறிவிடுகிறது.  

கார்த்திக் புகழேந்தியின் வெஞ்சினம் தொகுப்பின் சிறுகதைகள் யதார்த்தவாத கதைகளைப் போல தோற்றமயக்கம் அளிக்கின்றன. வாசகன் அசந்த தருணத்தில் ஒளிபுகா கானகங்களுக்குள் நூற்றாண்டுப் பசியுடன் பழிவாங்கக் காத்திருக்கும் நம் கொலையுண்ட தெய்வங்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றன. தமிழ் நாட்டாரியலின் முன்னணி முகங்களான நா.வானமாமலை, அ.கா. பெருமாள், ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன், டி. தருமராஜ், கி.ராஜநாராயணன், கழனியூரன் போன்றவர்களெல்லாம் ஒருசேர நின்று பெருங்குரலெடுத்து சந்தத்துடன்  பாடினதைப் போல இருக்கின்றன இத்தொகுப்பின் கதைகள். 

அழியும் தரவாடுகள், சரியும் குடும்பங்கள், துரத்தும் சாபங்கள், உயிர் உறிஞ்ச காத்திருக்கும் சர்ப்பங்கள் நிரம்பிய இக்கதைகளைச் சொல்வதற்கு வில்லடியின் சன்னதம் போன்றதொரு மொழியைப் புகழேந்தி உருவாக்கியிருக்கிறார். இத்தொகுப்பின் முதன்மைச் சிறப்பென அதைச் சொல்லலாம். நவீன மிகுபுனைவு சிறுகதைகள் வாசகனோடு நடத்தும் ஆடல்களை மட்டுப்படுத்திக்கொண்டு, கற்பனைகளால் பெருக்கிக்கொள்ள வேண்டிய இடைவெளிகளைக் குறைத்துக்கொண்டு, ‘நான் கதை சொல்லி; என் நிலத்தில் விளைந்த கதைகளைச் சொல்வதொன்றே என் நோக்கம்’ என ஒரு தோல்பாவைக் கலைஞனைப் போல திடுதிடுவென கதைகளை சாமியாடிகளின் ஆங்காரத்துடன் அவசரம் அவசரமாகச் சொல்லிச் செல்கிறார். கதை வாசித்தது போலவும் இருக்கிறது. உச்சாடனம் செய்தது போலவும் இருக்கிறது. 

கந்தர்வனின் சிறுகதை ஒன்றில் மனம் பிறழ்ந்துவிட்ட தன் அக்காவை கணவன் வீட்டிலிருந்து தன் வீட்டிற்குச் சகோதரன் அழைத்துச் செல்வான். நள்ளிரவுப் பேருந்துப் பயணத்தில் அவள் திடீர் திடீரென ’டேய் நான் பத்தினிடா ... பத்தினிடா...’ என கூச்சலிடுவாள். அவளது கூச்சல் முதலில் பயணிகளைச் எரிச்சல்படுத்தும். பிறகு சங்கடப்படுத்தும். அவள் இறங்கிய பின்னும் அந்தப் பெண்ணின் கூச்சலைப் பயணிகளால் உணர முடியும். 

இத்தொகுப்பை வாசித்து முடித்த பின்னர் கொலையுண்ட தெய்வங்களின் ஆங்காரமான குரல் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருப்பதுதான் கார்த்திக் புகழேந்தியின் கலைச்சாதனை. 


அவருக்கு என் வாழ்த்துக்கள். 


Comments

Popular Posts