விருதுநகர் பள்ளியில்


தயம் குழுமத்திற்குச் சொந்தமான ஆர்ஜே மந்த்ரா பள்ளியில் உரையாற்ற ரயிலில் பயணித்தபோது ஒரு இளைஞரை சந்தித்தேன். இளங்கலை சமஸ்கிருதம் பயிலும் மாணவர். மென்பொருள்  பெரும்போக்கிலிருந்து விலகியவர். அவர் மீது மதிப்பும் ஆர்வமும் உண்டாயிற்று. 

சமஸ்கிருத ஆங்கில அகராதியை உருவாக்கிய மோனியர் வில்லியம்ஸ் பற்றி, புராண கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய வெட்டம் மாணி குறித்து, மகேந்திரவர்மனின் நாடகங்களைப் பற்றி, தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்குமான கொண்டான்கொடுத்தான் உறவுகளைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்த தகவல்களைக் கொண்டு உரையாட முயன்றேன். எவற்றையும் அவர் அறிந்திருக்கவில்லை. 

வேதபாடசாலையில் கற்றுக்கொள்வதை விட கல்லூரியில் பயில்வதே தான் உத்தேசித்திருக்கும் வைதீக தொழிலுக்கு உகந்தது. அதற்காகவே, சமஸ்கிருதம் பயில்கிறேன். அம்மொழி மீது  ஆர்வமோ, மேலதிகமாக கற்றுக்கொள்ளவோ விருப்பம் இல்லை என்றார். அடுத்து அவர் சொன்னதுதான் அதிரடி. நான் பொருள் புரிந்து படிப்பதில்லை. மனனம்தான். அதற்கு மூன்றாண்டுகள் அதீதம்.

நான் களைப்படைந்தேன். இன்று புரோகிதம் வருவாய் அளிக்கக் கூடிய தொழில்தானா என்றேன். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தினங்களில் நான்கைந்து யாகங்கள், ஓராண்டில் தோராயமாக 35 சுபமுகூர்த்த தினங்கள். அதில் வருடத்திற்கு தலா 10 திருமணங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், சில கும்பாபிஷேகங்கள் இருந்தாலே குறைந்தது 20 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்க முடியும். வெளிநாட்டினவருக்குச் செய்யும் ஸ்கைப் யாகங்கள் தனிக்கணக்கு என்றார். மறுநாள் நான் உத்தேசித்திருந்த தலைப்புக்கு அந்தத் தம்பி தொடக்கமாக அமைந்தார். 


தீவிரமான உரையாக அமைந்தது. பள்ளி மாணவர்களுக்கென்று உரைகளை லகுவாக அமைக்கக் கூடாது என்பது என் எண்ணம். முதல் 10 நிமிடங்கள் திணறுவார்கள். பிறகு முதுகு நிமிர்ந்து கேட்பார்கள். இதுதான் என் அனுபவம். அன்றும் அப்படியே நிகழ்ந்தது. கிரேட்டா துன்பர்க்கின் ‘நோ ஒன் இஸ் ஸ்மால்’ புத்தகத்தைக் குறிப்பிடும்போது தன்னியல்பாக விருதுநகர் இரட்டையர்கள் என்றழைக்கப்பட்ட கே.எஸ்.முத்துச்சாமி ஆச்சாரி நாவில் வந்தார். விடுதலைப் போராட்டத்திற்கு அவரும் காமராஜரும் வெளிக்கிட்டபோது இருவருக்கும் 15 வயது கூட ஆகவில்லை. போய் படிங்கடா பால்வாடிகளா என திருப்பியனுப்பப்பட்டனர். அடுத்த மூன்றே வருடங்களில் கள்ளுக்கடை மறியலில் இருவரும் சிறைக்குச் சென்றனர். 

ஒரு நல்ல உரை உத்தேசித்திருக்கும் கருத்துக்கட்டுமானத்தை மீறி வேறொரு தளத்திற்குச் செல்லவேண்டும். பேசுகிறவன் மட்டுமே அறியக்கூடிய சிறு சன்னதம். அன்று அது நிகழ்ந்தது. இவ்வளவு கடுமையாக உரை இருந்திருக்கக் கூடாதோ என எழுந்த எண்ணத்தை மாணவர்களின் கேள்விகள் மாற்றியமைத்தன. சுமார் 1 மணி நேரம் உரையாடல் நீண்டது. 


அரங்கத்திலிருந்து வெளியேறுகையில் மாணவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள்.  தாளாளர் அறை செல்லும் வரையிலும் கைதட்டல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவை எம் ஆசிரியர்களுக்குரியவை. ‘எதையும் எடுக்கவரவில்லை, கொடுக்கவே வந்திருக்கிறேன். உரைகள் சிறப்பாக இருக்கவேண்டியதில்லை. பயனுள்ளதாக இருப்பதே முதன்மை நோக்கம்’ எனும் சங்கல்பத்துடன் ஆற்றப்படும் எந்த உரையும் சிறப்பாகவே அமையும்.

உரை கேட்க எனது ஆத்ம நண்பர்கள் வெயிலானும், மாணிக்கராஜூம் வந்திருந்தார்கள். நான் இணையத்தில் எழுத ஆரம்பித்தபோது எனக்கு ஒரு கவனத்தை உருவாக்கியவர் பதிவர் வெயிலான் (https://veyilaan.wordpress.com/). அவரோடு சேர்ந்து சென்ற சாகஸ பயணங்களும் வாழ்நாள் முழுக்க உடன்வரும் நினைவுகள். மாணிக்கராஜ் பள்ளித்தோழன். வெல்லும் சொல் (https://www.youtube.com/channel/UCmVfU1sOFZrLDnuKyv54wuw ) எனும் பெயரில் புத்தகங்களுக்காக யூட்யூப் சேனல் நடத்துபவர். திரும்பும் வழியில் வெயிலான் தனக்கென கட்டிக்கொண்ட சிறிய அழகிய வீட்டிற்குச் சென்றோம். லாரி பேக்கர் கட்டிடங்களின் சில சாராம்சங்களைக் கொண்ட வீடு. தாழ்வாரத்தில் அமர்ந்து வான் நோக்கினால் தூக்கனாங்குருவிகளிகள் கூடுகள் நிறைந்த தென்னை தெரிகிறது. 

தஞ்சாவூரில் திருமண அழைப்பிதழ் விற்பனையகம் நடத்தும் கார்த்திகேயன் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார். நல்ல வாசகர். தனக்கு நிகழும் அன்றாட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்பனவற்றை வீடியோவாக மாற்றும் யூட்யூபரும் கூட. 3 நிமிஷம் இருக்குமா? (https://www.youtube.com/c/3nimishamIrukkuma) எனும் இவரது சேனல் தொழில்முனைவோர் மத்தியில் பிரபலம். 


மதுரையில் இருந்த இரு நாட்களுமே இளமழை. அப்போதும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. கேகே நகரில் ஒரு பாட்டியம்மா நடத்தும் பஞ்சாபி தாபா, சித்திரை வீதி கோபு அய்யங்கார் டிபன் கடை, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹரி’ஸ் ரெஸ்டாரெண்ட் என சில நல்ல கடைகளில் உணவருந்தினேன். ரயிலில் முதன்முறையாக லோ பர்த்தில் படுக்கை கிடைத்திருந்தது. ஜாதகத்தில் கிரகநிலைகளில் ஏதேனும் மாற்றமா என கூகிள் செய்து பார்த்தேன். யாரெனும் எழுப்பிவிடும் முன் உறங்கிவிட வேண்டுமென பாய்ந்து படுத்துக்கொண்டேன். 

- செல்வேந்திரன் 

#selventhiran #Writer #speaker #PublicSpeaking #speech #guestlecture #howtoread #reading #books #bookstagram #tamil #tamilspeech #readinghabits #booklovers #tamil #tamilwriters #essays #literature #writing #KindleUnlimited #reading #kindle #travel #history #management #business


Comments

Popular Posts