யாருக்கு உங்கள் ஓட்டு?

18 முதல் 29 வயதிலான தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 1.21 கோடி. இவர்களுள் நீங்களும் ஒருவர் என்றால் தொடர்ந்து வாசியுங்கள்.


உங்களது வாக்குகள்தான் இந்தத் தேர்தலின் முடிவைப் பிரதிபலிக்கப் போகிறது. எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை இந்நேரம் நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள்தானே? பெரும்பாலும் அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.


நீங்கள் எடுத்திருக்கும் முடிவு சரிதானா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவக்கூடும்.


அதற்கு முன்பு ஒரு கேள்வி. ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டிய வாத்தியார், அதற்குப் பதிலாக எம்பிராய்டரி போட சொல்லித்தருகிறேன் என்றால் ஒப்புக்கொள்வீர்களா? அவர் வேலை என்னவோ அதைத்தான் அவர் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்தானே? 


வாக்காளனின் வேலை என்ன? தனது சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது. போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு அந்தத் தகுதி இருக்கிறதென்பதை ஆராய்ந்து வாக்களிப்பதுதானே சரி? அதை விடுத்து, யார் முதல்வராக வேண்டும், எந்தக் கட்சி ஆள வேண்டும், யாருடைய ‘ஆளாக’ அறியப்பட வேண்டுமென முடிவெடுப்பது சரியா? 


நடந்தது நடந்துவிட்டது. நான் சொல்லியா நீங்கள் மாறப் போகிறீர்கள்? சரி போகட்டும். ஓர்  அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியப் பண்புகள் உங்கள் தலைவருக்கு உண்டா என்பதை நீங்கள் அறிந்துகொள்வது அவசியம். 


  1. நல்ல தலைமைக்கு அறிவுத்திறன் (IQ) மற்றும் தொழில்நுட்பத் திறனை விட இரண்டு மடங்கு முக்கியமானது Emotional Intelligence (EQ) எனும் உணர்வுசார் அறிவு. அது என்ன EQ? தனது சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் நிர்வகிக்கவும் பிறரின் உணர்ச்சிகளைத் துல்லியமாகக் கணித்து அதற்கேற்ப செயல்பட உதவும் மிக முக்கியமான திறனின் பெயர்தான் எமோசனல் இண்டலிஜென்ஸ். 


இதை உலகளவில் பிரபலப்படுத்தியவர் டேனியல் கோல்மேன். இந்தத் திறனுக்கு 5 அம்சங்களை டேனியல் வரையறை செய்கிறார். 


அ) சுய விழிப்புணர்வு - தன்னுடைய தனிப்பட்ட உணர்ச்சிகள், பலம், பலவீனங்கள் மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைத் துல்லியமாக அறிந்துவைத்திருப்பது. 


ஆ) சுய கட்டுப்பாடு - உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடாமல் நடுவுநிலைமையுடன் நிதானமாகச் செயல்படுவது. 


இ) அக ஊக்கம் - பணம் புகழ் அதிகாரம் போன்ற நோக்கங்களுக்காக இல்லாமல் உண்மையாகவே ஒரு செயலை முழு ஈடுபாட்டுடனும், தீவிரமான ஆழ்மன விருப்பத்துடனும் மேற்கொள்வது. தோல்விகளால் துவண்டு விடாமல் இலக்கை நோக்கி முன்னகர்ந்துகொண்டே  இருப்பது. 


ஈ) பிறருக்கு இரங்குதல் - தன்னைப் பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் பொருத்திப்பார்த்து சிந்தித்துப் புரிந்துகொள்ளும் குணம். 


உ) சமூகத் திறன் - அனைத்துத் தரப்பினருடன் ஆரோக்கியமான உறவைப் பேணுதல், குழுவாகச் செயல்படுதல், மோதல்களைச் சுமுகமாகத் தீர்த்தல் ஆகிய பண்புகள். 


சுருங்கச் சொன்னால், ‘உங்களை நீங்களே ஆள்வதும், பிறரோடு இணக்கமாக வாழ்வதும்தான்’ EQ. உங்கள் தானைத் தலைவரிடம் இந்தப் பண்பு இருக்கிறதா? 


  1. இரண்டாவது முக்கிய பண்பு ‘அறிவின் மீது தாகத்தோடு இருத்தல்’. எனக்கே அது கிடையாது சார் என்பவர்கள் மனம் தளர வேண்டாம். சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ‘தொடர்ச்சியான அறிவுத் தேடல்’ அத்தியாவசியமானது.  


உங்கள் தலைவர் தன்னைச் சுற்றி யாரை வைத்திருக்கிறார்? யாரோடு கலந்தாலோசிக்கிறார்? எத்தகைய மனிதர்களோடு பழகுகிறார்? என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறார்? புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறாரா? தன்னிலும் அறிவிற்  சிறந்தவர்களைத் தேடிச் செல்கிறவரா? அன்றாடம் நாளிதழ் வாசிப்பாரா? புள்ளிவிபரங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறாரா? திராவிடம், தமிழ்த்தேசியம், பொதுவுடைமை, முதலாளித்துவம், மய்யவாதம், புரட்சிகர மனிதாபிமானம் உள்ளிட்ட  சித்தாந்தங்கள் குறித்து அடிப்படைப் புரிதல் உண்டா? குறைந்தபட்சம் தன்  பெயரில் வெளியாகும் அறிக்கைகளையாவது வாசித்துவிட்டு கையெழுத்து போடுகிறாரா? 


அறிவின் மீது தாகமற்று இருப்பவன் முட்டாள் மட்டுமல்ல. ஆபத்தானவனும் கூட. 


  1. அச்சமின்மையும் அறநெறியும் மூன்றாவது அடையாளங்கள். சிறந்தத் தலைவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். ஓடி ஒளிய மாட்டார்கள். நவகாளியில் கொடூரமான மதக்கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். காந்தி உடனடியாக கலவர பூமிக்குச் சென்றார். அப்போது அவருக்கு வயது 77. கிராமம் கிராமமாக நடந்து சென்று சண்டையை கைவிடுமாறு மக்களிடம் மன்றாடினார். நான்கு மாதங்கள் அங்கேயே இருந்து அமைதியை நிலைநாட்டினார். ‘ஒரே நபர் ராணுவம்’ (One-man boundary force) என்று வரலாறு அந்த மாவீரனை நினைவுகொள்கிறது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், எப்பேர்பட்ட அரசியல் ஆதாயம் கிடைத்தாலும் தனது தனிப்பட்ட அறநெறியை கைவிடாமல் இருப்பவரே சிறந்த தலைவர். இதில் உங்கள் தலைவர் எப்படியாப் பட்டவர்? அவரது வேல்யூ சிஸ்டம் என்ன? எத்திக்ஸ் என்ன? 


  1. மக்களை அணி சேர்ப்பது கடினம். குழுக்களாகப் பிரித்து ஒருவருக்கொருவர் மோத விடுவது சுலபம். பிரிவினையை ஊக்குவித்த எந்தத் தலைவனுக்கும் வரலாற்றில் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதில்லை. ‘வெறுப்பைத் தூண்ட மறுப்பது’ முக்கியமான தலைமைப் பண்பு. 


சரி, இவற்றையெல்லாம் அடையாளம் காண்பது எப்படி? வெரி சிம்பிள். 


தோல்வியை ஒப்புக்கொள்ளும் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? தன் கடந்த காலத் தவறுகளை நேர்மையாக ஒப்புக்கொள்ளும் துணிச்சல் உண்டா? தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்வது விழிப்புணர்வு மிக்கவர்களின் முதன்மை அடையாளம். 


ஒரு குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காமல் பதில் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் எனில் எச்சரிக்கை! ‘Whataboutism’ எனும் குணக்கேடு கொண்டவர் என்பது பொருள். கொள்கை விவாதங்களிலிருந்து விலகி குழுக்களுக்கிடையே வெறுப்பை வளர்க்கும் நுட்பம்தான் இந்தப் பதில் குற்றச்சாட்டுக்கள். 


கட்சியில் கூட்டுத் தலைமையா அல்லது சூப்பர்மேன் சிண்ட்ரோம் கொண்டவரா என்பதைக் கவனியுங்கள். தனிநபரே ஆதிக்கம் செலுத்துகிற இயக்கமெனில் திசை நோக்கி வணங்கி விட்டு திரும்பிச் செல்தல் நலம். உண்மையான ஜனநாயகத் தலைமை எப்போதும் கூட்டுமுயற்சியாகவே இருக்கும். அணியில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முடிவெடுக்கும் திறன் பயிற்சியளிக்கப்பட்டிருக்கும். சுதந்திரமாக முடிவுகளை எடுக்க ஊக்கமளிக்கப்பட்டிருக்கும். 


முன்னமே தெரிஞ்சிருந்தா இவரை என் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேனே என நீங்கள் நினைப்பது புரிகிறது. இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. இன்னும் 10 நாட்களில்  தேர்தல் வருகிறது. முதன்முறை வாக்காளர்கள் கவனிக்க வேண்டிய சிலவற்றைச் சுட்ட விரும்புகிறேன். 


  • எதையுமே அப்படியே நம்பாதீர்கள். சரி பாருங்கள். நடுநிலைமையான ஊடகங்கள் என ஒன்று கிடையவே கிடையாது. உண்மை உங்களைத் தேடி வரும் உலகில் நாம் வாழவில்லை. நாமேதான் முயன்று தேடிக்கொள்ள வேண்டும். 
  • என் தலைவனுக்குத்தான் ஓட்டுப்போட வேண்டுமென்று பெற்றோரிடம் சத்தியம் வாங்குவதற்கு முன்பு அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேளுங்கள். மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் முன், மற்றவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். 
  • வேட்பாளர்களை வார்த்தைகளைக் கொண்டு எடை போடுவதற்குப் பதிலாக, அவர்களின் கடந்த கால வாழ்க்கையைக் கொண்டு, செயல்களைக் கொண்டு மதிப்பிடுங்கள்.
  • லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் அரசியல் ஆய்வாளர் மைக்கேல் ப்ரூட்டர் ஒரு ஆய்வுத்தகவலைத் தருகிறார். 27 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு. பொதுவாக்குச் சாவடிகளுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் 18-24 வயதுள்ளவர்கள் வெறுப்பை உமிழும் அடிப்படைவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்க இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்கிறார். நம்மூரில் ஓட்டுக்களை டன்ஸோ செய்ய வாய்ப்பில்லை. ஆனால், சோசியல் மீடியா மட்டுமே முதன்மை சோர்ஸாகக் கருதி வாக்களிக்கிறவன் ஓர் அடிப்படைவாதிதான் என்பதில் ஐயமில்லை. 
  • ஒருவர் தனது முதல் இரண்டு தேர்தல்களில் வாக்களித்துவிட்டால் அவர் வாழ்நாள் முழுவதும் ஜனநாயகத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றன புள்ளிவிபரங்கள். ஆரம்பத்திலேயே வாக்களிக்கத் தவறுகிறவன் மீண்டும் ஜனநாயகச் செயற்பாட்டுக்குள் வருவது கடினம். ஆகவே, கடமை தவறேல். 
  • 2016 அமெரிக்கத் தேர்தலில் வெறும் 56% பேர் மட்டுமே வாக்களித்தனர். அதன் கோர விளைவுகளை எல்லோரும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். சிலிண்டர் புக் பண்ண முடியாமல் நாம் அல்லாடுவதற்கும் 44% அமெரிக்கச் சோம்பேறிகளுக்கும் நேரடி தொடர்பு உண்டு.  முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடாதிருந்தால், பிற்பாடு நாம் நிறைய சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். 
  • அதிகப்படியான சதவீதத்தில் வாக்குப்பதிவு நிகழ்வது ஜனநாயகத்தை நம்பிக்கைக்கு உரிய உரையாடலாக மாற்றுகிறது. மண்ணின் மைந்தர்கள் vs வந்தேறிகள்; இந்துக்கள் vs பிற மதத்தவர் போன்ற பிரிவினை அரசியல் ஆபத்தானது. இது நான் வென்றால் நீ தோற்க வேண்டும் எனும் மனநிலையை உருவாக்குகிறது. முறையாகப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் இந்த வெறுப்புச் சுழற்சியை உடைக்க உதவும். 


  • *செல்வேந்திரன்.* 
  • (12-04-2026)


#Politics #Leadership #Tamilnadu #governance #character #democracy #ideology #selventhiran 



  

Comments