உரமிட்ட வாழ்க்கைகள்
நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய பெருமதிப்புக்குரிய ஆசிரியர் திரு. ஹேமச்சந்திர ஹாரா அவர்கள் இந்த அவையில் இருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தின் செழுமை மிக்க கதைகளை பெருவாரி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலக்கிய இவாஞ்சலீஸ்ட் திரு. பவா செல்லதுரை இங்கே முன்னிலை வகிக்கிறார் அவர்களை வணங்குகிறேன்.
கோமதியுடனான உரையாடல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இரண்டு பெயர்கள் சுதன் ஐஏஎஸ் மற்றும் பாலா ஐஏஎஸ். இருவரையும் இங்கே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. காண்பதெல்லாம் மறையுமென்றால் என்கிற இந்தத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளவர்களில் மூன்று கதாநாயகர்களை என் பிள்ளைகளுக்கு கதைகளாகச் சொல்லியிருக்கிறேன்.
ஒருவர் லெப்டினெண்ட் கர்னல் துவாரகேஷ். இராணுவத்தில் பணியாற்றுகிறவர். ஒரு விபத்தில் முழு பார்வையும் பறிபோனது. அதற்குப் பிறகு அவர் நீச்சல் போட்டிகளில் தேசிய பதக்கங்கள் பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதல் எனும் வகைமையை இந்தியாவில் துவங்கிவைத்து அதன் சாம்பியனாகத் திகழ்கிறார். சியாச்சின் மலை உச்சிக்கு ஏறினார்.
இன்னொருவர் என் ஆசிரியர் ஹேமச்சந்திர ஹாரா. இன்று வாழும் மகத்தான இலக்கியப் பேராசிரியர்களுள் ஒருவர். நானும் என் பிள்ளைகளும் அவ்வப்போது அவரது இல்லம் தேடிச் சென்று வாழ்த்துகளைப் பெறுவதுண்டு. என்னிரு குழந்தைகளுக்கும் பிரியமான ஆச்சர்யம் அவர்.
மூன்றாவது நபர் கேரி சார். நான் பணி செய்த ஹிண்டுவின் ஆசிரியர் குழுவில் உயர் பொறுப்பு வகித்தவர். உணர்ச்சி மிக்க உண்மையான காம்ரேட்.
இவர்களைப் போலவே மேலும் பல அசலான கதாநாயகர்களை நான் அறிந்து கொள்ளவும் என் பிள்ளைகளுக்குக் கதைகளாகச் சொல்லவும் இந்த நூல் உதவியாக இருக்கும். கோமதியின் ஓராண்டு உழைப்பின் விளைவு இந்தப் புத்தகம். இதன் உள்ளடக்கம், தலைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு என ஒவ்வொன்றிலும் கோமதி என்னுடைய கருத்தைக் கேட்பார். அவரிடம் ஒரு சிறப்பியல்பு உண்டு. அறிவுரைகள் ஆலோசனைகளைத் திறந்த மனதுடன் வரவேற்பார். ஆனால், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
இந்தப் புத்தகம் வெளியிடப்படும் இந்த விக்டோரியா ஹாலை கவனியுங்கள். சிறிய எத்தனையோ அரங்குகள் உள்ளன. ஆனால், விலை மதிப்பற்ற இந்தத் தொகை நூல் ஒரு பிரமாண்ட அரங்கத்தில்தான் வெளியிடப்பட வேண்டுமென்பதில் கோமதி ஆர்வம் காட்டினார். எதற்கு இத்தனைச் செலவு மிக்க அரங்கு என நான் கேட்டதும், செல்வா வேண்டாமென்று சொன்னால் அங்கே நிகழ்ச்சியை நடத்துவதுதான் சரியாக இருக்குமென முடிவெடுத்துவிட்டார்.
நண்பர்களே வெறும் விலை மட்டுமல்ல. இன்று நான் நின்று உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த அரங்கம் இந்தத்திருநாட்டின் விடுதலை வீரர்கள் அன்றாடம் கூடி நமது தேசத்தின் எதிர்காலத்தைக் கனவு கண்ட இடம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெரும்பகுதியில் நமது சென்னையில்தான் விவாதிக்கப்பட்டன. அனைவருக்குமான இந்தியா எனும் பெருங்கனவு இந்த அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் பேசப்பட்டுகொண்டிருந்தது.
இந்தப் புத்தகம் யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். சொந்தமாகத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் படமாக பார்வையற்ற கதாநாயகனின் வாழ்வை ‘ராஜ பார்வை’ எனும் பெயரில் படமாக எடுத்தவர். உலகிலேயே தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி, ரசிகர்களை சமூக சேவகர்களாக மாற்றியவர். தன்னுடைய வருமானத்தில் பெரும்பணியை சமூக சேவைகளுக்காக தொடர்ச்சியாக அளித்து வருகிற திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சரியான நபர்களைச் சமூகத்துக்கு அடையாளம் காட்டத் தயங்காதவர் கமல்ஹாசன். கோமதியை அவர் சந்தித்ததில்லை. என் வழியாக அவரை அறிவார். சமயங்களில் கோமதி பெருமாள் என முழுப் பெயரையும் அவர் சொல்வது எனக்கு ஆச்சர்யமளிக்கும். பெருமையாகவும் இருக்கும். கமல்ஹாசன் அளித்த உந்துதலில் தங்களுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்ட எண்ணற்ற சமூகசேவகர்களை நான் அறிவேன். அவர்களில் பலர் ஒருபோதும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தவர்கள் அல்ல.
காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் எழுதிய அரசியல் கட்டுரைத் தொகுப்பின் பெயர் ‘அகவிழி திறந்து’. கோமதி இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் எனக்கு அந்தத் தலைப்புதான் நினைவிலாடும். பார்வை முற்றிலும் இழந்தவர்கள். இயற்கையின் தடை, சமூகத்தின் தடை, சூழலின் இடர்பாடுகள் அனைத்தையும் தங்கள் அக ஆற்றலாம் உடைத்தெறிந்து தத்தம் துறையில் எவராலும் எட்ட முடியாத சாதனைகளைச் செய்த உண்மை மனிதர்களின் கதைகள். இது மாற்றுத் திறனாளிகளுக்கான நூல் அல்ல. இது பொதுச்சமூகத்துக்கான புத்தகம். வாசிக்கும் எவரையும் பெரு உத்வேகம் கொள்ளச் செய்கிற ஆற்றல் இந்தப் புத்தகத்துக்கு உண்டு. இந்த நூலின் ஒவ்வொரு கதைகளும் குழந்தைகளுக்குச் சொல்லப்பட வேண்டியவை. இதன் நாயகர்கள் ஒவ்வொரு தமிழ் இளைஞனும் அறிய வேண்டியவர்கள். இதை வாசிக்கிற ஒருவர் தன் வாழ்வுக்கு அழகும் அர்த்தமும் சேர்த்துகொள்ளாமல் இருக்கவே முடியாது.
கோமதி ஒரு சமூக சேவகியாகத் திகழ்வதி எனக்கு ஆச்சர்யம் இல்லை. சமூகம் சார்ந்த அவரது கனவுகள் அனைத்தையும் ஆதரிக்கிற, அவரைக் காட்டிலும் ஒரு பங்கு கூடுதலாக செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிற அவரது தொழில் பங்குதாரர் தியாகு போற்றுதலுக்குரியவர். ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனும் குறள் இந்த இரட்டையருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அரும்பாடுபட்டு பொருள் சேர்ப்பது தேவையிருப்போருக்கு வினியோகம் செய்வதற்கே என்பதே இவர்களது வாழ்க்கை நோக்கு.
இவர்களது பொதுச்சேவையில் Agnoshin ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டிருப்பது போற்றுதலுக்குரியது. Agnoshin-ல் பணியாற்றி பிற நிறுவனங்களுக்கு மாறிவிட்ட முன்னாள் ஊழியர்கள் கூட மெய்ப்பொருள் அமைப்பில் தங்களது தொண்டு காரியங்களைத் தொடர்வதைக் காண்கிறேன். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இன்று உருவாகியிருக்கும் ‘மெய்ப்பொருள் பதிப்பகம்’ பார்வையற்றவர்களின் நூல்களை வெளியிடுவதில் தீவிரம் காட்ட வேண்டும். தமிழில்தான் என்றில்லை. பார்வையற்ற எழுத்தாளர் எந்த மொழியில் எழுதினாலும், அவர் பதிப்பகம் தேடி அலைய வேண்டியதில்லை எனும் சூழலை உருவாக்க வேண்டும். நிறங்களின் உலகம் போன்ற ஆக்கங்களை உருவாக்கிய தேனி சீருடையான் போன்ற நவீன எழுத்தாளர்களை உருவாக்கும் மையமாக மெய்ப்பொருள் திகழ வேண்டும்.
காண்பதெல்லாம் மறையுமென்றால் என்கிற ஆகச்சிறந்த இந்தப் புத்தகத்தை சரியான படி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்வது முதலடி. இளைஞர்கள் அறியும்படி இந்தப் புத்தகத்தின் ஹீரோக்களை ரீல்ஸ்களாக, யூட்யூப் வீடியோக்களாக மாற்ற வேண்டும். இந்தச் சாதனைகள் ஓர் அறிவுச் சமூகம் அவசியம் அறிந்தாக வேண்டியவை.
லோகிததாஸ் பற்றிய நினைவுக் குறிப்புகளுக்கு ஜெயமோகன் ‘உப்பிட்ட வாழ்க்கைகள்’ என தலைப்பிட்டார். இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் இதற்கு ‘உரமிட்ட வாழ்க்கைகள்’ என தலைப்பு வைக்கலாமென தோன்றியது.
நன்றி, வணக்கம்.
(25-04-2026 அன்று சென்னை விக்டோரியா ஹாலில் மெய்ப்பொருள் அமைப்பின் ‘காண்பதெல்லாம் மறையுமென்றால்’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய சிற்றுரை*)
இந்தப் புத்தகத்தைத் தபாலில் பெற விரும்புவோர் 93636 87259 எனும் எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அழைத்து ஆர்டர் செய்யலாம்.*
புகைப்படத்தில் இருப்பவர் நண்பர் தியாகு.*
#Meiporul #agnosin #selventhiran #tamilspeech #tamil

Comments