எதேஷ்டம்

பெரியசாமித் தூரனின் நினைவுக் குறிப்புகளில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சிறுவயதில் ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்புகிறார். அவரது அப்பா ‘பக்கத்து வீட்டுல கல்யாணத்திற்குப் பந்தல் போடுறாங்க... போய் உதவி செய்’ என்கிறார். அங்கே ஊரில் உள்ள இளைஞர்கள் பலரும் குழியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தூரனின் வீட்டில் இருந்த மூங்கில் கழிகள் அங்கே கிடக்கின்றன. ஒவ்வொரு தென்னந்தோப்பிலிருந்தும் பச்சை ஓலைகள் வெட்டிக் கொண்டு வரப்படுகிறது. ஊர்க்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் நிலத்தில் விளைந்த காய்கறிகளைத் தானியங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். ஊரில் ஒரு கல்யாணம் என்று அறிவித்து பொதுவாக வைக்கப்பட்ட இரு பானைகளில் அக்கம் பக்கத்தார் பால் மற்றும் தயிர்களைக் கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். பெண்கள் வற்றல் பொடி, மசாலா பொடிகளை இடித்துக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அக்காலத்தில் திருமணங்கள் ஊர் கூடி கொண்டாடும் நிகழ்வு. பெண்ணைப் பெற்றவனுக்கு அதிகபட்சம் வெற்றிலைப் பாக்குத்தான் செலவு என்கிறார் தூரன். கிட்டத்தட்ட இதற்கிணையான காட்சிகளை சிவராம காரந்தின் மண்ணும் மனிதர்களிலும் காண முடியும். 


தமிழ் விக்கியைத் தமிழகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த ஜெயமோகன் கமல்ஹாசனைச் சந்தித்தார். ஆசிரியர் குழுவில் இருந்தவர்களின் பெயர்களைப் பார்த்து வியந்த கமல் ‘இதுக்கெல்லாம் ரொம்பச் செலவாகுமே ஜெயமோகன், எப்படி சமாளிக்கறீங்க?’என்றார். தொழில்நுட்பத்திற்கென்று ஆன ஓரிரு லட்சங்கள்தான் செலவு. தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கலை இலக்கியங்கள் மீதும் பற்றுறுதியும் அர்ப்பணிப்பும் கொண்ட நண்பர்களின் உதவியோடு இது நிகழ்கிறது என்றார் ஜெ. 


ஜெயமோகன் முன்னின்று செய்கிற பல காரியங்கள்  ‘வெற்றிலைப் பாக்கு’ பட்ஜெட்டில் நிகழ்பவை. விஷ்ணுபுரம் விருது விழா ஓர் உதாரணம். இந்தத் தரத்தில் இரு நாட்கள் இலக்கிய விழாவை  ஓர் அரசோ, தனியார் நிறுவனமோ, ஊடகமோ நடத்தும் என்றால் குறைந்த பட்சம் சில கோடிகள் ஆகும். 


தூரன் உருவாக்கிய கலைக்களஞ்சியமும் வெற்றிலைப் பாக்கு பட்ஜெட்டில் உருவானதுதான். தலா 750 பக்கங்களில் பத்து தொகுதிகள் எனும் முடிவெடுத்து இயங்கிய குழுவில் அனேகமாகப் பலருக்கும் அரைச் சம்பளம்தான். பல கட்டுரைகள் துறைசார் நிபுணர்களால் சன்மானம் பெற்றுக்கொள்ளாமல் பங்களிக்கப்பட்டுள்ளது. அவிநாசிலிங்கம் செட்டியாரிடம் தன் சம்பளத்தையும், அணியினரின் சம்பளத்தையும் உயர்த்திக்கேட்க முடியாமல் வாழ்நாள் முழுக்க தூரன் மறுகியுள்ளதை, குடும்பத்தை நடத்தவேண்டுமென்பதற்காக மட்டுமே பிற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்ததை அவரது டைரிக்குறிப்புகளில் காணமுடிகிறது. தமிழின் தலைவிதி அப்படி. இம்மொழியில் நிகழ்ந்த பெருங்காரியங்கள் அனைத்துமே தன் குருதியின் பெரும்பகுதியைப் பண்பாட்டிற்கென அளிக்கத் தலைகொடுத்தவர்களால் நிகழ்ந்தவை.


மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்று அ.கா. பெருமாள் போன்ற அறிஞர்களால் சுட்டப்படும் கரசூர் பத்மபாரதியின் இரு ஆய்வுகளும் சொந்தப் பணத்தில் மேற்கொள்ளப்பட்டவை. அதிகபட்சம் இருபதாயிரம் ரூபாய்கள். இரண்டு லட்சம் ரூபாய் விருதளிக்கப்பட்டபோது, தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையைப் பார்த்ததில்லை, இவை என் ஆய்வுக்கு உதவக்கூடும் என பத்மபாரதி ஏற்புரையில் குறிப்பிட்டார். 


கரசூர் பத்மபாரதிக்கு விழா எடுக்கப்பட்டபோது, தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களும், அறிஞர்களும், தீவிரம் மிக்க வாசகர்களும் கூடிய நிகழ்விற்கு ஈரோட்டின்  ஒரு பத்திரிகையாளர் கூட வரவில்லை. சென்னையில் இருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள்  பலருக்கும் செய்திக்குறிப்புகள் அனுப்பினோம். ஒரு துளி செய்தி ஊடகங்களில் வெளியாகவில்லை.


இதை இளங்கோ கிருஷ்ணனிடம் வேதனையாக சொன்னபோது அவர் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரியசாமித் தூரனின் வாரிசுகள் கோயம்புத்தூர் பாரதீய வித்யா பவனில் அவரது நினைவாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனராம். குறைந்த பட்சம் 500 பேர் கலந்துகொள்வார்கள் என யூகித்து 500 பேருக்கு இரவு உணவு சமைக்கப்பட்டது. விரிவாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தும் அன்றைய நிகழ்வுக்கு வந்தது 32 பேர். அத்தனை உணவை என்ன செய்வதென தூரனின் வீட்டார் திகைத்தார்கள் என்றார். 


இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக தமிழில் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய தூரன் பல்துறைத்தமிழுக்குச் செய்திருக்கும் பங்களிப்பைப் பார்க்கையில் பெரும்திகைப்பே உருவாகிறது. ஓர் ஆயுளில் செய்துமுடிக்க சாத்தியமெனும் மானுட நம்பிக்கைகளை மீறிய காரியங்கள். நான் மீண்டும் சிவராம காரந்தை நினைத்துக்கொள்கிறேன். 300 வருடம் வாழ்ந்திருப்பாரோ என எண்ணத் தோன்றும் பங்களிப்புகளைச் செய்தவர்கள் இவர்கள். தூரன் தன் வாழ்நாளின் ஓரொரு நொடியையும் தமிழுக்கென அளித்தாலன்றி இத்தகையப்  பெருங்காரியங்கள் சாத்தியமே இல்லை. அவருக்கான நினைவிடமோ, மணி மண்டபமோ, சிலையோ கூட தமிழகத்தில் இல்லை. நானறிந்து தூரன் கடைசியாக நினைவுகூரப்பட்டது மூன்றாண்டுகளுக்கு முன்னர். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் பெரியசாமித் தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருதினை எழுத்தாளர் இமயத்திற்கு வழங்கியது. கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் ஒரு நாள் நிகழ்ச்சி அவரது பெயரிடப்பட்ட அரங்கில் நடந்தது. பின்னது ஜெயமோகன் சொல்லி நடந்தது. 


இப்படிப்பட்ட ஒரு சூழலில் தூரன் பிறந்த ஈரோட்டில் பல நூறு பேர் கூடி அவர் பெயரில் ஒரு விருதளிப்பை ‘வெற்றிலைப் பாக்கு’ பட்ஜெட்டில் நிகழ்த்திக்காட்டியது சந்தேகமற்ற சாதனை. 

Comments

அருமையான விவரணை. ‘இந்த நிலை என்று மாறுமோ?’
Anonymous said…
அருமையான பதிவு
நிச்சயமாக தமிழ் விக்கி சிறப்பான முயற்சி. ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு, தொடர் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் இன்னோவேஷன் எனும் புதியன செய்யும் ஒரு உந்துதல், அரும்பணி ஆற்றும் நண்பர் குழாம் என பல செயல்பாடுகளின் குவிதல். எனக்கு பெரு மதிப்பு உண்டு. உங்கள் கட்டுரை இதனை சிறப்பாக அடிக்கோடு இடுகிறது.

என்னளவில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன் முரளி

Popular Posts