கவசமும் உடைவாளும்

வம்படியாக சட்டம் கொண்டு வந்து இதோ அனைவரையும் ஹெல்மட் தலையன்களாக்கி விட்டார்கள். இதுமாதிரி சட்டம் கொண்டு வந்து பணக்காரர்களனைவரையும் வரி செலுத்த வைக்க இயலுமா என அதிகாரிகள் யோசிக்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு கடை மாதிரி நேற்று விடிய, விடிய ஹெல்மெட் வியாபாரம் பட்டையக் கிளப்பி இருக்கிறது. என்னை மாதிரி டி.வி.எஸ் 50 ஆசாமிகளும், மணிக்கு 20 கிலோ மீட்டருக்கு மேல் ஒட்டாத ரிட்டையர்டு சந்திரமவுலிகளும் ஹெல்மெட் போட்டே ஆகவேண்டும் என்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஊரிலிருந்து அப்பா வந்தால் பஸ்ஸ்டாண்டிலிருந்து போன் செய்வார். நான் வண்டியில் அழைத்து வருவேன். இனி அவரிடமிருந்து போன் வந்தால், இன்னொரு ஹெல்மெட் தேட வேண்டும். என் நண்பர் ஊரிலிருந்து வந்திருந்த அவரது பாட்டியை டாக்டரிடம் அழைத்து போயாக வேண்டும். சைக்கிள்கூட உருட்டியறியாத அந்த பாமர பாட்டி தலையில் கஷ்டப்பட்டு ஹெல்மெட்டை மாட்டி க்ளினிக் அழைத்து போனார். அங்கே போய் ஹெல்மெட்டை கழட்டும்போது பாம்படம் (காதில் அணியும் ஒரு வகை மெகா சைஸ் அணிகலன்) சிக்கிக்கொண்டு அவர் பட்ட பாடு இருக்கிறதே. இன்று இரவே ஊருக்குப் போய்விடுவேன் என ஓற்றைக் காலில் நிற்கிறாள் பாட்டி. அழகு சொரூபியான நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால், பத்துக்கு ஆறு பெண்கள் திரும்பி பார்ப்பார்கள். இனி அந்த பாக்கியம் இல்லை. சிக்னலில் பக்கத்திலிருக்கும் ஸ்கூட்டியை ரூட் விட செல்போனை காதில் எடுத்து 'ஆமா.. சோனியா அகர்வால் மேட்டர்தான்... அத எடிட் பண்ணி அனுப்பிடுறேன்னு' ஜபர் காட்ட முடியாது. அதே சமயத்துல ஸ்கூட்டில இருக்கிறது கலரா... கலவரமான்னு கண்டுபிடிக்கவும் முடியாது. காலைல கவசத்தையும், தோளில் பேக்கையும் மாட்டிட்டு கிளம்பும்போது ரூம்மேட் கிண்டலா சொன்னார் "உடைவாளையும் எடுத்துக்கொள்ளுங்கள் மன்னா"

Comments

நல்லா எழுதுறீங்க, செல்வேந்திரன். குத்தலான நகை நடை உங்கள் தனிச்சுவை. இப்படியே உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டா என்னால எழுத முடியாது போல. வாழ்த்துக்கள்.

Popular Posts