ஸ்டெல்லா புரூஸ்
இந்த வார விகடனில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ், நோயுற்ற மனைவியுடன் வறுமையில் வாடுவது செய்தியாக வந்திருக்கிறது. தொண்ணுறுகளில் இளமை ததும்பும் எழுத்துக்களில் கலக்கிய எழுத்தாளர். குமுதத்தில் வெளியான இவரது ஒரிரு சிறுகதைகளை வெட்டி எடுத்து வைத்திருக்கிறேன். இவரது கதாநாயகன், நாயகியிடம் பேசும் எத்தனையோ வாசகங்களை நான் பால்யத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற அவரது நாவல்களை வயதுக்கு மீறி படித்திருக்கிறேன். நல்ல பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான். ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்த டி.வி.எஸ் ஏஜென்சியை எடுத்துக் கொடுத்து எதிர்காலத்திற்கு வழி செய்திருக்கிறார் அவரது தந்தை. ஆனால் எழுத்துச் சிரங்கு பிடித்து கிறுக்கிக் கொண்டே இருந்ததில் தற்போது கவலைகள் மட்டுமே கைஇருப்பு. குழந்தைகள் இல்லை. வேறு பொருளாதார ஆதாரங்கள் ஏதுமின்றி தவிக்கிறார் ஸ்டெல்லா புரூஸ். பாரதியார், கு.ப.ரா, அழகிரி, புதுமைப்பித்தன் மாதிரி இவர் நிலை ஆகிவிடக்கூடாது என மனசு துடிக்கிறது. சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட எழுத்து அவருடையது அல்ல என்றாலும், வாசிப்பு பரிணாம வளர்ச்சியில் என்னை சில காலம் கட்டிப் போட்டு வைத்திருந்த அவருக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய தொகையை மணிஆர்டர் செய்வதின் மூலம் கொஞ்சம் குற்ற உணர்ச்சியை குறைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளேன்.
Comments