பெரியாரின் தோல்விக்கு யார் காரணம்?

முதலில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.கவினரும் பாருங்கள் என்றார்கள். பின் அரசு அலுவலர்களிடம் டிக்கெட்டை கொடுத்து விற்றாக வேண்டும் என்றார்கள். இப்போது பள்ளிமாணவர்கள் பார்த்துவிட்டு கட்டுரை எழுத வேண்டும் என பரிசெல்லாம் அறிவித்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான விதைகளை தூவிய அற்புத தலைவர் தந்தை பெரியார். அவரது வரலாற்றை ஞானராஜசேகரன் திரைப்படமாக எடுக்கிறார் என்றபோது நான் மகிழ்ந்தேன். காரணம் ஆளுமைகளின் வாழ்வை படம்பிடிக்கும்போது அவதார புருஷர்களாக மட்டுமே காட்டாமல் அவர்களின் தனிமனித பலவீனங்களோடும் காட்சிப்படுத்தும் நேர்மையை அவரது பாரதியில் நான் கண்டிருக்கிறேன். அத்தனை கோடி தமிழர்களின் மனதிலும் ஒவ்வொரு விதமான பாரதி இருக்கிறான். அத்தனைபேரின் மனப்பிம்பத்தையும் ஈடுகட்டும் பாரதியை எடுப்பதில் இருந்த சிக்கல்களை லாவகமாக கையாண்ட திறமையான இயக்குநர் அவர். திரைப்படங்கள் எடுப்பதற்கு முன் அதற்கு தேவையான உழைப்புகளுடன் களமிறங்குபவர் என்பதால் பெரியாரும் பெருவெற்றி பெரும் என்றுதான் நிணைத்திருந்தேன். ஆனால் அவரது முந்தைய முயற்சிகளைப் போலவே பெரியாரும் ஒரு பிரமாண்ட தோல்வியை தழுவியதன் காரணம் அதற்கு பூசப்பட்ட திராவிட சாயம்தான். படத்திற்கு கலைஞர் அரசு பெருந்தொகையை அளித்ததும், அதனைத் தொடர்ந்த பெரியாரின் பிள்ளைகளின் படம் குறித்த முழக்கங்களும், போஸ்டர்களும் சுத்தமான தி.க முத்திரையை குத்திவிட்டது. பெரியார் என்றாலே கடவுள் மறுப்புதான் என்ற போதிலும் பரவலாக வெளித் தெரியாத பெரியாரின் ஏனைய முகங்களை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இருந்தது பெரியார் திரைப்படம். ஆனாலும் திராவிட கழகத்தினர் அதன்மேல் செலுத்திய ஆர்வமும் ஈடுபாடும் மிஸ்டர். பொது ஜனத்தை படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது. ஒரு இலக்கிய சந்திப்பில் ஞானராஜசேகரன் ஆக்ரோஷமாய் கேட்டார் “நான் ஜானகிராமனின் மோகமுள்ளை படமாக்கினேன். படத்தில் நடித்தவர்களுக்கு விருது கிடைத்தது. படம் ஓடவில்லை. அடுத்து நான் எடுத்த பாரதி பலத்த பாராட்டுகளைப் பெற்றது என்றபோதும் மொத்த தமிழ்நாடே அதை சன் டி.வியில்தான் பார்த்தது. இப்போ பெரியார். நல்ல சினிமா எடுக்கவேண்டும் என நிணைக்கும் என் போன்றவர்கள் கோடம்பாக்கம் தெருக்களில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?”. இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. உங்களிடம்..?

Comments

இன்னும் நான் பெரியார் படம் பார்க்கவில்லை. ஆனால் இரண்டு வெளிப்படையான பொருட்குற்றங்களை நான் கேள்விப்பட்டேன்.
1. பெரியாரது முதல் மனைவியை தாசி என்று ஈவ் டீசிங்க் செய்தது அவரது நண்பர்களே, அதுவும் பெரியாரே ஏற்பாடு செய்தது.
2. திமுக ஆரம்பித்தபோது கருணாநிதி அதில் உடனே சேரவில்லை. ஆனால் திரைப்படத்தில் அவ்வாறு காட்சியமைத்ததாகக் கேள்விப்படுகிறேன்.

இன்னும் அப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. நங்கநல்லூர் வேலன் அல்லது வெற்றிவேல் அரங்கங்களில் வரட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
முழு நீளத்திரைப்படமா பெரியார், அது ஒரு விவரணப்பட வகை படமாக்கல், அப்படி இருக்கும் போது அது பெரும்பாலான மக்களை எப்படி கவர்ந்து இழுக்கும். சந்திரமுகி போல் 804 நாட்கள் ஓட வேண்டுமா?

காந்தி போன்ற ஒரு சில விவரண வகை வாழ்கை வரலாறு படங்களே வெற்றிகரமாக ஓடியுள்ளது. நீங்களே சொல்லுங்கள் காந்தி அளவிற்கு தரமாக எடுக்கப்பட்டுள்ளதா பெரியார் படம்?

மேலும் ஞான.ராஜசேகரன் மனசாட்சிப்படி முழுமையாக படத்தை எடுத்துள்ளாரா, அப்படி சொல்ல இயலுமா?

தமிழ் நாட்டில் நன்கறிந்த ஒரு தலைவரைப்பற்றி படமாக்கும் போது அதிகம் வெளியில் தெரியாத சம்பவங்களையும் சேர்த்து எடுக்க வேண்டாமா, பெரும்பாலன பெரியார் பற்றிய நூல்களில் குறிப்பிடபட்ட சம்பவங்களை கடமைக்கு எடுத்தார் போல் எடுத்துள்ளார், எனக்கு படம் மிகுந்த ஏமாற்றமே, ஏன் எனில் நான் படித்த காட்சிகளே பெரும்பாலும், புதிதாக எதுவுமே இல்லாத தோற்றம். இப்படி அனைவராலும் நன்கு ஊகிக்க கூடிய ஒரு கதை ஓட்டம் எனில் பார்ப்பவர் கொட்டாவி தான் விடுவார்.

இதே போன்று முன் கூட்டியே ஊகிக்கும் வண்ணம் அதிகாரப்பூர்வமற்ற வாழ்கை வரலாறு படமாக இருவர் என்று ஒன்றை எடுத்தார் மணி ரத்னம் , என்னவாயிற்று, ஊத்திக்கொள்ளவில்லையா?

கண்டிப்பாக நஷ்டம் வந்திறுக்காது, குறைந்த பட்ஜெட், எனவே விறபனை விலையே லாபம் எடுத்து இருக்கும்.

எனவே இயக்குனர் புலம்புவதிலும் அர்த்தமில்லை , நீங்கள் புலம்புவதிலும் அர்த்தம் இல்லை!
Sindhan R said…
உங்கள் புது கட்டுரையை படித்தேன் ... நண்பா!! ... பாரதி படம் தற்சமயம் விஜய் டி.வி யின் வசத்தில் உள்ளது ... மற்றும் பெரியார் படம் ஒரு மிகப்பெரிய சிந்தனையானளரின் வராலாறு என்பதால் ... ஒரு சாதானர சினிமா ரசிகனின் தேவைகளை பூர்த்தி செய்ய வேன்டியதே இல்லை என்று அற்தமில்லை ... பெரியார் திரைப் படம் அதன் திரைக் கதை எதார்த்தத்தை விட்டு விழகியதெ அப்படத்தின் தோழ்விக்கு காரணம் என்பது இந்த அடியேனின் கருத்து
selventhiran said…
டோண்டு, நங்கநல்லுருக்கு வரும்போது பார்த்துவிட்டு சொல்லுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.
selventhiran said…
வவ்வால், தங்களைப் போன்று பெரியாரைப்பற்றி நன்கறிந்தவர்களுக்கான படம் அல்ல அது. தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு பெரியார் இருக்கிறார். மார்க்கட்டில் வண்டி இழுப்பவன் மனதில் இருக்கும் பெரியாரும், கோவில் அர்ச்சகர் மனதில் இருக்கும் பெரியாரும், வீரமணி மனதில் இருக்கும் பெரியாரும் வேறு வேறானவர்கள். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ரீதியில் பெரியார் பரவலாகப் போய் சேராத சராசரிகளுக்கு நல்ல அறிமுகமாகவும், அதேசமயம் அறிவுஜீவிகளை ஒரளவுக்கேனும் திருப்திபடுத்தும் விதமாகவும்தான் எடுக்க முயற்சித்திருக்கிறார். நீங்கள் உங்களுக்கு தெரிந்த காட்சிகள்தான் பெரும்பாலும் என்கிறீர்கள். ஜெயகாந்தனோ நான் சின்னஞ்சிறுவயதில் அவருக்கெதிரில் பொதுமேடையில் விவாதம் செய்தேனே அந்தக் காட்சி எங்கே என்கிறார்... இரண்டு மணி நேர படத்தில் எவ்வளவுதான் காட்டமுடியும்?

சிந்தன் தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி. விரைவில் போதிய விளம்பர இடைவெளியில் தமிழ்நாடே பெரியாரை பார்க்கும் என்று நம்புவோமாக...!
/////////////////////////////////
திராவிட கழகத்தினர் அதன்மேல் செலுத்திய ஆர்வமும் ஈடுபாடும் மிஸ்டர். பொது ஜனத்தை படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது.
/////////////////////////////////

இது முற்றிலும் உண்மை செல்வேந்திரன்.

அரசியல் தலையீடுகள் இல்லாமல் எடுக்கப் பட்டிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய பதிவில் படத்தில் கலைஞருக்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் பற்றி நானும் பல கேள்வி கேட்டேன் ஒன்றுக்கு தான் விடை தந்தார்கள்,
//ஆனாலும் திராவிட கழகத்தினர் அதன்மேல் செலுத்திய ஆர்வமும் ஈடுபாடும் மிஸ்டர். பொது ஜனத்தை படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது//
உண்மையோ?
//பெரியாரைப்பற்றி நன்கறிந்தவர்களுக்கான படம் அல்ல அது//
செல்வேந்திரன், பெரியாரைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கும், அறியும் ஆர்வம் ஏற்படாமல் போனவர்களுக்குமான படமாக பெரியார் திரைப்படம் தேவையைச் சரியாகவே பூர்த்தி செய்திருக்கிறது என்று கட்டாயம் நம்புகிறேன்.

படம் ஓட வேண்டும், சந்திரமுகி சிவாஜி மாதிரி பேசப்பட வேண்டும் என்றால் அத்தனை சுலபமில்லை. ஆனால், பெரியார் படம் வந்த பின்னால் பல ஊடகங்களிலும் பெரியாரின் வாழ்க்கை குறித்த விவாதங்களின் எண்ணிக்கை உயர்வதைப் பார்க்கிறேன். தொலைக்காட்சியில் கூட எப்போதோ எடுத்த பெரியார் பற்றிய தொடர்களைத் தேடி எடுத்து ஒளிபரப்புகிறார்கள். அந்த வகையில் பெரியார் படம் வெற்றி அடைந்ததாகவே தோன்றுகிறது.

டோண்டு சார் சொல்லும் முதல் பொருட்குற்றம், நான் பார்த்தவரையில் படத்தில் இல்லை..
பொன்ஸ்,

கோவிலில் சாமிக்கும்பிட செல்லும் நாகம்மையை சிலர் துறத்துவார்களே அதனை சொல்கிறார் அவர், அந்த சம்பவம் பெரியாரே ஏற்பாடு செய்தது போல் படத்தில் காட்டப்படவில்லை, ஆனால் சிலர் பெரியார் பற்றி எழுதிய அவர்களுக்கு தெரிந்த சம்பங்களில் அப்படி குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டுள்ள பொழுது தன் மனைவி கோவில் செல்வதை தடுக்க செய்த ஒரு தந்திரம் என்று. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.

//இரண்டு மணி நேர படத்தில் எவ்வளவுதான் காட்டமுடியும்?//

செல்வேந்திரன் , எனக்கும் பூரணமான தெரியாது , எனக்கே இந்த நிலை என்று தான் சொல்ல வந்தேன். இன்னும் அதிக விவரங்கள் சேர்த்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அப்படிப்பார்த்தால் காந்திக்கு எத்தனை அனுபவங்கள் சம்பவங்கள் இருந்து இருக்கும் ஆனாலும் ஒரு அளவு ஏற்புடைய மற்றும் அனைவருக்கும் ஏற்றார்போல திறமையாக ரிச்சர்ட் அட்டன்பரோவ் எடுத்திருப்பார் அந்க அளவு இல்லை, என சொல்ல வந்தேன்.

இயக்குனர் வருத்தப்பட்டுகொள்ளும் அளவிற்கு எல்லாம் படத்தை மக்கள் ஒன்றும் புறக்கணிக்கவில்லை என்றே சொல்வேன், போதுமான அளவு சென்று சேர்ந்துள்ளது. இந்த படத்திற்கு திருட்டு விசிடி வெளியிட்டுள்ளதே மக்களின் அங்கிகாரம் கிடைத்தற்கு ஒரு சான்று! :-))
selventhiran said…
திருட்டு விசிடி வெளியிட்டுள்ளதே மக்களின் அங்கிகாரம் கிடைத்தற்கு ஒரு சான்று! - ஹா... ஹா அருமை வவ்வால்!


விவாதங்களின் எண்ணிக்கை உயர்வதைப் பார்க்கிறேன் - பொன்ஸ் உண்மைதான். ஒஷோவைவிடவும் தவறாக அறிந்து கொள்ளப்பட்ட நபராக இருந்தார் பெரியார். அந்த விகிதம் ஓரளவு குறைந்து வருகிறது. ஆனால் என்னுடைய கவலை எல்லாம் ஞானராஜசேகரன் இனி நல்ல சினிமா எடுக்க முயற்சிப்பாரா? அவருக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா? என்பதுதான்..

இளா தங்களது வருகைக்கு நன்றி
ஜோ/Joe said…
ஐயா,
முதலில் 'பெரியார்' படம் வர்த்தக ரீதியாக தோல்வியடைந்ததாக சொல்லுவதை நிறுத்துங்கள் .ஒரு படத்தின் வர்த்தக தோல்வி அதற்கான செலவைப் பொறுத்தது .'பெரியார்' படம் வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்பட்டதை விட நன்றாக ஓடியிருக்கிறது .ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தமிழர்களிடையே இதை விட அதிகமாக எடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது .

சிங்கப்பூரில் இந்த படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியது .அதனால நீங்க ரொம்ப பீல் பண்ணாதீங்க.
//டோண்டு சார் சொல்லும் முதல் பொருட்குற்றம், நான் பார்த்தவரையில் படத்தில் இல்லை..//

மன்னிக்க வேண்டும். இந்தப் பொருள்குற்றம் தெளிவாகக் காட்டப்பட்ட்டது. தொலைக்காட்சி சானல் ஒன்றில் அந்த குறிப்பிட்டக் காட்சி காட்டப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular Posts