பரிசலோட்டி சொன்ன கதை


அலுவல்காரணமாக கொடிவேரி சென்றிருந்தேன். 'டேம் இருக்கு சார் நல்லாருக்கும்' என்றார் உள்ளூர்காரர் ஒருவர். பார்த்துவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். சாத்தான்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டு, கடவுளர்கள் கடன் மேல் கடன் வாங்கி கட்டி இழைத்தது போன்று இருக்கிறது கொடிவேரி ஊர். இத்தனை அழகிய ஒரு ஊரை நான் கண்டதேயில்லை. ஊர் முழுவதும் வாய்க்கால்களில் நீர் ஓடுகிறது. வாய்க்கால்களின் இருமருங்கிலும் குல்மொஹர் மரங்கள் பூத்துக் குலுங்கி நிற்கிறது. பத்தடிக்கு ஒரு படித்துறை. அதில் உள்ளூர் மக்கள் எதுகுறித்தும் கவலையில்லாமல் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு ஜோடி குல்மொகர் மரத்திற்கு இடையே வசதியாக இருந்த சந்தில் காதல் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலைத் தொட்டு ஓடிக்கொண்டிந்தது ஆறு. ஓரு யூரோப்பிய ஓவியம் போல இருந்தது அந்தக் காட்சி. ஒருபக்கம் கரும்பும் மறுபக்கம் மஞ்சளும் விளைந்திருக்கும் வயல்வெளிகளைக் கடந்தால் அணை வருகிறது. பிரம்மாண்டமாய் கண்முன் விரியும் ஜலசமுத்திரம். ஆழம் அதிகமில்லை போலும், சிறுவர்களும் பெரியவர்களும் அதன் மதகில் நின்று குதித்து ஆடிக்கொண்டிருந்தனர். மதகில் வழியும் நீர் பாறைகளின் வழியே வீழ்ந்து ஒரு குட்டி நீர்விழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அதன் கீழே 'சரோஜாக்கா சாமாநிகாலோ' ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள் இளந்தாரிகள். கொடிவேரி அணையில் பரிசல் பயணம் ரொம்பவும் பிரசித்தம். அறுபதுகளை கடந்த ஐந்தாறு பரிசல் ஓட்டிகள் இருந்தார்கள். என் பரிதாப முகத்தை பார்த்து 'என்னா தம்பி பரிசல்ல போலாம் வாரீயா?' என்றது ஒரு அறுபது. நீரின் மேல் கொண்ட பயம் காரணமாக வேண்டாம் என அவசரமாக மறுத்தேன். 'தம்பி பயப்படாதீக.. சின்னதம்பி படத்துல குஷ்பு ஆடுமே அது இங்ஙனதான் எடுத்தாக, இந்த பரிசல்தான் அது' என்று மார்க்கட்டிங்கை ஆரம்பித்தது பெரிசு. சாட்சாத் குஷ்புவே பயணம் செய்த பாரம்பரியம் உள்ள பரிசல் என்பதால் மன உறுதியை வரவழைத்துக்கொண்டு ஏறினேன். அந்த அணைக்கட்டு முழுவதும் இப்போது எங்களிருவரின் வசம் இருப்பது போல இருந்தது. மீன்கள் அவ்வப்போது துள்ளிக்கொண்டிருந்தது.இன்னொரு பரிசலில் இருந்த பருவமங்கைகள் என்னையும் பெருசையும் பார்த்து 'ஓ' போட்டார்கள்.
'...டியாளுங்கோ போடூற ஆட்டத்தைப் பாருங்க ...பரிசல்ல ஆடினா என்னா ஆவும் தெரியுமான்னு ஆரம்பித்தார பெருசு. 'சின்னதம்பி படம்பிடிக்கறப்போ பரிசள்ள ஏறுன குஷில குஷ்பு திடீர்னு எந்திரிச்சி நின்னு ஆட ஆரம்பிச்சது. கால்ல போட்டிருந்த பெருஞ்செருப்பு (ஹைஹீல்ஸ்தான்) னால தடுமாறி தன்னிக்குள்ளாற விழுந்திருச்சு. எல்லாரும் திகைச்சு நின்னப்ப நாந்தான் குதிச்சு அத இழுத்துகிட்டு கரை சேர்ந்தேன். கரைக்கி வந்தப்ப வாசு (டைரக்டர் பி.வாசு) அதோட கன்னத்துல விட்டாரு பாருங்க ஒரு அறை.. இன்னிக்கும் கண்ணு முன்னால நிற்குதுங்க' என்று பெருமை பொங்க சொன்னார். தமிழ் சினிமாவின் பிரத்யேக ரகசியங்களுள் ஒன்றை அறிந்த பெருமிதம் அவருக்கு. இதுவும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்தான். ஆனால் காலம் கடந்துவிட்டது. குஷ்பு கன்னத்தில் அறைந்த வாசு என்று தலைப்பு வைத்தால் எனது பிளாக்கின் டி.ஆர்.பி ரேட் ஏற ஏதேனும் வழி இருக்கிறதா?

Comments

Anonymous said…
என்ன செல்வேந்திரன் பொம்பிளை தேடுறீங்களா?

படமெல்லாம் அட்டகாசமா இருக்கு
selventhiran said…
அணாணீ தேடாமலே கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
Boston Bala said…
---குஷ்பு கன்னத்தில் அறைந்த வாசு என்று தலைப்பு வைத்தால் ---

:))