Friday, May 28, 2010

மனக்காளான்

மீட்டிங்கில் போன வருஷத்து புரொடக்டிவிட்டி என்ன என்று கேட்டார்கள். பழம்பெருமை வேண்டாம் சார். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்போம் என்றேன்.

'விச் காஃபி யூ வாண்ட் டூ ஹேவ்?’ என்ற காஃபி டே நங்கையிடம் ‘சுக்கு காஃபி’ என்றேன். முறைத்துச் சிரித்தாள்.

யானையைக் கட்டியும் யூனிகார்னை ஓட்டியும் சோறு போட முடியாது!

சிந்தனையாளர்களை ஏன் இந்த உலகம் சோம்பேறிகள் என்கிறது?!

ரங்கநாதன் தெருவைப் பற்றிய ‘அங்காடித் தெரு’ பாடலில் சில வரிகள் மு.சுயம்புலிங்கத்தினுடையவை.

கட்டிய கணவனை, பெற்ற மகனை, ஆசைப் பேரனை களப்பலி கொடுத்த மறத்திக்கு இடமில்லையெனில் இத்தேசம் ஒழிதல் நன்றாம்!

கொடியது கேட்கின் வரிவடிவேலா...ஞாயிறில் வேலை :(

அப்படியே றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு... கேப்டன் டிவி ஆரம்பிச்சுட்டாங்க..

மனிதக் கூட்டங்களால் நிரம்பி வழியும் பூமியில் தனிமை ஒரு சாக்கு! உடைக்கத் துணிந்தால் பிரயத்தனங்கள் தேவையில்லை.

அப்பா அனுப்பிய கூரியரில் மஸ்கோத் அல்வாவும், சம்பா அவலும், அன்பும் இருந்தன.

பரிசல் உயிரோடுதான் இருக்கிறார் என்று ட்வீட்டச் சொல்கிறார். மதிய சாப்பாடு அவரோடுதான். சிறுகதைகள் பற்றி பேசவில்லை :)

மேலவை உறுப்பினராகப் போறேன்... எழுத்தாளர் கோட்டாவில்...

கமாண்டோக்களுக்கானப் பயிற்சிகளில் மேரி பிஸ்கட் சாப்பிடுவதையும் சேர்க்க வேண்டும்.

நான் பழுத்திருந்த காலங்களிலும் வராத, பட்டபின்னும் வராத மனம் கொத்தி நீ! (லாசராதான் இல்லையே...)

இக்கட்டு தருணங்களில் திக்கெட்டும் அடிப்பவனே சச்சின்! ஆட்டம் காக்க சச்சின் உண்டு. வாட்டம் வேண்டாம்.

ஸ்வீட்டி ஒண்ணு கொடுங்க என்றேன். கொல்லென சிரித்தது பேருந்து எனை கொன்றவள் நீயென தெரியாமல்...

காதல் காமத்தின் கண்றாவிப்பெயர்!

வரும்வரை துணி துவைத்துக்கொண்டிரு... வந்தவுடன் உன்னைத் துவைக்கிறேன்.

நாஞ்சில் நாடன் கவிதைகளுக்கு யாரெனும் பொழிப்புரை எழுத மாட்டார்களா?!

நான் புத்தகம் எழுதினால் அதை என் பால்யகால சினேகிதன் கருணாநிதிக்கு சமர்ப்பணம் செய்வேன். கருவாட்டு மண்டி வைத்திருக்கிறான்.

பாதசாரியின் ‘நல்லியல்புகள்’தானே பேயோனிடத்தில் காணக்கிடைக்கின்றன...

விமர்சனங்கள் படித்துவிட்டு சினிமாவிற்குச் செல்வது - ஏற்கனவே புணர்ந்த பெண்ணுடனான முதலிரவு போன்றது.

வழக்கமாக ஆன்மாவைக் கரைத்துத்தான் எழுதுவேன். கரைக்க தோசை மாவைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லாததால் எழுதவில்லை.

குடிக்காமல் எடுத்த வாந்தி கவிதை ஆகிறது!

இளையராஜா ஒரு சிறந்த மனிதனா?! எனும் விவாதம் துவங்கியுள்ளது. எதிர்வீட்டுக்கார ஆடிட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதி உயிர்மைக்கு அனுப்பனும்.

ட்வீட்டுகளை முதன்முதலில் தொகுத்தவர் கோபிகிருஷ்ணன். நூலின் பெயர் ‘டேபிள் டென்னிஸ்!’

செய்யதும், சொக்கலாலும் ஜாய்ண்ட் வெஞ்சராக பஞ்சு வைத்த பீடிகளை ஏன் உருவாக்கக் கூடாது?!

சகல பாவங்களையும் கட்டணமின்றி மன்னிக்கவும் கடவுளே காதலி!

யோனிகள் பசித்திருக்கும் நாட்டில் மழை பொய்க்கும்.

விஜயகாந்த் ஆக முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். கோபக்கார இளைஞன் வேடம் சுலபமாக இருக்கிறது...

இஞ்சி மொரப்பாவை எறும்புகள் மொய்ப்பதில்லை...!

மேலாளர் வீட்டு விருந்தில் கரப்பானே கிடந்தாலும் "கண்ணம்மா கம்னு கிட...!"

மாமனாரின் இன்பவெறியை க்ளேஸில் அடித்தால் நவீனம். நியூஸ் பிரிண்டில் அடித்தால் செக்ஸ் புக்!

நீ மழை கழுவி வைத்த இலை... நான் இலையேறும் கட்டெறும்பு...

அறமெந்தும் கலைஞன் சமூகத்தின் பிள்ளை!

பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் நரகாசுரன் மீதான வெஞ்சினம் மறையவில்லை. விழாக்கோலம் பூண்டிருக்கிறது வீதிகள்...

அடித்த கதையை எழுதினால் ஹீரோயிசம் என்கிறார்கள்... அடிபட்ட கதையை எழுதினால் சுயகழிவிரக்கம் என்கிறார்கள்...

வாஸ்து பார்த்து வாழைக்குலை மாட்டு... உடனே ஏறும் எட்டணா ரேட்டு...

அண்ணாமலை, மருதமலை, மலை மலை, திருவண்ணாமலை, அழகர் மலை என மலைப் படங்கள் எல்லாம் ஏன் மொக்கையாக இருக்கிறது?!

விளம்பர இடைவேளை மாதிரி பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சண்டையிடும் காதலியை என்ன செய்யலாம்?

சேர்த்துக்கொள்வது உசிதம்.

வீடு நீங்கும் ஒவ்வொரு முறையும் ‘பாடி ஸ்பிரே’ அடித்துக்கொள்கிறேன். எனக்கு சமூகப் பிரக்ஞை இல்லை என்று எப்படி சொல்லப் போகும்?!

உன் அழகைப் பாட மொழிக்கு திராணி இல்லை. எனக்கும்.

மேலாளர்களே, வேலைக்காரர்களிடத்தில் அன்பாகவும், மூளைக்காரர்களிடத்தில் எச்சரிக்கையாகவும் இருப்பீராக! ஆமென்!

வக்கற்றவனுக்கு வாயே துணை!

நினைவில் கார் உள்ள பெண்ணை எளிதில் வீழ்த்த முடியாது!

ஈக்கி குத்தி செத்தவனும் இருக்கான். ஈட்டி குத்தி பொழைச்சவனும் இருக்கான். குத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் இல்லை.

இனிய இரவாகட்டும் விடியல் நமதாகட்டும். நாளைக்காவது தினமணி நனையாமல் வரட்டும். ஜெய்ஹோ!

இணையத்தில் மேய்ந்தது போதும் இணையோடு மேயேன் என்கிறாய். உன் மோனையில் மோகம் கொள்கிறேன்.

ட்வீட்டர் மூலமாக அழகிகளின் சகவாசம் கிடைக்க வாய்ப்பே இல்லை!

நா.கதிர்வேலன் பேட்டிகளில் மட்டும் மொக்கை இயக்குனர்கள் கூட மொரட்டு எளக்கியவாதியா மாறி பேசறாய்ங்க

அசலான சர்க்குலேஷன் ஆசாமி பெட் காஃபி குடித்திருக்கவே மாட்டான். நான் குடித்ததில்லை.

எளிமையாக எழுதுகிற எழுத்தாளன் மீது இளக்காரம் எனும் மனக்காளான் முளைக்கிறது.

சிதிலத்தின் அதீதம் அழகியல்!

இலக்கியத்தின் உச்சம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். துவக்கம் என்னவோ ‘போலச் செய்தல்’தான்!

Friday, May 21, 2010

ஒரு விசாரணை

சொன்னதைச் செய்யாவிட்டால், காத்திருக்க வைத்தால் – ‘யோவ்…நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?’ என்கிறாள் கேண்டி. ‘யோவ்’-ல் காதல் பாதி; கடுப்பு மீதி;

‘நீ ஏவே என்றழைக்கும் ஒவ்வொரு கணமும் உழுத நிலத்தில் அம்மணமாய்ப் புரண்டெழுந்த உணர்வெனக்கு’ என எப்போதோ படித்த கவிதை நினைவில் ஆடுகிறது. இவ்வளவு அசலான கவிதையை சுயம்புலிங்கமோ அல்லது மகுடேஸ்வரனோதான் எழுதியிருக்க முடியும்.

***

துடியலூர் துவங்கி மேட்டுப்பாளையம் வரையிலான சாலையின் இருமங்கிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான மரங்களை விரிவாக்கத்தின் பெயரால் வீழ்த்துவதுதான் அடுத்த அஜெண்டா. மரம் வெட்டும் ஏலம் எடுக்க வந்தவர்கள் ஒன்றல்ல..நூறல்ல...மூவாயிரம் பேர்கள்! இத்தனைக் கூட்டத்தில் ஏலம் நடத்த முடியாது என ஒத்தி வைத்து விட்டார்கள்.

தென் மாவட்டங்களில் சாராயநதி பிரவாகமெடுத்தபோது ஜாங்கிட் அவதரித்தார். சாராய ஊறல்களை அழித்ததோடு காய்ச்சிப் பிழைப்போர் மறுவாழ்வுக்கும் வகை செய்தார். அதைப்போலவே உடனடியாக மரம் வெட்டிப் பிழைப்போர் மறுவாழ்வு மையம் துவங்கியாக வேண்டும் போல இருக்கிறது.

பழைய ஜன்னல், கதவு, நிலைகளை விற்கும் கடைகள் ஊருக்கு நூறு இருக்கிறது. கொள்வாரில்லை. வீடு கட்டுகிறவர்கள் பத்து வட்டிக்கு வாங்கினாலும் புதுமரம் வெட்டித்தான் கட்டித் தொலைக்கிறார்கள். ஒரு பழைய கதவை வாங்கினீர் என்றால் ஒரு பெரு மரத்தின் மரணத்தை தள்ளிவைத்தீர் என்று பொருளய்யா...!

மர விஷயத்தில் என்னை விடவும் வீணாய்ப்போன ஆர்வலர் ஆர்.எஸ். நாராயணன் சொல்வனத்தில் அற்புதமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.

***

சென்னையில் எனக்கு பாஸ்கர் அண்ணாவைத் தவிர வேறு போக்கிடம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது. ஒருவாரம் சென்னையில்தான் இருப்பேன். உங்களுக்குச் சவுகர்யப்படும் நேரத்தில், சவுகர்யப்படும் இடத்தில் சந்திக்கலாம் என்று பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். தாமிரா மட்டும் ‘சந்திக்க முடியாது; பிஸியாக இருக்கிறேன்’ என்று பதில் அனுப்பினார். ’அண்ணே’, ‘சகா’, ‘தம்பீ’, ‘தல’, ‘பாஸ்’ போன்ற நுனிநாக்குச் சக்கரையை உண்மையென்று நம்பினது என் தப்புத்தானே.

‘நீ நட்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறாய்’ என்பது கேண்டியின் குற்றச்சாட்டு. ‘முறைவாசல்’ சரியில்லை என்கிறது மனதின் குரல்!

***

பாஸ் அண்ணா புண்ணியத்தில் பரிக்ஷாவின் ‘ஒரு விசாரணை’ நாடகத்தைப் பார்க்க முடிந்தது. நவீன நாடகங்களை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. கதாபாத்திரங்களின் காலடியில் சம்மனமிட்டு நாடகம் பார்ப்பது புதுமையான அனுபவம்.

1945ல் ஜே.பி. பிரீஸ்ட்லீ எழுதிய ‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ நாடகத்திற்கு ஞாநி தமிழ்வடிவம் கொடுத்திருக்கிறார். எழுதப்பட்டு 65 ஆண்டுகளாகியும் நாடகத்தின் பொலிவு கெடாமல் இருப்பது சமூகத்தின் குற்றம். மேல்தட்டு வர்க்கத்தின் மனசாட்சியைக் கேள்விக்குட்படுத்தும் பிரீஸ்ட்லீயின் கேள்விகள் இன்றளவும் தீர்க்கப்படாமல்தான் இருக்கின்றன.

சிறுகதை ஒன்றினை லயித்து வாசிப்பது போலவும், நாடகத்தின் ஒரு பாத்திரமாகவே இருப்பது போலவும் தோன்றியது. அனைவரும் பிரமாதப்படுத்தி இருந்தனர். மொழிபெயர்ப்பு வாடை அடிப்பது பிரக்ஞையோடு செய்த காரியம் எனப்படுகிறது.

நாயகி ஜெயந்தியின் கூர்நாசியும், அதில் மின்னும் மூக்குத்தியும், ஐம்பது தடவைக்கும் மேல் அவர் சொன்ன ‘நெனைச்சிப் பாக்கவே ரொம்பக் கேவலமா இருக்குப்பா’ வசனமும் இன்னும் நினைவில் வாழ்கிறது.

Tuesday, May 18, 2010

பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாக...

சேர்ந்தாற் போல இரண்டு வரிகள் எழுதத் தெரிந்துவிட்டால் உடனே புத்தகம் போட்டு விடுகிற தீவிர நோய் தமிழ் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. புது சிம்கார்டுக்குப் படிவம் நிரப்ப ஆகும் நேரத்தை விட மிகக்குறைவான நேரத்தில் முழுப்புத்தகத்தையும் எழுதி சாயங்காலத்திற்குள் அச்சடித்து இருட்டுவதற்குள் ’இலக்கிய சாம்ராஜ்’ என அறிவித்து விடுகிறார்கள்.

அப்படி வெளியாகிற புத்தகங்களை ஆசிரியரையும், பிழை திருத்துபவரையும் தவிர வேறு யாரும் படிப்பதில்லை என இன்ஸ்டண்ட் எழுத்தாளர்களில் பலரும் மனச்சோர்வில் இருப்பதாகத் தெரிய வருகிறது. ‘நமக்கு நாமே மாமே’ திட்டத்தின்படி செயல்பட்டால் சுமார் பத்தாயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்யலாம்.1) ’ஒரு லட்சம் பிரதிகள் விற்பனைச் சாதனையை நோக்கி...’ எனும் முழக்கத்துடன் மல்டி கலர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் உள்ள புத்தக விற்பனையகங்களில் ராவோடு ராவாக ரகசியமாக ஒட்டி வைக்கலாம். இவ்வளவு பிரதிகள் விற்ற ஒரு புத்தகத்தை எப்படி வாங்காமல் போனோம் என அவனவன் குழம்பி உடனே ஒரு பிரதி வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்பான்.

2) புத்தகம் பற்றிய விசாரணைகளின் வீரியம் தாங்காமல் வியாபாரிகள் நம்மைத் தொடர்பு கொண்டு ‘100 புத்தகங்கள் அனுப்பி வையுங்கள். நிறைய டிமாண்ட் இருக்குது’ என்பார்கள். ‘பப்பரக்கா’ என உடனே அனுப்பி வைத்து விடக்கூடாது. “சாரி ஸார். நோ ஸ்டாக்! சிக்ஸ்த் எடிஸன் பிரிண்ட்ல இருக்குது. ஒன் வீக் ஆகும்”னு லேசா நூல் விட்டு அனுப்பினாத்தான் உடனே பேமண்ட்!

3) “கொன்னுட்டாம்யா... இதே மாதிரி ஒரு கதையாவது சாருநிவேதிதா எழுதி இருக்கானான்னு’’ யாரையாவது விட்டு பதிவு போடச்சொல்லனும். மிஸ்டர். உன்மத்தம் மேடைகளில் புத்தகங்களையும், பிளாக்கில் ஆசிரியனையும் கிழிப்பார். சர சரன்னு சரவல் பத்திக்கும். நெகட்டிவ் மார்க்கட்டிங்!

4) “ஐம்பதாண்டு கால நவீன இலக்கிய வரலாற்றின் ஓரே ஈவு ‘லவ் நிலாக்கள்’தான். மத்ததெல்லாம் அடாசு!” என முறையே எஸ்ரா, ஜெமோ துவங்கி அயன்புரம் சத்தியநாராயணன் வரைக்கும் மிட்நைட் மெஸெஜ் அடிச்சா விடியறதுக்குள்ள ஜெ. நானுறு பக்கங்கள், எஸ்ரா நாற்பது பக்கங்கள்னு இணையத்துலேயே நாறடிச்சுருப்பாங்க... காம்பவுண்ட் நெகட்டிவ் மார்க்கெட்டிங்!


5) ஏதாவது இலக்கிய அமைப்பிலோ, வாசகர் வட்டத்திலோ அடித்துப் பிடித்து பதவிகள் வாங்கிவிட வேண்டும். உறுப்பினராக நீடிக்க வேண்டுமானால் ஆளுக்கு பத்து புத்தகங்கள் வாங்கி உறவினர்களுக்குப் பரிசளிக்கும்படி தீர்மானம் கொண்டு வரலாம். அப்புறம் குடும்பத்தில் அவர் உறுப்பினராக இருப்பாரா என்பது அவரது சொந்தப் பிரச்சனை!


6) விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு விமர்சனத்திற்குப் புத்தகம் அனுப்பும்போது, ஃப்ரம் அட்ரஸில் முகவரி எழுதாமல் ரத்தச் சிவப்பில் மண்டை ஓடு படம் மட்டும் வரைந்து அனுப்பினால் திகிலாகி ஏதேனும் க்ளூ கிடைக்கிறதா என முழுப்புத்தகத்தையும் படித்து விடுவார்கள். அப்புறம் படித்து விட்ட காரணத்தினாலேயே வரவேற்பறை பகுதியில் ‘கவனிக்கத் தகுந்த’ படைப்பு என்று பப்ளிஷ் ஆகலாம். உங்கள் நேரம் சனியன் சடை பின்னும் நேரமாக இருந்தால் கமிஷனர் ராஜேந்திரனே கவரைப் பிரித்து ’தக்க’ பின்னூட்டமிடுவார்.

7) “அகமனதின் அணத்தல்களை அனாயசமாகப் பின்னிப்பிணைந்து புனைவுலகின் உச்சத்தை நோக்கி முன்நகரும் இந்தப் பிரதி அந்தரங்கமான ஆனால் தீவிர நிராயுதத் தன்மையான கேள்விகளை முன் வைக்கிறது” என ஒரு மார்க்கமான மொழியில் ரிவிவ்யூ எழுதி ஏதேனும் சிற்றிதழ்களில் இடம்பெற வைத்தால் இலக்கிய அந்தஸ்து வந்துவிடும். அடுத்த இதழிலே ’எதிர்வினைகள்’ தூள் பறக்கும். உங்களுக்கான ஒளிவட்டமும், புதிய கோஷ்டியும் உருவாகி விடும்.


8) உங்கள் இலக்கிய எதிரிகளின் பட்டியலை முகவரியோடு தயார் செய்துகொள்ளுங்கள். அனைவருக்கும் வார நாட்களாகப் பார்த்து வி.பி.பியில் புத்தகங்களை அனுப்பி வையுங்கள். உங்கள் எதிரி வேலைக்குப் போயிருக்கும் சமயமாக தபால்காரர் வருவார். “நம்ம வீட்டுக்கோட்டிதான் ஆர்டர் கொடுத்திருக்கும்” என்ற நம்பிக்கையில் அவர்தம் மனைவியரும் தொகையை செலுத்தி பார்சல்களை வாங்கிக் கொள்வர்.

9) முதலில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தி இருபது புத்தகங்கள் வாங்க வேண்டும். பிறகு அவரே இருபது பேர்களைச் சேர்த்து விட்டால் சிங்கிள் ஸ்டார். அவருக்கு டேபிள் பேன். இருநூறு பேர்களைச் சேர்த்து விட்டாரெனில் சுப்ரீம் ஸ்டார். அவருக்கு ஒரு சீலிங் பேன். இரண்டாயிரம் பேர்களைச் சேர்த்து விட்டால் சூப்பர் ஸ்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கும் ராட்சஸ புரொபல்லர் ஃபேன்! மல்டி லெவல் மார்க்கெட்டிங்!

10) புத்தகம் வெளியான அடுத்த நாளிலிருந்தே “வண்ணதாசன் ஒரு அழுகுணி!; சுஜாதா ஒரு புழுகுணி!; க.நா.சு ஒரு காப்பிரைட்டர்!; ஜெயகாந்தனை நிராகரிக்கிறேன்”னு சிற்றிதழ்கள், பிளாக், கை துடைக்கிற டிஸ்யூ பேப்பர் எது கிடைச்சாலும் ‘டிஸ்கார்ட் ஸ்டேட்மெண்ட்ஸா எழுதிக்கிட்டே இருக்கனும். இந்த மசுராண்டி அப்படி என்னதான் எழுதி கிழிச்சிருக்கான்னு வாசகன் உங்க புத்தகத்தை தேட ஆரம்பிப்பான்.

11) புத்தகத்திற்கான விளம்பரத்தை மாஜிக் பாட், பாடி பில்டர்ஸ், டிரினிட்டி மிரர், ந்ருசிம்ஹப்ரியா, மூலிகை மணின்னு சம்பந்தா சம்பந்தமில்லாத பத்திரிகைகளுக்கு கொடுங்கள். என்னமாதிரியான புத்தகம் இதுன்னு யாரும் ஒரு முடிவுக்கே வந்துடக்கூடாது.

12) “என் பால்ய கால சினேகிதன் கலைஞர் கருணாநிதிக்கு”ன்னு புத்தகத்தை சமர்ப்பணம் பண்ணிடுங்க. லைபரரி ஆர்டர் அலையாமலே வரும்.

13) தொலைதூர ரயில் பயணங்களில் யார்கிட்டயும் பேசாமல் நகரும் மரங்களை வெறிச்சு பார்த்துக்கிட்டே ஏக்கப் பார்வை ஏகாம்பரங்கள் டிராவல் பண்ணிக்கிட்டு இருப்பானுங்க. மெள்ள அப்ரோச் பண்ணி “என் வாழ்க்கையையே மாத்தின புக்கு சார் இதுன்னு… ” டைரக்ட் மார்க்கட்டிங்ல இறங்கிறனும்.

இன்னும் அட்டகாசமான ஏழு யோசனைகள் இருக்கின்றன. அவற்றைப் பெற ரூ.2,000/-க்கான வரைவோலையுடன் நேரில் வரவும்.

Tuesday, May 11, 2010

பெற்றியார்ப் பேணிக் கொளல்!


தீவிரமான வாசிப்பு, தொடர்ந்த உரையாடல்கள் இரண்டின் மூலமும் ‘இலக்கிய வாசகனெனும்’ அந்தஸ்தினை அடையத் துடிக்கும் அரங்கசாமி, அருண், சந்திரகுமார் இவர்களோடு நானும் சேக்காளி. நாங்கள் நால்வரும் நேர்கோட்டில் சந்திப்பது ஜெயமோகன் எனும் ஒற்றைப் புள்ளியில். முதல் முயற்சியாக கோவையில் ஜெயமோகன் வாசகர் சந்திப்பு ஒன்றினை நிகழ்த்தினோம். நண்பர்களிடத்திலும், வாசகர்களிடத்திலும் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் உத்வேகம் தந்தது.

அட்டை இல்லாமல் புத்தகங்களும், சட்டை இல்லாமல் மனிதர்களும், பெயரில்லாமல் அமைப்புகளும் இருக்கக் கூடாது. ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ உருவானது. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஓர் இலக்கியப் பிரதியை முன்னிறுத்தி இலக்கிய அமைப்பு உருவாவது அனேகமாக இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார் சுகுமாரன்.

தகுதியுள்ள ஆளுமைகள் உரிய முறையில் மரியாதை செய்யப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஜெயமோகன். வேதசகாயகுமார், நாஞ்சில் நாடன், நீல. பத்மநாபன், அ. கா. பெருமாள் போன்ற ஆளுமைகளுக்குத் தன் சொந்தச் செலவில் விழா எடுத்ததை தமிழுலகம் அறியும். அவ்விழாக்களைத் தொடர்வதும், கொங்கு மண்டலத்தில் இலக்கியச் செயல்பாடுகளை அதிகரிப்பதும் மட்டுமே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் பிரதான நோக்கங்கள். எங்களது செயல்பாடுகள் அனைத்திலும் இலக்கிய மூப்பர் மரபின் மைந்தன் முத்தையா துணை நிற்கிறார்.

***
கலாப்ரியாவிற்கு இது அறுபதாவது ஆண்டு. நாற்பதாண்டு காலமாகக் கனலும் கவித்துவத்தோடும் உயிர்ப்போடும் இயங்கி வரும் இந்தத் தாமிரபரணிக் கலைஞனைக் கொண்டாடுவது எங்களது கடமையெனப்பட்டது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் இரண்டாவது நிகழ்வாக ‘கலாப்ரியா படைப்புக் களம்’ உருப்பெற்றது.

தமிழின் மூத்த படைப்பாளுமைகளான நாஞ்சில் நாடன், வண்ணதாசன், சுகுமாரன், ஜெயமோகன் ஆகியோருடன் மரபின் வழி நிற்கின்ற முத்தையாவும் இளம்தலைமுறைப் படைப்பாளிகளான அ. வெண்ணிலாவும், வா. மணிகண்டனும், கருத்துரை வழங்க, கலாப்ரியாவின் ஏற்புரையோடு இனிதே நடைபெற்றது விழா.

***

திருப்பூரிலிருந்து தன் பரிவாரங்களோடு வந்திருந்த வெயிலான், அண்ணாச்சி, சஞ்ஜெய், தமிழ்பயணி சிவா, ஈரோடு நண்பர்கள், உடுமலைப்பேட்டை நண்பர்கள், தியாகு புக் செண்டர் நண்பர்கள், இவர்களோடு உள்ளூர் இலக்கியப் பிரமுகர்களான பாலை நிலவன், அவை நாயகம், மயூரா ரத்தினசாமி, வா. ஸ்ரீனிவாசன், விஜயா வேலாயுதம், தென்பாண்டியன், இசைக்கவி ரமணன் மற்றும் பலர் வருகை தந்திருந்தது உற்சாகமும், உத்வேகமும் தந்தது.

***

உரையாடலின் ருசி அறிய ஜெயமோகனுடன் இருக்க வேண்டும். சனிக்கிழமை காலையிலிருந்து ஞாயிறு இரவு வரை அவரது முகத்தில் நிலை கொண்ட என் பார்வையை விலக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்ததையெல்லாம் வாசகனுக்குக் கடத்துவதில் ஜெ. அளவிற்கு வீச்சோடு இயங்குபவர் தமிழ்ச் சூழலில் இல்லை. அவ்வப்போது அவரே தயாரித்துத் தந்த தேனீரோடு இரண்டு நாட்களும் இலக்கிய இன்பம்.

***

சுகுமாரன் எனக்கு மிக முக்கியமான நபர். காதலிக்க, மேடையில் முழங்க, உலக இலக்கியங்களில் பரிச்சயமுள்ளவனாகக் காட்டிக்கொள்ள எனப் பலவிதங்களிலும் அவரது ‘கவிதையின் திசைகள்’ உதவி இருக்கிறது.

அகவலோசைக் கவிஞர்களிடத்தே தேங்கி இருந்த சமயத்தில் கையில் கிடைத்த அப்புத்தகம் நெரூடா, ஹியூஸ், ஆக்டேவியா பாஸ், செஸார், நசீம் ஹிக்மத், விஸ்லவா சிம்போர்ஸ்கா, குந்தர் க்ராஸ், பெஞ்சமின் ஸஃபானியா போன்ற மகாகவிகளைத் தரிசிக்க உதவியது. அப்புத்தகத்தின் வழியேதான் நவீன கவிதைகளுக்குள் நுழைந்தேன்.

சுகுமாரனின் கவிதைகளைக் காட்டிலும் பத்தி எழுத்துக்களில் புத்தி மயங்கினவன் நான். தொடர்ந்த கேள்விகளால் அவரை இம்சித்துக்கொண்டே இருந்தேன். அன்பான ஆசிரியனைப் போலச் சொல்லிக்கொடுத்தார்.

***
கலாப்ரியாவிற்கும் எனக்கும் கண்ணுக்குத் தெரியாத அன்பின் இழைகளால் ஆன உயிர்ப்பாலம் எப்போதும் இருக்கிறது. விழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தபோதுதான் காற்றில் வந்து சேர்ந்தது ‘சுஜாதா விருது’ தகவல். அவரது முதல் உரைநடை முயற்சியே விருதைத் தட்டி வந்திருப்பதில் வாசகனாகவும் அவரது நண்பனாகவும் எனக்குப் பெருமை. மனைவியோடு வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தார்.

***
வண்ணதாசனைப் பார்த்ததும் மனதிற்குள் அன்பும், கண்களில் நீரும் சுரப்பது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆதுரமாக, இறுக்கமாக கரங்களைப் பற்றி அவர் பேசுகையில் மனதில் மகிழ்வலைகள். விகடனில் ‘அகம் புறம்’ துவங்கிய அற்புத தினத்தில்தான் முடியலத்துவமும் துவங்கியது. அவரது ‘பெருநகரைப் பழிக்காமல் இருக்கச் சில வழிகள்’ வெளிவரும் முன்னே சென்னையை விட்டு ஓடி வந்து விட்டேன். வாசித்திருந்தால் அங்கேயே இருந்திருப்பேன்

பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீட்டைப்போல மண்டபத்தை அழகாக்கியது அவரது இருப்பு.

***

நாஞ்சிலும் ஜெயனும் சேர்ந்திருக்கிற தருணம் அழகானது. இருவரும் அடிக்கிற லூட்டிகள் சிரித்து மாளாது. கணேஷ், வஸந்த் என அவர்களுக்குச் செல்லப் பெயர் வைத்திருக்கிறேன். வசந்த் எப்போதும் கும்பமுனிதான்.

குட்டியூண்டு சாம்பிள்:

கும்பமுனியோடு காபி குடிக்கச் சென்றோம். காபி தம்ளரில் கால் இஞ்சுக்கு கரையாத சீனி. ‘கட்டி கொடுத்துருங்க... வீட்டுக்கு எடுத்துட்டுப் போறேன்’

***

கலாப்ரியாவிற்கு விழா என்றதும் கைக்காசைப் போட்டு ஓடி வந்தார் வா. மணிகண்டன். மொத்தக் கவிதைகளையும் படித்து அழகானக் கட்டுரையோடு வந்திருந்தார். மேடைப் பதட்டங்களில் அவரது பேச்சு அவ்வளவாக எடுபடவில்லையெனினும் ஆளுமைகள் நிறைந்திருக்கிற அவையில் அவரது துணிச்சலான விமர்சனங்கள் ஆச்சர்யம் தந்தது.

***

வெண்ணிலாவின் பேச்சு அவரது கவிதைகளைப் போல மயிலிறகு. நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களோடு கலாப்ரியாவின் கவிதைத் தருணங்களை இணைத்துப் பேசினார்.

***

விழா மிகுந்த பார்மலாக நடந்ததும், கலாப்ரியாவின் துள்ளலான காதல் கவிதைகளையும், எள்ளலான கிண்டல் கவிதைகளையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதிலும் எனக்குக் கொஞ்சம் அதிருப்தி. நான் விசாரித்த வரையில் எண்பதுகளில் கலாப்ரியாவைத் துணைக்கழைக்காமல் காதலித்தவர்களே இல்லை என்கிறார்கள். 2005ல் நான் கூட ‘என் நினைவெனும் எருமைக்கன்று உன் நிழலைத்தான் யாசிக்கிறது’ என்றுதான் பிட்டைப் போட்டேன்.

‘கலாப்ரியாவும் காதலும்’ என்றொரு கட்டுரையை நமக்கு நாமே மாமே திட்டப்படி எழுதி வருகிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.

புகைப்படம்:சஞ்ஜெய்

Tuesday, May 4, 2010

கலாப்ரியா படைப்புக்களம்


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாவது நிகழ்ச்சியாக ‘கலாப்ரியா படைப்புக்களம்’ கூடுகை நிகழ இருக்கிறது. தமிழின் தன்னிகரற்ற படைப்பாளிகள் கலந்துகொள்ளும் இந்நிகழ்விற்கு உங்களை அன்போடு அழைக்கிறேன்.