Friday, January 30, 2009

வெண்ணிலா கபடி குழு
'வெண்ணிலா கபடி குழு' எனக்கு மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. திருப்தி நல்ல படமொன்றை பார்த்ததால். மகிழ்ச்சிக்குக் காரணம் என் மனதிற்கினிய நண்பர்கள் சிலரின் உழைப்பில் உருவான படம் என்பதால். இந்தப்படத்தின் கதையும் களனும் முன்வந்த படங்களின் மெல்லிய ஞாபகத் தீற்றல்களை ஏற்படுத்தலாம். ஆனால் அவை தவிர்க்க முடியாதது. என் அபிப்ராயத்தில் ஒரிரு பொறுக்க முடிகிற லேசான குறைபாடுகளுடன் கூடிய மிகச்சிறந்த படம் இது. நாளை முதல் ஊடகங்களின் மஞ்சள் ஓளி இந்த வெற்றியாளர்களின் மீது ஒளிரும். அந்தக் களேபரங்கள் ஓய்ந்ததும் படம் எனக்கு ஏற்படுத்திய உணர்வுகளை எழுதலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு மிகுந்த பெருமையுடன் இந்த படத்தை என் சகபதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.

பின்குறிப்பு:

1) இந்தப் படத்தை நல்ல தரமான ஒலி அமைப்புள்ள தியேட்டரில் பாருங்கள். வாய்ஸ் ஓவரில் கேட்கும் கபடி மற்றும் கிராமிய விளையாட்டுப் போட்டிகளின் 'கமெண்ட்ரி' முக்கியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது.

2) கபடி என்ற தமிழ்மண்ணின் பாரம்பரியம் மிக்க விளையாட்டின் விதிமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால், நீங்களும் கபடி விளையாடிய உணர்வை அடைவீர்கள்.

Thursday, January 29, 2009

பதிவனாய் ஆனபயன்

சொன்னபடி நடக்காதவன் என்ற குற்றச்சாட்டு என் மீது எப்போதும் உண்டு. நண்பர்கள் எங்கேயாவது அழைத்தால் 'நிச்சயம் வருவேன். சத்தியம்' என்று வாக்களிப்பேன். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ போக முடியாமல் போய்விடும். முதல் முறையாக வெயிலானுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. திட்டமிட்டபடி நடப்பவை திட்டங்களே இல்லை என்பதில் திடமாக இருந்து எங்களது எல்லா திட்டங்களையும் நாங்களே திட்டம் போட்டு அழித்தபடி மசினகுடி சென்று திரும்பினோம்.

பரிசல், வெயிலான் இவர்கள் இருவரைத் தவிர மீத நபர்களை அறிமுகம் இல்லை. அவர்களது எழுத்துக்களும் பரிச்சயம் இல்லை. ஒருவேளை மொடாக்குடியர்களாய் இருந்து தொலைப்பார்களோ? அல்லது நான் அதிகம் அறியாத பதிவுலகம், கம்ப்யூட்டர் டெக்னிக்கல் சமாச்சாரங்களைப் பற்றி பேசி மொக்கை போட்டு விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் உதவும் என்று நாஞ்சிலாரின் 'மாமிசப் படைப்பினை' பிரயாணப் பையில் எடுத்து வைத்திருந்தேன். கூடுதலாக வேளுக்குடியின் உபன்யாசங்களையும் மொபைல் போனில் போட்டு வைத்துக்கொண்டேன். இரண்டையும் உபயோகிக்க வேண்டிய தேவை கடைசி வரை ஏற்படவில்லை.

இதை ஒரு சுற்றுலா என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இஃதொரு இலக்கியப் பயணம். பயணித்துக்கொண்டே விவாதித்தோம். விவாதித்துக்கொண்டே குடித்தோம், விவாதித்துக்கொண்டே உணவருந்தினோம், விவாதித்துக்கொண்டே விளையாடினோம், விவாதித்துக்கொண்டே குளித்தோம், விவாதித்துக்கொண்டே வீடு திரும்பினோம். எந்தத் தருணத்திலும் உரையாடல் முற்றுப்பெறவேயில்லை. பேச்சைக் காட்டிலும் சுவையானது என்ன இருக்க முடியும்?!

இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், இசை, பதிவுலகம், விளையாட்டு என பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் நீண்டபடி இருந்தாலும் பயணம் முழுக்க எங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது சட்டம், தனிமனித ஒழுங்கு ஆகியவைகள்தான். முற்றிலும் ஆரோக்கியமான பாதையில் பயணித்த விவாதங்களையும் அவற்றினால் உண்டான புதிய சிந்தனைகளையும் தனிப்புத்தகமாகத்தான் எழுத முடியும்.

இந்தப் பயணத்தில் நான் பரந்த புல்வெளிகளில் படுத்து உருளவில்லை. ஆர்ப்பரிக்கும் அருவியில் குளிக்கவில்லை. சிங்கம் புலி சிறுத்தைகளைக் காணவில்லை. படகுவீடுகளில் பவனி வரவில்லை. ஆனால், அவை அனைத்தையும் தோற்கடிக்கும் பேரானந்தத்தை என்னுடன் வந்த மனிதர்கள் எனக்குப் பரிசளித்தார்கள். மிகவும் இயந்திரமயமான, உடலையும் உள்ளத்தையும் ஒரு சேர நொறுக்கித் தள்ளும் என் அன்றாடங்களில் இருந்து என்னைத் துண்டித்து ஒரு பூலோக சொர்க்கத்தில் இரண்டு நாட்கள் அமர வைத்தார்கள். வெட்டியாய் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறாயே என்ன பிரயோசனம் என்று என்னிடம் கேட்பவர்களிடம் சொல்ல எனக்கோர் பதில் கிடைத்து விட்டது.

"வெயிலான், பரிசல், வடகரை வேலன், கார்க்கி, கும்கீ, தாமிரா, ரமேஷ் கிடைத்தார்கள்".

Tuesday, January 20, 2009

எனவே மனிதர்களே...

மனிதர்களே, இன்னும் எத்தனை முறைதான் உங்களிடம் சொல்வது? என்னுடைய கோமணத்தை ஆராய வேண்டாமென்று .... உங்களுக்குத்தான் ஆண்கள், பெண்கள், பெரியவன், சிறியவன், மேலதிகாரி, போட்டி நிறுவனம் என்றெல்லாம் பாகுபாடுகள். என்னளவில் என் சுயத்தை மதிக்கின்ற, அன்பைப் பொழிகின்ற, மானுடத்தை மதிக்கத் தெரிந்த அத்தனை பேரும் என்னுடைய மனிதர்கள்தான். அவர்களோடு பழகுவதில் நான் மகிழ்கிறேன். நீங்களும் பழகினால் என்னிடத்தில் புகார் இல்லை. அவர்களோடு நான் கதைப்பேன், சிரிப்பேன், திரிவேன், முயங்கி கிடப்பேன், குடிப்பேன், புணர்வேன். அது என் தனிப்பட்ட சுதந்திரம். அது உங்களைப் பாதித்தால் என்னை சந்தித்து நேரில் சொல்லுங்கள். உங்கள் பேச்சை நான் கேட்டால் மகிழுங்கள் அல்லது என்னோடு மோதித் தொலையுங்கள். நானும் மகிழ்வேன். நாலு சுவற்றுக்குள் உங்களிடத்தில் சொல்ல வேண்டிய விடயங்களைகூட இந்த சூன்ய பெரு வெளியில் உரக்கச் சொல்லுமளவிற்கு நம் தகவல் தொடர்பு இருப்பதற்கு நான் காரணமில்லை என்பதை நீங்கள் உணரும்போது, எல்லா விதங்களிலும் உங்களை விட உயர்ந்து நிற்பேன். காரணம் உங்களைப் போல முகமுடிகளை அணிந்து திரிபவனல்ல நான். இருட்டில், தனிமையில், அதிகாரமிருக்கையில், வாய்ப்பு கிடைக்கையில் வெளிப்படும் உங்கள் குரூரத்தனங்களை நீங்களே அறியாமல் இருக்கிறீர்கள். நான் தெரிந்து வைத்திருக்கிறேன் அவ்வளதுதான் உங்களுக்கும் எனக்குமான ஒரே வேறுபாடு.

நான் வேறு எனது சல்லித்தனங்கள் வேறல்ல...... நான் சாமான்யன், நான் இப்படி இருப்பதில் எனக்கு பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை.

- பிரதியங்காரக மாசானமுத்து

Sunday, January 18, 2009

மனிதர்களே...மனிதர்களே, நீங்கள் மிகுந்த நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள். நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் நீங்கள் அடிக்கும் ஜோக்குகள் பிரமாதமானவை. அலுவலக நகைச்சுவையை சொல்லவே வேண்டாம். உங்களை எல்லோரும் ரசிக்கிறார்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சிரிப்பு களை கட்டுகிறது. எல்லாரும் உங்கள் இருப்பை எதிர்நோக்குகிறார்கள். சிரித்து சிரித்து உங்கள் நகைச்சுவையுணர்வை ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால், நீங்களோ ஈனத்தனம் மிக்கவர்கள். பிறரை / பிறவற்றை ஊனப்படுத்தாத நகைச்சுவை உங்களுக்கு சாத்தியம் இல்லை. உங்கள் நாக்குகளின் வரிகள் சாத்தானின் குறியால் எழுதப்பட்டது. உங்களோடு சிரித்தவர்களையே நீங்கள் கேலி செய்வீர்கள். முடை நாற்றமெடுக்கும் வாசகங்களைச் சொல்லிக் கெக்கலிப்பீர்கள். அனைவரும் இப்போது உங்கள் வார்த்தைகளை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். நீங்கள் அவர்களை சர்வ அலங்கார இலக்கணச் சுத்தத்தோடு துரோகிகள் என்பீர்கள். உங்கள் நிம்மதியை திருடியவர்கள் என்பீர்கள். அவர்கள் இன்னொரு சிரிப்பாணி மனிதனைத் தேடி அலைவார்கள். பிணந்தின்னி நாய் போல மனந்தின்னி மனிதர்கள்!

- பிரதியங்காரக மாசானமுத்து

நாற்காலிக் கனவுகள்பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சின்னச்சின்ன சவால்களுள் ஒன்று விஜயின் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதும்தான். என்னுடைய அபிப்ராயத்தில் விஜய் படங்களின் பெயர்களும், இயக்குனர்களும், ஜிகிடிக்களும்தாம் மாறுவார்களே தவிர கதை என்கின்ற வஸ்து மாறியதில்லை.மாறப்போவதும் இல்லை. மாறாத கதைகளுக்கு தொடர்ந்து விமர்சனங்களை எப்படித்தான் எழுதுகிறார்களோ?! தெரியவில்லை.

மசாலாதான் என்றாலும் மொக்கை போடாமல் எடுத்திருக்கிறாரே என்று போக்கிரியில் பிரபுதேவாவை சிலாகித்தோம். சரக்கு தீர்ந்துவிட்டது என்று வில்லுவில் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். சினிமாவிற்கென்று பார்முலாவோ பாணியோ எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது நல்ல சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்த பல இயக்குனர்கள் இன்றைக்கு தொடர் தோல்விகளைத் தழுவுவது. இந்த சக்ஸஸ் பார்முலாவால்தான். டி.ராஜேந்தர் தலையை சிலுப்பி எதுகை மோனையில் பிளிரும்போது கைதட்டி ரசித்த காலம்போய் அவர் வாயைத் திறந்தாலே கைகொட்டி சிரிக்கிற காலம் வந்துவிட்டது. இது ஒரு உதாரணம்தான். இது எல்லோருக்கும் பொருந்தும்.

ரசிகனின் மட்டத்திற்கு இறங்குபவன் கலைஞனா?! ரசிகனைத் தன் மட்டத்திற்கு உயர்த்துபவன் கலைஞனா?! என்கின்ற கேள்வியைத்தான் இயக்குனர்களுக்கு முன் வைக்க வேண்டியிருக்கிறது. காலம் காலமாய் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். சினிமாக்கலையின் உச்சங்களைத் தொட்டுவிட்ட ஜாம்பவான்களோடு பழகுகிறார்கள். ஷகீலா படத்திலிருந்து ஈரானிய திரைப்படம் வரை டிவிடி பார்க்கிறார்கள். திரைப்பட விழாக்களில் கலந்துகொள்கிறார்கள். ஜனரஞ்சகப் பத்திரிகை துவங்கி தீவிர இலக்கிய இதழ்கள்வரை சினிமாக்களைப் பற்றி எழுதும் விமர்சனங்களைப் படிக்கிறார்கள். ப்ரிவியூ ஷோவில் மொக்கைப் படங்களைப் பார்த்துவிட்டு உதடு பிதுக்குகிறார்கள். ஆனாலும், கேவலப் படங்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து தானும் கெட்டு, தாயாரிப்பாளனும் கெட்டு, சனங்களும் கெட்டு.... என்ன மாதிரியான புரிதல்கள் இவர்களுக்கு....?!


போக்கிரி என்கிற பேக்கரி கதை வெற்றியடைந்தபோதே உஷாராகி இருக்க வேண்டாமா இந்தப் பிரபுதேவா?! தேசம் புகழும் நாட்டியக் கலைஞன். மிகுந்த திறமைசாலி என எல்லார் வாயாலும் கேட்கப்பெற்றவர். இப்படி கதாநாயகனுக்காக கதை பின்னலாமா? சரி அதை விடலாம். அது என்னங்க பேக்கரி மாதிரியே பல காட்சிகள்?! சகிக்கலை.

விஜய் மாதிரி தளபதிகள் பெரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். தம் முன்னோர்களைப் போலவே தொலைநோக்குப்பார்வையில் 'நாற்காலியை' வைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் காலத்து ரசிக முட்டாள்களில் பேர்பாதிதான் ரஜினி யுகத்தில் முட்டாள்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர் தன் நாற்காலிக் கனவை தற்காலிகமாக ஒத்திவைத்தார். தற்போது மலை முகடுகளில் கிடைத்த ஞானோதய உதவியாலோ என்னவோ அதை நிரந்தரமாக நிறுத்திவைத்துவிட்டார். ரஜினி யுக முட்டாள் ரசிகக்கண்மணிகளில் பாதிபேர்தான் இப்போது தங்களது கழகக்குஞ்சுமணிகளாக இருக்கிறார்கள். அவர்களது ரசனை மட்டமும் மாறி வருகிறது என்பது தங்களது மொக்கைப் படங்கள் போன வேகத்தில் பொட்டிக்கு திரும்புவதில் தெரியவில்லையா? புரிந்துகொண்டால் பிழைக்கலாம். இல்லையேல் திருமங்கலம் மாதிரி டெபாசிட் இல்லாமால் போய்விடும் அபாயம் இருக்கிறது.

சர்வ வல்லமை மிக்க தமிழ் சினிமா ரோகிணியை 'ஜல்சா...' எழுத வைத்ததில் ஆச்சர்யம் இல்லை. மாறாக வருத்தம் இருக்கிறது. தாமரை மாதிரி வருவார் என்று நினைத்தேன். செலவுக் கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டார்.

நயன்தாராவைப் பார்க்கும்போதெல்லாம் பாரிஸ் ஹில்டனின் நினைவு வருகிறது. மினுமினுப்பும், பளபளப்பும் உடையலங்காரங்களும் ஹில்டனை ஞாபகத்தில் நிறுத்துகிறது. நான் கொடுத்த எழுபத்தைந்து ரூபாய்க்கு அவர் காட்டியது அதிகம். அந்த வகையில் வில்லு.... பவர் புஃல்லு....

சிம்பாட்டமும் சில யோசனைகளும்

கோவை மாநகர கமிஷனராக மஹாலி பதிவியேற்றதில் இருந்தே சாலைப்போக்குவரத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள். சாலை விபத்துகளற்ற போக்குவரத்திற்காகப் பிரயத்தனப்படுகிறார் (அதற்காக பத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் வேண்டுமா?! முடியலை). ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கை பயணி என பைக் ஓட்ட ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியாக இருக்கின்றனர். முக்குக்கு முக்கு நின்று சோதனை இடுகிறார்கள். ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு அபாரதமும் அதைவிடக் கொடுமையான உபதேசங்களும்.

நண்பர் சுரேஷிற்கு லைசென்ஸ் இல்லை. பைக் இன்ஸூரன்ஸ் ரினிவல் செய்யவில்லை. ஹெல்மெட் இல்லை. புகை சர்டிபிகட் இல்லை. இப்படியாக ஏக இல்லைகள். 'ஏம்யா இப்படி?! ஒரு லேனர் அப்ளை பண்ண வேண்டியதுதானே...' என்றேன். நேரம் போதவில்லை என்றார். எனக்கு மெடிக்ளைம் ரினீவல் செய்யப் போகும்போது 'வண்டியை எடுத்துக்கொண்டு இன்ஸூரன்ஸ் ஆபிஸூக்கு வாங்க' என தொலைபேசியில் அழைத்தேன். நேரமே போதவில்லை இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்றார். ஆதித்யா ஸ்டோர்ஸ் செல்வகுமார் நமக்கு நெருங்கிய நண்பர். சகாய விலையில் ஹெல்மெட் தருவார் என்றேன். 'ப்ளீஸ் நேரம் போதலை... நெக்ஸ்ட் வீக் பார்க்கலாமே' என்றார். இப்படியெல்லாம் இருந்தால் நேரம் போதவில்லையென்றா அர்த்தம்?! போதாத நேரமென்று அர்த்தம்.

***

ஊருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸில் மைசூர் பா வாங்கிப் போயிருந்தேன். 'இப்படி அநியாய விலை கொடுத்து வாங்கனுமாப்பா... நம்மூர்ல கிலோ எழுவது ரூவாய்க்கி வாங்க ஆளில்லாம இருக்கானுவ..' என்று அங்கலாய்த்தார் அப்பா. அவரிடம் சொன்னேன் "அப்பா... கோயம்புத்தூர்ல வருஷம் முழுக்க உபன்யாசம், சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இசைவிழா, இலக்கியக்கூட்டங்கள், விளையாட்டுப்போட்டிகள், சாதனையாளர்களுக்கு பாராட்டு விழாக்கள், சினிமா திரையிடல்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இடங்களிலெல்லாம் முன்வரிசையில் உட்கார்ந்து அனுபவிக்கிறேன். வாரத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு பேச்சாளன் என் செவிக்கு உணவளித்துக்கொண்டே இருக்கிறான். இதற்கெல்லாம் கோயம்புத்தூரில் இருக்கிற ஒரே புரவலர் திரு. கிருஷ்ணன்தான். பைசா செலவில்லாமல் எனக்கு அறிவைக் கடத்துகிற கிருஷ்ணா ஸ்வீட்ஸின் விலை எனக்குக் கட்டுப்படியாகும்" என்றேன்.

***

சிம்பு மீது எனக்கு எப்போதும் ப்ரியம் உண்டு. பிரமாதமாக ஆடுவார், அற்புதமாய் பாடுவார். பாடல்கள் எழுதுவார். சண்டைக்காட்சிகளில் தூள் பரத்துவார். படத்திற்கு படம், காட்சிக்கு காட்சி விதம் விதமான ஸ்டைல்களில் வந்து அசத்துவார். இந்தச் சிறிய வயதிற்குள் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். பிரமாதமாக திரைக்கதை அமைக்கப்பட்ட அவ்விருபடங்களுள் ஒன்று இமாலய வெற்றி. தன்னையும் சரி, தன் படங்களையும் சரி பிரமாதமாக மார்க்கட்டிங் செய்வார். மேற்படி உத்திகள்தான் தமிழ்நாட்டில் நயன் - தாராவிற்கு பெரிய மார்க்கட்டினை உருவாக்கியது. இவையெல்லாவற்றையும் விட அவர் ஒரு அற்புதமான ஒருங்கிணைப்பாளர். யுவன்சங்கர்ராஜா, பாலகுமாரன், அண்டனி, வாலி மாதிரி மெகா ஸ்டார்களையெல்லாம் ஒருங்கிணைத்து பிரமாதமான ரிசல்ட் கொடுப்பார். சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் தேர்ந்த நூட்பம் உண்டு. தோல்விகளில் துவளாதவர். சர்ச்சைகள் வட்டம் கட்டி அடித்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்பவர்.

ஆனால் இந்தத் திறமைகளெல்லாம் சிலம்பாட்டம் மாதிரியான மட்டரகமான படங்களில் வீணாவதைத்தான் பொறுக்கமுடியவில்லை. பலகோடி ரூபாயை வீணடித்து தன்னையும் வருத்தி, பார்வையாளனையும் வருத்தி... இறுதி முடிவு படம் தோல்வி என்றாகிறது. சிம்பு படங்களின் பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது மேற்கத்திய துள்ளிசைப் பாடல்களோடு போட்டியிடும் நேர்த்தி ஒலி, ஒளி இரண்டிலுமே இருக்கிறது. சிம்பு தன் சகாக்களின் துணையோடு தமிழ் ரசிகர்கள் எனும் சிறிய சந்தையை விட்டு சர்வதேச சந்தைக்கு ஒரு ஆல்பம் தயாரிக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம். அவரே பாட்டெழுதுவார், பாடுவார், ஆடுவார். துணைக்கு யுவனையும் வைத்துக்கொண்டு உலகை வலம் வரலாம். ஒருபடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வாங்குகிறார் என்கிறார்கள். ஒரு ஆல்பம் ஹிட்டடித்தால் டாலர்களில் குளிக்கலாம். நானும் ஏனைய நல்ல சினிமா ரசிகர்களும் தப்பிப்போம்.

Saturday, January 17, 2009

கலியுகக் கதைகள்

ம்மூரு எம்.பி ஒருத்தர் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் சிறப்பு அழைப்பாளரா அமெரிக்கா போயிருந்தார். அவரை ஒரு செனட் சபை உறுப்பினர் தன்னோட வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டார். நம்மூர்காரரும் வர்ற ஞாயித்துக்கெழமை வாரேன்னுட்டு சொன்ன சொல் தவறாம அங்க போனார். செனட் சபை உறுப்பினரின் வீட்டைப்பாத்த நம்மாளுக்கு பயங்கர ஆச்சர்யம்... எவ்வளவு பெரிய பங்களா... அஞ்சு காரு... பத்துப்பதினைஞ்சு வேலைக்காரங்க... அம்புட்டு சம்பளமெல்லாம் கெடையாதே எப்படி இப்படி ஒரு லைஃப் ஸ்டைல்னு ஓரே சந்தேகம். எப்படிய்யா இதெல்லாம் வாங்கினேன்னு அந்த எம்பியைக் கேள்வி மேல கேள்வி கேட்டு ஏகக் குடைச்சல். இம்சை தாங்காத அந்த செனட் உறுப்பினர் 'சத்தம் போடாம எங்கூட வான்னு... பங்களாவோட இரண்டாவது மாடிக்கி கூட்டிட்டுப் போனார். ஜன்னல் திரையை விலக்கி...'அங்க பாரு'ன்னார். அங்கே ஒரு பாலம் இருந்துச்சி. பத்து விரலையும் காட்டி 'பத்து பர்செண்ட்' னு சொன்னார்.

காலம் கடந்தது. அந்த செனட் சபை உறுப்பினர் சிறப்பு விருந்தினராக இந்தியா வந்திருந்தார். விருந்தோம்பல் தமிழனின் குணமல்லவா?! அந்த அமெரிக்க எம்பியை தன்னுடைய வீட்டுக்கு சாப்பிட வரச்சொன்னார். அவரும் வந்தார். அரண்மனைப்போன்ற வீடு, நீச்சல் குளம், பதினைந்து கார்கள், நூறு வேலைக்காரர்கள், வீடு முழுக்க தேக்கினால் ஆன பர்னிச்சர்கள், திரும்பிய இடமெல்லாம் செல்வச் செழிப்பு. அந்த அமெரிக்க எம்.பியால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இந்தியா எழை நாடு என்கிறார்களே ஒரு எம்.பிக்கு இப்படி மகாராஜா மாதிரி லைஃப் ஸ்டைலா என்று தாங்காமல் கேட்டு விட்டார். நம்மூரு எம்.பி அவரது வாயைப் பொத்தி தன் வீட்டின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்று ஜன்னல் திரையை விலக்கிக் காண்பித்தார். பொட்டல் வெளி. அங்கே எதுவுமே இல்லை.

"100 பர்செண்ட்?!"


கதையின் நீதி:

மேலைநாடுகளிலும் ஊழல் உண்டு. திட்டத்தை நிறைவேற்றிவிட்டு மிச்சத்தை அடிப்பார்கள். இங்கே தின்று தீர்த்துவிட்டு மிச்சம் இருந்தால் திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

Thursday, January 1, 2009

கேஸனோவா1) கூட்டிக்கழித்துப் பார்த்தால் பெண் நண்பர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதில் பெருமையும் இல்லை, சிறுமையும் இல்லை என்றபோதும் ஆஃபாயில் கேசுகள் நம்மை 'கேஸனோவோ' என்று சொல்லித் திரிகையில் சங்கடமாகத்தானே இருக்கிறது. ஆதலால் தோழியரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் தோழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

2) யாராவது ஒரு நடிகைக்கு ஸ்கேண்டல் வீடியோ இண்டர்நெட்டில் வெளியானால் ஆடி மாசத்து நாய் போல் அலைந்து திரிந்து பார்த்து, பத்து பேருக்காவது பரப்பி 'ஸ்கேண்டலிஸ்டாகி விட்டேன். சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒருபோதும் காணாதிருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டே உறுதிமொழி எடுத்திருந்தேன். ஆனாலும் சுப்ரமண்யபுரம் சுவாதி, நயன் தாரா என்று ஊடகங்கள் கிளப்பி விட்டதில் விரதம் முறிந்து விட்டது. இந்த ஆண்டு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

3) திருமணம் குறித்தும் கணவன் மனைவி உறவுச்சிக்கல்கள் குறித்தும் சிறுவயதிலேயே உற்று நோக்க ஆரம்பித்ததில் கல்யாணம் என்றாலே 'ஷிவரிங்' வருகிறது. திருமணம் ஆகியும் வாழ்வைப் பழிக்காத ஒரேயொரு ஆடவனையாவது கண்டுபிடித்தாக வேண்டும் என கணகாலமாய் தேடிவருகிறேன். அப்படியொருத்தர் சிக்கினால் அவரிடம் 'இனிய இல்லறத்திற்கான' சூத்திரங்களைக் கற்றுத்தேர்ந்துவிட்டு கல்யாணத்திற்குத் தயாராக வேண்டும்.

4) வயிறு வகைதொகை இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பார்க்க அசப்பில் லதானந்திற்கு சித்தப்பா மாதிரி இருக்கிறாய் என்கிறாள் கேண்டி. ஓடியோ ஆடியோ சாடியோ குறைத்தே ஆக வேண்டும்.

5) ஒரு குடும்பமே தின்றுவிட முடிகிற கோழியை ஒரு வேளைக்கு சாப்பிட்டு விடுகிறேன். தமிழ்நாட்டில் தினமும் வறுபடுகிற கோழிகளுள் ஒன்று எனக்கானது என்ற புள்ளிவிபரத்திற்கு இந்த வருடம் மூட்டைக் கட்டிவிடலாம் என்று தீவிரமாக இருந்தேன். ஆனாலும் வளர்சிக்கனுக்கு வம்படியாக இழுத்துப்போனார் சிவசங்கர். சற்று நேரத்திற்கு முன் தான் ஒரு இளம்கோழியைத் தின்றுத் தீர்த்தேன். ஆனாலும் தினசரி என்ற எண்ணிக்கையை வாரம் ஒரு முறை என்று ஆக்கினாலே சேது சமுத்திர திட்டமே நிறைவேறியதற்கு சமமான சாதனை.

6) பெட்ரோல் விலை எக்குத்தப்பாய் எகிறியபோதும், பொருளாதாரச்சரிவு ஏற்பட்டபோதும் அஞ்சாநெஞ்சன் அழகிரி மாதிரி யூனிகார்ன் வாங்கினேன். மைலேஜா அப்படின்னா என்னான்னு கேக்குற ஜாதியில் பொறந்த வண்டி அது. ஒரு நாளைக்கு ரூ.100/-க்கு பெட்ரோல் போட துப்பு இல்லாதவன் என்னைத் தொடாதேங்குது. ஆத்திர அவசரத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தி சவூதி நாடுகளுக்கு சவாலாக இருக்கப்போகிறேன்.

7) என்னிடம் இருக்கிற தமிழ் புத்தகங்களை (சுமார் ஐந்தாயிரம்) படித்து முடிக்க இன்னும் ஒரு ஆயுள் வேண்டும். தமிழின் க்ளாசிக்குகளில் பல இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கிறது என்றாலும் மாதத்திற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு புதிய புத்தகங்கள் வாங்கி விடுகிறேன். வாங்குவதைக் குறைத்து வாசிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

8) ஆயிரம் பேரை வைத்து வேலை வாங்கும் மானேஜருக்கு ஆவதை விட பதினைந்து மடங்கு அதிகமாக வருகிறது செல்போன் பில். போதாக்குறைக்கு இண்டர்நெட் பில், லேண்ட் லைன் போன். கம்யூனிகேஷன் தேவைதான். ஆனால், இவ்வளவு தேவை இல்லை. எனவே இனி நடுராத்திரிவரை நீளும் கடலைகள் 'கட்'

9) ஒரு கெட்டப் பழக்கம் கூட இல்லாமல் வாழ்வது அலுப்பூட்டுவதாக இருக்கிறது. (அதான் பதிவு போடுகிறாயே என்கிறாள் கேண்டி) குறைந்தது **** ஆவது பழகிக்கொள்ள வேண்டும்.

10) நாளிதழ்கள் தவிர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பத்திரிகைகளாவது படிக்கிறேன். என்னதான் ஓஸியில் கிடைக்கிறது என்றாலும், கிசுகிசுக்கள், மொக்கை பேட்டிகள் படித்து படித்து வெறியேறுகிறது. முதல் கட்டமாக , அவள் விகடன், குங்குமம், மங்கையர்மலர், துக்ளக், கல்கி போன்றவற்றை துறக்கலாம் என்றிருக்கிறேன்.

11) தூக்கம் குறைந்ததால் ஏற்படுகின்ற எல்லாவிதமான தொல்லைகளும் வந்துவிட்டது. வேலைகளை வள்ளுவன் கற்றுத்தந்திருக்கும் நிர்வாக முறைகளின்படி 'அதனை அவன் கை விட்டுவிட்டு' மேஜையிலேயே கால் நீட்டி தூங்கும் வித்தையைக் கற்க போகிறேன்.

12) பணம் ஒரு பொருட்டல்ல என்று விட்டேத்தியாக வாழ்ந்துவிட்டேன். கையிருப்பாய் நான்கைந்து கவிதைகளும் கவலைகளும் மட்டுமே இருக்கிறது. கொஞ்சம் சேமித்தே ஆக வேண்டும்.

13) ரமேஷ் வைத்யாவிடம் போன ஜென்மத்தில் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு கட்டையைக் கொடுத்துவிட்டேன். இந்தப் பதிவை அவர் படிக்கும் முன்னரே அதை அவரது வங்கிக்கணக்கில் வரவு வைத்தாக வேண்டும்.

14) வட்டியில்லாமல் கிடைத்தால் உடனடியாக லேப்-டாப் வாங்கி தீவிரமான எழுத்துப்பயிற்சியில் ஈடுபடவேண்டும். பின்னே தமிழை எப்படிக் காப்பாற்றுவதாம்?!

15) உண்மையோ பொய்யோ எல்லாரும் என்னை 'ரொம்பவும் கன்னிங் பெஃல்லோ' என்கிறார்கள். இந்த ஆண்டை பிரதிஉபகாரம் கருதாமல் பிறருக்கு உதவும் ஆண்டாக அறிவிக்கிறேன்.

16) ஆசிப் அண்ணாவின் இந்திய வருகைக்காகவும், லதானந்த் சாரோடு காடு பதுங்கவும், ரமேஷ் அண்ணாவோடு சில நாட்கள் தங்கி இருக்கவும் கடந்த எழு மாதங்களாய் ஒரு மணி நேரம் கூட விடுப்பு எடுக்காமல் உழைக்கிறேன். மூன்று இவ்வாண்டு நிகழ்ந்துவிட்டால் மகிழ்வேன்.

17) பதிவுலகில் இரண்டாண்டுகளாய் இயங்கியபோதும், ஓன்றிரண்டு பதிவர்களைத் தவிர வேறுயாரையும் தெரியாது. எந்த பதிவர் சந்திப்பிலும் கலந்துகொண்டதே இல்லை. இதை மாற்றி நம் சாதிசனங்களோடு உறவாட துடிக்கிறேன்.

18) யாராவது தண்ணீர் குழாயை நிறுத்தாமல் சென்றுவிட்டால், கழிப்பறை விளக்கை அணைக்காமல் சென்றுவிட்டால், வெள்ளைத்தாளில் வெறுமனே கிறுக்கினால், கனரக வாகனங்களின் எஞ்சீனை ஆஃப் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்தால், சிக்னலில் நிற்காமல் போனால் ரத்தம் கொதித்து, கொதித்து அடங்குகிறது. நாமே பல்வேறு சமயங்களில் பல்வேறு விதங்களில் சமூகத்திற்குக் கேடாக நடந்துகொள்கிறோம் என்றபோதும் அடுத்தவன் மீது பெரிய புடுங்கி மாதிரி ஆத்திரப்படுவது அபத்தம் என்று உணர்ந்துகொள்வது.

19) குடும்ப அரசியலை, ஏதேச்சதிகாரத்தை, அலட்சியத்தை, திமிர்த்தனத்தைக் கூடுமானவரை ரோஷத்துடன் எதிர்ப்பது. கலைஞரைன்னு டைரக்டா சொல்ல வேண்டியதுதானேங்கிறீங்களா?

20) குத்துப்பாட்டு குலதெய்வம் பேரரசுவின் அருளாசியோடு குறைந்தபட்சம் நான் மட்டுமாவது பாட முடிகிற ஒரு குத்துப்பாட்டு எழுத வேண்டும்.

இன்னும் நிறைய்ய்ய்ய இருக்கிறது. தூக்கம் வந்துவிட்டது. மிச்சம் பொறவு.