Thursday, December 25, 2008

'பச்சப்' புரட்சி
டாஸ்மாக் குறித்து எழுத கொஞ்சம் உழைப்பு தேவைப்பட்டது. கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஊராக இருக்கட்டும் என விளாத்திகுளம் என்கிற தெக்கத்தி டவுணைத் தெரிவு செய்தேன். அந்தச் சிறிய ஊரில் நான்கு டாஸ்மாக் கடைகள். இப்போது மீண்டும் குழப்பம். நான்கில் எதைத் தேர்வு செய்வது? அளவில் சிறியதும் ஊரை விட்டுத் தொலைவில் இருப்பதுமான ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தேன். கடை எண் 10121.

அக்கடை திறந்த நாளன்று ரூ.5,000/-ற்கு வியாபாரம் ஆகியுள்ளது. தற்போது வாரநாட்களில் சராசரியாக ரூ.45,000/-மும், சனிக்கிழமையன்று ரூ.50,000/-மும் ஞாயிறன்று ரூ.60,000/-க்கும் குறையாமல் வியாபாரம் ஆகிறதாம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனை சில பல லட்சங்களைத் தொட்டு நிற்கிறதாம். எப்படி இந்த அசாத்திய வளர்ச்சி சாத்தியம்?! என அதன் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களான கடை ஊழியர்களைக் கேட்டேன்.

மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என்று குடித்துக்கொண்டிருந்த தேசாபிமானிகள் அங்கங்கு கடை திறந்துவிட்ட அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டாமேயென தினசரிக் குடியர்களாகி இருக்கிறார்கள். முன்னெப்போதும் இருந்ததை விட குடிப்பது ஒரு தகுதி என்ற எண்ணம் 15 முதல் 18 வயதுள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாங்கிளாஸ் பையன்கள் கடைவாசலில் பழரசம் குடிப்பது போல ஓரே டேக்கில் பீரைச் சாத்துகிறார்கள். புகையிலை, பான்பராக், சுருட்டு போன்றவற்றை மட்டுமே உபயோகிப்படுத்தி வந்த விளிம்பு நிலைப் பெண்களும் (மலம் அள்ளுபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், நரிக்குறவர்கள்) குடிக்கத் துவங்கி இருக்கிறார்கள். எங்கேயும் எப்போதும் நியாய விலையில் கிடைப்பதே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணம் என்றார்கள். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.

தமிழகத்தின் தெற்கு மூலையில் இருக்கிற சிற்றூரின் மிகச் சிறிய கடையில் சேகரித்த விபரங்கள் இவை. இதுவே இப்படி என்றால், பெருநகரங்களில் தெருவுக்கு ஒரு கடை இருக்கிறதே அங்கெல்லாம் விற்பனை எப்படி கொடி கட்டிப் பறக்கும் என்பதையும், எத்தனனக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கும் என்பதையும் உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

'குழந்தையின் வருமானம்; குடும்பத்தின் அவமானம்' என்று ஊர் முழுக்க எழுதி வைக்கும் மானம் கெட்ட அரசு மக்களை குடிகாரர்களாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு பிணம் தின்னி நாய் போல அலைகிறது. தண்ணீர் இல்லை, பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை என்று எத்தனையோ இல்லைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து எந்த டாஸ்மாக் கடையிலும் சாராயம் இல்லை என்ற தகவல் மட்டும் வந்ததே இல்லை.

இத்துடன் டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் லிங்கை இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் இத்தனைக் கட்டுக்கோப்பாக விற்பனை வளர்ச்சிக்கென்று பாடுபடும் வேறு ஏதாவது அரசுத்துறை இருக்கிறதா என்று சொல்லுங்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து சாராயம் விற்பது என்பது எத்தனைச் சிறப்பானது. அது சரி தமிழில் அப்பணியை 'குடி'மைப் பணி என்றுதானே சொல்கிறார்கள்.

ராமதாஸ் படைதிரட்டிக்கொண்டு போய் கேட்டதால் பெரிய மனது பண்ணி ஒரு மணி நேரம் விற்பனையைக் குறைத்திருக்கிறார். பாவம் அவருக்கு ஏழாயிரம் கோடி வருவாயும் தேவைப்படுகிறது, வர இருக்கிற தேர்தல்களுக்கு ராமதாஸூம் தேவைப்படுகிறது.

Tuesday, December 23, 2008

பஸ்ஸூக்குக் காத்திருந்தேன்'நிற்கத் தடுமாறுகிற
பெண்களின்
இடுப்புச் சதை பார்த்து
மூளை எச்சில் விழுங்கும் - என்ற கவிதைதான் 'கவிதை என்பது நான் எழுதிக்கொண்டிருப்பது அல்ல. அஃது வேறொன்று' எனக்குப் புரியவைத்தது. கலாப்ரியாவை நோக்கி என்னை இழுத்து வந்தது.
வெகுஜனப்பத்திரிகைகளில் கலாப்ரியாவின் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். நடப்பு இதழ் 'கல்கி'யில் வெளியான ஒரு கவிதை என்னை ஈர்த்தது.

ஒரு குறும்பாவுக்கான
குளிர்ந்த
படிமங்களுடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருப்பவன்
தலையில்
சூடாய் எச்சமிடும்
ஏதோ ஒரு பறவை.

***

"Don't say 'yes' when you want to say 'no' - இது நான் நண்பர்களிடத்திலும், சக ஊழியர்களிடத்திலும் அடிக்கடிச் சொல்லும் வாசகம். இப்படிச் சொன்னாலே பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த இதழ் குமுதத்தில் டாக்டர் ஷாலினி மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க கொடுத்த யோசனைகளில் ஒன்று "Don't say 'yes' when you want to say 'no'. நாங்கள்லாம்.....

***

அவள் விகடனில் ச. தமிழ்ச்செல்வனின் பேட்டி போன்றதொரு கண்றாவி வந்திருந்தது. அதில் 'ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' என்ற புத்தகத்தை எழுதியவர் என்றொரு அறிமுகம் வேறு. விட்டால் 'செட்டிநாட்டு முட்டைத் தோசைகள்' எழுதியவர் என்று சமையல்குறிப்பு எழுத்தாளனாய் ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது. அவர் எழுதியது 'ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது' என்ற நூல். அது சமையல் குறிப்பு நூல் அல்ல என்பதை குறைந்தபட்சம் இந்த இணைப்பைப் படித்தாவது தெரிந்து கொள்ளட்டும்.

***

வர வர சாருவுக்கும் முனை மழுங்கிப் போய்விட்டதோ என்றதொரு ஐயம் அவரது சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் தோன்றுகிறது. முன்னெல்லாம் தமிழ்ச் சினிமாக்களை மானாங்கன்னியாகக் கிழித்துக்கொண்டிருந்தவர் வாரணம் ஆயிரத்தையெல்லாம் சிலாகிக்க ஆரம்பித்திருக்கிறார் (உயிர்மை - டிசம்பர்) அவரது விமர்சனங்களுக்குப் பின் இருக்கும் அரசியல் குறித்த எனது சந்தேகங்களை எழுதினால் 'அம்பலத்தில் நிறுத்தி அன் - டிராயரைக் கழற்றிவிடுவார்' என்ற பயம் இருப்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

***

ஐ வில் டூ இட் அகெய்ன்

தன் தேசம் கண் முன்னே சூறையாடப்படுவதைக் காணப்பொறுக்காத ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனின் எதிர்வினையாகத்தான் புஷ்ஷின் மீது ஷூ ஏறியப்பட்ட சம்பவத்தைக் கருதுகிறேன். வரலாறு தன்னை மாவீரனென்று பதிவு செய்யும் என்றோ, ஓரே நாளில் உலகப்புகழ் அடைந்துவிடலாம் என்றோ நிச்சயம் அவர் இதைச் செய்திருக்க மாட்டார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அல்-ஜெய்தி நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவரது வலது காது சிகரெட் நெருப்பினால் பொசுக்கப்பட்டிருக்கிறது. பற்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது. வெற்றுத் தரையில் படுத்திருக்கும் அவர் மீது குளிர்ந்த நீர் கொட்டப்படுகிறது. இதெல்லாம் சிறையில் அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர் ஊடகத்திற்குச் சொன்னவை. மேலும் இவ்வழக்கில் அல்-ஜெய்திகு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.

நடந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ஒரு தீவிரவாதியின் தூண்டுதலில்தான் தாம் அப்படிச் செய்ததாகவும் அல்-ஜெய்தி கடிதம் எழுதி இருப்பதாக 'யுனைட்டட் ஸ்டேட் ஆஃப் ஈராக் அரசாங்கம்' தெரிவித்திருக்கிறது. ஆனால், சிறைக்கு வந்த சகோதரரிடம் உறுதியாக அதை மறுத்த அல்-ஜெய்தி , இந்த உலகத்திற்கு ஒரு செய்தியும் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது "மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் 'ஐ வில் டூ இட் அகெய்ன்' "

இந்தச் செய்தியைப் படித்ததும்,

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை
ஆனால்...
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது
- என்ற பெஞ்சமின் ஸஃபானியாவின் கவிதை (சுதந்திரம்) நினைவுக்கு வந்தது.

தன் காலணி நாடு ஒன்றிலிருந்து புதிய காலணிகளோடு நாடு திரும்பிய புஷ் 'ஈராக்கியர்கள் ஷூ அணிய தடை' என்று இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒருவேளை ஓபாமா சொல்வார் என்று விட்டிருப்பாரோ?!

Monday, December 22, 2008

மன்னியுங்கள்

இன்றோடு இந்த விடுதியறை ஏகி நான்காண்டுகள் ஆகிறது. நேற்றுத்தான் வந்தது போல் இருக்கிறது. ஓரே அறை. ஓரே நபரோடுதான் பகிர்வும் கூட. புதுமைப்பித்தன் துவங்கி பவுத்த அய்யனார்வரை வறண்ட மேன்சன் வாழ்க்கைக் குறித்து கழிவிரக்கம் பொங்க எத்தனையோ படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த விடுதியறை வாழ்க்கை குறித்து என்னிடம் யாதொரு புகாரும் இல்லை. இந்த அறை எனக்கு சொர்க்கம். இங்குதான் மிகுந்த பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உணருகிறேன். இதைவிட்டு வெளியேற வேண்டிய நாள் ஒருபோதும் வரவேண்டாம் என பிரார்த்திக்கிறேன்.

இத்தனை நாட்களில் என் அறை நண்பரோடு எனக்கு கடுகளவு மனஸ்தாபம்கூட வந்ததில்லை. சின்ன உரத்தக்குரல் உரையாடல் கூட இருந்ததில்லை. பிரம்மாண்ட அமைதியும் நற்குணங்களையும் படைத்த அவர் எனது அழிச்சாட்டியங்களைத் தாயன்போடு பொறுத்துக்கொண்டு என்னோடு வசிக்கிறார்.

எங்களிருவரையும் பார்த்து இந்த ராம்நகரே வியக்கிறது. என்ன ரகசியம் என்று கேட்கிறது. ஓரே பதில் "எங்களுக்குள் அர்த்தமுள்ள மவுனங்கள் நிறைந்திருக்கிறது. அதை அசிங்கமான வார்த்தைகளைக் கொண்டு அநாவசியமாகக் கலைப்பதில்லை"

ஆனாலும் இந்த நான்காண்டுகளில் ஒருமுறைக் கூட நான் இந்த அறையை சுத்தம் செய்ததில்லை. தண்ணீர் பிடித்து வைத்ததில்லை. உறங்கும் முன் விளக்கை, டி.வியை அணைத்ததாக நினைவு இல்லை. நள்ளிரவில் எனது கைப்பேசி அலறாத நாளில்லை, அவரது கட்டிலில் எனது உள்ளாடைகள் கிடக்காத நாளில்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். இந்தக் கட்டுரையை எழுதும் இக்கணத்தில் என் நடவடிக்கைகள் எனக்கு பெருத்த வெட்கத்தை ஏற்படுத்துகிறது. "என் இனிய விடுதியறை நண்பனே என்னை மன்னித்துக்கொள்"
***
என்னதான் நான் ஒரண்டை இழுத்துத் திரிந்தாலும், இணையவெளியில் சிண்டைப் பிடித்து இழுத்தாலும் தனிப்பட்ட பழக்கத்திற்கு அற்புதமான மனிதர் லதானந்த்.மலையை விட்டு இறங்கும்போது எளியேன் என்னையும் அன்போடு மறக்காமல் அழைத்துவிடுவார். கடந்த சனிக்கிழமை கோவை வந்திருந்தார். ஞாயிறு மாலை ஆட்டத்திற்கு சினிமாவிற்குப் போகலாம் என்றழைத்திருந்தார். நானும் வருவதாக உறுதியளித்திருந்தேன். ஆனாலும் தூக்கமின்மை காரணமாக எனக்குள் உறைந்திருந்த நூற்றாண்டு உறக்கத்திற்கு பலியாகிவிட்டேன். பலமுறை தொலைபேசியில் அவர் அழைத்ததுகூடத் தெரியாத மரணத்தூக்கம். விழித்ததும் மிகவும் வெட்கமாகிவிட்டது. பகிரங்கமாய் அவரிடம் ஒரு மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
***
கேண்டிக்கும் எனக்கும் பொதுவான எகிப்திய நண்பன் 'சுகி'. கோவையில் ஒரு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவத்தில் உயர்கல்வி பயின்று வருகிறான். இருபத்தைந்து வயதிற்குள் பல நாடுகளில் கல்விக்காக வாழ்ந்த அனுபவமுடையவன். சுதந்திரமான சிந்தனையை உடையவன். அமெரிக்கா குறித்தும் பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிம்பங்களைக் குறித்தும் ஆணித்தரமாக அற்புதமான ஆங்கிலத்தில் விவாதிப்பான். எகிப்திய உணவுவகைகளைப் பிரமாதமாக சமைப்பான். தமிழ் சினிமாப் பாடல்களை விசித்திரமான குரல்களில் விதம்விதமான மெட்டுக்களில் பாடிக் காண்பிப்பான். ஞாயிறு மதியம் என்னையும் கேண்டியையும் தனது அறைக்கு விருந்திற்கு அழைத்திருந்தான். தூக்கத்தினால் அவர்கள் இருவரையும் ஏமாற்றமடைய வைத்துவிட்டேன். அவர்களும் என்னை மன்னிப்பாராக.
***

Monday, December 15, 2008

டெஸ்டிமோனியல்

ஆர்க்குட்டில் அத்துவிட்டது மாதிரி நான் திரிந்த காலத்தில் எழுதிய டெஸ்டிமோனியல்களில் சில...

யுவராஜ் (மென்பொருளாளர்)

புவன ராஜா (வெல்க தமிழ்!) பிறந்த ஊரைக் கேட்டா தமிழ்நாடே அதிரும். அவர் நமீதா, ஸ்ரேயா, நயன்தாரா, த்ரிஷா போன்றவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ஆல்பத்தில் போடவில்லை என்பதிலிருந்தே அவரது பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் நாள் ஹைதரபாத்தில் இருந்திருந்தால் நிஜாம் ஆகியிருப்பார்.

ஜனனி (விளம்பர மாடல்)

கண்களால் சிரிக்கிறாய்
இதயத்தால் பேசுகிறாய்
புன்னகையால் வருடுகிறாய்
பொய் சொன்னால்
நம்பித் தொலைக்கிறாய் :)

சி. முருகேஷ் பாபு (பத்திரிகையாளர்)

கனிவான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்துவிடலாமென நினைக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் இனிய மனிதர். பால்யத்தின் நினைவுகளைத் தூண்டும் அற்புத சிறுகதைகள், கவிதைகளுக்குச் சொந்தக்காரர். எழுத்தைத் தவிர உபதொழிலாக செய்வது பிறரை உற்சாகப்படுத்துவது. சமீப காலமாக ரொம்ப 'நாணயமானவராகவும்' இருக்கிறார். (பின்குறிப்பு: டெஸ்டிமோனியலுக்காக தாங்கள் மணியார்டரில் அனுப்பிய தொகை ரூபாய் நூறு போதுமானதாக இல்லை. ஒரு ஐம்பது ரூபாய் சேர்த்து அனுப்பியிருக்கலாம்)

தி. விஜய் (புகைப்படக் கலைஞன்)

தம்பி விஜய்க்கு இன்னும் ஏன் டெஸ்டிமோனியல் எழுதவில்லையென்று கேள்வி கேட்டு உலகெங்கிலுமிருந்து பல ஸ்க்ராப்புகள் வந்துகொண்டிருப்பது நீங்களனைவரும் அறிந்ததே! சிறிய டெஸ்டிமோனியலில் அடங்கி விடுவதல்ல அவரது புகழ். அவருடைய புகழை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதிவைத்துவிட்டு அதன் பக்கத்திலேயே அவரை உட்கார வைப்பதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும்.

ஜீவிகா (எனது தங்கை)

ஜீவி எனது ஓரே அருமைத் தங்கை. அமைதியான பெண். எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு. அத்தனை வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்பவள். சமையலில் நளபாகம். ரங்கோலி, எம்ப்ராய்டரி, இண்டிரியர் என எதைச் செய்தாலும் கலைநயத்தோடு செய்வாள். மிகவும் கலகலப்பாகவும், பழக எளிமையானவளாகவும் இருக்கும் எனது சகோதரிக்கு டெஸ்டிமோனியல் எழுதுவதில் இருக்கும் ஒரே சிரமம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்ல வேண்டி இருப்பதுதான்..... ஸ்...ஸ்.... அப்பாடா...முடியலம்மா... ஜீவி...

கேண்டி (தோழி)

1) எத்தனவாட்டிதான் ஒனக்கு டெஸ்டிமோனியல் எழுதுறது.... ஒன்னோட இம்சை தாங்கமுடியாம... நீ தூங்கிட்டியான்னு ஒங்க அம்மாச்சிகிட்ட போன் பண்ணி கேட்டுட்டுதான் குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்புவாங்கன்றத டெஸ்டிமோனியல்ல எழுதினா நீ கோபப்படுவியா என்ன?!

2) இவள்புகழைப் பாட
மொழிக்குப் போதியவலிமை இல்லை...
வயலின் கொடுங்கள்
வாசித்துக் காட்டுகிறேன்...

- எழுத ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை பகிரங்கமாக ஓப்புக்கொள்ளும் உத்தமஜாதி எழுத்தாளன்

Sunday, December 14, 2008

காலம் கடந்த கேவல்

'சுஜாதா எக்ஸ்பைர்டு' என தோழியிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தபோது நேரம் இரவு பத்தரையை தாண்டி இருந்தது. 'எக்ஸ்பைர்டு' என்றால் காலாவதியாகிவிட்டது என்று பொருளா அல்லது காலத்தைக் கடந்து விட்டது என்று பொருளா என்ற குழப்பம் ஒருபுறமிருக்க, மரணமெனும் பெருஞ்செய்தியைக் கூட காலம் 'குறுஞ்செய்தி'யாகக் குறுக்கி விட்டதை பார்த்தீர்களா?!
இந்த செய்தியை உறுதி செய்துகொண்ட பின்னரே வேறு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தேன் நான். எனக்குத் தெரிந்த ஓரிரு எழுத்தாள நண்பர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விசாரித்தால் யாருக்கும் உறுதியான தகவலில்லை. பல பேருக்கு அகாலத்தில் எழவு சொன்ன பெருமையோடும், சுஜாதா குறித்த சிந்தனைகளோடும் படுக்கையில் சாய்ந்த வேளையில் கணபதி சுப்ரமண்யம் அழைத்தார். பின்னனியில் ஒலிக்கும் பிரிண்டிங் மிஷின் இரைச்சலைத் தாண்டியும் அவரது கேவல் சத்தமாய் இருந்தது. அவரை ஒருவழியாய் சமாளித்து முடிக்கையில் தொடர்ந்து ஜல்லிபட்டி பழனிசாமி, பிரசாத், விஸ்வம், ஜெயராஜ் என தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படி மரித்தார்? எப்போது மரித்தார்? எப்போது அடக்கம்? போன்ற கேள்விகள் மறுநாள் காலைவரை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இறப்பதற்கு முன் சுஜாதா என்னைத் தன் இலக்கிய வாரிசாக அறிவித்துவிட்டாரோ என்ற இயல்பான சந்தேகம் எழுந்து அடங்கியது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரலாமென மாணிக்கம் அழைத்தபோது உறுதியாக மறுத்து விட்டேன். நல்ல வாசகன் எழுத்தாளனை ஒருபோதும் தேடி வருவதில்லை என்ற வரிகளை வாசித்த எவரால்தான் போக முடியும்?!
தீர்க்கதரிசனம் என்கின்ற வார்த்தை பகுத்தறிவிற்கு முரணானதுதான் என்றபோதும் சுஜாதாவின் கட்டுரைகளை அவர் எழுதிய காலம் தாண்டி வாசிக்கையில், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா குறித்த அவரது அவதானிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருவதைப் பார்க்கையில் அவர் எதிர்காலத்தைக் கூறும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரோ என்ற எண்ணம் வருகிறது.
எழுத துவங்கும் அல்லது எழுதப் பழகும் எவருக்கும் தன் அபிமான எழுத்தாளன் தனது எழுத்தை ரசிப்பானா என்கிற வினா ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே வந்துவிழும். அந்த வகையில் எனது எழுத்தாசானாகவும், ஆதர்சமாகவும் விளங்கிய சுஜாதாவை அசத்திவிடும் சிறந்த படைப்போடு வெளிவரவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளனில் ஒருவனாக அறியப்படவேண்டும் என்ற எனது தீராதவேட்கை அவரது மரணத்தின் மூலம் ஒருபோதும் நிகழாத ஒன்றாகி விட்டது.
சுஜாதா எழுத்தாளர்களை உருவாக்குபவராக இருந்தார். அவரது எழுத்தில் இருந்த எளிமை எவரையும் எழுதத் துண்டுவதாக இருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும்வரை அவர் தனது அன்றாடங்களையும் அனுபவங்களையும் பத்திகளாக்கியது பெரும் வாசகப் பரப்பை ஈர்த்தது. இதுமாதிரியான அனுபவ கட்டுரைகளை, டைரி குறிப்பு போன்ற பதிவுகளை எழுதும் ஆயிரமாயிரம் பதிவர்களை உருவாக்கியது. அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.
பின்குறிப்பு:
டைம்ஸ் இன்று - தீபாவளி மலரை நண்பர் சுப்ரமணியம் நேற்று பரிசளித்தார். அதில் சிறப்புப் பகுதியாக 'சுஜாதா - சொல்லில் ஒளிரும் சுடர்' என்ற பகுதி மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு இருந்தது. அவரது எழுத்துக்களைப் போலவே நினைவுகளையும் ஓரே மூச்சில் படித்து முடித்ததனால் ஏற்பட்ட காலம் கடந்த கேவல் இது.

Saturday, December 13, 2008

கடுதாசிகள்

சந்தியா,
மிக நீண்ட நாட்களுக்குப் பின் என் அன்றாடக் கவலைகளை மறந்து இருந்தேன். ஒரு குழந்தையின் குதுகலத்தை எனக்குப் பரிசளித்தாய். என் இனிய தங்கையே கள்ளங்கபடமற்ற உன் அன்பில் அகம் மகிழ்கிறேன்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
அன்பின் அண்ணா,
பரிசல்காரன் பதிவில் இடம்பெற்ற உங்களது புகைப்படங்களைப் பார்த்தேன். டி-சர்ட் அணிந்து, முகச்சவரம் செய்து அழகாக இருக்கிறீர்கள். வி. செந்தில் குமாருக்கு பத்து நிமிடத்திற்கு முன்பு பிறந்த அண்ணனைப் போன்றதொரு இளமையான தோற்றம். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
பி.கு:
நீங்கள் என்னை அடிக்கடி அழைத்துப் பேசாவிட்டாலும் நண்பர்கள் புடைசூழ உங்கள் நாட்கள் கழிவதில் மகிழ்கிறேன்.
***
அன்புள்ள அண்ணனுக்கு,
காலம் ஒரு பெரும் அலையைப் போல என்னிடத்தில் அன்பானவர்களிடத்திலிருந்து என்னைப் பிரித்துப்போட்டு விட்டது. முன் ஜாமத்தில் துவங்கி நள்ளிரவில் முடியும் நெடிய நாட்களை கடப்பது தினமும் ஒரு வாழ்கை வாழ்ந்து முடிந்த அயற்சியை அளிக்கிறது. ஆனபோதும், ஆனபோதும் புதிய திசையில் பயணிப்பதும் புதிய மனிதர்களைக் கொண்டாடுவதும் மீண்டும் ஒரு நாள் வாழ்வதற்கான ஆசையைத் தருகிறது.
உங்களை அழைத்து பேசாமல் இருந்துவிட்டது மெல்லிய வெட்கம் அளிக்கிறது. தம்பியின் இந்தப் பிழையைப் பொறுத்து எப்போதும் போல் என் மேல் அன்பாய் இருப்பீராக!
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
பெண்ணேஸ்வரன் குறித்த தங்களது பதிவைப் படித்தேன். இன்றும் பெண்ணேஸ்வரன் டெல்லிக்கு வரும் தமிழிலக்கியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவராகவே இருக்கிறார். டெல்லி என்றாலே பெண்ணேஸ்வரனின் முகமே நினைவுக்கு வருகிறது. அவரது வடக்கு வாசல் இதழும் பெருத்த பொருளாதார நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையே தொடர்ந்து நடத்தும் அவரது பிடிவாதமும் பிரமிக்க வைக்கிறது.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
கிரா டேலி என்கின்ற எனதருமை கிரா,
இதை நான் அதிசயம் என்றுதான் கொண்டாட இருக்கிறேன். கம்யூட்டர் கிட்டத்தட்ட ஒரு கடவுள் என்ற எனது எண்ணம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது கிரா... ஏழு ஆண்டுகளுக்கு முன் தொலைத்துவிட்ட மூன்று நண்பர்களை தேடித் தந்திருக்கும் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் எத்தனை நன்றிகளை சொன்னாலும் குறைவுதானே.
போர்களற்ற உலகம், சமாதான சகவாழ்வு, அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற கொள்கைகளில் மிக்க உறுதியும், அமைதியின் மீது தீராத நம்பிக்கையும் உடைய ஒரு சகதனிமனிதனாக உங்களது முயற்சியும், இயக்க பணிகளும் அர்ப்பணிப்பு உணர்வும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
செல்வேந்திரன் என்ற ஒற்றைப்பெயரைக் கொண்டு என்னை நினைவு கொண்ட உனது ஞாபகசக்தியும் அன்பும் பிரமிக்க வைக்கிறது. என்னுடைய யூனிவர்சிட்டி தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகள் தமிழ்நாட்டின் முன்னனி பத்திரிகை ஒன்றின் விற்பனை பிரிவில் பணியில் சேர்ந்தேன். பணி விற்பனை தொடர்பானது என்ற போதும் எழுத்தின் மீதும் படைப்பிலக்கியத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என சமூக அக்கறை மிளிரும் எழுத்துக்களை எழுதி கொஞ்சம் புகழடைந்தேன். தற்போது தி ஹிந்து என இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகி வரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் விற்பனைப் பிரிவு அதிகாரியாக பணியில் இருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். இப்போதும் அலுவல் தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாடும் பொழுதுகளில் உங்களோடு பேசும்போது நான் நிகழ்த்தும் மொழிக்கொலைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டும்.
உண்மையில் என்னோடு பழகிய தினங்களுக்காவும், எனக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கும் காட்டிய அன்பிற்கும் என்றென்றும் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் கிரா... தாமஸோடும், ஆரோனுடனும், உன்னுடனும் மெனோவுடனும் பழகிய அற்புத தினங்களை எப்படித்தான் ஒருவன் மறக்க இயலும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கிரிக்கெட் மைதானங்கள், கோவில்கள் (நீ அந்த தீ மிதி விழாவை மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். அன்றிரவு பீட்டர் குடும்பத்தார் நிகழ்த்தியவற்றையும் சேர்த்து) நூலகங்கள், எனது வீடு (தீப்பெட்டிக் கம்பெனி) என எதையும் நீ மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். இன்றளவும் நீ பரிசளித்து விட்டுச் சென்ற புத்தகங்களையும் என்னுடைய ஒவ்வொரு இடப்பெயர்ச்சியிலும் என்னோடு எடுத்துச் சென்றுதான் வருகிறேன்.
புஷ்ஷின் கொடிய கரங்கள் இந்தியாவிலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது. ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக் கொண்டு அணுசக்தி ஓப்பந்தத்தை இந்தியாவுடன் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார். பணவீக்கம், தானியத் தட்டுப்பாடு, வறுமை என தேசம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆள்பவர்களோ யாதொரு கவலையுமின்றி அணு சக்தி ஓப்பந்தத்திற்கு மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.
நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்தில் தொடந்து எழுதி வருகிறேன். அநேகம் பேர் விரும்பி படித்து வருகிறார்கள். பிராந்திய மொழியில் இருப்பதால் அவற்றை உங்களால் படிக்க இயலாதுதான். இன்று உங்கள் இயக்கம் குறித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்ன எழுதுவது என்ற இனம் புரியாத நிலையில் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறேன். தாமஸின் மெயில் ஐடியையும் தெரியப்படுத்தவும். அவன் எனக்கு சூட்டிய 'ஸ்லிக் ரிக்' என்ற பெயரைத்தான் இன்னமும் என் நண்பர்கள் உபயோகப்படுத்தி என்னை அழைக்கிறார்கள். அதனைக் கொஞ்சம் விளக்கவும். ஆரோன் அநேகமாக கனடாவின் சிறந்த 'சீஸ் கட்டராக' மாறி இருப்பான் என்று நம்புகிறேன். அடிக்கடி பரஸ்பரம் தொடர்பு கொள்வோம் கிரா...
வாழ்த்துக்களுடன்,
செல்வேந்திரன்.
(மீனா, இக்கடிதத்தையும் வழக்கம்போல் உன் வளமிக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாயாக...)
***
ப்ரியமுள்ள மீனாவுக்கு,
இதை மாற்றிக்கொடு, அதை மாற்றிக்கொடு என்று உன்னைப் பணிப்பதற்கு வருத்தமாகவும் மெல்லிய அவமானமாகவும் இருக்கிறது. ஒருவரைப் பணிப்பதே குரூர வன்முறை என்கிறார் ஓஷோ. அந்த வகையில் அருமைத் தங்கையை விடாது துன்புறுத்துகிறேனோ என்ற கவலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் உன்னை சிரமப்படுத்துவதற்கு வருந்துகிறேன். தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தடியங்காய் அல்வா வாங்கி வருகிறேன் :)
ஒரு சேஞ்சுக்கு செண்டிமெண்ட் ரோல் பண்ணலாம்னு பாத்தேன். முடியல.... :)
அன்புடன்,
அண்ணன்.
***
அன்பு நண்பன் சுஜித்திற்கு,
உனக்கு கடிதம் எழுதுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் என்ன சமாதானம் சொன்னாலும் அதில் எனக்கே உடன்பாடு இல்லை. பொதுவாக நண்பர்கள் ஏதாவது உதவி கேட்டால் உடனே ஓடிச் செய்பவனாகத்தான் பால்யம் தொட்டு இருந்து வருகிறேன். ஆனால் அகலத் திறந்த வாயோடு எனை முழுங்கும் என் அன்றாடத்தில் உறவுகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் பெரும் கெட்ட பெயரை பெற்று வருகிறேன்.
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.
என்ற வரிகள் வெறுமனே பிளாக்கில் எழுதிய வெற்று வரிகள் அல்ல. எனது அன்றாடம் இப்படித்தான் இருக்கிறது. தவிரவும் என்னை கோவை, கேரளா என்று பந்தாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உன் தங்கைக்கான வரனை பல முறை நீ நினைவுப்படுத்தியும் விசாரிக்க இயலாத என் கையாலாகாத தனத்தை எண்ணி வெட்கமுறுகிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். வேண்டுமென்றே உதாசீனப்படுத்தி விட்டேன் என்று மட்டும் தயவு செய்து தவறாக நினைத்து விட வேண்டாம். எனேனில், உதாசீனம் நான் அறியாதது...
மிக்க வருத்தத்துடன்,
செல்வேந்திரன்.

Friday, December 5, 2008

கண்ட்ரோல் சியும், கண்ட்ரோல் வியும்

பிடிக்கிறதோ இல்லையோ மீடியாவில் இருப்பதால் 'அப்டேட்' செய்து கொள்ள குமுதம் மாதிரியான இதழ்களைப் படித்துதான் ஆகவேண்டி இருக்கிறது. அரசு பதில்களை தவிர்த்து வேறு எதுவும் தேறாது. எப்போதாவது தளவாய் அண்ணன் இலக்கியவாதிகள், கலைஞர்கள் யாரையாவது நேர்காணல் செய்திருப்பார். மிச்சதெல்லாம் மிகுந்த எரிச்சல் ஏற்படுத்தும் பகுதிகளும் பக்கங்களும்தான். நடப்பு இதழ் குமுதத்தில் தளவாயும் தன் பங்கிற்கு என்னை எரிச்சலாக்கினார். நவம்பர் மாத உயிர்மையில் அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுளின் உதவியாளர்கள்' என்ற கட்டுரையை அப்படியே கட், காப்பி பேஸ்டாக்கி கூடுதலாக முத்துலிங்கத்தின் மகன் சஞ்சயின் புகைப்படத்தை மட்டும் இணைத்து கிட்டத்தட்ட ஒரு நேர்காணலைப் போன்ற தோற்றமளிக்கும் ஒரு வஸ்துவை எழுதி இருந்தார்.

'பாம்புகளுக்கு என்னைப் பிடிக்கும்' என்ற அந்த செய்தியை நீங்களும் வாசித்திருப்பீர்கள். சில்லாயிரம் பேர் படிக்கும் இலக்கியப் பத்திரிகையிலிருந்து பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகைக்கு செய்தியைக் கடத்துவது ஒன்றும் புதிதல்ல என்ற போதும் அதற்காக ரீரைட் கூட செய்யாமல் அப்படியே பயன்படுத்தி இருப்பதுதான் என் கோபத்திற்கு காரணம்.

இலக்கியவாதிகளை நேர்காணல் செய்வதில் சுகதேவ், கடற்கரய், மணா போன்ற ஸ்பெஷலிஸ்டுகளுக்கு இணையானவர் தளவாய் சுந்தரம். தமிழ்நாட்டு வெகுஜனப்பத்திரிகைகளில் தமிழிலக்கிய செய்தியாளர்களாகவே அறியப்பட்டவர்கள் இருவர்தான். ஒருவர் தளவாய் அண்ணன் மற்றொருவர் மு.வி. நந்தினி. மு.வி. நந்தினி தற்போது அச்சு ஊடகத்தில் இயங்குவதில்லை என அறிகிறேன். எஞ்சி இருக்கும் இவரும் இப்படி போட்டுத் தாக்கினால் வருத்தப்படாமல் என்ன செய்வது?!

Thursday, December 4, 2008

விடியல் ரசிக்கவில்லை

விகடன் தீபாவளி மலரை கேண்டி எடுத்துச் சென்றிருந்தாள். அதன் கடைசிப்பக்கங்களில் வெளியாகி இருந்த லதானந்தின் 'மச்சா போரடிக்குதுங்...' என்ற சிறுகதை மிகவும் அருமையாக இருந்ததாகவும் குறிப்பாக "அதுதான் புளுவ எடுத்து எறிஞ்சு போட்டீங்கல்லோ? அப்புறம் ஏன் என்ற காலைச் சொறிஞ்சிட்டிருக்கீங்?" என்ற வாசகத்தை நினைத்து நினைத்து சிரிப்பதாகவும் சொன்னாள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. "அவரு என்னமோ நல்லாதான் எழுதுறாரு... நீதாங் தேவையில்லாம ஓரண்டை இழுக்கிற... நீ ஒரு மார்க்கமா எழுதிகிட்டுத் திரியறதையும், தப்புத்தப்பா எழுதறதையும் அவரு கண்டுபிடிச்சித் தட்டிக் கேக்குறதாலதான் ஒனக்கு ஷிவரிங் ஆவுது.." என்றாள். "போடி உன் சங்காத்தமே வேண்டாம்" என்று உறுமிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மையும் இருக்குமோ என்று வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

படைப்பை முன்வைத்து படைப்பாளியின் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பதும் தவறு. படைப்பாளியை முன்வைத்து படைப்புகளை விமர்சிப்பதும் தவறுதான். படைப்பாளி வேறு. படைப்பு வேறு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான இடைவெளிகள் இல்லாத இலக்கியவாதிகள் இறந்தகாலத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு எல்லாவிதமான படைப்புகளையும் நியாயதராசு மன நிலையிலேயே அணுகுவதுதான் நல்ல வாசகனுக்கு அழகு.
***
'தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு இல்லை. எழுத்தை நம்பி பிழைப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளைக் கொண்டிருக்கிறது.' என்ற புலம்பல் புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய சாருநிவேதிதா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக எழுத்துக்கு கிடைக்கும் சன்மானம் மிகவும் சொற்பமானது என்ற கருத்தும் நிலவுகிறது. எழுத்தாளனுக்கு கிடைக்கும் மதிப்பிற்கும் எழுத்திற்கு கிடைக்கும் சன்மானத்திற்கும் கேரளா துவங்கி அமெரிக்காவரை பல்வேறு உதாரணங்களை இவர்கள் குறிப்பிடத் தயங்குவதில்லை.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தெருவிற்கு தலா மூன்று கவிஞர்களும், நான்கு சிறுகதையாசிரியர்களும் பெருத்துக் கிடக்கிறார்கள். காகிதம், பேனா, கணிணி இவற்றும் ஏதாவது ஒன்று சிக்கினால்கூட என்னைப் போன்றதொரு 'எழுத்துப்போலி' தோன்றிவிடும் அபாயம் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் இருநூறு முதல் ஐநூறு வரையிலான தமிழ் நூல்கள் வெளியாகின்றன. அவற்றுள் ஒன்றிரண்டு கூடத் தேறுவதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் அவரவர் தர வரிசைக்கேற்ப பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதைப் போல தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பு, இலக்கியப் பங்களிப்பு அடிப்படையில் தரம் பிரித்து சன்மானம் வழங்கினால் உண்மையான எழுத்தாளர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். வேதனையும் புலம்பலும் குறையும். விருப்பமே இன்றி வாழ்க்கைத் தேவைகளுக்காக கிடைத்த வேலைகளில் ஓட்டிக்கொண்டிக்கின்ற எழுத்தாளர்கள், நம்பிக்கையோடு முழு நேர எழுத்துப்பணிக்குத் திரும்ப முடியும். ஜெயமோகன் சாணித்தாள் கோப்புகளில் மூழ்கி இருப்பதையும், சாருநிவேதிதா கருப்புப்பூனையாக மாறுவதையும், நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதையும் ஜீரணிக்க சிரமமாய் இருக்கிறதில்லையா?!
***
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.

கள்ளந்தே பெருசு

பணி நிமித்தமாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கோயம்புத்தூர் விமான நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது. நேற்று எங்களது நிறுவனம் வைத்திருந்த விளம்பர பலகைகளுக்கான காலக்கெடு முடிந்து அவற்றை அகற்றியாக வேண்டிய தினம். அதற்கான அனுமதியைப் பெற வேண்டி காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை அல்லாடி டைரக்டர் முதல் அட்டெண்டர்வரை பார்த்து கடிதம் கொடுத்து அனுமதி பெற்றேன். நான் கேட்டதை விட குறைவான நபர்களுக்கும், அவர்கள் அனுமதித்த உபகரணங்களை மட்டுமே எடுத்துச் செல்வதற்கும், விமானங்கள் எல்லாம் வந்து போன நள்ளிரவில் வரும்படியுதான் அனுமதி கிடைத்தது. நள்ளிரவில் வேலையாட்களைக் கூட்டிக்கொண்டு போனால் "நாளை ஸ்டாலின் வருகிறார். செக்யூரிட்டி ரிசன்ஸ். இன்னிக்கு அலோ பண்ண முடியாது" என்றார்கள். "பொதுமக்களை பயங்கரவாதிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் பொதுமக்கள் போலவும் நடத்துகிறீர்கள்" என்று ஆத்திரத்தோடு ஏடிஎம்மிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
***
பயங்கரவாதிகள் கடல் வழி வந்ததால் எல்லோரும் கடலோரக் காவல் படையைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 314400 சதுர கி.மீ கடல் பரப்பைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் சுலபமானது அல்ல. இத்தனைப்பெரிய கடற்பரப்பை பாதுகாக்கும் அளவிற்கும் நம்மிடம் அதி நவீன ரேடார்கள் இல்லை என்றும் தெரிய வருகிறது. 'கள்ளன் பெருசா காப்பான் பெருசான்னா கள்ளன்தான் பெருசு' என்று எங்களூரில் ஒரு சொல்லாடல் உண்டு. வரவேண்டும் என்று ஒருவன் நினைத்துவிட்டால் அவன் நீந்திக்கூட வந்துவிடுவான். ஆனால் அதற்காக 'சுப்பையாத் தேவர் காவல்ல சுடுதண்ணிய நாய் நக்காது'ங்கற கதையா தேசம் திறந்த மடமாகிவிடவும் கூடாது.
***
பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் கூட ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. தொழிலில் லாபத்தைப் போலவே நஷ்டமும் உண்டுதான். நாலு கால் பாய்ச்சலில் பொருளாதாரமும், சந்தை நிலவரங்களும் இருந்த போது கோடி, கோடியாய் சம்பாதித்தவர்கள் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கொஞ்சம் நஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள அரசு தொழில் அதிபர்களை நிர்பந்திக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடோடி வரும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி கும்மாங்குத்தில் பிஸியாக இருக்கிறார்கள் போலும்.
***
சந்தோஷம், துக்கம், கோபம், தேசபக்தி போன்ற உணர்வுகளுக்கு வடிகாலாக எஸ்.எம்.எஸ் இருக்கிறது. மும்பை சம்பவத்தை மையப்படுத்தி தினமும் நான்கைந்து எஸ்.எம்.எஸ்கள் வருகின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒன்று...
"போட்டில் வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களை நம் கமாண்டோக்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் வோட்டில் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்"

Wednesday, December 3, 2008

பாலக்காட்டில் ஓர் அப்பாவி


லாரிகளில் நின்றபடி பயணிக்கும் அடிமாடுகளின் பரிதாபக் கண்களை பார்த்தபடியே என் இருசக்கர வாகனத்தை விரட்டி கேரளத்தை எட்டிப்பிடித்தேன். ஒவ்வொரு கேரள டிரான்ஸ்போர்ட் பேருந்துகளும் பேய் வேகத்தில் வந்து ஈவு இரக்கம் இல்லாமல் என்னை ஓரம் கட்டினார்கள். இப்படி வண்டி ஓட்டுறானுங்களே என்று விடுதியறைச் சிப்பந்தியிடம் கேட்டால், "தமிழ்நாட்டில் ரோடு நல்லா இருக்கும். பஸ் நல்லா இருக்காது. கேரளாவில பஸ் நல்லா இருக்கும். ரோடு நல்லா இருக்காது" என்றான்.

கல்பாத்தி கோவில் 1450ல் கட்டப்பட்டது என்கிறார்கள். ஆனால் அதன் ஒரு அங்குலத்தில் கூட பழமையின் சாயலைக் காண இயலவில்லை. மொசைக்கில் இழைத்திருக்கிறார்கள். வெளிநாட்டுச் சம்பாத்தியம். முற்றிலும் வைதீக பிரமாணர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி அக்கிரஹாரம். அக்கிரஹாரம் முழுக்க அழகுப் பெண்களும் கொழுத்த ஆண்களும். எங்கும் செழுமை எதிலும் வளமை.

கேரள கோவில்களில் இசைக்கப்படும் 'எடக்கா' எனும் வாத்தியத்தை சற்று சிறிய அளவில் செய்து கல்பாத்தியில் விற்றுக்கொண்டிருந்தார்கள். தோல் இசைக் கருவிகள் மீது பெரும் ஈர்ப்பு என்பதால் பேரம் பேசி வாங்கினேன். அன்றிரவு அதை இசைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தபோது இண்டர்காம் அலறியது. இண்டர்காமில் ஒரு நாயர் "இந்த நள்ளிரவில் உங்களுக்கு வேறு எங்கும் அறை கிடைக்காது. மூடி (வைத்துவி) ட்டு தூங்குங்கள்" என்றார். எடக்கு பண்ணாமல் தூங்கிவிட்டேன்.

தமிழ்நாட்டைப்போல மனித சக்தியை மட்டுமே நம்பி தேர் இழுப்பதில்லை. யானைகள் தேரை முட்டித்தள்ள மனிதர்கள் இலகுவாக இழுக்க சொற்ப பிரயத்தனத்தில் முடிகிறது தேரோட்டம். இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் இருக்கின்றன. எத்தகைய இரைச்சலிலும் மிரளாமல் கருமமே கண்ணாயினராக தேர் தள்ளுகின்றன யானைகள்.

கேரள போலீஸார் மரியாதையானவர்கள் என்பதை சபரி மலையில் கண்டிருக்கிறேன். மக்களுக்கும் போலீஸ் மீது ஏக மரியாதை. லட்சக்கணக்கான மக்கள் கூடும் கல்பாத்தியில் மொத்தமே ஐம்பது போலீஸ்தான். அவர்களும் திருவிழா உற்சாகத்தில் நிகழும் சிறு சிறு அலும்புகளைக் கண்டுகொள்ளவில்லை.

புல்லாங்குழல் விற்பவன் தொடர்ந்து 'எண்ட கையிலே வெண்ணிலாவிலே நல்ல பாட்டுக்காரா....' வாசித்துக்கொண்டே இருந்தான். இருபது ரூபாய் கொடுத்து நானும் ஓரு குழல் வாங்கி ஊதி, ஊதி வாய்தான் வலித்தது. அவனை வழியில் பிடித்து என்னால் மட்டும் ஏன் வாசிக்க முடியவில்லை என்றேன். ஒரு நாளைக்கு இருபது புல்லாங்குழல் விற்றால்தான் சாப்பாடு என்றால் உங்களுக்கும் வாசிக்க வரும் என்றுவிட்டு இடத்தை காலி செய்தான். கோவை திரும்பியதும் கண்ணாடி தாளில் சுற்றிக் கேண்டிக்கு பரிசளித்தேன். வாங்கியவள் 'என்னது இது ஈருளி மாதிரி இருக்கு...' என்றாள்.

கேரளாவின் எதிர்கால பிரச்சனை இளைஞர்கள்தான். நம்மூர் இளைஞர்கள் திருவிழா என்றால் என்ன செய்வோம்? அதிகபட்சம் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு குரூப்பாய் திரிவோம். கூச்சலிடுவோம். பாட்டுக் கச்சேரியில் ஆடுவோம். வயசுப்பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி ஒரண்டை இழுப்போம். கேரள இளைஞர்கள் அப்படி அல்ல. மூக்கு முட்டக் குடித்து விட்டு மூச்சு முட்ட ஆடுகிறார்கள். மொத்தக் குரலில் கெட்ட வார்த்தையை அலற விடுகிறார்கள். வயசுப்பெண்ணை கூட்டமாய் சுற்றிக்கொண்டு சூறையாடுகிறார்கள். என் கடைக்கு ஒரு வயதான மரத்தச்சன் போர்டு அடித்துக்கொண்டிருந்தார். ஒரு இளைஞன் 'இதையாவது ஒழுங்கா அடி தாத்தா....' என்றபடி சென்றான். அவனுக்க அம்மயதான் அடிக்கோனும் என முணு முணுத்தார் பெரியவர்.

நம்மூரில் 55 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோல் கேரளாவில் விலை 52 ரூபாய் 53 பைசாதான். பத்து ரூபாய் மிச்சம் என்பதால் நான்கு லிட்டர் நிரப்பிக் கொண்டு திரும்பினேன்.
"மலையாளிகள் கறிவேப்பிலையைக் கூட உற்பத்தி செய்ய துப்பில்லாதவர்கள்" என்று நேர்காணல்களிலும், கட்டுரைகளிலும், கனகாலமாய் குறை கூறி வருகிறார் பால் சக்காரியா. அசின், நயன்தாரா, பாவனா, கோபிகா, காவ்யா மாதவன், ரேணுகா மேனன், நவ்யா நாயர், பத்மப்ரியா, மீரா ஜாஸ்மீன், ரம்யா நம்பீசன், ஜோதிர்மயி என கணக்கற்ற அழகுத் தொழிற்சாலைகளை உற்பத்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதால் மற்றவற்றிற்கு நேரமில்லை என்பதை அகில இந்திய சேச்சிமார் ரசிகர் மன்றத்தின் சார்பாகத் தெரியப்படுத்தியே தீரவேண்டும்.


Thursday, November 27, 2008

அறிவிக்கப்படாத போர்

ரசாங்கத்தை நடத்துவது எளிதானது அல்ல. பொருளாதார வீழ்ச்சி, மின் தட்டுப்பாடு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, இனவாதம், இயற்கை பேரிடர், பகை நாடுகளின் அச்சுருத்தல், எதிர்க்கட்சிகளின் குடைச்சல், வறுமை, ஊழல் என்று எத்தனையோ இடர்கள். அத்தனையையும் சமாளித்து வளர்ச்சிப் பாதையில் தேசத்தை அழைத்துச் செல்வது சவாலானது. ஆனால் பொதுமக்களோ தம்மை ஆள்பவர்கள் அசாதாரணங்களை சமாளித்து விடும் திறமுடையவர்களாகவே இருத்தல் வேண்டும் என்று பேராசைப் படுவார்கள். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற சாதாரண விஷயத்திலேயே கோட்டை விடும்போது பெரும் மனச்சோர்வும் பயமும் கொள்கிறார்கள்.

மும்பையில் அறிவிக்கப்படாத போர் நிகழ்கிறது. இது தேசிய அவமானம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஆனால், பாராளுமன்றத்திலேயே நுழைந்து பட்டாசு வெடித்த சம்பவத்தை விடவா இது பெரிய அவமானம்?! இருபது நபர்களைக் கொண்ட குழு மும்பையைத் துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறது. நாளது தேதி வரை அங்கங்கே சிறிய குண்டுகளை வெடிக்க வைத்து உயிர்ப்பலி ஏற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் நேரடி தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நிகழ்ந்துவிட்ட நாச வேலைக்கு ஒரு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்கிறது என்றால் அது வாக்குமூலம் தருகிறது என்று பொருள் அல்ல. 'இதைச் செய்தது நாங்கள்தான். உங்களால் எங்கள் மசுரைக் கூட பிடுங்கமுடியாது' என்று சவால் விடுகிறது என்று பொருள்.

இந்தியா பயங்கரவாத்தை ஒருபோதும் அனுமதிக்காது. பயங்கரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஒவ்வொருமுறையும் ஊடகங்கள் நீட்டும் மைக்குகளுக்கு முன் சூலுரைக்கிறார் நமது பாரதப்பிரதமர். பின்பு கூட்டணிக்கும்மாங்குத்தில் ஆழ்ந்து விடுகிறார். மேற்கத்திய நாடுகளில் இதுமாதிரியான அழிச்சாட்டியங்கள் நிகழும்போது தார்மீக காரணங்களுக்காகவோ அல்லது பயம் கருதியோ தங்களுக்குள் ஓன்றுகூடி தீவிரவாதத்தை அழிக்கக் கிளம்பி விடுகிறார்கள். ஆனால் இந்தியாவோ மூன்றுபுறம் கடலாலும் நான்குபுறம் பகையாலும் சூழப்பட்டுள்ளது.

'தீவிரவாதம் குறித்து விரிவாக பேசப்பட வேண்டிய நேரம் இது' என்று என்.டி.டிவியில் யாரோ ஒரு அரசியல்வாதி ஆக்ரோசமாகப் பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார். ".... டேய் நீங்க விரிச்சதெல்லாம் போதும் ....மூடிகிட்டு இருங்கடா...." என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு அறுவைச் சிகிட்சை தேவைப்படுகிறது. மதக்குழுக்களின் போர்வையில் தேசமெங்கும் இயங்கும் சில இயக்கங்களை அழித்தொழிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அல்லது ஜெரிமி பெந்தாமின் "பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி" என்ற கோட்பாட்டிற்கு நாமும் வந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

Tuesday, November 25, 2008

வருகிறேன்

நாளிதழ்களில் 'நிறுவனங்களில் ஆட்குறைப்பு' செய்திகளைப் போலவே தவறாமல் இடம் பெறும் மற்றொரு செய்தி 'உடல் உறுப்புகள் தானம்'. விபத்துகளில் அடிபட்டு கிட்டத்தட்ட இறந்துவிட்டவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதைத் தாண்டி தற்போது நீண்ட நாட்கள் நினைவு திரும்பாத நோயாளிகள், மூளை வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அனுமதி கேட்டு தினமும் விண்ணப்பங்கள் குவிகின்றனவாம். மண்ணுக்குள் வீணாகப் போகும் உறுப்புகள் மனித இனத்திற்கு பயனாகும் என்பதும் அது குறித்த விழிப்புணர்வும் வரவேற்கத்தக்கதே. ஆனாலும் பராமரிக்க முடியாத காரணத்தால் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வருவது கருணைக் கொலை கூட அல்ல... கொலைதான்... ஹிதேந்திரன் விவகாரத்தில் மீடியாக்கள் காட்டிய அதீத ஆர்வம் ஏற்படுத்தி பக்க விளைவுதான் இது.
காப்பாற்றவே முடியாத நோயினால் துன்புறுபவர்களின் கருணைக்கொலை கோரிக்கைகளை நிராகரிக்கிறார்கள். ஆனால் மரணத்தை வெல்ல துடிப்பவர்களின் அனுமதி இன்றி உடல் உறுப்புகளைத் தானம் செய்வது யானையைக் கொன்று தந்தத்தை எடுப்பது போலத்தான் படுகிறது.
***
கோயம்புத்தூரில் மகாக் கேவலமான சாப்பாடு ரூ.35/-க்கு கிடைக்கும். சுமாரான சாப்பாடு ரூ.45/-க்கு கிடைக்கும். நல்ல சாப்பாடு எங்கேயும் கிடைக்காது. ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை எக்குத்தப்பாய் ஏறிப்போய் இருப்பதால் இப்போதெல்லாம் கையேந்தி பவன்களில் கூட்டம் அம்முகிறது. ஒரு காலத்தில் சைக்கிள் ரிக்ஷாக் காரர்களும் கூலிக்காரர்களும் மட்டுமே சாப்பிட்டு வந்த கையேந்தி பவன்களில் தற்போது டை கட்டிய எக்ஸிகியூட்டிவ்களும், காரில் வந்து காருக்குள்ளேயே வைத்து சாப்பிட்டு விட்டு செல்லும் ரெண்டும் கெட்டான் தர குடும்பங்களின் கூட்டமே எப்போதும் இருக்கிறது. குறைவான விலை, விரைவான சேவை, கூடவே நல்ல சுவை என்பதால் வருகிறார்கள். நான் வழக்கமாய் சாப்பிடும் கையேந்தி பவனில் இரண்டு கூலிக்காரர்கள் பேசிக்கொண்டார்கள் " போற போக்க பாத்தா கார்காரவுக கைவண்டி இழுக்கவும் வந்துடுவானுங்க போலருக்கு...."
***
பைக் வாங்குவதற்கான தகுதி பதினெட்டு வயதிலே வந்து விட்டது என்றாலும் வசதி வந்தது என்னவோ இப்போதுதான். இந்த பணவீக்கக் காலத்தில் எழுபதாயிரம் கொடுத்து யூனிகார்ன் வாங்கித்தான் ஆகவேண்டுமா? என தமிழக முதல்வரைத் தவிர அனைவரும் கேட்டு விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதில் "இந்த பொருளாதார சரிவு மாறலாம். பழைய நிலைக்கே திரும்பலாம். ஆனால், இளமை?!" ஏற்கனவே முதுமையின் முகவரிகள் என் முகத்தில் எழுதப்பட்டு வருகிறது. மோட்டார் பைக்கில் இந்தத் தமிழகத்தை மட்டுமாவது முழுவதும் சுற்றி வரும் ஆசை "மோட்டார் சைக்கிள் டைரீஸ்" பார்த்த காலத்தில் இருந்தே இருக்கிறது. முன்பைக் காட்டிலும் தற்போது தமிழகம் முழுக்க எக்கச்சக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கூடிய விரைவில் கிளம்ப இருக்கிறேன்.

Monday, November 24, 2008

எந்தை

'தவமாய் தவமிருந்து' வெளியான நேரம். அப்போது நான் விகடனில் இருந்தேன். வழக்கமாக விகடனில்தான் சினிமா விமர்சனம் வெளிவரும். ஆனாலும், வியாழன்வரை காத்திருக்காமல் சனிக்கிழமை ஜூனியர்விகடனிலேயே எஸ். ராமகிருஷ்ணன் படத்தைப் புகழ்ந்து எழுதி இருந்தார். மக்கள் சாரை, சாரையாய் படத்தை பார்த்துவிட்டு, தாரை தாரையாய் கண்ணீர் சிந்தினார்கள். விகடன் விமர்சனத்திலோ 'படத்திற்கு மார்க் போடலாம். பாடத்திற்கு?!' என்று கெளரவப்படுத்தி இருந்தார்கள்.

படம் வெளியான வாரத்திலேயே அலுவலக அதிகாரிகளோடு காரில் பயணிக்க நேர்ந்தது. அரசியல், விளையாட்டு, வணிகம், தொழில்நுட்பம் என அரட்டைக் கச்சேரியோடு தொடர்ந்தது பயணம். பேச்சு 'தவமாய் தவமிருந்து' படம் குறித்து துவங்கியது. டிரைவர் உட்பட அனைவரும் படத்தை சிலாகித்துக்கொண்டிருந்தனர். நான் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே விரையும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட காரில் இருந்த அனைவருமே தியேட்டரில் கண்ணீர் சிந்தியவர்கள்தான் போலும். ஒருவர் படம் பார்த்தபின் ஊருக்குப் போய் அப்பாவைப் பார்த்து வந்தேன் என்றார். மற்றொருவர் இடைவேளையில் அப்பாவுக்கு போன் செய்து பேசினேன் என்றார். இன்னொருவர் ஒரு நாள் முழுக்க அப்பாவை அழைத்துக்கொண்டு பெருநகர் முழுக்க சுற்றினேன் என்றார். நான் அசுவாரசியமாகவே இருந்தேன்.

"யோவ்... நீ என்னய்யா அமைதியா இருக்கே...?! படம் இன்னும் பாக்கலீயா...? என்றார் உயரதிகாரி ஒருவர்.
"இல்லீங்க பாத்துட்டேன்..."
"ஏன் படம் உனக்கு புடிக்கலியா...?!"
"நல்ல படம். அவ்வளவுதான். பெருசா ஒன்னுமில்ல..."
"என்னது பெருசா ஒன்னுமில்லயா... நானே தியேட்டர்ல உக்காந்து அழுதேன்யா..."
"பெத்த தகப்பனுக்கு சோறு போடாதவனுக்குத்தான் சார் அழுகை வரும். எனக்கு வரல்ல..."

என் வார்த்தைகளின் கடுமை அவர்களை உலுக்கி இருக்க வேண்டும். பின் வெகு நேரத்திற்கு மெளனம் மட்டுமே நிலவியது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து என் ஓரே கதாநாயகன் அப்பாதான். ஏன் இந்தக் கட்டுரையை படிக்கும் உங்களுக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அப்பா வெற்று வார்த்தைகளில் விவரித்துவிட முடியாத கடின உழைப்பாளி. அறத்தை மீறிய செயல்கள் எதையும் செய்தறியா உத்தமர். குடும்பத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும், என் மீதான நிபந்தனைகளற்ற தூய பேரன்பையும் நான் அறிவேன். பதினைந்து வரை அவர் என்னைத் தாங்கினார். அன்றிலிருந்து இதோ இந்த வரிகளை தட்டச்சு செய்யும் நிமிடம் அவரை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். தாங்குவேன். என் தகப்பனின் மேன்மையையும், அவரைப் பேண வேண்டும் என்பதையும் எனக்கு இன்னொருவன் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 'தவமாய் தவமிருந்து' சமரசங்கள் ஏதுமின்றி மிகுந்த நேர்மையுடன் எடுக்கப்பட்ட உணர்ச்சிக்காவியம் என்பது மட்டும்தான் இன்று வரை என்னுடைய அபிப்ராயமாக இருந்து வருகிறது.

நேற்று 'வாரணம் ஆயிரம்' பார்க்க கேண்டியுடன் சென்றிருந்தேன். படம் முடிந்தவுடன் 'உங்கள் அப்பாவை கொஞ்ச நேரமாவது நினைத்துப்பாருங்கள்' என்று டைட்டில் போட்டார்கள். இந்த டைட்டிலின் மூலம் ஒரு நல்ல படத்தையும், படம் பார்க்க வந்தவர்களையும் கேவலப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன்.

Tuesday, November 18, 2008

தாயோளீ...


கல்பாத்தி குறித்தும் அதன் தனிச்சிறப்பிற்குக் காரணமான தேரோட்டம் குறித்தும் எழுத எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது என்றாலும் அதையெல்லாம் விட மிக முக்கியமானது இந்த பதிவு என்று நான் கருதுகிறேன்.

கல்பாத்தி திருவிழாவில் ஊசி, பாசி, மணி, சால்வை, மத்தளம், வளையல், கம்மல், மிட்டாய்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள், தின்பண்டங்கள், மூலிகைகள், பாட்டுப் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ விதமான சப்புச் சவறுகளையெல்லாம் விற்பதற்கென்று விதம் விதமான நாடோடி வியாபாரிகள் கல்பாத்தி எங்கும் நடைபாதைகளில் கடை பரப்பிக் காத்திருந்தார்கள். நானும் ஒரு கடை பரப்பி இருந்தேன் தேரடியில்.

என்னுடைய கடைக்கு நேர் எதிரே ஒரு வட இந்திய இளைஞி சாலையோரம் நின்றபடி வருவோர் போவோரிடம் சால்வைகளை விற்க முயற்சித்துக்கொண்டிருப்பாள். சுமார் பதினாறு அல்லது பதினெழு வயது இருக்கலாம். களையான முகம். வாட்டசாட்டமான உடல் வாகு. எண்ணெய் பார்த்தறியாத செம்பட்டை கேசம். பல ஊர்களின் புழுதியேறிய பழுப்பான உடை. ஒவ்வொரு நாளின் இரவிலும் தன் கூட்டத்தாரோடு சேர்ந்து என் கடைவாசலில்தான் உறங்குவாள். காலையில் கடை திறக்க வரும் நான், எனக்குத் தெரிந்த மொழியில் அவர்களை அப்புறப்படுத்துவேன்.

தேர் திருவிழா துவங்கிய முதல் நாள் மாலை, அந்தச் சிறுமியை மத்திய வயதைக் கடந்த ஒரு போலீஸ்காரர் விரட்டிக்கொண்டிருந்தார். அவள் நின்ற இடம் தேரடி என்பதால் ஒருவேளை பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது போக்குவரத்து இடைஞ்சல் என்றோ விரட்டுகிறார் என நினைத்தேன். அந்தப் பெண் மருண்ட விழிகளுடன் இடத்தை விட்டு அகன்ற போதும் அவளை துரத்துவது போலவே பின் தொடர்ந்தார். 'அதான் போறாளே அப்புறம் என்னத்துக்கு இந்த பாடு படுத்துறார்?!' என நினைத்துக்கொண்டேன். கூட்ட நெரிசலின் பரபரப்பு சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவளது புட்டத்தை தடவினார் போலீஸ்காரர். சர சரவென என்னுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்னுடைய சிற்றாட்களில் ஒருவனை ஸ்டாலைக் கவனித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீதியில் இறங்கி அவர்களைப் பின் தொடர்ந்தேன். அந்தப் பெண் ஓட்டமும் நடையுமாக விரைய எத்தனித்தாள். போலீஸ்காரன் மீண்டும் அவளது புட்டத்தை தடவினான். நான் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட முடிவெடுத்தேன். அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி அவளை கோவிலின் பின்புறம் இருந்த கல்பாத்தி ஆற்றங்கரைப் பக்கமாக ஒதுக்கினான். இருள் கவியத் துவங்கி இருந்தது. வறண்ட கல்பாத்தி ஆற்றின் பெரிய பாறைகள் யானையின் முதுகுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டேன். அவன் அவளை அழைத்துக்கொண்டு பாறைகளின் மீது ஏறி, இறங்கி வசதியான இடம் நோக்கிச் சென்று இருளில் மறைந்தான். நான் பட படக்கும் இதயத்தோடு ஸ்டாலுக்குத் திரும்பினேன்.

மறுநாள் காலை அவள் வழக்கம்போல என் ஸ்டாலுக்கு எதிரே சால்வை விற்றுக்கொண்டிருந்தாள். நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்போதும் போல சலனமற்று இருந்தது அவள் முகம். கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரன் வந்தான். அவளிடம் ஏதோ பேசி ஒரு சால்வையை வாங்கிச் சென்றான். சற்று நேரத்தில் திரும்பி வந்து ஐந்து சால்வைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தான். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு பேரைக் கூட்டி வந்து அவர்களுக்கும் சால்வைகளை விற்றுக் கொடுத்தான். நேற்றிரவு நிகழ்ந்து விட்ட சேதாரத்திற்கான செய்கூலி என்று நினைத்துக் கொண்டு வேலைகளில் மூழ்கினேன்.

மதிய வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. பாலக்காட்டு வெயில் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நச நசத்துக்கொண்டிருந்தது. 'சேட்டா' என்றபடி ஸ்டாலுக்கு வந்தான் ஒரு ஐந்து வயதுச் சிறுவன். அவன் உருவத்திற்கு சற்றும் பொருந்தாத நைந்து கிழிந்து போன சட்டையும், பேண்டும் அணிந்திருந்தான். கால்களில் செருப்பில்லை. ஒரு அட்டையில் க்ளிப்புகளை மாட்டி அதில் மூன்று நான்கு லாட்டரி சீட்டுகளை வைத்திருந்தான். அவன் கையில் ஏதோ ஒரு குழந்தை விளையாடி விட்டு தூக்கி எறிந்த பிளாஸ்டிக் வாட்சை கட்டி இருந்தான். பால் மணம் மாறாத பச்சிளம் பாலகன் என்ற உவமைக்கு மிகப் பொருத்தமான தோற்றம். என்னை லாட்டரி சீட்டுகளை வாங்கும்படிக் கேட்டுக்கொண்டான்.

நான் என் பக்கத்தில் இருந்த நண்பரிடம் 'அநியாயத்த பாத்தீங்களா, காசு வேணும்கிறதுக்காக பழைய லாட்டரியை எடுத்துட்டு வந்துருக்கான் பாருங்க...' என்றேன். 'தேதிய வேணும்னாலும் பாத்துக்க சேட்டா... ஆனால் லாட்டரி வாங்கிக்க சேட்டா...' கெஞ்சினான் சிறுவன். துணுக்குற்று தேதியைப் பார்த்தால் அது அடுத்த வாரத்தில் குலுக்கல் என்றது. ஐய்யோ அடக்கடவுளே... இந்தப் பச்சை பிஞ்சின் கரங்களில் லாட்டரியை திணித்தது யார்?! இந்தப் பிஞ்சு லாட்டரி விற்றுப் பிழைத்தாக வேண்டுமா?! இந்த மூன்று லாட்டரியை விற்று இவனுக்கு என்ன கிடைக்கும்?! பதறியபடி அந்தச் சிறுவனிடம் "தம்பி ஸ்கூலுக்குப் போகலியா?!" என்றேன். பதிலுக்கு அவன் என்னை மகாக் கேவலமான ஒரு பார்வை பார்த்தான். எந்த மொழியிலும் விவரித்து விட முடியாத பார்வை அது. லாட்டரியை நீட்டி "வாங்கிக்கோ சேட்டா... அதிர்ஷ்டம் உனக்குத்தான்..." என்றான் மழலை மொழியில். 'லாட்டரி வேண்டாம் இதை வச்சுக்கோ' என ஒரு பத்து ரூபாயை நீட்டினேன். அதை வாங்கி பையில் வைத்துக்கொண்டு கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு அடுத்த கடை நோக்கி நகர்ந்தான்.

'பத்து ரூபாய் கொடுத்ததன் மூலம் அவனைப் பிச்சையெடுக்கும்படியும் உழைக்காமல் பிழைக்கும்படியும் அவனை நீங்கள் கெடுக்கிறீர்கள்" என்றார் என் நண்பர். "அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்த நான் ஒரு தாயோளி... அதை விமர்சிக்கும் நீ ஒரு தாயோளி... இந்தப் பச்சைக் குழந்தை கொழுத்தும் வெயிலில் வெற்றுக்காலோடு திரிய... அதைக் கவனிக்கத் துப்பில்லாமல் திருவிழாக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்தக் கல்பாத்தி முழுக்க தாயோளிகள்... "என்றேன் ஆத்திரத்தோடு. நண்பர் ரோஷத்துடன் எழுந்து சென்று விட்டார்.

அன்று முழுவதும் "நீங்கள் அணிந்திருக்கும் ரேபான் க்ளாஸூம், டெர்லின் சட்டையும் அவர்களின் வயிற்றில் இருப்பதை திருடி வாங்கியதுதான்..." என்ற புதுமைப்பித்தனின் வரிகளும், 'தேதிய வேணாலும் பாத்துக்க சேட்டா' என்ற பிஞ்சுக்குரலும், போலீஸ்காரன் அந்தப் பெண்ணின் புட்டத்தைத் தடவியதும் திரும்ப திரும்ப மனதில் தோன்றியடியே இருந்தது. ஊர் ஊராய் சுற்றித் திரியும் இந்தப் பெண்ணை இழுத்துப்போய் காமம் கழிக்கிறானே, அவள் கர்ப்பமுற்றாள் என்ன செய்வாள்?! எங்கு போய் பிள்ளையைப் பெறுவாள்?! அதை எப்படி வளர்ப்பாள்?! அவளது கூட்டம் அவளை வைத்துக்கொள்ளுமா?! பள்ளிக்கூடம் போகவில்லையா என்று கேட்டதற்கு அந்தப் பையன் ஏன் என்னை அவ்வளவு கேவலமாகப் பார்த்தான்?! அவனுக்கு ஒரு செருப்பு வாங்கிக் கொடுக்கக் கூட எனக்குத் தோன்றாதது ஏன்? பத்துரூபாயோடு எனது கடமை முடிந்து விட்டதா?! நான் அணிந்திருக்கும் ஸ்டோரி சட்டையும், ஆலன் பெய்னி பேண்டும் அவன் வயிற்றைக் கொள்ளையடித்ததா?! அந்தப் பாவத்தை மறைக்கத்தான் பத்து ரூபாயா?! முன்னிரவில் புணர்ந்தவளுக்கு சால்வை விற்றுக் கொடுப்பதற்கும், பத்து ரூபாய் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கிறதா?! ஒரு முழு இரவும் உறங்க முடியாத கேள்விகள்.

தேர் திருவிழாவின் இறுதி நாள் காலை. வழக்கம் போல அவள் என் கடைக்கு எதிரே நின்று கொண்டிருந்தாள். நான் சலனமற்ற அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். போலீஸ்காரன் திமிறும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த போராடிக்கொண்டிருந்தான். நான் அவளை அடிக்கடி பார்ப்பதை உணர்ந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்து சிரித்தாள். நான் தலையை திருப்பிக் கொண்டேன். அவள் என் கடைக்கு வந்து என்னிடம் தண்ணீர் வேண்டும் என்று சைகையில் கேட்டாள். நான் எடுத்துக் கொடுத்தேன். குடித்தவள் என்னிடம் சால்வை வேண்டுமா என்றாள். நான் வேண்டாம் என்றேன். சிரித்துவிட்டு நகர்ந்தாள். கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. போலீஸ்காரன் தன்னுடைய பணியில் மும்முரமாய் இருந்தான். எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, தேரடி வந்த லாட்டரிச் சிறுவன் அந்தப் போலீகாரனை நெருங்கி அவனது முழங்கையைத் தொட்டு லாட்டரி வேண்டுமா? என்றான். என்ன மூடில் இருந்தானோ அந்தப் போலீஸ்காரன் அந்தச் சிறுவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். "அடிக்காதடா தாயோளி... அவன் ஒன்ன மாதிரி ஒரு போலீஸ்காரனோட மகனாக்கூட இருக்கலாம்டா..." எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அரற்றிக்கொண்டு நான் விசித்து விசித்து அழத்தொடங்கினேன்.Tuesday, November 11, 2008

கல்பாத்தி

பாலக்காட்டிற்கு அருகேயுள்ள கல்பாத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க விஸ்வநாதசுவாமி ஆலய தேர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வைதீக பிராமண கலாச்சாரத்தின் தாக்கம் மிக்க இத்திருவிழா, கேரளாவின் புகழ் மிக்க திருவிழாக்களுள் ஒன்று. அவ்விழாவினை நேரில் காண கல்பாத்தி செல்கிறேன். இன்று மதியம் முதல் வருகிற 16/11/2008 ஞாயிறு வரை கல்பாத்தியிலே தங்கி இருக்க உத்தேசம். பதிவுலக நண்பர்களோ ஏனைய நண்பர்களோ கல்பாத்தி வருவதாக இருந்தால் மறவாமல் 09003931234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அருமையான அக்ரஹாரத்துக் காப்பியோடு, அழகான ஃபிகர்களை ரசித்துக்கொண்டே விஸ்வநாதசுவாமியையும் நலம் விசாரித்து வர இன்றே புறப்படுங்கள்.

Thursday, November 6, 2008

பிளவுஸ் அணியாத புரொபசர்

அஜீத்குமார் அடித்ததோடு கொஞ்சம் நடிக்கவும் செய்திருந்த கிரீடம் திரைப்படம் குறித்த என் அபிப்ராயத்தை 'தல' தப்புமா? என்ற பதிவில் எழுதி இருந்தேன். அதை அஜீத் ரசிகர்கள் தங்களது வலைதளத்தில் இணைத்திருந்தார்கள். புதிய இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்தால், கொஞ்சம் தப்பிப்பார் என்ற என் அபிப்ராயத்தையும் அதில் எழுதி இருந்தேன். விஷ்ணுவர்த்தனின் பில்லா கொஞ்சம் நிமிர்த்தி கொடுத்த மார்கெட்டை 'ஏகனில்' எக்கச்சக்கமாய் தொலைத்திருக்கிறார் அஜீத்.

தமிழ் சினிமாவிற்கென்று இருக்கின்ற சாபக்கெடுகள் அனைத்தையும் ஓன்று திரட்டி ஓரே படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஏகன் ஒர் எளிய உதாரணம். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே கொஞ்சம் மெண்டல்தானோ என்ற சந்தேகம் வருகிறது. போக்கிரியின் டெம்ப்ளெட்டில் தனக்கேயுரிய கோமாளித்தனங்களையும் சேர்த்துக் கிண்டியதில் 'கோமா' ஸ்டேஜில் இருக்கிறது படம்.

அஜீத் ஏகனாய் இருப்பார் என்று போனால் ஏகமாய் இருக்கிறார். குறுக்குவாட்டில் வளர்ந்து வகை தொகை இல்லாமல் வயிறு தள்ளிக்கொண்டு சிரமப்பட்டு அடித்து உதைத்து ஓடி ஆடி காதலித்து ஓய்கிறார். பிளவுஸ் அணியாத புரொபசராக நயன்தாரா தன் பரந்த முதுகை படம் நெடுக காட்டுகிறார். பொய் சொல்லப் போறோம் படத்தில் தேவதை மாதிரி தெரிந்த பியா, பிசாசு போல தெரிகிறார். என்னதான் கோர்ட் சூட் அணிந்து துப்பாக்கியெல்லாம் வைத்திருந்தாலும் வில்லன் சுமனைப் பாக்கும் போது பத்து பைசா இருந்தா தர்மம் பண்ணலாமேங்கிற நெனைப்புதான் வருது. கதை அப்படிங்கிற ஏரியாவைப் பத்தி எது எழுதினாலும் அது கதைங்கிற வார்த்தைக்கே அவமானம் என்பதால் தவிர்த்து விடுகிறேன். 'மல்லிகா ஐ லவ் யூ' பாடலில் மட்டும் யுவன் சங்கர் என்ற மானஸ்தன் எட்டிப் பார்க்கிறார்.

அஜீத்குமாரின் நலம் விரும்பியாக ஓரெயொரு யோசனைதான் "வயசுக்கும் வயித்துக்கும் தகுந்த ரோல் பண்ணுங்க சார்...!"

Wednesday, November 5, 2008

வேறொன்றுமில்லை

அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஏனெனில் அவர் பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த ஐ.எம்.ஏவின் பழம் பெருச்சாளிகளை எதிர்த்தார் ஏனெனில் அவர் மருத்துவ வசதிகள் முற்றிலும் மறுக்கப்பட்ட கிராமத்து மக்களின் நிலை குறித்து கவலைப்பட்டார் ஏனெனில் அவர் பொது இடங்களில் புகைப் பிடிக்கும் ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க முயற்சித்தார் ஏனெனில் அவர் சினிமா நட்சத்திரங்கள் திரைப்படங்களில் புகைபிடிக்கப் போவதில்லை என அறிவிக்க வைத்தார் ஏனெனில் அவர் மது எனும் சாத்தானை அழிக்கத் துடிக்கிறார் ஏனெனில் அவர் புகையிலையின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க நினைக்கிறார் ஏனெனில் மிக அரிதாகவே சாத்தியப்படும் துறை சார்ந்த அறிவும் கல்வியும் அக்கறையும் உள்ள அமைச்சராக அவர் இருக்கிறார். (பிகு: இந்தியா டூடேயில் காலம்காலமாக இப்படி 'ஏனெனில்' போடுகிறார்களே... அதான் நானும் கொஞ்சம் முயற்சித்தேன்)
***
கவிஞர். வா. மணிகண்டன் (கண்ணாடியில் நகரும் வெயில்) திருமண அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அழைப்பிதழ் வடிவமைப்பும் அதில் இடம் பெற்றிருந்த கவிதையும் பிரமாதமாக இருந்தது.

உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.

அவரது கல்யாணத்திற்கு போய்த்தான் தீரவேண்டும் என்கிறாள் கேண்டி. துணைக்கு சுராவையும் பிரமிளையும் கூட்டிப் போகலாமென்றிருக்கிறேன்.
***
இலவச இணைப்பு:

1) "உன்னை ஒருவன் ஏமாற்றினானென்றால், உனக்கு ஒரு தந்திரம் கற்றுக்கொடுத்தான் என நினைத்துக்கொள்" - யாரோ

2) "அதிர்கிற வீணையில் தூசு குந்தாது" - பிரமிள்

குருட்டு கும்ப்ளே


கும்ப்ளே. வேகமும் இல்லாத, போதிய சுழற்சியும் இல்லாத இரண்டும் கெட்டான் பவுலர். தோல்வியின் விளிம்பில் இருந்த ஆட்டத்தை மந்திரப் பந்து வீச்சினால் வெற்றியின் பக்கம் திருப்பிய வரலாறு எதுவும் இல்லை. ஆசிய துணைக்கண்டத்தைத் தாண்டி வேறெந்த மைதானத்திலும் பருப்பு வெந்தது இல்லை. கிரிக்கெட்டிற்கு சற்றும் தொடர்பில்லாத சோம்பேறித்தனமான உடல் மொழி. வெற்றிக்கான வேட்கையை அவரது முகத்தில் ஒருபோதும் கண்டதில்லை. உலகின் மிக மோசமான பீஃல்டர்களுள் ஒருவர். கேட்சுகளை அடிக்கடி தவற விடுவதால் எங்கள் வட்டாரத்தில் 'குருட்டு கும்ப்ளே' என்ற பட்டப்பெயர் பிரபலம். ஆனாலும் ஆனாலும் பதினெட்டு ஆண்டுகளாக இந்திய சுழற்பந்து வீச்சின் முகமாக அறியப்பட்டவர் கும்ப்ளே. சர்வதேச அளவில் வார்னே, முரளீதரன் போன்ற ஜாம்பவான்களுக்கு இணையானவராகவே கடைசிவரை கருதப்பட்டவர்.

டைட்டன் கோப்பையின் போது ஸ்ரீநாத்துடன் சேர்ந்து அற்புதமாக பேட் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததும், நாடியில் காயத்திற்குக் கட்டுப்போட்டு வந்து பெளல் செய்து லாராவை அவுட் ஆக்கியதும், சயீத் அன்வர் சேப்பாக்கத்தில் அவரை நாயடி அடித்து காயப்போட்டதும், அதே பாகிஸ்தானுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதும் எப்போதும் மறக்காத 'கும்ப்ளே மெமரீஸ்'.

கும்ப்ளே தன் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அப்பழுக்கற்ற ஜென்டில்மேனாக இருந்தார். ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும், எதிரணியினரோடு பழகும் விதமும், சர்ச்சைகளற்ற நெடிய வாழ்வும், பந்தின் மீதான அவரது ஆழுமையும் இளம் கிரிக்கெட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை. தற்போது இந்திய அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரராக இருக்கும் கும்ப்ளே, அதே பணியைத் தொடர்ந்தால் அணிக்கும் அவருக்கும் பிரிவுத் துயர் இருக்காது. கும்ப்ளேயின் ஓய்வுக்காலம் இனிமையானதாக இருக்க ஒரு சாமான்ய தெருமுனைக் கிரிக்கெட்டரின் "வாழ்த்துகள்"

Saturday, November 1, 2008

தமிழ்நாட்டிலிருந்து ஒரு பர்கா தத்!

திலகவதி: "சன் நியூஸ்ல ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்"

நான்: "சந்தோஷம்"

திலகவதி: "அவ்வளவுதானா?!"

நான்: "அவ்வளவுதான்... வேறென்ன...?!"

திலகவதி: "எல்லாரும் ஆழம் தெரியாமல் காலை விடாதேங்கறாங்க..."

நான்: "அறிவுரைகளை நம்பாதே... நீ எங்கும் ஜெயிப்பாய்..."

சில நாட்களுக்கு முன்பு திலகவதியுடனான தொலைபேசி உரையாடல் இப்படித்தான் இருந்தது. சி. திலகவதி என்ற பெயர் விகடன் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். பேஷன், டெக்னாலஜி, யூத் சமாச்சாரங்களை இடது கையால் எழுதிக்கொண்டே சுனிதா வில்லியம்ஸ், அமர்தியா சென் போன்றோர்களின் பேட்டிகளை வலது கையால் எழுதும் திறமைசாலி. பாலிவுட் பிரபலங்களான ப்ரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், தீபிகா படுகோனின் பேட்டிகளை வெளிவராத படங்களுடன் ஜஸ்ட் லைக் தட் எழுதிக் குவிப்பாள். செய்திக்கான வேட்கை எப்போதும் அவளிடம் குறைவில்லாமல் இருப்பதைக் கண்டு பிரமித்து வம்படியாக நண்பனானவன் நான்.

சன் நியூஸில் சேர்ந்த இந்த சில நாட்களிலேயே சந்திராயன் நேரடி ஒளிபரப்பு, காஞ்சிபுரம் கல்குவாரி கொத்தடிமைகள் - சிறப்புப் பார்வை, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்த செய்தித் தொகுப்பு, கல்பாக்கம் ரேடியேஷன் என பின்னிப் பெடலெடுத்துக்கொண்டிருக்கிறாள். இதுமாதிரி செய்திகளால் அதற்குள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டாள். அவளது வெற்றிக்குக் காரணமாக நான் நினைப்பது கீழ்கண்டவைகளைத்தான்...

* அடுத்தவர்களது அபிப்ராயத்திற்காகவும், கேலிக்காகவும் ஒருபோதும் கலங்குவதில்லை.

* எந்த புதிய சூழலிலும் தன்னைப் பொறுத்திக்கொள்ளுதல்.
* கிடைத்தது போதும் என்றோ, எதற்கு ரிஸ்க் என்றோ எதிலும் திருப்தியோடு இருந்து விடுவதில்லை.

* எதையும் கற்றுக்கொண்ட பிறகுதான் செய்தாக வேண்டும் என்றால் நாம் அதை செய்யவே முடியாது என்று துணிந்து களத்தில் இறங்குவது.

* டெக்னாலஜி அப்டேஷன்.

திலகா இன்னும் பல உயரங்களை நிச்சயம் அடைவாள். அப்போதும் அவளை ஒரு கூட்டம் கேலி செய்து கொண்டுதானிருக்கும்.

கேண்டி - புகைப்படங்கள்

செல்வேந்திரனுக்கு,
இப்படி ஒரு கடிதம் எழுதியாக வேண்டிய அளவிற்கு நீங்கள் அப்படியொன்றும் பிரமாதமாக எதையும் எழுதிவிடவில்லைதான். ஆனாலும், தினமும் உங்களது வலலப்பூவை இரண்டு முறையாவது பார்த்துவிடுவதும், புதிய பதிவுகள் இல்லாதபோது ஏற்கனவே படித்து விட்ட பதிவுகளைப் படிக்கத் துவங்குவதும் தினசரி வழக்கமாகி விட்டது. இந்த வினோத பழக்கம் எப்படி ஏற்பட்டது? எது என்னை உங்களை நோக்கி ஈர்க்கிறது? தீவிரமாக யோசித்தால் தமிழில் எழுதும் ஒரு சிலருக்கே வாய்த்த சுறு, சுறு எழுத்து நடையும், இதழோரத்தில் மெல்லிய புன்னகையை இழையோட விடும் நகைச்சுவையுமாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், சமீப காலமாக உருப்படியாக எதுவும் எழுதாமல் 'ஓப்புக்குச் சப்பாணி' மாதிரி எழுதி வருகிறீர்கள் என்பதை ஒரு வாசகனாய் என்னால் உணர முடிகிறது. நீங்கள் எதை எழுதினாலும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற எனது விமர்சனத்தைப் பெரிதாக எடுத்துக்கொண்டு இப்படியே காலம் தள்ளி விடலாம் என்று நினைக்காதீர். குறைந்தபட்சம் 'முடியலத்துவத்தையாவது' மீண்டும் துவங்குங்கள். நான்கு வரிகளுக்குள் நீங்கள் அடிக்கும் நக்கலுக்காகவே விகடன் வாங்கத் துவங்கினேன். இப்போது நிறுத்தி விட்டேன்.

நிற்க, இந்தக் கடிதம் எழுதிய நோக்கத்தையே மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன். கேண்டி யார்? என்ன செய்கிறார்? அவருக்கும் உங்களுக்கும் காதலா? உண்மையில் கேண்டி என்றொருவர் இருக்கிறாரா? அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. ஆனால் உங்களது கட்டுரைகளில் தவறாது இடம் பிடிக்கும் கேண்டி பாத்திரம் சுஜாதாவின் வசந்தை போல் என்னை பெரிதும் ஈர்க்கிறது. அவர் முகம் காணும் ஆவலைத் தூண்டுகிறது. அவரது ஒரு புகைப்படத்தையாவது எனக்கு தனி மெயிலில் அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன். அனுப்பத் தவறினால் ஏதேனும் ஒரு அதிகாலையில் உங்கள் அறைக் கதவைத் தட்டுவேன்.
- கே. க்ருஷ்

கோபால கிருஷ்ணன் என்பதை கே. க்ருஷ் என்பதாக சுருக்கிக் கொண்டு ஹைதரபாத்தில் 'கணிணி நோண்டியாக' பணியாற்றும் இளையான்குடி தமிழர் அனுப்பிய ஈ-மெயில். அடிக்கடி என்னை மிகையாகப் புகழ்ந்து அவர் அனுப்பும் இமெயில்களுக்கு பொறுப்பாக பதில் எழுதுவேன். பின்னே... நம்ம எழுத்தையும் ஒருத்தன் ரசிக்கிறாரென்றால் ச்சும்மா விட்டுவிட முடியுமா?! நமக்கென்ன 'வேட்டைக்கார வேம்பு'விற்கு இருப்பது போல் பருத்த வாசகர் வட்டமா இருக்கிறது?! ஆனாலும் அவரது வேண்டுகோளான கேண்டியின் புகைப்படத்தை அனுப்பி வைக்க கேண்டி உறுதியாக மறுத்துவிட்டாள். காரணம்: 'ஐ ப்ரோ' திருத்தி சில காலம் ஆகிவிட்டதாம். தன் அழகை அப்-டேட் செய்து 'போட்டோ செண்டரில்' படம் எடுத்து தன் ரசிகர்களுக்கு வழங்க போகிறாளாம்.

இப்போதைக்கு என்னால் கீழ்கண்ட கேண்டி படங்களைத்தான் தர முடிந்திருக்கிறது. க்ரிஷ் மன்னிப்பாராக...Saturday, October 25, 2008

வேப்ப மரம்; புளிய மரம்

பெருநகரில் பணத்தை துரத்த ஆரம்பித்த பின் சொந்த ஊரும் வாசனையும் மெல்ல நினைவை விட்டு அகல ஆரம்பித்திருக்கிறது. பிழைப்பைக் கொடுக்கும் ஊர்தான் சொந்த ஊர். பிழைப்பு கொடுப்பவர்கள் சொந்தக்காரர்கள். அவ்வூரின் கலாச்சாரமே நமது சொந்தக் கலாச்சாரம் என்றாகிப்போனது எனக்கு மட்டும் நேர்ந்திருக்காது என்று நம்புகிறேன். சொந்த ஊருக்குப் போவதற்குக் கூட தீபாவளியும், பொங்கலும் தேவையாய் இருக்கிறது. இதர காரணங்களுக்காக ஊருக்குச் செல்ல நிறுவனம் அனுமதியளிப்பதில்லை என்ற காரணம் ரொம்ப சவுகர்யமாக இருக்கிறது.

புதியதாய் ஒரு உடை வாங்கினால் பழைய உடைகளில் ஒன்றை இல்லாதவர்க்கு தானம் செய்ய வேண்டும் என்ற பிரக்ஞை உடையவனாய் சில காலம் இருந்தேன். ஆனால் போட்டுக் கழித்த பழைய உடைகளைப் பிறருக்கு கொடுப்பதில் 'அறச்சார்பு' இல்லை என்பதால் உணவைப் போலவே உடைகளையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சங்கல்பத்தில் சில மாதங்கள் உறுதியாக இருந்தேன். ஆனால், கண்ணைக்கவரும் தள்ளுபடி விளம்பரங்களில் சக விட்டில்களைப் போலவே நானும் பலியாகி பல்லாயிரம் இழந்தேன்.


சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு. அயலூரிலோ அவன் சட்டைக்குத்தான் மதிப்பு என்றொரு சொலவடை இருக்கிறது. அதுவும் கொள்ளைப் பணம் கொடுத்து உடை வாங்க நமக்கு சவுகர்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. என்னதான் சிந்தித்தாலும் எழுதினாலும் தகப்பனுக்கு உடை வாங்குகையில் மட்டும் சிக்கனம் எட்டிப் பார்ப்பது ஏதாவது ஒரு உளவியல் அல்லது பிறப்புக் கோளாறாகத்தான் இருக்குமோ?


எது எப்படியோ புத்தாடைகள், இனிப்பு பலகாரங்கள், நண்பர்களுக்கானப் பரிசுப்பொருட்களோடு கனத்த பையைக் கட்டிக்கொண்டு ஊர் செல்ல காத்திருக்கிறேன். இந்த முறையாவது குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு மேலாக ஊரில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்.


ஊர் போய் வந்த பின் 'எப்படி இருந்த ஊர்? இப்படி ஆயிடுச்சேன்னு?!' புலம்பல் கட்டுரை எழுதினா உங்க ஊருக்கே துரத்திடுவேன் என்கிறாள் கேண்டி. நெய்யில் மிதந்த அப்பத்திற்கு வடையின் வருத்தம் புரியுமா என்ன?!


"அன்பு கலக்காத ரொட்டி சுவைக்காது" என்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நிபந்தனையற்ற பேரன்பை கலக்குங்கள். இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

பணப் பிரச்சனை ('ப்' உண்டுதானே?!)

ஜே. கே. ரித்தீஷ். எத்தனையோ நடிகர்களைத் தந்திருக்கும் கோடம்பாக்கத்திற்கு ஒரு புதிய வரவு. விஜய டி. ராஜேந்தர் என்ற பெயரை தமிழ் ஊடகங்கள் எப்படி மிகவும் கேலிக்குறியதாக்கி இருக்கிறார்களோ அதைப்போலவே கேலிக்குறியப் பொருளாக்கப்பட்ட நாயகன்.

ஒரு சாமான்யனின் கதையான 'கானல் நீர்' என்ற கதையில் யதார்த்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவரை தமிழ் சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும், ஊடகங்களும் முற்றாகத் தவிர்த்தனர். அப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. பெரும் தோல்விகளுக்குப் பின் காணாமல் போய்விட்ட நடிகர்கள் எத்தனையோ பேரை கோடம்பாக்கம் கண்டிருக்கிறது. ஆனால் தன்னை ஒரு பராக்கிரமசாலியாக முன்னிறுத்தி பஞ்ச் டயலாக்குகளோடும் பாடல்களோடும் அதிரடி சண்டைக்காட்சிகளோடும் அவர் நடித்து வெளியான நாயகன் எனும் மசாலா படம் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு பூஜை போட்ட நாளிழிலிருந்தே ஜே. கே. ரித்தீஷ் மீதான மீடியாக்களின் கிண்டல் துவங்கி விட்டது. அவர் மவுண்ட் ரோட்டில் ஹோர்டிங் வைத்தது, எளியோர்க்கு உதவியது, நமக்கு நாமே மாமே மன்றங்கள் அமைத்தது, சினிமாத்துறையின் உள் விவகாரங்களில் தலையிட்டது, அவ்விவகாரத்தில் பாரதிராஜாவிடம் மன்னிப்புக் கேட்டது, மூக்கை அறுவைச் சிகிட்சை செய்தது என அவரது ஒவ்வொரு செய்கைகளும் கேலி செய்யப்பட்டது. அந்தப் பெயரைக் கேட்டாலே மக்கள் சிரிக்கும் அளவிற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அலைகள் வந்து அடித்துவிட்டுப் போகட்டுமே... பாறைகள் என்ன பதிலா சொல்கிறது என அவரும் பேசாதிருந்து விட்டார்.

சற்று அழகற்ற, மாநிறம் கொண்ட, கொஞ்சம் குள்ளமாக, பருத்த மூக்கு உடையவன் ஹீரோ ஆகக் கூடாது என்று இருக்கிறதா? அப்படியென்றால் அழகு, நல்ல உடற்கட்டு, சிவந்த நிறம், நடனம் ஆடும் திறன் இருப்பவன் மட்டும்தான் ஹீரோ ஆகவேண்டுமா. நிஜ வாழ்க்கையில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்கிறதா? அஜீத்தும் சூர்யாவும் ஏதாவது நலத்திட்டங்கள் செய்தால் புகழும் மீடியா, ஜே. கே. ரித்தீஷ்
யாருக்காவது உதவினால் மட்டும் 'ஸ்டண்ட்' , 'பப்ளிசிட்டி' என்று இகழ்வது ஏன்? த்ரிஷாவின் நற்பணி மன்றம் தலைப்புச் செய்தி ஆகிறது ஆனால் ஜே. கே. ரித்தீஷீக்கு ரசிகர் மன்றம் என்றால் ஏன் காமெடியாக்குகிறீர்கள்?

நடனம் ஆடத்தெரியாத பாக்கியராஜ் வெள்ளிவிழா நாயகன் ஆகவில்லையா? கரடு முரடானத் தோற்றம் கொண்ட ராஜ்கிரணின் வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் பணப்பெட்டிகளோடு தவம் கிடந்ததை இவர்கள் அறியாதவர்களா? எலும்புத் தோலுமான தனுஷ் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோவானது தெரியாதா? ஜே. கே. ரித்தீஷை ஊடகங்கள் விமர்சிப்பது கொடிய நுண்ணரசியல். நாம் தமிழர்கள். நமது பூர்வீக நிறமும் அடையாளமும் கொண்டவர் ஜே. கே. ரித்தீஷ். அவரைக் கேலி செய்வது மொத்த அழகற்றவர்களையும் கேலி செய்யும் நிற அரசியல். ஜே. கே. ரித்தீஷ் மீதானக் கேலியை அனுமதிப்பதும், அவைகளைப் படித்து நாம் சிரிப்பதும் நம்மை நாமே கேலி செய்வது போலத்தான். அழகானவன் தான் ஹீரோ என்றால் ஐரோப்பியனை அழைத்து வாருங்கள். நம் எல்லோரையும் விட அவர்கள்தான் சிகப்பு.
- பிரதியங்காரக மாசானமுத்து
வங்கி கணக்கு எண்: 000987654321 / ஐசிஐசிஐ வங்கி / ராம்நகர் கிளை

Friday, October 24, 2008

விரிப்போட்டார் தெரு

"அது என்னங்க 'விரிப்போட்டார் தெரு'ன்னு ஒரு தெரு. என்ன அர்த்தம்?!" என்றாள் கேண்டி. பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எப்பாடு பட்டாவது விடை கண்டுபிடித்துச் சொல்வது ஆண்வர்க்கத்தின் புராண காலப் பழக்கம் என்பதால் நானும் விடை தேடிப் புறப்பட்டேன்.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் தந்தை மாநாய்கன். கண்ணகியின் தந்தை மாசாத்துவான். மாநாய்கன் என்றால் திரைகடல் ஓடி திரவியம் தேடும் வணிகன். மாசாத்துவான் என்றால் தரைவழி வாணிகம் புரிபவன் என்று பொருள். இவர்கள் வாணியச் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே வரலாற்று ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாத்தான்குளத்தில் வாணிய செட்டியார் என்றழைக்கப்படும் செட்டிமார்களின் குடும்பங்கள் சுமார் 3000 இருந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் இன்றளவும் செக்கடி, செக்கடி புதுத்தெரு, செட்டியார் நடுத்தெரு, அருணாசலம் செட்டியார் காம்பவுண்டு, செட்டியார் மேலத் தெரு, செட்டியார் கீழத்தெரு, ஆறுமுகம் செட்டியார் காம்பவுண்டு போன்ற பலத் தெருக்கள் இருக்கின்றன.
செட்டியார்களின் குலத்தொழில் வணிகம். சாத்தான்குளத்துச் செட்டிமார்களும் கடல் மற்றும் தரை வழி வணிகத்தில் கோலோச்சி இருந்திருக்கின்றனர். தரைவழி வணிகம் புரிபவர்கள் வியாபாரத்திற்காகப் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குச் செல்கையில் பொதிமாடுகளைப் பயன்படுத்தி உள்ளனர். அப்படிப் பயன்படுத்தும் பொதிமாடுகளின் முதுகில் பொருட்களின் சுமை அழுத்தாமல் இருக்க 'விரி' என்ற அழைக்கப்படும் மெல்லிய மெத்தைப் போன்ற விரிப்புகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த விரியை பெருமளவில் உற்பத்தி செய்பவர்கள் இருந்து வந்த தெருவே விரிப்போட்டார் தெரு என்றழைக்கப்பட்டு வந்துள்ளது. என்று அவளுக்கு விளக்கி முடித்தேன். 'ஏன்யா ஒரு பேச்சுக்கு கேட்டா இப்படியாய்யா சிலப்பதிகாரம், சீவசிந்தாமணின்னு மொக்கய போடுவ' என்றாள் கேண்டி.

Wednesday, October 22, 2008

பிஞ்சு

கண்காட்சிகள், டிரேடு ஃபேர்கள், புத்தகத் திருவிழாக்களில் ஸ்டால்களில் அமர்வது எனக்கு மிகவும் பிடித்தமானது. விற்பனை ஆகிறதோ இல்லையோ விதம் விதமான மனிதர்களை சந்திக்க உதவுகிற ஒரு வாய்ப்பாக அது இருக்கிறது. இந்த முறை புத்தகக்கண்காட்சி ஸ்டாலில் இருந்தபோது சுமார் ஏழு வயது குழந்தையொன்று "அங்கிள் யூ நோ... ஐயாம் எ பொயட்" என்றது. விழிகள் விரிய 'ஏங்கே நீ எழுதிய கவிதைகளில் ஒன்றை எழுது பார்க்கலாம்' என்றேன்.
There was a boy
Who was very coy
When he got a toy
He was filled with joy
என நான்கு வரி கவிதையை ஒரு நோட்டீஸின் பின்பக்கம் எழுதி வைத்துவிட்டு ஓடி மறைந்து விட்டது அக்குழந்தை. எளிய அந்தக் கவிதையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். நேரடியாகப் பொருள் கொள்ள முடிந்து விடுகிற அந்த நான்கு வரிகள் தனிமையான சிறுவனின் பொம்மை கிடைத்த சந்தோஷத்தைத் தவிரவும் வேறொன்றையும் உணர்த்துவதாகத்தான் பட்டது எனக்கு. எளிமைதான் கவிதையின் மொழி. வார்த்தைச் சிக்கனமும், ஓசை நயமும் கொண்ட இந்த நான்கு வரிக்கவிதை என்னை மாதிரி லூஸூப்பயலால் வேறொரு பொருள் கொள்ளப்பட்டு சிலாகிக்கப்படும் என்று அக்குழந்தை நினைத்து இருக்காதுதான். ஆனால் இவள் பிற்காலத்தில் சரோஜினி நாயுடுவின் 'Fate' ஐ விஞ்சும் கவிதைகளை இவள் எழுதுவாள் என்று எனக்கு தோன்றுகிறது.

புதிய விவாதங்கள்

இந்தியாவில் பன்னெடுங்காலமாக கொழுந்து விட்டு எரியும் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியர்களாக நம்முடைய நிலைப்பாடு "காஷ்மீர் நமது" என்பதே மொத்த தேசத்தின் குரலாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் எந்த ஒரு வெளிநாட்டின் தலையீட்டையும் நாம் விரும்புவதில்லை. அனுமதிக்கப் போவதும் இல்லை. இந்நிலையில் பிற நாட்டின் அதிலும் குறிப்பாக அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் நாம் மூக்கை நுழைப்பது சரிதானா? ஒரு நாட்டில் உள்நாட்டுப்போர் நிகழ்கையில் நாம் குறுக்கீடு செய்வது வெளியுறவுக் கொள்கைகளுக்கு முரணானது அல்லவா? தவிரவும் இந்திய இறையாண்மை என்பது தனி நாடு கோரிக்கையை கடுகளவும் ஏற்றுக்கொள்வதில்லையே? மேலும் விடுதலைப்புலிகள் எனும் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என உலக நாடுகள் பலவற்றாலும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆயிற்றே? இவையெல்லாவற்றையும் விட அவர்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரை மிகச் சாதாரணமாக கொலை செய்தவர்கள் ஆயிற்றே? அவ்வரசியல் படுகொலையின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதே என்பதெல்லாம் என்னுடைய அறிவு ஜீவி நண்பர்களின் கேள்வியாக இருக்கிறது.

அவர்களுக்கான எனது பதில்,

“உண்மை எப்போதும் இரண்டு பக்கமும் இருக்கிறது. புலிகளின் போராட்டமும் தாக்குதலும் முற்றிலும் அறத்தின் பின் செல்கிறது என்று சொல்லிவிட முடியாது என்ற போதும் துப்பாக்கி முனையில் சமாதானம் என்பது சாத்தியமில்லாதது. மேலும் சமாதானத்தின் பின் சென்று புலிகளின் தரப்பு பலமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதும் வரலாற்று உண்மை. புலிகளின் இந்தப் போரை சர்வதேச சமூகம் பயங்கர வாதம் என்கிறது ஆனால், தன் சொந்த குடிமக்களின் மீது குண்டு வீசிக் கொல்கின்ற ஒரு அரசை என்னவென்று சொல்வது? இலங்கையில் நிகழும் இந்த போரையும் அதனால் வாழ்வுரிமையை இழந்து விட்டு தவிக்கும் அகதிகளையும் நாம் நிராதரவாக விட்டு விட முடியாது. எங்கோ நிகழும் இயற்கை சீற்றங்களுக்காகவும், குண்டு வெடிப்பு பலிகளுக்காகவும் பதறுகிற இந்திய மனோபாவம் ஸ்ரீலங்கா விஷயத்தில் இப்படி மெளனம் காப்பது புரியவில்லை.

தவிரவும் மின் தட்டுப்பாடு, பங்குச் சந்தை வீழ்ச்சி, வீட்டுக்கடன் வட்டி வீதம், நாக்க மூக்க நாராசம் காணக்கிடைக்கவில்லை, இலவச கலர் டி.வி போன்ற கவலைகளில் ஆழ்ந்திருக்கும் நமக்கு போரும் அது தரும் வலியும் புரிந்திருக்க நியாயம் இல்லை. சகல சுதந்திரங்களும், சவுகர்யங்களும் நிறைந்துவிட்ட வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு நாம் கற்றுவைத்திருக்கும் விஷயக் குப்பைகளின் உதவியோடு அறிவு ஜீவித்தனமாக ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். உறவுகளை இழந்து, உடல் உறுப்புகளை இழந்து, வீடிழந்து, உணவும் மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் எஞ்சியிருக்கும் ஓரே சொத்தான உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பவர்களின் வலியை உங்களுக்குப் புரிய வைக்க வழியில்லை” என்பதாகத்தான் இருக்கிறது.

அறையில் தினமும் ஈழம் குறித்த விவாதங்கள் நள்ளிரவு வரை நீள்கிறது. இதுவே ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகத்தான் படுகிறது.

Tuesday, October 21, 2008

ஒரு மோசமான எழுத்தாளனின் பத்து அடையாளங்கள்

1. தான் கடைசியாக எழுதியது என்னவோ அதுவே தன் வாழ்நாளின் “மாஸ்டர் பீஸ்” என்று சொல்லிக்கொள்வார்கள்.

2. பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் சந்தனத்துல என்னோட கட்டுரை வந்துருக்கு, தூர மலர்ல என்னோட கதை வந்திருக்கு, யோக்யாவில என்னோட தொடர் வரப்போவுது எனப் பெருங்குரலில் பேசி கலவரமூட்டுவார்கள்.

3. வட்டார மொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று எந்த வட்டாரத்திலும் இல்லாத ஒரு மொழியில் எழுதுவார்கள்.

4. எப்போதும் ஏதாவது ஒரு பிரசுரத்தின் பெயரைச் சொல்லி அதற்காக ஒரு நூலை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்வார்கள்.

5. ஒவ்வொரு பத்திரிகையின் தன்மைக்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு எழுதுவார்கள்.

6. என்பதுகளில் காலாவதியாகிப் போய்விட்ட உத்திகளையும் நாடகத்தனமான உரையாடல்களையும் எழுதி விட்டு அதன்படியே எழுதி ரெமுனரேஷன் வாங்கும்படி சக எழுத்தானுக்கு யோசனை சொல்வார்கள்.

7. கதை ஏதேனும் வார இதழ்களில் வர இருப்பதாகத் தெரிந்துவிட்டால் போஸ்ட்கார்டில் துவங்கி, எஸ்.எம்.எஸ், இமெயில், ஸ்க்ராப் என சகல வழிகளிலும் அதை மொத்த ஜனத்தொகைக்கும் தெரியப் ‘படுத்து’ வார்கள்.

8. நண்பர்களின் வஞ்சகப் புகழ்ச்சியை உண்மையென்று நம்பித் தொலைப்பார்கள்.

9. கதைகளிலும், சிந்தனையிலும் செய்ய வேண்டிய மாற்றத்தை தலைமுடியிலும், மோவாய்க்கட்டையிலும் அடிக்கடி மேற்கொண்டு கலவரப்படுத்துவார்கள்.

10. வாசிப்பதைக் காட்டிலும் சுமார் நூறு மடங்கு அதிகமாக எழுதிக் குவிப்பார்கள் (யாரும் வாசிக்கத் தயாராக இல்லாத போதும்)

டிஸ்கி: ஒரு உரசு உரசி நாளாச்சுல்ல... அதாங்...

மழை நாள்


விடாது பெய்து கொண்டிருந்தது மழை. அவரமாய் குளத்துப்பாளையம் சென்றாக வேண்டும். ஜெர்கினையும் தொப்பியையும் எடுத்துக்கொண்டு பைக்கில் கிளம்பினேன். சாலை எங்கும் பெரு வெள்ளம். ஒவ்வொரு சப்வேயிலும் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. மின்சாரம் வேறு இல்லாததால் கும்மிருட்டு. குண்டு எது குழி எது தெரியாமல் அங்கங்கே கார்களும், பைக்குகளும் பள்ளங்களில் சிக்கி இருந்தது. மாநகராட்சியை சபித்துக்கொண்டே எனக்குத் தெரிந்த சந்து பொந்துகளுக்குள் நுழைந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலையை அடைந்தேன்.

சாலையில் வேறு எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லை. பாலக்காடு செல்லும் ஒரிரு லாரிகளும் சேற்றை என் மீது வாரியடித்து விரைந்து கொண்டிருந்தது. இத்தனைச் சிரமத்தில் இந்தப்பயணம் அவசியமா என யோசித்துக்கொண்டிருந்த விநாடியில் அந்தப் பெண்ணைக் கண்டேன். ஆத்துப்பாலத்திற்கும் குனியமுத்துருக்கும் இடைப்பட்ட சாலையில் மழையில் நனைந்தபடி நடந்து கொண்டிருந்தாள். சுடிதார் ஷாலை தலைமீது முக்காட்டைப் போல் அணிந்திருந்தாள். வண்டியின் வேகம் குறைத்து அவளது முகத்தைப் பார்த்தேன். அழகிய முகம். பதினெட்டு வயது இருக்கலாம். கையில் புத்தாடைகள் வாங்கிய ஜவுளிக்கடை பை. ஏன் இந்த நடு ரோட்டில் நடு ராத்திரியில் அல்லாடுகிறாள்? என நினைத்தபடி கடந்தேன். சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். அவளது மருண்ட விழிகள் மனதை ஏதோ செய்ய, வண்டியைத் திருப்பி அவளை அணுகினேன். என்னைக் கண்டதும் இன்னும் பயம் கொண்டாள்.

"என்னங்க இது இந்த மழையில நனைஞ்சுகிட்டு இருக்கீங்க...?"

பதிலில்லை.

"பயப்படாதீங்க... இந்த ராத்திரில இப்படி நனையுறீங்களேன்னு மனசு கேட்காமத்தான் திரும்பி வந்தேன்... சொல்லுங்க..."

என் வார்த்தைகளும், என் வாகனத்தில் ஒட்டியிருந்த கம்பெனி ஸ்டிக்கரும் அவளுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். தன் பவளவாய் திறந்து " கோவைப்புதூர் போகனும்... பஸ்ஸோ, ஆட்டோவோ வருமான்னு காத்திருந்தேன். எதுவும் வரலை. அதான் நடந்து போலாம்னுட்டு..."

"அடக்கடவுளே இந்தப் பேய் மழையில் எந்த ஆட்டோங்க வரும்? வண்டில ஏறுங்க நான் குளத்துப்பாளையம்தான் போறேன். கோவைப்புதூர்ல உங்களை இறக்கி விட்டுர்றேன்..."

"இல்லைங்க... பரவால்ல... வேண்டாம் நான் ஏதாவது ஆட்டோ வருதான்னு பாத்துக்கறேங்க"

" ஹய்யோ பயப்படாதீங்க...இனிமே வண்டி வந்து நீங்க போய்ச் சேரவா? ச்சும்மா ஏறுங்க"

பெரும் தயக்கத்துக்குப் பின் வண்டியில் ஏறினாள். மழை தன் உச்சத்தை அடையும் வெறியோடு அடித்து ஆடிக்கொண்டிருந்தது. அவளது உடல் குளிரில் நடுங்குவதை உணர முடிந்தது. என்னிடம் இருந்த தொப்பியை அவளிடம் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னேன். அவளது பயத்தைப் போக்க அவளிடம் பேச்சுக்கொடுத்தேன்.

"என்னங்க இந்த ராத்திரில தனியா?"

"ஹாஸ்டல்ல இன்னிக்குத்தான் பெர்மிஷன் கொடுத்தாங்கன்னு தீபாவளிக்கு பர்சேஸ் பண்ண வந்தேன். பஸ்ஸூல திரும்பறப்போ இருட்டுல ஸ்டாப்பிங் தெரியாம நாலு ஸ்டாப் முன்னமே இறங்கிட்டேன். அப்புறம் பஸ்ஸே வரல. மொபைல் வேற சார்ஜ் இல்லாம சுவிட்ஜ் ஆஃப்"

"எந்த காலேஜ்?"

"சிபிஎம்"

"அட! அங்கதான் என் சித்திப்பொண்ணு படிக்கிறா..."

"எந்த டிபார்ட்மெண்ட்லங்க?"

"ஸ்டேட்டிஸ்டிக் - பைனல் இயர்"

"பேருங்க?"

"சுதா"

"ஓ"

நான் போக வேண்டிய குளத்துப்பாளையம் வந்தது. "நான் இங்கயே இறங்கி நடந்துப் போய்க்கறேங்க" என்றாள் அவள். அவளது ஹாஸ்டல் குளத்துப்பாளையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவு என்பதை நானறிவேன்.

"பரவாயில்லை நான் உங்களை ஹாஸ்டல்லயே விட்டுர்றேன்"

"வேணாங்க உங்களுக்கு ஏன் வீண் சிரமம்... இவ்வளவு தூரம் வந்ததே பெருசு... நான் நடந்து போய்க்கிறேங்க..."

"அட என்னங்க நீங்க பிக்காளித்தனமா பேசிகிட்டு... மூணு கிலோ மீட்டர் சல்பி மேட்டருங்க... "என்றேன். அவள் சிரித்தாள்.

அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு அவளது நன்றிகளைப் பெற்றுக்கொண்டு குளத்துப்பாளையம் திரும்ப மணி பன்னிரெண்டு ஆகிவிட்டது. நான் உறங்கச் சென்றேன்.

Monday, October 13, 2008

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த உலகில் பணம்தான் இறையாண்மையும், கர்வமும் மிக்கதாக இருப்பது புரியவருகிறது. அதனிடத்தில் பக்தியும், பயமும், மரியாதையும், அன்பும் அக்கறையும் கொண்டவர்களிடத்தே மட்டுமே அது இருக்க விரும்புகிறது. அபிப்ராயத்திற்காகவும், அன்பிற்காகவும், கவுரவத்திற்காகவும் தன்னைப் பிரயோகிப்பவர்களிடத்தில் ஒரு போதும் இருக்க விரும்புவதில்லை. பணத்தைக் கையாள்வது அன்பிலாப் பெண்ணுடன் வாழ்வதைக் காட்டிலும் சிரமமானதாக இருக்கிறது.

எதிர்படும் எவரையாவது நிறுத்தி “நில்லுங்கள்... உங்கள் பையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்? சரியாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றால் எவரிடமும் பதில் இல்லை. தன் பையில் / பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவு கூடத் தெரியாத அளவிற்கு திரியும் பழக்கம் வந்துவிட்டது நமக்கு.

தினமும் இன்றைய செலவிற்கென்று குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்வதும் அன்றைய நாளின் முடிவில் எவ்வளவு செலவு செய்தோம் என்ற கணக்கினைப் பார்ப்பதும் வழக்கொழிந்து விட்டது. ஒரு ஐஸ்க்ரீமையோ, தந்தூரி சிக்கனையோ, பத்திரிகையையோ வாங்குகையில் அதன் மதிப்பிற்கு உகந்த பணத்தைத்தான் செலவழிக்கிறோமா என்ற பிரக்ஞையின்றி விசிறி அடிக்கிறோம்.

கடந்த மாதத்தில் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி தினசரி ஆகும் செலவுகளைக் குறித்துக்கொண்டே வந்ததில் நான் எத்தனைப் பெரிய ஊதாரி என்பது புரிய வந்தது. மேன்ஷனில் வாழும் திருமணமாகாத இளைஞனாகிய நான் ஒரு நாளைக்கு ரூ.562/- என்ற வீதத்தில் செலவு செய்திருக்கிறேன்.

உணவு
4062.00
பெட்ரோல்
1290.00
சினிமா (டிக்கெட் செலவு மட்டும்)
437.00
திருமணம் மற்றும் பரிசு பொருட்கள்
220.00
அலுவல் நிமித்தம் நிகழ்ந்த செலவு
400.00
காஸ்மெடிக்ஸ், முடி திருத்தல், துணி துவைத்தல்
737.00
இணையம்
165.00
கல்விச் செலவு
950.00
ஊருக்கு அனுப்பிய தொகை
5000.00
கடன் கொடுத்தது
700.00
செல்போன் பில்
750.00
இதழ்கள்
10.00
புதிய ஆடைகள்
680.00
அறை வாடகை மற்றும் மின்சாரம்
1150.00
இதர
300.00
செப்டம்பர் மாத மொத்தச் செலவு
16851.00
“எழுதிப் பார்க்காதவன் கணக்கு அழுதுப் பார்த்தாலும் தீராது” என்று அப்பா அடிக்கடி சொல்வார். அது எத்தனை உண்மை என்பது ஒரு மாத கணக்கை எழுதிப் பார்த்ததிலேயே புரிந்து விட்டது. புத்தியோடு பிழைக்கலாம் என்றிருக்கிறேன்.

Sunday, October 12, 2008

தமிழன் என்றொர் இனமுண்டு

*நேற்றிரவு வழக்கமாக சாப்பிடச் செல்லும் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். இட்லிக்கு தொட்டுக்கொள்ள ‘சப்ஜி’ கொடுத்தார்கள். சட்னி, சாம்பார் இல்லை. என்னவென்று விசாரித்தால் காலையிலிருந்து கரண்ட் இல்லையாம். ஏற்கனவே அரைத்த சட்னி புளித்துவிட்டது. சப்பாத்திக்கு ஏற்பாடு செய்த சப்ஜிதான் இருக்கிறது என்று பதில் வருகிறது.

*அடிக்கடி கரண்ட் போய்விடுகிறதென்பதால் மெழுகுவர்த்தி வாங்கி வைக்கலாமென ராம்நகர் முழுக்க சுற்றியும் மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை. சப்ளை இல்லையாம். மூலப்பொருளான மெழுகின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால் இரண்டு ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்தியின் தற்போதைய விலை ரூ.10/-. பாரதீய ஜனதா கட்சி நடத்திய மெழுகுவர்த்தி வழங்கும் போராட்டத்தில் மெழுகுவர்த்தி வாங்க பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவை செய்தியில் காட்டினார்கள்

*கோவையில் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சப்ளை செய்யாததால், ஆர்டர் கொடுத்திருந்த வெளிநாட்டு நிறுவனம் ரூ.40/- கோடியை அபராதமாக விதித்திருக்கிறது.

*கடந்த ஆண்டு 24% சதவீதம் வரை போனஸ் வழங்கிய பல திருப்பூர் பனியன் கம்பெனிகள் இந்தமுறை தங்களால் 12% சதவீதம்தான் போனஸ் வழங்க முடியும் என அறிவித்திருக்கின்றன. மின்வெட்டினால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு தென்மாவட்டங்களில் இருந்து பிழைக்க வந்த பலரும் ஊர் திரும்பி விட்டனர்.

*அதிகாலை மூன்று மணிக்கே எழும்பியாக வேண்டிய நிலையில் இருக்கும் பால், பத்திரிகை தொழில்களை செய்துவருபவர்களும் இரவுகளில் சரியாக தூங்க முடியாததால் பகலில் தலைசுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள்.

*தங்களது 'புராஜக்டுகளை' செய்து முடிக்க கம்ப்யூட்டர் வாங்குமளவிற்கு வசதி இல்லாத கல்லூரி மாணவர்கள் பலர் புரவுசிங் செண்டர்களையும் பயன்படுத்த முடியாமல் அல்லாடுகிறார்கள்.

ஆனால் இந்தப்பிரச்சனைகளுக்கெல்லாம் ஆற்காடு வீராச்சாமியைக் குறை சொல்வதில் கொஞ்சமும் நியாயம் இருப்பதாகப் படவில்லை. இந்த வயதிலும் பிரச்சனைகளுக்குரிய மூன்று பெரிய துறைகளுக்கு அமைச்சராக அவர் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி குடும்ப உள்விவகாரத் துறை, மாறன் பிரதர்ஸ் கருவறுப்புத் துறை, போன்றவற்றோடு மின்சார இலாக்காவையும் பார்த்துக்கொள்வது என்பது சாதாரண விஷயமல்லவே...

பிற மாநிலங்களில் நிலை என்ன என்று முறையே பெங்களூர், பாலக்காடு, ஹைதரபாத், நொய்டா, கல்கத்தா நகரங்களில் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்தால் பாலக்காட்டில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கிறதாம். அங்கெல்லாம் மின்சாரத்துறை மந்திரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவில்லை போலும்.

இது தொடர்பாக எனக்குத் தெரிந்த மின்சார வாரிய உயரதிகாரி ஒருவரிடம் " இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு?" எனக் கேட்டேன்.

"ஒரு ஆறு மாசத்துக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கத்தாம்பா செய்யும்"

"அப்புறம்.... சரியாயிடுமா?!"

"இல்ல... உங்களுக்குப் பழகிடும்..."

Monday, September 22, 2008

ஒரு டெயில் பீஸ்...!

நண்பர் ரிஷான், ரமேஷ் வைத்யாவின் நகைச்சுவை உணர்வைக் குறிப்பிட்டிருந்தார் அதற்கு ஒரு டெயில் பீஸ்....

தெருவில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தோம். ஒரு நாய் அவரைப் பார்த்து விடாமல் குலைத்துக்கொண்டே இருந்தது. அவர் சொன்னார் "உலகின் மிகப் பெரிய எலும்புத் துண்டைப் பார்த்த சந்தோஷம் அதற்கு..."

சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸு

ஊரில் பிரபாகர் என்றொரு நண்பன் இருக்கிறான். இளமைக்காலத்தில் ஆண்டுக்கு தலா மூன்று காதல்கள் என்ற விகிதாச்சாரத்தில் காதலித்து வந்தான். மாறன் அம்புகள் மாறி மாறி அவன் மீது பொழிந்து வந்தாலும் விதி வித்தியாசமாய் விளையாடியது. பிரபாகர் யாரைக் காதலித்தாலும் அந்தப் பெண்ணிற்கு உடனே வேறு இடத்தில் திருமணம் ஆகிவிடும்.

பொத்தக்காலன்விளையில் "திருமண வரம் தரும் ஆரோக்கியமாதா ஆலயம்" இருக்கிறது. திருவிழா நாட்களில் கன்னிப்பெண்கள் பிரார்த்தனைக்கு உடனடி பலன் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்றொரு ஐதீகத்தால் மாதாக் கோவில் எங்கள் ஏரியா முழுக்க பிரபலம். அதனால் பிரபாகரனையும் நண்பர்கள் ஆரோக்கியமாதா என்று கேலி செய்வது வழக்கம்.

ராமன் தேடிய சீதை படத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். திருமணத்திற்கு பெண் தேடுகிறார் சேரன். தனக்கு பார்க்கும் முதல் பெண்ணிடம் தான் சிறுவயதில் கொஞ்சம் புத்தி பேதலித்து சிகிட்சை எடுத்துக்கொண்டதைக் கூற அவரை மணக்க மறுக்கிறார் அப்பெண். இரண்டாவது பெண் திருமணத்திற்கு முன்னிரவில் காதலித்தவனோடு உடன் போதல் செய்கிறாள். இதனால் மனம் தளர்ந்த சேரனுக்கு கண் பார்வையில்லாத ரேடியோ ஜாக்கி நெடுமாறன் (பசுபதி) மற்றும் அவரது மனைவி (கஜாலா) யின் நட்பு கிடைக்கிறது. நெடுமாறனின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்களாலும், உதாரண வாழ்கை முறையிலும் வாழ்வின் மீதான நம்பிக்கை பிறக்கிறது சேரனுக்கு. மூன்றாவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் தன்னை மணக்க மறுத்த முதல் பெண்ணையும், வறுமையின் பிடியில் இருக்கும் ஓடிப்போனப் பெண்ணையும் பார்க்கிறார். அவர்களுக்கு உதவுகிறார். மூன்றாவது பெண்ணின் மீதான காதலில் திருட்டுத் தொழிலை விட்டு விட்டு காதலிக்கும் உள்ளூர் ஆட்டோக்காரரின் கதையைக் கேட்டு அப்பெண்ணை அழைத்து புத்திமதி சொல்கிறார். நெடுமாறன் சொன்ன தகவலில் போலீஸ்காரரான நான்காவது பெண்ணைப் பார்க்கப்போன இடத்தில் போராட்டாக் காரரென தவறாகப் புரியப்பட்டு அப்பெண்ணின் கையாலே அடிபட்டுத் திரும்புகிறார். பின் முதலில் பார்த்த பெண்ணையே மணக்கிறார். இருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்கிறேன். வாசிக்கும்போது தலை சுற்றுகிறதென்றால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டுத் தொடருங்கள். எத்தா பெரிய எழுத்தாளனென்றால் கூட சுவாரஸ்யப்படுத்தி விடவே முடியாத கேவலத் திரைக்கதை. கூடிய மட்டும் குழப்பாமல் எழுதுவதற்குள் பக்கவாதமே வந்தது போல் இருக்கிறது.

மூன்று நிமிடங்களுக்கு ஒரு விளம்பர இடைவெளி விட்டு எடுத்திருந்தால் சுமார் ஓரு வருட காலம் வெற்றிகரமாக ஓட முடிகிற அருமையான சின்னத்திரை வஸ்துவை சினிமாவாக எடுத்து சீரழித்து விட்டார்கள். ஒரு கதைக்குள் உப கதை. உப கதைக்குள் உப உப கதை என ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் வைத்து படம் பார்க்க வந்தவர்களை படுத்தி எடுத்தார்கள். யதார்த்த நாயகன் சேரனைப் பார்க்கும் போது பரிதாபம் வருவதற்குப் பதிலாக எரிச்சலே மிஞ்சுகிறது. தனது இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் யதார்த்த நடிப்பை உறிஞ்சி எடுக்கும் அற்புத இயக்குனர், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்கிற ரீதியில் நிமிடத்திற்கு நிமிடம் கேட்கிறார். ஆட்டோ கிராஃபிற்கு வாங்கியக் கண்ணாடியைக் கழட்ட சாருக்கு இன்னும் மனசு வரலை. எனக்கு மட்டும்தான் எரிச்சலோ என நினைத்தால், சேரன் அடிவாங்கும் க்ளைமாக்ஸில் பக்கத்து சீட் மாமா "இன்னும் ரெண்டு அடி சேத்து போடும்மா...சனியன் என்னமா அறுத்தான்..." என்கிறார்.

"வேண்டா வெறுப்புக்கு புள்ளய பெத்து காண்டாமிருகம்னு பேரு வச்சானாம்"னு நம்ம எம்.எஸ். பாஸ்கர் சொல்வாரே அதே மாதிரி மலச்சிக்கல்ல இருக்கும்போது கம்போஸ் பண்ண மாதிரி பாடல்கள். எழவு வீட்டை ஞாபகப்படுத்தற மாதிரி பின்னணி இசை. கண் பார்வையற்ற நெடுமாறனாகப் பிரமாதப் 'படுத்தி' எடுத்திருக்கிறார் பசுபதி. தன்னம்பிக்கை ஊட்டுகிறேன் பேர்வழி எனப் பக்கம் பக்கமாக டயலாக் பேசும்போது அவர் உண்மையிலே நெடு, நெடு மாறன். முடியல...

க்ளைமாக்ஸ் நெருங்குவதை ஊகித்து எனது தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த கேண்டியை எழுப்பினேன். விழித்தவள் சேரன் அடிவாங்கும் காட்சியில் அவரது கண்ணாடி உடைந்ததை "ஐய்யய்யோ... அந்தக் கண்ணாடி இல்லன்னா.... சேரனின் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுடுமே..." என உச்சுக் கொட்டினாள். நல்ல வேளை சேரன் இங்கிலீஷில் பேசும் காட்சிகளில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். ப்ளாக் போட்டா "சேரன் அண்ட் ஹிஸ் ஓல்டு ஸ்பெக்ஸுன்னு" தலைப்பு வைப்பா... ப்ளீஸ்..." என்ற அவளது கோரிக்கை இங்கே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சேரனுக்கும், ஜெகன்நாத்தும் தங்களது பலம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் இயங்க வேண்டிய களமே வேறு. கலைஞர் டிவியில் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

Wednesday, September 17, 2008

WEEK END WITH CANDY

வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.

நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும் ரியல் எஸ்டேட் முதலைகளை அவர்களது பாணியிலேயே பித்தலாட்டம் செய்து இழந்த பணத்தை மீட்கும் சாமான்யர்களின் கதை. துவக்கம் முதல் முடிவு வரை இயல்பை மீறாத, யதார்த்தமான படம். அதே சமயத்தில் ரம்பம் போடாமால், கதறி கண்ணீர் வடிக்காமல் இதமான நகைச்சுவையோடு கலந்து கொடுத்திருப்பதில் இயக்குனரின் திறன் வெளிப்படுகிறது. நிலத்தின் பெயரால் நிகழும் மோசடிகளில் ஒன்றிரண்டின் மர்ம மூடிச்சுகளை அவிழ்க்கிற முயற்சியாகவும், நிலம் வாங்கத் துடிக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும் "ஸ்டார் இமேஜ், கதறடிக்கும் சண்டைக்காட்சிகள், இல்லாத காரணத்தினால் இப்படம் ஓடாமல் போய்விடக் கூடாதே" என்ற பதற்றம் வந்து கொண்டே இருக்கிறது.

திரைப்படத்தின் ஓட்டத்தைத் தடுக்கும் முழு நீள பாடல்கள் இல்லை. மாறாக கதையை நகர்த்தும் சிறிய சிறிய ஜிங்கிள்ஸ் போன்ற பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். அன்றலர்ந்த மலர் போல அழகான ஹீரோயின். உருட்டு விழிகளும், துடிக்கும் உதடுகளும், சுருண்ட முடிகளோடும் யார் மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி முகம். நிறைய டிவி விளம்பரங்களில் பார்த்த ஞாபகம். ராம்நகரில் அவருக்கொரு ரசிகர் மன்றம் திறந்தாகி விட்டது.

பேபியாக வரும் நாசரைக் கண்டால் பயமாக இருக்கிறது. படத்தில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக வரும் மெளலி நகைச்சுவை நடிப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். படத்தின் அத்தனைப் பாத்திரங்களும் இயல்பாக நடித்திருப்பதாலும், அருமையான திரைக்கதையாலும் விஜயிடமிருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்பட்டிருக்கிறது. படம் துவக்கம் முதல் முடியும் வரை கேண்டி யாதொரு கிண்டலும் செய்யாமல் அவ்வப்போது 'கடவுளே' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். இதை விட வேறு என்ன வேண்டும் இந்தப் படத்தைப் புகழ?!
***
தஞ்சை ப்ரகாஷின் ஒரிரு கதைகளைப் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த கட்டுரையாளரும் கூட என்ற அறிமுகத்தோடு காவ்யா சண்முக சுந்தரம் தொகுத்திருந்த 'தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்' நூலை ஓரே மூச்சில் வாசித்து முடித்தேன். எதுமாதிரியும் இல்லாத ஒரு காட்டாற்று நடையில் கோபமும், கேலியும், கவலையும் முண்டியடிக்கும் எழுத்து நடை. பெரும்பாலும் தமிழின் எழுத்து ஜாம்பவான்களான க.நா.சு, வல்லிக்கண்ணன், கரிச்சான் குஞ்சு, பிரமிள், நகுலன், ந. பிச்சமூர்த்தி, ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மெளனி போன்றவர்களின் இலக்கிய ஆளுமை குறித்தும், அவர்களுடான இவரது நட்பு குறித்தும், தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொருவரது பங்களிப்பு குறித்தும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாதது குறித்தும், எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்க்கை நம்பிக்கையற்றதாய் வறண்டு இருப்பதும் குறித்தான கட்டுரைகள்.

நாம் பார்த்தறியாத மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்தில் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆயிரக்கணக்கான ஆச்சர்யமூட்டும் தகவல்களைப் போகிறப் போக்கில் சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். எழுத்து என்னை மிரட்டமுடியாது, எழுதுகிற பிழைப்பு, பாலம் என்றொரு சிற்றிதழ் ஆகிய கட்டுரைகள் ஒரெழுத்துக் குறையாமல் இன்றைக்கும் அப்படியே பொருந்திப்போவது தமிழ் எழுத்துலகின் அவலம்.

எழுத்தைத் தொழிலாக கொண்டவர்கள் பட்ட, படும் துயரங்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறார் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழைத் துவங்கி அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்மல்ல. இன்றும் கூட சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் புலம் பெயர்ந்துவிட்ட எழுத்தாளர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. தமிழ் வாழ தமிழிலக்கியம் வாழ எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற அற்புத எழுத்தாளர்கள் வாழ்க்கைத் தேடலுக்காக ஒரு வேலையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு அழுகை வருகிறதோ இல்லையோ தமிழுக்கு அழுகை வரும். வாழும் காலத்தில் கவுரவிக்கப்பட்ட எழுத்துக் கலைஞன் எவனும் தமிழ் நாட்டில் இல்லை. செம்மொழி ஆவது இருக்கட்டும். அதற்கு செழுமை சேர்ப்பவர்கள் செல்லரித்துக் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் வாழ்க்கைச் செலவுகளை அரசாங்கமே ஏற்று நடத்துவதும், எழுத்திற்கான ஊதியம் சரியாகக் கிடைப்பதும், விருதுகளும் அங்கீகாரமும் தகுதியானவர்களுக்கு செல்வதும்தான் தமிழைப் பிழைக்க வைக்கும். இல்லாவிட்டால் என்னைப் போன்ற கள்ள எழுத்தாளர்களின் கேண்டிக் கதைகள் மட்டும்தான் மிஞ்சி இருக்கும்.

***
உமா ஷக்தி தன்னுடைய சிறுகதை கல்கியில் (21/09/08) வந்திருக்கிறது. படித்துவிட்டு கருத்து சொல் என்றார். உமாவின் கதைகள் மெல்லியல்புகளைக் கொண்டது. எந்த அசாதாரணத்தையும் எதிர்பார்க்க இயலாத எழுத்து நடை. ஒரிரு கதைகளை எழுதிய சக எழுத்தாளன் என்ற முறையில் என்னிடம் அபிப்ராயம் கேட்டதைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடாதுதான் என்றாலும் எழுத எதுவும் கிடைக்காத ஒரு பதிவன் வேறு என்னதான் செய்ய முடியும்?!

சுய சிந்தனையும் இலக்கியத் தாகமும் கொண்ட ஒரு மணமுறிவு கொண்ட பெண். அதே போன்ற ஒத்த சிந்தனையும் உயர்ந்த ரசனையும் கொண்ட ஒருவனின் நட்பு அவளுக்கு வசந்தத்தின் வாசலைத் திறக்கிறது என்றபோதும் திருமணம் என்ற அமைப்பு எதிர்பார்ப்புகளைக் கட்டமைக்கும் அபாயம் இருப்பதால் அவனது காதலை நிராகரித்து நண்பனாகவே ஏற்றுக்கொள்ளும் 95களின் கதை. எளிமையான கதை சொல்லும் மொழி உமாவினுடையது என்பதால் அலுக்காமல் ஐந்தே கால் நிமிடத்தில் படித்து முடிக்க முடிகிறது. சட்டெனத் தோன்றிய ஒரிரு கமெண்டுகளை உடனே அழைத்து சொல்லி விட்டேன். உ.ம்:

"இமெயிலில் தமிழில் எப்படி எழுதுவது என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்." - சிறுகதைக்கு இத்தனை சிடுக்கு வாக்கியம் தேவையில்லை. தமிழில் இமெயில் அனுப்பத் தெரிந்து கொண்டேன் என்று எழுதினால் ஒரு வேகம் கிடைக்கும். கொட்டாவி தடுக்கப்படும். (சுஜாதா இல்லாத தைரியத்துல அவனவன் இப்படிக் கெளம்பிட்டானுங்க... என்று நீங்கள் நினைப்பது புரிகிறது)

இல்லைடா; செல்லம் - ஆகிய பிதற்றல் மொழிகளை இலக்கியப் பரிச்சயமும் சுய சிந்தனையும் உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களது உரையாடல்களும் கடிதங்களும் கொஞ்சம் கூரிய வார்த்தைகளைக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் ரியாலிட்டி கிடைக்கும்.

இந்தப் பத்திரிகைக்கு இப்படி எழுதினால்தான் போடுவார்கள் என்பதை விட்டொழித்து வெகு விரைவில் அற்புதமான கதைகளோடு உமா ஷக்தி நம்மை சந்திப்பார் என்று நம்புவோமாக...!

(பி.கு: "மீசைக்கார அங்கிள் கதையெல்லாம் அப்பப்போ போடுறாங்கன்னு பயந்து குங்குமம் வாங்கறதையே நிறுத்திட்ட.... ஆனா உமா எழுதறாங்கன்னு கல்கியெல்லாம் வாங்கி கவனமாப் படிச்சு கமெண்ட் எழுதுறீயேடா... ஜொள்ளுப்பார்ட்டிடா நீ!" என்ற கேண்டியிடம் உமா எழுதிய “கடோபநிஷத்” (கிழக்கு வெளியீடு) நூலைக் காட்டினேன். “அடப்பாவி சாமியார்களைக் கூட விடமாட்டியா நீ...!” என்றாள்.

Thursday, September 11, 2008

'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர்

சிவா, பூங்கொடி கல்யாண வைபோகமே... (லேட்டஸ்ட் லைவ் ரிப்போர்ட்)என் கல்யாணத்துக்கு நான் கல்யாணத்தன்றுதான் போனேன் என்கிற கதையைச் சொல்ல இது உகந்த தருணமல்ல. நான் சொல்லியிருந்தபடி காலை ஆறு மணிக்கே அம்மா எழுப்பிவிட, மிளகாய்த்தூள் பற்று போட்டது போல் கண்கள் கனல எழுந்து குளித்துவிட்டு (எத்தனை வருஷமாச்சு... அட சீக்கிரம் எழுந்ததைச் சொன்னேன்யா) புறப்பட்டேன். காபியை- சரவணபவனில் வாங்கிக் கொடுப்பார்கள்- மறுத்துவிட்டேன். அங்கே கூட்டம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'ஒரே நாளில் பத்தாயிரம் கல்யாணம்' என்று பத்து வருடங்களுக்கு முன்பே வடபழனி கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். போகிற வழியில் போன். தம்பி செல்வேந்திரன். கல்யாணத்துக்குப் போவதாகச் சொன்னதும் 'ம்... ஜாலி' என்றான். (அவன் வாக்கு பலித்த விதத்தைக் கடைசியில் விளக்குகிறேன்.) 'இங்கே', 'அங்கே' என்று தாக்காட்டி, கோயிலிலிருந்து ஒன்றரை கி.மீ. தள்ளித்தான் வண்டியை பார்க் செய்ய முடிந்தது. வண்டியை நிறுத்தியதுதான் தாமதம் எதிரிலிருந்த கடைக்காரர் வண்டி எடு வண்டி எடு என்று கத்த ஆரம்பித்தார். பதற்றம் அதிகரிக்க அஞ்சே நிமிஷம் என்றேன். கடைக்காரர் பிடிவாதம் பிடிக்கவே, போய்யா என்று விட்டு நடந்தேன். வண்டியில் PRESஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தைரியம். எதிர்பார்த்ததைவிடக் கூட்டம். ஆச்சர்யகரமாக இளம்பெண்கள் தொகை ஜாஸ்தியாக இருந்தது. நெரிசல். மணமக்களை அடையாளம் தெரியாது. எனக்கே தெரியாமல் என்னிடம் இருந்த பாசத்தால் புறப்பட்டு வந்துவிட்டேன். என் இரண்டே நம்பிக்கைகள்: பாலபாரதி, லக்கிலுக். அவர்களின் முகத்தைக் கண்டுபிடிக்க கூட்டத்துள் முண்டினேன். பெண்களிடம் இடிபடுவதுதான் சிரமமாக இருந்தது (வயிற்றில் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்). ம்ஹூம்... இந்தப் பெருங்கூட்டத்தில் கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்று புரிந்து போயிற்று. கையிலிருந்த பரிசோடு (நம்பவும்) வால்பையன், பரிசல்காரன் ஆகியோரின் வாழ்த்துக்களும் சேர்ந்து கனத்தது. இப்போது என்ன செய்வது? பெண்களின் அன்பான அநுமதியின் அடிப்படையில் ஒரு மூலையில் ஒண்டி யோசிக்க ஆரம்பித்தேன். பெருமளவில் செல்கள் சிதைந்திருந்த மூளை சிந்திக்க மறுத்தது. கடைசியாகத் தொலைத்து, சமீபத்தில்தான் மொபைல் வாங்கியிருந்ததால் கான்டாக்ட் எண் எதுவும் இல்லை. நினைவிலும் எண்கள் இல்லை (செல் பிராபளம்). அப்போதுதான் சிறு கூட்டம் ஒன்று கோயில் தூணைப் பார்த்துக் கொண்டிருப்பது தென்பட்டது. அதில் ரிசர்வேஷன் சார்ட் போல மணமக்கள் பெயர்களும் சந்நிதி எண்களும் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. ஓ.கே. 'ரிபீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்' என்று மணமேடையில் கத்துவேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்ததை நிறைவேற்றிவிடலாம். பெயர்களை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். மங்களூர் சிவா என்பது புனைபெயர் என்பதும் அவருடைய இயற்பெயர் சிவ சம்திங் என்பதும் ஒருசேர நினைவுக்கு வந்தது. மணமகளின் பெயர் block ஆகிவிட்டது. 'விளங்கும்" என்று நினைத்துக்கொண்டு பட்டியலில் சிவ வைத் தேடத் தொடங்கினேன். இன்று காலை எழரை ஒன்பது முகூர்த்தத்தில் மட்டும் 147 கல்யாணங்கள். நல்லது. விதவிதமான பெய‌ர்கள். 43‍வது ரமேஷ் என்று கண்டிருந்தது. சில விநாடிகளில் தலையை உலுப்பி சுதாரித்துக்கொண்டு... ஹ... பெண்ணின் பெயர் பூங்கொடி... மணமகள் பட்டியலில் தேடத் தொடங்கினேன். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பெயர்களில் பல விநோதமாக இருந்தன. தேஜஸ்தா, அன்னமணி, கல்பசுரிதா ஆகியவை சில உதாரணங்கள். 'பிரியாணி' என்று ஒரு பெண்ணின் பெயர். உற்றுப்பார்த்ததில் 'பிரியாரணி' என்று இருந்தது. (பிரியராணியின் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.)பூங்கொடி பெயர் இல்லை. சிவாவைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் ஆசை, வீம்பாகவே மாறிவிட்டது. புலனாய்வுப் பத்திரிகையாளர் விடுவேனா..? சரவணபவனில் நுழைந்தேன். அங்கே முந்தைய முகூர்த்தத்தின் 147 கல்யாண கோஷ்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தது. சந்தோஷம். கண்ணுக்கெட்டியவரை தென்பட்ட முகங்களில் பார்வையை ஓட்டினேன். அப்பாவி முகங்கள், கெத்தான முகங்கள்... பதிவருக்குண்டான ரெண்டுங்கெட்டான் முகங்கள் எதுவும் தென்படவில்லை. ஓ.கே. எப்படியும் ரெண்டு பதிவராவது ஆபீசுக்கு மட்டம் போடுவார்கள், ஒரு நல்ல கடையாகப் பார்த்து உட்கார்ந்து, ஒரு நாலு மணி நேரம் நாட்டைக் காப்பாற்றுவதைப் பற்றி விவாதிக்கலாம் என்று நேறு ராத்திரி வாங்கி வண்டியின் சைடு பாக்ஸில் வைத்திருந்ததைத் தனி மனித ராணுவமாகவே காலி செய்யவேண்டியதுதான் என்று, வண்டியை எங்கே நிறுத்தினோம் என்று யோசித்தபடி நடந்தேன். அனிச்சையாக வண்டிச்சாவிக்காக பாக்கெட்டுக்குள் கை போனது. ஆம், சாவி இல்லை. வண்டி இருக்குமா என்று அடுத்த பதற்றம். நடையை எட்டிப் போட்டேன். ஹ... வண்டி இருந்தது. வண்டியிலேயே சாவியும் இருந்தது. ஆனால் இரண்டு சக்கரங்களிலும் காற்றுத்தான் இல்லை. லோக்கல் ஆட்களைப் பகையேல்!ஆபீஸுக்கு போன் போட்டு "வடபழனி முருகன் கோயிலில் கல்யாணம் வைத்தால் உணவு வகையறா செலவைப் பெருமளவு குறைக்கலாம்" என்று நாணயம் விகடனுக்கு ஒரு துணுக்கு சொல்லிவிட்டு, சந்தடி சாக்கில் வொர்க்கிங் ஃப்ரம் ஹோம் சொல்லி பங்க்ச்சர் வண்டியின் சைடு பாக்ஸைத் திறந்தேன். By: ரமேஷ் வைத்யா.