WEEK END WITH CANDY
வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.
நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும் ரியல் எஸ்டேட் முதலைகளை அவர்களது பாணியிலேயே பித்தலாட்டம் செய்து இழந்த பணத்தை மீட்கும் சாமான்யர்களின் கதை. துவக்கம் முதல் முடிவு வரை இயல்பை மீறாத, யதார்த்தமான படம். அதே சமயத்தில் ரம்பம் போடாமால், கதறி கண்ணீர் வடிக்காமல் இதமான நகைச்சுவையோடு கலந்து கொடுத்திருப்பதில் இயக்குனரின் திறன் வெளிப்படுகிறது. நிலத்தின் பெயரால் நிகழும் மோசடிகளில் ஒன்றிரண்டின் மர்ம மூடிச்சுகளை அவிழ்க்கிற முயற்சியாகவும், நிலம் வாங்கத் துடிக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பார்க்கும்போதும் "ஸ்டார் இமேஜ், கதறடிக்கும் சண்டைக்காட்சிகள், இல்லாத காரணத்தினால் இப்படம் ஓடாமல் போய்விடக் கூடாதே" என்ற பதற்றம் வந்து கொண்டே இருக்கிறது.
திரைப்படத்தின் ஓட்டத்தைத் தடுக்கும் முழு நீள பாடல்கள் இல்லை. மாறாக கதையை நகர்த்தும் சிறிய சிறிய ஜிங்கிள்ஸ் போன்ற பாடல்களை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். அன்றலர்ந்த மலர் போல அழகான ஹீரோயின். உருட்டு விழிகளும், துடிக்கும் உதடுகளும், சுருண்ட முடிகளோடும் யார் மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி முகம். நிறைய டிவி விளம்பரங்களில் பார்த்த ஞாபகம். ராம்நகரில் அவருக்கொரு ரசிகர் மன்றம் திறந்தாகி விட்டது.
பேபியாக வரும் நாசரைக் கண்டால் பயமாக இருக்கிறது. படத்தில் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக வரும் மெளலி நகைச்சுவை நடிப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். படத்தின் அத்தனைப் பாத்திரங்களும் இயல்பாக நடித்திருப்பதாலும், அருமையான திரைக்கதையாலும் விஜயிடமிருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்பட்டிருக்கிறது. படம் துவக்கம் முதல் முடியும் வரை கேண்டி யாதொரு கிண்டலும் செய்யாமல் அவ்வப்போது 'கடவுளே' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். இதை விட வேறு என்ன வேண்டும் இந்தப் படத்தைப் புகழ?!
***
தஞ்சை ப்ரகாஷின் ஒரிரு கதைகளைப் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த கட்டுரையாளரும் கூட என்ற அறிமுகத்தோடு காவ்யா சண்முக சுந்தரம் தொகுத்திருந்த 'தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்' நூலை ஓரே மூச்சில் வாசித்து முடித்தேன். எதுமாதிரியும் இல்லாத ஒரு காட்டாற்று நடையில் கோபமும், கேலியும், கவலையும் முண்டியடிக்கும் எழுத்து நடை. பெரும்பாலும் தமிழின் எழுத்து ஜாம்பவான்களான க.நா.சு, வல்லிக்கண்ணன், கரிச்சான் குஞ்சு, பிரமிள், நகுலன், ந. பிச்சமூர்த்தி, ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மெளனி போன்றவர்களின் இலக்கிய ஆளுமை குறித்தும், அவர்களுடான இவரது நட்பு குறித்தும், தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வொருவரது பங்களிப்பு குறித்தும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றப்படாதது குறித்தும், எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்க்கை நம்பிக்கையற்றதாய் வறண்டு இருப்பதும் குறித்தான கட்டுரைகள்.
நாம் பார்த்தறியாத மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்தில் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆயிரக்கணக்கான ஆச்சர்யமூட்டும் தகவல்களைப் போகிறப் போக்கில் சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். எழுத்து என்னை மிரட்டமுடியாது, எழுதுகிற பிழைப்பு, பாலம் என்றொரு சிற்றிதழ் ஆகிய கட்டுரைகள் ஒரெழுத்துக் குறையாமல் இன்றைக்கும் அப்படியே பொருந்திப்போவது தமிழ் எழுத்துலகின் அவலம்.
எழுத்தைத் தொழிலாக கொண்டவர்கள் பட்ட, படும் துயரங்களை வார்த்தைகளில் வடித்திருக்கிறார் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழைத் துவங்கி அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்மல்ல. இன்றும் கூட சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் புலம் பெயர்ந்துவிட்ட எழுத்தாளர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. தமிழ் வாழ தமிழிலக்கியம் வாழ எழுத்தாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஜெயமோகன், நாஞ்சில் நாடன் போன்ற அற்புத எழுத்தாளர்கள் வாழ்க்கைத் தேடலுக்காக ஒரு வேலையில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் உங்களுக்கு அழுகை வருகிறதோ இல்லையோ தமிழுக்கு அழுகை வரும். வாழும் காலத்தில் கவுரவிக்கப்பட்ட எழுத்துக் கலைஞன் எவனும் தமிழ் நாட்டில் இல்லை. செம்மொழி ஆவது இருக்கட்டும். அதற்கு செழுமை சேர்ப்பவர்கள் செல்லரித்துக் கிடக்கிறார்கள். எழுத்தாளர்களின் வாழ்க்கைச் செலவுகளை அரசாங்கமே ஏற்று நடத்துவதும், எழுத்திற்கான ஊதியம் சரியாகக் கிடைப்பதும், விருதுகளும் அங்கீகாரமும் தகுதியானவர்களுக்கு செல்வதும்தான் தமிழைப் பிழைக்க வைக்கும். இல்லாவிட்டால் என்னைப் போன்ற கள்ள எழுத்தாளர்களின் கேண்டிக் கதைகள் மட்டும்தான் மிஞ்சி இருக்கும்.
***
உமா ஷக்தி தன்னுடைய சிறுகதை கல்கியில் (21/09/08) வந்திருக்கிறது. படித்துவிட்டு கருத்து சொல் என்றார். உமாவின் கதைகள் மெல்லியல்புகளைக் கொண்டது. எந்த அசாதாரணத்தையும் எதிர்பார்க்க இயலாத எழுத்து நடை. ஒரிரு கதைகளை எழுதிய சக எழுத்தாளன் என்ற முறையில் என்னிடம் அபிப்ராயம் கேட்டதைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடாதுதான் என்றாலும் எழுத எதுவும் கிடைக்காத ஒரு பதிவன் வேறு என்னதான் செய்ய முடியும்?!
சுய சிந்தனையும் இலக்கியத் தாகமும் கொண்ட ஒரு மணமுறிவு கொண்ட பெண். அதே போன்ற ஒத்த சிந்தனையும் உயர்ந்த ரசனையும் கொண்ட ஒருவனின் நட்பு அவளுக்கு வசந்தத்தின் வாசலைத் திறக்கிறது என்றபோதும் திருமணம் என்ற அமைப்பு எதிர்பார்ப்புகளைக் கட்டமைக்கும் அபாயம் இருப்பதால் அவனது காதலை நிராகரித்து நண்பனாகவே ஏற்றுக்கொள்ளும் 95களின் கதை. எளிமையான கதை சொல்லும் மொழி உமாவினுடையது என்பதால் அலுக்காமல் ஐந்தே கால் நிமிடத்தில் படித்து முடிக்க முடிகிறது. சட்டெனத் தோன்றிய ஒரிரு கமெண்டுகளை உடனே அழைத்து சொல்லி விட்டேன். உ.ம்:
"இமெயிலில் தமிழில் எப்படி எழுதுவது என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்." - சிறுகதைக்கு இத்தனை சிடுக்கு வாக்கியம் தேவையில்லை. தமிழில் இமெயில் அனுப்பத் தெரிந்து கொண்டேன் என்று எழுதினால் ஒரு வேகம் கிடைக்கும். கொட்டாவி தடுக்கப்படும். (சுஜாதா இல்லாத தைரியத்துல அவனவன் இப்படிக் கெளம்பிட்டானுங்க... என்று நீங்கள் நினைப்பது புரிகிறது)
இல்லைடா; செல்லம் - ஆகிய பிதற்றல் மொழிகளை இலக்கியப் பரிச்சயமும் சுய சிந்தனையும் உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்களது உரையாடல்களும் கடிதங்களும் கொஞ்சம் கூரிய வார்த்தைகளைக் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் ரியாலிட்டி கிடைக்கும்.
இந்தப் பத்திரிகைக்கு இப்படி எழுதினால்தான் போடுவார்கள் என்பதை விட்டொழித்து வெகு விரைவில் அற்புதமான கதைகளோடு உமா ஷக்தி நம்மை சந்திப்பார் என்று நம்புவோமாக...!
(பி.கு: "மீசைக்கார அங்கிள் கதையெல்லாம் அப்பப்போ போடுறாங்கன்னு பயந்து குங்குமம் வாங்கறதையே நிறுத்திட்ட.... ஆனா உமா எழுதறாங்கன்னு கல்கியெல்லாம் வாங்கி கவனமாப் படிச்சு கமெண்ட் எழுதுறீயேடா... ஜொள்ளுப்பார்ட்டிடா நீ!" என்ற கேண்டியிடம் உமா எழுதிய “கடோபநிஷத்” (கிழக்கு வெளியீடு) நூலைக் காட்டினேன். “அடப்பாவி சாமியார்களைக் கூட விடமாட்டியா நீ...!” என்றாள்.
Comments
க்ளூ: பி.கு!