Saturday, December 31, 2011

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

முகநூலில், கூகிள் பஸ்ஸில், புழக்கடையில் என பல இடங்களில் எழுதியதையெல்லாம் இந்த வலைப்பக்கங்களில் தொகுக்க முயல்கிறேன். ‘படப்புல மேஞ்ச மாடு’ மாதிரி கண்ட இடங்களிலெல்லாம் எழுத்தாளன் கிறுக்கிக்கொண்டே இருக்கக்கூடாது; எழுதிய அனைத்தும் ஓரே இடத்தில் வாசிக்க கிடைக்கவேண்டுமெனும் உயரிய நோக்கமே காரணம்.

***

நேற்று மாலை அலுவல் காரணமாக ஒரு தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கீழரங்கில் ஏழாம் அறிவும், மேலரங்கில் ரா-ஒன்னும் கட்டிப்போடப்பட்டிருந்தன. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மாதிரி கூட்டம் தளும்பிக்கொண்டிருந்தது . அடி, பிடி, ரகளை, கூச்சல், குழப்பம். 50 ரூபாய் பெறுமானமுள்ள டிக்கெட்டுகள் கண்ணெதிரெ 200க்கும், 300க்கும் குத்துப்பிடியாய் போய்க்கொண்டிருந்தது. சேட்டுச் செழிப்பு மிளிரும் பெண் ஒருத்தி - 11 அல்லது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கலாம். ‘அங்கிள் ரா-ஒன் இருந்தா த்ரீ டிக்கெட்ஸ் கொடுங்க... 1500 தர்றேன்’ என்றாள் எனைப் பார்த்து. கடவுளே, நான் பிளாக்கில் டிக்கெட் விற்பவன் போலிருக்கிறேனா?! பரிதாபமாக விழித்து உதடு பிதுக்கினேன். அவள் அடுத்த மனிதனை நோக்கி நடந்தாள். இதே தியேட்டரில் பாரதி படத்தை 6 பேர்களுடனும், பெரியார் படத்தினை நான்கே பார்வையாளர்களுடனும் ரிலீஸ் நாளில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தமிழர்களின் சினிமா மோகம் என்று ஒரே வார்த்தையில் சொன்னால் தப்பிதம். இந்தியர்களின் சினிமா வெறி என்றால்தான் சரிப்பட்டு வரும். இஃதொரு தேசிய நோய். அல்லது தேசிய மானக்கேடு.

தீபாவளியன்றே அபிமான நடிகரின் சினிமாவைப் பார்த்தே ஆகவேண்டுமெனும் தகிப்பு ரசிகமன்ற குஞ்சுமணிகளிடம் தொன்றுதொட்டே இருந்துவரும் பழக்கம்தான். பெரும்பாலும் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு மன்றம், கொடி கட்டுதல், கட்-அவுட், பால் அபிஷேகம் போன்ற அமைப்புச் செயல்பாடுகள் ஏதோ ஒரு விதத்தில் ஆற்றுப்படுத்துகிறது. பணம் படைத்தவர்களுக்கு ரோட்டரி, காஸ்மோ கிளப் மாதிரி. ஆனால், இம்முறை என் அனுபவமே வேறு. ஏழாம் உலகத்திற்கு ரிலீஸ் நாளில் டிக்கெட் கிடைக்குமாவென எனக்கு ஏராளமான அழைப்புகள். அழைத்தவர்களில் பெரும்பாலானோர் குடும்ப பெண்கள்தாம். சூர்யா ரசிகைகளாம். எவ்வளவு கொடுக்கவும் தயார், எப்படியாவது ஏற்பாடு செய்யுங்களென மன்றாடுகிறார்கள்.

எனக்கு இவர்களை எதைக் கொண்டுச் சாத்தலாமென வருகிறது. சமைப்பதில், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவதில், கணவனுக்கு தொழிலில் உதவுவவதில் இருந்தெல்லாம் இவர்களது அக்கறைகள் விலகிக்கொண்டே இருக்கின்றன. வருடம் முழுவதும் மால்களில் திரிவதும், ஹோட்டலின் இரையெடுப்பதும், தியேட்டர் படிகளில் காத்து கிடப்பதுமாக நகர்ப்புறத்து மத்தியதர வர்க்க பெண்கள் முற்றிலும் கேளிக்கை மனோபாவம் கொண்டவர்களாகி வருகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

நகரில் நடக்கும் நாடகங்கள், பட்டி மன்றங்கள், இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு கிடைக்குமாவென இதுவரை எந்த பெண்மணியும் எனக்கு போன் செய்து கேட்டதில்லை என்பதையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நடிகன் மீது மோகம் கொள்வது அவரவர் ரசனை சார்ந்தது. அதை ரிலீஸ் அன்றே பார்த்து தீர்த்துவிடத் துடிப்பது தடித்தனம்.

முந்தைய பாரா வரை அடித்து விட்டு நேற்றிரவு உறங்கிப்போனேன். இன்று காலையில் வந்த நாளிதழில், கோவையில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்கான டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தியேட்டர் வாசலில் அடித்துக் கொலை செய்யப்பட்டார் எனும் செய்தி இடம் பெற்றிருந்தது. என் வீட்டருகே இருக்கும் தியேட்டர்தான். பதட்டத்தோடு அங்கு சென்றேன். நேற்று மாலை கொலை நிகழ்ந்த எந்த தடயமும் இல்லை. டிக்கெட்டுகளுக்காக கூட்டம் அல்லாடிக்கொண்டிருந்தது. பீடு நடை போட்டு பெண்ணொருத்தி எனை நெருங்கி வந்தாள். நான் ஓட்டம் பிடித்தேன்.

***

2011 - நவம்பர் ஃபெஸ்டில் நான் அதிகமும் எதிர்பார்த்திருந்தது ‘லகோரி ஃப்ளூஸ்’ எனும் பாகிஸ்தான் இசைக்குழுவைத்தான். ஏற்கனவே ஸ்ரேயோ கோஷல் நிகர் ‘ஸெப் பங்கோஸி’ன் குரலை கோக் ஸ்டுடியோவில் கேட்டிருந்தேன். ஹனீயா அஸ்லமுக்கும் பிரத்யேக குரல்வளம்தான். மிகுதியும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளைச் சேர்ந்த லெஜெண்டுகளின் இசைக்கோர்வைகளைத்தான் பாடினர். 70களுக்குப் பிறகு பாகிஸ்தானில் எவனும் பாட்டெழுதவில்லையோ என்ற உணர்வு ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக இடம்பெற்ற ‘காதலின் துயரம்’, ‘நண்பர்களை தொலைத்தவர்களுக்கு’, ‘இரவுகள்’ ஆகிய பாடல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. இரண்டு மணி நேரங்கள் பாடியும் இறுதியில் இடம்பெற்ற உச்சஸ்தாயி பாடல்களில் ஸெப்பின் குரலில் யாதொரு தொய்வும் இல்லை.

லகோரி ஃப்ளூஸ் குழுவிற்கு இதுதான் முதல் இந்திய சுற்றுப்பயணம். முதல் நிகழ்வு சென்னையில்தான் நிகழ இருந்தது. அடுத்தடுத்து விமானங்கள் ரத்து ஆனதால், சென்னை நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு, அந்தப் பெருமை கோவைக்கு கிடைத்தது. தங்களது கடைசிப்பாடல்களை அவர்கள் பாடி முடித்ததும் மொத்த அரங்கமும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ‘இன்னும் கொஞ்சம் பாடுங்கள்’ எனக்கேட்டுக்கொண்டார்கள். ரகளையானதொரு துள்ளிசை போனஸாகக் கிடைத்தது.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மேடையின் முன் பகுதியில் எனது கணிணியில் வேலை செய்துகொண்டிருந்தேன். பதட்டமாக என்னருகே பாடகி ஸெப் எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் என்ன தேடுகிறீர்கள் என்றேன். சிறிய சதுர பெட்டி ஒன்றினைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னார். அவரது முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது. அந்தப் பெட்டி இன்றைய நிகழ்வுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அது இசையின் சுவையைக் குறைத்துவிடவும் செய்யலாம்.

நான் ஸெப்பை பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். வாலண்டியர்களை அழைத்து உடனே அரங்கத்தில் அப்பெட்டியைத் தேடும்படி பணித்தேன். நிறைய்ய பேர் பரபரப்பாக தேடுவது ஸெப்பிற்கு சங்கடம் தந்திருக்கும் போல. என்னை அழைத்து ‘அந்தப் பெட்டி அப்படியொன்றும் முக்கியமானதில்லை... நான் வழக்கமாய் போடும் வாசனை திரவிய பெட்டிதான் அது...’

நீங்கள் மேடையில்தானே இருக்கிறீர்கள். பார்வையாளர்களுக்கு மணம் வீசுமா என்ன?! கவலையை விடுங்கள்... என்றேன்.

”எனக்குத் தெரியுமே... நான் இன்று வாசனையாக இல்லையென” என பதில் வந்தது.

***

பாரதியார் மெகா கவியா, மொக்க கவியா எனும் வியாபாரம்தான் போன வாரம் முழுக்க கொடி கட்டி பறந்தது. சுத்த அபத்தம். பாரதியார் 559 பக்கங்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால், கவிதைகளோ 511 பக்கங்கள்தாம் (ஆதாரம்: வர்த்தமானன் மலிவு பதிப்பு அல்லது மட்டமான பதிப்பு) முறைப்படி பாரதி ஒரு கட்டுரையாளரா என்றுதான் சரவலை இழுத்திருக்க வேண்டும். அத்தலைப்பில் சண்டை போட்டு, மண்டை உடைந்து... மிச்சம் மிஞ்சாடி உசிர் இருந்தால்தான் கவிஞரா, சிறுகதையாசிரியரா, கார்ட்டூனிஸ்டா என விவாதத்தை நகர்த்தியிருக்கவேண்டும். நாங்களும் ஆராய்ச்சி பண்ணுவோம்ல :))

***

இன்றோடு அம்மா காலமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவை நினைக்காத நாளில்லையென்பதால், இந்த நாளை மட்டும் தனித்து அனுஷ்டிக்கத் தோன்றவில்லை. கோபத்தில் உதிர்பவை வெறும் ஓசைகள்தாம். அவற்றிற்குப் பொருளில்லை எனும் தெளிவு எனக்கு 25 வயதில் வந்துவிட்டது. அம்மாவுக்கு அது 45 வயதில் வந்திருக்கவில்லை. எதையும் தாண்டிப் போகிற மனப்பக்குவம் வாய்த்திருந்தால், ஒருவேளை அவள் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கக்கூடும். 14 வயதில் என்னைத் துள்ளத் துடிக்க கதற விட்டு என் கண் எதிரே அம்மா மரணித்தாள். அந்த அதிகாலையில் என் கையாலாத தனத்தை, இந்த உலகை, கடவுளர்களை, மருத்துவர்களை நான் காறி உமிழ்ந்தேன். இன்டென்சிவ் கேர் யூனிட்டில் அவளது கடைசி பத்து நாட்களும் பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பத்து நாட்களும் என்னைச் சுற்றி மரணங்கள் சம்பவித்துக்கொண்டே இருந்தன. அவ்விள வயது அனுபவத்திற்குப் பின் எனக்கு மரணங்கள் உறைப்பதில்லை. மானுட வாழ்வின் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் மரணம். லாட்டரி குலுக்கல் போல. யாருடைய எண்கள் விழுகின்றனவோ அவர் கிளம்பித்தான் ஆகவேண்டும். நேற்று மனைவியோடு எங்கேயும் எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தேன். விபத்துக்காட்சியினை திரு உடல் நடுங்க, கண் கலங்கி பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு அது உறைக்கவேயில்லை. மனுஷ்ய நாடகத்தில் இறப்பு ஒரு சீன்! பிறப்பு ஒரு சீன்! ‘மெர்ஸி பாப்பாவே’ எனக்கு மகளாய் பிறந்து வா. மகனாக செய்ய தவறியவற்றை தகப்பனாக செய்து தீர்க்கிறேன்.


***
ஒரு வளர்கவி எனை அழைத்து பலரும் ஓட்டுவதாக குறைப்பட்டுக்கொண்டார். கவிஞர்கள் கிண்டல் செய்யப்படுவது இம்மண்ணின் மரபான வழக்கங்களுள் ஒன்றுதான். ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் சொலவடை கண்கண்ட உதாரணம். சமகாலத்தில் கவிஞர்கள் மிகுந்த கேலிக்கு ஆட்படுத்தப்பவதற்கு காரணம் கவிதையெனும் பெயரால் நிகழும் பித்தலாட்டமும், கவிதைக்குப் பின்னால் இருக்கும் லேபர் சார்ஜூம்தான் (உழைப்பின்மை). எதையும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் வார்த்தை கோர்ப்புகளை உண்டு பண்ணி அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்து உள்ளது எனும் மாயத்தோற்றத்தை உண்டு பண்ணும் உத்வேகம் ஒரு நோயைப் போல உருவாகியிருக்கிறது. என் அபிப்ராயத்தில் சிறுபத்திரிகை உரிமையாளர்களின் இலக்கிய வேள்வியில் சமீபத்தில் உருவாகியுள்ள பெண் கவிகளுள் 95% போலிகள்தாம். தன்னிரக்கம், கழிவிரக்கம், இருண்மை, பிரிவு துயர் இவைதாம் பாடு பொருள். பித்தேறிய சொற்கள், களிம்பேறிய கனவுகள், கசாயம் ஏறிய கால்சட்டை என கிறுக்குத்தனமான உளறல்கள். இந்த பித்தலாட்டங்கள் கேலிக்குரியவை. மிகையான அபிப்ராயங்களை நம்பி உழைப்பின்மை மிளிரும் வரிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

சுயவிமர்சன அளவுகோல்கள் கொஞ்சம் தாங்கு சக்தியை கொடுக்குமென நம்புகிறேன். யாம் இதுவரை ஒரு வசனம் கூட இலக்கியத் தரத்திற்கு எழுதியதில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். கவிதை என்பது எனக்கு ஒரு கடினமான ஆட்டம். அதற்கான பயிற்சியும், உழைப்பும் அதிகம். ஆஹா ஓஹோ வகைமை பின்னூட்டம் எனக்கு மயக்கம் தருவதில்லை. விமர்சனங்கள் அயற்சியளிப்பதில்லை.

வளர்கவிகளுக்கு நான் சொல்வதொன்றுண்டு. இம்மொழி உத்தமமான மகாகவி முன்னோடிகளையுடையது. அம்மரபின் வழி தெரியாமல் இங்கே கவிதைப் பிழைப்பு சாத்தியமில்லை. பெண் என்பதால், பெரிய இடத்துக்காரன் என்பதால் வரும் பாராட்டுரைகளை ஒதுக்குங்கள். கேலிகளை ரசிக்கப் பழகுங்கள். ஏனெனில் கேலிகளைத் தாண்டித்தான் கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். சமகாலத்தில் வீரியத்தோடு செயல்படும் மனுஷ்யபுத்திரனைக்கூட பட்டியல் கவிஞன் / மளிகைக்கடை லிஸ்ட் என்றெல்லாம் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். செய்கிறேன். அதனாலெல்லாம் அவர் எழுதிய ரம்ஜான் கவிதையின் புகழ் மங்கிவிடுமா என்ன. எழுதி எழுதிச் செல்லும் எழுத்தின் வழி உங்களை அறியுங்கள். அவ்வளவே.

ஒரு பழந்தமிழ் பாடலை பகிரவும் விரும்புகிறேன்

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே


Thursday, December 29, 2011

அறிவினில் உறைதல்

எடுத்த எடுப்பில் வியாபாரம் பேசுவது என் வழக்கமல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிமுகம் செய்துகொண்டு, எதிராளி பற்றிய தகவல்களைக் கறந்து, இருவருக்குமான பொது நபர்களை / ரசனைகளைக் கண்டறிந்து உரையாடலை வளர்த்து... இவனுக்காக எதையும் செய்யலாம் எனும் மனநிலைக்கு வரும்போதுதான் மெல்ல படலையை அவிழ்ப்பேன். அப்படித்தான் அந்த மகளிர் பள்ளி தலைமையாசிரியரிடம் பேச்சைத் துவக்கினேன். சலுகை விலையில் ஆங்கில இதழ்களை வழங்குகிறோம். மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொண்டு தங்களது மொழித்திறன் மற்றும் பொது அறிவினை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என்பதை அவருக்கு விளங்கவைப்பது என் திட்டம்.

தலைமையாசிரியருக்கு நல்ல தமிழ்ப்பெயர். அவரது அப்பா திமுககாரனாக இருக்கக்கூடும் என உத்தேசித்தேன். அவர் ஆச்சர்யப்பட்டார். மேஜையில் பாலகுமாரனின் பொன்வட்டில் இருக்கக்கண்டேன். வரலாற்று நாவல் பிரியராக இருக்கக்கூடும் என மூளை சொன்னது. கல்கி, சாண்டில்யன், கடல்புறா, சிவகாமி சபதமென பேச்சை வளர்க்க வளர்க்க அவர் ஆர்வமானார். என்னிடம் சாண்டில்யன் விகடனில் எழுதியதெல்லாம் அந்தக் காலத்து பைண்டிங் வெர்ஷனாகவே இருக்கிறது. யார் தலையில் கட்டலாமென நெடுநாட்களாக ஆள் தேடிக்கொண்டிருந்தேன். அவருக்கு சாண்டில்யனின் கத்திச்சண்டைக் கதைகளை பரிசளிக்கிறேன் எனச் சொன்னேன். பூரித்துப் போனார்.

மெள்ள நான் வந்த நோக்கத்தினை சொன்னேன். கவனமாக கேட்டுக்கொண்டார். அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாவதை கவனித்தேன். சொல்லி முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ‘செல்வேந்திரன் நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்காதீங்க. சின்ன இன்ஸிடெண்ட். அப்புறம் நீங்களே சொல்லுங்க...’ பீடிகையுடன் ஆரம்பித்தார்.

வழக்கமா காலையில 11 மணிக்கு ஒரு ரவுண்ட்ஸ் போறது என் வழக்கம். க்ளாஸ் ரூம்ஸ், லேப், லைபரரி, கிரவுண்டெல்லாம் ஒரு விசிட் அடிச்சிடுவேன். இந்த அகாடமிக் இயர் ஆரம்பிச்ச புதுசு. பதினொன்னாம் கிளாஸ் வாசல்ல பொண்ணுங்க எல்லாம் முட்டிக்கால் போட்டுட்டு இருக்காங்க. மேத்ஸ் குரூப் பொண்ணுங்க. எனக்கு ஷாக். மொத்த க்ளாஸூம் வெளியேதான் இருக்காங்க. ஒரு பொண்ணைக் கூப்பிட்டு என்னம்மா பிரச்சனைன்னு கேட்டேன். ஹோம் ஓர்க் பண்ணல மேடம்... அதான் மிஸ் எல்லாரையும் முட்டி போடுங்கன்னு சொல்லிட்டாங்கன்னுச்சி.

உங்களுக்கே தெரியும் செல்வேந்திரன்... பத்தாங்கிளாஸ்ல நல்ல மார்க் எடுத்தவங்களுக்குத்தான் மேத்ஸ் குரூப் கிடைக்கும். நல்லா படிக்கிறவங்களே ஹோம் ஓர்க் பண்ணலன்னா எப்படி?! எல்லாரையும் என் ரூமுக்கு வாங்கன்னு சொல்லி விசாரிச்சேன். ஒரு ஸ்டூடண்ட்ஸூம் வாய் திறக்கல. ஏம்மா என்னம்மா பிரச்சனைன்னு நாடிய தாங்கி நல்லாத்த பண்ணியும் பதிலே வரல. சரி என்கிட்ட நேர்ல சொல்ல கூச்சமா இருந்திச்சுன்னா ஆளுக்கு ஒரு பேப்பர் தர்றேன். உங்க பேர அதுல எழுத வேணாம். ரீசன்ஸ் மட்டும் எழுதுங்கன்னு சொல்லிட்டேன்.

பிள்ளைகளும் ரீசன்ஸ் எழுதி கொடுத்துட்டாங்க. ஒருத்தி எழுதியிருக்கா ‘கரண்டு இல்ல’; இன்னொருத்தி ‘எங்கூட்ல சண்ட’; இன்னொருத்தி ‘நாட்டு கிலிஞ்சி பேச்சி’; இன்னொருத்தி ‘எனக்கு காச்ச, மண்டவலி’; அதிர்ந்து போயிட்டேன் செல்வேந்திரன். இந்தப் பள்ளிக்கூடத்துல பத்து வருஷம் படிச்ச பொண்ணுங்களுக்கு தமிழ்ல ஒரு வாக்கியம் அட ஒரு வார்த்தை கூட எழுத தெரியலீங்க...கடுப்பாயிட்டேன். இதுல தமிழ்மன்றம், முத்தமிழ் கழகம்னு ஆயிரத்தெட்டு வெட்டிச்செலவுகள். தமிழ் டீச்சரை கூப்பிட்டேன். எட்டுலருந்து பத்துவரைக்கும் அவங்கதான் தமிழ் எடுக்கறாங்க.

நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலே சொல்லல. குனிஞ்சே நிக்கிறாங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை?! வெளிப்படையா சொல்லுங்க... சரி பண்ணிடலாம்னு எவ்வளோ சொல்லிப்பார்த்தேன் பதிலே வரல. சரி கட்ட கடைசிக்கு உங்களுக்கு என்கிட்ட நேர்ல சொல்ல விருப்பம் இல்லண்ணா... ஒரு பேப்பர் தர்றேன். எழுதிக்கொடுங்கன்னேன். அவங்களும் எழுதிக்கொடுத்தாங்க.

‘நா ஒளுங்காத்தான் செல்லிக் கெடுத்தேன். எவலும் படிக்கள...’ன்னு இருந்திச்சு. சொல்லி முடித்துவிட்டு என் முகத்தை பார்த்தார். நான் ஒன்றும் பேசாமல் நடையைக் கட்டினேன்.

Saturday, December 24, 2011

எழுத்துக்கு மரியாதை

நேற்று நண்பன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். 5 மணிக்கு துவங்க வேண்டிய விழா தமிழ்ப்பண்பாட்டின்படி ஒரு மணி நேர காத்திருக்குப் பின் துவங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம், அதிமுக மாநாட்டுக்கு வந்தது போன்ற உணர்வு எனக்கு. கொஞ்மேனும் அறிவுலக பரிச்சயம் உள்ளவர்கள் ஏன் விஜய், டைரக்டர் ஷங்கர் போன்ற ஆசாமிகள் மீது ஒவ்வாமை கொள்கிறார்கள் என்பது புலப்பட்டது. அப்படத்தோடு சம்பந்தப்பட்ட சகல ஜீவராசிகளும் இருவரையும் பாமாலை பாடி பூமாலை சூட்டினர். அடிக்கிற சிங்கியில் காது கிழிந்துவிடாதா?! பிரபு, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள்கூட விதிவிலக்கல்ல.

இறுதியாக ஏற்புரை வழங்கிய ஷங்கர் ‘இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறதென்றால், த்ரீ இடியட்ஸை இயக்கிய ராஜ்குமார் ஹிரானிக்குத்தான் அப்பெருமை சேரும்’ என மிகுந்த அவையடக்கத்தோடு சொல்ல மொத்த கூட்டமும் சிலிர்த்துக்கொண்டது. என் மனது மட்டும் ‘சேதன்...சேதன்’ என அடித்துக்கொண்டது. மொத்த விழாவிலும் சேத்தன் பகத்தின் பெயர் எவ்வகையிலு குறிப்பிடப்படவில்லை. எந்த இடத்திலும் எழுத்தாளனுக்கு பின்னிருக்கைதானா?! சேதனின் ‘பைவ் பாயிண்ட் சம் ஓன்’ நாவலை பேரரசு இயக்கியிருந்தால் கூட அது வெற்றிகரமான திரைப்படமாகத்தான் இருந்திருக்கும். ஐஐடி வாழ்வின் சகல பரிமாணங்களும், நவ இளைஞர்களின் வாழ்வும் இளமையான மொழியில் சித்தரிக்கப்பட்ட நாவல் அது. எவ்வகையில் பார்த்தாலும் த்ரீ இடியட்ஸின் மூலக்கதையாளனுக்கே முக்கியத்துவம் அதிகம். சரி சேத்தனைத்தான் விட்டார்கள். மிகச்சிறப்பாக நாவலை திரைக்கதையாக்கிய ஜோஷிக்கும் அதே கதிதான்!

***

இந்தச் சங்கடங்கள் ஒருபுறம் இருக்க சென்னை சர்வதேச திரைப்படவிழாவின் நிறைவு விழாவில் நேற்று ஒரு அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டிலிருந்து சிறந்த படங்கள் இரண்டிற்கும், தனிநபர் பங்களிப்பிற்கு ஒன்று என மொத்தம் மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பட்டியலில் இந்த ஆண்டு 12 திரைப்படங்கள் இருந்தன. இவ்விருது ஒரு லட்சம் ரூபாயும் கேடயமும் உள்ளடக்கியது. பொதுவாக தனி நபர் பங்களிப்பு விருதுகள் இயக்குனர்கள் அல்லது நடிகர்களுக்கு வழங்கப்படுவதுதான் வழமை. இந்த ஆண்டு சிறந்த தனிநபர் பங்களிப்பிற்கான விருது ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியரான பாஸ்கர் சக்திக்கு வழங்கப்பட்டது. மதன், ரோகிணி மற்றும் பிரதாப் போத்தன் அடங்கிய ஜூரிக்களின் ஏகோபித்த தேர்வாக பலத்த கரவோலிகளுக்கு இடையே இவ்விருதினை பாஸ்கர் சக்தி பெற்றுக்கொண்டார். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் முதல் அங்கீகாரமாக நான் இதை கருதுகிறேன் என்றார் பாஸ்கர்.

கதை இத்தோடு முடியவில்லை. மதுரையிலிருந்த சு.வெங்கடேசனும் இந்த நிறைவு விழாவிற்கு வரவழைக்கப்பட்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றமைக்காக கவுரவிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் சரத்குமார் தன் சொந்தப்பணத்திலிருந்து வெங்கடேசனுக்கு ஒரு லட்சம் ரூபாயினை மேடையிலேயே வழங்கியிருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது என்னளவில் மிக முக்கியமான நிகழ்வு. விழா அமைப்பாளர்களுக்கு என் நன்றிகளைப் பதிவு செய்துகொள்கிறேன்.

***

“தமிழ் சினிமா ஒரு கூவம் மாதிரி. இரண்டு பாட்டில் மினரல் வாட்டரைக் கொட்டி அதனைச் சுத்திகரித்து விட முடியாது” என எஸ்ரா மற்றும் ஜெயனின் திரைப்பிரவேசத்தைப் பற்றி நாஞ்சில் சொன்னார். இப்போது அவரே மினரல் பாட்டிலாகி இருக்கிறார். பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் என தமிழின் முக்கிய எழுத்தாளுமைகள் கூவத்தை சுத்தம் செய்ய களமிறங்கியுள்ளார்கள். பார்ப்போம்.

Thursday, December 22, 2011

பட்டி தொட்டியெங்கும் பட்டியலடி

ட்டியல் கவிதை எழுதுவது

பாம்புக்கு பேன் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பல்புகளை உடைத்து பச்சடி சமைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பாட்டிக்கு பாலே கற்றுக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

யானையின் கால்களுக்கு ஆடிடாஸ் தெரிவு செய்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பூனைக்கு பாஸ்போர்ட் எடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ஜக்கி வாசுதேவுக்கு ழகரம் சொல்லிக்கொடுப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பத்திரத்தை படித்து புரிந்துகொள்வது போல


பட்டியல் கவிதை எழுதுவது

ராகுல்காந்திக்கு பெண் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

எம்.எல்.எம் ஆசாமியிடம் இலக்கியம் பேசுவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

லேவாதேவிக்காரியைக் காதலிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பெண்பிள்ளைகளுடைய எதிர்வீட்டுக்காரனின் புன்னகை கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

கல்யாணம் கழிஞ்ச நடிகைக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

மரவட்டைக்கு மலைப்பாம்பின் சட்டையை அணிவிப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பேச்சுப்போட்டிக்கு மன்மோகனை நடுவராக இருத்துவது போல


பட்டியல் கவிதை எழுதுவது

வீட்டுக்கடன் கிடைப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டி டிங்கரிங் பார்ப்பது போல


பட்டியல் கவிதை எழுதுவது

பட்டாயாவில் பஞ்சாமிர்தம் விற்பது போல


ஒரு நக்கல் சிரிப்பு

ஒரு மொன்னை கத்தி

ஒரு முருங்கைக்காய்

ஒரு டயாப்பர்

ஒரு அனால்ஜின்

ஒரு எஸ்.எம்.எஸ்

பட்டியலுக்கு போதுமானதாயிருக்கிறது


சிறு தும்மல்

சிறு கதறல்

சிறு பிளிறல்

சிறு கமறல்

சிறு உதறல்

சிறு சலம்பல்

பட்டியலுக்கு காரணமாயிருக்கிறது


சின்ன பலப்பம்

சின்ன கரித்துண்டு

சின்ன செங்கல்

சின்ன நாமக்கட்டி

சின்ன ஆணி

சின்ன பிரஷ்

பட்டியலுக்கு வேண்டியதாயிருக்கிறது


பெரும் நப்பாசை

பெரும் பதட்டம்

பெரும் உஷ்ணக்கடுப்பு

பெரும் நெஞ்செரிச்சல்

பெரும் பவுத்திரம்

பெரும் கொலவெறி

பட்டியலுக்கு தேவையாயிருக்கிறது


பட்டியல் ஒரு சமகால சீற்றம்

பட்டியல் ஒரு சமகால அவஸ்தை

பட்டியல் ஒரு சமகால துர்கனவு

பட்டியல் ஒரு சமகால சைத்தான்

பட்டியல் ஒரு சமகால சரவல்

பட்டியல் ஒரு சமகால சங்கடம்


பட்டி

தொட்டியெங்கும்

பட்டியலடிப்போம்!


(மாதாமாதம் 15 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு மரங்களின் தியாகத்தை அர்த்தப்படுத்தும் சமகால பட்டியல் உச்சத்திற்கு சமர்ப்பணம்)

Sunday, December 11, 2011

கிளப்புல மப்புல

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிக்கும் இவ்வமயம் இணையத்தில் 20 பில்லியன் ஹிட்டுகளை அநாயசமாகக் கடந்து விட்டிருக்கிறது ‘கொலவெறி’. பல நூறு வெர்ஷன்கள் உருவாகிவிட்டன. பெண்கள் பாடுவது போல. அரசியல்வாதிகள் பாடுவது போல, குடிகாரர்கள் பாடுவது போல. இன்னும் பல வெர்ஷன்கள் உருவாகும் சாத்தியம் இருக்கிறது. தீந்தமிழில், மலையாளத்தில், தெலுங்கில், ஹிந்தியில், அரபியில் இன்னமும் பெயரறியா பல மொழிகளில் இதே மெட்டமைப்பில் பாடல்கள் உருவாகி உலா வருகின்றன. இந்திய திரையுல பிரபலங்கள் வியந்தோதுகிறார்கள். மெள்ள மேற்கிலும் பரவுகிறது என்கிறார்கள் கடல் கடந்து வாழும் நண்பர்கள். சந்தேகமேயில்லாத தமிழ்ச்சாதனை.

மொழிக்கொலையில் என்ன சாதனை வேண்டிக்கிடக்கிறதென எழவெடுப்பவர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. பொது அபிப்ராயத்திற்கும், ரசனைகளுக்கும் எதிராகச் சிந்திப்பதையே அறிவு ஜீவித்தனத்தின் வெளிப்பாடாகக் கருதுபவர்கள். சமீபத்தில் மண்டையைப் போட்ட ஒரு கஸல் பாடகனுக்கு அஞ்சலி எழுதும்போது ஓர் இசைஜீவி, ‘அவர் யார் தெரியுமா?! ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும்போது, ரஹ்மானுக்குத் திறமையிருந்தால் அவரை ஒரு கஸலை உருவாக்கச் சொல்லுங்களென’ சொன்னவராக்கும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் எங்களூரில் செத்த பேச்சு என்பார்கள். அவ்ளோ பெரிய அப்பாடக்கரான ஜெக்திக்சிங்கிடம் ‘நீரு ஒரு ஆஸ்கார் வாங்கி காட்டுமய்யா...’ என கேட்க நாதியில்லை. எவருடைய சாதனையையும் சிறுமைப்படுத்த இங்கே எவருக்கும் உரிமையில்லை.

நைட் ஷிப்ட் முடித்து அகாலத்தில் வீடு திரும்புகையில் தினமும் நான் காணும் காட்சி ஒன்றுண்டு. நட்ட நடு ராத்திரியில் குளிரையோ, கொசுவையோ பொருட்படுத்தாமல் சாலையோரங்களில் நாடி நெஞ்சில் சாய்ந்திருக்க தலை குனிந்து உளறிக்கொண்டிருப்பார்கள் டீன் ஏஜ் இளைஞர்கள். கடும் குடியென்பது பார்த்தாலே தெரியும். இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மேல் மல்லாந்து படுத்து நட்சத்திரங்களைப் பார்த்து உளறுவோரும் உளர். கிட்டப்போனால், தனியாக புலம்பவில்லை ஹெட்போன் மாட்டிக்கொண்டு எவரிடமோ சண்டையிட்டுக்கொண்டோ, அழுதுகொண்டோ, மன்றாடிக்கொண்டோ, கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டோ இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆம்; இவர்கள் சூப் பாய்ஸ். சுயதவறினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காதலையோ, நட்பையோ தொலைத்தவர்கள். இழந்த சொர்க்கத்திற்காக வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பவர்கள்.

‘கொலவெறி’ மனப்பாரம் சுமக்கிற இந்த தலைமுறையின் பாடல். இதில் புழங்குவது அவர்களது வாழ்வின் மொழி. இந்த இசை சுய எள்ளலின் இசை. ஏமாற்றத்தின் இசை. இதற்கு முன்பு தனுஷ் எழுதி பாடிய ‘அடிடா அவள... வெட்டுறா அவள...’ கூட ஒரு சூப் சாங்க்தான். தன் மொழியில், தன் பிரச்சனையைப் பாடுகிற ஒரு பாடலை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். நமக்கும் பிடித்திருந்தால் அணக்கம் காட்டாமல் ரசித்து விடுவோமே. காசா... பணமா...?!

***

கொலவெறி பாடலுக்கு முன்னரே இணையத்தில் வெளியாகி பல லட்சம் ஹிட்டுகளை அடைந்த ஒரு பாடல் ‘கிளப்புல... மப்புல...’ ஒருவகையில் கொலவெறிக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். அசலான தமிழ்-ராப். உருவாக்கியவர் ஆதி எனும் கொங்கு இளைஞனும் அவனது நண்பர்களும்.

கரண்டையைத் தாண்டும் மேலாடை; தலையிலும் முழங்காலிலும் கைக்குட்டையால் கட்டிக்கொள்வது; தொப்புளைத் தொடும் கழுத்துச் சங்கிலி அதன் முடிவில் சொழவு தண்டிக்கு டாலர்; மூக்கில், உதட்டில், நாக்கில், கொதவாளையில் இன்னபிற உடல் உறுப்புகளில் கம்மல்கள்; ஒண்ணுக்கு கேட்கும் விரலில் ஒன்பது வகை மோதிரங்கள்; நடுவிரலில் நண்டுக்கால் மோதிரம்; தோளில் படரும் ஜடாமூடி; தெருச்சண்டையில் பெண்கள் செய்யும் ஆபாச விரல் சமிக்ஞையினை அடிக்கடி காட்டும் காக்காவலிப்பு நடனம்; விரலி மஞ்சளை மிக்ஸியில் அடிப்பது மாதிரி எவனாலும் புரிந்துகொள்ள முடியாத வேகத்தில் வரிகள் - இவைதாம் ஹிப்ஹாப்பின் அடையாளங்களெனக் கொள்ளப்படுகிறது. உண்மை அதுவல்ல.

ஹிப்ஹாப் இசைவடிவம் ஏனோதானா உளறல் வகைமையன்று.
1970களில் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பரின மக்களின் இசையாக வெடித்துக்கிளம்பிய புரட்சிகர இசைவடிவம்தான் ராப். இதனால்தான் இன்றளவும் ஒடுக்குமுறையை, ஆக்கிரமிப்பை, இனக்கசப்புகளை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இசையாக ஹிப்ஹாப் இருக்கிறது. போருக்கு எதிரான உலகளாவிய இயக்கமான மாவோ ஒவ்வொரு ஆண்டும் வான்கூவர் நகரில் ஹிப்ஹாப் ஃபெஸ்டிவல்கள் நடத்துகிறார்கள். கழகங்களுக்கு எதிரான கலக இசை என்றோ, கலவை இசை என்றோ என்னளவில் இதனை பொருள் கொள்கிறேன்.


சொல்லே இசையாக ஓங்கி ஒலிப்பதுதான் ராப். விளிம்பு நிலையிலிருந்த இனத்தின் இசையெனினும் டிஜேயிங், மிக்ஸிங், கிராஃபிட்டி, பிரேக்கிங், பீட்பாக்ஸ் எனும் ஐவகை ஒழுங்கமைவுகளைக் கொண்டது. இவற்றைக் கடைபிடிக்காமல் உருவாவதை வெற்றுக் கரைச்சல் என்றுதான் கொளல் வேண்டும். கொஞ்சம் பிரயத்தனம் எடுத்துக்கொண்டால், ஹிப்ஹாப் இசைவடிவினை எவரும் கேட்டு ரசித்து கொண்டாட இயலும். தாய்த்தமிழை ராப் இசைவடிவத்திற்குள் புகுத்தி பலரும் சாதனைகள் படைத்திருக்கிறார்கள். மலேஷிய யோகி.பியை தமிழ் -ராப்பிசையின் தந்தை எனலாம். புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் பலரும் ராப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அசல் அக்மார்க் பச்சைத் தமிழனாக இதில் முத்திரை பதித்திருப்பவர் என நான் ஆதியை சொல்லத் துணிவேன்.

ஆதி ஒரு அண்டர் கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். அது என்ன அண்டர் கிரவுண்ட்?! அஃதொர் இயக்கம்; அல்லது பிடிவாதம்; வெகுஜன ஊடகங்களின் வாசல்களில் வாய்ப்புகளுக்காகப் போய் நிற்காமல், அவற்றின் அகோரப் பசிக்காகத் தன் கலையை நீர்த்துப் போகச் செய்யாமல், மனச்சாய்வுகளின்றி மக்களுக்காக மக்களின் மத்தியில் கலை வளர்ப்பவன்தான் அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட். இவன் ஒருபோதும் ஊடகங்களை நோக்கிச் செல்லான். மக்களின் மத்தியில் தன் கலையினைக் கசிய விடுவதன் மூலம் ஊடகக் கவனத்தை தன்னோக்கி குவியச் செய்பவன். தமிழிலக்கியத்தில் இதற்கு உடனடி உதாரணமாக நான் கோணங்கியைச் சொல்வேன். பூமணியும் நினைவில் எட்டிப்பார்க்கிறார். விருது செய்திகளில் அவரது பெயர் அடிபட்டதும் ஒரு பெரும் பத்திரிகை அவரிடம் சிறுகதை கேட்டிருக்கிறது ‘இத்தனை காலமும் சிறுபத்திரிகையில் மட்டுமே எழுதுவது என்றிருந்திருக்கிறேன்; இனிமேலும் அப்படியே இருந்துடறனே...’ என பதில் வந்திருக்கிறது.

ஆதியின் ஹிப்ஹாப்தமிழா ஒரு அண்டர்கிரவுண்ட் பேண்ட். இவர்களின் ‘கிளப்புல மப்புல’ பாடல் யூ டியூபில்தான் வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்களின் மத்தியில் பிரபலமாகி, திரும்ப திரும்ப கேட்கப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளை அடைந்த பிறகு ஊடகங்கள் அவர்களைப் பின் தொடர்கிறார்கள். பேட்டி காண்கிறார்கள். எதுவானபோதும் ஆதி ஒரு அண்டர்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்டாகவே தொடர்கிறார். சினிமாக்காரர்களின் வீட்டு வாசலிலோ, சேனல்களின் வாசல்களிலோ நிற்கும் ஆசையில்லை.

தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில் தற்போது ஹிப்ஹாப் தமிழா குழுவினரின் இசை நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ‘தேர்தல் ஆனந்தம்’ பாடலுக்கு இவர்களைத்தான் அணுகினார்கள். இந்திய அரசாங்கத்தோடு இணைந்து இவர்கள் வடிவமைத்த தேர்தல் பாடல் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி வாக்குப்பதிவினை அதிகரிக்கச் செய்தது.

ஹிப்ஹாப் தமிழாவில் அப்படியென்ன ஸ்பெஷல்?! தமிழ்தான் ஸ்பெஷல். முடிந்தவரைக்கும் அழகு தமிழில் சமகாலத்தினைச் சித்தரிக்கிறார்கள். இளைஞர்களின் மொழியில் விரிகிறது இவர்களின் பாடல்கள். தங்களது சமூக விமர்சனங்களை எதிர்ப்புகள் வரினும் முன் வைக்க தவறுவதில்லை. தமிழில் பேசுவதை வெட்கமாக கருதும் தலைமுறையை அத்தலைமுறையின் பிரதிநிதியே கேலி செய்கிறார். ஆதியின் அக்கறை உண்மையானது என்பதை அவரது சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் கண்டுகொண்டேன். தமிழ்நாட்டில் தமிழராய் இருந்துகொண்டு தமிழில் பேசுவதைக் கேவலமாக நினைப்பதே உண்மையான கேவலம் என்கிறார். அவரது ரசிகர்கள் கரகோஷம் செய்து ஒத்துக்கொள்கிறார்கள். தமிழுணர்ச்சியை தூண்டி காசு பார்ப்பதை வியாபாரி செய்வான். கலைஞன் செய்யமாட்டான். தங்கிலீஷ் பெண்களைக் கேலி செய்யும் ஓர் அழகான பாடல் ஆதியின் அடுத்த ஆல்பத்தில் வெளியாக இருக்கிறது. அதற்குப் பின் ‘ஹேய் வ்வாட்ஸ் அப் யார்ர்... கோன்னா ஹேங்க் அவுட்...’ பீட்டர்கள் கணிசமாகக் குறையும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும், மகாநாடுகளும் தமிழ் வளர்க்கிறேன் பேர்வழி என என்னமோ செய்துகொண்டிருக்கட்டும். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என கிளம்பியிருக்கிறார் ஆதி. அவர் செய்து முடிப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அவர் தன் முன்னோடி புரட்சிப்பாடகனாக நினைப்பது ‘எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என முழங்கிக் கிளம்பிய பாரதியை.Saturday, December 10, 2011

அன்புடன் அழைக்கிறேன்

2011 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. விருது வழங்கும் விழா கோவையில் வரும் 18-12-2011 (ஞாயிறு) அன்று நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பிரதீபா நந்தகுமார், வே.அலெக்ஸ் ஆகியோருடன் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்துகொண்டு பூமணியை சிறப்பு செய்ய இருக்கிறார்கள். விழாவில், பூமணியின் படைப்புலகம் பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’ எனும் நூலும் வெளியிடப்பட இருக்கிறது. அடியேன் விழாவினை தொகுத்து வழங்குகிறேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.