தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
முகநூலில், கூகிள் பஸ்ஸில், புழக்கடையில் என பல இடங்களில் எழுதியதையெல்லாம் இந்த வலைப்பக்கங்களில் தொகுக்க முயல்கிறேன். ‘படப்புல மேஞ்ச மாடு’ மாதிரி கண்ட இடங்களிலெல்லாம் எழுத்தாளன் கிறுக்கிக்கொண்டே இருக்கக்கூடாது; எழுதிய அனைத்தும் ஓரே இடத்தில் வாசிக்க கிடைக்கவேண்டுமெனும் உயரிய நோக்கமே காரணம்.
***
நேற்று மாலை அலுவல் காரணமாக ஒரு தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கீழரங்கில் ஏழாம் அறிவும், மேலரங்கில் ரா-ஒன்னும் கட்டிப்போடப்பட்டிருந்தன. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மாதிரி கூட்டம் தளும்பிக்கொண்டிருந்தது . அடி, பிடி, ரகளை, கூச்சல், குழப்பம். 50 ரூபாய் பெறுமானமுள்ள டிக்கெட்டுகள் கண்ணெதிரெ 200க்கும், 300க்கும் குத்துப்பிடியாய் போய்க்கொண்டிருந்தது. சேட்டுச் செழிப்பு மிளிரும் பெண் ஒருத்தி - 11 அல்லது 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கலாம். ‘அங்கிள் ரா-ஒன் இருந்தா த்ரீ டிக்கெட்ஸ் கொடுங்க... 1500 தர்றேன்’ என்றாள் எனைப் பார்த்து. கடவுளே, நான் பிளாக்கில் டிக்கெட் விற்பவன் போலிருக்கிறேனா?! பரிதாபமாக விழித்து உதடு பிதுக்கினேன். அவள் அடுத்த மனிதனை நோக்கி நடந்தாள். இதே தியேட்டரில் பாரதி படத்தை 6 பேர்களுடனும், பெரியார் படத்தினை நான்கே பார்வையாளர்களுடனும் ரிலீஸ் நாளில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. தமிழர்களின் சினிமா மோகம் என்று ஒரே வார்த்தையில் சொன்னால் தப்பிதம். இந்தியர்களின் சினிமா வெறி என்றால்தான் சரிப்பட்டு வரும். இஃதொரு தேசிய நோய். அல்லது தேசிய மானக்கேடு.
தீபாவளியன்றே அபிமான நடிகரின் சினிமாவைப் பார்த்தே ஆகவேண்டுமெனும் தகிப்பு ரசிகமன்ற குஞ்சுமணிகளிடம் தொன்றுதொட்டே இருந்துவரும் பழக்கம்தான். பெரும்பாலும் கடைநிலையில் இருக்கும் அவர்களுக்கு மன்றம், கொடி கட்டுதல், கட்-அவுட், பால் அபிஷேகம் போன்ற அமைப்புச் செயல்பாடுகள் ஏதோ ஒரு விதத்தில் ஆற்றுப்படுத்துகிறது. பணம் படைத்தவர்களுக்கு ரோட்டரி, காஸ்மோ கிளப் மாதிரி. ஆனால், இம்முறை என் அனுபவமே வேறு. ஏழாம் உலகத்திற்கு ரிலீஸ் நாளில் டிக்கெட் கிடைக்குமாவென எனக்கு ஏராளமான அழைப்புகள். அழைத்தவர்களில் பெரும்பாலானோர் குடும்ப பெண்கள்தாம். சூர்யா ரசிகைகளாம். எவ்வளவு கொடுக்கவும் தயார், எப்படியாவது ஏற்பாடு செய்யுங்களென மன்றாடுகிறார்கள்.
எனக்கு இவர்களை எதைக் கொண்டுச் சாத்தலாமென வருகிறது. சமைப்பதில், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தருவதில், கணவனுக்கு தொழிலில் உதவுவவதில் இருந்தெல்லாம் இவர்களது அக்கறைகள் விலகிக்கொண்டே இருக்கின்றன. வருடம் முழுவதும் மால்களில் திரிவதும், ஹோட்டலின் இரையெடுப்பதும், தியேட்டர் படிகளில் காத்து கிடப்பதுமாக நகர்ப்புறத்து மத்தியதர வர்க்க பெண்கள் முற்றிலும் கேளிக்கை மனோபாவம் கொண்டவர்களாகி வருகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன்.
நகரில் நடக்கும் நாடகங்கள், பட்டி மன்றங்கள், இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள், இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்ல அனுமதிச் சீட்டு கிடைக்குமாவென இதுவரை எந்த பெண்மணியும் எனக்கு போன் செய்து கேட்டதில்லை என்பதையும் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். நடிகன் மீது மோகம் கொள்வது அவரவர் ரசனை சார்ந்தது. அதை ரிலீஸ் அன்றே பார்த்து தீர்த்துவிடத் துடிப்பது தடித்தனம்.
முந்தைய பாரா வரை அடித்து விட்டு நேற்றிரவு உறங்கிப்போனேன். இன்று காலையில் வந்த நாளிதழில், கோவையில் ‘ஏழாம் அறிவு’ படத்திற்கான டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தியேட்டர் வாசலில் அடித்துக் கொலை செய்யப்பட்டார் எனும் செய்தி இடம் பெற்றிருந்தது. என் வீட்டருகே இருக்கும் தியேட்டர்தான். பதட்டத்தோடு அங்கு சென்றேன். நேற்று மாலை கொலை நிகழ்ந்த எந்த தடயமும் இல்லை. டிக்கெட்டுகளுக்காக கூட்டம் அல்லாடிக்கொண்டிருந்தது. பீடு நடை போட்டு பெண்ணொருத்தி எனை நெருங்கி வந்தாள். நான் ஓட்டம் பிடித்தேன்.
***
2011 - நவம்பர் ஃபெஸ்டில் நான் அதிகமும் எதிர்பார்த்திருந்தது ‘லகோரி ஃப்ளூஸ்’ எனும் பாகிஸ்தான் இசைக்குழுவைத்தான். ஏற்கனவே ஸ்ரேயோ கோஷல் நிகர் ‘ஸெப் பங்கோஸி’ன் குரலை கோக் ஸ்டுடியோவில் கேட்டிருந்தேன். ஹனீயா அஸ்லமுக்கும் பிரத்யேக குரல்வளம்தான். மிகுதியும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி நாடுகளைச் சேர்ந்த லெஜெண்டுகளின் இசைக்கோர்வைகளைத்தான் பாடினர். 70களுக்குப் பிறகு பாகிஸ்தானில் எவனும் பாட்டெழுதவில்லையோ என்ற உணர்வு ஆரம்பத்தில் இருந்தாலும் போகப்போக இடம்பெற்ற ‘காதலின் துயரம்’, ‘நண்பர்களை தொலைத்தவர்களுக்கு’, ‘இரவுகள்’ ஆகிய பாடல்கள் என்னை பெரிதும் கவர்ந்தன. இரண்டு மணி நேரங்கள் பாடியும் இறுதியில் இடம்பெற்ற உச்சஸ்தாயி பாடல்களில் ஸெப்பின் குரலில் யாதொரு தொய்வும் இல்லை.
லகோரி ஃப்ளூஸ் குழுவிற்கு இதுதான் முதல் இந்திய சுற்றுப்பயணம். முதல் நிகழ்வு சென்னையில்தான் நிகழ இருந்தது. அடுத்தடுத்து விமானங்கள் ரத்து ஆனதால், சென்னை நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டு, அந்தப் பெருமை கோவைக்கு கிடைத்தது. தங்களது கடைசிப்பாடல்களை அவர்கள் பாடி முடித்ததும் மொத்த அரங்கமும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ‘இன்னும் கொஞ்சம் பாடுங்கள்’ எனக்கேட்டுக்கொண்டார்கள். ரகளையானதொரு துள்ளிசை போனஸாகக் கிடைத்தது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் மேடையின் முன் பகுதியில் எனது கணிணியில் வேலை செய்துகொண்டிருந்தேன். பதட்டமாக என்னருகே பாடகி ஸெப் எதையோ தேடிக்கொண்டிருந்தார். நான் என்ன தேடுகிறீர்கள் என்றேன். சிறிய சதுர பெட்டி ஒன்றினைத் தொலைத்துவிட்டதாகச் சொன்னார். அவரது முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது. அந்தப் பெட்டி இன்றைய நிகழ்வுக்கு முக்கியமானதாக இருக்கலாம். அது இசையின் சுவையைக் குறைத்துவிடவும் செய்யலாம்.
நான் ஸெப்பை பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். வாலண்டியர்களை அழைத்து உடனே அரங்கத்தில் அப்பெட்டியைத் தேடும்படி பணித்தேன். நிறைய்ய பேர் பரபரப்பாக தேடுவது ஸெப்பிற்கு சங்கடம் தந்திருக்கும் போல. என்னை அழைத்து ‘அந்தப் பெட்டி அப்படியொன்றும் முக்கியமானதில்லை... நான் வழக்கமாய் போடும் வாசனை திரவிய பெட்டிதான் அது...’
நீங்கள் மேடையில்தானே இருக்கிறீர்கள். பார்வையாளர்களுக்கு மணம் வீசுமா என்ன?! கவலையை விடுங்கள்... என்றேன்.
”எனக்குத் தெரியுமே... நான் இன்று வாசனையாக இல்லையென” என பதில் வந்தது.
***
பாரதியார் மெகா கவியா, மொக்க கவியா எனும் வியாபாரம்தான் போன வாரம் முழுக்க கொடி கட்டி பறந்தது. சுத்த அபத்தம். பாரதியார் 559 பக்கங்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால், கவிதைகளோ 511 பக்கங்கள்தாம் (ஆதாரம்: வர்த்தமானன் மலிவு பதிப்பு அல்லது மட்டமான பதிப்பு) முறைப்படி பாரதி ஒரு கட்டுரையாளரா என்றுதான் சரவலை இழுத்திருக்க வேண்டும். அத்தலைப்பில் சண்டை போட்டு, மண்டை உடைந்து... மிச்சம் மிஞ்சாடி உசிர் இருந்தால்தான் கவிஞரா, சிறுகதையாசிரியரா, கார்ட்டூனிஸ்டா என விவாதத்தை நகர்த்தியிருக்கவேண்டும். நாங்களும் ஆராய்ச்சி பண்ணுவோம்ல :))
***
இன்றோடு அம்மா காலமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவை நினைக்காத நாளில்லையென்பதால், இந்த நாளை மட்டும் தனித்து அனுஷ்டிக்கத் தோன்றவில்லை. கோபத்தில் உதிர்பவை வெறும் ஓசைகள்தாம். அவற்றிற்குப் பொருளில்லை எனும் தெளிவு எனக்கு 25 வயதில் வந்துவிட்டது. அம்மாவுக்கு அது 45 வயதில் வந்திருக்கவில்லை. எதையும் தாண்டிப் போகிற மனப்பக்குவம் வாய்த்திருந்தால், ஒருவேளை அவள் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கக்கூடும். 14 வயதில் என்னைத் துள்ளத் துடிக்க கதற விட்டு என் கண் எதிரே அம்மா மரணித்தாள். அந்த அதிகாலையில் என் கையாலாத தனத்தை, இந்த உலகை, கடவுளர்களை, மருத்துவர்களை நான் காறி உமிழ்ந்தேன். இன்டென்சிவ் கேர் யூனிட்டில் அவளது கடைசி பத்து நாட்களும் பணிவிடை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பத்து நாட்களும் என்னைச் சுற்றி மரணங்கள் சம்பவித்துக்கொண்டே இருந்தன. அவ்விள வயது அனுபவத்திற்குப் பின் எனக்கு மரணங்கள் உறைப்பதில்லை. மானுட வாழ்வின் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம் மரணம். லாட்டரி குலுக்கல் போல. யாருடைய எண்கள் விழுகின்றனவோ அவர் கிளம்பித்தான் ஆகவேண்டும். நேற்று மனைவியோடு எங்கேயும் எப்போதும் பார்த்துக்கொண்டிருந்தேன். விபத்துக்காட்சியினை திரு உடல் நடுங்க, கண் கலங்கி பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு அது உறைக்கவேயில்லை. மனுஷ்ய நாடகத்தில் இறப்பு ஒரு சீன்! பிறப்பு ஒரு சீன்! ‘மெர்ஸி பாப்பாவே’ எனக்கு மகளாய் பிறந்து வா. மகனாக செய்ய தவறியவற்றை தகப்பனாக செய்து தீர்க்கிறேன்.
***
ஒரு வளர்கவி எனை அழைத்து பலரும் ஓட்டுவதாக குறைப்பட்டுக்கொண்டார். கவிஞர்கள் கிண்டல் செய்யப்படுவது இம்மண்ணின் மரபான வழக்கங்களுள் ஒன்றுதான். ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் சொலவடை கண்கண்ட உதாரணம். சமகாலத்தில் கவிஞர்கள் மிகுந்த கேலிக்கு ஆட்படுத்தப்பவதற்கு காரணம் கவிதையெனும் பெயரால் நிகழும் பித்தலாட்டமும், கவிதைக்குப் பின்னால் இருக்கும் லேபர் சார்ஜூம்தான் (உழைப்பின்மை). எதையும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் வார்த்தை கோர்ப்புகளை உண்டு பண்ணி அவற்றிற்கு இலக்கிய அந்தஸ்து உள்ளது எனும் மாயத்தோற்றத்தை உண்டு பண்ணும் உத்வேகம் ஒரு நோயைப் போல உருவாகியிருக்கிறது. என் அபிப்ராயத்தில் சிறுபத்திரிகை உரிமையாளர்களின் இலக்கிய வேள்வியில் சமீபத்தில் உருவாகியுள்ள பெண் கவிகளுள் 95% போலிகள்தாம். தன்னிரக்கம், கழிவிரக்கம், இருண்மை, பிரிவு துயர் இவைதாம் பாடு பொருள். பித்தேறிய சொற்கள், களிம்பேறிய கனவுகள், கசாயம் ஏறிய கால்சட்டை என கிறுக்குத்தனமான உளறல்கள். இந்த பித்தலாட்டங்கள் கேலிக்குரியவை. மிகையான அபிப்ராயங்களை நம்பி உழைப்பின்மை மிளிரும் வரிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.
சுயவிமர்சன அளவுகோல்கள் கொஞ்சம் தாங்கு சக்தியை கொடுக்குமென நம்புகிறேன். யாம் இதுவரை ஒரு வசனம் கூட இலக்கியத் தரத்திற்கு எழுதியதில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன். கவிதை என்பது எனக்கு ஒரு கடினமான ஆட்டம். அதற்கான பயிற்சியும், உழைப்பும் அதிகம். ஆஹா ஓஹோ வகைமை பின்னூட்டம் எனக்கு மயக்கம் தருவதில்லை. விமர்சனங்கள் அயற்சியளிப்பதில்லை.
வளர்கவிகளுக்கு நான் சொல்வதொன்றுண்டு. இம்மொழி உத்தமமான மகாகவி முன்னோடிகளையுடையது. அம்மரபின் வழி தெரியாமல் இங்கே கவிதைப் பிழைப்பு சாத்தியமில்லை. பெண் என்பதால், பெரிய இடத்துக்காரன் என்பதால் வரும் பாராட்டுரைகளை ஒதுக்குங்கள். கேலிகளை ரசிக்கப் பழகுங்கள். ஏனெனில் கேலிகளைத் தாண்டித்தான் கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். சமகாலத்தில் வீரியத்தோடு செயல்படும் மனுஷ்யபுத்திரனைக்கூட பட்டியல் கவிஞன் / மளிகைக்கடை லிஸ்ட் என்றெல்லாம் விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். செய்கிறேன். அதனாலெல்லாம் அவர் எழுதிய ரம்ஜான் கவிதையின் புகழ் மங்கிவிடுமா என்ன. எழுதி எழுதிச் செல்லும் எழுத்தின் வழி உங்களை அறியுங்கள். அவ்வளவே.
ஒரு பழந்தமிழ் பாடலை பகிரவும் விரும்புகிறேன்
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே
Comments
:-)
அருமை.
ungalukkum manaivikkum en iniya puthu varuda valthukal.
”தன்னிரக்கம், கழிவிரக்கம், இருண்மை, பிரிவு துயர் இவைதாம் பாடு பொருள். பித்தேறிய சொற்கள், களிம்பேறிய கனவுகள், கசாயம் ஏறிய கால்சட்டை என கிறுக்குத்தனமான உளறல்கள். இந்த பித்தலாட்டங்கள் கேலிக்குரியவை. மிகையான அபிப்ராயங்களை நம்பி உழைப்பின்மை மிளிரும் வரிகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்”
நீங்க சொல்றதை ஏத்துக்க முடியலை.எல்லாவற்றயும் இப்படி ஒதுக்க முடியாது.ஒவ்வருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை அவ்வளவுதான்.
எப்படியாவது ஒரு நல்ல(???) கவிதை எழுதனும்???