Monday, December 30, 2013

2013-ஆம் ஆண்டின் டாப் டென் முகநூல் மோஸ்தர்கள்!

1. அட்டைப்பட அல்லுசில்லுகள்:

 புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கும் என்னுடைய கவிதை தொகுப்பின் முகப்பு என்கிற அறிவிப்புடன் படங்களைப் போஸ்ட் செய்வது; இமேஜைப் பெரியதாக்கி உற்றுப் பார்த்தால் கைலாச பதிப்பகம் என்றிருக்கும். 200 லைக்குகளும், 100 வாழ்த்துக்கள் பாஸ்!-ம் வாங்கியிருக்கும் அந்தக் கவிதை தொகுதியை கைலாசம் வரை சென்று தேடினாலும் கிடைக்காது. ஆன்லைன் ஃபோட்டாஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட அட்டையை நம்பி நீங்கள் பு.க.கா-ல் கடை கடையாய் ஏறி இறங்கினால் அதற்கு நாங்களா பொறுப்பு?!

2. அத்தியாய அலப்பறைகள்:

எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதியென நான்கைந்து பாராக்களைப் பதிவிடுவது. மொத்த நாவலே நான்கைந்து பாராக்கள்தான் என்பதை யூகிப்பவனே கலியுகத்தில் வாழும் தகுதியுடைத்தவன்.

3. உங்களுள் யார் இந்துத்துவா?

நீங்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுபவராக இருக்கலாம். மூன்று முறை ஹஜ் யாத்திரை மேற்கொண்டவராகக் கூட இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் எதைப்பற்றியும் கருத்து சொல்லியவராகவோ எழுதியவராகவோக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கக்கூடிய இந்துத்துவ கூறுகளைக் கண்டெடுத்து களையெடுப்பதே இப்போதைய ஃபேஷன். உதாரணமாக, ’ரெவரெண்ட் ஃபாதர் அந்தோணி சிலுவைராஜ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும், பாதிரியாராகப் பணியாற்றினாலும் அவர் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக காலை எழுந்ததும் தவறாமல் வாசிப்பது ஹிண்டு நாளிதழே. எனவே அவர் ஓர் இந்துத்துவா’ என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தலாம். போலவே வலதுசாரி, இடதுசாரி துவங்கி பூனம் சாரி, பனாரஸ் சாரி வரை க்ளாஸிபிகேஷன் செய்வதே தற்போதைய டிரெண்ட்.

4. உலக சினிமா உலக்கையடிகள்.

திரைப்பட விழாவில் இன்று காணவாய்த்த படம் ‘தி யானிங்’. ’கொரிய இயக்குனர் ஜிங் மங் ஜங் இயக்கிய இப்படம் மானுட மனங்களில் அட்டைக்கரியென அப்பிக்கிடக்கும் இருண்மைகளினுடாக வாழ்வின் ஒளிமிக்க தரிசனத்தை அலசுகிறது; பிறகு நம் மீதே காயப்போடுகிறது. உக்கிரமான கவித்துவ தருணங்கள் ’ நீயெல்லாம் ஏம்ல படம் பார்க்க வந்த...’ என நம்மை விசாரிக்கிறது’ எனப் போட்டுத்தள்ளும் ஸ்கிரினிங் ஸ்டேட்டஸூகள்.

5. டிஸ்கார்டு டிக்கிபேர்டுகள்:

புத்தகக் கடைகளிலோ, இலக்கிய கூட்டத்திலோ தற்செயலாக ஒரு எழுத்தாளரைப் பார்த்தால் பாம்பாய் படமெடுத்து ஆடுவார்கள். அவசர அவசரமாய் கையிலிருக்கும் புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள் (சமீபத்தில் பிரபல எழுத்தாளரிடம் ஒருவர் ரேசன் கார்டைக் காட்டி கையெழுத்து போடும்படி சொல்லியிருக்கிறார்). 2எம்பி மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இணையம் என்று வந்து விட்டால் ‘நானும் பெருமாள், அவரும் பெருமாள். போட்டுத் தள்றா அந்த எழுத்தாளர...’ என தகிக்கும் தன்னம்பிக்கையுடன்  ’ஒண்ணும் தேறல, குப்பை, மரண மொக்கை, டொக்காயிட்டாரு’ - போன்ற டிஸ்கார்டு ஸ்டேட்மெண்டுகளை அள்ளி விடுவது. ’ஸாரி ஜெமோ’வில் ரத்தம் குடித்து விட்டு அரவிந்த் கெஜ்ரிவாலை அமைதிப்படை சத்தியராஜாக்கும் வேள்வியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.

6. ’ஐ சப்போர்ட்’ ஐஸோடோப்புகள்:

நாட்டாமைக்குத் துண்டு எப்படியோ அப்படித்தான் இவர்களுக்கு ஐ சப்போர்ட் டேக்குகள். காஞ்சிபுரம் தேவநாதனுக்கும், சயனைடு மோகன்குமாரையும் தவிர்த்து இவர்கள் ‘ஐ சப்போர்ட்’ போட்டு தூக்கி விடாத ஆட்களே தமிழ்நாட்டில் கிடையாது. இந்தியாவில் எட்டு கோடி பார்வையற்றவர்களுக்கு எட்டாயிரம் கண்கள்தான் தானமாகக் கிடைக்கின்றன. ‘ஐ சப்போர்ட்’ போடுகிற நேரத்தில் ஐ தானத்திற்கு சப்போர்ட் செய்தாலாவது விழியற்றவர்களுக்கு ஒளி கிடைக்குமென இந்நேரத்தில் கட்டுரையாளர் தன் கட்டு சாதத்தை அவிழ்க்கிறார்.

7. நூல் விடுதல்:

ஒரு ஸ்டேட்டஸ் கூட போட முடியாவிட்டால் ஒரு நூலை வாசிப்பதன் பயன்மதிப்பென்பது என்ன? நாம் வாசித்திருக்கிறோம் என்கிற ஒரு வரலாற்றுக்காரணம் போதாதா ஒரு புத்தகம் முக்கியமானதாகி விட? கைக்கு அகப்பட்டதையெல்லாம் பத்து பத்து பக்கமாகப் புரட்டி அங்கங்கே இரண்டிரண்டு வரிகளை உருவி இறுதியாக மிக முக்கியமான நூல். நல்ல வாசிப்பனுபவமென முடித்தால் நிறைய்ய வாசிக்கிறவர் என்கிற இமேஜையும் தக்க வைக்கலாம். கூடவை லைக்குகளையும். (ஏராளமான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களுக்கிடையே நிலவும் நுண்ணிய வேறுபாடுகளுமே இந்நூலின் சிறப்பு என Yellow Pages-க்கு ஒருவர் முகநூலில் நூல் அறிமுகம் எழுதியிருப்பதாக கேள்வி!)

8. அறிவிப்பு அய்யாச்சாமிகள்:

நூல் வெளியீடு, ஆவணப்படம் திரையிடல், கவியரங்கம், ஓவியக் கண்காட்சி துவங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா என எங்கே என்ன நடந்தாலும் அறிவிப்பு போட்டு அசத்துவார். அந்தக் கூட்டத்திற்கெல்லாம் இவர் போவாரா என ஃபாலோயர்ஸ் கேட்கக்கூடாதென்பது முகநுல் நியதி. இந்த அறிவிப்புகளின் மூலமே தானொரு இலக்கியச் செயற்பாட்டாளரென உறுதியாக நம்புவதை யாரென்ன செய்தும் தடுக்க முடியாது.

9. வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள்:

அணில், நடராஜன், காடு ப்ளஸூ, ஃபார்மெட்டாலஜிஸ்ட் என சினிமாப் பிரபலங்களுக்கு கன்னாபின்னாவென கலாய்த்தல் பெயர் சூட்டி,  படம் ரிலீஸாவதற்கு முன்பே ஃப்ளாப்பாமே என ஸ்டேட்டஸ் போட்டு, புரொடியூஸருக்கே தெரியாத கலெக்‌ஷன் புள்ளி விபரங்களை அள்ளி விட்டு இது ரத்த பூமிடாவென உருமியபடி திரியும் வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள். இவர்கள் அடித்துக்கொண்டு கிடக்கும் போது சம்பந்தப்பட்ட இரண்டு பிரபலங்களும் கன்னத்தோடு கன்னம் ஒட்டி செல்ஃபி எடுத்து ட்வீட்டரில் போட்டு கட்டையை கொடுத்து விடுவது அந்தோ பரிதாபம்.

10. எ.மா.ச.வா?!

என்னக் கொடுமை சரவணன் வசனத்தை தமிழகமே வதக்கிக்கொண்டிருந்த காலத்தில் பிரபுவின் மீட்பராக ஆட்டத்துக்கு வந்தவர் மனுஷ்யபுத்திரன். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என இவர் சேனல்களில் கேட்டுத் தொலைக்க ’என்ன மாதிரியான சம்மூவம் சார்?!’ என கருகின தோசைக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு சாவடிக்கிறார்கள். ’என்னது ஒரு முழம் பூ முப்பது ரூவாயா... என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?’ எனும் உரையாடலை நான் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியம்மா சொல்லக் கேட்டேன்.

Monday, December 23, 2013

வினைநலம்

முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில திடீர் தமிழுணர்வாளர்கள் விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. விரிவாக விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டையும் கச்சிதமாகவே செய்து முடித்தோம். குறைந்த பட்சம் 400 பேர்களாவது விழாவிற்கு வரவழைப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அரங்கத்திலிருந்த 540 இருக்கைகள் போக மண்டபத்திற்கு வெளியேயும்  சுமார் 100 பேர் வரை பார்வையாளர்கள் இருந்தனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க விஜயசூரியன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையே சேரும். அத்தனை உழைத்திருந்தனர்.

***

இஃதொர் விருது விழா மட்டுமல்ல. மொழியின் மூத்த படைப்பாளர்கள் முதல் இளம் தலைமுறை படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், ஓவியம், புகைப்படம், நாடகம், இசை, சினிமா போன்ற பிற கலைகளில் துறை போனவர்கள், வாசர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விவாதித்து, சந்தேகங்கள் அபிப்ராயங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, கவிதைகளை வாசித்து, ஒன்றாக உண்டு, உறங்கி, நடை பயின்று இரண்டு நாட்கள் நிகழும் மாபெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் அல்லது ஊடகங்கள் பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து நடத்துகிற லிட்ரரி ஃபெஸ்டுகளுக்கு இணையானதொரு கலாச்சார நிகழ்வு.

இந்த ஆண்டு மேலும் கூடுதலாகப் புதிய நண்பர்கள். இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால், தேவதேவன், பிரேதன், சாம்ராஜ், ரவி சுப்ரமணியம், சுரேஷ்குமார் இந்திரஜித், மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மொழிபெயர்ப்பாளர்கள் நிர்மால்யா, விஜயராகவன், எம்.ஏ.சுசீலா, பதிப்பாளர்கள் எழுத்து அலெக்ஸ், நற்றிணை யுகன், சொல்புதிது சீனு, காந்தி டுடே சுனீல் கிருஷ்ணன் என இந்தாண்டு பலரையும் சந்தித்து அளவளாவுகிற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் ஒன்றுகூடுகிற வேறு விழா ஏதேனும் இருக்கிறதா என்ன?!

***

இந்திரா பார்த்தசாரதிக்கு 84 வயதாகிறது. தெளிவத்தைக்கு 80 வயது. நாஞ்சில் எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், இரண்டு நாட்களும் உற்சாகம் குன்றாமல் சளைக்காமல் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தனர். இந்த அசாத்திய எனர்ஜியை வியந்தோதிக்கொண்டிருந்தபோது ஜெ ஒரு அப்சர்வேஷனைச் சொன்னார். பொதுவாக அறுபதைக் கடந்தவர்களெல்லாம் மிகப்பெரிய அனத்தல்களாக, விட்டால் போதுமென நம்மைத் தெறித்து ஓடச் செய்பவர்களாக, யாரையும் கடித்து துப்பக்கூடியவர்களாகத்தான் பெரும்பாலும் காணக்கிடைக்கிறார்கள். ஆனால், இலக்கியத்தை துறையாகக் கொண்டியங்கியவர்களில் பெரும்பான்மையானோர் இந்த வயதிலும் கச்சிதமாக இயங்கக்கூடியவர்களாகவும், உரையாடக்கூடியவர்களாகவும் இருப்பதைக் குறிப்பிட்டார். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், ஞானி, ஆ.மாதவன் போன்றவர்கள் மேலதிக உதாரணங்கள்.

***

ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் இப்பெரும் படைப்பாளிகள் மீது மறுவாசிப்பை ஏற்படுத்தியது என்றால் தெளிவத்தைக்கு வழங்கப்பட்ட விருது அவருக்கு புதுவாசிப்பை ஏற்படுத்தியது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட குழும நண்பர்கள் வரவழைக்கப்பட்ட அவரது படைப்புகளை ஊன்றி வாசித்திருந்தனர் என்பது இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்தும், அவருடன் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு புதிய நல்லெழுத்துக்காரனைக் கண்டடைந்த பரவசத்தினை அனைவரிடமுமே காண முடிந்தது. குறிப்பாக கோபி, சுனீல் கிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோரது கட்டுரைகளும், வி.சுரேஷின் வாழ்த்துரையும் மிக முக்கியமான ஆக்கங்கள்.

தெளிவத்தை எழுதிய, எழுதி இன்னும் அச்சு வடிவம் காணாத படைப்புகள் தமிழில் வெளி வந்திருப்பதும் வரவிருப்பதுமே இவ்விழாவின் மிக முக்கியமான மற்றொரு அம்சம்.

***

மேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் முன் வரிசையில் அமர்ந்து கொள்கிறேன் என்ற இயக்குநர் பாலாவின் கோரிக்கையை முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் ’நான் பேசல’ என வைத்த கோரிக்கையைப் போலவே இரக்கமற்று நிராகரித்தேன். எழுத்தாளர்கள் அமர்ந்திருக்கிற சபையில் சினிமாவுலகின் பிரதிநிதிகளாகத் தாம் இருப்பதில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் கூச்சம் கொள்கிறார்கள். அப்படி கூச்சமடைய வேண்டிய எவ்வளவோ மண்ணாந்தைகள் நாட்டில் வெட்கமில்லாமல் மேடைகளில் முன்நின்று சொல் வென்றவர்களாக இருக்கையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான படைப்புகளை உருவாக்கும் இந்த தனிக்குரல்களுக்கென்ன தயக்கமென்பதே என்னுடைய அபிப்ராயமாக உள்ளது.

சட்டென்று நான் மேடைக்கழைத்த அதிருப்தி பாலாவின் முகத்தில் தெரிந்தது. ஆனால், பிரமாதமாகப் பேசினார். தன்னுடைய படைப்புகள் எந்தெந்த சிறுகதைகள்/நாவல்களின் பாதிப்பில் உருவானவை என்பதைப் பற்றி, தன் படங்களில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பங்களிப்பதைப் பற்றி, எழுத்தாளர்கள் தயக்கம் தவிர்த்து சினிமாவில் அதிகம் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கே உரித்தான குறைவான சொற்களில் நிறைவாகப் பேசியமர்ந்தார்.

உண்மையில் அவர் தெளிவத்தையின் கதைகளை கேட்டுப்பெற்று வாசித்திருந்தார். தான் மேடைப்பேச்சாளனோ அல்லது இலக்கியப் பேச்சாளனோ இல்லையென்பதால் அதிகம் பேசவில்லை. நேர்பேச்செனில் இன்னமும் விரிவாக உங்களிடம் என் அபிப்ராயங்களைச் சொல்லியிருப்பேன் என தெளிவத்தையிடம் சொன்னார். பாலாவுடன் ஒளிப்பதிவாளரும் கவிஞருமான செழியனும் விழாவிற்கு வந்திருந்தார்.

***

இந்திரா பார்த்தசாரதியின் தலைமையுரையும், வி.சுரேஷின் வாசகானுபவமும்,  ஜெயமோகனின் வாழ்த்துரையும், ஆகியன விழாவின் ஹைலைட். ரவி சுப்ரமண்யம் சுள்ளிக்காடின் கவிதைகளுக்கு (மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்) தானே மெட்டமைத்துப் பாடினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஜோசப்பின் நான்கு கதைகளைக் குறித்த தன் திறனாய்வைப் பேசினார். தெளிவத்தையின் நெடிய ஏற்புரை ஈழ இலக்கிய சூழலைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்கியது.

***

ஒவ்வொரு  முறை விழா முடிந்ததும் கவனிப்பேன் அரங்கசாமிக்குப் புதிதாக ஒரு ஐம்பது நண்பர்கள் உருவாகியிருப்பார்கள். இது என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இணைய தளங்களில்  ஜெயமோகனை யாராவது வசைபாடுகிறார்களென்றால் அங்கே களமாடப் போவது நானும் அரங்கனும்தான். ஜெயனை ஓர் இழிசொல் சொன்னார்களெனில் நான் அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவர் மானசீகமான என் எதிரியாக மனதிற்குள் உருவெடுத்து விடுவார். என்னைக் காட்டிலும் அதிகம் முட்டி மோதுகிற அரங்கனுக்கு அவர்கள் பிற்பாடு நெருங்கிய நண்பர்களாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். எவரோடும் நல்லுறவை உருவாக்கிக்கொள்ளக்கூடிய கலை அறிந்தவர் அவர்.

விழா முடிந்ததும் ஓர் இலங்கை எழுத்தாளர் அரங்கனின் கையைப் பிடித்து  ‘எங்கட நாட்டிலருந்து ஆரேனும் இந்தியாவிற்கு வந்தா அரங்கசாமின்னு நம்மட ஆளு ஒருத்தர் உண்டுன்னு சொல்லியனுப்புவோமென’ கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார்.

***

நான்தான் விழாத்தொகுப்பாளன் என்பதில் இளவெயினிக்கு உடன்பாடில்லை. நண்பர்களே என முதல் வார்த்தையை துவங்கியதும் அழுது கூப்பாடு போட்டு அரங்கத்தை விட்டு அம்மாவுடன் வெளியேறினாள். அவளாவது பரவாயில்லை. கும்பகோணக் கவிராயன் சென்ஷியின் மகன் விழாவிற்கு வந்த குழந்தைகள் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவில்லையென தன் அதிருப்தியை விழா முழுக்க வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தான்.

***

விழாவிற்கான அனுமதிகளைப் பெற காவல்துறையை அணுகிய போதும், ஊடகங்களைச் சந்தித்த போதும், விழாவிற்கு அழைக்க கல்லூரிகளுக்கு, உள்ளூர் அமைப்புகளுக்குச் சென்ற போதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கென்று தனியான அறிமுகம் ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியிருப்பதை உணர்ந்தோம். உண்மையான அக்கறையுடனும், சரியான திட்டமிடலுடனும், மனம் ஒப்பி செய்கிறப் பணிகளுக்கு சமூகத்தில் உருவாகிற அங்கீகாரமும் மரியாதையும் அது.

சகல விதங்களிலும் விழா சிறப்புற நிகழ்ந்தேற உழைத்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் மானசீகமான நன்றியைச் சொல்லி நிறைந்த மனத்துடன் உறங்கச் செல்கிறேன்.

***

Thursday, December 12, 2013

யேசு கதைகள்

பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது.
யேசுவை ஒரு கடவுளாக அன்றி தத்துவஞானியாகப் புரிந்துகொள்ள இளமையில் வாசிக்கக் கிடைத்த ஓஷோவின் நூல்கள் உதவின. அவை ஒரு புதிய புரிதலை உருவாக்கின. ஸக்காரியாவின் யேசு திருச்சபைகளின் வேதப்புத்தகங்களின் வழியாக உருவாகி வந்த யேசு அல்ல. முற்றிலும் மதத்திற்கு அப்பாற்பட்ட, பரிதாபத்திற்குரிய, மீட்கப்பட வேண்டிய, அன்பும் கருணையும் காட்டப்பட வேண்டிய ஒரு சக நண்பனான யேசு.

'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியுனூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?!' என்ற படைவீரனின் கேள்வியில் உச்சம் பெறுகிறது 'யாருக்குத் தெரியும்?' எனும் முதல் கதை (இக்கதையினை ஏற்கெனவே எம்.எஸ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்)

அன்னம்மா டீச்சரின் நினைவுக்குறிப்புகள் கதையில் யேசு மீது தீவிர பிடிப்பு கொண்ட முதிர்கன்னி அன்னம்மா டீச்சர் தன் முப்பத்து மூன்றாம் பிறந்த நாளுக்குப் பிறகு 'இன்று முதல் நீ எனக்கு தம்பிதான்; என் வயதில் நீ இறந்து விட்டாய். இனி எனக்குத்தான் வயது கூடும். இனி நான் உன் அக்கா' என்கிறாள்.
கண்ணாடி பார்க்கும் வரை கதையில் தினமும் குளிக்க வாய்ப்பற்ற பாலஸ்தீன வாழ்வில் வேர்வையினாலும், தூசியினாலும் யேசுவின் தாடியில் பேன் பற்றிக்கொள்கிறது. கசகசப்பும் அரிப்பும் தாளவில்லை. முகச்சவரம் செய்து கொள்ள நினைக்கிறார். சல்லிக்காசு இல்லை. கூடவே, நீண்ட நாட்களாக ஒரு அடையாளமாக நிலைப்பெற்று விட்ட தாடியும், மீசையும் எடுத்து விட்டால் தான் எப்படி தோற்றமளிப்பேன் என்கிற மனக்கிலேசமும். ஒருவழியாக நாவிதரின் கடைக்குச் சென்ற யேசு முதன்முதலாகக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து பதட்டமடைந்து கடையை விட்டு குழப்பத்துடன் வெளியேறி மரியத்தின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அந்தோணியஸூக்கு போந்தியஸ் பிலாத்து கடிதம் எழுதுவதாக வரும் கதையில் 'வரலாறு யாரிடமும் கருணை காட்டுவதில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களையும் நம்ப வேண்டாம். ஏனெனில், அவர்களும் சரித்திரத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்டவர்கள்தாம்' என ஆரம்பித்து 'தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாதவர் ஒரு மீட்பரா?! ஒரு கணம் மீட்பவராகவும், மறுகணம் மீட்கப்பட வேண்டியவனாகவும் ஒருவனே எப்படி இருக்க முடியும்?!' என கேள்வி எழுப்புகிறார்.
செயலாளர் நினைவிழக்கிறார் கதையில் உயிர்த்தெழுந்து வரும் யேசுவை வழியில் சந்திக்கும் மரியம் 'உங்களுடைய தந்தையின் வீட்டில் உங்கள் ஆடைகளைத் துவைத்துத் தர ஒருவரும் இல்லையா?' என பரிதாபத்தோடு கேட்கிறாள்.

மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்கச் செய்கிறது இச்சிறிய நூல். ஸக்காரியாவின் பாய்ச்சல் மொழியும், இயல்பான சித்தரிப்புகளும், கூரிய அங்கதமும் நல்ல வாசிப்பனுபவத்தை தருகின்றன. 'குருத்தோலை நுனிகள் நிறைந்த தேவாலயத்தின் உட்புறம் கதிர் முற்றிய வயல்வெளி போலிருந்தது' போன்ற கொட்டிக்கிடக்கிற உவமைகளுக்காகவும், 'அவருடைய மூக்கின் நுனியிலிருந்து அவர் எதைப் பார்க்கிறாரோ அதுதான் அவருக்கு வாழ்க்கை' போன்ற சிரிப்பை வரவழைக்கும் வரிகளுக்காகவும் பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.
மூலமொழியில் வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது கே.வி. ஜெயஸ்ரீ-ன் மொழிபெயர்ப்பு. ஸக்காரியாவுக்கு இணையாக தமிழில் அதிகமும் யேசு பற்றிய கதையாடல்களை உருவாக்குகிற இன்னொருவர் ஜெயமோகன். அவரது யேசு கதைகளும் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே.

நூல்: யேசு கதைகள்
மலையாள மூலம்: பால் ஸக்காரியா
தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ
விலை: ரூ.150/-
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

Monday, December 9, 2013

எண்ணிச் சுட்ட பணியாரங்கள்

இன்றோடு கோவை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில் படுதோல்வி என்றே சொல்லலாம். கடை விரித்தேன் கொள்வாரில்லை எனக் கதறாத கடைக்காரர்கள் இல்லை. சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகி வருகின்றன. மதுரை விதிவிலக்கு என்கிறார்கள். அங்கே உள்ளூர் ஊடகங்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், கூட்டம் அலைமோதுகிறது என்கிறார்கள். கூடுமானவரை ஸ்பான்சர்களைப் பிடிப்பது, நல்ல முறையில் விளம்பரப்படுத்துவது, உள்ளூர் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகளை வரவைப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், கல்லூரிகளில் சலுகைக் கூப்பன்கள் விநியோகிப்பது என இன்னும் கொஞ்சம் இறங்கி வேலை செய்தாக வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

ஏழு நாட்கள் எங்களது அலுவலக ஸ்டாலில் இருந்தேன். எதிரிலேயே தமிழினி அண்ணாச்சி கடை. மாலை வேளைகளில் நாஞ்சில் நாடன், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், கால சுப்ரமணியம், க. ரத்தினம், பாதசாரி, புலம் லோகு, திரைவிமர்சகர் ஆனந்த் என கச்சேரி களை கட்டும். மிக மகிழ்ச்சியான நாட்கள். குறிப்பாக சு.வேணுகோபாலுடன் அவரது முனைவர் பட்ட ஆய்வு குறித்த உரையாடலும்; கால.சுப்ரமணியனுடன் பிரமிள் குறித்த உரையாடலும் ஓர் இளம் வாசகனுக்குப் புதிய வெளிச்சத்தை தரக்கூடியதாக இருந்தன.

புத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. பேப்பர் விலை, மின் பற்றாக்குறை, போக்குவரத்து என பதிப்புத் தொழிலின் முட்டுவழிச் செனவினங்கள் ஏறிப்போய் கிடக்கின்றன. விலையேற்றம் நியாயம்தான். வாசகனின் ஏழ்வை என ஒன்றிருக்கிறது. எண்ணிச்சுட்ட பணியார வாழ்வில் வாங்க நினைத்ததையெல்லாம் வாங்க வாழ்க்கை இடம் கொடுப்பதில்லை. கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் ஏதாவது லாட்டரி விழுந்தால், இயக்குனர்கள் அட்வான்ஸ் கொடுத்தால், அரங்கசாமியின் பினாமியாகும் அதிர்ஷ்டம் அடித்தால், முடியலத்துவம் மூவாயிரம் பிரதிகள் விற்றால் இன்னும் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கலாம்.

பட்டியல்:

1) விஷக்கன்னி - எஸ். கே. பொற்றேக்காட் - நேஷனல் புக் டிரஸ்ட்
2) இனி நான் உறங்கட்டும் - பி.கே. பாலகிருஷ்ணன் - சாகித்திய அகாதெமி
3) வனவாசி - விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய - விடியல் பதிப்பகம்
4) பறவை உலகம் - ஸலீம் அலி & லயீக் ஃபதேஹ் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்
5) பறவைகள் - ப.ஜெகநாதன் & ஆசை - க்ரியா
6) ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சலீம் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்
7) சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - சாகித்திய அகாதெமி
8) க. நா. சுப்பிரமண்யனின் தேர்ந்தெடுத்த கதைகள் - சாகித்திய அகாதெமி
9) மெளனியின் கதைகள் - சாகித்திய அகாதெமி
10) கு. அழகிரிசாமி கதைகள் - சாகித்திய அகாதெமி
11) பிரமிள் கவிதைகள் - லயம் வெளியீடு
12) லயம் இதழ்கள் - முழுத்தொகுப்பு - லயம் வெளியீடு
13) கால்புழுதி - கனக தூரிகா - சந்தியா பதிப்பகம்
14) கடல்புரத்தில் - வண்ணநிலவன் - பரிசல் பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)
15) வெண்ணிற இரவுகள் - தஸ்தவஸ்கி - புலம் வெளியீடு (கைப்பிரதி காணமற் போனதால்)
16) தர்பாரி ராகம் - ஸ்ரீ லால் சுக்ல - நேஷனல் புக் டிரஸ்ட்
17) திணையியல் கோட்பாடுகள் - பாமயன் - தடாகம் பதிப்பகம்
18) அக்னி நதி - குர் அதுல்ஐன் ஹைதர் - நேஷனல் புக் டிரஸ்ட்
19) பாட்டுத் திறம் - மகுடேஸ்வரன் - புலம் வெளியீடு
20) அங்கே இப்ப என்ன நேரம்? - அ. முத்துலிங்கம் - தமிழினி பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)
21) இராசேந்திர சோழன் குறுநாவல்கள் - தமிழினி பதிப்பகம்
22) அனுபவங்கள் அறிதல்கள் - நித்ய சைதன்ய யதி - யுனைடட் ரைட்டர்ஸ்
23) மீண்டெழுதலின் ரகசியம் - சுகந்தி சுப்ரமணியன் - யுனைடட் ரைட்டர்ஸ்
24) செந்நிற விடுதி - பால்ஸாக் - தமிழினி
25) நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு (ஜெயமோகன்) - யுனைடட் ரைட்டர்ஸ்
26) வண்ணம் பூசிய பறவை - ஜெர்ஸி கோஸின்ஸ்கி - புலம் வெளியீடு
27) ஜஸ்டின் - மார்க்விஸ் தே சாட் - புலம் வெளியீடு
28) மகிழ்ச்சியான இளவரசன் - ஆஸ்கார் வைல்டு - புலம் வெளியீடு
29) இசைக் கருவிகள் - பி. சைதன்ய தேவ - நேஷனல் புக் டிரஸ்ட்
30) நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா - சிந்தன் புக்ஸ்
31) ஈஷா ருசி - சமையல் புத்தகம் - ஈஷா யோகா மைய வெளியீடு