Monday, June 27, 2016

என்ன எழுதறீங்க தோழர்?

இரு இலக்கிய நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கீங்க என கேட்க மாட்டார்கள் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க என்றுதான் கேட்பார். இருவரும் பரஸ்பரம் எதுவுமே எழுதாமல் இலக்கியச்சூழல் ஏன் இத்தனை மாசுபட்டிருக்கு என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸூம், சரக்கு பாட்டிலுடன் செல்ஃபியும்தான் போடுவார்களென்றாலும் கூட இப்படிக் கேட்பதுதான் இலக்கிய மரபு.
சமீபத்திய உதாரண உரையாடல் ஒன்று உங்கள் பார்வைக்கு.
நான்: என்ன தோழர்.. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…?!
நண்பர்: ஒரு பெரிய முயற்சி தோழர்..
நான்: என்ன தோழர் பெரிய முயற்சி… எதும் நாவல் எழுதறீங்களா…?!
நண்பர்: ச்சே.. கம்ப்யூட்டர்ல தமிழ் டைப் அடிக்கலாம்னு எப்ப வந்திச்சோ.. அப்பவே நாவல் எழுதறதெல்லாம் சப்ப மேட்டராயிடுச்சி தோழர் (அப்ப.. நீ எத்தனடா எழுதியிருக்க வெண்ண..) இது வேற தோழர் இரண்டாயிரம் வருட தமிழிலக்கிய வரலாற்றில் யாரும் செய்து பார்த்திராத பெருமுயற்சி தோழர்…
நான்: என்ன நண்பா பீடிகை பலமா இருக்கு…
நண்பர்: ஒரு நெடுங்கவிதை எழுதறேன் தோழர்.. அச்சுல குறைஞ்சது நானூறு பக்கங்கள் வரும்..
நான்: இதுல என்ன தோழர் புதுமை வேண்டிக் கெடக்கு… ஏற்கனவே கம்பராமாயணம், சிலப்பதிகாரம்னு தமிழ்ல நெடுங்கவிதையாடல் மரபு இருக்கே…
நண்பர்: லூசு மாதிரி பேசாதீங்க தோழர்… அதெல்லாம் சிறு சிறு தனிக்கவிதைகள் கொண்ட தொகுப்பு… நான் எழுதப்போறது சிங்கிள் கவிதை நானூறு பக்கம்..
நான்: ‘என்ன தோழர்ர்ர்… என்ன சொல்றீங்க… நானூறு பக்கத்துக்கு ஒரு சிங்கிள் கவிதையா.. வாசிச்சு முடிக்கிறதுக்குள்ள அல்லு சில்லாயிடுமே.. கேட்கவே விபரீதமா இருக்கே.. தலைப்பு என்ன வச்சிருக்கீங்க..
நண்பர்: ‘குடை’
நான்: தலைப்ப இவ்வளவு சின்னதா வச்ச நீங்க கவிதையையும் கொஞ்சம் சிறுசா ப்ளான் பண்ணிருக்கலாம் தோழர்..
நண்பர்: லுசு மாதிரி பேசாதீங்க தோழர்.. (கப்பிப்பயலே.. நானாடா லூசு!) நீங்கள்லாம் காலம் காலமா கவிதைக்கு இலக்கணம்னு கற்பனை பண்ணிட்டு இருக்கிற விஷயத்தை நான் உடைக்கப் போறேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டுல உலகமொழிகள்ல எவனும் என்னைப் போல சிந்திச்சதில்ல. இலக்கியத்தில் புதுப்பாய்ச்சல்..! சரி… தோழர் நீங்க என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க…
நான்: நான் உங்க அளவுக்கு என் சிந்தனைகளை குறுக்கிக்கல தோழர்… புதுசா ஒரு சமயநூல் எழுதறேன் தோழர். பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற நூல்கள் எழுதப்பட்டு பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பின் காலணிய, பின் நவீனத்துவ, உலகமயமாக்கல் சூழல்ல மனிதனுக்குப் புதிய வேத நூல் ஒண்ணு தேவைப்படுது இல்லையா.. அதைத்தான் பூர்த்தி பண்ணலாம்னு இருக்கேன் (தக்காளி… யாரு கிட்ட… நீ படிச்ச ஸ்கூல்ல நான் பிரின்ஸிபால் டா மொமண்ட்!)
(டீக்கடைக்காரன் சடாரென திரும்பி முறைக்க தமிழிலக்கிய தளகர்த்தர்களாகிய நாங்களிருவரும் டீக்கு காசு எவன் அழுவது எனும் சில்லறையுகத்தின் கவலைக்குள் தள்ளப்பட்டோம்)

கவர்னரின் ஹெலிகாப்டர்

நண்பர்களே, சொல்லித் தெரியவேண்டியிராத ஆளுமைகளால் நிறைந்திருக்கிறது இந்த அவை. இந்த முன்னோடிக் கலைஞர்களை வணங்கி, ஓர் எளிய வாசகனாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ நூல் எனக்களித்த வாசகானுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சிறந்த பாடல் என்பது சிறந்த மெட்டே என்று இளையராஜா அடிக்கடி சொல்வாரென கேள்வியுற்றிருக்கிறேன். ஒரு நல்ல பாடலுக்கு சில சமயங்களில் பொருத்தமான வரிகள் அமையாமல் போய்விடலாம்; பாடியவர் அதற்குரிய பாவத்துடன் பாடி நீதி செய்யாமற் போய்விடலாம்; டெக்னோ இசைக்கருவிகள் இசைக்கப்படாமல் அல்லது உயர்தர தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பாடலின் மெட்டு உங்கள் ஆன்மாவைத் தொடும் என்றால் அந்தப்பாடல் நிற்கும். காலம் உள்ளவரை காற்று உள்ளவரை நம் காது மடல்களில் கூடு கட்டி குடியிருக்கும்.
கருணா இளையராஜாவின் தீவிர உபாசகர். தன் எழுத்துக்களில் வாஞ்சை எனும் மெட்டை அவர் உருவாக்குகிறார். பின்பு அதில் துல்லியமான பால்ய நினைவுகளை உயர்தர அங்கதச் சுவையுடன் கலந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார். நாம் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றி, வடிவ ஒழுங்கைப் பற்றி கவலையின்றி அந்தக் கதையில் லயித்து விடுகிறோம். அவரது கதைகளிலோ கட்டுரைகளிலோ உவமை, உருவகம், படிமம், நுண்சித்தரிப்பு, அகச்சித்தரிப்பு என எந்தவிதமான சிக்கல்களும் இல்லை. அவர் சொல்லும் கதையே அவரது மெட்டு. அந்த மெட்டுக்குள் இவை எல்லாமே அடங்கி விடுகிறது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையான சாமந்தி இதற்கு ஆகப்பொருத்தமான உதாரணம். முனுசாமியின் நிலத்தில் இஸ்ரோவின் ராக்கெட் உதிரி பாகம் ஒன்று விழுந்து விடுகிறது. அதனையடுத்து நிகழும் களேபரங்களில் மெள்ள மெள்ள ஒரு சிறிய குடியானவனின் கனவுகள் சிதைவதன் சித்திரம். அரச பயங்கரவாதமென்பது அகப்பட்டவனைத் தூக்கிலிடுவது மட்டுமல்ல அழையா விருந்தாளியாக ஓர் அழகிய குடும்பத்தில் புகுந்து அதன் நிம்மதியை அலைக்கழித்துச் செல்வதும் அரச பயங்கரவாதத்தின் சிறு துளியே. நேரடியாக அதைச்சுட்டும் ஒரு வரி கூட அக்கதையில் இல்லை. இதுதான் கருணா உருவாக்கும் மெட்டு.
கதையில் போகிற போக்கில் ஒரு வரியை எழுதுகிறார். அந்த வீட்டுச் சின்னப்பெண் அரசு இலவச தொலைக்காட்சியில் இருக்கும் சின்னத்தை சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறாள். அமுவைப் போலவே என்னையும் வியப்பிலாழ்த்திய வரி அது. அந்த ஒரு வரியே தனிக்கதைகளை உருவாக்கக் கூடியது. தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவலில் சிறிய ஒருவரித் தகவல் வரும். கதை நாயகனின் சிறிய மகளுக்கு மீன் என்றால் அலர்ஜி. ஏனெனில் ஒரு முறை சமைக்க வாங்கி வந்த மீனின் வயிற்றில் உண்டு செரிமானம் ஆகாத ஒரு மனித விரல் இருக்கும். ஒரு வரிதான், ஆனால் அது வரலாற்றின் மாபெரும் இன அழிப்பு ஒன்றில் அடித்துக் கடலில் வீசி காணாமல் ஆக்கப்பட்ட எத்தனையோ இளைஞர்களைப் பிரதிநிதி செய்யும் விரலல்லவா? அதைப் போல அந்தச் சின்னப்பெண் சுரண்டி அகற்ற நினைப்பது எதை என்ற கேள்வி பல்வேறு சாத்தியங்களை நோக்கி வாசகனைச் செலுத்தக் கூடியது.
கருணாவின் வாஞ்சை களங்கமற்றது. முன்பின் அறியாதவர்கள் மீதும் எளியவர்கள் மீதும் மட்டுமல்ல அது சகல ஜீவராசிகளின் மீதும் படர்கிறது. கிளிகள் வந்து கொத்துவதற்காகவே திணை பயிரிடும் விவசாயி கருணாவை எனக்குத் தெரியும். கூண்டுப்பறவைகளுக்கும் மரம் வேண்டுமென மரத்தைச் சுற்றியே கூண்டமைப்பவர். கலாப்ரியாவின் மொழிகளிலேயே சொல்வதானால் அவருக்கு மரங்கொத்தியின் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், பாஷைகளும் கூட தெரிந்திருக்கலாம்.
கவர்னரின் ஹெலிகாப்டர் நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் இணையத்தில் வெளியானவை. அவற்றை அப்போதே உடனுக்குடன் வாசித்து என் நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். அவரது ஒவ்வொரு கட்டுரைகளும் குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் இணைய வாசகர்களேனும் வாசித்த கட்டுரைகள். குறிப்பாக சுஜாதாவின் ஆட்டோகிராஃப் மற்றும் ராங் கால் ஆகிய இரண்டு கட்டுரைகளும் என் கணிப்பில் சில லட்சம் பேர்களால் வாசிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற முன்னணி படைப்பாளர்கள் இந்த கட்டுரைகளைத் தங்களது தளத்திலும் வெளியிட்டு இவர் மீது அடையாளம் பாய்ச்சியவர்கள்.
தி இந்து தமிழின் வருகைக்குப் பிறகு டிம் பார்கஸ், தாமஸ் எல் ஃபிரிட் மேன், பால் க்ரூக்மேன், ஜூலியன் பார்ன்ஸ் போன்ற சர்வதேச அளவில் புகழ்மிக்க கட்டுரையாளர்களின் மொழிபெயர்ப்புகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை ஆழ்ந்து வாசிக்கையில் உலகெங்கிலும் எழுதப்படுகிற சிறந்த கட்டுரைகளைப் பற்றிய ஒரு பிடி கிடைக்கிறது. பீடிகைகளற்ற பளீரென்ற துவக்கம், புல்லட் ரயிலைப் போன்ற சர சர வேகம், மையத்தை விட்டு விலகாத போக்கு, உயர்தர அங்கதம், சமகாலத்தன்மை, தேய்வழக்குகள் இல்லாமை போன்றன அவற்றின் பொதுத்தன்மைகளாக இருக்கின்றன. இவை கருணாவின் கட்டுரைகளோடு கச்சிதமாகப் பொருந்திப் போவதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக கருப்புகொடி கட்டுரை. பலத்த பாதுகாப்புகளை சுலபமாக தாண்டி ஜெயவர்த்தனேவிடம் கையொப்பம் வாங்க வந்த கருணாநிதி எனும் பெயருடைய சிறுவன். ஒரு திகில் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை வாசகனுக்குக் கடத்த வல்லது.
கருணாவின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர் உருவாகி உருவான வேகத்திலேயே அழிந்து போன பேசிக், போர்டிரான் புரோக்ராம்களை நினைவு வைத்திருந்து எழுதுகிறார். முப்பத்தைந்து வருடத்திற்கு முன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்து போட்டுக்கொண்டிருந்த கால்குலஸ் தியரம் அவருக்கின்னும் நினைவிருக்கிறது. சைக்கிளை சாத்தி வைக்கும் சுவற்றில் பெடல் பட்டு லேசாகப் பெயர்ந்த சுவரின் காரைப் புள்ளி நினைவிருக்கிறது.
கருணா சுஜாதாவின் சிஷ்யப்பிள்ளை. கதைமாந்தருக்கு வேணு பிரசாத் எனப் பெயரிடும் அளவிற்கு சுஜாதா தாசன். அதைப் பகிரங்கமாகச் சொல்வதில் ஒரு கூச்சமும் கொள்ளாத நேர்மை அவருக்குண்டு. ஆனால் நான் அவரை அமுத்துவின் பின்னத்தி என்றே சொல்லுவேன். சிரிக்கச் சிரிக்க தகவல் செறிவுடன் சித்தரிப்பது.. கதையின் இறுதியில் அவர்களோடு சேர்ந்து சிரித்த பாவத்திற்கு கையில் ஒரு டைனமட்டை கொடுத்து விடுவது என இவர்களுக்குள் ஒற்றுமை அதிகம். இவர்கள் இருவரது கடைசி அத்தியாயங்களும் நம் வாய் வழியாக கையை நுழைத்து இதயத்தை ஒரு முறை பிசைந்து விடக்கூடிய அபாயம் கொண்டவை.
இவ்வளவு துல்லியமான நினைவும், சரளமான உரைநடையும் கொண்ட கருணா எழுதவேண்டியது ஒரு நாவலே என நான் அடிக்கடி சொல்வேன். இந்த மேடையிலும் அதையே சொல்லி அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
(14.08.2015 அன்று நெல்லையில் நடைபெற்ற ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ நூல் அறிமுகவிழாவில் பேசிய உரை)

அவ்வை முளரி


கலைஞர்களால் நிறைந்திருக்கிறது இந்த அவை. முளரி எனும் தமிழ்ச்சொல் தாமரை மலரைச் சுட்டும். வனம் என்றொரு பொருளும் உண்டு என்கிறது மதுரை தமிழ்ப் பேரகராதி. அவ்வைமுளரி எனும் சொற்சேர்க்கை கோணங்கியினுடையது. எந்த ஒரு சொல்லையும் வேறொரு உயரத்திற்கு தூக்கியடிக்கக் கூடிய ரசவாதி அவர். அவ்வை அறைக்குள் அமர்ந்தெழுதிய கவிஞி அல்ல. அலைந்து திரிந்தவள். ஓவியர் சந்ருவும் அவரது வழித்தோன்றல்களும் அப்படிப்பட்ட கலைஞர்களே என்பதைச் குறிப்புணர்த்தும் விதமாக ‘அவ்வை அலைந்து திரியும் வனம்’ என பொருள் படும்படி இந்தக் கல்லூரிக்குப் பெயர் தேர்வு செய்திருக்கிறார்.
ஒரு பேச்சரங்கில் இலக்கியத்தின் பயன் மதிப்பென்ன என்றொரு வழக்கமான பல்லவி ஜெயமோகனிடம் முன்வைக்கப்பட்டது. மனிதன் உயிர்த்திருக்க உணவே பிரதானம் என்றிருக்கையில் அதை விடுத்து இலக்கியத்தை கலைகளைப் பேசி திரிவதன் பொருளென்ன என்பது வினா எழுப்பியவரின் வாதமாக இருந்தது. “சோற்றால் மட்டுமே நிரப்பி விடமுடியாத இடமென ஏதேனும் ஒன்று உங்களுக்குள் இருக்குமாயின் அதை இலக்கியம் நிரப்பும்” என அவர் பதிலிறுத்தார். வாழ்தல் என்பதை வெறுமே உண்டு உறங்கி புணர்ந்து மறைதல் மட்டுமே என கருதுபவர்களுக்கு மத்தியில்தான் மீண்டும் மீண்டும் கலையின் அவசியத்தைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள் படைப்பாளிகள். இந்த விஷம் தோய்ந்த கேள்விகள் ஏன் கலைஞர்களிடம் மட்டுமே முன் வைக்கப்படுகிறதென்பது புரியவில்லை. விஷத்தை விழுங்கி விழுங்கிதான் கலைஞன் பளிங்காகிறான் எனும் ஹருகி முரகாமியின் சொற்களை இத்தருணத்தில் பொருத்தப்பாடு கருதி நினைவு கூர்கிறேன்.
கலையின் முதற் தகுதியே பயன்மதிப்பினை நிராகரிப்பதுதான் என்பதென் துணிபு. கட்டற்ற அழகுணர்ச்சியோடு பாயுமொரு உள்ளார்ந்த அறிவுச் செயல்பாடு. இலக்கியமும் கலையும் பலநூறு நிகர் வாழ்விற்கான சாத்தியங்களை வழங்குகிறது. ஒவ்வொரு கலைப்படைப்பும் நம்மை மேலும் விரித்துக்கொள்ளவே உதவுகிறது.
நவீன ஓவியங்களும் வரைகலை தொழில்நுட்பங்களும் தமிழ்ப் படைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஓர் இலக்கிய வாசகனாக என்னால் உணர முடிகிறது. நவீன ஓவியங்களுக்கும் நவீன கவிதைகளுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. மீபுனைவு பெருநாவல்களில் வரைகலை தொழில்நுட்பத்தின் செல்வாக்கினை பா.வெங்கடேசன் சமீபத்திய இலக்கிய இதழ் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். எவ்வகையில் பார்த்தாலும் ஒரு தமிழிலக்கிய வாசகனுக்கு ஓவியங்களும் சிற்பங்களும் உபரி ரசனைகளாக இருப்பது தவிர்க்க ஏலாதது.
ஓவியர் சந்ருவினுடைய நேர்காணல்களும் நேர் உரையாடல்களும் எனக்கு ஓவியங்களைப் புரிந்துகொள்ளவும் கூடவே நவீன கவிதைகளோடு நெருங்கி உறவாடவும் உதவியிருக்கின்றன. அவ்வகையில் அவர் எங்களுக்கு மானசீக ஆசானும் கூட. இந்த மாமேதையின் வழிகாட்டலில் பயில இருக்கும் மாணவர்களை சற்றே பொறாமையுடன் வாழ்த்தி விடைபெறுகிறேன்.
(02-10-15 அன்று அவ்வைமுளரி நுண்கலைக் கல்லூரி திறப்பு விழாவில் வழங்கிய வாழ்த்துரையின் சுருக்கப்பட்ட வடிவம்)

இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் - ஒரு விவாதம்


நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தும் ஏன் ஒரு பாடலாசிரியராக வசனகர்த்தாவாக சினிமாவில் நீடிக்க இயலவில்லை என கவி பிரான்சிஸ் கிருபாவிடம் அவர் தள்ளாடாத தருணத்தில் கேட்டேன். குடி ஒரு காரணமில்லை. எத்தனையோ திரைக்கலைஞர்கள் போதை இல்லாமல் தொழிலுக்கு வருவதில்லை. உண்மையில் போதையில் மட்டுமே அவர்களால் இயல்பாக இருக்க முடியும். பிரான்சிஸ் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னார் ‘இலக்கியம்தான்’. ஓர் இலக்கியவாதி – இதில் இலக்கிய வாசகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் – இயங்கும் விழுமியங்களே வேறு. சினிமா உள்ளிட்ட தொழிற்துறைகளின் விழுமியங்கள் வேறு. இலக்கியம் உருவாக்கியளித்த தரமும் கையளித்த அறமும் செய்தொழிலில் சிக்கல் உருவாக்கிக்கொண்டே இருக்கும் என்றார். சில நிஜ உதாரணங்களைச் சொன்னார்.
இலக்கிய வாசிப்பின் நேரடிப் பயனாக நம்முள் விளையும் மனிதம் கறாரான நிர்வாகத்திற்கு இடையூறு செய்வதை நான் அன்றாட வாழ்வில் அவ்வப்போது உணர்வதுண்டு. இலக்கியப் பரிச்சயம் ஓரளவுக்கு மேல் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா எனும் கேள்வியுடன் மற்றொரு துணைக்கேள்வியும் எழுந்தது. தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய உபாசகர்களிடம் இலக்கியம் உங்களுக்குத் தருவதென்ன எனும் கேள்வியைக் கேட்டேன். நிகர்வாழ்வு அனுபவம், ஆன்மிகமான உச்ச தருணங்கள், மிகச்சிறந்த போதை, சுயத்தை நோக்கிய தேடல், மனங்களைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் உதவுகிறது என விதம் விதமாய் பதில்கள் வந்தன. சரி இத்தனை சிறப்பு மிக்க இலக்கியத்தை நீங்கள் ஏன் உங்கள் வீட்டிற்குள் அறிமுகப்படுத்தவில்லை? தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டத்திற்கு மனைவி மக்களோடு வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தீவிர வாசகர்களின் பிள்ளைகள் கூட எதையும் வாசிப்பதில்லை. ஏன் வாசகர்கள்.. எழுத்தாளர்களது வீட்டின் நிலை என்ன? பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மகன்கள் கூட எதையும் வாசிப்பதில்லை. ஏன் இலக்கியம் வாசல் படிக்கு வெளியே நிறுத்தப்படுகிறது?
ஈரட்டிக்கு வரும் வழியில் தொழிலதிபர்களான சிவா, அரங்கா, செந்தில், விஜயசூரியன் ஆகியோருடன் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்தேன். நால்வரும் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வாசிப்பு தங்களைக் கட்டுப்படுத்துவதாகவே நினைத்தார்கள். இரண்டு அடிகள் எடுத்து வைத்து ஏறியடிக்க, ஈவிரக்கமின்றி திறமைக் குறைபாடுள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கொழுத்த லாபம் பார்க்க, தொழில் எதிரியை தின்று செரித்து முன்னேற என பல உதாரண சந்தர்ப்பங்கள்.
திருக்குறளரசியுடன் விவாதித்தபோது இரண்டு விஷயங்களை சொன்னாள். பெரும்பாலானவர்கள் ஒரு இமேஜை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டுதான் இலக்கியப் பரிச்சயம் கொள்கிறார்கள். பிற்பாடு தாங்கள் தங்களுக்குரிய இடத்தை சென்றடைய முடியாமைக்கு வாசிப்பின் கவனச் சிதறலே காரணம் என மிகையாக கற்பிதம் செய்துகொள்கிறார்கள். நூல் வாசிப்பும் விவாதங்களும் கைவிட முடியாததொரு போதையென்றே கருதுகிறார்கள். ஆகவே, தங்கள் பிள்ளைகளை பணத்தை நோக்கிய பாதையில் விசையுடன் செலுத்துகிறார்கள். குழுமத்திலேயே ஓரிருவரைத் தவிர பிள்ளைகளுக்கு இலக்கியப் பயிற்சியை அறிமுகப்படுத்துபவர்கள், மனைவியோடு இணைந்து வாசித்து விவாதிப்பவர்கள், குடும்பத்துடன் கூட்டங்களுக்கு வருபவர்கள் மிக குறைவாக இருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்றாள்.
புகழ், பதவி, பணம், பெண்ணாசை போன்ற எளிய இலக்குகளை உத்தேசித்து எழுத வந்த பலரும் எழுத்தினால் அவை சாத்தியமல்ல என்பதை உணர்ந்ததும் தங்கள் பிள்ளைகளை வேறு திசைகளில் செலுத்துகிறார்கள் எனும் அவளது கருத்தும் புறக்கணிக்கத்தக்கதல்ல என்றே தோன்றுகிறது.
ஈரட்டி பயணத்தில் கோல்ஃப் ஆட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. உலகின் உச்சபட்ச சி.இ.ஓக்கள் கோல்ஃப் ஆடுகிறார்கள். ஜனாதிபதிகள், நாடுகளின் அதிபர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் விஞ்ஞானிகள் ஏன் ஆன்மிகவாதிகளும் கூட கோல்ஃப் ஆடுகிறார்கள். எதிராளி இல்லாத தன்னோடு தான் ஆடும் இந்த ஆட்டம் பிஸினஸ் ஸ்டாட்டஜிக்களை உருவாக்கவும், தொழில் நெருக்கடிகளைத் திறம்பட சமாளிக்கவும் பேருதவியாக இருக்கிறது என்கிறார்கள். பெரும்பாலான தொழில் ஐடியாக்கள் (ஐபிஎல் போல) கோல்ஃப் மைதானத்தில் கருக்கொண்டவையே. கோல்ஃப் ஆடும் ஒரு சதவிகிதத்திற்கும் கீழான ஒரு கூட்டம்தான் மொத்த உலகையும் ஆண்டு கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இலக்கியம் தராத எந்த ஒன்றை ஒரு குச்சியும் பந்தும் உருவாக்கி கையளிக்கிறது?
லெளகீக பயன்மதிப்பைக் கொண்டு இலக்கியத்தினை அளவிட முடியாது என்ற போதிலும் என்னுடைய கேள்விகளை இவ்வாறாக சுருக்கி எளிமைப்படுத்துகிறேன்:

1) இலக்கியப் பரிச்சயம் ஒருவனின் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா?

2) அதன் பொருட்டே வெறும் மனப்பழக்கமாகக் கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப் படுகிறதா?

3) இலக்கியமும் ஒரு போதைதானா?
***
மேற்கண்ட எனது கேள்வி ஜெயமோகன் தளத்தில் வெளியானது; நண்பர்களின் பல்வேறு பதில்களும் இறுதியாக ஜெயமோகன் அளித்த பதில்களும் ஒரு விவாதமாக தொகுக்கப்பட்டு இந்த இணைப்பில் உள்ளது: https://docs.google.com/document/d/1ew8PQT7z0bwCnqskVROsM5l-jNoXmbqd0ZITvZNM7rI/edit 

புதிய தொழில்கள் முடங்குவது ஏன்?


புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்குவது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எளிதாக்கப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்க அனுமதி எளிதாகக் கிடைக்கிறது. நிதியைத் திரட்டிக்கொள்ள வங்கிக் கடன், க்ரவுட் ஃபண்டிங் என ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. என்னையொத்த பல மேலாளர்கள், தாங்கள் செய்துவந்த வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்குகிறார்கள். இதெல்லாம் சரிதான். ஆனால், அவர்களில் பலர் சிலகாலம் வரைதான் தாக்குப்பிடிக்கிறார்கள். கடன்களைப் பெற்றுச் சமாளிக்கிறார்கள். பின்னர், பெரிய நஷ்டத்துக்குப் பிறகு தொழிலைக் கைவிடுகிறார்கள். இந்தியாவில் ‘ஸ்டார்ட் அப்’புகள் துவங்கும் வேகத்தைவிட தொழில்களைக் கைவிடும் வேகம் அதிகமாக இருக்கிறது.

இவர்களால் ஏன் தாக்குப் பிடிக்க முடியவில்லை? இவர்களது கனவையும் உழைப்பையும் பணத்தையும் விழுங்கிய முதலை எது? ஏன் இந்தியாவில் ‘ஸ்டார்ட்- அப்’என்பதே செயலிகளை (ஆப்ஸ்) உருவாக்குவது அல்லது ஆன் - லைன் ரீடெய்லிங், மென்பொருள் வடிவமைப்பு, விளம்பர நிறுவனம் என்றே பெரிதும் புரிந்துகொள்ளப்படுகிறது? சந்தையின் தேவைகள், வாய்ப்புகள் இவற்றை முற்றாகப் புரிந்துகொண்டுதான் இவர்கள் இறங்குகிறார்களா என்பதெல்லாம் மிக முக்கியமான கேள்விகள்!

தோல்வியின் மூலம் எது?

என்னுடைய நான்கு நண்பர்கள் சேர்ந்து புதியதாக ‘பேமண்ட் கேட்வே’சேவையை அளிக்கும் நிறுவனத்தை உருவாக்கினார்கள். ஒருவர் ‘க்ளோஸ் சர்க்யூட்’தொழில் செய்து வந்தார். இன்னொருவர் விளம்பர நிறுவனம் நடத்திவந்தவர். மற்றொருவர் தனியார் வங்கி மேலாளர். நான்காவது நபர் மட்டும் இத்துறையில் ஓரளவு அனுபவம் உள்ளவர். ‘பேமெண்ட் கேட்வே’சேவைக்கு நல்ல சேவைக் கட்டணம் கிடைக்கும் என்பதும் எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களுமே இணைய சேவையில் ஈடுபடும் தேவை இருப்பதால் சந்தை வாய்ப்புகள் அதிகம் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஏற்கெனவே தாங்கள் செய்துவரும் தொழிலில் வாடிக்கையாளராக அறிமுகம் ஆன நிறுவனங்களைத் தொடர்புகொண்டு இந்தச் சேவையை அளித்தால்கூட லாபம் நிச்சயம் என்று நினைத்தார்கள் நண்பர்கள்.

அற்புதமான எதிர்காலத்தை நோக்கிய கனவுகளுடன் புதிய அலுவலகத்தைத் திறந்தார்கள். ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். வங்கிக்கான காப்புத்தொகையும் தொழில்நுட்பத்துக்கான முதலீடும் மிக அதிகளவில் தேவைப்பட்டன. எனவே, ஏற்கெனவே தாங்கள் செய்துவந்த தொழிலில் இருந்த பங்குதாரர் பங்குகளை விற்று நிதி திரட்டினர். பணம் போதவில்லை. வங்கிக்கடன் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் இழுத்தடித்தது. வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடம் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கினர். மார்க்கெட்டிங் ஆட்களைச் சந்தைக்கு அனுப்பிய பின்தான், தங்களது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே ‘இ-காமர்ஸ்’துறையில் ஈடுபட்டிருப்பதும் முதன்மையான பேமண்ட் கேட்வே நிறுவனங்களோடு ஏற்கெனவே வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதும் தெரியவந்தது.

இரண்டாம் கட்ட நகரத்தில் பாரம்பரிய முறையில் வர்த்தகம் செய்துவருபவர்களிடம் இ-காமர்ஸின் சாத்தியங்களை இவர்களால் சொல்லி விளங்க வைக்கவும் முடியவில்லை. முட்டுவழிச் செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போக, முதலீடு இல்லாமல் நிறுவனம் தள்ளாடியது. ஒரு கட்டத்தில் அவரவர் சொந்த சொத்துக்களை விற்று நிறுவனத்தைக் காப்பாற்ற முயன்றனர். இறுதியில் பலத்த நஷ்டத்துக்குப் பின் நிறுவனம் கைவிடப்பட்டது. நால்வரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தனர். என்ன பிசகு?

அனுபவமின்மை

அனுபவத்தைத் திரட்டிக்கொண்டு தொழிலில் இறங்காமல், ஆரம்பித்துவிட்டுப் பின்னர் திணற வேண்டி வந்தது. ஒரு தொழில் முதலில் தவழ்ந்து, பிறகு மெள்ள எழுந்து விழுந்து நடைபழகி, அதன் பிறகே ஓட முடியும். ஆனால், அதுவரை தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வருவாய் ஆதாரங்களை இவர்கள் உருவாக்கவில்லை. ஏற்கெனவே செய்துவந்த தொழில்களையும் இதற்காகச் சேதப்படுத்தியது எரிகொள்ளியால் தலைகோதியது போலாயிற்று. ஆரம்பித்த தொழிலில் எந்தப் புதுமை நோக்கும் இல்லை. ஏற்கெனவே செய்தவர்கள் வழங்கும் சேவையையும் வாய்ப்புகளையும்தான் வழங்க முடிந்தது. வெற்றியைத் தடுத்த அழிவு சக்தி எது என்பதைக் கண்டறிந்துகொள்ள முடியாத தேக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக அனுபவஸ்தர்களின் வழிகாட்டல் கிடைக்கவே இல்லை.

ஒரு தொழில் வெற்றியடைய சிறப்பான யோசனைகள் மட்டும் போதுமானவையல்ல. களத்தில் அந்த யோசனைகள் நிலைபெற செயலாக்கத்திறன் அவசியம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி என்பது வெறுமனே இணையத்தில் கடை விரிக்கும் யோசனை மட்டுமல்ல. சொந்த விநியோகக் கட்டமைப்பை உருவாக்க முடிந்ததும், இந்தியா போன்ற பாரம்பரியச் சந்தையில் ‘பேமண்ட் ஆன் டெலிவரி’ எனும் கனவைச் சாத்தியப்படுத்த முடிந்ததும்தான் காரணம்.

திட்டமிட்ட பாதையில் தொழில் நகராதபோது, திட்டத்தில் சிறிய மாற்றம் செய்வது அல்லது திட்டத்தையே மாற்றிக்கொள்வது அவசியம். ஜாம்பவான் நிறுவனமான ‘நெட்ஃபிலிக்ஸ்’ சந்தை சாத்தியங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வீடியோக்களை டிவிடியாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கியது. தயாரிப்பு சந்தைக்கு வரும் முன் பல்வேறு ஆய்வுகள் செய்திருந்தாலும், திட்டம் தோற்றது. கொஞ்சமும் யோசிக்காமல் அந்த திட்டத்தையே கைவிட்டது அந்நிறுவனம். ஆப்பிள், ஃபேஸ்புக் உட்பட இன்று உலகை ஆளும் பெரிய நிறுவனங்கள்கூட தங்களின் ஆதார யோசனைகளிலிருந்து சிறிது விலகியோ அல்லது முற்றிலும் மாறுபட்டோதான் இந்த இடத்தை அடைந்திருக்கின்றன. ஆனால், அணையா நெடு விளக்காக, பிடித்தபடியாக நிற்பவர்கள் கடைசியில் தோல்வியடைந்து வெளியேறிவிடுகிறார்கள்.

எப்படித் திட்டமிடுவது?

போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், எந்த உயரிய லட்சியமும் புதுமை நாட்டமும் இல்லாமல் வெறுமனே முதலீட்டைத் திரட்டி துவங்கப்படும் ‘ஸ்டார்ட்- அப்’களால் தனி மனிதனுக்கோ நாட்டுக்கோ எந்தப் பலனும் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகளும் உருவாகப்போவதில்லை. மேலாக, நாடு முழுக்கக் கடனாளிகளின் எண்ணிக்கைதான் பெருத்துப்போகும். ‘பெரிதாகத் திட்டமிடு.. சிறிதாகத் தொடங்கு’ எனும் கனிந்த பனியாவின் சொற்கள் இந்த இளைஞர்களை எட்டவே இல்லை.

இன்று தொழில் முனைவோருக்கு இதுபோன்ற வழிகாட்டல் விஷயங்களில் உதவும் அரசு அமைப்புகள், சில தனியார் தொழில் அமைப்புகள் இருந்தாலும் பெருகிவரும் இளைஞர் சக்திக்கும் ‘ஸ்டார்ட்- அப்’ மோகத்துக்கும் அவை போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. ஒவ்வொரு தனி மனிதனும் தனியார் நிறுவனங்களும்கூட இந்த வழிகாட்டலை முன்னெடுக்க முடியும். ‘ஸ்டார்ட்- அப் இந்தியா’, ‘மேக்-இன் இந்தியா’ போன்ற அரசு முழக்கங்களோடு தனியார் நிறுவனங்களும் கைகோக்காமல் எதிர்பார்த்த மாற்றம் சாத்தியமில்லை.

உதாரணத்துக்கு, நாளிதழ் விநியோகத்தை எடுத்துக்கொள்ளலாம். நாளிதழ்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மிக வறுமையான பின்புலத்தில் உள்ளவர்கள். நாளிதழ் முகவர்களும்கூடப் பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான். பார்சல் கட்டுபவர்கள், வாகனங்களை இயக்குபவர்கள் - இவர்களது பிள்ளைகளுக்கும், டெலிவரிப் பையன்களுக்கும் வழிகாட்டும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கலாம். வலுவான ஊடகங்களால் துறைசார் வல்லுநர்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும். வெற்றியாளர்களின் அனுபவங்கள் இவர்களுக்கு மிகப் பெரிய திறப்பாக அமையலாம். இந்தத் தொடர்புகள் பிற்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் இடர்களின்போது ஆலோசனைகள், அறிவுரைகள் பெற உதவலாம். ஒரு நகரத்தின் இரண்டாயிரம் பேப்பர் பையன்களிலிருந்து ஒரு இருபது தொழில் முனைவோர் உருவாகக் கூடும். இது நிச்சயமான சமூகப் பொருளாதார மாற்றத்தை உருவாக்கும்.

பணமோ சிபாரிசோ திட்டமோ அல்ல. அனுபவஸ்தர்களின் வெற்றியாளர்களின் நேரமும் அக்கறையான வழிகாட்டலுமே இளைஞர்களுக்குப் பெரிதும் தேவை. இன்று ‘ஸ்டார்ட்-அப்’முழக்கம் நகர வேண்டியதும் அந்தத் திசையில்தான்!

(தி இந்து நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை) 

மஞ்சிமாவும் மழை நாளும்

வெள்ளிக்கிழமை மாலை தம்பானூரில் வந்திறங்கியபோது திருவனந்தபுரம் மழையில் ஊறிக்கொண்டிருந்தது. நள்ளிரவுக்கு மேல் கிண்ட்ஃப்ரா தொழிற்பேட்டையில் எனக்கொரு சோலி இருந்தது. அதுவரை சமுத்திரக் கரை சென்று வாய் பார்த்துக் கொண்டிருக்கலாமென முடிவெடுத்தேன். கடற்சீற்றம் கரையோர வீடுகளை இழுத்துக் கொண்டிருந்தது. சுனாமி பயத்தில் மீண்டும் தம்பானூருக்கே ஓடி வந்து பண்டிதர் ராமச்சந்திரனை அழைத்தேன். அவர் வரமுடியாத தொலைவிலிருந்தார். சரி கம்மாட்டி பாடம் பார்க்கலாம் என கைரளி தியேட்டர் வந்தால் அங்கே சர்வதேச ஆவண மற்றும் குறும்பட திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வில் பினராயி விஜயன் உரையாற்றிக் கொண்டிருந்தார். முன்பதிவு செய்யாமல் அழைப்பிதழ் இல்லாமல் திரைப்பட விழாக்களில் படம் பார்க்க முடியாது. இருப்பினும் கேரளத்தின் ஆன்மா மீது நம்பிக்கை வைத்து நுழைவாயிலில் நின்றிருந்த ஒரு மஞ்சிமா மோகனை அணுகினேன். அவர் அழகிய சிவந்த உதட்டைப் பிதுக்கி കഴിഞ്ഞ என்றாள்.
கையில் நடுப்பக்க கட்டுரை வெளியாகி இருந்த தி இந்து இருந்தது. விரித்துக் காண்பித்து நானொரு கட்டுரையாளன் என்றேன். பட்டைக் கண்ணாடி பரட்டைத் தலை தாடி இல்லாத எவரையும் கேரளப் பெண்கள் எழுதுகிறவன் என நம்ப மாட்டார்கள். செல்லிடப்பேசியில் வலைதளத்தை திறந்து காண்பித்தேன். அதில் ஏழு வயதில் எடுத்த போட்டோவைத்தான் இன்னமும் புரொபைலாக வைத்திருந்திருக்கிறேன். பக்கத்திலிருந்த பாவனாவோடும் கோபிகாவோடும் கலந்து பேசி சரி வாருங்கள் என அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார்கள். சுபஸ்ய சீக்கிர என மனதிற்குள் அவர்களை ஆசீர்வதித்தேன். இந்த இடத்தில் புககா நுழைவாயிலில் சாருநிவேதிதாவை நிற்க வைத்த கடமை வீரன் நினைவுக்கு வந்தால் இரு மாநிலத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் புரியும். இன்னொரு ஆச்சரியம் பினராயியின் உரை. உலகளவிலும் இந்திய அளவிலும் வெளியான முக்கியமான ஆவண குறும்படங்கள் அவை உருவாக்கிய அலை என செறிவான உரை.
ஆப்கன் போர் பின்புலத்தில் எழுதப்பட்ட தி அவுட் போஸ்ட் எனும் நூலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டே ஒன்’ துவக்க விழா சிறப்பு குறும்படமாகத் திரையிடப்பட்டது. முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரான ஹென்றி ஹ்யூகஸினால் இயக்கப்பட்டது. அமெரிக்க-ஆப்கன் பெண்மணியான ஃபெடா விவாகரத்திற்குப் பின் அமெரிக்க ராணுவத்தின் மொழிபெயர்ப்பாளராக பணியில் சேர்கிறாள். ஆப்கன் போர்க்களத்தில் அவளது முதல் நாள் பணி அனுபவமே திரைப்படம். ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கைது செய்ய சுற்றி வளைக்கிறது அமெரிக்க ராணுவம். அவனது மனைவி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வேதனையில் துடிக்கிறாள். அவளுக்கு பிரசவம் பார்க்க வேண்டிய நெருக்கடி ஃபெடாவுக்கு ஏற்படுகிறது. இறுதியில் என்ன நிகழ்கிறதென்பதே கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து திரைப்படங்களுள் ஒன்று. ஃபெடாவாக நடித்திருக்கும் லைலா அலிஸடாவின் நடிப்பு உன்னதமாக இருந்தது.
அடுத்து டேவிஸ் இயக்கிய ‘ஹி நேம்டு மீ மலாலா’ திரையிடப்பட்டது. அடிப்படைவாதத்திற்கு எதிராக மேற்கு கையில் எடுத்துக்கொண்ட அல்லது உருவாக்கிய கதாபாத்திரமே மலாலா எனும் தரப்பின் விமர்சனங்களைக் கூட நாசூக்காக கவனத்தில் எடுத்துக்கொண்டு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள படம். பாகிஸ்தானின் ஸ்வாட் சமவெளியில் சுடப்பட்ட மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் கண் விழிக்கிறாள். நினைவு திரும்பியதும் முதலில் கேட்ட கேள்வி ‘எங்கே என் தந்தை?’ மலாலாவின் ஆளுமை உருவாக்கத்தில் ஜியாவுதீன் யூசஃபியின் செல்வாக்கை ஆவணப்படம் கவனப்படுத்துகிறது. மலாலாவுக்குள் இருக்கும் பதின்ம வயதின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.
இரண்டாம் நாள் வார இறுதி என்பதால் தோழன் அஜிதனை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்தேன். சமூக புகைப்படக் கலைஞன் என தன்னை அறிவித்துக்கொண்டவர் செபாஸ்டியோ சல்கோடா. உலகமெங்கும் சுற்றித் திரிந்து இவர் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஆக்கிரமிப்பு, போர், இனக்கலவரம், இயற்கை வள சுரண்டல், திணிக்கப்பட்ட பஞ்சம் போன்றவற்றால் கொத்துக்கொத்தாக மானுடம் அழிந்ததின் கலை ஆவணங்கள். சைபீரியாவிலும் அலாஸ்காவிலும் பப்புநியூகினியாவிலும் இவர் எடுத்த சூழியல் புகைப்படங்கள் இயற்கைக்கு இவர் எழுதிய காதல் கடிதங்கள் என விமர்சகர்களால் புகழப்படுபவை. இவரது வாழ்க்கை விவரண படம் ‘தி சால்ட் ஆஃப் தி எர்த்’. புகழ்மிக்க ஜெர்மானிய இயக்குனர் விம் வெண்டர்ஸூம் செபாஸ்டியோவின் மகனும் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு வெளியான ஆவண படங்களிலேயே மிக முக்கியமான படம் இது என்றான் அஜிதன். எனக்கு படத்தின் பெயரே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. 1954-ல் அமெரிக்க சுரங்கங்களில் வெடித்த புரட்சியை மையமாக கொண்டு இதே பெயரில் ஒரு சினிமா வெளியானது. அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட முதல் திரைப்படம் எனும் பெருமையுடைத்த படம் அது. மெக்ஸிகோ தங்கச் சுரங்கங்களில் தங்களை அடமானம் வைத்துக்கொண்டவர்களின் புகைப்படங்களுடன் தன் சுயசரிதையை சொல்ல ஆரம்பிக்கிறார் செபாஸ்டியோ. பிரேசிலில் பிறந்து பொருளாதாரம் கற்று பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்து கொள்ளைச் சம்பளம் வாங்கும் வேலையை உதறிவிட்டு உலகமெங்கும் சுற்றி உயிரைப் பணயம் வைத்து புகைப்படங்கள் எடுத்து முதுமையில் வறண்டு போன தன் சொந்த சமவெளிக்குத் திரும்பி அங்கே காணாமல் போன கானகத்தை சொந்த முயற்சியில் மீட்புருவாக்கம் செய்து - மோதிர வளையத்தையொத்த வாழ்பனுபவத்தைக் கொண்ட சாமான்யனை விழி விரியச் செய்யும் மாபெரும் வாழ்வு செபாஸ்டியோவுடையது. பொருளாதாரத்தைக் கற்றவராக ஒவ்வொரு பேரழிவின் பின்பும் உள்ள சுரண்டலையும் அவர் தன் அனுபவங்களோடு சொல்லிச் செல்கிறார். உயிரைப் பணயம் வைத்து சைபீரியாவில் வால்ரஸ்களை அவர் படம் பிடிக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. புகைப்பட திரைப்பட ஆர்வலர்கள் தவறவே விடக் கூடாத படம்.
பல்வேறு புற அழுத்தங்களுக்கு மத்தியிலும் வனம் பிரிய மனம் துணியாத ஆதிவாசிகளைப் பற்றிய கே.பி. முரளீதரனின் ‘அழிவு’ மூர்க்கமான நம்பிக்கைகளைப் பகடி செய்யும் பஷில் காலீல் இயக்கிய ‘ஆவே மரியா’, மழைக்காடுகளைப் பற்றிய சந்தேஷின் பிபிஸி ஆவணப்படமான ‘சயந்த்ரீஷ்’ ஆகியன மிக முக்கியமான காட்சியனுபவமாக இருந்தது.
ஃபோகஸில் பல்வேறு திரைவிழாக்களில் விருதுகள் வென்றவை எனும் அறிவிப்புடன் நிறைய்ய இந்திய குறும்படங்களைக் காட்டினார்கள். பலத்த ஏமாற்றமும் ஆயாசமுமே மிஞ்சியது. புல்லாங்குழல், சித்தார், ஷெனாய் என அவரவர் நிலத்துக்குறிய வாத்தியங்களின் பின்ணணி இசை சோகப் பிழியல்களுடன் மெ து வா க நகர்ந்து சோதிக்கின்றன. அனுபவம் மிக்க பார்வையாளர்கள் கையேட்டில் கவனமாக குறித்து வைத்துக்கொண்டு இந்திய குறும்படங்களிடம் தெறித்து விடுகிறார்கள்.
மும்பை புல்லட், குருகுலம், அஸோம்பிரிக்டோ போன்ற ‘விருது’ வென்ற இந்திய காவியங்களைப் பார்த்ததும் எங்கள் கலைத்தாகம் அடங்கி வெளியே வந்தோம். காஃபிடேரியாவில் ஜடாமுடியும் தாடியும் வைத்திருந்த ஒரு ஓட்டேரி நரியுடன் மஞ்சிமா செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். மனம் வெதும்பி வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். மழை சோவென கொட்டத் துவங்கியது.

அஞ்சலி: குமரகுருபரன்

கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார். கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார். இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் என பேசிக்கொண்டிருந்தார். தினமலரின் சில பதிப்புகளுக்கு உயர் பதவி வகித்தவர். அந்நாளைய தொடர்புகளை இன்றும் பேணி வருபவர் என்பதால் அரசியல் உள்ளடி விவகாரங்களில் அவருக்குப் புலமை இருந்தது. கொஞ்ச நேரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது குடியைப் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன். சர்க்கரை ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்சனையும் கிடையாது உடற்பயிற்சி தேவையின்றியே ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். ஐந்து ஃபாஸ்டர் பியர்களைக் காலி செய்த பின்னும் தள்ளாட்டமின்றி பேசிக்கொண்டிருந்தார். மதுவிடுதி மூடும் நேரத்தைத் தாண்டியது. பரிசாரகன் அவரது தோரணையைப் பார்த்து சீக்கிரம் கிளம்புங்களென சொல்லத் தயங்கினான். சரேலென திரும்பி தம்பி நீ கொஞ்ச நேரம் பக்கத்துல வராதே என்று விட்டு பேச்சைத் துவங்கினார். ‘பொதுவாக அதீத தோரணைகள் ஜெயமோகனுக்கு உவப்பானவையல்ல.. எனக்குத் தெரிந்து நீர் ஒருத்தர்தான் விதிவிலக்கு ..’ என் அவதானத்தை சொன்னேன். குமார் உடனே தலையை உதறி ‘அந்தாளு ஆளையும் பார்க்க மாட்டான்.. பூலையும் பார்க்க மாட்டான்.. அதனாலதான் எனக்கு ஆசான்..’ என்றார்.
குமார் கால்நடை மருத்துவம் படித்தவர். இதழியல் ஆர்வத்தால் நாளிதழ்களுக்கு வந்தார். மலர் டிவியின் பூர்வாங்க அணியில் இருந்தார். கொஞ்ச காலம் குமுதத்தில் பணியாற்றினார். குமுதம் ஜங்ஷன் இவரது பொறுப்பில் வெளிவந்தது. பிற்பாடு சேனல்களுக்கான டிரெய்லர், ப்ரொமோ உள்ளிட்ட எடிட்டிங் சேவைகளை செய்து தரும் நிறுவனத்தை துவங்கினார். விகேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் லைவாக தொலைக்காட்சியில் விளம்பரங்களைக் காட்டி டோல் ஃப்ரீ எண்களில் நேரடியாக விற்கும் சேவையையும் அவரது நிறுவனம் அளித்து வந்தது. கடைசி சில வருடங்களில் தொழில் கைகொடுக்கவில்லை என்கிற கவலை அவருக்கிருந்தது.
குமார் தன்னைப் பற்றிய ரகசியங்கள் தனது அபிப்ராயங்கள் இரண்டையும் மறைக்கிறவர் அல்ல. எதையும் உடைத்துப் பேசுகிறவர் என்பதனாலேயே அவருக்கு எடைக்கு எடை நண்பர்களும் எதிரிகளும் இருந்தார்கள். அந்தந்த நேரத்து மனோதர்மத்திற்கு ஏற்ப அதிரடியாகச் செயல்படுபவர். திடீரென கலக ஸ்டேட்டஸ்களைப் போடுவார். யாரை கிழித்து தொங்க விட்டாரோ அவரை நினைத்து சின்னாட்களில் கண்ணீர் மல்குவார். ஃபேஸ்புக்கை விட்டு திடீரென மாயமாவார். திடீரென வந்து குதித்து ஆட்டையைக் கலைப்பார். அர்த்த புஷ்டியோடு ஒரு விமர்சனத்தை வைப்பார். எதிர்பாராத தருணத்தில் லும்பன் மொழிக்கு தாவி கலவரப்படுத்துவார். மார்த்தாண்டன் விருதைப் புறக்கணித்தார்; இயல் விருதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது சிறிய வீடு நண்பர்களின் கொண்டாட்ட ஸ்தலமாக எப்போதும் இருந்தது. எவ்வளவு கருத்து வேறுபாடுகளுடனும் நட்பைப் பேண முடிகிற நபராக இருந்தார். தமிழில் ஒரே நேரத்தில் சாருநிவேதிதாவுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இன்னபிற இலக்கிய வகைமைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் மேல் பிரியம் இருந்தது. மூன்று மணி நேரப் பேச்சில் சாரு எனக்கு அப்பன்; ஜெயமோகன் எனக்கு ஆசான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் சொக்கியது; அவரை வலுக்கட்டாயமாக கிளப்பி குடியகத்தை விட்டு வெளியே வந்தோம். டாக்ஸி ஏதுமில்லை. அவரை எனது ஈருளியில் ஏற்றிக்கொண்டேன். ‘சாரு.. சொன்னமாதிரி நீரு இருநூறு கிலோ கறிதாம்யா..’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். ஒரு விடுதியறையில் அவரை இறக்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.
வெள்ளி காலையில் என்னய்யா நம்ம விருது வாங்கினா மட்டும் எந்த பேப்பர்லயும் வர்றதில்ல என்றார். அச்சு ஊடகங்களில் செய்தி வரவழைக்க முடிகிற அளவிற்கு நான் பெரிய ஆளில்லை என சற்றே காரமான உரையாடல். சிறிது நேரத்திலேயே மீண்டும் கொஞ்சல். பிறகு நான் வேலைகளில் ஆழ்ந்து அவரை மறந்து விட்டேன். இன்று திடீரென குண்டு வெடித்தாற் போல அவரது மரணச் செய்தி.
குமாருக்கு உள்ளே ஒரு டிஜே இருந்தான். எனக்குள்ளும் ஒரு டிஜே. நாங்களிருவரும் உள்டப்பியும் முகநூல் சுவற்றிலும் மாறி மாறி பாடல்களைப் பரிமாறிக்கொள்வோம். நான் இந்த வேடிக்கை விளையாட்டிற்கு “# ஸாரி குரு” எனப் பெயரிட்டிருந்தேன்.
என் இனிய நண்பனே உனக்கான எனது இறுதி இசைத்துணுக்கு https://www.youtube.com/watch?v=aWIE0PX1uXk “# ஸாரி குரு   

நான் ஏன் தலித்தும் அல்ல?

 குளிர்ந்த காற்று சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஓர் இனிய மாலையில் மிக ஆபத்தான புத்தகத்தைப் பற்றி பேச நாம் குழுமியிருக்கிறோம். மிகப் புராதனமானதும் கனம் தோறும் புதிய பரிமாணங்களைக் கொண்டு முன்னகர்வதும் எதிர் தரப்பு மெளனமாக கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே அனுதியிருக்கக் கூடியதுமான ‘தலித்’ உரையாடல்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை மானுடவியல் சமூகவியல் நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் ஆழங்கால் பட்டவரும் இலக்கியத்தில் தேர்ந்த அறிஞரும் புனைவிலக்கியவாதியும் பேராசிரியருமான திரு.டி.தர்மராஜ் எழுதியிருப்பது எவ்வளவு ஆபத்தானது? இந்த நியாயமற்ற போருக்கு இந்த உரையாடலுக்கு முற்றிலும் புதியவனான நான் நண்பன் எனும் முறையில் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு கலை விமர்சகர் தீப்தா ஆச்சாரின் நேர்காணல் ஒன்று தி இந்துவில் வெளியானது. இந்திய நவீன ஓவியங்களின் உள்ளுறையும் கருப்பொருளும் உள்ளடுக்கும் சாதியப் பரிமாணம் கொண்டவைதான். இதைக் கோடிட்டு காட்டுவதுதான் தலித் ஓவியங்கள் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். டெல்லியின் சவி சவர்க்கர் மற்றும் நமது சந்ரு மாஸ்டரின் ஓவியங்களை இவ்வகைமையைச் சார்ந்தது என அவர் தெரிவித்திருந்தார். அறியாச் சிறுவனாகிய எனக்கு ‘தலித் ஓவியம்’ எனும் சொல்லாடல் ஒரு திடுக்கிடலைத் தந்தது. ஏற்கனவே தலித் இலக்கியம் எனும் பஞ்சாயத்தே இருபத்தைந்து ஆண்டுகளாகத் தீர்ந்திடாத நிலையில் இது என்ன புதுசாக தலித் ஓவியம். அதிலும் மிக ஆழமான உள்ளுணர்வு சார்ந்த வெளிப்பாட்டைக் கொண்ட சந்ரு மாஸ்டரைப் போன்ற மேதைகளை இப்பட்டியல் குறுக்கி விடாதா? தலித் ஓவியங்களைத் தொடர்ந்து தலித் கட்டடக்கலை, தலித் சிற்பம், தலித் சமையல், தலித் தையல் என புதிய வகைமைகள் உருவாகுமா எனும் கேள்விகளோடு சந்ரு மாஸ்டரை நோக்கி ஓடினேன்.
அதுவும் ஒரு இனிய மாலை. அவரும் நானும் விவாதிக்க ஆரம்பித்தோம். நான்தான் இலக்கியக் கோட்டி ஆயிற்றே. பேச்சு ‘தலித் இலக்கியங்களை யார் எழுதலாம்’ எனும் பண்டார வன்னியன் காலத்துப் பழைய விவாதத்திற்குப் போயிற்று. நான் பூமணியின் பிறகு, ஜெயமோகனின் வெள்ளை யானை போன்ற நாவல்களை முன் வைத்து அவரோடு வாதிட்டுக் கொண்டிருந்தேன். அவர் பிறிதொருவர் புலன்களுக்குத் தட்டுப்படாத தலித் வாழ்வின் நுண்ணிய சிக்கல்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். விவாதம் விரிந்து கொண்டே இருந்தது. அவர் பேசப் பேச நான் மறுதலித்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் கவனமாக தலித் அல்லாதவர்களை தலித் உரையாடலிலிருந்து அப்புறப்படுத்துகிறீர்கள் என்றேன். சமூக மனிதனாக எனக்கு பெண்ணூரிமை, உலகமயமாக்கல், சுற்றுச்சூழல், பேரினவாதம் இன்ன பிற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க இருக்கும் உரிமை சமூக நீதியைப் பற்றிப் பேசவும் உண்டு என்றேன். விவாதத்தின் ஒரு கட்டத்தில் நான் முன்னெப்போதும் கேட்டிராத ஒரு கடுத்த வார்த்தையை உதிர்த்து ‘நீங்க யாருடா இந்தப் பிரச்சனைகளைப் பேசுறதுக்கு.. ஏன் எங்களுக்கு என்ன வேணும்னு நாங்க பேசிக்கிட மாட்டமா.. நீங்க சரியில்லைங்கறத தொடர்ந்து உக்கிரமா சொல்லிக்கிட்டே இருக்கறதும் எங்க செயல்பாட்டோட ஒரு பகுதிதான்.. நீங்க அத கேட்டுத்தாண்டா ஆகணும்’ என்றார். நான் காயடிக்கப்பட்டதைப் போல உணர்ந்தேன். ஒரு விவாதத்திலிருந்து இதைப் பேசும் தகுதி உனக்கில்லையென நான் முதன் முறையாக வெளியேற்றப்பட்ட தருணம் அது. இதை இங்கே பகிர்வதன் நோக்கம் சந்ரு மாஸ்டரால் நான் அவமதிக்கப்பட்டேன் என்பதைச் சொல்வதற்காக அல்ல. நம்முடைய குருமரபிலும் இன்றைய கார்ப்பரேட் நிர்வாக முறையிலும் அவமதிப்பு என்பது ஒரு முக்கியமான கற்றுக்கொடுக்கும் முறை. சில விஷயங்கள் அவமதிப்பு இல்லாமல் மூளைக்குள் ஏறாது.
எனது நண்பர்களின் காதல் விவகாரங்களில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அவ்வப்போது எனக்கு நேரும். அத்தகு விவகாரங்களில் மிகுந்த சிக்கலானது ஒரு வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இஸ்லாமிய பெண்ணை காதலித்து விடுவது. இந்த காதல்களுக்காகப் பரிந்து பேச போகும் தருணங்களில் பெண் தரப்பில் பெரும்பாலும் வன்முறையோ எதிர்ப்போ சிறிதும் இருக்காது. மிக அமைதியாக மிக உறுதியான குரலில் ‘நாங்க ஒண்ணும் காதலுக்கு எதிர்ப்பில்ல தம்பி.. பையனை முஸ்லீமா மாறச் சொல்லுங்க.. பொண்ணைத் தர்றோம்’என்பார்கள். தலித் அல்லாத ஒருவனுக்கு தலித் உரையாடலில் இடம் இல்லை என்பதும் கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒன்றுதான். ஆம் தலித் உரையாடல் ஒரு மதமாகிப் போய்விட்டது. அங்கே வேற்று மதத்தினருக்கு இடமே இல்லை என குழப்பத்துடன் அன்றிரவு உறங்கிப் போனேன்.
டி.தர்மராஜின் நாஎத அல்ல நூல் இந்தக் குழப்பங்களைத் தீர்க்கும் என நினைத்தால் அது ஏராளமான துணைக் கேள்விகளின் மூலம் இந்தக் குழப்பத்தை மேலும் தீவிரமடையச் செய்கிறது. தலித் எழுத்தை தலித் அல்லாதோர் எழுதக்கூடாதோ என்றால் ஏன் செட்டியார் இலக்கியத்தையோ வெள்ளாளர் இலக்கியத்தையோ அவர்கள் அல்லாதோர் எழுதக்கூடாதா எனும் கேள்வி ஏழவில்லை? இது அத்தகைய அடையாளங்களால் உருவாகும் ஆதாயங்களை மனதில் வைத்து எழுப்பக் கூடிய பண்டார வாதம் என்கிறார். அரசியல் பொருளாதார லாபங்களைத் துறந்து தலித் வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக்கொள்ள முன்வரும் முன்மாதிரியற்ற ஒரு செயல்திட்டம் பேராசிரியரால் முன் வைக்கப்படுகிறது. திகைப்பூட்டும் அந்த முன் வடிவம் மேலதிக விவாதங்களுக்கு வழிகோலுவதாக இருக்குமென நான் நினைக்கிறேன்.
இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை எனும் கட்டுரை இத்தொகுதியின் மிக முக்கியமான சுவாரஸ்யமான ஒரு கட்டுரையாகப் படுகிறது. நாலாபுறமும் மாட்டுக்கறி வரலாற்றை அலசி கடைசியில் அவற்றை சமைப்பதில் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நுண்ணிய அசூயையும் அதை சமைக்க நமக்குத் தெரியாது என்பதுமே ஒத்துக்கொள்ளக் கூடிய காரணங்களாக இருக்கின்றன. ஒரு பெரும் புனைவுக்குரிய தன்மைகளுடன் நாற்புறமும் விரியும் கட்டுரை. அதனுள்ளே அவரது சின்னாத்தாளின் காதல் சரிதம் ஒரு சிறுகதையாக இருக்கிறது. விரித்து நாவலாக எழுதும் சாத்தியமுள்ள ஜெ.என்.யூவின் மாயக்கவர்ச்சி சூழல் இருக்கிறது.
மெட்ராஸ் திரைப்படத்தை அதன் திரையாக்கத்திற்காக திரைக்கதை பயிலும் மாணவனாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நுண்ணிய உள்ளடுக்குகளை டி.ஆர் அவிழ்க்கும் முறைமை ஆச்சர்யம் தருகிறது. எவ்வளவு விஷயங்களைத் தவற விட்டிருக்கிறோம் என்பது புரிகிறது.
இந்த நூலை நான் பல இடங்களில் வைத்து வாசித்தேன். அலுவலக மேஜையில், பேருந்தில் பயணிக்கையில், ரயிலில், பைக்கை மெக்கானிக்கிடம் கொடுத்து விட்டு காத்திருக்கையில், உணவுக்காக ஆர்டர் செய்து விட்டு காத்திருக்கையில் - ஒரு நூலை ஒரு அமர்வில் வாசிக்கும் வாழ்க்கை முறையும் இல்லை - அதற்குரிய பொறுமையான பயிற்சியும் இல்லை என்பதால் - இந்த நூலின் அட்டையைப் பார்த்து சிறிய திடுக்கிடலுடன் மின்னும் கண்கள் அப்புறம் என்னை இயல்பானவனாக நடத்த முடியாத தடுமாற்றத்திலிருந்தே இந்நூலையும் இது பேசும் சிக்கல்களையும் எளிதாகப் புரிந்து கொள்கிறேன். கடந்த ஒரு வார காலமாக இந்தப் புத்தகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்நூலையும் என்னையும் சேர்த்துப் பார்க்கும் சிலர் மெள்ளத் தயங்கியபடி சுற்றி வளைத்து கேட்க விரும்பும் கேள்வி ‘நீ ஒரு பறையனா?’ என்பதே. அதை நான் புரிந்து கொள்கிறேன். சிலருக்கு அதிரடியாக நான் பறையன் அல்லது பறையன் இல்லை எனும் பதில்களில் எது உங்களுக்கு ஆத்மதிருப்தியளிக்கும் என திருப்பிக் கேட்டேன்.
பொருளாதார முன்னேற்றம் இந்த சிக்கல்களைத் தீர்த்து விடுமா என்றால் அதற்குரிய வாய்ப்பே இங்கு மறுக்கப்படுகிறது என்கிறார். அரசியல் அதிகாரம் இச்சிக்கலைக் குறைக்குமா என்றால் அதற்குரிய முன்னுதாரணமே உலகம் முழுக்க இல்லை என்கிறார். கல்வியில் முன்னேறி அறிவுப்புலத்தைக் கைப்பற்றினால் மாறிவிடுமா என்றால் நானே ஒரு முன்னுதாரணமென நகைக்கிறார். இலக்கியம் மாற்றுமா என்றால் இருபத்தைந்து வருட தலித் இலக்கியம் ஒரு முட்டுச் சந்தில் பரிதாபகரமாக தவிக்கிறது என்கிறார். சினிமாவா என்றால் இப்போதுதான் மெட்ராஸ், பன்றி, சாய்ரத் என உரையாடலே துவக்கியிருக்கிறது என்கிறார். இந்நூல் எவ்வகையிலும் பிரச்சனைகளுக்கான தீர்வு நூல் அல்ல. இந்தப் பத்துக் கட்டுரைகளின் மூலம் மீண்டும் ஒரு புதிய உரையாடலைத் துவக்கியிருக்கிறார், நீண்ட நெடிய தலித் விவாதங்களில் ஒரு தவிர்க்க இயலாத தரப்பாக இந்த நூலை மாற்றியிருக்கிறார். அந்த வகையில் இந்நூல் தலித் அல்லாதவர்களும் வாசிக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
இந்நூலில் திடுக்கிட வைக்கிற அல்லது மேலதிக விவாதங்களைக் கோருகிற நிறைய்ய துணை விஷயங்கள் உள்ளன. ஒரு நூல் வெளியிட்டு விழாவில் அத்தனைக்கும் ஆசிரியனிடமிருந்து தெளிவை எதிர்பார்த்துக்கொள்ள இயலாதுதான். உதாரணமாக சிலவற்றை மட்டும் இங்கே கேட்கலாமென தோன்றுகிறது.
1. ஒடுக்கப்பட்டவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்தால் சமத்துவம் பேணப்படும் என்கிறார். அரசியல் அதிகார தளத்தில் நிறுவன தளங்களில் நமக்கு இதில் எந்த முன்மாதிரியும் இல்லை.
2. கைசிக நாடகத்தின் மீட்புருவாக்கம் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த விஜயநகரத்தை மீட்புறுவாக்கம் செய்வதே - வெளிப்படையான பிராமண திரட்சியை உருவாக்குகிறது என்கிறார். அனைத்து கலைகளும் சடங்கிலிருந்தே துவங்குகிறது என்றால் சடங்கு கோலோச்சிய கலைகளை மீட்புருவாக்கம் ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வியின் ஆபத்து திகைப்பை உருவாக்குகிறது. மெலட்டூர் பாகவத மேளாவிலிருந்து பேட்டையில் கணியான் ஜாதியினர் நிகழ்த்தும் மோகனம் வரை இந்த லாஜிக்கை பொருத்திப் பார்த்தால் எந்த கலையையும் போஷிக்க வேண்டிய தேவையென்னவாக இருக்க முடியும்?
இந்த நூலின் மொழிநடை மயக்கமூட்டுவது. புனைவிலக்கியவாதிகள் கூட பயன்படுத்தியிராத பல புதிய உத்திகளை கட்டுரையாக்கத்தில் பயன்படுத்துகிறார். அதுவே நெடும் கட்டுரைகளை வாசிக்கும் அயற்சியிலிருந்து நம்மை மீட்கிறது. ஆணவக்கொலை போன்ற நிம்மதியிழக்கச் செய்யும் விவகாரங்களைக் கூட சமநிலை இழக்காமல் லும்பன் மொழிக்குத் தாவாமல் பதட்டமோ கோபமோ அச்சமோ சுயபச்சாதபமோ அல்லது நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசரமோ இல்லாமல் கூட ஒருவரால் எழுத முடியும் என்பதே சூழலின் ஆச்சர்யங்களுள் ஒன்று. சங்கர் படுகொலை வீடியோ கலப்புத் திருமணம் செய்த இரு வலுவான இடைநிலை மற்றும் மதங்களைச் சார்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்து உடைத்து நொறுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தவனாக என்னுள் உருவாக்கிய சமநிலைக் குலைவை இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன். மீண்டும் மீண்டும் ஒரு பைத்தியத்தைப் போல அரற்றிக்கொண்டும் சொந்தத் தம்பியை இழந்த துக்கத்திலும் தலித் தலைவர்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உள்ளார்ந்த ஆவலுடனும் நான் இருந்தேன். ஆனால், டிஆரின் அந்தக் கட்டுரை ஒரு சிந்தனையாளராக அவரது இடம் தமிழில் எத்தகையது என்பதைக் காட்டியது.
நூலை வாசித்து முடித்த பின் புதிய குழப்பங்கள் தரும் ஆயாசத்துடன் மீண்டும் இந்த வரிகளை வாசித்துக் கொண்டேன். கடந்த ஒரு நூற்றாண்டாக நாம் பேசியிருக்கக் கூடிய பொதுவுடைமை சித்தாந்ததங்கள் பகுத்தறிவுக் கொள்கைகள் தீவிர கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் விடலைத்தனங்களாகவே நின்று விட்டன என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியா?
இந்த ஆபத்தான நூலில் தர்மராஜ் எழுப்பும் கேள்விகளை அவரது விவாத கருவிகளைக் கொண்டு சுயமாக எழுப்பிப் பார்த்தால் நான் ஒரு வாணியச் செட்டியாரும் இல்லை.. ஒரு நாடாரும் இல்லை.. ஒரு போயரும் இல்லை..கிறிஸ்தவனும் இல்லை.. இந்துவும் இல்லை.. இந்தியனும் இல்லை.. தமிழனும் இல்லை.. இப்போதைக்கு நான் ஒரு பெருஞ்சமூக வெறுப்பாளன் மட்டுமே. இதையும் கூட டிஆர் நாளைய விவாதத்தில் உடைத்து ஏறியக் கூடிய சாத்தியம் உண்டு.
தர்மராஜிற்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.
(25/06/16 அன்று நெல்லையில் நடந்த ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை)


நெல்லை நினைவலைகள்


17 மாத வனவாசம் முடித்து மீண்டும் கோவைக்கே கிளம்புகிறேன். தலைப்பையும் முதல் வரியையும் பார்த்ததும் ‘அம்பி நோஸ்டால்ஜியாவை ஆரம்பிச்சுட்டன்’ என தலை தெறிக்க ஓடாதீர் உலகத்தீரே.. நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குலுக்கல் முறையில் ஆச்சர்யமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன.
இந்த ஊர் என்னுடையது. இந்த மண்ணில்தான் என் உப்பிருக்கிறது என்ற போதும் பத்து வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒருவனை அதே வெயிலும் சாதியுணர்வும் வன்முறையும் வாசலில் வந்து நின்று வா தம்பி என வரவேற்றால் திகைத்துப் போய் விட மாட்டேனா? நுண்ணிய மனவிலக்கம் ஒன்று வந்த நாள் முதலே என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இம்மனவிலக்கம் ‘தம்பி என்ன ஆளுக்க..’ கேள்விகளால் நாளுக்கு நாள் வலுப்பெற நான் இந்தப் பாழ் நிலத்திலிருந்து விடுபட்டு ஓடவே ஆத்மார்த்தமாக விரும்பினேன். ஒரு பணியிலிருந்து விலக மேலதிக விசையுடன் அதைச் செய்து முடிப்பதுதான் ஒரே வழி. நான் குனிந்த தலை நிமிராமல் பெரும் ஓட்டத்தை ஓடத் துவங்கினேன்.
நான் வந்திறங்கிய ஜனவரி மாதம் (2015) மழைக்குப் பதில் கொலைகள் விழுந்து கொண்டிருந்தன. ஜனவரியில் மட்டும் சற்றேறக்குறைய இருபத்தைந்து கொலைகள். வீட்டைச் சுற்றி ஐந்தாறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நாற்புறமும் 144 அமலில் இருந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான எங்கள் அலுவல காவலாளி யாருக்கோ போட்டு வைத்த ‘ஸ்கெட்ச்சில்’ துரதிர்ஷ்டமாக சிக்கி பல துண்டங்களாக வெள்ளைத் துணியில் கட்டப்பட்டு மார்ச்சுவரியில் கிடந்தார். திருக்குறளரசி ஏக மனதாக இந்த ஊரில் வாழவே முடியாது என்றாள். வீட்டை குளிரூட்டி, கார் வாங்கிக் கொடுத்தெல்லாம் கூட தாஜா செய்ய முடியவில்லை. கொடு வெயில். அதைக் காட்டிலும் உறைப்பான முகங்கள். கடுத்த சொற்கள். சக மனிதனைக் கண்காணிக்கும் கண்கள். அவளும் இளவெயினியும் இன்னொரு நாட்டில் கொண்டு வந்து விடப்பட்டதாய் உணர்ந்தார்கள்.
சரி மேற்கண்ட மூன்று பாராக்கள்தான் திருநெல்வேலி தந்தவையா என்றால் மிக அழுத்தமாக இல்லை என்றே தலையாட்டுவேன். திருநெல்வேலியை அகராதியில் தேடிப்பார்த்தால் மரியாதை என அருஞ்சொற்பொருளாகும். கொங்குமண்டலத்தைத்தான் பொதுவாக எல்லோரும் ரொம்ப மரியாதையான ஊர் என்பார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே போடும் ‘ங்க’வும் நாசூக்கும் நறுவிசும் நம்மை அப்படி நினைக்க வைக்கின்றன. ஆனால் அவரது தோட்டத்து ஆளை அப்படி அழைப்பார்களா என்றோ ஏன் இன்னும் இரட்டைக்குவளை அங்கே நீடிக்கிறது என்றோ கேட்பது என் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. திருநெல்வேலியில் எவ்வளவு சாதிய முரண்கள் நீடிக்கின்றனவோ அதற்கு இணையான மரியாதையும் சகோதர உறவும் நீடிக்கிறது. என் வழிநெடுக உதவப்போகிற மரியாதை என்கிற மகா விஷயத்தை நான் இங்குதான் கற்றுக்கொண்டேன்.
வேணுவனத்தில் வாய்த்த நட்புகள் அபரிமிதமானவை. கிருஷியிடமிருந்து புகழ்ச்சியெனும் தைலம் தயாரிக்கும் ரகசியத்தையும், மயன் ரமேஷ் ராஜாவிடமிருந்து தொழில் முனைவையும், ஆணையாளர் தேவேந்திர பூபதியிடமிருந்து கடிதோச்சி மெல்ல எறியவும், ஆனந்த ஷங்கரிடமிருந்து விருந்தோம்பலையும் நான் அருகிருந்து கற்றுக்கொண்டேன். சந்ரு மாஸ்டரிடமும் பேராசிரியர் டி. தருமராஜிடமும் நிகழ்த்திய விவாதங்கள் ஒவ்வொன்றிற்குப் பின்னும் முன்பைக் காட்டிலும் ஒரு இஞ்சேனும் வளர்ந்த மனிதனாக உணர முடிந்தது. தேவதச்சனுடன் நான்கைந்து முறை வாய்த்த நெடிய உரையாடல்கள் மண்ணில் பலருக்கு வாய்க்காத நல்லூழ்களுள் ஒன்று. கோணங்கியோடு நிகழ்த்திய $(&)^)%$$%#%* கூட சுவாரஸ்யமானவையாகத்தான் இப்போது தோன்றுகிறது. புகழ்ந்து சிரச்சேதம் செய்யவும் விஷத்தை விழுங்கி பளிங்காகும் ரசவாதத்தையும் இந்தச் சொல்லேறுழவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
நெல்லையைப் போல பல்வேறு இலக்கிய மையங்கள் சத்தமாகவோ மெளனமாகவோ செயல்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு தமிழக நகரம் பிறிதொன்றில்லை. வண்ணதாசன், தோப்பில் முகமது மீரான், தொ. பரமசிவன், அ. ராமசாமி, வண்ண நிலவன், கார்த்திகைப்பாண்டியன், சக்தி நூலகம் பாலா, டாக்டர் ராமானுஜம், நாறும்பூநாதன், திவான், இஸ்ரவேல், அந்தோணி, தாமிரா, கைலாஷ் சிவன், வெள் உவண், டாக்டர் ராமகுரு, தச்சை ராஜா, மேலும் இலக்கிய அமைப்பு நண்பர்கள், சக்தி கலையக நண்பர்கள், ஹேமலதா, இந்து பாலா, முத்துச் செல்வி - அவரவர் நம்புகிற விழுமியங்கள் வேறு வேறானாலும் திரும்பிய திசையெல்லாம் உரையாட சாத்தியமுள்ள இலக்கிய ஆர்வலர்கள் வாய்த்திருப்பது எவ்வளவு அருமையானது? இந்த ஊரில்தான் நாளிதழ் வினியோகஸ்தர்கள் கூட இலக்கிய ஆர்வமுள்ளவர்களாக கூட்டங்களுக்கு ஆர்வத்துடன் கலந்து கொள்வதை நான் கண்டேன்.
மயன் ரமேஷ் ராஜாவும், கவி தேவேந்திர பூபதியும் நானும் மும்மூர்த்திகள் என்று வேண்டியவர்களாலும் பொன்னாடை தாசர்கள் (67*) என்று புல்லுருவிகளாலும் ஆகாவழிகள் என்று அவரவர் மனைவியராலும் பல ரூபங்களில் அழைக்கப்பட்டோம். சதுரங்க வேட்டை கிராணைட் வில்லன் கூட்டணியைப் போல ஒவ்வொரு மாலையிலும் சந்தித்துக்கொள்வோம். டீ என்பது ஒரு பானம் அல்ல. ஒவ்வொரு அரை மணிக்கூறுக்கும் அருந்த வேண்டிய டானிக் என இங்கெனக்கு கற்றுத்தரப்பட்டது. தமிழில் பின் நவீனத்துவ சொல்லாடல்கள் நிகழத் துவங்கிய காலகட்டத்தில் பெரும் பரவசத்துடன் எதிர்கொண்டு விவாதங்களையும் படைப்புகளையும் (அஸ்வமேதா) உருவாக்கிய ரமேஷூம், பிரம்மராஜன், ஆனந்த் எனும் கவிமரபின் கண்ணியான தே.பூபதியும், ஜெயமோகன் பள்ளியைச் சேர்ந்த நானும் எங்ஙனம் பொருந்திப் போனோம் என விழிவிரிவு கொள்பவர்கள் உண்டு.
வெண்முரசும் வெளிநாட்டுப் பயணங்களும் ஆசானை எப்போதும் துரத்திக்கொண்டிருந்தாலும் கூட நாங்கள் அவ்வப்போது சந்தித்து பிரபு ஹோட்டல் மட்டன் சுக்காவுடனும் நாயர்களின் தேசிய உணவான பழ பஜ்ஜியுடனும் ஞானத்தின் அடையாளமான தொப்பையை வளர்த்துக்கொண்டோம். திற்பரப்புக் குளியல்களும், ஆலயப் பயணங்களும், மாலை நடைகளும் அவ்வப்போது வாய்த்தன. இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போன அவரது திருவரம்பு பூர்வீக வீட்டருகில் ஏறக்குறைய ஆறு மணி நேரங்கள் உரையாடி ஒரு ஆவணப்படம் எடுத்தோம். சந்திரசேகர் சவக்குழியில் கவர் பிரிக்கப்படாத பிரயாகையும் சேர்த்து புதைக்கப்பட்ட தினத்தில் நிலையழிந்து போன ஜெயமோகன் முற்றிலும் வேறொரு மனிதன். நினைவில் மீண்டுமொரு முறை மீட்ட அச்சப்படும் நாட்கள் அவை. இத்தருணத்தில், ஏதோ ஒரு செய்தியை எனக்குச் சொல்ல வந்த தூதன் போல இங்கே வந்திருந்து தங்கி வழியனுப்பிய மறுதினமே மரணச்செய்தியாக திரும்பிய ஒரு சாலை மாணாக்கர் கவி குருபரனின் நினைவும் கூடவே வருகிறது.
சங்கரன் கோவில் சுல்தான் பிரியாணி, தென்காசி நந்தினி கூரைக்கடையின் அயிலை மீன் குழம்பு, தூத்துக்குடி நாடார் பேட்டை குனி இறால் மசாலா, திருச்செந்தூர் பாண்டியன் ஹோட்டல் சீலா மீன் குழம்பு, நாகர்கோவில் பிரபு ஹோட்டல் மட்டன் சுக்கா, திருவனந்தபுரம் சுல்தானியா மாட்டுக்கறி, சாத்தான்குளம் சாந்தி பரோட்டா, மதுரை அம்மா மெஸ் அயிரை மீன் குழம்பு, வைரமாளிகை வஞ்சிரம் தாவா ஃப்ரை என தினமும் உணவுத் திருவிழா கொண்டாடி 17 மாதங்களில் 15 கிலோ எடையேறி சித்தி விஜிராம் போன்ற அரைக்கிழடுகளெல்லாம் என்னை அங்கிள் என கூப்பிடுமளவிற்கு ஆகிப்போனேன். இது தவிர நெப்போலியன் என்கிற ஒரு உத்தம தமிழ் மீன் வியாபாரி சாளை, வாளை, பன்னா, அருக்கலா, குதிப்பு, வாவல், சங்கரா, பாறை, ஊளி, நெய் மீன், வஞ்சிரம், மாவுளா, நெத்திலி, இறால், விறால், கட்லா, கணவாய், காரப்பூச்சி, பிள்ளைச்சுறா, அயிலை, அயிரை, அறுக்குலா, காரல், கிழங்கான் என நான் நேசிக்கும் மீன்களைப் புதுக்கருக்கு குலையாமல் நாளும் பொழுதும் பார்க்காமல் கொடுத்து என் வாழ்வை பொருள் பொதிந்ததாக ஆக்கினார். ஓவ்வொரு ஊரிலும் ஒரு நெப்போலியன் இருந்தால்தான் இந்தியா வல்லரசாக முடியும்.
ஒன்பது பாராக்களைப் பொறுமையாக வாசித்தவர்களின் மனத்திண்மையைப் பாராட்டி பத்தாவது பாராவை ஒரு வரியுடன் நிறைவு செய்கிறேன்.

Sunday, April 3, 2016

கசப்பு அண்டா மனிதன்!

நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு 83 வயது, ஆ. மாதவனுக்கு 84 வயது இவர்களெல்லாம் இன்றும் மிகச்சிறந்த உரையாடல்காரர்களாக இருக்கிறார்கள். புதியவர்களை சந்திப்பதில் ஒருபோதும் உற்சாகமிழக்காதவர்களாகவும் அபாரமான நகைச்சுவையுணர்வோடும் இருக்கிறார்கள். முதுமையின் சினிக்னெஸ் இவர்களிடம் சுத்தமாக இல்லை கவனித்திருக்கிறீர்களா என்றார். நல்ல அப்சர்வேஷன் சார்.. காரணம் என்ன என்றேன். அவர்களுக்குள் இருக்கும் ரசனையே காரணம் என்றார். கிரியேட்டிவிட்டியும் வாசிப்பும் கலைத்தேட்டமும் அவர்களை ஒரு ஆயுளுக்குள் பல்வேறு நிகர்வாழ்க்கை வாழ வைக்கிறது. ஆகவே, தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சராசரி மனிதனின் கசப்புகள் இவர்களிடம் மண்டியதில்லை என்றார்.கலைஞனுக்கு வயதாக வயதாக அவனது கலைமனம் இளமையாகிறது என மெலட்டூர் கிராமத்தில் ஒரு பாகவத மேளா கலைஞர்  சொன்ன வரிகளை நான் நினைவு கூர்ந்தேன். தன் எண்பதாண்டு கால வாழ்வில் கசப்பின் சிறு நிழலும் எட்டிப் பார்க்காத பன்முக நுண்கலைஞன் பாரதி மணியைக் கொண்டாடும் நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்கிறேன் நண்பர்களே..

 இந்த மேடையில் பொன்னீலன் இருக்கிறார். எழுத்தாளன் ஒரு சராசரி அல்ல அவனொரு  ஆளுமை என பதின்மத்தில் என் மனம் பதிய காரணமாக இருந்தவர் அவர். பதினைந்து வயதில் நண்பர் ஈஸ்வர சுப்பையா உதவியுடன் பொன்னீலனைப் பேட்டி கண்டிருக்கிறேன். அவர் திகசியால் உந்தப்பட்டு எழுத வந்தவர். இன்று புதியதாக எழுதவரும் பலருக்கு திகசியின் பின்னத்தி ஏராக இருந்து உற்சாகமளிப்பவர்.

தோப்பில்  முகமது மீரானின் ஐந்து நாவல்களுக்குமே வடிவ ஒழுங்கு கொடுத்தவர் திகசி. பொன்னீலனும் திகசியும் எடுத்த பெருமுயற்சியில்தான் சாய்வு நாற்காலிகளுக்கு சாகித்ய அகாதமி கிடைத்தது. தமிழில் சிறுபான்மை இலக்கியத்தின் மீது விழுந்த முதல் வெளிச்சம் அது என்றே கூறலாம். அவரும் இந்த அவையில் இருப்பது பொருத்தப்பாடு மிக்கது.

அமைப்புகளால் தொகையால் அல்ல பெற்றுக்கொள்ளும் மனிதர்களாலேயே விருதுகள் கெளரவம் கொள்கின்றன. இந்த விருது பாரதிமணியின் பல பத்தாண்டு கலைச்சேவைக்கு அளிக்கப்படுகிறது. நந்தா விளக்கு விருது அமைப்பாளர்களுக்கு என் பாராட்டுகளைப் பதிவு செய்து கொள்கிறேன்.

வாழும் கலை

பள்ளிப்பருவத்தில் மு.வ எழுதிய பெர்னார்ட் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். அச்சிறுநூல் இளமையில் மகத்தான மன எழுச்சியை ஊட்டியது. ஒரு நாடக ஆசிரியனாக, எழுத்தாளனாக, அரசியல் சமூக விமர்சகனாக மட்டுமல்லாமல் சமரசமில்லா வாழ்வை செதுக்கிக்கொண்டவராகவும் அவர் எனக்கு தெளிவானார். அவரை வாழும் கலையின் பிதாமகன் என்றே மனம் சொல்லியது. விதிக்கப்பட்ட வாழ்வை அல்ல நீ வாழ விரும்பும் வாழ்வை உன்னால் அமைத்துக்கொள்ள முடியும் என ஒரு கிராமத்துச் சிறுவனுக்குள் விழுந்த முதல் விதை அப்புத்தகம். பின்னாட்களில் பாரதிமணி எனக்கு அறிமுகமானபோது ‘ஹா.. தன் வாழ்வை அழகாக செதுக்கிக்கொண்ட மனிதர் இவர்’ எனும் எண்ணமே தோன்றியது.

தொழில், இல்லறம், நாடகம், இலக்கியம், இசை, நண்பர்கள், மது, எழுத்து என எல்லாவற்றையுமே தன் வாழ்வை மேலதிக அழகும் செறிவும் இனிமையும் கொண்டதாக்கிக் கொண்டவர் அவர். மது அவருக்கு குடிக்கப்பட வேண்டியதோ அடிக்கப்பட வேண்டியதோ அல்ல.. சுவைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மதுசாலை உள்-அலங்கார நிபுணரான அவரது மனைவியால் டிசைன் செய்யப்பட்டது. ஒரு லட்ச ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிற காலத்தில் ஒன்னேகால் லட்சத்தில் வீட்டில் குடிமனை அமைத்தவர் அவர்.  வெங்கட் சாமிநாதனின் சொற்களில் சொல்வதானால் “மணிக்கு எதுவும் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வேண்டும்”

எஸ்.கே.எஸ் மணி எனும் நிர்வாகி

ஓர் இளம் மேலாளனாக நான் எப்போதும் வியப்பது பாரதி மணியின் காரிய சித்தியை. கார்ப்பரேட் பாஷையில் அவர் ஒரு 'Go Getter'. விராத் கோலி அளவுக்கு most reliable brand. அவரால் மாலை விருந்திற்கு எவரெஸ்ட் உச்சியிலிருந்து ஐஸ்கிரீமுக்கு பனிக்கட்டியை கொணரவும், வீட்டு வாசலில் வெள்ளை யானையை நிறுத்தவும் முடியும் என்பது அன்றைய டில்லியின் புகழ்மிக்க சொலவடைகள். சுப்புடுவால் வாங்க முடியாத ஒரு பென்ஸ் காருக்கான அனுமதியை மணி ஒரே நாளில் சுளுவாக வாங்கி விடும் சம்பவத்தை ஓர் எளிய உதாரணமாக இங்கே நினைவு கூர்கிறேன்.  சுஜாதாவின் ஓலைப்பட்டாசு தொகுதியில் ‘பீட்டர்’ என்றொரு சிறுகதை. சிவா பீட்டர் இருவரும் கல்லூரி விடுதியறை தோழர்கள். சிவா அபாரமான ஒழுக்கவாதி. தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து மேலாளராகப் பதவி உயர்கிறான். எந்நேரமும் கிடாரும் போதையுமாக திரிந்து கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட பீட்டர் ஒரு நிறுவனத்தின் தலைவர் ஆகிவிடுகிறான். இது என்ன வாழ்வின் நியாயம் என குமுறும் சிவாவிற்கு தான் வளர்ந்த கதையை பீட்டர் சொல்கிறான். தொழிலாளர் பிரச்சனையால் முடங்கி கிடக்கும் ஒரு தொழிற்சாலையை தன் அணுகுமுறை மனிதர்களை கையாளும் திறனால் பீட்டர் இயங்க வைக்கிறான். பாரதி மணி மேலாண்மை கல்லூரிகளில் படித்தவர் அல்ல. அவர் கற்றதெல்லாம் நடிப்பும் இலக்கியமும்தான். ஆனால் பாரதி மணிக்கு மனிதர்களைத் தெரியும். ஓவ்வொரு மனிதனும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அதற்குரிய மரியாதையை அவர் ஒருபோதும் வழங்கத் தவறியதில்லை. பாரதிமணியின் புகழ்மிக்க மேற்கோள்களின் ஒன்று என் அலுவலக வாழ்வில் எப்போதும் பயன்படக் கூடியது ‘நேரான விரலில் வராத நெய்.. வளைந்த விரலில் வரும்’

எழுத்தாளர் பாரதி மணி

திரு ஒருமுறை கேட்டாள் ‘பாரதிமணி ஏன் 74 வயதில் எழுத வந்தார்?’ வீட்டிற்குள்ளே க.நா.சு;  அலுவலகத்தில் சுப்புடு; வாழும் ஊரில் வெங்கட் சாமிநாதன். இத்தனை கடுவன் பூனைகளை மடியில் கட்டிக்கொண்டு ஒருவர் எப்படி எழுத முடியும் என்று வேடிக்கையாக பதில் சொன்னேன். டில்லி வாழ்வுக்குப் பின் சென்னை திரும்பி ‘பாரதி’ படத்தில் நடித்த மணிக்கு அந்த அடையாளமே சுமையாக மாறிப்போனது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நாடக கலைஞராகவும் இசை விமர்சகராவும் விளங்கிய அவரை ஒரு துணை நடிகராக மட்டுமே அடையாளம் காண்பது பொருத்தமானதல்ல. அந்தச் சுழலில் சுப்புடு மரணத்தையொட்டி அவர் எழுதிய புகழ்மிக்க அஞ்சலி குறிப்பு தீராநதியில் வெளியானது. பிற்பாடு மனுஷ்யபுத்திரனால் இழுத்து கொணரப்பட்டு உயிர்மையில் தொடர் எழுதலானார்.

நண்பர்கள் ஆக்ரோசமான விசையுடன் அரசியல் பேசும் தருணங்களிலும், ஊடகங்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களாலும் செவிவழி வதந்திகளாலும் உருவாக்கிக் கொண்ட அபிப்ராயங்களுடன் இன்று நிகழும் ஃபேஸ்புக் ரத்தக்களறி யுத்தங்களையும் புன்னகை மாறாத முகத்துடன் கடந்து செல்வது என் வழக்கம். ஓர் ஊடகவியலாளனாக ஒரு தரப்பின் உண்மைக்கும் மறு தரப்பின் உண்மைக்கும் மத்தியில் உண்மையான உண்மை எங்கோ தொலை தூரத்தில் மங்கிய ஒளியில் மயங்கிக் கிடக்கும் என்பதை அறியும் கூருணர்வு உண்டெனக்கு. இதன் பொருள் ஊடகக்காரனுக்கு ஞானக்கண் உண்டென்பதல்ல. நான் பூனைக்கண் கொண்டவனல்ல என்பதே. பாரதி மணி உயிர்மையில் தொடர் எழுதிய போது அந்த உண்மையான உண்மைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் இணைத்து எழுதக்கூடிய ஒரு ஆசிரியர் வந்து விட்டார் எனும் கொண்டாட்டம் என்னுள் கிளம்பியது. முதல்  கட்டுரைக்கே வாசகர் கடிதம் எழுதிய ஜெயமோகன், அ.முத்துலிங்கம், தி.க.சி உள்ளிட்ட பலருள் நானும் ஒருவன். அன்றாட அரசியலுக்கு அப்பால், கார்ப்பரேட் தரகர்களாலும், பொலிடிக்கல் லாபியிஸ்டுகளாளுமே இந்த தேசம் நிர்வகிக்கப்படுகிறதெனும் பேருண்மை பெரும்பான்மை தமிழ் வாசகனுக்குப் பாரதி மணி மூலமே அறிமுகமானது. அவரது நீராராடியா உரையாடல் பற்றிய கட்டுரையை இங்கே நினைவு கூர்கிறேன்.

அவரது உரைநடை அதிவிரைவானது. பலரும் முதல் புத்தகத்திலேயே இந்த உரைநடை எப்படி சாத்தியம் என இன்றும் விழி விரிக்கிறார்கள். ஜெயமோகனை மனதில் வைத்து நாஞ்சில் அதை பார்வதிபுரத்து பிஜிரார்ஜித சொத்து என்கிறார். தமிழில் எழுதுவதற்கு முன்பே இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற புகழ்மிக்க ஆங்கில இதழ்களில் டெல்லியின் ஜாலவித்தை ஆங்கிலத்தில் பாரதி மணி பெயர் குறிப்பிடாமல் எண்ணற்ற கலைவிமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒன்றை செய்தியாக்கும் போதே உண்மை சற்று அடிவாங்கும் எனும் சொலவடை பத்திரிகையுல்கின் உண்டு. பாரதி மணி எழுதும் விஷயங்கள் பேருண்மைகளின் தீவிரத்தால் கட்டப்பட்டவை. ’டேய் முட்டாப்பயலே.. நான் ஒருத்தன் என்னென்னமோ எழுதறேன்.. அதெல்லாம் உண்மைன்னு எப்படிரா நம்பறீங்க..’ எனும் கேள்வியை அவர் எல்லோரிடத்திலும் வைப்பார். என்னிடமும் ஒரு முறை கேட்டபோது நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் ‘நீங்கள் எழுதிய எல்லா விஷயங்களையும் அறிந்த இன்னொரு இணைமனம் வெசா.. நீங்கள் எழுதியதில் ஏதேனும் சரடு விட்டிருந்தால் அவர் உங்களை கட்டி வைத்து கபடி ஆடியிருப்பார் சார்..’ என்றேன்.

அசோகமித்திரன் தனது கட்டுரை தொகுப்பொன்றின் முன்னுரையில் இப்படி சொல்கிறார் ‘ஒரு நல்ல கட்டுரை சிறந்த சிறுகதை வாசித்த உணர்வை தரவேண்டும் என்பதே அதற்குரிய இலக்கணம்’ பாரதி மணியின் எல்லா கட்டுரையுமே சுயசரிதை தன்மை கலந்த சிறுகதைகளை வாசித்த உணர்வை கொடுப்பவை. தனியனுபவத்தின் மூலம் ஒரு காலகட்டத்தின் அறியப்படாத இணை வரலாற்றை தெரியப்படுத்துபவை. ஆகவே, வரலாற்றாவணங்களுக்கு இணையானவை.

அசோகமித்திரனின் எழுத்துக்களில் சுதந்திர காலகட்டத்தின் செகந்திரபாத் துலங்குவதைப் போல, அமுத்துலிங்கத்தின் வரிகளின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட இனங்களின் அவல வரலாறு ஆறாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல, நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் நாஞ்சில் நாட்டு வெள்ளாள வாழ்வு துலங்கி வருவதைப் போல..  ஆறாம் நூற்றாண்டு யமுனை நதிக்கரையில்  தொடங்கி ஷாஜகனால் வடிவமைக்கப்பட்ட தில்லியின் மாபெரும் வரலாற்று நெடும்பயணத்தின் வரலாற்றைப் பதிவதில் பாரதி மணியும் ஒரு நீட்சி என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

சமீபத்தில் ஜெயமோகன் தளத்தில், இலக்கியம் ஒருவனின் வென்றெடுக்கும் உத்வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்றொரு வினாவை எழுப்பியிருந்தேன். பல்வேறு தரப்பினரும் பல தரப்பட்ட கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இறுதியாக ஜெயமோகன் ‘Compartmentalism’ முக்கியமானது.  தொழில் வாழ்வில் இலக்கியத்தின் உணர்ச்சிகளையும், இலக்கியத்தில் தொழில் வாழ்வின் பிரச்சனைகளையும் கலந்து கொள்ள வேண்டியதில்லை. தொழிலுக்கான நேரம் மனநிலை தனி, இலக்கியத்திற்கான நேரம் மனநிலை தனி எனும் தெளிவு வேண்டும் என பதிலளித்தார்.

மகிழ்ச்சிகரமான வாழ்வை வடிவமைத்துக்கொண்ட மனிதனாகவும், பன்முக கலைஞனாகவும், எழுத்தாளனாகவும் வெற்றிகரமாக உயர்ந்து நிற்கும் பாட்டையாவைப் பார்க்கையில் அந்தக் கேள்வியே அபத்தமானது என இப்போது தோன்றுகிறது.

God bless you பாரதி மணி சார்!

(02/04/2016 அன்று நெல்லையில் பாரதி மணிக்கு நந்தா விளக்கு வழங்கிய போது ஆற்றிய உரை)