Monday, June 27, 2016

மஞ்சிமாவும் மழை நாளும்

வெள்ளிக்கிழமை மாலை தம்பானூரில் வந்திறங்கியபோது திருவனந்தபுரம் மழையில் ஊறிக்கொண்டிருந்தது. நள்ளிரவுக்கு மேல் கிண்ட்ஃப்ரா தொழிற்பேட்டையில் எனக்கொரு சோலி இருந்தது. அதுவரை சமுத்திரக் கரை சென்று வாய் பார்த்துக் கொண்டிருக்கலாமென முடிவெடுத்தேன். கடற்சீற்றம் கரையோர வீடுகளை இழுத்துக் கொண்டிருந்தது. சுனாமி பயத்தில் மீண்டும் தம்பானூருக்கே ஓடி வந்து பண்டிதர் ராமச்சந்திரனை அழைத்தேன். அவர் வரமுடியாத தொலைவிலிருந்தார். சரி கம்மாட்டி பாடம் பார்க்கலாம் என கைரளி தியேட்டர் வந்தால் அங்கே சர்வதேச ஆவண மற்றும் குறும்பட திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வில் பினராயி விஜயன் உரையாற்றிக் கொண்டிருந்தார். முன்பதிவு செய்யாமல் அழைப்பிதழ் இல்லாமல் திரைப்பட விழாக்களில் படம் பார்க்க முடியாது. இருப்பினும் கேரளத்தின் ஆன்மா மீது நம்பிக்கை வைத்து நுழைவாயிலில் நின்றிருந்த ஒரு மஞ்சிமா மோகனை அணுகினேன். அவர் அழகிய சிவந்த உதட்டைப் பிதுக்கி കഴിഞ്ഞ என்றாள்.
கையில் நடுப்பக்க கட்டுரை வெளியாகி இருந்த தி இந்து இருந்தது. விரித்துக் காண்பித்து நானொரு கட்டுரையாளன் என்றேன். பட்டைக் கண்ணாடி பரட்டைத் தலை தாடி இல்லாத எவரையும் கேரளப் பெண்கள் எழுதுகிறவன் என நம்ப மாட்டார்கள். செல்லிடப்பேசியில் வலைதளத்தை திறந்து காண்பித்தேன். அதில் ஏழு வயதில் எடுத்த போட்டோவைத்தான் இன்னமும் புரொபைலாக வைத்திருந்திருக்கிறேன். பக்கத்திலிருந்த பாவனாவோடும் கோபிகாவோடும் கலந்து பேசி சரி வாருங்கள் என அழைத்துச் சென்று முன் வரிசையில் அமர வைத்தார்கள். சுபஸ்ய சீக்கிர என மனதிற்குள் அவர்களை ஆசீர்வதித்தேன். இந்த இடத்தில் புககா நுழைவாயிலில் சாருநிவேதிதாவை நிற்க வைத்த கடமை வீரன் நினைவுக்கு வந்தால் இரு மாநிலத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் புரியும். இன்னொரு ஆச்சரியம் பினராயியின் உரை. உலகளவிலும் இந்திய அளவிலும் வெளியான முக்கியமான ஆவண குறும்படங்கள் அவை உருவாக்கிய அலை என செறிவான உரை.
ஆப்கன் போர் பின்புலத்தில் எழுதப்பட்ட தி அவுட் போஸ்ட் எனும் நூலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டே ஒன்’ துவக்க விழா சிறப்பு குறும்படமாகத் திரையிடப்பட்டது. முன்னாள் அமெரிக்க ராணுவ வீரரான ஹென்றி ஹ்யூகஸினால் இயக்கப்பட்டது. அமெரிக்க-ஆப்கன் பெண்மணியான ஃபெடா விவாகரத்திற்குப் பின் அமெரிக்க ராணுவத்தின் மொழிபெயர்ப்பாளராக பணியில் சேர்கிறாள். ஆப்கன் போர்க்களத்தில் அவளது முதல் நாள் பணி அனுபவமே திரைப்படம். ஒரு வெடிகுண்டு நிபுணனைக் கைது செய்ய சுற்றி வளைக்கிறது அமெரிக்க ராணுவம். அவனது மனைவி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வேதனையில் துடிக்கிறாள். அவளுக்கு பிரசவம் பார்க்க வேண்டிய நெருக்கடி ஃபெடாவுக்கு ஏற்படுகிறது. இறுதியில் என்ன நிகழ்கிறதென்பதே கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து திரைப்படங்களுள் ஒன்று. ஃபெடாவாக நடித்திருக்கும் லைலா அலிஸடாவின் நடிப்பு உன்னதமாக இருந்தது.
அடுத்து டேவிஸ் இயக்கிய ‘ஹி நேம்டு மீ மலாலா’ திரையிடப்பட்டது. அடிப்படைவாதத்திற்கு எதிராக மேற்கு கையில் எடுத்துக்கொண்ட அல்லது உருவாக்கிய கதாபாத்திரமே மலாலா எனும் தரப்பின் விமர்சனங்களைக் கூட நாசூக்காக கவனத்தில் எடுத்துக்கொண்டு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள படம். பாகிஸ்தானின் ஸ்வாட் சமவெளியில் சுடப்பட்ட மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் கண் விழிக்கிறாள். நினைவு திரும்பியதும் முதலில் கேட்ட கேள்வி ‘எங்கே என் தந்தை?’ மலாலாவின் ஆளுமை உருவாக்கத்தில் ஜியாவுதீன் யூசஃபியின் செல்வாக்கை ஆவணப்படம் கவனப்படுத்துகிறது. மலாலாவுக்குள் இருக்கும் பதின்ம வயதின் குறும்புகள் ரசிக்க வைக்கின்றன.
இரண்டாம் நாள் வார இறுதி என்பதால் தோழன் அஜிதனை திருவனந்தபுரத்துக்கு வரவழைத்தேன். சமூக புகைப்படக் கலைஞன் என தன்னை அறிவித்துக்கொண்டவர் செபாஸ்டியோ சல்கோடா. உலகமெங்கும் சுற்றித் திரிந்து இவர் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் ஆக்கிரமிப்பு, போர், இனக்கலவரம், இயற்கை வள சுரண்டல், திணிக்கப்பட்ட பஞ்சம் போன்றவற்றால் கொத்துக்கொத்தாக மானுடம் அழிந்ததின் கலை ஆவணங்கள். சைபீரியாவிலும் அலாஸ்காவிலும் பப்புநியூகினியாவிலும் இவர் எடுத்த சூழியல் புகைப்படங்கள் இயற்கைக்கு இவர் எழுதிய காதல் கடிதங்கள் என விமர்சகர்களால் புகழப்படுபவை. இவரது வாழ்க்கை விவரண படம் ‘தி சால்ட் ஆஃப் தி எர்த்’. புகழ்மிக்க ஜெர்மானிய இயக்குனர் விம் வெண்டர்ஸூம் செபாஸ்டியோவின் மகனும் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். கடந்த ஆண்டு வெளியான ஆவண படங்களிலேயே மிக முக்கியமான படம் இது என்றான் அஜிதன். எனக்கு படத்தின் பெயரே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. 1954-ல் அமெரிக்க சுரங்கங்களில் வெடித்த புரட்சியை மையமாக கொண்டு இதே பெயரில் ஒரு சினிமா வெளியானது. அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட முதல் திரைப்படம் எனும் பெருமையுடைத்த படம் அது. மெக்ஸிகோ தங்கச் சுரங்கங்களில் தங்களை அடமானம் வைத்துக்கொண்டவர்களின் புகைப்படங்களுடன் தன் சுயசரிதையை சொல்ல ஆரம்பிக்கிறார் செபாஸ்டியோ. பிரேசிலில் பிறந்து பொருளாதாரம் கற்று பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்து கொள்ளைச் சம்பளம் வாங்கும் வேலையை உதறிவிட்டு உலகமெங்கும் சுற்றி உயிரைப் பணயம் வைத்து புகைப்படங்கள் எடுத்து முதுமையில் வறண்டு போன தன் சொந்த சமவெளிக்குத் திரும்பி அங்கே காணாமல் போன கானகத்தை சொந்த முயற்சியில் மீட்புருவாக்கம் செய்து - மோதிர வளையத்தையொத்த வாழ்பனுபவத்தைக் கொண்ட சாமான்யனை விழி விரியச் செய்யும் மாபெரும் வாழ்வு செபாஸ்டியோவுடையது. பொருளாதாரத்தைக் கற்றவராக ஒவ்வொரு பேரழிவின் பின்பும் உள்ள சுரண்டலையும் அவர் தன் அனுபவங்களோடு சொல்லிச் செல்கிறார். உயிரைப் பணயம் வைத்து சைபீரியாவில் வால்ரஸ்களை அவர் படம் பிடிக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. புகைப்பட திரைப்பட ஆர்வலர்கள் தவறவே விடக் கூடாத படம்.
பல்வேறு புற அழுத்தங்களுக்கு மத்தியிலும் வனம் பிரிய மனம் துணியாத ஆதிவாசிகளைப் பற்றிய கே.பி. முரளீதரனின் ‘அழிவு’ மூர்க்கமான நம்பிக்கைகளைப் பகடி செய்யும் பஷில் காலீல் இயக்கிய ‘ஆவே மரியா’, மழைக்காடுகளைப் பற்றிய சந்தேஷின் பிபிஸி ஆவணப்படமான ‘சயந்த்ரீஷ்’ ஆகியன மிக முக்கியமான காட்சியனுபவமாக இருந்தது.
ஃபோகஸில் பல்வேறு திரைவிழாக்களில் விருதுகள் வென்றவை எனும் அறிவிப்புடன் நிறைய்ய இந்திய குறும்படங்களைக் காட்டினார்கள். பலத்த ஏமாற்றமும் ஆயாசமுமே மிஞ்சியது. புல்லாங்குழல், சித்தார், ஷெனாய் என அவரவர் நிலத்துக்குறிய வாத்தியங்களின் பின்ணணி இசை சோகப் பிழியல்களுடன் மெ து வா க நகர்ந்து சோதிக்கின்றன. அனுபவம் மிக்க பார்வையாளர்கள் கையேட்டில் கவனமாக குறித்து வைத்துக்கொண்டு இந்திய குறும்படங்களிடம் தெறித்து விடுகிறார்கள்.
மும்பை புல்லட், குருகுலம், அஸோம்பிரிக்டோ போன்ற ‘விருது’ வென்ற இந்திய காவியங்களைப் பார்த்ததும் எங்கள் கலைத்தாகம் அடங்கி வெளியே வந்தோம். காஃபிடேரியாவில் ஜடாமுடியும் தாடியும் வைத்திருந்த ஒரு ஓட்டேரி நரியுடன் மஞ்சிமா செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். மனம் வெதும்பி வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். மழை சோவென கொட்டத் துவங்கியது.

No comments: