இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும் - ஒரு விவாதம்


நீங்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தும் ஏன் ஒரு பாடலாசிரியராக வசனகர்த்தாவாக சினிமாவில் நீடிக்க இயலவில்லை என கவி பிரான்சிஸ் கிருபாவிடம் அவர் தள்ளாடாத தருணத்தில் கேட்டேன். குடி ஒரு காரணமில்லை. எத்தனையோ திரைக்கலைஞர்கள் போதை இல்லாமல் தொழிலுக்கு வருவதில்லை. உண்மையில் போதையில் மட்டுமே அவர்களால் இயல்பாக இருக்க முடியும். பிரான்சிஸ் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னார் ‘இலக்கியம்தான்’. ஓர் இலக்கியவாதி – இதில் இலக்கிய வாசகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் – இயங்கும் விழுமியங்களே வேறு. சினிமா உள்ளிட்ட தொழிற்துறைகளின் விழுமியங்கள் வேறு. இலக்கியம் உருவாக்கியளித்த தரமும் கையளித்த அறமும் செய்தொழிலில் சிக்கல் உருவாக்கிக்கொண்டே இருக்கும் என்றார். சில நிஜ உதாரணங்களைச் சொன்னார்.
இலக்கிய வாசிப்பின் நேரடிப் பயனாக நம்முள் விளையும் மனிதம் கறாரான நிர்வாகத்திற்கு இடையூறு செய்வதை நான் அன்றாட வாழ்வில் அவ்வப்போது உணர்வதுண்டு. இலக்கியப் பரிச்சயம் ஓரளவுக்கு மேல் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா எனும் கேள்வியுடன் மற்றொரு துணைக்கேள்வியும் எழுந்தது. தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய உபாசகர்களிடம் இலக்கியம் உங்களுக்குத் தருவதென்ன எனும் கேள்வியைக் கேட்டேன். நிகர்வாழ்வு அனுபவம், ஆன்மிகமான உச்ச தருணங்கள், மிகச்சிறந்த போதை, சுயத்தை நோக்கிய தேடல், மனங்களைப் புரிந்துகொள்ளவும் வாழ்க்கையை அறிந்து கொள்ளவும் உதவுகிறது என விதம் விதமாய் பதில்கள் வந்தன. சரி இத்தனை சிறப்பு மிக்க இலக்கியத்தை நீங்கள் ஏன் உங்கள் வீட்டிற்குள் அறிமுகப்படுத்தவில்லை? தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டத்திற்கு மனைவி மக்களோடு வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தீவிர வாசகர்களின் பிள்ளைகள் கூட எதையும் வாசிப்பதில்லை. ஏன் வாசகர்கள்.. எழுத்தாளர்களது வீட்டின் நிலை என்ன? பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மகன்கள் கூட எதையும் வாசிப்பதில்லை. ஏன் இலக்கியம் வாசல் படிக்கு வெளியே நிறுத்தப்படுகிறது?
ஈரட்டிக்கு வரும் வழியில் தொழிலதிபர்களான சிவா, அரங்கா, செந்தில், விஜயசூரியன் ஆகியோருடன் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டே வந்தேன். நால்வரும் ஏதோ ஒரு வகையில் இலக்கிய வாசிப்பு தங்களைக் கட்டுப்படுத்துவதாகவே நினைத்தார்கள். இரண்டு அடிகள் எடுத்து வைத்து ஏறியடிக்க, ஈவிரக்கமின்றி திறமைக் குறைபாடுள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கொழுத்த லாபம் பார்க்க, தொழில் எதிரியை தின்று செரித்து முன்னேற என பல உதாரண சந்தர்ப்பங்கள்.
திருக்குறளரசியுடன் விவாதித்தபோது இரண்டு விஷயங்களை சொன்னாள். பெரும்பாலானவர்கள் ஒரு இமேஜை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டுதான் இலக்கியப் பரிச்சயம் கொள்கிறார்கள். பிற்பாடு தாங்கள் தங்களுக்குரிய இடத்தை சென்றடைய முடியாமைக்கு வாசிப்பின் கவனச் சிதறலே காரணம் என மிகையாக கற்பிதம் செய்துகொள்கிறார்கள். நூல் வாசிப்பும் விவாதங்களும் கைவிட முடியாததொரு போதையென்றே கருதுகிறார்கள். ஆகவே, தங்கள் பிள்ளைகளை பணத்தை நோக்கிய பாதையில் விசையுடன் செலுத்துகிறார்கள். குழுமத்திலேயே ஓரிருவரைத் தவிர பிள்ளைகளுக்கு இலக்கியப் பயிற்சியை அறிமுகப்படுத்துபவர்கள், மனைவியோடு இணைந்து வாசித்து விவாதிப்பவர்கள், குடும்பத்துடன் கூட்டங்களுக்கு வருபவர்கள் மிக குறைவாக இருப்பதன் காரணமும் இதுவாக இருக்கலாம் என்றாள்.
புகழ், பதவி, பணம், பெண்ணாசை போன்ற எளிய இலக்குகளை உத்தேசித்து எழுத வந்த பலரும் எழுத்தினால் அவை சாத்தியமல்ல என்பதை உணர்ந்ததும் தங்கள் பிள்ளைகளை வேறு திசைகளில் செலுத்துகிறார்கள் எனும் அவளது கருத்தும் புறக்கணிக்கத்தக்கதல்ல என்றே தோன்றுகிறது.
ஈரட்டி பயணத்தில் கோல்ஃப் ஆட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. உலகின் உச்சபட்ச சி.இ.ஓக்கள் கோல்ஃப் ஆடுகிறார்கள். ஜனாதிபதிகள், நாடுகளின் அதிபர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் விஞ்ஞானிகள் ஏன் ஆன்மிகவாதிகளும் கூட கோல்ஃப் ஆடுகிறார்கள். எதிராளி இல்லாத தன்னோடு தான் ஆடும் இந்த ஆட்டம் பிஸினஸ் ஸ்டாட்டஜிக்களை உருவாக்கவும், தொழில் நெருக்கடிகளைத் திறம்பட சமாளிக்கவும் பேருதவியாக இருக்கிறது என்கிறார்கள். பெரும்பாலான தொழில் ஐடியாக்கள் (ஐபிஎல் போல) கோல்ஃப் மைதானத்தில் கருக்கொண்டவையே. கோல்ஃப் ஆடும் ஒரு சதவிகிதத்திற்கும் கீழான ஒரு கூட்டம்தான் மொத்த உலகையும் ஆண்டு கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். இலக்கியம் தராத எந்த ஒன்றை ஒரு குச்சியும் பந்தும் உருவாக்கி கையளிக்கிறது?
லெளகீக பயன்மதிப்பைக் கொண்டு இலக்கியத்தினை அளவிட முடியாது என்ற போதிலும் என்னுடைய கேள்விகளை இவ்வாறாக சுருக்கி எளிமைப்படுத்துகிறேன்:

1) இலக்கியப் பரிச்சயம் ஒருவனின் வென்றெடுக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா?

2) அதன் பொருட்டே வெறும் மனப்பழக்கமாகக் கருதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப் படுகிறதா?

3) இலக்கியமும் ஒரு போதைதானா?
***
மேற்கண்ட எனது கேள்வி ஜெயமோகன் தளத்தில் வெளியானது; நண்பர்களின் பல்வேறு பதில்களும் இறுதியாக ஜெயமோகன் அளித்த பதில்களும் ஒரு விவாதமாக தொகுக்கப்பட்டு இந்த இணைப்பில் உள்ளது: https://docs.google.com/document/d/1ew8PQT7z0bwCnqskVROsM5l-jNoXmbqd0ZITvZNM7rI/edit 

Comments