கவர்னரின் ஹெலிகாப்டர்

நண்பர்களே, சொல்லித் தெரியவேண்டியிராத ஆளுமைகளால் நிறைந்திருக்கிறது இந்த அவை. இந்த முன்னோடிக் கலைஞர்களை வணங்கி, ஓர் எளிய வாசகனாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ நூல் எனக்களித்த வாசகானுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு சிறந்த பாடல் என்பது சிறந்த மெட்டே என்று இளையராஜா அடிக்கடி சொல்வாரென கேள்வியுற்றிருக்கிறேன். ஒரு நல்ல பாடலுக்கு சில சமயங்களில் பொருத்தமான வரிகள் அமையாமல் போய்விடலாம்; பாடியவர் அதற்குரிய பாவத்துடன் பாடி நீதி செய்யாமற் போய்விடலாம்; டெக்னோ இசைக்கருவிகள் இசைக்கப்படாமல் அல்லது உயர்தர தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பாடலின் மெட்டு உங்கள் ஆன்மாவைத் தொடும் என்றால் அந்தப்பாடல் நிற்கும். காலம் உள்ளவரை காற்று உள்ளவரை நம் காது மடல்களில் கூடு கட்டி குடியிருக்கும்.
கருணா இளையராஜாவின் தீவிர உபாசகர். தன் எழுத்துக்களில் வாஞ்சை எனும் மெட்டை அவர் உருவாக்குகிறார். பின்பு அதில் துல்லியமான பால்ய நினைவுகளை உயர்தர அங்கதச் சுவையுடன் கலந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார். நாம் அதன் தொழில்நுட்பங்களைப் பற்றி, வடிவ ஒழுங்கைப் பற்றி கவலையின்றி அந்தக் கதையில் லயித்து விடுகிறோம். அவரது கதைகளிலோ கட்டுரைகளிலோ உவமை, உருவகம், படிமம், நுண்சித்தரிப்பு, அகச்சித்தரிப்பு என எந்தவிதமான சிக்கல்களும் இல்லை. அவர் சொல்லும் கதையே அவரது மெட்டு. அந்த மெட்டுக்குள் இவை எல்லாமே அடங்கி விடுகிறது. இந்தத் தொகுப்பின் மிகச்சிறந்த கதையான சாமந்தி இதற்கு ஆகப்பொருத்தமான உதாரணம். முனுசாமியின் நிலத்தில் இஸ்ரோவின் ராக்கெட் உதிரி பாகம் ஒன்று விழுந்து விடுகிறது. அதனையடுத்து நிகழும் களேபரங்களில் மெள்ள மெள்ள ஒரு சிறிய குடியானவனின் கனவுகள் சிதைவதன் சித்திரம். அரச பயங்கரவாதமென்பது அகப்பட்டவனைத் தூக்கிலிடுவது மட்டுமல்ல அழையா விருந்தாளியாக ஓர் அழகிய குடும்பத்தில் புகுந்து அதன் நிம்மதியை அலைக்கழித்துச் செல்வதும் அரச பயங்கரவாதத்தின் சிறு துளியே. நேரடியாக அதைச்சுட்டும் ஒரு வரி கூட அக்கதையில் இல்லை. இதுதான் கருணா உருவாக்கும் மெட்டு.
கதையில் போகிற போக்கில் ஒரு வரியை எழுதுகிறார். அந்த வீட்டுச் சின்னப்பெண் அரசு இலவச தொலைக்காட்சியில் இருக்கும் சின்னத்தை சுரண்டி அழித்துக்கொண்டிருக்கிறாள். அமுவைப் போலவே என்னையும் வியப்பிலாழ்த்திய வரி அது. அந்த ஒரு வரியே தனிக்கதைகளை உருவாக்கக் கூடியது. தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவலில் சிறிய ஒருவரித் தகவல் வரும். கதை நாயகனின் சிறிய மகளுக்கு மீன் என்றால் அலர்ஜி. ஏனெனில் ஒரு முறை சமைக்க வாங்கி வந்த மீனின் வயிற்றில் உண்டு செரிமானம் ஆகாத ஒரு மனித விரல் இருக்கும். ஒரு வரிதான், ஆனால் அது வரலாற்றின் மாபெரும் இன அழிப்பு ஒன்றில் அடித்துக் கடலில் வீசி காணாமல் ஆக்கப்பட்ட எத்தனையோ இளைஞர்களைப் பிரதிநிதி செய்யும் விரலல்லவா? அதைப் போல அந்தச் சின்னப்பெண் சுரண்டி அகற்ற நினைப்பது எதை என்ற கேள்வி பல்வேறு சாத்தியங்களை நோக்கி வாசகனைச் செலுத்தக் கூடியது.
கருணாவின் வாஞ்சை களங்கமற்றது. முன்பின் அறியாதவர்கள் மீதும் எளியவர்கள் மீதும் மட்டுமல்ல அது சகல ஜீவராசிகளின் மீதும் படர்கிறது. கிளிகள் வந்து கொத்துவதற்காகவே திணை பயிரிடும் விவசாயி கருணாவை எனக்குத் தெரியும். கூண்டுப்பறவைகளுக்கும் மரம் வேண்டுமென மரத்தைச் சுற்றியே கூண்டமைப்பவர். கலாப்ரியாவின் மொழிகளிலேயே சொல்வதானால் அவருக்கு மரங்கொத்தியின் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், பாஷைகளும் கூட தெரிந்திருக்கலாம்.
கவர்னரின் ஹெலிகாப்டர் நூலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் இணையத்தில் வெளியானவை. அவற்றை அப்போதே உடனுக்குடன் வாசித்து என் நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். அவரது ஒவ்வொரு கட்டுரைகளும் குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் இணைய வாசகர்களேனும் வாசித்த கட்டுரைகள். குறிப்பாக சுஜாதாவின் ஆட்டோகிராஃப் மற்றும் ராங் கால் ஆகிய இரண்டு கட்டுரைகளும் என் கணிப்பில் சில லட்சம் பேர்களால் வாசிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற முன்னணி படைப்பாளர்கள் இந்த கட்டுரைகளைத் தங்களது தளத்திலும் வெளியிட்டு இவர் மீது அடையாளம் பாய்ச்சியவர்கள்.
தி இந்து தமிழின் வருகைக்குப் பிறகு டிம் பார்கஸ், தாமஸ் எல் ஃபிரிட் மேன், பால் க்ரூக்மேன், ஜூலியன் பார்ன்ஸ் போன்ற சர்வதேச அளவில் புகழ்மிக்க கட்டுரையாளர்களின் மொழிபெயர்ப்புகள் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றை ஆழ்ந்து வாசிக்கையில் உலகெங்கிலும் எழுதப்படுகிற சிறந்த கட்டுரைகளைப் பற்றிய ஒரு பிடி கிடைக்கிறது. பீடிகைகளற்ற பளீரென்ற துவக்கம், புல்லட் ரயிலைப் போன்ற சர சர வேகம், மையத்தை விட்டு விலகாத போக்கு, உயர்தர அங்கதம், சமகாலத்தன்மை, தேய்வழக்குகள் இல்லாமை போன்றன அவற்றின் பொதுத்தன்மைகளாக இருக்கின்றன. இவை கருணாவின் கட்டுரைகளோடு கச்சிதமாகப் பொருந்திப் போவதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக கருப்புகொடி கட்டுரை. பலத்த பாதுகாப்புகளை சுலபமாக தாண்டி ஜெயவர்த்தனேவிடம் கையொப்பம் வாங்க வந்த கருணாநிதி எனும் பெயருடைய சிறுவன். ஒரு திகில் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை வாசகனுக்குக் கடத்த வல்லது.
கருணாவின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. 25 வருடங்களுக்கு முன்னர் உருவாகி உருவான வேகத்திலேயே அழிந்து போன பேசிக், போர்டிரான் புரோக்ராம்களை நினைவு வைத்திருந்து எழுதுகிறார். முப்பத்தைந்து வருடத்திற்கு முன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்து போட்டுக்கொண்டிருந்த கால்குலஸ் தியரம் அவருக்கின்னும் நினைவிருக்கிறது. சைக்கிளை சாத்தி வைக்கும் சுவற்றில் பெடல் பட்டு லேசாகப் பெயர்ந்த சுவரின் காரைப் புள்ளி நினைவிருக்கிறது.
கருணா சுஜாதாவின் சிஷ்யப்பிள்ளை. கதைமாந்தருக்கு வேணு பிரசாத் எனப் பெயரிடும் அளவிற்கு சுஜாதா தாசன். அதைப் பகிரங்கமாகச் சொல்வதில் ஒரு கூச்சமும் கொள்ளாத நேர்மை அவருக்குண்டு. ஆனால் நான் அவரை அமுத்துவின் பின்னத்தி என்றே சொல்லுவேன். சிரிக்கச் சிரிக்க தகவல் செறிவுடன் சித்தரிப்பது.. கதையின் இறுதியில் அவர்களோடு சேர்ந்து சிரித்த பாவத்திற்கு கையில் ஒரு டைனமட்டை கொடுத்து விடுவது என இவர்களுக்குள் ஒற்றுமை அதிகம். இவர்கள் இருவரது கடைசி அத்தியாயங்களும் நம் வாய் வழியாக கையை நுழைத்து இதயத்தை ஒரு முறை பிசைந்து விடக்கூடிய அபாயம் கொண்டவை.
இவ்வளவு துல்லியமான நினைவும், சரளமான உரைநடையும் கொண்ட கருணா எழுதவேண்டியது ஒரு நாவலே என நான் அடிக்கடி சொல்வேன். இந்த மேடையிலும் அதையே சொல்லி அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
(14.08.2015 அன்று நெல்லையில் நடைபெற்ற ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ நூல் அறிமுகவிழாவில் பேசிய உரை)

Comments