அஞ்சலி: குமரகுருபரன்
கவிஞர் குமரகுருபரன் மாரடைப்பினால் காலமானார் எனும் செய்தி இந்த நாளின் மீது ஒரு இடியாக வந்து விழுகிறது. இரண்டு வருட நட்பு. ஆனால் சந்தித்ததில்லை. அகாலத்தில் என்னை அழைக்கக் கூடிய இருவரில் ஒருவராக அவர் இருந்தார். கடந்த வியாழன் அன்றுதான் குமாரை முதன் முதலில் சந்தித்தேன். இரவு ஒன்பதரை மணி வாக்கில் அழைத்து ஒரு மதுவிடுதிக்கு வரச்சொன்னார். இரவு பத்து மணி துவங்கி நள்ளிரவு வரை பியர் அருந்திக்கொண்டே கவிதைகள், புதிய நாவல்கள், ஊடக அனுபவங்கள் என பேசிக்கொண்டிருந்தார். தினமலரின் சில பதிப்புகளுக்கு உயர் பதவி வகித்தவர். அந்நாளைய தொடர்புகளை இன்றும் பேணி வருபவர் என்பதால் அரசியல் உள்ளடி விவகாரங்களில் அவருக்குப் புலமை இருந்தது. கொஞ்ச நேரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது குடியைப் பற்றிய எனது கவலையை தெரிவித்தேன். சர்க்கரை ரத்த அழுத்தம் என எந்தப் பிரச்சனையும் கிடையாது உடற்பயிற்சி தேவையின்றியே ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். ஐந்து ஃபாஸ்டர் பியர்களைக் காலி செய்த பின்னும் தள்ளாட்டமின்றி பேசிக்கொண்டிருந்தார். மதுவிடுதி மூடும் நேரத்தைத் தாண்டியது. பரிசாரகன் அவரது தோரணையைப் பார்த்து சீக்கிரம் கிளம்புங்களென சொல்லத் தயங்கினான். சரேலென திரும்பி தம்பி நீ கொஞ்ச நேரம் பக்கத்துல வராதே என்று விட்டு பேச்சைத் துவங்கினார். ‘பொதுவாக அதீத தோரணைகள் ஜெயமோகனுக்கு உவப்பானவையல்ல.. எனக்குத் தெரிந்து நீர் ஒருத்தர்தான் விதிவிலக்கு ..’ என் அவதானத்தை சொன்னேன். குமார் உடனே தலையை உதறி ‘அந்தாளு ஆளையும் பார்க்க மாட்டான்.. பூலையும் பார்க்க மாட்டான்.. அதனாலதான் எனக்கு ஆசான்..’ என்றார்.
குமார் கால்நடை மருத்துவம் படித்தவர். இதழியல் ஆர்வத்தால் நாளிதழ்களுக்கு வந்தார். மலர் டிவியின் பூர்வாங்க அணியில் இருந்தார். கொஞ்ச காலம் குமுதத்தில் பணியாற்றினார். குமுதம் ஜங்ஷன் இவரது பொறுப்பில் வெளிவந்தது. பிற்பாடு சேனல்களுக்கான டிரெய்லர், ப்ரொமோ உள்ளிட்ட எடிட்டிங் சேவைகளை செய்து தரும் நிறுவனத்தை துவங்கினார். விகேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்கள் லைவாக தொலைக்காட்சியில் விளம்பரங்களைக் காட்டி டோல் ஃப்ரீ எண்களில் நேரடியாக விற்கும் சேவையையும் அவரது நிறுவனம் அளித்து வந்தது. கடைசி சில வருடங்களில் தொழில் கைகொடுக்கவில்லை என்கிற கவலை அவருக்கிருந்தது.
குமார் தன்னைப் பற்றிய ரகசியங்கள் தனது அபிப்ராயங்கள் இரண்டையும் மறைக்கிறவர் அல்ல. எதையும் உடைத்துப் பேசுகிறவர் என்பதனாலேயே அவருக்கு எடைக்கு எடை நண்பர்களும் எதிரிகளும் இருந்தார்கள். அந்தந்த நேரத்து மனோதர்மத்திற்கு ஏற்ப அதிரடியாகச் செயல்படுபவர். திடீரென கலக ஸ்டேட்டஸ்களைப் போடுவார். யாரை கிழித்து தொங்க விட்டாரோ அவரை நினைத்து சின்னாட்களில் கண்ணீர் மல்குவார். ஃபேஸ்புக்கை விட்டு திடீரென மாயமாவார். திடீரென வந்து குதித்து ஆட்டையைக் கலைப்பார். அர்த்த புஷ்டியோடு ஒரு விமர்சனத்தை வைப்பார். எதிர்பாராத தருணத்தில் லும்பன் மொழிக்கு தாவி கலவரப்படுத்துவார். மார்த்தாண்டன் விருதைப் புறக்கணித்தார்; இயல் விருதை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது சிறிய வீடு நண்பர்களின் கொண்டாட்ட ஸ்தலமாக எப்போதும் இருந்தது. எவ்வளவு கருத்து வேறுபாடுகளுடனும் நட்பைப் பேண முடிகிற நபராக இருந்தார். தமிழில் ஒரே நேரத்தில் சாருநிவேதிதாவுக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் ஜெயமோகனுக்கும் முத்துலிங்கத்திற்கும் இன்னபிற இலக்கிய வகைமைகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவர் மேல் பிரியம் இருந்தது. மூன்று மணி நேரப் பேச்சில் சாரு எனக்கு அப்பன்; ஜெயமோகன் எனக்கு ஆசான் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு மணிக்கு மேல் எனக்கு உறக்கம் சொக்கியது; அவரை வலுக்கட்டாயமாக கிளப்பி குடியகத்தை விட்டு வெளியே வந்தோம். டாக்ஸி ஏதுமில்லை. அவரை எனது ஈருளியில் ஏற்றிக்கொண்டேன். ‘சாரு.. சொன்னமாதிரி நீரு இருநூறு கிலோ கறிதாம்யா..’ என்றேன். இருவரும் சிரித்துக்கொண்டோம். ஒரு விடுதியறையில் அவரை இறக்கி விட்டு அறைக்குத் திரும்பினேன்.
வெள்ளி காலையில் என்னய்யா நம்ம விருது வாங்கினா மட்டும் எந்த பேப்பர்லயும் வர்றதில்ல என்றார். அச்சு ஊடகங்களில் செய்தி வரவழைக்க முடிகிற அளவிற்கு நான் பெரிய ஆளில்லை என சற்றே காரமான உரையாடல். சிறிது நேரத்திலேயே மீண்டும் கொஞ்சல். பிறகு நான் வேலைகளில் ஆழ்ந்து அவரை மறந்து விட்டேன். இன்று திடீரென குண்டு வெடித்தாற் போல அவரது மரணச் செய்தி.
குமாருக்கு உள்ளே ஒரு டிஜே இருந்தான். எனக்குள்ளும் ஒரு டிஜே. நாங்களிருவரும் உள்டப்பியும் முகநூல் சுவற்றிலும் மாறி மாறி பாடல்களைப் பரிமாறிக்கொள்வோம். நான் இந்த வேடிக்கை விளையாட்டிற்கு “# ஸாரி குரு” எனப் பெயரிட்டிருந்தேன்.
என் இனிய நண்பனே உனக்கான எனது இறுதி இசைத்துணுக்கு https://www.youtube.com/watch?v=aWIE0PX1uXk “# ஸாரி குரு
Comments