Friday, July 18, 2008

‘வெளங்குனாப்பலதான்’

ஊரில் மர வேலைகள் செய்யும் நண்பன் பெருநகர் காணும் ஆவலில் வந்திருந்தான். அவனை எனது அறையிலேயே தங்க வைத்து ஹோட்டல், சினிமா, காபி டே, ஐஸ் க்ரீம் பார்லர் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விட்டு கடைசியாக எனது அலுவலக கேபினுக்குள் நுழைந்தோம்.
"புஷ்ஷூங்கறது அவ்வளவு பெரிய கம்பெனியாடே எங்கன பாத்தாலும் அவங் கதவயே வாங்கி மாட்டிருக்கானுவ" என்றான் நண்பன்.
'என்னது புஷ் கதவுகளா?! நான் கேள்விப்பட்டதே இல்லையே' என்றேன். 'என்னடே வெளாடுதே... ஒங் ரூமு கதவுள கூட அவங்க கம்பெனி பேருதான் PUSH னு எழுதிருக்குல்லா...'
நல்லவேளை கதவின் பின் பக்கம் அவன் பார்க்கவில்லை. இல்லாவிட்டால் முன்பக்க கதவை புஷ்ஷூம், பின்பக்க கதவை புல் கம்பெனியும் செய்வார்களா என்று கேட்டிருப்பான்.
***
இப்போதெல்லாம் கேண்டியின் திமிர்தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. ஒரு வேலையில் சேர்ந்தாலும் சேர்ந்தாள் எப்போது அழைத்தாலும் எடுப்பதில்லை. எடுத்தாலும் ‘கேச் யூ சூன்’ என்று சொல்லிவிட்டு வைத்து விடுகிறாள். ஜூன் ஆனாலும் அழைப்பதில்லை. சரி மெஸெஜ் அனுப்பலாம் என்று அனுப்பினால், அவளது பதில்கள் ஏடாகூடாமாகவே இருக்கிறது. (உ.ம் - 1) ‘ஐ ஹேவ் புரோமட்டட் அஸ் சேல்ஸ் எக்ஸ்க்யூட்டிவ்” ரிப்ளை: ‘ஹவ் லக்கி பிட்ச் யூ ஆர்?!’ (உ.ம் - 2) ‘ஐயாம் இன் மீட்டிங்... கால் யூ லேட்டர்” ரிப்ளை: ‘இஷ் ஷீ ஃபேர்?!” (உ.ம் - 3) ‘ஐயாம் ஆன் தி வே டூ ஹோட்டல்” ரிப்ளை: “ஹோப் யூ ஹவ் அ நைஸ் மோஷன்” இதனால் கேண்டிக்குப் பதில் ஒரு பாண்டியம்மாள் கிடைத்தாளும் போதும் என்ற முடிவிற்கு ஏகமனதாக வந்திருக்கிறேன். இளம்பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
***
பெட்ரோல் விலை ஒரு முடிவில்லாமல் ஏறிக்கொண்டிருப்பதால் மக்கள் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பார்கள். அதனால் விற்பனையில் தொய்வு ஏற்படும், பைக்குகளின் விலையைக் குறைக்க கம்பெனிகள் முன்வரும் என்றெல்லாம் கேயாஸ் தியரி எஃபக்டில் ஏகப்பட்ட கணக்குகள் போட்டு வைத்திருந்தேன். அத்தனையிலும் மண். இரும்பு விலை ஏற்றத்தினால் பைக்குகளின் விலை ஏறத்தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. யூனிகார்ன் இரும்புக்குதிரையின் விலையும் ஏறி, ஆர்டர் செய்தால் மூன்று மாதங்கள் கழித்துதான் கிடைக்கும் என்ற கையறுநிலை. கோவையில் இருக்கிற இரண்டு டீலர்களிடமும் தமிழக முதல்வரைத் தவிர மீதமுள்ள அனைவரையும் சிபாரிசு செய்ய வைத்தும் வண்டி கிடைப்பதாக இல்லை. ரொக்கப்பணம் கொடுத்துதான் வண்டி வாங்குவது என்ற சங்கல்பத்தில் இருந்ததால் காலம் ஓடி விட்டது. காலத்தே பயிர் செய்வதைப் போல பைக்கும் வாங்கிக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது.
***
நான் ஒருவன் பதிவு எழுதாவிட்டால் / படிக்காவிட்டால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் ஒரு போதைப்பழக்கத்தை போல சாயங்காலம் ஆகிவிட்டால் கம்ப்யூட்டரைத் தேடி அலைகிறேன். இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் வைத்திருக்கும் நண்பர்கள் என்னைக் கண்டால் ஸ்டாப் பிளாக்கில் மறைய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பத்து சதவீத ரோஷம் மிச்சம் இருப்பதால் செலவோடு செலவாக ஒரு லேப்டாப் வாங்கி விட உத்தேசித்து கொட்டேஷன்களை வாங்க துவங்கினேன். பின்நவீனத்துவம் எத்தனைத் தெரியுமோ அத்தனைதான் கணிணி குறித்தும் தெரியும் என்பதால் பெரும்குழப்பமே மிஞ்ச இணைய நண்பர்களுக்கு மின்னஞ்சல் எழுதி விபரம் கேட்டேன். நம்ம ஆட்கள்கிட்ட ஒரு விபரம் கேட்டா கொடுத்துட்டுத்தானே அடுத்த வேலையே... ‘வெளங்குனாப்பலதான்’ என்ற ஒரு மெயில் மட்டும் வந்திருந்தது கேண்டியிடமிருந்து...

Sunday, July 6, 2008

முனியாண்டி - கேண்டி எழுப்பும் கேள்விகள்

கேண்டி தன் புஜத்தில் ஒரு டாட்டூ வரைய விருப்பப்பட்டாள். வித்தியாசமான ஒன்றைத்தான் வரைய வேண்டும் என்பதற்காக அவளறிந்த ஒரே சிந்தனையாளனான என்னைத் தொடர்பு கொண்டாள். நான் சொன்ன பதிலில் அதிருப்தி அடைந்தவள் எனது எண்களை நிரந்த ஆட்டோ ரிஜக்டிற்கு ஆளாக்கி விட்டாள். எம்டன் மகன் ஏற்படுத்திய நம்பிக்கையும், பாஸ்கர் அண்ணாவின் கைவண்ணமும் இருப்பதால் அதன் மூலம் கேண்டியோடு ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் அவள் எப்போதும் திரியும் 'ஹாட் சாக்லேட்டில்' பிடித்துக்கொண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு கிளம்பினேன்.

'என்னதான் இருந்தாலும் ஒரு மனுஷன் இப்படியாய்யா ஏமாத்துவான்...?!' என்ற ரீதியில் இயக்குனர் ஏமாற்றி இருந்தார். இவரது முந்தைய படமான எம்டன் மகனில் கிஞ்சித்தும் தலைதூக்காத டிராமாத்தனம் இந்தப்படம் நெடுக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் கேண்டி என் முகத்தைப் பார்ப்பதும் நான் இளிப்பதுமாக நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படம். அதெல்லாம் சரி கதை என்னய்யான்னு கேக்கறீங்களா? இருந்தாதானே பாஸூ சொல்றதுக்கு?

பூர்ணாவை என் அடுத்தத் தலைவியாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க அத்தனைத் தகுதியும் இருந்தும் அவளை சப்ப மூஞ்சின்னு கேண்டி கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தாள். கழுதைகள் அறிவதில்லை கற்பூர வாசனையை என்பதால் பொறுமை காத்தேன். அத்தனைப் பிரச்சனையிலும் ஆறுதலாய் இருந்தது வடிவேலுதான். இந்திரலோகத்தின் தோல்விக்குப் பின் ச்சும்மா குதிரை மாதிரி எழுந்து நிற்கிறார் சிரிப்பு வைத்தியர் கம் பூசாரி. பின்னிப்புட்டாருல்ல...பொண்ணுங்க காலேஜூக்கு போகமா மலைக்கோவிலுக்கு போறாங்கண்ணதும் பசங்க தட்டாம்பூச்சியா மாறி கிர்ர்னு பறக்கது ஜூப்பருங்க. அப்புறம் எந்த ஊரு காலேஜூல பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு வர்றாங்க? சொன்னீங்கண்ணா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்பிருவோம்ல...

பூர்ணாவை செருப்பால அடிக்கிறது... அவங்க அப்பனை செவுட்டுல அடிக்கிற சீன்களிலெல்லாம் பரத் நல்லா ந (அ) டிச்சுருக்காரு. பாவம் பழனி, நேபாளி பாதிப்புலருந்து இன்னும் மீண்டு வரல போலருக்கு. பூர்ணா கோபமா வீட்டுல இருக்கிற பொருட்களை போட்டு உடைக்கிற ஒரு சீன்ல காட்டுற கம்ப்யூட்டர் அதைக் கண்டுபிடிச்ச சார்லஸ் பாபேஜோடதாம். ஒர் அரிய பொருளை இப்படிப் போட்டு உடைக்கிறாங்களேன்னு கேண்டி ரொம்ப வருத்தப்பட்டாள்.

ஆக்சன்னு சொல்லி கிளாப் அடிக்கறதுக்கும் வசனம் பேசத் துவங்குறதுக்கும் இடையே இருக்கிற கால இடைவெளிகள் எல்லாம் எடிட்டிங்கில் ரொம்பத் துல்லியமா பதிவு செஞ்சிருக்காப்ல இருக்குதே இது ஏதாவது புதிய உத்தியான்னு நமுட்டுச் சிரிப்போடு கேண்டி கேட்டாள். கேட்டுச் சொல்றேன்னுட்டேன். அப்புறம் வைத்தியின் காமிரா ஆங்கிள்கள் சூப்பர். முனியாண்டியின் தோள்களில் இருந்து பார்க்கும் ஆங்கிள்கள் புதுசாக இருக்கிறது (எனக்கு).

இரண்டு வில்லன்களில் ஒருவர், கதாநாயகியின் தோழிமார்கள், போலீஸாக வருபவர்கள் எல்லாம் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு நம்மகிட்டயே விசாரிக்கிறாங்க...டைரக்டர் சார் 'ரஷ்' பார்க்கிற பழக்கமெல்லாம் இல்லீங்களா?

ஒரு சீன்ல தென்னந்தோப்பு பத்தி எரியுது. பச்ச மரம் எப்படிய்யா எரியும்னு கேண்டி எரிச்சலா கேட்டா 'பத்தினிப் பையன் பத்தவச்சா பச்ச மரம் என்ன பச்சத் தண்ணியே எரியும்டீன்னு' கோபமா கெளம்பிட்டேங்க....

நேர்கோணல்

'எழுத்துச் சுனாமி' எனும் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பி இருந்தார் எழுத்து இயந்திரம் பிரதியங்கார மாசானமுத்து. அவர் பொதுவாக யாருக்கும் பேட்டிகள் அளிப்பதில்லை. யாரும் கேட்பதில்லை என்பது ஒரு காரணம் என்றாலும் இலக்கிய உலகில் தனித்து ஒலிக்கும் அவரது பலகீனமான குரலை வாசகர்களின் பார்வைக்கு பந்தி வைத்தாக வேண்டியது 'புளியேப்பம்' இலக்கிய இதழின் பிரதான கடமையாகவே கருதுகிறோம்.

புளியேப்பம்: மாஸ் ரைட்டர்ஸ் எனப்படும் வெகு ஜன எழுத்தாளர்களுக்கும், சிற்றிதழ்களில் இயங்கும் தீவிர இலக்கியவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

மாசானமுத்து: வெகுஜன எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க முட்டாள்களுக்காக எழுதுபவர்கள்; தீவிர இலக்கியவாதிகளோ தங்களைப் புத்திசாலிகள் என நம்பிக் கொண்டிருப்பவர்களுக்காக எழுதுபவர்கள்.

புளியேப்பம்: நல்ல எழுத்திற்கான அடையாளம் எது?

மாசானமுத்து: ரெமுனரேஷன்! எது வருமானத்தைத் தருகிறதோ அதுதான் நல்ல எழுத்து.

புளியேப்பம்: உங்களுடைய எழுத்து வாழ்க்கை இத்தனை வெற்றிகரமாக அமையக் காரணம் எது? எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவது எது?

மாசானமுத்து: நான் பிற தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிப்பதில்லை. அதனால் எனக்கு ரத்தக் கொதிப்போ, மூளைக் காய்ச்சலோ மலச்சிக்கலோ ஏற்பட்டதே இல்லை. தவிரவும் எனது எல்லா அயோக்கியத்தனங்களையும், அசிங்கங்களையும் எழுத்தில் பதிவு செய்யத் தவறுவதில்லை. அயோக்கியத்தனத்திற்கான சந்தை சர்வதேச அளவிலானது. உங்களது மூளை இடுப்புக்குக் கீழே மட்டும் சிந்திக்கத் துவங்குகையில் உங்களது எழுத்துக்கு மேற்கத்திய அந்தஸ்து ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கை குறித்த உங்களது கேள்விக்கு எனது ஓரே பதில் 'புரவலர்கள்' என்பதுதான். எழுத்துக்களை ரசிப்பது, அது குறித்த எதிர்வினைகளை, விமர்சனங்களை முன் வைப்பது போன்ற ஈனத்தனங்களில் ஒருபோதும் ஈடுபடாதவர்கள் புரவலர்கள். பெரும் பணக்காரர்களான அவர்களது மூட்டுப்பசியைப் போக்க எம்போன்ற எழுத்தாளர்களோடு திரிவதும், செலவு செய்வதும் அவசியமானது.

புளியேப்பம்: ஓரே கருப்பொருளை மையமாகக் கொண்டு வெகுஜன நாளிதழில் வெளியாகும் கட்டுரைக்கும் சிற்றிதழில் வெளியாகும் கட்டுரைக்கும் என்ன வித்தியாசம் ?

மாசானமுத்து: வார்த்தைகள்தான். உண்மையில் கட்டுரைகளை எழுதுவதை விட சுலபமான காரியம் ஒன்று உலகில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற இரண்டே ஆப்ஷன்கள்தான் கட்டுரையில் இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை உங்களது சொந்த நடையிலேயே முதலில் எழுதிக்கொள்ளுங்கள்.யாதொரு, கூர்மையான, பொதுப்புத்தி, அவதானிப்பு, முன்னெப்போதும், கருத்தியல், அழகியல், தீராத, நுண்ணரசியல் போன்ற வார்த்தைகளை பொறுத்தமான இடங்களில் இட்டு நிரப்புனீர்களெயானால் முடிந்தது வேலை.

புளியேப்பம்: தங்களை ‘தமிழக முதல்வரின் தூக்கு தூக்கி’ என்று சகபடைப்பாளிகள் தங்களது விமர்சனக் கட்டுரைகளில் கேலி செய்து வருவது தாங்கள் அறியாதது அல்ல... அது குறித்து...

மாசானமுத்து: அப்படிச் சொல்வதை விட ‘தமிழக முதல்வரின் தொண்டரடிப்பொடி’ என்று அழைத்தால் இன்னும் அகம் மகிழ்வேன். நானறிந்தவரை அவர் ‘ஒரு’ குறள் காட்டும் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தந்தை மகற்காற்றும் நன்றியாக தம்பிள்ளைகளை அவையத்து முந்தி இருக்கச் செய்ய அவர் செய்யும் முயற்சிகளில் ஈர்க்கப்பட்டுத்தான் நான் திருக்குறள் புத்தகத்தையே வாங்கினேன். நானும் கூட ப்ளேயிங் ஸ்கூலில் படிக்கும் எனது மூன்று வயது மகளை ஆசிரியராகக் கொண்டு ‘ஜிங்கிலி புங்கிலி’ எனும் சிறுவர் இதழை துவங்கி இருக்கிறேன். இதன் மூலம் உலகின் இளவயது பத்திரிகை ஆசிரியர் என்ற புகழை எனது மகள் ‘திரவியவதனி’ பெற்றிருக்கிறாள். நாளைய தமிழிலக்கிய உலகை ஆளப்போவது அவள்தான்.

புளியேப்பம்: மலையாளிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்களே ஏன்? மலையாளிகளுக்கெதிரான கலகக்குரல் உங்களது படைப்புகளில் ஓங்கி ஒலிக்கிறதே...

மாசானமுத்து: ஒர் இனத்திற்கென்று பொதுவான குணங்கள் இருத்தல் என்பது மூடத்தனமானது என்பதே எனது உறுதியான நம்பிக்கையாய் இருந்து வந்தது. அப்படியே இருப்பதாகக் கொண்டாலும் அதை அடிப்படையாகக் கொண்டு சகமனிதனை அணுகக்கூடாது என்பதை அறமாகக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய கருத்து ஒரு கற்பிதம் என்றாக்கியவர்கள் மலையாளிகளே. ‘ஒருத்தன் கூட நல்லவன் இல்லடா...’ என்ற எனது புகழ்மிக்க சிறுகதைக்கு (கையெழுத்து பிரதியில் வெளியானது) அடிநாதமாக இருந்தது மலையாளிகளின் அழிச்சாட்டியமே.

புளியேப்பம்: ஆனால் ஸ்ரீசாந்த் விவகாரத்தில் ஹர்பஜன்சிங்கை கடுமையாக சாடினீர்களே...

மாசானமுத்து: ஆம். நான் விசாரித்தவரையில் ஹர்பஜன் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். இதிலென்ன கஞ்சத்தனம்?! ஒரு கஞ்சி கிடைத்தானென்றால் கூட நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே... அப்படிச் செய்யத் தவறியதன் மூலம் இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கி விட்டார் பாஜி...

புளியேப்பம்: தமிழிலக்கிய உலகில் நீண்டகாலமாக ஜல்லியடித்து வருபவர் என்ற முறையில் தற்போதைய எழுத்தாழுமைகளான ஜெயமோகன், சாருநிவேதிதா இருவரையும் ஓப்பிடுங்களேன்...

மாசானமுத்து: ஒருவர் மலையாளக்கரையோரம் பிறந்து தமிழிலக்கிய உலகில் கோலோச்சுகிறார். மற்றொருவர் தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்திலும் புகழடைந்திருக்கிறார். இருவருமே என் எழுத்துக்களைப் படிப்பதில்லை என்பதைத் தவிர வேறெந்த பெரிய ஓற்றுமையும் இல்லை.


புளியேப்பம்: அடுத்தவர்கள் எழுதிய கதைகளைத் திருடி மாட்டிக்கொள்பவர்கள் உண்டு. ஆனால் அடுத்தவனின் கதையையே எழுதி உதைபட்டீர்களாமே...

மாசானமுத்து: கதைகள் வாழ்க்கையிலிருந்தே சுரண்டப்படுகின்றன என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவன் நான். எழுத்து உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்பதால் எனது ஹவுஸ் ஓனரின் மனைவியின் கள்ளத்தொடர்பை ‘கமலாவின் காதலன்’ என்ற சிறுகதையில் எழுதி இருந்தேன். உண்மையான பெயர்களோடு கதவிலக்கம், முகவரி என அனைத்தையும் குறிப்பிட்டு எழுதி இருந்ததால் என்னை வீட்டிற்குள் பூட்டி வைத்து மூன்று நாட்கள் இரக்கம் இல்லாமல் அடித்ததோடு வீட்டையும் காலி செய்யச் சொல்லி விட்டார். ரியலிஸத்திற்காக உயிரை விடவோ, எடுக்கவோ நான் தயங்கமாட்டேன் என்பதை இந்த நேர்காணலின் மூலம் எனது பெரும் வாசகப்பரப்பிற்குத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

புளியேப்பம்: பேரரசுவை ‘தமிழ் சினிமாவின் ஆகிருதி’ என்கிறீர்கள். ஜே.கே. ரித்தீஷை குறிப்பிடுகையில் ‘நவசினிமாவின் உதயம் ரித்தீஷின் கரங்களில் இருக்கிறது’ என்கிறீர்கள். தமிழ் சினிமாவின் ‘ஓரே உன்னத படைப்பு ‘வீராச்சாமிதான்’ என வாதிடுகிறீர்கள். தமிழ் சினிமாவின் தற்போதைய நிலை குறித்த உங்கள் அபிப்ராயம்தான் என்ன?

மாசானமுத்து: நடிப்பு, வசனம், இயக்கம், பாடல்கள் என சினிமாவின் அத்தனை துறைகளிலும் கலையின் உச்ச வடிவத்தை அடைந்தவர் பேரரசு. சங்கப்பாடல்கள் கூட சித்தரிக்கத் தவறிய காதலின் மேன்மையை தன் பாடல்களின் மூலம் தூக்கிச் சுமந்தவர். கட்டு கட்டு கீரைக்கட்டு, கய்யா முய்யா கய்யா முய்யா, அம்மாடி ஆத்தாடி, அப்பன் பண்ண தப்புல, லோக்கு லோக்கு லோக்கலு ஆகிய அவரது சாகாவரம் பெற்ற பாடல்களை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆய்வுக்குறியதாக எடுத்துக்கொண்டால் மட்டுமே தமிழ் பிழைக்கும்.

அடுத்து வீராச்சாமி, எதற்கும் பயப்படாத தமிழர்களை முதன் முதலில் பயம் கொள்ளச் செய்த சினிமா வீராச்சாமிதான். இன்றும் எனது வீட்டிற்கு விடுமுறைக்கு வரும் விருந்தாளிகளை விரட்டுவதாக இருப்பது வீராச்சாமி படத்தின் டிவிடிதான். ரிஷப்சனிலேயே வைத்திருப்பேன் என்பதால் எவரும் வருவதில்லை.

ஜே.கே. ரித்தீஷ் மட்டும்தான் புகழ்ந்தால் பணம் தருகிறாராம். வேறு எந்த நடிகன்யா பணம் கொடுக்கிறான்? அதனால்தான் சொல்கிறேன். அவர் தென் தமிழகத்தின் மூன்றாம் ராஜ ராஜ சோழன்... நாயகன் ஆஸ்கரை அள்ளி வரும்.

புளியேப்பம்: அறமே எனது கடவுள் என்கிறீர்கள். அறச்சார்பு இல்லாத எழுத்தாளன் அவுட் கோயிங் இல்லாத செல்போனுக்கு சமம் என்று கடும் விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள் ஆனால், உங்களுக்கு பிடிக்காத எழுத்தாளர்களது வீட்டிற்கு தாங்கள் எழுதியதிலேயே படுமட்டம் என்று கருதப்படுகிற “ஹாரிபார்ட்டரும் கார்ப்பரேசன் லாரியும்” என்ற நாவலை வி.பி.பியில் அனுப்பி இம்சிக்கிறீர்களாமே... இது எந்த வகை நியாயம்? ஏன் இந்த திணிப்பு?

மாசானமுத்து: இதற்கு முழுக்காரணம் சில பிம்ப் எழுத்தாளர்கள்தான். அவர்கள் ஒழுங்காக எனது புத்தகத்தை வாங்கினால் நான் ஏன் வி.பி.பியில் அனுப்ப வேண்டும். அவர்கள் என் புத்தகத்தை படிப்பதில்லை என்பதற்காக நான் எனது விற்பனை முயற்சியை கைவிட்டு விட முடியாது. அதிலும் சில எழுத்தாளர்கள் பணத்தை செலுத்தி புத்தகத்தை வாங்காமல் திருப்பி அனுப்புகிறார்கள். அவர்களைத்தான் நான் தமிழ் துரோகிகள் என்கிறேன்.

- பின் நவீனத்துவம், உலகமயமாக்கல், மேலைத் தத்துவம், உலக சினிமா குறித்த நமது பல்வேறு கேள்விகளுக்கு எழுத்துச்சுனாமி அளித்த பதில்கள் வரும் இதழில் இடம் பெறும்.

பின் குறிப்பு: ‘நமக்கு நாமே மாமே’ என்ற கொள்கை முழக்கத்துடன் புளியேப்பம் சிற்றிதழ் எழுத்துச் சுனாமி பிரதியங்காரக மாசானமுத்துவால் துவங்கப்பட்டுள்ளது.