Thursday, January 17, 2008

சுவையற்றவை

ஜன்னலோரத்து இருக்கை எதையாவது எழுத துண்டி விடுகிற வசியத்தை வைத்திருக்கத்தான் செய்கிறது. அதிலும் புகைப்படம் எடுத்து விட முடிகிற கைப்பேசியும் இருப்பின் மனம் நிறுத்தத்திற்கு நிறுத்தம் கவிதையான காட்சிகளைத் தேடுகிறது அல்லது கிடைக்கிற காட்சிகளை கவிதையாக்க முயல்கிறது. இருமருங்கும் விரிந்து கிடக்கிற உப்பளங்களைக் கடந்து ஊர் நோக்கி விரைகிறது பேருந்து. பெரும்பாலும் ஐம்பதைக் கடந்தவர்கள்தாம் உப்பளங்களில் உப்பிழுத்துக்கொண்டிருக்கிறார்கள். கடல் நீரை சூரிய ஒளியில் காய்த்து உப்பை எடுப்பதைக்காட்டிலும் கவிதை எழுதுவது கடினமா என்ன?!

தென்னங்கீற்று வேய்ந்த கடலோர குடிசைகளுக்குள்ளும் கேபிள் நதி பாயத்தான் செய்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் குடிசைகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதைக் காண்கிறேன். ஊருக்கு நாலு கொழுத்த இரும்பு சிமெண்டு வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்குதான் போய் விடுகிறது அத்தனை சிமெண்டும்?!

ஏன் இப்படி சரக்கடித்த சங்கரம்பிள்ளை போல எழுதிக்கொண்டிருக்கிறேன் என யோசிக்கிறேன். சமீப காலமாய் வண்ணதாசன் கோட்டி பிடித்து ஒம்ம ஆட்டுதுவேய்.. என்கிற கணபதி சுப்ரமண்யத்தின் கண்டுபிடிப்பிலும் உண்மையில்லாமல் இருக்காது. மொத்த பொட்டலத்தையும் ஏக்தம்மில் உறிஞ்சிவிட்ட பரதேசி போல மாறுதுவேய் ஒம்ம நடை (எழுத்து நடைதான்) என அவர் சொல்வதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு இந்த ஜன்னலுக்கு வெளியே தெரியும் மொட்டைக் கிணற்றருகே குளிக்கும் பெண்ணை எடுத்துக்கொள்கிறேன். யாராவது இரைச்சலோடு ஒலிக்கும் இந்த "இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..." பாடலை நிறுத்த சொல்லி போராடினால் இருந்த இடத்திலிருந்தே ஆதரவு தர தயாராய் இருக்கிறேன். எவனுக்கும் என் ஆதரவு தேவையில்லையா?

ஊரை நெருங்குகையில் பொங்கலின் கால்சுவடுகள் தெரிகின்றன. அதையே பின்பற்றி போனால் எதாவது சந்தையின் குப்பை மேட்டை அடைந்து விடும் அபாயம் இருக்கிறது. 'ப' வடிவத்தில் கரும்புகளை அடுக்கி தலைப்பாகையோடு திடீர் வியாபாரிகள் முளைத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு பட்டாசு, பொங்கலுக்கு கரும்பு, கார்த்திகைக்கு காவோலையென பண்டிகைக்கு பண்டிகை தொழிலை மாற்றத்தெரிந்த சூத்திரதாரிகள். இந்த பொங்கப்பூவும் அதைக்கூவி விற்கும் வெள்ளுடை கிழவிகளும் வருடத்திற்கு ஒருமுறைதான் பூக்கிறார்கள்.

ஊருக்கு நூறு பனைகள் முண்டச்சி ஆகின்றன பொங்கலுக்கு. இன்னும் எங்கள் பெண்கள் பாரம்பர்யம் மாறாமல் ஓலையில்தான் பொங்கலிடுகிறார்கள். ஆனால் நைட்டி அணிந்துகொண்டு. ஐந்து வயதைக்கடந்த பிள்ளைகள் கூட சினிமா நடிகைகளைப் போன்ற விசித்திர உடைகளை அணிந்திருக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பாட்டிமார்களுக்கோ பேரக்குழந்தைகளைப் பார்க்கும்போதேல்லாம் சிறு வயதில் சர்க்கஸில் பார்த்த பபூன்களையும் நிணைத்து பொக்கையாய் சிரிக்கின்றனர்.

போகி அன்று சொக்க பனை கொழுத்தலாம் வாடா என எதிர்வீட்டு சிறுவனை அழைத்தேன். "போங்கள் அங்கிள்... சுத்த போர்..." என்றான் அந்த பவர் ரேஞ்சர்.

சுரைக்காய், சேனைக்கிழங்கு, குண்டு பூசணி, கருணை கிழங்கு, சிறுகிழங்கு என அன்றாட சமையல்கட்டுக்கு அன்னியமான காய்கறிகள் எங்கிருந்தோ பறித்து வரப்பட்டு சந்தை வாசலில் இறங்கிகொண்டிருக்கின்றன. காராமல் கருணைக்கிழங்கு பச்சடி வைக்கத் தெரிந்த பெண்களை தேர்ந்தெடுத்து ஐந்தாயிரம் ரொக்கப்பரிசு வழங்கலாமா? என யோசித்த நான் இன்னொரு போட்டியின் போஸ்டர்களை கண்டதும் அந்த மகாசிந்தனையை அவசரமாகத் துண்டித்துவிட்டேன். 16 அணிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கான கருப்பு வெள்ளை போஸ்டர் அது. வழக்கம்போல முதல் பரிசை வழங்குபவர் பெயரில் யார்க்கர் முருகனின் பெயர் இருந்தது. ஒரு இனிய மாலைப்பொழுதில் அவனையும் அறியாமல் வீசிய பந்து யார்க்கரைப்போன்று தோற்றமளித்து ஒரு சோதா பேட்ஸ்மேனின் விக்கெட்டை பதம் பார்த்ததிலிருந்து "யார்க்கர்" எனும் அடைமொழியோடு பிணைக்கப்பட்டுவிட்டான் முருகன். ஸ்ட்ரெயிட் பேட் ஜெபராஜ், லெக்கட்டு கண்ணன், காட்டடி கிறிஸ்டோபர், புல்டாஸ் புருசோத்தமன் என கிரிக்கெட்டிற்காக தங்கள் சொந்த பெயரை பறிகொடுத்தவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கத்தானே செய்வார்கள்.

தயிறூறூ... என ஒலிக்கும் கணீர் குரல் கேட்டவும் கண்விழித்து வாசலுக்கு ஓடிவரும் எனக்கு பானைக்குள் கைவிட்டு ஒற்றை விரலில் வெண்ணையை வழித்தெடுத்து என் விரலுக்கு அதை லாவகமாக கைமாற்றிவிட்டு நகர்வாள் தயிர்கிழவி. தினமும் டூத் பேஸ்டைப்போல விரலில் ஓட்டப்பட்டிருக்கும் வெண்ணையை நக்கித்தின்றபின் தான் எனது பள்ளிக் கவலைகள் ஆரம்பிக்கும். அந்த தயிர் கிழவி பொங்கலுக்குள் விற்றுவிடலாம் என சுண்ணாம்பு சிப்பிகளை வாங்கி வைத்து பெருமாள் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாள். பேட்டை வாசலில் இருக்கும் எவருக்கும் சிப்பியை வாங்கி கொதிநீரில் ஊற வைத்து வெள்ளையடிக்கும் அளவிற்கு அவகாசம் இல்லாததால் அவளது நம்பிக்கை ஏகத்துக்கும் பொய்த்து போயிருந்தது. கிழவி லேசுபட்டவளில்லை கொஞ்சம் செவப்பு சேர்த்து பாக்கெட் போட்டு வெத்திலை பாக்கு பெட்டி கடைகளில் விற்றுவிடும் தொழில் நுட்பத்தை போன வருட அனுபவத்திலேயே வரப்பெற்றவளாக்கும்.

பஜாரில் இறங்கி கொண்டேன். அப்பா வாங்கி கொடுத்த மஞ்சள் குலையை உடையாமால் வீடு சேர்க்கும் கடமையில் தோற்றுவிடக்கூடாது என சட்டையணியாத சிறுவனொருவன் செத்த எலியைப்போல கவனமாக குலையைத் தூக்கி நடந்து கொண்டிருந்தான். இன்ன கடைதான் என்றில்லாமல் எல்லாக் கடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ரீ-சார்ஜ் கூப்பன்கள். ஜனங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பின் பேசிய அத்தனைக்கும் சேர்த்து வருந்த வேண்டிய நாளும் வந்து சேர்கிறது. ஏதாவது கடையில் பொங்கல் வாழ்த்து அட்டைகள் விற்கிறார்களா என விசாரித்தால், எஸ்.எம்.எஸ் வந்தபின் சிவகாசியிலேயே அச்சடிப்பதை நிறுத்தி விட்டார்கள் என்கிறார்கள்.

பஜாரை கடந்து பிள்ளையார் கோவில் தெருவுக்குள் நுழைந்தேன். இன்னும் வயசுக்கு வராத பாவாடைப்பெண்கள் பூசணிப்பூவை கூடைக்குள் வைத்து வீடு வீடாகச் சென்று விற்றுக்கொண்டிருந்தனர். வாசல் கோலத்தின் மேல் வீற்றிருக்கும் பூசணிப்பூக்களும், அவைகளுக்கு மத்தியில் தலைகாட்டும் செம்பருத்திகளும்தான் வீட்டுப்பெண்களின் கவுரப் பிரச்சனையாக இருக்கிறது. எனக்கு உனக்கு என்று அடித்து பிடித்து வாங்குகிறார்கள். அத்தனை அழகான பூவை சாணியிலா சொருகி வைப்பது?!

கோவிலில் பெங்களூர் ரமணியம்மாளின் பம்மபம்மன்னா ஒலிக்கிறது. பக்தி இசையில் பாப்பிசைமாதிரி அதிரடி இசையைக் கொடுத்தவர். இதையும் எதிர்காலம் ரிமீக்ஸ் செய்து காம்போதிகளை கபோதியாக்கும் காலம் வருவதற்குள் போய் சேர்ந்து விட வேண்டும். சோனிஎரிக்ஸனுக்கு பழகிய காதுகளுக்குகூட குழாய் ஒலி இனிக்கிறதென்பது ஆச்சர்யம்தான்.

பொங்கலன்றும் விடுதியறைப் பழக்கத்தில் தாமதமாகவே எழ முடிகிறது. அத்தனை வீட்டு வாசலிலும் அவரவர் வயிற்றின் வலிமையை பரைசாற்றும் அளவில் பானைகள் இருக்கின்றன. பால் பொங்குகையில் குலவையிட வெட்கமுறும் பெண்கள் வெறுமனே முணுமுணுக்கின்றனர். பொங்கல் வீட்டு முடிந்ததும் மொட்டை மாடிகளில் ஏறி நிற்கும் சிறார்கள் "கா...கா... காக்காச்சீயென..." திடீர் மரியாதையோடு காகத்திற்கு சோறு வைக்கின்றனர். கொத்துவது போல் பக்கம் வந்துவிட்டு போங்கு காட்டிவிட்டு விருட்டென பறக்கும் காகத்தை பசித்த சிறுவனொருவர் 'சனியனே' என சபிக்கிறான். அவர் நம்ம பாஸ்தான் அழைத்துவரட்டுமாயென கேட்கத்தெரியாத காகவாகனம் விண்ணில் எழும்பி மறைகிறது.

கொட்டுக்கார கம்பர் சோகையான நாகஸ்வர சிறுவனோடு வந்து வீடுவீடாக வாசித்து பொங்கல் படி வாங்குகிறார். 'யோவ் நீ வந்தாதான்யா தெரியுது பொங்கல்னு' என நக்கலோடு ரெண்டு ரூபாய் கொடுத்துவிட்டு பழையபடி பாப்பையாவில் ஆழ்ந்துவிட்டார் தாத்தா.

அப்பா, அம்மா, அத்தை, பெரியம்மா, ஆச்சியென பொங்கலுக்கு பொங்கல் எனக்கும் பொங்கல்படியென பெரும்பணம் சேர்வது வழக்கம். சொந்தங்களில் சிலரை காலக்கிரமத்தில் காலனுக்கு வாரி கொடுத்துவிட்ட பிறகு அப்பாவும், பெரியம்மாவும் பொங்கல்படி கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர்களும் பொங்கல்படி கொடுக்கவில்லை. நானும் கேட்டு வாங்கவில்லை.

மஞ்சுவிரட்டு, வழுக்குமரம், உறியடி, இளவட்டம் என எல்லா பாரம்பர்ய விளையாட்டுக்களிலும் அதன் சுவைக்கேற்ற ஆபத்து ஒளிந்துகொண்டிருப்பதால் கிட்டத்தட்ட அத்தனையும் தடை செய்யப்பட்டு விட்டது. ஒரிரு வெளியூர் நோஞ்சாண்கள் மட்டும் ஒத்தை மைக்கை வைத்துக்கொண்டு கயிறு இழுத்தல், கபடி என ஜல்லியடித்துக்கொண்டிருந்தனர்.

முந்தைய ஆண்டுகளில் பொங்கலின் முதல் அடையாளமாய் தெரியும் உற்சாகம் மனித முகங்களில் விடுபட்டு போயிருக்கிறது. விலைவாசி உயர்வா, வெயிலின் கொடுமையா, கொண்டாடி தீர்த்துவிட்டதன் சலிப்பா எதுவென கண்டறிய இயலவில்லை. இதோ உரித்து தின்கும் இந்த சூம்பிப்போன பனங்கிழங்கைப்போலத்தான் அன்றைக்கு எங்களூர் பொங்கலும் இருந்தது.