Monday, February 22, 2010

குறிப்புகள்

மொட்டை வெயிலில் வியர்வையில் ஊறித் திளைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் டிராஃபிக் போலீஸ்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் செலவில் இளநீர் வாங்கிக்கொடுத்து இதமாக இரண்டு வார்த்தை பேசலாமென தோன்றும். ‘லூஸூப்பயல்’ என சரியாக நினைத்து விடுவார்களோ எனும் பயத்தில் தவிர்த்து விடுவேன்.

***
தண்ணியா / தோசை பதத்துல / ஊத்தாப்ப பதத்துல - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கை வைக்கிறார்கள். அவரவர்க்கேற்ற இளநீரை எப்படித்தான் கண்டுபிடிக்கிறார்களோ?! சீவி, உறிஞ்சு குழாய் போட்டு, குடித்ததும் வாங்கி இரண்டாய் வகுந்து, சுரண்டி, ஒரு கரண்டியையும் செய்து - பத்து ரூபாய்க்கு இந்தச் சேவை மிக அதிகம். அன்னபூர்ணாவில் ஆர்டர் செய்த அரை மணி நேரம் கழித்து காஃபி வரும். 12.5% சர்வீஸ் டேக்ஸூடன்!

***
கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’- நூலுக்கு மதுரையில் சமயவேல் அறிமுக அரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஜெயமோகன், யவனிகா ஸ்ரீராம், திருச்செந்தாழை, கடற்கரய், ரமேஷ் பிரேதன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். மதுரைவாழ் பதிவுலக நண்பர்கள் விழாவில் கலந்துகொள்வார்களென நம்புகிறேன்.

நூலின் முன்னுரையில் தனக்கு வினையூக்கியாக இருந்ததாக என்னுடைய பெயரையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார் கலாப்ரியா. போனிலும், சாட்டிலுமாக அவருக்கு இம்சை கொடுத்ததன்றி வேறென்ன செய்திருக்கிறேன் என்று தீவிரமாக யோசிக்கிறேன்.

***

தீபாவை பதிவுலகப் பறவைகளின் வேடந்தாங்கலான விஜி வீட்டில் சந்தித்தேன். பொதுவாக கூர்நாசி உடையவர்கள் தீர்க்கமானவர்கள் என்பது என் நம்பிக்கை. பொய்க்கவில்லை.

சில ஆளுமைகளின் புத்திரபாக்கியங்கள் ‘பிராண்ட் அம்பாஸிடராக’ மட்டுமே செயல்படுவார்கள். அப்பா என்பதையெல்லாம் விடுத்து சகபடைப்பாளியாக ஜெயகாந்தனை விமர்சன நோக்கோடு அணுகியது பிடித்திருந்தது.

***
தேசிய விருது பெறும் முதல் தமிழ் குறும்படம் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ‘கர்ண மோட்சம்’. சில நிமிடங்கள் மட்டுமே ஓடுகிற இப்படம் என்னை கடுமையாகப் பாதித்தது. முரளி மனோகர் இயக்கத்தில், எஸ்.ராவின் வசனங்களோடு உருவான இப்படம் பிரசன்னா இராசன் பதிவில் காணக்கிடைக்கிறது.

***

‘நீ நல்ல மார்க் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் நீ கேட்ட கோர்ஸ், கேட்ட காலேஜ்ல படிக்க நான் ஏற்பாடு பண்றேன். கவலையே படாதே!’ - என்று சும்மாவாச்சும் ஓர் உறுதிமொழி கொடுத்தால் பிள்ளைகளுக்கு தேர்வு பயங்களும், மனஅழுத்தமும் குறையலாம்.

மதிப்பெண்களால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என்பது எல்லோருக்குமே தாமதமாகத்தான் புரியவரும்.

***

புத்தகமோ, சினிமாவோ, இசையோ எனக்குப் பிடித்திருந்தால், ‘நான் ரசித்தேன் நீயும் ரசி!’ என நண்பர்களுக்குக் கொடுப்பது வழக்கம். ரசித்துக்கொண்டே இருக்கிறார்கள். திருப்பித் தருகிற பாடில்லை. ‘கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்புவதில்லை’ என்றார் சுரதா. கசங்கினாலும் பரவாயில்லை. வீடு திரும்பினால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்.

***
ஓரே வளாகத்தில் எஞ்சீனியரிங்கும், கேட்டரிங்கும் இருக்கும் கல்லூரி ஒன்றில் பணியாற்றும் பேராசிரியர் அழைத்திருந்தார். அவர் சொன்ன இடத்தில் வெகுநேரம் காத்திருந்தும் ஆளைக் காணோமே என்று செல்லினேன். ‘ஐய்யா தாங்கள் நிற்பது பொறியியல் அறிவியல் கல்லூரி வாசலில்... நான் வரச்சொன்னது பொரியல் அவியல் கல்லூரிக்கு...!’ என்று பதில் வந்தது.

Saturday, February 20, 2010

கோட்டி

இரைச்சல், கரைச்சல், புகைச்சல் என ஒவ்வொரு அங்குலத்திலும் மனுவிரோதம் காட்டுகிற நகரம் என்பதால் சென்னையிலிருந்து பின்னங்கால் பிடறி பட ஓடிவந்தேன். அதற்குக் கொஞ்சமும் குறைச்சல் இல்லாத நகரமாய் மாறிவருகிறது கோவை. உங்களுக்கு மட்டும் என்னடா சொகுசு என சொளெரென அறையும் வெயில், கால் இடுக்குகளில் கூட நுழைந்து வெளியேற துடிக்கும் வாகனங்கள், எந்நேரமும் தூசிகளோடு காதல் புரியும் காற்று, கடும் தண்ணீர் பஞ்சம் இத்தோடு நகர் நீங்கியிருந்த சண்டாளர்களும் வந்து சேர செளஜன்யத்துக்கு சவுகர்கர்யமில்லாத ஊரெனப் படுகிறது.

***

வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டில் எதிராளியின் ஈகோவையும் ஒரு குத்து குத்தி விளையாடுவது விறுவிறுப்பாய் இருக்கிறது.

***

இந்திய எழுத்தாளர்களுக்கு எழுத்தினால் கிடைக்கும் அதிகபட்ச பலன் ‘பெண்கள் தொடர்புதான்’ என்றார் செல்லமுத்து குப்புசாமி. ஓரளவுக்கு ஒத்துப் போகிறேன். அதிலும் எழுத்தாளன் என்ற உடனே ஒரு ‘ட்ரஸ்ட் வொர்த்தி’ ஃபீலிங் வந்து சேர்ந்து விடுகிறது. நிறைய பெண்கள் தங்கள் ஆதர்ச எழுத்துக்காரனிடம் அந்தரங்கமான பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

எழுத்தாளர்களால் முடியவே முடியாதது ரகசியங்களைப் பேணுவதுதான். எழுத்திலோ, பேச்சிலோ எப்படியோ வெளிப்பட்டுவிடும். நேரடியாகவோ அல்லது பவுடர் பூசிய வேறு வடிவங்களிலோ.

***

ஆண்கள் பேசத்துவங்கும்போது பத்து சதவிகிதம் அழகையும், புணர்ச்சியின் போது ஐம்பது சதவிகிதம் அழகையும் இழக்கிறார்கள் என்றாள் தோழி. பிப்ரவரி 18ல்தான் தாலி சுமந்து இருபதாம் தேதிக்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

பெண்கள் பேசத்துவங்கும்போது முழு அழகையும் இழக்கிறார்கள் என்ற என் சொந்த அபிப்ராயத்தை அவளிடத்தில் மறைத்து விட்டேன்.

***
வெள்ளியில் தங்க முலாம் பூசிய பேனா ஒன்று பிறந்தநாள் பரிசாக கிடைத்தது. என் பத்து ரூபாய்க்கு மூன்று பேனாக்கள் செயலிழந்த தினத்தில் வெள்ளிப்பேனாவை பாக்கெட்டில் குத்திக்கொண்டேன்.

நினைவுச் சாமானை இப்படியா பயன்படுத்துவது என்று கேண்டி கோபித்துக்கொண்டாள். பொருட்களின் மீது நினைவை சேமித்து வைப்பது உசிதமல்ல. காலம் எல்லா பண்டக அறைகளிலும் பாழடைந்த நினைவுச்சாமான்களை நிறைத்து வைத்திருக்கிறது. அன்பின் வெளிப்பாடு பரிசு. பரிசின் பதில் மரியாதை பயன்பாடு.

***

கோட்டிக்காரத்தனமாக எதையாவது யோசித்துக்கொண்டே ரோட்டில் விழுந்து எழுவது சகஜமாகிவிட்டது. தாறுமாறாய் செல்லும் வாகனங்களை விட ஆபத்தானது தாறுமாறான மனம். முட்டியிலும் முழங்கையிலும் வாடகை இல்லாமல் குடியிருக்கின்றன சிராய்ப்புகள். காய்ந்த சிராய்ப்பின் பொருக்குகளை உதிர்ப்பதில் கூட ஒரு சுகம் இருக்கத்தானய்யா செய்கிறது. ரத்தத்தைத் தவிர உடலை விட்டு வெளியேறும் எல்லாவற்றிலும் மகத்தான சுகம் ஒன்று மறைந்திருக்கிறது.

***

சுயமரியாதை என்பதில் தனிமரியாதையும் இருப்பதைப் போலத்தான் சமூக அக்கறையில் சொந்த அக்கறையும் ஒளிந்திருக்கிறது. எதையாவது கண்டு கோபப்படால் ‘வந்துட்டாருய்யா ரமணா...’ எனும் கேலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ரோஷப்படுபவனையும், படுத்துகிறவனையும் சமூகம் கேலி செய்வது இயல்பு. இயலாமையும் கூட.

***

காமத்தைப் பற்றி மருத்துவர் / எழுத்தாளர் / சாமியார் - யார் எழுதினாலும் உடனே அவர்களது மரியாதை குறைந்து விடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் குடும்ப கட்டமைப்பில் காமம் எத்தனை முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதை தினம் ஒரு உண்மைக்கதையாவது உணர்த்தி விடுகிறது. ட்ரஸ்ட் வொர்த்தி இமேஜில் சொல்லப்படுகிற விஷயங்களை கதையாக கட்டுரையாக எழுதக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சதா சர்வ காலமும் அதைப்பற்றியே சிந்திக்கிற / ஆராய்கிற மனிதனாக ’காதல் அன்பை பேசுகிறது. காமம் அன்பை வெளிப்படுத்துகிறது’ என்கிற தேற்றத்தை நிறுவ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

***

நமக்கு வரவேண்டிய பணமெல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்க நாம் செலுத்த வேண்டிய கடன்கள் கழுத்தை நெரிக்கும். எல்லோருக்கும் இதுதான் கதை. கொஞ்சம் பணம் புரட்டலாமென தெருவில் காலை வைத்தால் வீடு திரும்புவதற்குள் கைரேகை நிபுணன் ஆகிவிடலாம் போலிருக்கிறது.

வாழ்க்கைத் தரம் எத்தனைப் பணம் வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை. எத்தனைப் பணம் புரட்டமுடிகிறது என்பதில்தான் இருக்கிறது என்றார் அப்பா. இதுமாதிரி தத்துவங்களுக்கெல்லாம் ரெமுனரேஷன் கொடுத்தால் பணத்தேவையே இருக்காதுப்பா என்றேன். முறைத்தார்.

***
கூடிய வரைக்கும் பிழைகள் இல்லாமல் எழுதத்தான் முயற்சிக்கிறேன். அதை மீறி வருகிற பிழைகளை அறிவின் பிழைகளாகக் கொள்ளலாகாது. பின்னே ஃப்ரூப் ரீடர்களும் பிழைக்கவேண்டுமே?!

Friday, February 19, 2010

விழிதிகழ் அழகி!

ன்னதான் நம்மைச் சுற்றி இந்திரசுந்தரிகள் இருந்தாலும், நடிகை என்றால் ஏற்படும் பரவசம் அலாதியானதுதானே?! அலுவலக விழா ஒன்றிற்கு எதிர்பாராத விருந்தாளியாக சினேகா வந்திருந்தார். நேரில் பார்ப்பதற்கு எதிர்வீட்டு முருகேஸ்வரி மாதிரி சாதாரணமாகத்தான் இருக்கிறார். வியூபைண்டரின் வழியே பார்க்கையில் பேரழகியாய் தெரிகிறார். ஃபோட்டோஜெனிக்!

மூச்சுக்கு முன்னூறு தரம் புன்னகைக்கிறார். அடியேன் அடித்த ‘விபரீத கிச்சடி’ கமெண்டிற்கு ரூஜ் தாண்டியும் கன்னம் சிவந்தார். சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்…

ள்ளக்காதலன்’ என்கிற பதம் சரியானதுதானா?! ஆதுரமாய் அவள் கை பற்றி கனவுகளைக் கேட்கிறவனாக, அவளது மென்னுணர்வுகளை நசுக்காதவனாக, பெண்மையைப் போற்றுபவனாக அவன் இருக்கக்கூடாதா?! காதலென்று வந்தபின்னே கள்ளம் ஏதய்யா?!

ப்பேர்ப்பட்ட நிர்வாக அமைப்பிலும் ஊழியக்காரன் வெறும் ஊழியன் மட்டுமே. அதை தாண்டி வெற்றியில் உரிமை கொண்டாடினால் மோசமாகத் தண்டிக்கப்படுவான் என்பதற்கு லட்சத்துப் பத்தாவது உதாரணம் பொன்சேகா.

போரை முடித்தோமா மிச்சம் மிஞ்சாடி இருக்கும் தமிழர்களையும் ‘என் கடன் கொலை செய்து கிடப்பதே’ என போட்டுத்தள்ளினோமா என்றில்லாமல் வெற்றிக்கு சொந்தம் கொண்டாடப் போக களி தின்கிறார். முஷரப் மாதிரி நாட்டையே ஆட்டை போட்டுவிடலாம் என்கிற அவரது திட்டம் மழையில் நனைந்த பொட்டு வெடியைப் போல ஆகிவிட்டது. பொன்சேகா போர் விதிகளை மீறி படுகொலைகள் புரிந்தார் / அதிபரைக் கொலை செய்ய சதி செய்தார் என ராணுவ நீதிமன்றத்தில் தீர்ப்பளித்து அதிகபட்சமாக தூக்கு / குறைந்தபட்சமாக நாடு கடத்தல் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை சர்வதேச சமூகத்தின் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?!) முன் பறைசாற்ற பொன்சேகா காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்கள் சிலர். இரண்டு பேர்களுமே கூட்டுச் சேர்ந்து கொதவாளையைக் கடிக்கிற களவாணிப்பயல்கள் என்பதால் எவன் செத்தாலும் பரவாயில்லை என்பதுதான் என் அவா.

லையுலகில் தலித்தியம், செக்யூலரிஸம் விவகாரங்களில் ஜபர்தஸ்த் காட்டும் சில ‘எலிஜிபிள் பேச்சலர்கள்’ சொந்தச் சாதியில், நல்ல ‘சல்லி’யில் வரன்களைத் தேடிவருவதைக் கேள்விப்பட்ட சகவலைஞர் ஒருவர் துணுக்குற்று என்னை அழைத்தார். ‘யோவ் நீய்யி… அவனுங்களை போலி செக்யூலரிஸ்ட்டுகள்னு கிண்டல் பண்றது சரியாத்தாம்யா இருக்கு…’என்றார்.

‘எழுதுகிறவன் இப்படித்தான் இருப்பான் என்பது வாசகனுக்குத்தானேயன்றி எழுத்தாளனுக்கு இல்லை’ என்று அய்யனாரையும் ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என வள்ளுவரையும் துணைக்கழைத்து விளக்கினேன்.

காஃபி மாதிரியான ஒரு காஃபியைக் குடிப்பது கும்பமேளா மாதிரி. தண்ணியாக / கடுங்கசப்பாக / திகட்டலாக / முறுகலாக / வெங்காய வாசனையோடு / விரல் நுழையாத அளவு கெட்டியாக / கண்ட கருமாந்திரங்களெல்லாம் நீந்தும் நீச்சல் குளமாக என காஃபியின் இலக்கணத்தைச் சாகடிப்பவர்கள் வீடு, ஹோட்டல் என்றில்லாமல் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

நெடுநாட்களுக்குப் பின் என்னைக் கண்ட பரவசத்தில் காஃபி கலந்து கொடுத்தாள் அத்தை மகள். அதுதான் என் வாழ்நாளின் உன்னத காஃபி. நல்ல காபிஃக்கு முதலில் அன்பைக் கலக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

த்தி எழுத்து என்றானபின் எழுத்தாளன் தன் இருப்பையும் மெலிதாக எழுத்தில் திணித்தே ஆகவேண்டி இருக்கிறது. தன்னிலே மகிழ்ந்து முகிழ்ந்து எழுதுவது பரமானுபவம்தான் இல்லையா?!

ன்
விழி வீச்சில்
விழுகிறதென்
விக்கெட்!
சொல் கண்ணே
உனக்கு நான்
எத்தனையாவது விக்கெட்?!
டிவியில் ஈரோடு மகேஷ் கச்சாவாகச் சொன்னதை நான் கொஞ்சம் தரித்திருக்கிறேன்.

மிழ்ப்படத்தில் ஒரு துக்கடா கேரக்டரில் விக்கிரமாதித்யன் நம்பியைப் பார்த்தபோது அதிர்ந்தேன். அருவியை நீர்வீழ்ச்சியென்றால் கோபம் கொள்ளுகிற தாமிரபரணி தந்த அசலான கவிஞன் பேட்டாவுக்குக் காத்திருப்பது தமிழ்ச்சமூகத்தின் தோல்விகளுள் ஒன்று. அன்றைய தினம் முழுவதும் ‘கல்வெள்ளிக் கொலுசு’ எனும் பதம் மனசுக்குள் ஊறிக்கொண்டே இருந்தது.

Friday, February 12, 2010

உதிரிகள்


உங்கள் ஐந்து வயது மகன் ‘ஏ’ ஜோக் அடித்தால் ரசிப்பீர்களா?! நிச்சயமாக மாட்டீர்கள். அதையே யாராவது டிவியில் செய்தால் கைதட்டி ரசிப்பீர்கள். உங்கள் மகனையும் அழைத்து ‘பாரு அந்தப் பையன் பயமே இல்லாமல் எப்படி பேசுறான்னு...’ என்று நல்வழிகாட்டுவீர்கள்.

அசத்த போவது யாரு - நிகழ்ச்சியில் தொட்டிலை விட்டு அப்போதுதான் இறங்கி வந்த பாலகன் ஒருவன் எக்ஸ்டெம்பராக டபுள் மீனிங் ஜோக்கெல்லாம் அடிக்கிறான். இது ‘சைல்ட் அப்யூஸ்’ இல்லையா?! எடுத்தவனுக்கும் மானமில்லை. பார்ப்பவர்களுக்கும் மானமில்லை. இதே ரீதியில் கீழ்க்காணும் நிகழ்ச்சிகள் தமிழ் தொலைக்காட்சிகளில் விரைவில் இடம்பெறலாம் என யூகிக்கிறேன். அவற்றிற்கும் உங்களது மேலான ஆதரவை அளியுங்கள்.

அணு அளவும் துணி இல்லை!

டாப் டென் செக்ஸ் ஸ்கேண்டல்ஸ்!

காஞ்சிபுரம் தேவநாதன் - வாழ்க்கை வரலாற்றுத் தொடர்!

சூப்பர் ஏ ஜோக்ஸ் ஜூனியர்! - தமிழகத்தில் பிஞ்சில் பழுத்தவர்களுக்கான ஒரு மாபெரும் தேடல்!

நாஞ்சில் சொன்னது போல இந்த சேனல்கள் நம் நடுவீட்டில் பீத்துணி அலசுகிறார்கள். நாம் சுரணையற்று ரசிக்கிறோம்.

****

குழந்தைகளுக்கு நான்கு வரி தமிழில் வாசிக்கத் தெரியவில்லை, சும்மாவேனும் பாட ஒரு பக்திப் பாடல் தெரியவில்லை, மரியாதையாகப் பேசத் தெரியவில்லை - இதெல்லாம் அவமானமில்லை. ஆடத்தெரியவில்லையெனில் மொத்த குடும்ப மானமும் போச்சு. வண்டி கட்டிக்கொண்டு பிள்ளைகளை ஆட்ட வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். மானும் மயிலும் மயிரும் தயிரும் ஆடியதன் உறுபலன்!

எல்.கே.ஜி பிள்ளைக்கு ஆட்டம் சொல்லிக்கொடுக்க மாசம் இரண்டாயிரமாம். பரதம், குச்சுப்புடி, தேவராட்டம் என்றா சொல்லிக்கொடுக்கிறார்கள். விஜயசூர்யவிக்ர பிரதிகளை உருவாக்கும் முனைப்புதான் மிஞ்சுகிறது.

உங்கள் குழந்தை கலைஞனாக வேண்டுமா அல்லது ரிக்கார்டு டான்ஸ்காரனாக வேண்டுமா?!

***
ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டால் ஒதுங்கி வழிவிடும் சுரணையைப் பொதுவாக வாகன ஓட்டிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிகிறது. தகப்பனையோ, மனைவி பிள்ளைகளையோ துள்ளத்துடிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றாலொழிய மண்டையில் ஏறாது போலிருக்கிறது. அரசாங்கம் எதுக்கெல்லாம்யா க்ளாஸ் எடுக்கறது?!

***
எழுத்தாளன் வாகன ஓட்டியாக இருத்தல் கூடாது. சதா சர்வ காலமும் கழுதையைப் போல மனதினுள் எதையாவது அசை போட்டுக்கொண்டே, ஒன்றின் கிளை பிடித்து மற்றொன்று, அதன் விழுதைப் பற்றி இன்னொன்று என பிரிபிரியாய் செல்லும் அகமனதின் பயணத்தை எந்தப் பயணத்திலும் எழுத்தாளனால் தவிர்க்கவே முடியாது. ஹெல்மெட்டுக்குள் இருப்பவன் கோட்டிக்கார எழுத்தாளன் என்பது ஃபோர் நாட் ஸெவனுக்கோ, பஜேராவுக்கோ தெரியுமா என்ன? சாலை விபத்தில் இறந்தவன் எழுத்தாளனெனில் சந்தேகத்தில் துர்பலனை எழுத்தாளனுக்கே கொடுத்து மோதியவனை மன்னிப்பதுதான் அறம்.

***

உங்களுக்கு ‘செய்தி பூதம்’ ஒன்றினை அறிமுகம் செய்கிறேன். ஆங்கில இலக்கணங்களை ஒரு பாத்திரத்தில் பால் விட்டு கரைத்து தினமும் குடித்து வளர்ந்தவன் போலிருக்கிறது. புவியில் உள்ள சகல ஆங்கில நாளிதழ்கள், அனைத்து ஆங்கில செய்தி சானல்கள், செய்தி தளங்கள் என விழித்திருக்கும் நேரமெல்லாம் செய்திகளைத் தின்றுகொண்டே இருக்கும். தான் படித்த ஊத்த செய்திகளை எவன் மீதாவது வாந்தியெடுக்க உன்மத்தம் கொண்டலையும் இந்த பூதத்துடனேயே அதிக நேரம் இருக்க வேண்டி இருப்பது என் ஊழ்வினை. இதுமாதிரியான பூதங்களுக்கு முட்டாள்கள் வைத்திருக்கும் பெயர் ஜீனியஸ்! உரையாடலைத் துவங்குவதற்காக பூதம் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனுக்குடன் உடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

உ.ம்: ‘யோவ் செல்வேந்திரா... திண்டுக்கல் பாண்டியைப் பார்த்தீரா... துப்பாக்கியை எடுத்தவனுக்கெல்லாம் துப்பாக்கியாலதாம்யா சாவு...!’

‘ஓஹோ! காந்தி எந்த துப்பாக்கியை தூக்கிட்டு திரிஞ்சாரு...?! எதையாவது எதுகூடயாவது ஒட்ட வச்சிகிட்டே திரியப்படாதுண்ணே...!’

***

பரபரப்பான, பளபளப்பான ஒப்பனக்காரவீதிக்கு நேர்பின்புறம் இருக்கிறது ‘ஒக்கிலியர் காலணி’. ஸ்லம்டாக் மில்லியனரில் பார்த்த மும்பை குடிசைகளைக் காட்டிலும் பலமடங்கு கெச்சலாக இருக்கிறது. குடிசைகள், சாக்கடை, நடைபாதையில் குடித்தனம், நிர்வாண குழந்தைகள், ஒவ்வொரு அங்குலத்திலும் வறுமை. அம்மன் கோவில் வாசலில் மூன்று முட்டை தோசைக்கடைகள். ஒரு திண்டில் ஆரத்தி தட்டு வைத்திருக்கிறார்கள் அதையடுத்து முட்டை தட்டுக்கள். இதுமாதிரியான நூறு நகைமுரண்களைக் கண்டேன்.

***
நான் பின்னூட்டங்களுக்கு பதிலூட்டம் அளிப்பதில்லையென்று பொதுவாக ஒரு புகார். அடியேன் சொற்பமாகப் படிக்கிறவன். அற்பமாக எழுதுகிறவன். அவ்வளவுதான் நேரம். நாளொன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரம் ஆலைக்கரும்பாகப் பிழியப்பட்டு வருகிறவனால் அவ்வளவுதான் முடியும். பதிலூட்டம் எதிர்பார்க்கிறவர்கள் கமெண்ட வேண்டாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்!

***
என்னோடு பூப்பந்துகளால் எறிபந்து விளையாடும் தோழர்கள் பரிசலும், கேபிளும். இருவரது சிறுகதைகளும் புத்தகமாக வெளிவருவதில் எனக்கு ஏக மகிழ்ச்சி. அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

***
ஜனனி ஐயர் எனும் மாடலிங் பெண்ணைப் பற்றி ஏற்கனவே இந்தப் பக்கங்களில் எழுதி இருக்கிறேன். பாலா இயக்கப்போகும் ‘அவன் - இவன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள்!

Monday, February 1, 2010

1/1000

படைப்பு ஏற்படுத்தும் விவாதங்களைப் பொறுத்தே அதன் இடம் தீர்மானிக்கப்படுகிறது. அவ்வகையில் உ.போ.ஒருவனுக்குப் பிறகு அறிவார்ந்த பார்வையாளர்களின் மத்தியில் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கின்ற ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரவேற்கத்தகுந்த படமாகவே எனக்குப்படுகிறது. இதுமாதிரியான அதீத கற்பனையுள்ள ஃபேண்டஸித் திரைப்படங்களும் தமிழுக்குத் தேவைதானே?!

சோழர் குலம் இன்னும் நீடிக்கிறதா எனும் தேடலில் அவர்களது வாரிசுதாரர்களும், சிதைவுண்ட நகரங்களும் கண்டுபிடிக்கப்படுகிற தருணத்திலேயே எனக்கான படம் முடிந்துவிட்டது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் கோணங்கியின் கதைகளைப் படிப்பது போல இருந்தது. முற்றான முடிவுகள் எதற்கும் வரமுடியாமல் தீவிரமான குழப்பத்தில் திரையில் க்ளூக்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

வரலாறு புனைவுகளால் ஆனது அல்லது புனைவுகளே வரலாறாய் ஆனது என்கிற அய்யனாரின் வரிகள் மட்டுமே படம் முழுக்க மனதில் தோன்றியபடி இருந்தன. காட்டாறு போல பிரவகிக்கிற புனைவு மனதின் சிதறுண்ட வடிவங்களாகக் காட்சிகள் நகர்ந்துகொண்டிருந்தன. திரையில் தெறிக்கின்ற ரத்தம் பயத்தையோ, குரூர வன்முறையின் பரவசத்தையோ ஏற்படுத்தவில்லை. சுண்ணாம்புக்காளவாய், கழுமரம் போன்ற மூவேந்தர்களின் பிரத்யேக கொலைக்கருவிகளுக்கு முன் கொடுவாளின் ரத்தமும், துப்பாக்கிகளின் சத்தமும். ப்ச்!

காடு, மழை, தனித்திருக்கும் நாயக, நாயகிகள், நெருப்பு நடனம் போன்ற செல்வராகவனின் க்ளிஷேக்களும், இந்தியானா ஜோன்ஸ், அபோகலிப்டா, கிளாடியேட்டர் என பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆங்கிலப்படங்களையும் காட்சிக்கு காட்சி நினைவு கூர்வதும், மொக்கையான வசனங்களும், மோசமான பாத்திர தேர்வும் (குறிப்பாக அழகம்பெருமாள், பார்த்திபன்) படத்தின் பொது பலவீனங்கள்.

சாகஸ கதைகளுக்கேயுரிய உடல்வாகில் அழகான இரு நாயகிகள். நூறு சதவீத பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து ரவிக்கை இல்லாத புடவை, படிய வாரிய தலை, பில்லாக்கு, மெளனம் உறையும் முகமுமாக ’நாடோடிகள்’ அபிநயா கிருஸ்ணாபுரத்துச் சிற்பம் போல இருந்தார். திரைமுழுக்க தேடிக்கொண்டிருந்தேன் அந்த தேவதையை.

இசை, பின்னணி இசை இரண்டும் அதிஅற்புதம். குருவி தூக்கிச் சுமக்கும் பனங்காயாக ஆரம்பத்தில் பட்டாலும் இப்படம் ஜிவிப்ரகாஷின் இசை வாழ்வில் ஒரு மைல்கல்! முக்கியமான திரைப்படங்களைப் பார்க்க காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்கு திரும்பவும் ஒரு பாடம். ‘நெல்லாடிய நிலமெங்கே?’, ‘மாலை நேரம்...’ போன்ற பாடல்களை விழுங்கி விட்டார்கள்.

ஒளிப்பதிவும், கலையும், ஆடையலங்காரமும் இக்கலைஞர்கள் எந்தளவிற்கு இத்துறையில் துறைபோனவர்கள் என்பதற்குச் சான்று.


படத்தின் பிற்பாதியைப் பலரும் பல்வேறு விஷயங்களுடன் பொறுத்திப் பார்த்து பொருள் கொள்கின்றனர். குறிப்பாக ஈழப் பிரச்சனையோடு. எனக்கு அப்படியான காட்சிப்படிமங்கள் எதுவும் விரியவில்லை. மோசமான எடிட்டிங்கோ என்று சிலமுறையும், செல்வராகவன் ஜல்லியடிக்கிறாரோ என்று பலமுறையும் சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருந்தது.

செல்வராகவன் குழுவினரின் நெடும் உழைப்பும்,-தயாரிப்பாளர் திரைமுழுக்க கொட்டிச் செலவழித்திருக்கும் பணமும் மதிக்கத் தகுந்தது. மட்டரகமான மசாலா படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அனைவரும் ஆதரிக்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று.

இதே திரைப்படம் வெளிநாட்டு இயக்குனரால் எடுக்கப்பட்டிருந்தால் இதன் புரியாத பகுதிகளை யானை தடவும் குருடன் போல வியந்தோதி நம் இலக்கியச்சிங்கங்கள் பதினாறு பக்கங்களுக்கு விமர்சனங்கள் எழுதித் தீர்த்திருப்பார்கள் என்பது என் எண்ணம்.

Hi Selva,
What is your view, I am 100 % agree with the following review. What is your comment about the movie.
Expecting your review about the movie in your blog.
***
Thanks,
Venkatraman.M
Hello Selventhiran sir,

This is Saravanan from KGF (Karnataka)
I like ur writings too much. Continuously i am reding ur blog.

plz write about Ayirathil oruvan film (review)

I want to see the film from ur point of view. (already i have seen the film)

Thanks & regards
Saravanan G
| Engineer - R&D|

தமிழ்நாட்டில் என்னுடைய அபிப்ராயத்திற்கும் இரண்டு பேர் இருக்கின்ற காரணத்தினாலே இந்தப் பதிவு 