Monday, December 28, 2009

பின் - நவீனத்துவ ஷாட்!

கடந்த ஞாயிறு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். ரசிககண்மணி ஒன்றின் வேலை இது!

Tuesday, December 22, 2009

தேசத்தின் துடிப்பு

அக்ரி யுனிவர்சிட்டி மாணவர்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. வம்பு தும்புக்கு அலைய மாட்டார்கள். வேறெந்த மாணவர்களைக் காட்டிலும் வந்த வேலையை கவனிப்பவர்கள். அப்படி ஒரு இளங்கலை மாணவர்தான் சுந்தர். மாணவப் பத்திரிகையாளராக பசுமை விகடனில் கொஞ்ச காலம் இருந்தார். வெகுநாட்களுக்குப் பின், எதேச்சையாக கண்ணில் பட்டார்.

"நான் கும்பகோணத்துக்காரன். மழை கொஞ்சம் அடிச்சி பெய்தால் தண்ணீரில் நெற்பயிர்கள் நாசம்னு அடிக்கடி படிச்சிருப்பீங்கள்ல. அப்படி பயிர்கள் அழியக் கூடாதுன்னு புதுசா ஒரு நெல் ரகம் கண்டு பிடிச்சிருக்கேன். 14 நாட்கள் வெள்ளம் சூழ்ந்தாலும் தாக்குப் பிடிக்கும்" என்றார்.

"அடடா... சூப்பர் தம்பி. படிச்சு முடிச்சதும் என்ன பண்ண போறீங்க...?! வேலை விஷயமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கூப்பிடுங்க..."

"வேலையா...?! நான் பாக்டரி வைக்கப் போறேன். மரவள்ளிக் கிழங்கில் இருந்து சிட்ரிக் ஆசிட்டும், சாமந்திப்பூவிலிருந்து கொசுவை விரட்டும் ஆயிலும் எடுக்கிற டெக்னாலஜியில் இரண்டு தொழிற்சாலைகள்...நீங்க அவசியம் வரணும்"

முன்னது பிரேசிலிலும், பின்னது கென்யாவிலும் கனகாலமாய் நடைபெற்று வரும் தொழில்கள். இந்தியாவில் மரவள்ளியும், சாமந்தியும் விளைந்து தள்ளுகிறது. அதை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றினால் விளைவிப்பவன் வாழ்வான் என்பதை சுந்தர் மாதிரி நம்பிக்கை மனிதர்கள்தாம் நிரூபணம் செய்ய வேண்டும்.
***

சீயர் கேர்ள்ஸை
வேடிக்கை பார்க்கும் ஃபீல்டர்
பந்தை கோட்டை விடுகிறான்.
சபாஷ்! என் இனமடா நீ...!
போன ஜென்மத்தில் எழுதிய முடியலத்துவம். இந்திய அணியினருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கையில் விளக்கெண்ணையை தேய்த்துக்கொண்டு வந்தவர்களைப் போல வாங்கி வழிய விடுகிறார்கள். மானம் போகிறது.

சேப்பல் சித்தப்பா இருந்த போது எது நன்றாக இருந்ததோ இல்லையோ ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது நிஜம். யுவராஜ் சிங், ரெய்னா போன்றவர்களை ஃபீல்டிங் இன்-சார்ஜாக நியமித்திருந்தார். ஆட்டத்தில் களப்பணியை சரிபார்ப்பது அவர்களது பொறுப்பு. இப்போதெல்லாம் இவர்களது பருப்பே வேகுவதில்லை.

"கேட்சஸ் ஆர் மேட்சஸ்" என்பதை சாகிற வரையில் வலியுறுத்திக்கொண்டிருந்தார் ஹேன்சி குரோஞ்ச். கொஞ்சம் லைன் அண்ட் லென்த் வீசுகிற பவுலர்களும், பறக்கிற ஃபீல்டர்களும் இருந்தால் 200 ரன்களை வைத்துக்கொண்டும் பட்டையைக் கிளப்பலாம். கிளப்பினார்கள் தெ.ஆப்பிரிக்கர்கள். நம் தம்பிமார்களோ நானூறு டார்கெட்டிற்கும் நாயடி படுகிறார்கள்.

இன் & அவுட் காலங்களில் பாய்ந்து பாய்ந்து ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, கவுதம் கம்பீர், விராத் கோலி ஆசாமிகளெல்லாம் இருப்பு ஸ்திரமாகி விட்டதால் இப்படி கோழி பிடிக்கிறார்களோ என்று எனக்கொரு சம்சயம்.

கேரி கிர்ஸ்டன் கொஞ்சம் பெண்டு நிமிர்த்த வேண்டிய நேரம் இது.

***

எதிர்முனையில் சதத்தினை நெருங்கி விட்ட சச்சின். வெற்றிக்கு தேவையோ இரண்டே ரன்கள். வெற்றிக்கான ஷாட்டை அடித்த தினேஷ் கார்த்திக்கோ மகிழ்வதற்கு பதில் துடிக்கிறார். "சச்சினால் சதம் அடிக்க முடியவில்லையே..."
சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்பது ஒரு தேசத்தின் துடிப்பு. அவர் சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று பிராது கொடுக்கிறவர்களுக்கு பதிலாக இருந்தது தினேஷின் வருத்தம்.
***

காஞ்சிபுரம் அர்ச்சகரை ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் நூற்றுக்கணக்கான பெண்கள் துடைப்பங்களோடு நிற்கிறார்கள். கும்பிடுகிற கோவிலில் குஜால் பண்ணிவிட்டானே என்கிற ஆதங்கம் காரணமாக இருக்கலாம். சபாஷ்!

முள்வேலி முகாம்களில், அலுவலகங்களில், காவல் நிலையங்களில், கல்விக் கூடங்களில், ஸ்டூடியோக்களில், பனியன் கம்பெனிகளில், ஓடும் ரயிலில், வீராணம் குழாயில், வாழைத்தோட்டத்தில், பாலத்திற்கு அடியில், மூத்திர சந்தில் என புணர்ச்சி எங்கும் எப்போதும் இடையறாது நிகழ்ந்து வருகிறது. காதலி, அடுத்தவன் மனைவி, பள்ளி மாணவி, பச்சிளம் குழந்தை, சக ஊழியை, எதிர் வீட்டு சிறுமி, அக்கா, தங்கை, சித்தி, மகள், அத்தை என பெண்கள் அதிகாரத்தின் பெயரால் புணரப்பட்டு வருகிறார்கள். அவனவனுக்கு அவனவன் பணியிடம் வசதியாக இருக்கிறது. அர்ச்சகருக்கு கோவில்.

கோவில் கருவறை என்ற போதும் அவனிடத்தில் முயங்கிய பெண்கள், செல்போனில் படம் பிடிக்கப்பட்டதை தரவிறக்கம் செய்ய உதவியவர்கள், அதை சிடி போட்டு விற்றவர்கள், இணையத்தில் கடை விரித்தவர்கள், ப்ளூ டூத்தில் பரப்புபவர்கள் என அனைத்து பெண் திண்ணி நாய்களுக்கு எதிராகவும் இவர்களது துடைப்பங்கள் உயர கருவறையில் மவுனசாட்சியாக நின்ற பெருமாளை சேவிக்கிறேன்.

***
ஒப்பனக்கார வீதியில் கேட்டது:

"என்னங்க இந்த வருஷம் கிறிஸ்மஸூக்கு பஜார்ல ஒண்ணும் கூட்டத்தையே காணலையே...?!"
"இந்த வருஷம் கிறிஸ்மஸ் மாசக்கடைசில வருதுல்ல அதாங்"
***

Tuesday, December 15, 2009

சொந்த விஷயங்கள்

இணைய வசதிக்காக தட்டழிந்தேன். ரிலையன்ஸ், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் என அனைவரும் கை விரிக்க கட்ட கடைசிக்கு 'போட்டான் பிளஸிடம்' சரணடைந்தேன். பின்னே நான் ஒருத்தன் பதிவு எழுதாவிட்டால் தமிழ் என்ன ஆகும்?!

***

ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருப்பத்தூரில் இருக்க தலைப்பட்டிருக்கிறேன். திருப்பத்தூர் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பதிவுலக அன்பர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொள்ளும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

***

முடியலத்துவத்தின் தங்கை சிரியலிஸம் மலர்ந்திருக்கிறாள். கடந்த இரு மாதங்களாக மல்லிகை மகள் இதழில் கவிதைத் தொடர் வெளியாகி வருகிறது. ஒரு சாம்பிள்:


முதுமை

காலா, என்னருகே வாடா!
ஓர் இருக்கை தருகிறேன்
கொஞ்ச நேரமேனும்
பேசிவிட்டுப் போடா...!

இதெல்லாம் ஒரு கவிதையான்னு கேட்டு யாரும் முஷ்டியை முறுக்கப்படாது.

***

'காலசர்ப்ப தோஷம்' இருக்கிறது என்று ஜோதிட சிகாமணிகள் கட்டையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சுவாமி ஓம்காரை துரத்தி பிடித்தேன். "அதெல்லாம் ஒன்றும் பயப்படத் தேவையில்லை கருணாநிதி, ரஜினிகாந்த், ராகுல் காந்தி என வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வருகின்ற ஹை-கிளாஸ் தோஷம் அது. 33 வயதிற்குப் பின் முடியலத்துவத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

***

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கென எங்களது நிறுவனம் சார்பாக "ப்யூச்சர் பெர்ஃபெக்ட்" என்றொரு நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அடியேனும் ஒரு பேச்சாளனாக கூட்டத்தோடு கோவிந்தா போட்டு வருகிறேன்.

ஆங்கிலத்திற்கு இணையாக அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாக ஸ்பானிஷ் மாறி வருகிறது. அதற்கு காரணம் மெக்ஸிகோவிலிருந்து நிகழும் இடப்பெயர்வு என்பதை விளக்கும் பொருட்டு "அமெரிக்காவிற்கு கீழேயுள்ள நாடு எது?" என்று மாணவர்களிடம் கேட்டேன்.

"பாகிஸ்தான்" என கோரஸாக பதில் வந்தது.

டெக்னிக்கலி ராங்! பொலிட்டிக்கலி ரைட்!

Sunday, November 1, 2009

ஆத்தா...நான் குடுமி ஆகிட்டேன்...

நண்பர்களே,

ஐந்தாண்டு கால மேன்ஷன் வாழ்க்கையிலிருந்து விடுபடும் முயற்சியாக நாளை முதல் தனிமனை புகுகிறேன். பிரம்மச்சாரிகளுக்கு வீடு கொடுப்பதில்லை என்கிற சர்வதேச இலக்கணத்தை அப்படியே கடைபிடிப்பவர்கள் கோயம்புத்தூர்காரர்கள். வடகரை வேலன் அண்ணாச்சியின் பெருமுயற்சியில் வடவள்ளியில் அருமையான வீடு கிடைத்தது. பெருநகரின் சலம்பல்கள் எட்டாத தொலைவில், வீட்டைச் சுற்றி பசும் புல்வெளிகள் சூழ்ந்த ரம்மியமான வீடு. உரிமையாளர் அருகில் இல்லை என்பது கூடுதல் வரம்.

மாலை மங்கினால் மனித சஞ்சாரமே இல்லை. கனத்த இருளும், பெயர் தெரியாத பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே துணை. தனிமைதான் இவ்விடத்தின் பெரிய சவாலாக இருக்கும் என்பதை யூகிக்கிறேன். தனியார் நிறுவனங்களின் இணைய வசதி அறவே இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டுமே கதி. தொலைபேசிக்கு விண்ணப்பித்து, பிராட்பேண்டிற்கு விண்ணப்பித்து... முதல்வர் வரை சிபாரிசுக்கு ஆள் பிடித்து இணைப்பு வாங்க இன்னும் இரண்டு மாதங்களேனும் பிடிக்கும்.

இந்த இடைப்பட்ட காலங்களில் வாசிக்காமல் வைத்திருக்கிற புத்தகங்களையும், பார்க்காமல் வைத்திருக்கிற படங்களையும் பார்த்துவிடலாமென்கிற நப்பாசை இருக்கிறது. வாசலில் விரிந்திருக்கும் மைதானத்தின் துணை கொண்டு ரப்பையைக் கரைக்கலாம் என்ற நீண்டகால திட்டம் இருக்கிறது. இடையில் விடுபட்டுப்போன சமைக்கிற வழக்கத்தை திரும்பவும் ஆரம்பிக்க வேண்டும்.

லெளகீக வாழ்விற்குத் தேவையான கட்டில், பீரோ, டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இன்னபிற சப்புச்சரவுகளையும் சேகரம் செய்ய துவங்க வேண்டும். இந்த சமாச்சாரத்தில் சுணங்கினால் கேண்டி முகவாய்க்கட்டையில் இடிப்பாள். சந்தா கட்டி இருக்கிற பத்திரிகைகள் துவங்கி வங்கிகள் வரைக்கும் முகவரி மாற்றத்தை உடனே தெரிவிக்க வேண்டும். காஸ் சிலிண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். தினமணிக்கு ஏஜெண்ட் யார் என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்... ஆஹா! நான் குடுமி ஆகிவிட்டேன்....

வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் நண்பர்கள் மற்றும் நண்பர்கள் அல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும், எவ்வித முன்னறிவிப்பு புடலங்காய்களுக்கும் அவசியமின்றி வீட்டில் தங்கிக்கொள்ளலாம், குடிக்கலாம், ஆடலாம், சண்டையிடலாம். அனைவரும் வருக... ஆதரவு தருக...!

எனது புதிய முகவரி:

செல்வேந்திரன்,
28, ராம்ஸ் நகர்,
பி.என். புதுர்,
வடவள்ளி,
கோயம்புத்தூர் - 641 041

Friday, October 30, 2009

ப்ளடி... பிளாக்கர்...!

கொஞ்சம் கூப்பினி குடித்தால் பரவாயில்லையென தோன்றியது. கோகோ ஷாப்புக்குள் நுழைந்தேன். அறிவிப்பு பலகையின் இன்றைய ஸ்பெஷல் நீத்தண்ணி என்று எழுதி வைத்திருந்தார்கள். ஒரு கலயம் நீத்தண்ணி முப்பது ரூபாய். கூப்பினியைக் காட்டிலும் மூன்று ரூபாய் குறைவுதான். இந்த கொடிய ரிசஷனில் நீத்தண்ணிதான் பெஸ்ட். ஆர்டர் செய்து விட்டு ஜன்னலோரத்து இருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன்.


எதிர் இருக்கையில் ஆறு வயதுப் பையன் ஒருவன் ஹிம்சாகரின் புத்தகமொன்றைக் கிழித்து கப்பல்கள் செய்து நீச்சத்தண்ணி கலயத்துக்குள் நீந்த விட்டுக்கொண்டிருந்தான். அந்த ஹிம்சாகரின் புத்தகத்தை மூன்று பிறவிகளாகத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான். காந்தியை நான் சுட்டதையும், பிரவீன் ஆம்தே யாரோடெல்லாம் படுத்தான் என்பதைப் பற்றியும் சுவைபட எழுதப்பட்ட புத்தகம் அது. இந்த பிறவியிலும் அப்புத்தகம் கிடைக்காவிட்டால் பத்ரியிடம் கோரிக்கை வைக்கலாம் என்றிருந்தேன். அப்பேர்பட்ட புத்தகத்தில் கத்திக்கப்பல் செய்பவனை நோக்கி கத்தலாமா? கத்தியைத் தூக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் உற்றுப்பார்ப்பதைக் கண்டுபிடித்துவிட்டான் பொடியன்... "நீ ஒரு எழுத்தாளனா...?!"


"அட...எப்படித் தெரியும்... என் எழுத்துக்களை வாசித்திருக்கிறாயா... டி.வியில் கூட ஒருமுறை வந்தி..."


"உன்னிடமிருந்து எழுத்துக்களின் அழுகிய வாடை அடிக்கிறது" - அலட்சியமாகப் பதில் சொல்லிவிட்டு தன் கடன் கப்பல் செய்வதே என்பது போல சர சரவென பக்கங்களைக் கிழித்து கப்பல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.


அடேயப்பா ராஜபாளையத்தில் பிறந்தவன் போலிருக்கிறது. இந்தச் சின்ன வயதில் எப்படியொரு மோப்ப சக்தி. நான் எழுத்தாளன் என்பதை எளிதில் கண்டு கொண்டானே... ஆனால், இப்படி பொறுப்பில்லாமல் புத்தகத்தைக் கிழித்து கப்பலா செய்வது...


"ஹிம்சாகரை என் ஹிம்சிக்கிறாய்...?!" சற்று உறைப்பாகக் கேட்டேன்.


"குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டலாம். கப்பல் ஓட்டக் கூடாதா?!"


"சைத்தானே... அந்தப் புத்தகத்தின் மதிப்பு தெரியுமா... அது என் சரிதை. நான் காந்தியைக் கொன்ற வரலாறு அதில் இருக்கிறது..."


"என்ன காந்தியைக் கொன்றீரா... ஹா... ஹா... அடிவயிறைப் பிடித்துக்கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் பொடியன்... மற்றொரு டேபிளில் அமர்ந்து புலி சூப் குடித்துக்கொண்டிருந்த சமவெளி மான் ஒன்று எட்டிப்பார்த்து முறைத்தது. சர்வர் வந்து அமைதியாக பேசுங்கள் அல்லது **டையைக் கசக்கிவிடுவேன் என்று மிரட்டி விட்டுப் போனான். எனக்கு இது ஒன்றும் புதியதல்ல... இந்தக் கடையில் கூப்பினி குடிக்க வரும் ஒவ்வொரு முறையும் இந்த சர்வர் என்னை மகா கேவலமாகப் பேசுவது சகஜம்தான். என் பிரச்சனை சர்வர் அல்ல! இந்தப் பொடியனின் அலட்சியம்தான் எனக்கு பெருத்த அவமானத்தை தந்தது.


"ஏன் நான் காந்தியைக் கொன்றதை நீ நம்பவில்லையா... இதோ என் கழுத்தைப் பார்... என்னை தூக்கிலிட்டதன் கயிற்றுத் தழும்புகள். சாகும் வரைதான் தூக்கிலிடச் சொல்லி உத்தரவு. பரதேசிகள்! நான் செத்தபிறகும் சில நிமிடங்கள் தூக்கில் தொங்க வைத்துவிட்டார்கள். வயலேஷன் ஆஃப் ஜட்ஜ்மெண்ட். செத்த பிறகும் தூக்கில் தொங்குவது எத்தனை அவமானகரமானது தெரியுமா...?"


"நீ காந்தியைக் கொன்றாய் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமென்று நினைக்கிறாயா... எழுத்தாளா..."


"நிச்சயம் இல்லை. நீ என் அலுவலகத்திற்கு வந்தால் காந்தியைக் கொன்றபோது ரெட்ஜயண்ட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோவைக் காட்டுகிறேன். வர விருப்பமில்லையெனில் நீயே யூ ட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்"


"என் காதலிக்காகக் காத்திருக்கிறேன்... இன்னொரு நாள் வருகிறேன்."


"ஓகே... பை தி பை... மை நேம் இஸ் செல்வேந்திரன், எமர்ஜிங் ரைட்டர்! உன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே..."


நீண்ட பிரசங்கத்திற்கு தயார் செய்பவனைப் போல தன் தொண்டையைச் செருமிக்கொண்டு துவங்கினான் பொடியன்...


"என் இயற்பெயர் அலெக்ஸாண்டர் டூமாஸ். அது மிகவும் கேவலமான வைதீக பெயர் என்பதால் "ஜெனோவா வீரன் பக்கிரிசாமி" என மாற்றிக்கொண்டேன். என் தாய் அம்புஜம் ராஜஸ்தானைச் சேர்ந்தவள். அவளது எண்பதாவது வயதில் நான் பிறந்தேன். என் பிறப்பு ஒரு சோக சரிதம். வாழ்வியல் கடமைகள் பூர்த்தியாகி விட்டதால் சாந்தாரா இருந்து உயிர் துறக்க ஆசைப்பட்டாள் அம்புஜம். ஆனால், அதற்கு முன் ஊரில் உள்ள பிரமுகர்களுக்கு விருந்தளிக்கத் திட்டமிட்டாள்.


விருந்திற்கு சமூக அக்கறையும், அறச்சீற்றமும் கொண்ட அகவலோசைக் கவிஞன் ஒருவன் வாளி நிறைய்ய கவிதைகளோடு வந்தான். கொஞ்சம் கவனப் பிசகாக இருந்தாலும் வாளியில் இருக்கும் கவிதைகள் எகிறி குதித்து ஜனங்கள் மத்தியில் பரவி விடும் அபாயம் இருந்ததால், அம்புஜம் மிகுந்த கவனத்தோடு அவனிடத்தில் இருந்து வாளியை வாங்கி ஜனசந்தடியற்ற இடத்தில் வைக்கச் சென்றாள். எவனோ ஒரு பிரக்ஞையற்ற பரதேசி தின்றுவிட்டு போட்ட வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்ததில் அவளது கையிலிருந்த வாளி கவிழ்ந்து கவிதைகள் எல்லா திசைகளிலும் பரவியது. விருந்துதானே என உள்ளூர் பிரமுகர்களும் முகமூடி, மூக்குமூடி, காதுமூடி என எந்தவொரு மூடியும் இல்லாமல் வந்து தொலைத்திருந்தனர். எவரையும் காப்பாற்ற முடியவில்லை. எங்கும் மரண ஓலம். அந்தக் கவிஞன் என் தாயின் வளையல்களைக் கழற்றி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்..." - இந்த இடத்தில் பக்கிரிசாமியின் கண்கள் கலங்கி விட்டன. என்னதான் இருந்தாலும் சிறுவன் தானே... தாயின் நினைப்பு வந்திருக்கலாம். அவனைத் தேற்றும் பொருட்டு சர்வரை அழைத்து 'பொட்டாசியம் குளோரைடு பொரியல்' ஒரு பிளேட் ஆர்டர் செய்தேன்.


அவன் விசும்பலோடு தொடர்ந்தான்..."என் தாய் புகழ் மிக்கவள். அவள் கேட்டாள் என்பதற்காக ராஜஸ்தான் மன்னர் கானாவிலிருந்து ஒரு கழுதைப்புலியையும் அதை மேய்ப்பதற்கு ஒரு கறுப்பனையும் வரவழைத்தார். மன்னரது இந்த அன்பிற்கு தப்பர்த்தம் எதும் கொள்ள வேண்டியதில்லை. அம்புஜம் ஒரு அறிவுலக மேதை. விஞ்ஞானியும் கூட. கவிதைகள் எழுதும் சிந்தனை ஒருவனுக்கு வராமல் இருக்க அவள் ஒரு சூரணம் தயாரித்தாள். பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் அரசே அச்சூரணத்தை இலவசமாக வழங்கியது. கவிதைகள் மனுவிரோதம் என்றபோதும் அவள் கவிஞர்களை வெறுத்ததில்லை. நாட்டில் கவிஞர்கள் இனம் அருகி வந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு 'கவிஞர் வதை தடுப்புச் சட்டம்' கொண்டு வர பாடுபட்டாள். கவிஞர்கள் வாழ்கிற தெருக்களில் வேட்டை தடை செய்யப்பட்டது. உலோகப் பொருட்களுடன் அத்தெருக்களில் எவரும் நுழைய முடியாது...ச்சே... அப்பேர்ப்பட்டவளைக் கொலை செய்யும் நோக்கோடு அவன் வந்திருக்கலாமா... இதுதான் அறச்சீற்றமா...?!" - திரும்பவும் விசும்பினான் பக்கிரிசாமி. அவனது கண்ணீரில் எனது வேட்டி தெப்பலாக நனைந்துவிட்டது. வேட்டியைக் கழற்றி பிழிந்து பக்கத்து நாற்காலியில் காய வைத்தேன்.


"சரி... அழாதே பக்கி... உன் பிறப்பில் ஏதோ துயரம் என்றாயே... அதைச் சொல்..." என்றேன் நான்.


"அன்றைய விருந்தில் என் தாயுடன் சேர்த்து 78 பேர் மரித்துப் போனார்கள். அம்புஜம் கர்ப்பிணி என்பது யாருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடரின் முக்கியக் காட்சி அன்று. சீரியல் பார்க்கும் அவசரத்தில் ஊரார் 78 பிணங்களையும் அவசர அவசரமாகக் கடலில் வீசி விட்டார்கள். அம்புஜத்தின் பிணத்தை கடற் பெருச்சாளியொன்று கடித்தது. பிண வாடைக்கு சுறாக்களும் கூடி விட்டன. பெருச்சாளிக்கும் சுறாக்களுக்கும் ஆகாது என்பது உனக்கு தெரிந்திருக்கலாம். இருதரப்பும் பிணத்திற்கு அடித்துக்கொண்டதில் அம்புஜத்தின் வயிறு கிழிந்து நான் வெளிப்பட்டேன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்ததால் வெறும் கால்களால் பல நாட்டிக்கல் மைல்கள் நீந்தி யாழ்ப்பாணத்தில் கரையேறினேன். அங்கே அவசர அவசரமாக பலரை மின்படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தேன்.
 
மண்டபம் முகாமில் என்னைப் பிடித்து விட்டார்கள். என் பெயர் என்ன என்று கேட்டார் விசாரணை அதிகாரி. என் துயர கதையை அவரிடம் சொன்னேன். அவர் அந்தச் சமயத்தில் 'த்ரீ மஸ்கீட்டர்ஸ்' படித்துக்கொண்டிருந்தார். தான் படித்துக்கொண்டிருக்கிற காரணத்தினாலேயே உலகில் அதை மிஞ்சிய இலக்கியப் பிரதி வேறெதுவும் இல்லையென்றும், இதைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே அருகதையற்றவன் என்றும் உறுதியான முடிவுகள் வைத்திருந்தார். நான் எவ்வளவு மறுத்தும் 'அலெக்ஸாண்டர் டூமாஸ்' எனும் பெயரைத் திணித்து விட்டார். முகாமில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் அன்பானவர்கள். அவர்களிடமிருந்து நான் கண்ணீர் விடவும், ரத்தம் சிந்தவும், மனம் குமையவும், குருட்டு நம்பிக்கையையும் கற்றுக்கொண்டேன்.


என்னுடைய நான்காவது வயதில் எழுத்தாளர் பிரதியங்கார மாசானமுத்து எங்களது முகாமிற்கு வந்தார். உங்கள் துயரங்களை எழுத்தில் வடிப்பேன், அதை வாசிப்பவர்கள் இதயம் வெடித்து உங்களைத் தேடி ஓடி வருவார்கள் என்றார். உங்கள் துன்பங்கள் தீர நீங்கள் அனுபவித்த துயரங்களை என்னிடத்தில் சொல்லுங்கள். ரியலிஸம் ரொம்ப முக்கியம் என்றார். குறிப்பாக பெண்களிடத்தில் ராணுவம் நடந்து கொண்ட விதத்தை நடித்துக் காண்பிக்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார். மாசானமுத்துவைப் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி என் தாயின் கருவில் இருக்கிற காலத்திலேயே படித்திருக்கிறேன் என்பதால் அவரது பாச்சா என்னிடத்தில் பலிக்கவில்லை. என் தாய் அம்புஜத்தைப் பற்றியும், ராஜஸ்தான் அரண்மனையில் அவளுக்கிருந்த செல்வாக்கைப் பற்றியும் அவன் துருவி, துருவி கேட்டுக்கொண்டே இருப்பான். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போது நான் கர்ப்பத்தில் இருந்தேன் என்று சொல்லியும் விடமாட்டான். கானாவில் இருந்து வந்த கழுதைப்புலி மேய்ப்பன்தானே உன் தகப்பன் என்று ஒரு நாள் என்னிடத்தில் கேட்டான். மாசானமுத்து என் குஞ்சைப் பிடித்து அழுத்துகிறான் என கத்தினேன். மொத்த முகாமும் கூடி அவனை நையப் புடைத்துவிட்டது. அவன் பிரான்ஸிற்கு ஓடிப் போய் விட்டான் என சிற்றிதழ் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டேன்... அப்புறம் ஒரு திரைப்பட இயக்குனர் வந்... சொல்லிக்கொண்டிருந்த பக்கிரிசாமி பேச்சை நிறுத்தினான்... திபு திபுவென போலீஸார் கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். பக்கிரிசாமியின் முகம் வெளிறியது...அவனது முகத்தில் கலவரமும், பயமும் கொப்பளித்தது...சட்டென வியர்த்துப்போனான்... அவனை அடையாளம் கண்டுகொண்ட போலீஸ்காரனொருவன் அவனது கழுத்தில் துப்பாக்கியை வைத்து இறுக்கினான்... இன்னொருவருவன் பக்கிரிசாமியின் கரங்களைப் பின்பக்கமாகச் சேர்த்துக் கட்டினான்.


நான் வேட்டியை எடுத்து உடுத்திக்கொண்டு ஓட தயாரானேன். "டேய் எழுத்தாளா... என்னைச் சந்தித்ததை எழுதப் போகிறாயா...?!" பக்கிரிசாமி கத்தினான்.


"எழுதுவேன்... பிரச்சனை வந்தால் எடுத்துவிடுவேன்..." சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன்.


"த்தூ... ப்ளடி பிளாக்கர்..!" அவன் காரி உமிழும் ஓசை தூரத்தில் கேட்டது.

Wednesday, October 14, 2009

அறிவு ஜீவி

'ரமேஷ் வைத்யா' பதிவினைப் படித்து விட்டு பலரும் தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்தனர். அவரது தொலைபேசி எண்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். மருத்துவமனையில் செல்போனை பகிரங்கமாகப் பயன்படுத்த இயலாது. கவுன்சிலிங் வகுப்புகளின் போது பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். தவிர, தொலைபேசியில் அழைத்துப் பேசுவது என்பது சிகிச்சையில் இருப்போர்க்கு கூடுதல் உபத்திரவம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். அவரது எண்கள் 9566270092. வெளியூர் நண்பர்கள் அவரை உற்சாகமூட்டும் வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பலாம் என்பது அடியேனின் யோசனை.

நைஜீரியாவிலிருந்து நேசமித்திரன் அழைத்திருந்தார். எழுத்து அல்லது சினிமாக் கனவுகளை நெஞ்சில் சுமந்து சென்னைக்கு ரயிலேறும் இளைஞர்களுக்கு அபிபுல்லா சாலை வீட்டில் அறிவுமதி அடைக்கலம் கொடுத்ததைப் போல... பல பாட்டுப் பறவைகளின் வேடந்தாங்கலாக ரமேஷின் வீடு இருந்ததை நினைவுப் படுத்தினார். எவ்வித முன்னறிவிப்புமின்றி கிளம்பி, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்க முடிகிற வீடாக ரமேஷின் வீடு இருந்தது. அற்றைத் திங்கள் அந்நிலவில்... பாடல் நினைவுக்கு வருகிறது.
***
குங்குமத்தில் இருபது கவிதைகளும், தினகரன் தீபாவளி மலரில் இரண்டு கவிதைகளும் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் வெகுஜனப்பத்திரிகைகளில் நூறு கவிதைகள் (ஆம்... பத்திரிகை ஆசிரியர்கள் இதை கவிதைகள் என்றுதான் கிளாஸிபை பண்ணுகிறார்கள்!) என்கிற எண்ணிக்கையை எட்டிப் பிடித்திருக்கிறேன். ஸ்கோர் 101*
தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் கவிதைகள் எழுத வேண்டுமென்கிற என் கனவு சுயமதிப்பீட்டுக் காரணங்களால் தள்ளிப் போகிறது.
***
ஆனந்த விகடனில் ராஜூ முருகன் எழுதிய 'ஹேப்பி தீபாவலி' என்கிற கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை மிகச் சாதாரணமான ஒன்லைன் தான். ஆனால் ராஜூவின் அக்மார்க் கேலியும், பிரத்யேக நரேட்டிவும் கதையோடு லயிக்கச் செய்கிறது. ராஜூ தன் மொழியை இளமையாக மிக இளமையாக வைத்திருக்கிறார். உதிரி உதிரியாய், கன்னி கன்னியாய் எழுதி அவற்றைக் கதையின் ஒரு சுவாரஸ்ய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைப்பது அவரது பாணி. ராஜூவின் கதைகள் பொது வாசகனுக்கும், அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கும் வேறு வேறான உணர்வைத் தருபவை.
***
தமிழ்நதியின் 'ஒரு குடிமகனின் சரித்திரம்' அற்புதமான கட்டுரை அல்லது கதை. சிரிக்க, சிரிக்க படித்து விட்டு வந்தால் கடைசி பாராவில் மனதைக் கனக்க வைக்கிறார். நல்ல கவிதைகள், ஆக்ரோஷ அரசியல் கட்டுரைகள் அல்லது மனதைப் பிழியும் சோகச் சித்திரங்கள் இவைதான் தமிழ்நதி என்கிற என் உள்மன பிம்பத்தை உடைப்பதாக இருந்தது கட்டுரை. http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
***
தமிழ் நாட்டில் எனக்கு குபீர் சிரிப்பைத் தரக்கூடியவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி (வெறுமனே அப்படிச் சொல்ல மனசு வலிக்கிறது. இவரது கார்ட்டூன்கள் அறச்சீற்றத்தாலும், ஆண்மையாலும் வரையப்பட்டவை...) மற்றொருவர் நம் இணைய சிரிப்பு வைத்தியர் குசும்பன். வழமையாய் வலையும், அது தரும் சர்ச்சைகளும் ஏற்படுத்தும் மன உளைச்சலை டாக்டர் குசும்பனார்தான் தீர்த்து வைக்கிறார். அவரது சமீபத்திய ஓபாமா கார்ட்டூன் 'இப்படி ஒரு பரிசைக் கொடுத்து கையை கட்டிப் போட்டுட்டாங்களே... விக்காத பாமையெல்லாம் இனி என்ன பண்றது?!' என்கிற நையாண்டியையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் மிகவும் ரசித்தேன்.
***
'அறிவு ஜீவி' என்கிற வார்த்தையே ஒரு மித். ஜெயலலிதா ஒரு இண்டலெக்சுவல் என்பது எப்படி பைத்தியக்காரத்தனமான ஒரு கற்பனைப் பிம்பமோ அப்படித்தான் இன்னார் ஒரு 'அறிவு ஜீவி' என்பதும். நம் சுய கற்பனைகளால் கட்டி எழுப்பும் கோட்டை நொறுங்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. புத்தகங்கள் படிக்கிறார்கள், தத்துவ விசாரங்கள் செய்கிறார்கள், பொதுப்புத்தி, பிரைவேட் புத்தி, நுண்ணரசியல், மைக்ரோ அரசியல் என எழுதிக் குவிக்கிறார்கள், சக மனிதனை ரத்தம் வர அடிக்கிறார்கள். வாழ்க அறிவு ஜீவிகள்!

எழுத்தில் தனி மனித தாக்குதல்கள் வேண்டாம் என்பதை ஒரு பிரச்சாரம் மாதிரி செய்கிறவர்கள், தனி மனிதனே பிஸிக்கலாகத் தாக்கப்படும்போது எதிர்வினைகள் ஏதுமற்று வாளாவிருக்கிறார்கள். எதிர்வினை செய்பவர்களும், எதிர்ப்பைக் காட்டுபவர்களும் சண்டைக்கு அலைகிறவர்களாக, சர்ச்சை விரும்பிகளாக அடையாளப்படுத்தி விடும் அபாயம் இருந்தாலும் ஜ்யோவ் தாக்குதலுக்கு எதிரான கண்டனங்களை சக இணைய எழுத்தாளனாகப் பதிவு செய்ய வேண்டிய கடமையும், அவசியமும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. சென்னைப் பதிவர்களான தண்டோரா, உண்மைத் தமிழன், நர்சிம் ஆகியோர் முகத்தாட்சண்யத்துக்காகப் பார்க்காமல் சில விஷயங்களைக் கண்டித்து எழுதுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

என் மீதும், எனது எழுத்துக்கள் மீதும் 'ஜ்யோவ்' வைத்திருக்கும் அபிப்ராயமும், எனக்கும் அவருக்கும் இருக்கும் சர்ச்சைகளும் உலகறியும். ஆனால், தனது கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைத்ததற்காக ஒருவர் தாக்கப்பட்டால் அது 'அஜ்மல் கசாப்' - ஆக இருப்பினும் எனது நிலைப்பாடு இதுதான்.
***
அதிரசத்திற்கு மாவு பிசையும் வாசனை எவர் வீட்டு அடுப்பங்கரையிலிருந்தோ கிளம்பி என் விடுதியறை ஜன்னலுக்குள் நுழைகிறது. 'பண்டம் சுடுகிற வாசனையுள்ள வீடு எத்தனை அழகானது' என்ற வண்ணதாசனின் வரிகளும், பிராயத்து தீபாவளித் தினஙகளும் நினைவுக்கு வருகின்றன. அம்மா, அக்கா, மதினிமார்களென கூட்டுக் குடும்பமாய் இருந்த நாட்களில் தீபாவளி என்பது பத்து நாள் வைபவம். முந்திரிக்கொத்து, சுசீயம், சீடை, அதிரசம், முறுக்கு, தட்டை, கடலை பணியாரம், ரசகுல்லா, கல கலா என அவரவர் விருப்புக்கேற்ற பண்டங்களைச் செய்வதில் வீட்டுப்பெண்கள் முனைப்புடன் இருப்பர். எண்ணெய் வழியும் விரல்களும், வியர்வை வழியும் கழுத்துமாக ராப்பகலாக அடுப்படியில் சுட்ட பலகாரங்களை 'சுவாமிக்கு வைக்கனும்டா...' என்கிற ராணுவக்கட்டுப்பாட்டில் தொட விடமாட்டார்கள். ஆனாலும் யாவரும் உறங்குகிற நள்ளிரவில் ரகசியமாக எடுத்துத் தின்றுவிடுவேன். அந்த சாமிக்குத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து என் குடும்பத்தைக் கலைத்துப் போட்டு விட்டதோ என்னவோ?!

பஸ் ஸ்டாண்டில் என் வருகைக்காக அப்பா காத்திருப்பார். வாட்டர் ஹீட்டர் வெந்நீரில் இருவரும் குளிப்போம். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அரைக்கிலோ பார்சலை விளக்கு முன் வைத்து வணங்கி, ஆளுக்கொரு துண்டை சாப்பிட்டு விட்டு, எதிர் வீட்டுக் குழந்தைகளுக்கு மிச்சத்தைக் கொடுத்து விட்டு விட்டத்தைப் பார்க்கும் வறண்ட தீபாவளி. கேண்டி வந்துதான் வெறுமை எனும் நரகாசுரனை வதம் செய்யப் போகிறாள் என்று நம்புகிறேன்.

Tuesday, October 13, 2009

ரமேஷ் வைத்யா

தமிழ் சினிமாவில் நா. முத்துக்குமார் இருக்கிற இடத்திற்கு நிகரான இடத்தைப் பிடித்திருக்க வேண்டியவர் ரமேஷ் வைத்யா. குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவிற்காவது உயர்ந்திருக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளும் அவரிடத்தில் இருந்தது, இருக்கிறது. குடியினால் குடும்பம், ஆரோக்கியம், வேலை, சேமிப்பு என அனைத்தையும் இழந்த பின்னும் நாவில் சரஸ்வதி எழுதிய தமிழ் இருக்கிறது. உலகை வெல்ல தமிழ் போதும் என்கிற நம்பிக்கையை பாஸ்கர் சக்தி விதைத்திருக்கிறார். அவரது தொடர்ந்த வற்புறுத்தலின் பேரில் குடிப்பழக்கத்திலிருந்து மீளூம் சிகிச்சையை அடையாறு மருத்துவமனையில் பெற்று வருகிறார். அரை இட்லியிலிருந்து மூன்று இட்லிக்கு முன்னேறி இருக்கிறார். தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.

துரோகமும், புறக்கணிப்புமே வாழ்வின் மீதான அவநம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அருகிலிருந்து கவனித்துக்கொள்ள நபர்களில்லை. மீண்டும் அவரை தனிமையும்,வெறுமையும் சூழ்கிறது. தனிமை என்னை வதைக்கும்போது குடி எண்ணம் மீண்டும் தலை தூக்குகிறது என்கிறார். சாப்பாடு, பழங்கள் வாங்கி வர... உடனிருந்து கதைக்க... துணை இல்லாத ஆஸ்பத்திரி தினங்கள் எத்தனை இரக்கமற்றது?!

மரணத்தை விட கொடுமையானது மறக்கப்படுவது என ஒரு நேர்காணலில் மம்மூட்டி சொன்னது நினைவுக்கு வருகிறது. வேலையில் இருந்தபோது கொண்டாடிய நண்பர்களில் பலரிடம் இருந்து தொலைபேசி குசல விசாரிப்புகள் கூட இல்லை என்பது எத்தனை சோகம்?! பதிவர்கள் அவருக்கு எப்போதுமே பிரியமானவர்கள். பிரியமானவர்கள் மட்டுமில்லை நெருக்கடி தருணங்கள் பலவற்றிலும் உதவியவர்கள். அவர்களில் பலர் அவரை நேரில் பார்க்காததற்கு அன்றாடங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஒரு வார இறுதியை அவருக்காக ஒதுக்குங்களேன். ப்ளீஸ்!

Friday, October 9, 2009

இலக்கிய ஏஜென்ட் - 007


மதனும், ராவும் இணைந்து 'சூரியக்கதிர்' என்றொரு பத்திரிகையை கொணர இருப்பதாகவும், நாமக்கல் தொழிலதிபர் ஒருவர்தான் தயாரிப்பாளரென்றும் யட்சினி சொல்லியது. நவம்பரின் மத்தியில் சந்தைக்கு வரலாம் என்கிறார்கள். புதிது புதிதான பத்திரிகைகளின் வருகை ஆரோக்கியமானதுதான். எல்லா பத்திரிகைகளிலும் நமக்கு வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் எழுதுகிறார்கள். அப்-டேட்டாக இருக்க எல்லாவற்றையும் வாங்கித்தான் ஆகவேண்டி இருக்கிறது. பாக்கெட் பணால் ஆகிறது.

***

எதிர்வினை அல்லது மாற்று அபிப்ராயங்களுக்கான பேட்டையாக வலை ஒரு போதும் இருந்ததில்லை. வேறெந்த ஊடகங்களிலும் இல்லாத கட்/காப்பி/பேஸ்ட் வசதி இருப்பதனால் எழுதியவன் கேட்கிற நேரடி கேள்விகளை வசதியாக மறந்து விட்டு... ஏதேனும் சில வரிகளையோ, வார்த்தைகளையோ காப்பி, பேஸ்ட் செய்து சித்து விளையாட்டைக் காட்ட வசதியாக இருக்கிறது.

***

நண்பர் ஆர்.ஆர் அமெரிக்காவாசி. பதிவில் எப்போதோ குறிப்பிட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் புத்தகத்தை ஞாபகம் வைத்திருந்து வரும்போது வாங்கி வந்ததில் எனக்கு ஏக மகிழ்ச்சியும் பெருமையும். எழுத்தூக்கம் முற்றிலும் வடிந்து தேக்க நிலையில் இருக்கும்போது கிடைக்கும் இதுமாதிரியான பரிசுகள் உற்சாகம் கொள்ள வைக்கின்றன.

***

கார்லோ புரூனியைப் பற்றி ஜொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஜாக்குலின் கென்னடிக்கு அடுத்து அழகால் புகழ் பெற்ற அதிபரின் மனைவி. தன்னுடைய அறக்கட்டளை வகைக்காக வளைதளம் ஒன்றைத் திறந்துள்ளார். ரசிக மகா ஜனங்களின் வசதிக்காக

***

நடுக்காட்டில் குடியிருப்பு, சதா பெய்து கொண்டிருந்த மழை, கழுதைப்புலியோடு ஒரு சந்திப்பு, யானைக்கூட்டம் சுற்றி வளைப்பு, வாகனம் சேற்றில் சிக்கிக்கொண்டது, கொஞ்சூண்டு ரத்தம் சிந்தியது என 'ரியல் அட்வெஞ்சர்' டூராக இருந்தது பொக்காபுரம் பயணம். அடர்கானகப்புலியாக இருந்து சமவெளி மானாக மாறிவிட்ட அய்யனார், உமா கதிர், சிவக்குமரன் மற்றும் வெயிலானோடு வனம் புகுந்தது அற்புத அனுபவம்.

இந்தக் காட்டிற்கு நான் செல்வது இது ஐந்தாவது முறை. ஒவ்வொரு முறையும் காடு புதிது புதிதான ரகசியங்களை எனக்காக அவிழ்க்கிறது. காடு குறித்த புரிதல்களும், காட்டின் மீதான நெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காட்டில் வாழ வேண்டும் என்கிற என் ஆதி வெறியைக் கொஞ்சமேனும் தீர்க்க உதவிய வெயிலானுக்கு அழுத்தமான அன்பு முத்தங்கள்.

கழுதைப்புலிகள் குறித்தும் யானைகள் குறித்தும் கடந்த தினங்களில் திரட்டிய தகவல்களைக் கொண்டு இரு கட்டுரைகளை மும்முரமாக எழுதி வருகிறேன்.

***

இணையத்தில் சோவாறிக்கொண்டிருந்தபோது கனடாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் மயூராவின் வலைப்பூவைக் கண்டறிந்தேன். எளிய மொழியில் எழுதப்பட்ட மென்மையான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயத்தில் ஈழம் தொடர்பான கவிதைகளில் ஆத்திரமும் அருமையாக வெளிப்பட்டு இருக்கிறது. குறிப்பாக 'எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு வழக்கு உண்டு' என்ற நெடுங்கவிதையை கந்தகுரு கவச த்வனியில் வாசிக்க... பக்தி இலக்கியத்தில் மயூராவின் கல்வியும், மொழியில் அவருக்கு இருக்கும் லாவகமும் புலப்படுகிறது.

***

புதிய தலைமுறையின் முதலிரண்டு இதழ்களும் சூடான பக்கோடாவைப் போல விற்றுத் தீர்ந்திருக்கின்றன. ஆனால், இதை வைத்துக்கொண்டு அதன் எதிர்காலத்தை தீர்மானித்துவிட முடியாது என தோன்றுகிறது. இதழின் அமைப்பும் உள்ளடக்கமும் முழுக்க முழுக்க இளைஞர்களை... குறிப்பாக கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களை பத்திரிகைகள் வாங்க / படிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தாம் முடிந்திருக்கின்றன.

முன்னணி கடைகளில் விசாரித்த வரையில் புத்தகத்தை கேட்டு வாங்கிச் செல்வது என்னைப் போன்ற கிழ போல்டுகள்தாம். எர்கோ, காலேஜர் போன்ற இளமை இதழ்களைப் போல இன்னும் கொஞ்சம் இளகு தன்மை இருந்தால் தேவலை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

பெப்ஸி, கோலா, ஜீன்ஸ், ஸ்டெட், பல்ஸர் போல 'புதிய தலைமுறை'யும் இளைஞர்களின் அடையாளம் ஆனால் மட்டுமே சர்குலேஷன் ரீதியான வெற்றியை பெற முடியும் என யூகிக்கிறேன்.

Wednesday, September 30, 2009

காஸ்ட் கட்டிங் காதல் !
ரிசஷன், ஸ்லோ டவுன் பஞ்சாயத்துக்கள் விடுகிற பாடில்லை. விலைவாசி உயர்வும் குறைகிற பாடில்லை. 'காஸ்ட் ஆஃப் லிவிங்'கைப் போலவே ஏகிறிப் போயிருக்கிறது 'காஸ்ட் ஆஃப் லவிங்'கும். கலவரத்தில் இருக்கும் காதல் மன்னர்களின் அவசரகால நிதி நெருக்கடியை அரசாங்கம் கண்டு கொள்ளாததால் காதல் செலவினங்களை கட்டுக்குள் வைக்க அசத்தலான யோசனைகளை வழங்கி இருக்கிறோம். இவை உண்மையான காதலர்களுக்கும், காதல் எனும் பெயரில் கழிசடைத்தனம் செய்வோர்களுக்கும் பொதுவானவையே!

வீக் எண்ட் வீக்கம் குறைய

காதலியோடு கிளம்புவதற்கு முன் ஆர்.சி புக், லைசென்ஸ், இன்ஸூரன்ஸ் பேப்பர்களையெல்லாம் பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுக் கிளம்புங்கள். வெள்ளுடை வேந்தர்கள் மறிக்கும்போது 'சத்தியமா காசு இல்ல சார்... வண்டியை வேணா வெச்சுக்கோங்க...' என்று உருண்டு புரண்டு கதறுங்கள். ஐய்யோ பாவம் என்று அப்போதைக்கி நம்ம ஜிகிடி காசு கொடுத்து 'காதல் வாகனத்தை' மீட்டுக்கொடுக்கும். அப்பாலிக்கா எப்பவாவது 'அவுட்டிங் போலாமான்னு' கேட்டுப்பாரு....

சினிமா இனிமா

'ஆர்.கேதான் என் தலைவன்னு' ரத்தத்தில் அடித்துச் சத்தியம் பண்ணுங்க... திருவண்ணாமலை, மருதமலை, மலை மலை, அழகர் மலைன்னு மலைவாழ் மனிதனா மாறி அடுத்தடுத்து கூட்டிப்போய் அதகளப்படுத்துங்க... சினிமான்னாலே பொண்ணு இனிமா ஆயிடும்.

இண்டர்வெல் கார்டு போடுறதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே 'பாஸ் லைன்ல இருக்காருன்னு...'செல்போனோட ஜகா வாங்கிடுங்க... பாப்கார்ன் கொள்ளையர்கள் பட்டறையை எடுத்து வச்சதுக்குப் பிறகு உள்ளே போய் 'ஹனீ, பாப்கார்ன் இல்ல... பன்னுதான் இருக்காம்...!'

பக்தி ஸ்பெஷல்

உபன்யாசம், ஹரிகதா, நாமசங்கீர்த்தனம்னு எங்கே எது நடந்தாலும் இழுத்துக்கிட்டுப் போங்க... பக்திதான் என் சக்தின்னு உளறுங்க... 'வேயுறுதோளிபங்கன் விடமுண்ட கண்டன்னு' மிட் நைட்ல மெஸெஜ் அனுப்புங்க...'ஆஹா... பையன் அகோரி ஆயிட்டா'ன்னு பாப்பா பறந்துடும்.

இஸபகலா

கவியரங்கம், இலக்கியக்கூட்டம் தொடங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா வரைக்கும் ஒரு எலக்கியக் கூட்டத்தையும் மிஸ் பண்ணிடாதீங்க. 'பின் நவீனத்துவத்தின் உள்ளீடற்ற வெளிகளில் நிகழும் கட்டற்ற பிரதியானது இஸங்களின் பொருண்மைத் தத்துவத்தைப் பகடி செய்வது குறித்த நுட்ப அவதானிப்பு இல்லாதவனெல்லாம் என்ன எழுத்தாளனென்று' ஆத்திரமாக வாதாடுங்கள். ரிபரன்ஸூக்கு 'பாழி' மாதிரி பயங்கரவாத நாவல்களை வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க சாயங்காலம் 'ஸ்பெஷல் கிளாஸ்' இருக்கும்பா பொண்ணு... இதுக்கு மேலயும் தாக்குப்பிடிக்கிற தாட்சாயிணிகளுக்கு இருக்கவே இருக்கிறது எம்.எல்.எம் மீட்டிங்!காபிபோஸா

கக்கத்துல ஒரு பிளாஸ்க்கும், கையில ஒரு சமஹன் பாக்கெட்டுமாவேத் திரியுங்க... பாப்பா பவளவாய் திறந்து 'லெட் அஸ் ஹேவ் எ காஃபி'ன்னு கேட்டதும் 'கோகேய்ன் ரொம்ப பித்தம்... சுண்டிப்போகும் ரத்தம்... சுக்குக்காப்பித்தான் சுத்தம்'னு டண்டணக்கா போடுங்க...

டேஞ்சர் டேட்டாஸ்

மிஸ்டு கால் கொடுக்கிறது ஒரு வகையான மன வியாதின்னு ருத்ரன் பேட்டி கொடுத்திருக்கிறார். ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் டான்சில் வளர்ந்து அதுவே கேன்சராகிடும் அபாயம் இருக்கிறது என்று வெர்ஜினியா பல்கலைக்கழகம் கண்டு பிடித்திருக்கிறது. ஹேர் ஸ்பிரே யுஸ் பண்ணின பல பேருக்கு மூளைக் கொதிப்பு வந்துள்ளது என போர்பர்ஸில் போட்டிருக்கிறான். லிப்ஸ்டிக் போட்டால் குடல் புண் வரும்னு ஈ-மெயில் வந்ததுன்னு களேபர கலவர டேட்டாக்களை அரை மணி நேரத்திற்கு ஒருக்கா சொல்லிக்கிட்டே இருங்க...

டிரஸ்

துணிதான் காதலுக்கு சனி. ஆடைகளைப் பரிசளிக்கிற காதல்கள் அரைக்காதல்கள். எதுவும் நிலைத்ததில்லையென செண்டிமெண்ட் புரூடா விடுங்கள். அப்படியும் கேட்காத கிளிகளுக்கு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த படையப்பா சுடிதாரை எடுத்துக்கொடுங்கள்.

பப்பராக்கா பஃபே

டிஸ்கொதேக்கு இழுத்துக்கிட்டு போற அல்ட்ரா அழகு சுந்தரியா?! கவலையே வேண்டாம். பஃப்புக்குள்ள நுழைஞ்சதும் கர்ச்சீப்பை எடுத்து நெத்தியில கட்டிக்கிட்டு 'அண்ணாத்தே ஆடுறார்... ஒத்திக்கோ... ஒத்திக்கோ'ன்னு குத்தி எடுத்துறுங்க... அடுத்தடுத்து அஞ்சலை சாங்குக்கு ஆடினீங்கனா பயவுள்ள... எழவுக்கு ஆடுறவன்னு பட்சி பறந்துடும்.

கிரேட் எஸ்கேப்பூ

பிறந்த நாள், நியூ இயர் என மடிக்கு வெடி வைக்கும் நாட்களில் கவனமாக கண் காணாத இடங்களில் அப்ஸ்ஹாண்ட் ஆவது நல்லது. கால் பண்ணினா 'ஸ்வைன் ப்ளூ' சிம்டம்ஸ் இருக்குன்னு சொல்லுங்க. ஒரு மாசம் ஆனாலும் பார்ட்டி உங்களைத் தேடாது.

மவனே காஸ்ட் கட்டிங் ஐடியா தர்றேன்னு காதலையே கட்டிங் பண்ண பாக்கேறியேடா பாவிங்கறீங்களா...! லூஸ்ல விடுங்க பாஸூ...!

டிஸ்கி: 30-09-09 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியான 'காஸ்ட் கட்டிங் காதல்' எனும் எனது விநோத வஸ்துவின் கரட்டு வடிவம். இப்படி எழுதியதற்காக 'இரண்டு பாட்டியாலா சுடிதார்கள்' அபராதம் என்கிறாள் கேண்டி!

Wednesday, September 23, 2009

ரிலாக்ஸ்!'பேப்பர் விக்கிறதுக்காக கடைகளில் பத்து கவர்ச்சிக்கன்னிகளைக் கூட நிற்க வைச்சுடுவார்' என்று இவரைப் பற்றி வேடிக்கையாகவோ அல்லது வினையமாகவோச் சொல்வார்கள். 32 வருடங்களாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் பழம் தின்று கொட்டை போட்ட கிழட்டுச் சிங்கம் 'சின்னன் தாஸ்'தான் அவர். சர்க்குலேஷன் எனும் கல்லில் நார் உரிக்கிற சமாச்சாரத்தில் இவர் ஒரு தாதா!

பென்னட் & கால்மென் பதிப்பகத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரை தெற்குப் பிராந்தியத்தின் 'பிஸினஸ் டெவலப்மெண்ட் இயக்குனராக' டை.ஆ.இ நியமனம் செய்திருப்பதுதான் நியூஸ் பேப்பர் இண்டஸ்ட்ரீயின் தற்போதைய பரபரப்புச் செய்தி. இவரது வருகையை அடுத்து சென்னையில் நிகழும் 'தி ஹிந்து - டைம்ஸ் ஆஃப் இந்தியா - டெக்கான் க்ரோனிக்கல்' - மும்முனைப் போட்டிகள் தீவிரமடையும் என்பதையும், கோயம்புத்தூரில் கால் பதிக்கும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் போன ஜென்மத்துத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதையும் ஆரூடமாகச் சொல்கிறேன்.

இவரது தாத்தா வி.எம். நாயர் மலையாள மனோராமாவில் எடிட்டராகவும், பாட்டி பாலாமணி கேரளாவின் புகழ் பெற்ற கவிஞராகவும் இருந்தவர். அம்மா மாபெரும் கவிஞர் கமலா சுரையா (கமலா தாஸ்)!

சின்னன் தாஸூக்கு கோவையில் பலத்த சவால் காத்திருக்கிறது :)

***

அரிந்தம் சவுத்ரியின் சகாக்கள் அஜ்மல் கசாப்பின் ஒரெயொரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, எர்டெல் இணைப்பு, கோடக் மஹிந்திரா வங்கியில் கணக்கு, நீதிமன்ற முத்திரைத்தாளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் (இதில் அபு சலீமின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது) ஆகியவற்றை வெறும் எட்டாயிரம் ரூபாய் செலவில் செய்து முடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் செலவழித்தால் ரேஷன் கார்டே கிடைத்திருக்கும் என்கிறார்கள் சண்டே இந்தியன் ஆசாமிகள்.

இந்தியாவைப் போன்ற ஊழல் மலிந்த தேசத்தில் இதுமாதிரியான கேலிக்கூத்துக்கள் ஆச்சர்யமில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட திறந்த மடமாகி விட்டது என்பதற்கான எளிய உதாரணங்கள் ஏர்டெல்லும், கோடக் மஹிந்திராவும்.

பார்த்துக்கொண்டே இருங்கள் முகம்மது அப்சலுக்கும், அஜ்மல் கசாப்பிற்கும் எவனாவது ஒருவன் ஜாமீனே வாங்கிக் காட்டுவான். சில்லாயிரம் செலவில்...

****


மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆண்டுதோறும் நடத்தும் உழவர் திருவிழாவிற்கு தேசம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் வருவார்கள். எனக்கு மூன்று நாட்களாக அங்கேதான் பட்டறை. கர்நாடாகா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் பலரோடும் உரையாடிக்கொண்டிருந்ததில் தமிழ்நாட்டு விவசாயிகள் அளவிற்கு அவர்களுக்குத் துயரங்கள் இல்லை என்பதை உணர முடிந்தது. விவசாயத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு எப்படி என்று ஒரு டர்பனிடம் கேட்டேன் லேசாக முறைத்து "நாங்கள்தானய்யா அரசாங்கம்" என்றார்.

கர்நாடகாவிலிருந்து தன் பேரப்பிள்ளைகளோடு வந்திருந்த எண்பது வயதுப் பெரியவர் கோபிச்செட்டிப்பாளையத்திலிருக்கும் ஒரு கரும்புத் தோட்டத்தைத் தாம் பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்யும்படியும் அதிகாரி ஒருவரோடு வாதாடிக்கொண்டிருந்தார். எண்பது வயசுக்கு மேலேயும் செய்தொழிலில் இருக்கிற பிடிப்பை வாய்பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

'கோக்கனட் ஸ்வீட் சிப்ஸ்' தந்தார்கள். உலர வைக்கப்பட்ட தேங்காயை கும்பகோணம் சீவல் தடிமனுக்கு சீவி, அதில் இனிப்பு உள்ளிட்ட ஜாலக்குகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட சிப்ஸின் சுவை 'டாப் கிளாஸ்'. மத்திய அரசின் தேசிய விவசாயப் புதுமைப் பொருள் திட்டத்தின் தயாரிப்பாம். அரசாங்க தயாரிப்பொன்று இவ்வளவு சுவையாகவும், தரமாகவும் இருந்தது ஆச்சர்யம்!

***

ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்க இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வருகிற நண்பர்களின் வசதிக்காக அண்ணாச்சி ஏற்பாட்டில் மருதமலை அடிவாரத்தில் ஒரு பங்களாவைப் பிடித்திருக்கிறோம். சேக்காளிகள் மட்டுமல்ல 'டூ' விட்டவர்களையும் இருகரம் நீட்டி அன்போடு அழைக்கிறோம்.

***

ஆக்கிரமிப்பிற்கு எதிரான மாவோவின் 'ஹிப்-ஹாப்' திருவிழா வருகிற 26, 27 தேதிகளில் (சனி, ஞாயிறு) வான்கூவர் நகரில் நிகழ்கிறது. கனடாவாழ் நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

***

சசவுரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் மேலாண்மை மாணவர்களிடத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். தலைப்பு வழக்கம் போல 'ஹேபிட் ஆஃப் ரிடீங்'. இந்த முறை பேச்சைத் துவங்குவதற்கு முன் விரல் வித்தை நடிகர், வில் நடிகர், பெரிய இடத்து மாப்பிள்ளை, கண்ணழகி, உச்ச நட்சத்திரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் பிரசித்தி பெற்ற கேள்விகளைக் கேட்டேன். பெரும்பாலும் பெண்கள் பகுதிகளில் இருந்து பட், பட்டென்று பதில்கள் வந்தன. ஆக, வார இதழ்களில் வரும் சினிமாச் செய்திகளையேனும் மாணவர்கள் வாசிக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு செய்தித்தாள்கள் எப்படித் தயாராகின்றன? செய்தி அச்சில் இடம் பெயர்வதற்கு முன் நிகழ்கிற சங்கிலித் தொடர் சுழற்சிகள், அதிகாலையில் வீடு தேடி பேப்பர் வரும் மெக்கானிஸம், கல்விக்கும் எதிர்காலத்திற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தும் விதம் என்பது பற்றியெல்லாம் தீவிரமாகப் பேசினேன். அரங்கத்தில் இருந்த பாதிப்பேர் உறங்கிப் போனார்கள்.

Monday, September 21, 2009

புண்ணரசியல்

ஞாநி, கமல்ஹாசன், சுஜாதா, மணிரத்னம் போன்றவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். இந்த லிஸ்டில் சுஜாதாவைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருந்தபோதும், சமூகத்தின் மீதான நிஜ பொறுப்புணர்ச்சி கொண்டவர்களாக இருந்தபோதும் பிராமண குலத்தில் பிறந்து தொலைத்த பாவத்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படுத்தப்பட்டவர்கள். படுகிறவர்கள். இவர்கள் தங்களது அடையாளங்களை முற்றிலும் துறந்தபோதும் பகுத்தறிவாளர்களென்றும், முற்போக்குச் சிந்தனையாளர்களென்றும் தங்களைக் காட்டிக்கொள்கிற கூட்டம் இவர்களை ஏற்றுக்கொண்டதே இல்லை. காத்திரமான படைப்புகளோடு இவர்கள் வெளிப்படும் ஒவ்வொரு தருணங்களிலும் படைப்பை முன் வைக்காமல் இவர்களது பிறப்பை முன் வைத்து கழிவறை வாசகங்களால் அர்ச்சனை செய்தவர்கள் இன்றைய சமூக நீதிக் காவலர்கள். ஒரு படைப்பாளி தன் நேர்மையை நிரூபணம் செய்யும் பிரயத்தனத்திலேயே ஆயுளைக் கழிக்க வேண்டி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் சாபம்.

சுயமரியாதை என்பதில் அடுத்தவர் மரியாதையும் இருக்கிறது என்பதை மறந்த இந்த மந்தைக் கூட்டங்கள் கமல்ஹாசனில் உன்னைப் போல் ஒருவன் ஓர் இந்துத்வா திரைப்படம் என்கிற பிம்பத்தை உருவாக்க பதைபதைப்புடன் வலைகளிலும், பத்திரிகையிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. படத்தில் காட்டிய மூன்று தீவிரவாதிகளும் முஸ்லீம்களே என்பதுதான் இந்த வெண்ணெய் வெட்டிகள் முன் வைக்கும் வாதம். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்பதைச் சித்தரிக்கும் இந்துத்வா மனோபாவம் கமல்ஹாசனுக்கு என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். கமல்ஹாசன் மதச்சார்பற்றவர் என்பதை அவர் தன் சொல்லால், செயலால், படைப்பால் நிரூபணம் செய்துகொண்டிருக்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் அத்துனை பேரும் இஸ்லாமியர்கள் என்பதும். சினிமாவிலும், இலக்கியத்திலும் யதார்த்தம் இருக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிற அறிவு ஜீவி முண்டங்கள் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுப்பதேன்? சிறுபான்மை, மனித நீதி என்றெல்லாம் இவர்கள் அரை நூற்றாண்டு காலமாய் அடித்து வரும் ஜல்லியால்தான் இந்தியாவில் தீவிரவாதத்தை வேரறுக்க இயலவில்லை. கட்டுப்படுத்தும் சட்டங்களை, கடுமையான தண்டனைகளை தொடர்ந்து விமர்சிக்கிற இதே துப்பு கெட்டவர்கள்தாம் பாராளுமன்றத் தாக்குதலின்போதும், மும்பைத் தாக்குதலின் போதும் தேசத்தின் பாதுகாப்பையும் கேலி செய்து கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பதை நாம் மறக்க வேண்டியதில்லை.

மதக்கலவரமும் தீவிரவாதமும் ஒன்றல்ல. குஜராத்திலும், அயோத்தியிலும் நிகழ்ந்தது இருதரப்பினர் மனங்களிலும் காலம் காலமாக அடியாழத்தில் புரையோடிப் போயிருந்த வன்மத்தில் வெடித்த கலவரம். ஆனால் தீவிரவாதம் அப்படியல்ல. அதற்கு மதத்தைப் பரப்புதல், எதிரிகளை வேரறுத்தல் என நேரடிக் காரணங்களும் நாடு பிடித்தல், கலாச்சாரங்களை அழித்தல் போன்ற மறைமுக காரணங்களும் நிரம்பியது. 'இந்துத்வா' இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதன் லாபமும், நட்டமும் நமக்கே. ஆனால் இஸ்லாமிய அடிப்படை வாதம் எனும் பயங்கரவாதம் மொத்த மானுடத்திற்கும் எதிரானது. நாடு, நகர எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் வேரூன்றி நிற்கிறது. உலகெங்கிலும் இருக்கிற தீவிர வாத குழுக்களில் பெரும்பான்மை இஸ்லாமிய குழுக்கள் என்பதை மறுக்க எப்பேர்ப்பட்டவனாலும் முடியாது. இந்தியனோ, இந்துவோ எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, ஆப்கனிலோ குண்டு வைத்ததாய், மக்களை நோக்கிச் சுட்டதாய் வரலாறு இல்லை.

கந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தைத் தாக்கியவர்கள், மும்பைபிலும், கோவையிலும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள், மும்பையில் பொதுமக்களை குருவிகளைப் போல சுட்டுக்கொன்றவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள். மேற்கண்ட பயங்கரங்கள் மொத்த தேசமும் ரத்தமும் சதையுமாய் எதிர்கொண்டது. இதன் கொடிய முகங்களைச் சித்தரிக்கும் போது இதனைச் செய்தவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகிற ஜிகாத்தின் குழந்தைகள்தாம் என்பதைச் சொல்ல எவனுக்குப் பயப்பட வேண்டும் ?!

நாமெல்லாம் பிரிவினைவாதிகள் இல்லையென்றபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குச் சப்பைக்கட்டு கட்டும் கம்மனாட்டிகளைக் கண்டால் ஆத்திரம் பொங்கி ஜெரிமி பெந்தாமை அழைக்க வேண்டி இருக்கிறது. அரசியலைப் பாடமாகப் படித்தவர்களின் கடவுள் ஜெரிமி. பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி என்ற கோட்பாட்டை மானுட குலத்திற்கு வழங்கிய மாபெரும் சிந்தனையாளர் அவர். ஜெரிமி சொன்னதை ஒரு பயலும் கேட்கவில்லை. அதன் விளைவாக செசன்யா துவங்கி நாரிமன் வரை மிஸ்டர் பொதுஜனம் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். அதென்ன கோட்பாடு?!

ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார். இந்த ஒருவரின் மகிழ்ச்சிக்காக 99 பேரையும் ஒடுக்க வேண்டியதில்லை என்பது ஜெரிமியின் வாதம். இதுதான் இந்தியாவில் நிகழ்கிறது. மைனாரிட்டிகளைக் குறித்தே கவலைப்படும் அரசாங்கங்களால் ஒடுக்கப்பட்ட 99 பேர் பொங்கி எழும்போது அந்த ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.

நான்கு பேர் நகர் புகுந்து நானூறு பேரைச் சுடுவதை ஒரு கூட்டம் மனித நீதியின் பெயரால் நியாயம் கற்பித்துக்கொண்டிருக்குமானால் அந்த எழவைப் பேசுகிறவனையும் சேர்த்தல்லவா ஒழிக்க வேண்டும். மனிதனுக்கே இல்லாத உரிமை மிருகங்களுக்கு எதற்கு என்று கமல் எழுப்பும் கேள்விதான் உ.போ.ஒருவனின் நேரடி அரசியல். இதைப் புரிந்து கொள்ள முடியாத ஈர வாரியல்கள் நுண்ணரசியல், புண்ணரசியலென்று புண்ணாக்குத் தனமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முன் முடிவுகளோடு படைப்புகளை அணுகுவது ஓர் அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தை அனுமதிப்பதும் கண்டும் காணாமல் இருப்பதும் பொறுக்கித்தனம். நான் அயோக்கியனும் அல்ல. பொறுக்கியும் அல்ல.

Thursday, September 17, 2009

சோர்விலன்

சோர்விலன் எனும் வள்ளுவப்பதம் அட்சர சுத்தமாகப் பொருந்திப் போவது ஜ்யோவ், சிவராமன் இணைக்குத்தான். வாழ்வு தரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், வியாபார நோக்கங்கள் இல்லாமல், விமர்சனங்களையும் சகித்துக்கொண்டு ஒரு நிகழ்வை நடத்தி அல்லது நடாத்தி முடிப்பதென்பது சாமான்ய காரியம் அல்ல.

இணைய தமிழின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்தால் எழுத்துரு, திரட்டிகள், பதிவர் பட்டறை வரிசைகளில் சிறுகதைப் போட்டிக்கும், சிறுகதைப் பட்டறைக்கும் நிச்சய இடம் உண்டு. ஆக்கப்பூர்வமான இப்பணிகளுக்கு இவர்களிருவரும் தங்கள் கைக்காசைக் கரைப்பது கவலை அளிக்கிறது. உரையாடல் அமைப்பின் உறுப்பினர்களையும், புரவலர்களையும் அதிகப்படுத்துவதன் மூலம் ஓரளவு சுமையைக் குறைக்கலாம் என்பதை ஓர் அபிப்ராயமாகச் சொல்லிக்கொள்கிறேன்.

சிறுகதை சிருஷ்டி பூர்வமானது. அதைக் கற்றுக்கொடுக்க முடியாது என்பது என் நம்பிக்கை. ஆனால், அதன் தொழில்நுட்பங்களும், சூத்திரங்களும் பகிர்வுக்குறியவை என்பதை பட்டறையில் கலந்து கொண்ட பதிவர்களின் பத்திகள் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அவர்களது பொறுப்பான பதிவுகளுக்கும் வந்தனங்கள்.

***

கோவை வருவதற்கான ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து, டி.டி.ஆரைப் பார்த்து அதை ஸ்லிப்பர் கிளாஸாக மாற்றி ஊர் வந்து சேர்ந்தாள் கேண்டி. இந்த நைச்சியம் சர்வ நிச்சயமாக சென்னை கற்றுக்கொடுத்தது. மிரண்ட மான் குட்டியைப் போல இருக்கும் இவளைப் போய் சென்னைக்கு அனுப்பி விட்டீர்களே என்று கேட்காத நபரில்லை. ஆனாலும், அவளது குழந்தைத் தன்மையை சாகடிக்க சென்னையைக் காட்டிலும் பெரிய களம் எது?!

மிஷ்கினின் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், "நீங்கள் கேட்கிற சமாச்சாரத்திற்கு என்னைக் காட்டிலும் இன்னார் பொருத்தமாக இருப்பார்" என்று கைகாட்டி விடுகிற பொழைக்கத் தெரியாத கோயிந்துக் குணம் குடும்பத்திற்கு கேடு. ஒரு வீட்டில் இரண்டு கோயிந்துகள் வேண்டாமே என்றுதான் உலகைப் படித்து வர அவளை சென்னைக்கு அனுப்பினேன்.

***

தமிழ்ப் பதிப்புலகம் பற்றிய ஆர்.வெங்கடேஷின் கட்டுரையும், தமிழ் வலையுலகம் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணணின் கட்டுரையும் சமீபத்தில் படித்த முக்கிய பதிவுகள்.

***
சன் பிக்ஸர்ஸின் சச்சின் டெண்டுல்கர் 'விஜய் ஆண்டனி'தான். அவர் குத்துற குத்தில் தியேட்டரில் கூட்டம் அம்முகிறது. இயக்குனர்களோ வருகிற ரசிகர்களை கும்மி அனுப்புகிறார்கள். 'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சகபதிவர்கள் எழுதிய விமர்சனங்களை நம்பி தியேட்டருக்குப் போனால் உதை காத்திருக்கிறது.

படத்தில் கல்லூரியெங்கும் திரியும் 'ரிச்சி கேர்ள்ஸ்'களை விட சுமாராக இருக்கிறார் பிரியாமணி. அம்மையாரின் குரல்வளமும் அமோகம். அவரை எவ்வித முகாந்திரமும் இன்றி காதலிக்கிறார் சிக்ஸ்பேக் லிஸ்டில் லேட்டஸ்ட் வரவான பிரித்வி. பாஸ்போர்ட் சைஸ் போட்டாவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிகிற ஒரு காரணம் போதாதா அம்மையாருக்கும் காதல் வைரஸ் தொற்றிக்கொள்ள... சரி விடுங்கள் கதையை வேறு விமர்சனங்களில் படித்திருப்பீர்கள்.

காதலி எலெக்சனில் தன்னை எதிர்த்து நிற்கிறாரென்றால் உடனே வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக்கொண்டு போடுங்கம்மா ஓட்டு பிரியாமணியைப் பார்த்துன்னு கூவுகிறவன்தானே ஐடியல் காதலன். அதை விட்டுட்டு புண்ணாக்கு மாதிரி...

காதலிப்பது எப்படின்னு ஒரு பொஸ்தவம் போட்டாத்தான் சரிப்படும் போலருக்கு...

படங்கள்: ஆதிமூலகிருஷ்ணன்

Tuesday, September 15, 2009

விகடனும் நட்சத்திர உதிர்தல்களும்

I

விகடனில் இல்லாவிட்டாலும் அங்கே நிகழும் நட்சத்திர உதிர்தல்கள் பற்றி நண்பர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அது விகடனின் உள்விவகாரம் என்றாலும் உதிர்தல்கள் பற்றிய என் பொதுவான அபிப்ராயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய தேதிக்கு தமிழின் பிற ஊடகங்களிலும், திரையுலகிலும் கோலோச்சிக்கொண்டிருக்கிற மீடியா பெர்சனாலிட்டிகளில் விகடனின் தயாரிப்புகள் என என்னால் சுமார் நூறு பேரையாவது சொல்ல முடியும். இதன் பொருள் விகடனில் பணி செய்தால் திறமைசாலிகளாகி விடுவார்கள் என்பதல்ல. திறமையான நபர்களை அடையாளம் கண்டுகொள்வதில் விகடன் தவறுவதில்லை என்பதுதான். நட்சத்திரங்கள் நகரும்போது அவர்கள் புதிய நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், இணைய தளங்கள், புதிது புதிதாய் துவக்கப்படும் பத்திரிகைகள் என சந்தர்ப்பங்களின் சாளரங்கள் திறந்திருக்கிற சூழலில் இடம்பெயர்ச்சி சாதாரணமானது. நட்சத்திரங்கள் ஓரிடத்திலேயே தங்கி விடுவதில்லை.

எவர் இருப்பினும் இல்லாது போயினும் அன்றாடப் பணிகளும், வளர்ச்சிப் பாதையிலான பயணமும் தொடர்ந்து கொண்டிருப்பதும்தான் ஒரு அமைப்பின் ஆரோக்கிய அடையாளம். தங்களது இருப்பை வாசகர்களுக்குக் காத்திரமாக உணர்த்திக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்போது இல்லையென்றபோதும் விகடன் தயாரிப்புகளில் எவ்வித 'ஸ்லாக்கினெஸ்'ஐயும் காண முடியவில்லை.

வலைப்பூக்களில் அல்லது சிறு பத்திரிகைகளில் மட்டுமே இயங்கி வருகிற எழுத்தாற்றல் மிக்க பலரும் தங்களது திறனை நிரூபிப்பதற்கான தளம் உருவாகி இருப்பது கூடுதல் சிறப்பு. விகடன் என்றில்லாமல் பதிவர்களுள் பலர் பல்வேறு பத்திரிகைப் பணிகளில் பரிமளிப்பதைக் காணமுடிகிறது.

நட்சத்திரங்களின் ஒளிவெள்ளம் 757, அண்ணா சாலையில் மட்டும் இல்லாமல்... உயரே, உயரே சென்று ஒளிர்ந்தால்தான் விகடனுக்குப் பெருமை.

II

"நான் விகடனெல்லாம் படிக்கிறதே இல்லை, அட்டையைக் கிழிச்சிட்டா குமுதம், குங்குமம், விகடன் எல்லாம் ஒண்ணுதான், விகடனை பாத்ரூமில்தான் படிக்க முடியும்" வகையரா அறிவுஜீவி வெர்ஷன்களில் எனக்கு ஒருபோதும் ஏற்பில்லை. தமிழ் வாழ்வியலோடு இயைந்து இருக்கிறவர்கள் தவிர்க்க முடியாதது விகடன் என்பது என் அபிப்ராயம். அதன் மீதான கடுமையான விமர்சனங்கள் சர்க்குலேஷன் வளர்ச்சிக்குத்தான் உதவி இருக்கிறதே தவிர வீழ்த்தி விடவில்லை என்பதுதான் கடந்த காலங்களின் நிதர்சனம். ஆனால், பன்னிரு ஆண்டுகளாக விகடனின் வாசகன் என்கிற ரீதியில் அதன் உள்ளடக்கத்தில் நான் இழந்ததும், இழந்ததாகக் கருதுவதும் மிக மிக அதிகம்.

1) சுஜாதாவின் அனுபவக்குறிப்புகளான 'கற்றதும் பெற்றதும்' கொடுத்த சுவாரஸ்யத்தின் சுவை. அவரது மறைவுக்குப் பின்னர் அன்றாடங்களை ஓட்டிய அனுபவத் தொடர் இல்லாதது ஒரு குறை. இன்றைய தேதிக்கு இதற்கு 'ஆப்ட்'னான நபர் சாருநிவேதிதா!

2) சாரு, ஜெமோ, எஸ்.ரா, பிரான்ஸின் கிருபா போன்ற தீவிர இலக்கியவாதிகளை பெரும்வாசகத்திரள் அறிய ஒரு தளமாக இருந்தது விகடன்தான். இந்தப் பட்டியல்களில் விகடன் தவறவிட்டவர்கள் அல்லது இன்னும் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அ.முத்துலிங்கம், கண்மணி குணசேகரன், வா.மு. கோமு, தியோடர் பாஸ்கரன், சுகுமாரன், பால் ஸர்க்காரியா....

3) குவாண்டனமோ சிறைக் கைதிகள் ரத்தத்தால் கடல் நுரையில் எழுதிய கவிதைகளை, குஜராத் கலவரத்தின் உண்மை முகம் காட்டும் அறிக்கையை, முகம்மது அப்சலின் நேர்காணலை இன்னும் எத்தனையோ விஷயங்களை உயிர்மையில் வாசிக்கிறேன். விகடன் மாதிரி ஜாம்பவான் நிறுவனங்கள் கொணர்கிற செய்திகளைக் காட்டிலும் பிரமாதமாய் தருகிறார் மனுஷ்யபுத்திரன்.

4) மணிரத்னம், பி.ஸி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவி.கே. சந்திரன், கமல்ஹாசன், பாலுமகேந்திரா மாதிரி சினிமா ஜாம்பவான்களின் பேட்டிகளுக்குத்தான் ஆசைப்படுகிறேன். கஞ்சா கறுப்பு, வெற்றி கொண்டான், நமீதா போன்ற நிலைய வித்வான்கள் எரிச்சலூட்டுகிறார்கள்.

5) என்னைப் போல் முந்தாநாள் பெய்த மழையில் முளைத்தவர்களுக்கு கடந்த கால சுவாரஸ்யங்களை அறிய விகடன் பொக்கிஷம் ஒரு வாய்ப்பு. ஆனால், 'மணிமொழி நீ என்னை மறந்து விடு' என்பதெல்லாம் சமூக விரோதச் செயல்!

6) கூகிளாண்டவனின் வளர்ச்சிக்குப் பின் 'லாங் ஜம்ப்' அடித்து தாண்டுவது மதன் பதில்களைத்தான்.

7) கொடி மரத்தையும், பலி பீடத்தையும் கடந்தால் கருடாழ்வாரைச் சேவிக்கலாம். மேற்கில் ஏழு நிலைக் கோபுரம், கிழக்கே ஒன்பது நிலைக்கோபுரம் என்றெல்லாம் கோவிலின் 'ப்ளூ பிரிண்ட்'ஐ எழுதுவதற்குப் பெயரா ஆன்மீக தொடர்?! இதெல்லாம் உலகம் முழுக்க இருக்கிற கோவில்களின் பொதுவான அமைப்பு முறை. வேளுக்குடி பேசுகிறார், அனந்தபத்மனாச்சாரியாரின் உபன்யாசம் என்று எஸ்.எம்.எஸ்ஸினாலே மக்கள் போட்டது போட்டபடி கிளம்புகிறார்கள். காஷ்யபன்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கவேண்டிய காலம் இது!

8) தொட்டிலில் இருக்கும்போதே ஓஷோவையும், ஜிட்டுவையும் படித்தவர்களுக்கு 'சங்கரம் பிள்ளை' யாரென்பது நன்றாகவே தெரியும். ( இந்த 'இன்னோவெட்டிவ் சாமியாரின்' சமீபத்திய தத்துவத்தெறிப்பு "இப்போதும் நாட்டில் 65 சதவீத ஜனத்தொகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், 100 பேர் சாப்பிடுவதற்கு 65 பேர் சமைப்பதைப் போல இருக்கிறது. 100 பேர் சாப்பிட 8 அல்லது 10 பேர் சமைத்தால் பரவாயில்லை. 65 பேர் அதில் ஈடுபட்டால்? அரிதான மனித சக்தியை வீணாக விரயமாக்க்கும் இதை விட பெரிய முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்?" ஜனங்களின் வறுமையும், தேசத்தின் பஞ்சமும் இவர்களைப் போன்றவர்களுக்கு தெரிந்திருந்தால்தான் ஆச்சர்யமே... அவருடனா பஞ்சாயத்தை தனியாக வைத்துக்கொள்ளலாம்) நீண்டகால நிலைய வித்வான் போட்டியில் கவிஞர். வாலியைப் பின்னுக்குத் தள்ளிய பெருமை இவருக்கே!

9) கருணாநிதி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு என்பது எனக்கு கொள்ளை இன்பம். ஆனால், அதை ஜூவியோடு நிறுத்திக்கொள்ளாமல் விகடனில் எசப்பாட்டை தொடர்வது கொஞ்சம் சங்கடம்.

10) விகடன் சினிமா விமர்சனங்களின் நேர்மையில் கோட்டம் விழுந்து விட்டது. வாசகர்கள் தரமான விமர்சனங்களுக்குத் தவறாமல் நாடுவது 'பிளாக்குகளையே' என்பது ஞாநியின் அருள்வாக்கு. யதார்த்த நாயகனும் அதை வழிமொழிந்திருக்கிறார். 'ண்ணா'வின் படங்களை விமர்சனத்தில் வாரு, வாரென்று வாறிவிட்டு, மார்க்குகளையும் வாரி வழங்குவதில் விகடன் ஒரு வள்ளல் என்பதும் மாமுனியின் அபிப்ராயம்.

பட்டியலிடுவது என்று வந்து விட்டால் பத்து எண்ணிக்கையைத் தாண்டாமல் இருப்பது வலையுலக மரபு என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

Saturday, September 5, 2009

கண் தானம்

நர்சிம் கண் தானம் குறித்து எழுதியிருந்த பத்தி எப்போதோ குறிப்பெடுத்து வைத்திருந்த கவிதையொன்றை தேடி எடுத்து பதிவெற்றத் தூண்டியது. வாசுதேவ் நிர்மல் எழுதிய சிந்தி மொழிக்கவிதையான இதை வைரமுத்துவின் தொகுப்பொன்றில் படித்த ஞாபகம். பெயர்தான் தெரியவில்லை.

கண் தானம்

நான்
இப்படித்தான்
உயில் எழுத விரும்புகிறேன்

நான் இறந்தவுடன்
என் கண்கள்
பார்வையற்ற ஒருவன் கண்களில்
பதிக்கப்பட வேண்டும்

இந்த
தங்க உலகத்தை
அவன் தரிசிக்க வேண்டும்

ஆடும் அலைகள்
கலர்ப் பறவைகள்
அப்பாவி வண்ணத்துப்பூச்சிகள்
மினுமினுக்கும் நட்சத்திரங்கள்
வானவில்லை பிரசவிக்கும் மேகங்கள்
அத்தனை அதிசயங்களையும்
அவன் தரிசிக்க வேண்டும்

அவன்-
மரணமடைந்தால்
அதே கண்களை
பார்வையற்ற இன்னொருவனுக்குப்
பதிக்க வேண்டும்
இப்படியாக
என் கண்கள்
ஊழியின் எல்லைவரை
யுகங் கடந்து வாழ வேண்டும்

என் கண்கள்
மரணத்தை
வெல்ல வேண்டும்.

கண்தானம் செய்ய இங்கே க்ளிக்குங்கள்.

Thursday, September 3, 2009

சந்திப்பு


ஜீவா எனும் பெயரை அறியாத சமகால இலக்கியவாதிகள் இருக்க முடியாது. கோயம்புத்தூர் என்று அறிமுப்படுத்திக்கொண்டால் ஜீவாவைத் தெரியுமா என்கிற கேள்வியைத்தான் படைப்பாளிகள் முன்வைப்பார்கள்.

புகழ்மிக்க ஓவியரும், உலக சினிமா உபாசகரும், தீவிர இலக்கியப் பரிச்சயமும் உடைய ஓவியர் ஜீவானந்தன் கோவையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அவரோடு பதிவுல நண்பர்கள் கலந்துரையாட வருகிற ஞாயிறன்று சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நண்பர்களை அன்போடு அழைக்கிறோம்.

நாள்: 6-9-09 - ஞாயிறு

இடம்: கோவை வ.ஊ.சி பூங்கா

நேரம்: மாலை 5:30

Monday, August 31, 2009

இன ஒழிப்பை நிறுத்து! நம்மோடு கைகோர்க்கிறார்கள் கனடிய சகோதரர்கள்!

உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் போர்க்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வரும் கனடாவின் வலுமிக்க இயக்கம் 'மாவோ'. இவ்வியக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர்களான ஆரோன், கிரா டேலி, தாமஸ் ஆகிய என்னுயிர் நண்பர்கள், ஈழத்தில் நிகழ்ந்து வரும் இன அழிப்பைக் கண்டித்து தங்களது 'வான்கூவர் ஆண்டி வார் ரேலியில்' இயற்றிய தீர்மானத்தைப் பதிவுலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஈராக், ஆப்கானிஸ்தான், செசன்யா, கியூபா என்று எங்கெல்லாம் மானுடம் மரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கிளைபரப்பி போராடும் 'மாவோ' இனி ஈழ தமிழர்களுக்காகவும் போராடும் என்று உறுதியளித்துள்ளார்கள்.


Re: Srilankan Army

Thanks Selva,

This is horrible. Thank you for sending this to me. In my city, there are actually many people from Sri Lanka, and they have been organizing protests in the city since the Sri Lankan army began its new attack on Tamil people.

Below, I attached a resolution that we passed at one of our antiwar rallies in Vancouver.

I hope you are doing well.

Aaron.Mobilization Against War & Occupation
April 25th 2009 Antiwar Rally Resolution


--------------------------------------------------------------------------------

April 25, 2009

WHEREAS The Canada, U.S. and NATO occupation of Afghanistan continues with a civilian death toll that rose by 40% in 2008, and over 50,000 Afghan people have been killed in this unjust, criminal war drive. To date Canada’s occupation in Afghanistan has cost over 11 billion in taxpayer dollars.

WHEREAS U.S. President Obama has decided to send an additional 21,000 U.S. troops to Afghanistan. This war drive has spread over to Pakistan with a U.S. bombing campaign that has killed hundreds of people.

WHEREAS The brutal reality of the war in Afghanistan is hitting home, as the 117th soldier, 21 year old Karine Blais, was killed on Monday April 13.

WHEREAS Israel’s latest attack on Gaza killed over 1,300 innocent Palestinians, half of whom were children and women, and has continued the genocide of Palestinian people with their 22 month blockade on food, fuel and medical supplies into Gaza.

WHEREAS Six years of war, bombings, house raids, and the destruction of Iraq at the hands of US, UK and coalition forces has amounted to the death of over 1.2 million Iraqi people.

WHEREAS the U.S. is continuing their threats of war on Iran with a massive military build-up in the Persian Gulf, an ongoing propaganda campaign against Iran and threats of an even more severe campaign of sanctions in addition to the three sets of UN sanctions and European Union sanctions currently imposed on the people of Iran.

WHEREAS after two months of the 5th anniversary of the Canada, U.S. and France invasion of Haiti, where they overthrew the democratically elected President, Jean- Bertrand Aristide, today nearly 10,000 UN troops are still occupying, plundering and killing people in Haiti.

WHEREAS In the Sri Lankan Government’s military campaign against the Tamil people, the UN estimates that the 6,500 Tamil people have been killed, 13,000 wounded and more than 200,000 have been dislocated in the last three months.

THEREFORE BE IT RESOLVED That we, as women, elders, youth, people of color, Indigenous people, poor, working and oppressed people, stand united with our brothers and sisters around the world to have these demands met immediately.

That we demand an end to the wars and occupations in Iraq and Afghanistan, the ongoing threats of war against the people of Iran and that above all their self-determination and sovereignty be respected.

That we support fully the self-determination of the Palestinian people and an end to the 61 year occupation of Palestine and the current Israeli criminal blockade of Gaza.

That we support the Tamil people’s human and democratic right to self-determination.

That the Sri Lankan government must stop the war and genocide of the Tamil people.

That the Sri Lankan government accepts a cease-fire immediately.

That all Tamil Leaders and detainees be released from military detention immediately.

That the Sri Lankan government lift the blockade on the Tamil areas and let all media and aid agencies access the people trapped in the war zone.

That the Liberation Tigers of Tamil Eelam (LTTE) be removed from Canadian and U.S. governmental lists of terrorist organizations.

That Canada, U.S. and all countries open the door unconditionally to all Tamil refugees.

Self Determination for All Oppressed Nations!Mobilization Against War & Occupation (MAWO)
http://www.facebook.com/l/;www.mawovancouver.org
--------------------

Thursday, August 27, 2009

குதிப்போர்க்கு...


கோவை அரசு கலைக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் திரு. கனகராஜ், இந்திய ஆட்சிப்பணிக்கும், அரசின் பிற பணிகளுக்குமான தேர்வுகளுக்கு மாநகராட்சி பள்ளி மாணவர்களைத் தயார் செய்யும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார். அவரோடு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையரும் சேர்ந்து ஒவ்வொரு பள்ளிகளிலும் “கேரியர் கைடுலைன்ஸ்” என்றொரு வழிகாட்டி நிகழ்ச்சியினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பேச அசிஸ்டெண்ட் கமிஷனருடன் அடியேனும் அழைக்கப்பட்டிருந்தேன். ஊடகத்துறையில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பின் கிடைத்த அவகாசத்தில் 'கதைகள் என்ன செய்யும்?' என்கிற என் பேஃவரிட் சமாச்சாரத்தையும் மாணவர்களோடு பகிர்ந்து கொண்டேன்.
நேரடி உரையாடலில் மாணவியர்கள் பலருக்கும் எழுத்தார்வம் இருப்பதையும், தயக்கம், கூச்சம், அறியாமை போன்ற காரணங்களால் வெளிப்படுத்த தயங்குகிறார்கள் என்பதையும் உணர முடிந்தது. பேர்பாதியினர் கவிதை எனும் பெருநோயின் ஆரம்ப அறிகுறியான “அகவலோசைக் கவிதைகளைப்” பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கின்றனர்.

***

என்.டி.டிவியில் பெண்பாற் கவிஞர்களின் நவ கவிதைகளை முன் வைத்து டாகுமெண்டரி ஒளிபரப்பினார்கள். குட்டிரேவதி, சுகிர்தராணி, மாலதி மைத்ரி போன்றோரது உரையாடல்களுக்கும், கவிதைகளுக்கும் சப்-டைட்டில் போட்டு அசத்தலாக இருந்தது டாகுமெண்டரி. குட்டிரேவதியின் ‘முலைகள்’ வெளியானபோது சினேகன், பழனிபாரதி, அப்துல்ரஹ்மான் போன்றோரது எதிர்வினைகள் ரொம்பவும் ஆறிய பழங்கஞ்சி. அதையே அடிக்கடி நோண்டியது மட்டும் நெருடல். இத்தனைச் சுத்தமாக இதைத் தயாரித்திருப்பது பிரீதம் சக்கரவர்த்தி. சாருவின் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்!

“இதுமாதிரி தமிழிலக்கியவாதிகள் பற்றிய டாகுமெண்டரிகளை விஜய் டிவியில் ஐந்து வருடங்களுக்குள்ளும், கோபாலபுர டிவிக்களில் பதினைந்து வருடங்களுக்குள்ளும் எதிர்பார்க்கிறேன்” என்றேன் அண்ணாச்சியிடம். உனக்கு மூடநம்பிக்கைகள் ஜாஸ்தி என்கிறார் அவர்.

***

ஊரில் இருக்கிற எல்லா பிள்ளையார் கோவில்களிலும் அன்னதானம். முதல் பந்தியில் அறங்காவலர் குழுவினர்களின் குடும்ப உறுப்பினர்கள் வைர அட்டிகை சகிதம் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இரண்டாவது பந்தியில் கட்டளைதாரர்கள் மற்றும் குடும்பத்தார். மூன்றாவது பந்தியில் கணக்கப்பிள்ளை துவங்கி நாதஸ்வரக்காரர்வரை உள்ள கோவில் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தார். இவர்களெல்லாம் தின்று தீர்த்தது போக மிச்சம் மிஞ்சாடி இருந்தால் எழைப்பட்டவர்களுக்குக் கொடுப்பார்கள் போலும்.

இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுப்பதுதானே தானம். அன்னதானம் என்கிற பதத்திற்குப் பதிலாக ‘சமபந்தி போஜனம்’ என்று சிலர் சொல்வது இன்னும் அனர்த்தம். எந்த பந்தியிலும் தர்மகர்த்தாவும், கோவில் துப்புரவுப்பணியாளரும் சேர்ந்து சாப்பிட்டுப் பார்த்ததில்லை.

****

இசை (உறுமீன்களற்ற நதி), இளங்கோ கிருஷ்ணன் (காய சண்டிகை), தென்பாண்டியன் (மிதக்கும் காடு) ஆகிய மூவேந்தர்களும் நவீன கவிதை இலக்கியத்தில் காத்திரமாய் வினையாற்றும் கோயம்புத்தூர்க்காரர்கள். மூவரையும் அண்ணாச்சி, சஞ்ஜெய் சகிதம் சென்று சந்தித்தோம்.

ஓர் இலக்கிய நிகழ்வில் கடந்த முப்பது வருடங்களில் தமிழ்க் கவிதைகளில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நிகழவில்லை என்பதாக நாஞ்சில் நாடன் பேசியதில் கொதித்துப் போயிருந்தனர்.

"கம்பனுக்குப் பின் கன்னித் தமிழ் எண்ணுறு ஆண்டுகள் என்ன செய்தது?" என்றெல்லாம் அகவலோசை ஆசாமிகள்தான் ஆஃப் பாயில் போடுவார்கள். கும்பமுனி ஏன் இப்படி ஆவேசப்பட்டார் என்பதுதான் புரியவில்லை. அவரது Buddy லிஸ்டில் இருக்கும் சுகுமாரன் கூட கண்ணுக்குத் தெரியவில்லையா?!

***

விநாயகர் சதூர்த்தி அன்று க.சீ.சி அழைத்திருந்தார்.

“தம்பி ஊட்டி, கொடைக்கானல் ரெண்டு மலையிலும் தற்கொலைப் பாறைகள் இருக்கிறது. அதில் இப்படி எழுதி வைக்கலாம்னு ஆசைப்படறேன்.

“குதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம்”

அல்சரே வந்துவிட்டது.

Sunday, August 23, 2009

அய்யனாருக்கு...

அன்பின் அய்யனார்,

'அடுத்து வருபவன் ஆணா, அலியா, கிழவனா, வாலிபனா, அழகனா, குரூபியா, முரடனா, சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்படாது அவனிடத்துத் தன்னைத் தானே ஒப்படைத்துக்கொள்கிறாளே அந்தச் சிறுமியிடத்து யாரும் ஒரு தெய்வீக உணர்வைச் சந்திக்காமல் இருக்க முடியாது.சமுதாயம் அவ்வப்போது கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் இருப்பவன் ஒருவனே இதைப் புரிந்து கொள்ளமுடியும். எது எப்படி இருப்பினும் 'தேவடியாள்' என்பதை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்த நியாயமே இல்லை. பரத்தை மாதவியின் நல்லியல்புகள்தானே மணிமேகலையிடம் குடிகொண்டன' என்கிற ஜி. நாகராஜன்

'விபச்சாரம் ஒரு சமூக உயவு. சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு பிரச்சனைகளில் இருந்து காக்கின்ற விலைமாந்தர்கள் சமூக சேவகர்கள்!' என்கிற ஓஷோ ஆகியோரிடத்தில் ஊறி வந்தவன் 'விபச்சாரி' எனும் பதத்தை எக்காரணம் கொண்டு பிரயோகித்திருக்க வேண்டாம்தான். திருத்திக்கொள்கிறேன்.


இணைய விவாதமொன்றில் இப்படி எழுதியிருந்தேன்...

ஒரேயொரு ஆடவனின் அன்புக்கு பாத்திரமாகக் கடைசிவரை இருந்து வாழ்ந்தவர்களைக் 'காதல் பரத்தையர்' என்றும், பொருள் தேடும் நோக்கில் காமத்தை விலைக்கு விற்றவர்களை 'வேசிகள்' என்றும் அழைத்து வந்தது தமிழ்ச்சமூகம். மன்னர்களுடைய அரண்மனைகளில் நூற்றுக்கணக்கான தாசிகள் இருந்தனர். அவர்கள் மன்னனை மட்டுமல்லாது, விருந்தினர்களையும், போர்க்காலங்களில் போர் முனைக்குச் சென்று வீரர்களையும் உற்சாகமூட்டியது வரலாறு. புத்தருடைய தவத்தைக் கலைக்க அவரது தந்தை கத்தோதனர் விலைமாதரை நாடி இருக்கிறார். வைசாலி குடியரசில் பெண் பிள்ளைகள் பிறந்தால் அதை அரசாங்கமே வளர்க்கவும், அவள் பருவமடைந்த பின் அரச குடும்பமே அவளை அனுபவிக்கும் அதிகாரத்தையும் பெற்றிருந்தது. புத்த சரித்திரத்தில் புகழ் பெற்ற 'அம்பாபாலி' இப்படிப்பட்ட ஒருவள்தான். ஆண்டவனுக்குச் சேவை செய்த தேவரடியார்கள் பிற்காலத்தில் பக்தர்களுக்கும் சேவை செய்யத் தொடங்கி தேவதாசிகள் ஆனார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழ்க்கை முறையாக இருந்திருந்தால், வேசி, பரத்தை, கணிகை, தேவதாசி, விபச்சாரி, சேடி, தாசி போன்ற வார்த்தைகளே தோன்றி இருக்காது.

விபச்சாரம் உலகின் புராதன தொழில். விபச்சாரம் சமூகக் குற்றங்களைக் குறைக்கும் உயவுப் பொருளாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதை முறைப்படுத்த அரசாங்கம் தவறியதன் விளைவுதான் தமிழகம் / இந்தியா எய்ட்ஸில் முன்னணியில் இருக்கக் காரணம். கற்பிதங்களும், உணர்ச்சி வசப்பட்ட விவாதங்களும் தொடர்ந்து நம்மைப் படுகுழியில்தான் தள்ளி வருகிறது. விபச்சாரிகளுக்கு முறையான உடல் சோதனைகள் செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டு, பாதுகாப்பான உடலுறவிற்கான சாதனங்களும் வழங்கப்பட்டு வரும் தேசங்களில் இருப்பதை விட பாரத மணித்திருநாட்டில் எயிட்ஸ் அதிகம் இருப்பதை எவரால் மறுக்க இயலும்?!

போர்க்கப்பலில் சென்னை வந்த ஐரோப்பிய ராணுவ வீரர்களுக்கு பைவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு, கால் கேர்ள்ஸை அழைத்து வந்து 'மாமா வேலை' பார்க்கத் தயாராக இருக்கும் அரசாங்கம் அதே சேவையைத் தன் சொந்த குடிமகனுக்கு மறுப்பது எந்த வகை நியாயம்?!


க.சீ. சிவக்குமார் பற்றி இந்தப் பக்கங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பெயர்கள் குறித்த அவரது அபிப்ராயம் ஹாஸ்யச் சுவை கொண்டதாக இருந்ததால் பகிர்ந்துகொண்டேன். தவிர வால்பையன் உள்ளிட்ட பல பதிவர்களை அறிந்தவர் க.சீ.சி.

என் எழுத்துப்பொறுப்பு காணாமல் போயிருக்கிறது என்கிற தங்களது விமர்சனம் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வைக்கிறது. அன்பிற்கு நன்றி அய்யனார்.

'வாழ்க பிரபலங்கள்' எனும் சொல்லாடல் ஐஸ் கத்தி! :(

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Thursday, August 20, 2009

பகிர்கிறேன்

1) வள்ளியூரில் ஒரு பாதிரியார் விபச்சாரியிடம் தொடர்பு கொண்டிருந்தார். சேதாரத்திற்கான செய்கூலி வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் விபச்சாரியை அடித்துக் கொலை செய்து விட்டார்.

2) மூலக்கரைப்பட்டியில் ஒரு பாதிரியார் வெளிநாட்டில் வேலை செய்கிற கணவன்மார்களின் மனைவியரைக் குறி வைத்து களியாட்டங்கள் நிகழ்த்தி வருகிறார்.

3) நெல்லையில் ஒரு பாதிரியார் வேலைக்கார பெண்ணிடம் 'சபை குப்பையாக இருக்கிறது...கொஞ்சம் சுத்தம் செய்' என்றாராம். கூட்டிப் பெருக்க குனிந்த பெண்ணை பின்னால் நின்று அணைத்து வம்பு செய்தார்.
மேற்கண்ட காமரசம் சிந்துகிற கதைகள் 'ஆன்மீக சமுதாய இதழ்' என்ற அறைகூவலுடன் வெளியாகும் 'பசுத்தாய்' இதழில் இடம் பெற்றிருந்தவை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் இராம. கோபாலன்!

***

'மாற்றத்தை விரும்பினால் அதை உன்னில் இருந்தே துவங்கு' என்பார்கள். உருவாகி இருக்கும் பஞ்சத்தை எதிர்கொள்ள தங்களது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தினையும், வெளிநாட்டுப் பயணங்களையும் குறைத்துக்கொள்ள முன் வந்திருக்கிற காங்கிரஸின் முடிவு பாராட்டுக்குறியது. இதுமாதிரியான முடிவுகள்தாம் மக்கள் மனதில் ஆள்வோரை இடம் பிடிக்க செய்யும்.

***

'பொஸ்தகமெல்லாம் மேட்டரே இல்ல. பாராளுமன்ற தேர்தல் படுதோல்விக்குப் பிறகு கட்சித்தலைமை மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதான் சமயம் பார்த்து சாக்குப் போட்டுட்டாய்ங்க...' என்பதுதான் டெல்லி பத்திரிகையாளர்களின் அபிப்ராயமாக இருக்கிறது. பதிவர்கள் சார்பாக தனி நபர் உண்மை அறியும் குழு நொய்டாவிலிருந்து கிளம்பி சென்றிருக்கிறது :)

***

தினமும் இரண்டு மணி நேரம் என மூன்று நாட்கள் வகுப்பிற்கு ஏழாயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார் தோழி விஜிராம். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கு எழுதிப் போட்டிருக்கிறேன் :)

***

வேய்ன் டையரின் 'ஸ்கை இஸ் தி லிமிட்' நூலினைப் படித்து 'பிரசெண்டேஷன்' கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் படித்தேன். அவர் எழுப்பும் கேள்விகளுள் ஒன்றினை உங்கள் முன் வைக்கிறேன்.

Are you away from time robbers?

***

முன்னால் செல்லும் வாகனத்தில்
முந்தானை விலகிய பெண்
முழுக்க ரசித்து பின்
மூளைக்கு உறைத்து
பின்னால் திரும்பி
மனைவியிடம் சொன்னேன்
இழுத்து சொருகிக் கொள்..
என்கிற தண்டோராவின் கவிதை என்னை ஈர்த்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

***

"வால்பையன், குசும்பன், கோட்டிக்காரன் என்றெல்லாம் புனைப்பெயர்கள் வைத்திருப்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. இவர்கள் வால்பையனா இல்லையா என்பதை இவர்களே எப்படி தீர்மானிக்க முடியும்? கவிப்பேரரசு, ஜனங்களின் கலைஞன், இளைய தளபதி போன்ற சுய முடிசூட்டுதல்களுக்கு கொஞ்சமும் குறைவானதல்ல இவை" - இப்படிச் சொன்னவர் க.சீ. சிவக்குமார்.

Saturday, August 15, 2009

ஜெய்ஹோ!

நாம் வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடக்கவில்லை. நம் நடு முதுகில் பூட்ஸ் தடங்கள் இல்லை. நம் வார்த்தைகள் எண்ணப்படவில்லை. நம் சந்திப்புகள் உளவு பார்க்கப்படுவதில்லை. நம் மதிய தூக்கத்திற்கு பங்கம் வந்ததில்லை. வசதியாக பின் பக்கம் சாய்ந்து இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தின் சுதந்திரச் சுவை நம் நாக்கில் ஊற குறைந்தபட்ச காரணங்கள் எதுவுமில்லை. நாளைய விடுப்பில் நண்பர்களோடு பிக்னிக் போகலாம், பதிவு போடலாம், அலமாரியைச் சுத்தம் செய்யலாம், தமனாவின் தத்துவ பேட்டியினைப் பார்க்கலாம், வருகிற தேசபக்தி எஸ்.எம்.எஸ்களை பார்வர்டு செய்யலாம். ஜெய்ஹோ!

Friday, August 14, 2009

தொடரும் உரையாடல்

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளிலும் என்னுடைய ஆத்திரம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறதென்றும், கொஞ்சம் மொட்டை கட்டையாக எழுதியிருப்பதாகவும் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், நான் உறுதியாக நம்பியபடி சிவராமன் அண்ணாவிற்கு என் கோபங்களும், அதன் நியாயங்களும் புரிந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியான பின் வலைஞர்களுடான உரையாடல்களிலும், சில பத்திகளிலும் சிவராமன் அண்ணாவும், திரு. ஜ்யோவ்ராம் சுந்தரும்தான் நடுவர்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களது ரசனைக்கேற்ப எழுதி இருப்பேனே என்கிற அங்கலாய்ப்பு இருந்தது. எழுத்தின் நோக்கம் ஜூரிகளை ஈர்ப்பது என்றளவிற்கா இறங்கி வரவேண்டும். தவிர, இவர்கள் இம்மாதிரியான கதைகளைத்தான் ரசிப்பார்கள், தெரிவு செய்வார்கள் என்றெல்லாம் போட்டியாளர்களைக் கற்பனை செய்யத் தூண்டியது எது?! இந்த பேச்சு ஏற்கனவே திட்டமிட்டபடி நடுவர்களாக சம்மதித்த இரு எழுத்தாளர்களையும் கேவலப்படுத்துவதாக இல்லையா?!

மலை முகடுகளில் தேங்கும் தூமழை நீரை மட்டுமே பருகும் தேவலோகத்துச் சக்கரவாகம் என்கிற இமேஜ் எழுத்தாளர் மீது எழ என்னென்ன காரணங்கள் இருக்கமுடியும்?! அதிகம் படிக்கிறார், எழுத்தாளர்களோடு பழகுகிறார், நவீன உத்திகளில் எழுதுகிறார் அதனால் அவர் ஒரு 'கலா ரசிகர்' என்கிற வாதம் ஒரு 'மித்' அல்லவா?!

தங்களது ரசனை மட்டத்தை போட்டியாளன் சமதளத்திற்கு மேலே உயர்த்துகிறானென்றால்... "அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லை... ஒரு வாசக மனோபாவத்துடனே அத்தனைக் கதைகளையும் படித்தோம்" என்று மறுக்க வேண்டியது ஜூரிகளின் தார்மீக பொறுப்பு இல்லையா?! 'இவய்ங்க போட்டிக்கு நம்மளமாதிரி ஆளுக எழுதக்கூடாது' என்கிற தாழ்வு மனப்பான்மை உருவாகும் அபாயத்தை உடைக்க வேண்டியது யாருடைய வேலை?!

வாசிப்பதற்கான நேர சலுகையை அன்றாடம் எல்லோருக்கும் அளிப்பதில்லை. என்னைப் போல சுடுதண்ணி கேஸூகள் தேர்வான கதைகளைக் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டுதான் படிக்க முடியும். நாளொன்றுக்கு ஒரு கதை என்றாலும் பரிசுக்குறிய கதைகளைப் படித்து முடிக்கவே ஒரு மாதம் ஆகும். தேர்வுப்பட்டியலை வெளியிடும்போதே அவைகள் தேர்வான பிரிவையும், காரணத்தையும் ஒரு வரியில் எழுதி இருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.

போட்டியை நடத்திய விதத்திலோ, பரிசுக்குறிய கதைகளைத் தேர்வு செய்த விதத்திலோ அமைப்பாளர்கள் மீது எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்களது முயற்சியைப் பாராட்டுகிற நேரத்தில் ஆதங்கங்களையும் பதிவு செய்வது அவர்களது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு உதவலாம்.

மற்றபடி நீ எழுதுவதெல்லாம் எழுத்தா? என்ன தெரியும் உனக்கு? தமிழில் யாரையெல்லாம் படித்திருக்கிறாய்? பிராந்திய மொழிகளில் யாரையெல்லாம் படித்திருக்கிறாய்? உலக இலக்கியம் பரிச்சயமா? இன்னாரை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி? என கொஸ்டினர்களைக் கையில் வைத்துக்கொண்டு எதிர்படுபவர்களோடு முஷ்டியை முறுக்கும் 'தமிழிலக்கிய அத்தாரிட்டிகள்' தனி சப்ஜெக்ட். அதற்கும் உரையாடல் சிறுகதைப் போட்டிக்கும் நேரடி தொடர்புகள் இல்லையென்பதால் இப்போதைக்கு ஜூட்!

Thursday, August 13, 2009

தமிழிலக்கிய அத்தாரிட்டி - II

தென்மாவட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள்தாம் உயரதிகாரிகளாக இருக்கிறார்கள். வல்லத்துக்காரனையும், ஸ்டீமர் போட்டுக்காரனையும் ஓரே நாளில் நிகராக்கியது சுனாமி. தென்கொரியாவில் மொபைல் கம்பெனி மானேஜர் தன் குலத்தொழிலான வலை பின்னும் வேலைக்குத் திரும்பி விட்டார். திரைகடல் ஓடி கோடிகளைச் சேர்த்தவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்து அரசு மருத்துவமனைகளின் துருவெறிய கட்டில்களில் படுத்துக்கிடக்கிறார்கள்.

காலம் மேட்டையும், பள்ளத்தையும் சமன் செய்கிறது.

***

மே தினம்.

சாருநிவேதிதாவின் அலைபேசி அழைக்கிறது. எடுத்தால் எதிர்முனையில் ரமேஷ் வைத்யா!

"உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் சாரு..!"

"எனக்கு ஏனய்யா வாழ்த்து சொல்கிறீர்"

"நீர்தானய்யா கடுமை உழைக்கிறேன், கடுமையா உழைக்கிறேன்னு எழுதறீரு..."

"டொய்ங்ங்..."

- மேற்படி ஹாஸ்யம் வலைஞர்கள் மத்தியில் உலவுகிறது. விசாரித்துப் பார்த்ததில் மேற்படி சம்பவம் நிகழவே இல்லையாம். உண்மையோ பொய்யோ கேட்கவே ரசனையாக இருக்கிறதல்லவா?!

***

நவீன கவிஞர்களுள் முக்கியமானவர் கவிஞர் தென்பாண்டியன். உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கிய இதழ்களில் அவ்வப்போது தட்டுப்படுவதுண்டு. 'மிதக்கும் காடு' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இணையத்திலும் ஒரு கடையைப் போட்டிருக்கிறார் என்பது இன்றுதான் தெரிந்தது.

***

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த விஷயம் சிலருக்கு புரியவில்லையென்பதால் கீழ்க்கண்ட விளக்கம் அவசியமாகிறது.

எழுத்தாளனை அவனது எழுத்தின் ஆகிருதிக்காகக் கொண்டாடுங்கள். அதை விட்டுவிட்டு அவர் இவ்வளவு படிக்கிறார், எழுத்தாளர்களோடு பழகுகிறார், சார்த்தரை கரைத்திருக்கிறார், பூஃக்கோவை முழுங்கி இருக்கிறார், மார்குவேஸை தலைக்கு வைத்துப் படுக்கிறார் என்பது மாதிரியான சுயகற்பனைகளினால் கட்டமைக்கப்படுகிற பிம்பத்தை வைத்துக்கொண்டு பூ போடாதீர்கள். தவிர ஒருவன் இதையெல்லாம் படித்துவிட்டதாலேயே உயர் ரசனைகள் உடையவனாகி விடுவான் என்பதும் சுத்த பேத்தல். உங்கள் ஆராதனை சிலரை தமிழிலக்கிய அத்தாரிட்டியாக மாற்றி விடுகிறது. உடனே கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு வகுப்பெடுக்க ஆரம்பிக்கிறார்கள். அதிலும் வலையெனும் வேலி தாண்டி குரைக்க திராணி இல்லாதவர்களின் வெற்றுக்கூச்சலை சகிக்க முடியவில்லை.

சுகுமாரன் மொழிபெயர்த்த உலக கவிதைகள், எம்.ஜி. சுரேஷின் புத்தகங்கள், சாருவின் கோணல் பக்கங்கள், எஸ்.ராவின் அயல் சினிமா மாதிரி சமாச்சாரங்களைப் படித்தாலே ஒருவன் அதில் வருகிற எழுத்தாளர்களின் பெயர்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து காலம் தள்ளி விட முடியும். நாம் ஒன்றும் அவர்களின் கழுத்திற்குப் பின்னால் நின்று கொண்டு அவர் என்ன படிக்கிறார் என்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.

எது நல்ல எழுத்து என்பதை வாசகன் தீர்மானிக்கட்டும். வாத்தியார்கள் அல்ல!

Wednesday, August 12, 2009

கடவுளரை உருவாக்கும் சுண்டெலிகள்!

உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் பொது சுகாதாரத்திற்காக செலவு செய்யும் 175 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 171 வது இடம் கிடைத்துள்ளது. இந்த வகையில் கொடிய வறுமையில் உழலும் ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் படு கேவலமான இடம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது 62வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் மகிழ்வான செய்தி அல்லவா?!

***

'அய்யோ இவர்கள்தான் ஜுரிகள் எனத் தெரிந்திருந்தால் அவர்களது ரசனை மட்டத்திற்கு எழுதி இருப்பேனே' என்கிற புலம்பல்களை மவுனமாக ரசித்து விட்டு நகர வேண்டி இருக்கிறது. 'கடவுளரை' உருவாக்கும் கதவிடுக்கு எலிகளின் கூக்குரல்கள். அறிவின் போதாமையால் நிகழும் இத்துதி பாடல்களால்தாம் 'தமிழிலக்கிய அத்தாரிட்டிகள்' உருவாகிறார்கள். நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்து 'நல்ல ஓட்டத்தை ஓடினேன். முடித்துக்கொண்டேன்' என்றார். 'பார்முலா ஒன்' ரேஸில் போய் ஓடலாமோ?!

***
பதினைந்து வயதில் 'மனஸ்' படித்திருப்பேன். அதே காலகட்டத்தில்தான் அப்புசாமிக் கதைகளையும் நூலக அலமாரிகளில் தேடித் தேடிப் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு எழுத்தாளர்களும் ஒருவரே என்றறிந்த ஓரிரவில் மலைத்துக் கிடந்தேன். ஹாஸ்யக் கதைகளை எழுதுகிற பாக்கியம் ராமசாமிதான் 'மனஸை' எழுதினார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஜ.ரா. சுந்தரேசன் எனும் அந்த எழுத்துக்கலைஞன் மீது ஏற்பட்ட பிரமிப்பு அவரது 'வா!' எனும் மிகச் சமீபத்திய சிறுகதை வரை தொடர்கிறது. 37 வருட பத்திரிகைப் பணியில் தன் 'க்ரியேட்டிவிட்டியை' சாகாமல் வைத்திருந்ததும், 77 வயதிலும் படைப்புலகில் மல்லுக்கு நிற்பதும் சாமான்யம் இல்லை. தமிழிலக்கிய அத்தாரிட்டிகள் இவரை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்தான் வாசகனை முட்டாளடிக்கும் வரிகளை எழுதியதில்லையே!

***
மைக்கேல் ஜாக்சனின் கல்லறையில் பதிக்கப்பட இருக்கும் 'மோனுமண்ட்' எனும் நினைவுக் கல்லை வடிவமைத்தது ஒரு தமிழர். அதுவும் கோயம்புத்தூர்காரர். செய்தி கேட்டதும் தேடிப் போய் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு வந்தேன். மஞ்சள் பையோடு கடல் கடந்த கிராமத்துக்காரர் சொந்த உழைப்பில் முட்டி மோதி அமெரிக்காவில் மூன்று கடைகளை வைத்திருக்கிறார். 'உலகிலேயே அதிகம் பேர் க்ளிக் செய்யப்போகும் கல் இதுவாகத்தான் இருக்கும்' என்று பெருமிதம் பொங்க சொன்னார். இவரது வெற்றிக்கதையினை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.

***

லேண்டனா காமிரா எனும் அழகுச் செடி எப்படி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியின் உணவுச் சங்கிலியை அழிக்கிறது என்கிற கதையை 'காட்டுப்பூ'வில் எழுதி இருந்தேன். ஒரு மலைப் பயணத்தில் திரு.லதானந்த் தகவலாகச் சொன்ன ஒற்றைச் செய்தியைப் பின் தொடர்ந்ததில் கிடைத்த கட்டுரை அது. அதன் சிறு பகுதி...

'துரைசாணியம்மா' என்று பழங்குடியினரால் அழைக்கப்பட்ட ஆங்கிலேயப் பெண்கள், தங்களது 'ஹோம் சிக்' ஐ போக்க இங்கிலாந்தின் மர, செடி வகைகளை வரவழைத்து தங்கள் வீட்டுத் தோட்டங்களிலும், முற்றங்களிலும் நட்டனர். அப்படி நடப்பட்ட அழகுச் செடிகளுள் ஒன்றுதான் 'லேண்டணா காமிரா'. சிறிய அளவில் வண்ண, வண்ணமாகப் பூக்கும் உண்ணிச்செடியான லேட்டணா காமிரா 'பார்த்தீனியத்தைக்' காட்டிலும் வேகமாகப் பரவி ஊட்டி, கொடைக்கானல், முதுமலை, ஆணைமலை என மேற்கு தொடர்ச்சி முழுமைக்கும் பரவி இயற்கைக்கு சவால் விடுகிறது.

இச்செடி வளர்கிற இடங்களின் அருகில் உள்ள புல், பூண்டுகள் இதர வகைச் செடிகளை வளரவிடாமல் செய்து விடும். விலங்குகளின் உணவுச் சங்கிலியில் புல்தான் பிரதானம். காடு முழுவதும் 'லேட்டணா காமிரா' வேகமாகப் பரவுவதால் உணவுச் சங்கிலியைப் பாதித்து உயிர்ச்சுழலை அழித்து விடும் அபாயமும் இருக்கிறது.

யாதொரு பலனும் தராத, உலகைச் சீரழிக்கிற அழகுச் செடிகளை வாங்கி அவற்றிற்கு தனிப்பட்ட கவனிப்பைக் கொடுத்து தண்ணீரை, நேரத்தை, பணத்தை விரயமாக்குவதை விட சமூகத்திற்குப் பலனளிக்கும் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதை லேட்டனா கொஞ்சம் லேட்டாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

Thursday, July 30, 2009

கலாப்ரியாஇன்று அறுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என் அபிமான கவிஞர் கலாப்ரியா. நாளை முதல் அவர் வகித்து வந்த வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். பிறந்த நாள் வாழ்த்துக்களோடு, அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.

Wednesday, July 29, 2009

சொற்களெடுத்து எறிந்தாய் தோழி!

வணக்கம்,

நான் நலம், நீங்களும் நலமாக இருக்க இறைவனை வணங்குகிறேன். நீங்கள் என்னைத்தேடுவதாக சிலர் என்னைத்தொடர்பு கொண்டார்கள். நீங்கள் யார் என்று நான் அறிய முடியுமா? மட்டக்களப்பில் எந்த வீதியிலிருக்கும் அனோஜாவைத்தேடுகிறீர்கள்?

அனோ.

***

அன்பின் அனோ,

நீங்கள் யாரென்று கேட்டதிலிருந்தே நீங்கள் நான் தேடுகிற அனோஜா இல்லையென்று புலனாகிறது. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.

நான் செல்வேந்திரன், எழுத்தாளன். எனக்கு மட்டக்களப்பில் பிரதீபா திருக்குளத்தரசன் என்றொரு பேனா நண்பி இருந்தாள். அவள் மூலமாக அனோஜா ரத்னவேல் என்றொரு நண்பியும் அறிமுகம். நாங்கள் பால்யத்தில் தொடர்ந்து கடிதங்களின் மூலம் எங்களது நட்பைப் பலப்படுத்திக்கொண்டோம். கொடிய வறுமையில் என்னால் செலவினமிக்க கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்ள இயலாமல் போய்விட்டது.

இன்றைக்கு வசதியும், வாய்ப்பும் வந்து விட்ட சூழலில் என் சக ஹிருதயர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் எனும் ஆர்வத்தேடலில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் போலும். தொந்தரவிற்கு மன்னியுங்கள்.

நான் தேடுகிற அனோவிற்கு சுமார் 22 வயது இருக்கலாம்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

***

செல்வேந்திரன்,

நீங்கள் தேடும் அனோ நானேதான். ஆனால் இப்ப எனக்கு இந்தியாவில் இருக்கும் எவருடனும் நட்பு வைக்க எனக்கு விருப்பமில்லை. இந்தியாவில் வாழ்பவர்கள் சுயநலவாதிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். பிரதீபாவின் அப்பா காலமாகிவிட்டார். அவளுக்கும் நட்பு தொடர்வதில் விருப்பமில்லை. நன்றி

இந்தியாவின் எதிரி
அனோஜா

***

"சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமே பேசாதிருங்கள்..." (யாக்கோபு 4:11)

அன்பின் அனோஜா,

தங்களது பதிலுக்கு நன்றி! யாரோடும் நட்பைத் தொடர்வது அல்லது முறித்துக்கொள்வது தங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வானத்தின் கீழுள்ள எவருக்கும் அதிகாரம் இல்லை.

தமிழகத்தின் அண்டை நாடான இந்தியாவின் குரலே தமிழர்களின் குரலென்று தவறாகப் பொருள் கொள்ளப்படுவது ஈழப் பிரச்சனையில் உண்மையான கவலையும், வருத்தமும் கொண்டு கண்ணீர் சிந்துகிற தமிழர்களின் சாபக்கேடு. எங்கள் உணர்வும், கவலையும் உண்மையென்று உங்களிடத்தில் நிரூபணம் செய்ய வேண்டி இருப்பது எத்தனை துரதிர்ஷ்டமானது. ஈழ விடுதலைக்காக தங்களை எரித்துக்கொண்ட முத்துக்குமரன் போன்ற எண்ணற்ற இளைஞர்களின் பிணத்தின் மீது நின்றுகொண்டுதான் இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையான அக்கறையோ, அல்லது சுய நோக்கங்களுக்கான நாடகமோ எது எப்படியாயினும் எங்கள் தலைவர்களும், கலைஞர்களும் அவரவர்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடி சிறை சென்ற தகவல்களையெல்லாம் உங்களது கணிணித் திரை காட்டி இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், எழவு வீட்டில் நியாயம் பேசுவது அசிங்கமானது. நீ என் சகோதரி. செத்துப்போனவர்கள் என் சகோதரர்கள். நானும் துக்கத்தில் இருக்கிறேன். உங்களோடு சமர் செய்வது என் விருப்பமோ, நோக்கமோ அல்ல. நாங்கள் கள்ள மவுனம் சாதித்தாக நீ சொல்கிற கூற்றில் எனக்கிருக்கிற அபிப்ராயங்களை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான். ஆரம்பம் தொட்டே ஈழப் பிரச்சனையைத் தனிப்பட்ட தமிழர்களின் பிரச்சனையாகவே மொத்த இந்தியாவும் கருதிவருகிறது. அவர்கள் தமிழரென்ற போதும் இந்திய வம்சாவளியினர்தானே என்கிற எண்ணம் இந்தியாவில் விதைக்கப்படாமல் போனதற்கு சர்வ நிச்சயமாக திராவிடத் தலைவர்களே காரணம். இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது மொத்த இந்தியாவும் கொதித்துக் கிளம்புகிறது. ஆனால், இலங்கையிலோ, கர்நாடாகாவிலோ, மலேஷியாவிலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் அது பெட்டிச் செய்தியாக மட்டுமே கருதப்படுகிறது. தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?! என்கிற சந்தேகம் எங்களுக்கு எப்போதும் இருந்தே வருகிறது.

செல்வேந்திரன் எனும் பெயரும், என்னுடைய கடிதங்களும், நான் உங்களிடத்தில் காட்டிய அன்பும் நிச்சயம் மறக்கக் கூடியதல்ல. காலம் நம்மைக் கலைத்துப் போட்ட பின்னர், எங்கே போர் உங்களையும் தின்று விட்டதோ எனும் பதட்டத்தில் தேடி, தேடி உங்களைக் கண்டடைந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இனி நீங்கள் நட்பைத் தொடராமல் இருந்தாலும் கவலையில்லை.

'திருக்குளத்தரசன்' எனும் பெயர் எத்தனை வசீகரமானது?! பிரதீபாவின் தந்தை மரணமடைந்து விட்ட செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. என் இரங்கல் அவளுக்கு நிச்சயம் தேவை இல்லைதான்.


இப்படிக்கு,

உங்கள் அன்பெனும் பிடிக்குள் சில காலம் அகப்பட்டுக் கிடந்த செல்வேந்திரன்.

Monday, July 20, 2009

சந்தேகம்

ஐ.ஐ.எம் - அகமதாபாத்தின் இருபத்தைந்து வெற்றியாளர்களின் கதையான 'ஸ்டே ஹங்ரி..ஸ்டே ஃபூலிஷ்' புத்தகம் வெளியான ஒன்பது மாதங்களில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன் ஆசிரியரான ரேஷ்மி பன்சாலும் ஓர் ஐ.ஐ.எம் - மேக்கிங்தான். இந்திய புத்தகச் சந்தையினைத் தாங்கிப் பிடிப்பது சுயமுன்னேற்ற நூல்கள்தாம் என்பதற்கு மேலும் ஒரு சாம்பிள் இது.

***
'ஆப்பு' எனும் பெயரான் கீழ்க்கண்ட நபர்களுள் ஒருவராக இருக்கலாம் என நான் தீவிரமாக சந்தேகிக்கிறேன்.

1. சஞ்ஜெயின் எதிர்வீட்டில் இருக்கும் ஒன்றரை வயது குழந்தை

2. காக்கர்லால்

3. லதானந்தின் கார் டிரைவர்

4. நான்கு மாத சம்பளப் பணத்தை மிச்சப்படுத்தி, 'செகண்ட் ஹேண்ட்' மொபைல் வாங்கி தன் காதலனுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு பதிலழைப்பிற்குக் காத்திருக்கும் பைப் கடை முருகேஷ்வரி.

5. முத்தாலம்பட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பா. கணேசன்

6. ஜெயமோகன்

7. நாமக்கல் - திருச்சி சாலையில் இரவு பத்தரைக்கு மேல் தென்படும் அரவாணி நிர்மலா

8. வெங்கட்பிரபு

9. மனுஷ்ய நாடகத்தில் வரும் தந்தி ஆபிஸ் கிழவர்

10. ஜல்லிப்பட்டி பழனிச்சாமியின் வாழைத்தோட்டத்தில் மறைந்து கொண்டு பச்சைக் கற்பூரத்தை வாழைப்பழத்தில் வைத்து முழுங்க யத்தனித்துக்கொண்டிருக்கும் சரோஜா.

11. ராக்போர்ட் சந்துரு

12. அசினின் மானேஜர்

13. வேளுக்குடி கிருஷ்ணனின் உபன்யாச சிடி வாங்க கிஞ்சித்காரம் டிரஸ்ட் வாசலில் ஆட்டோவில் இறங்கும் பெரியவர் நரசிம்மன்.

14. மாவோ இயக்கத்தின் க்யூப கிளையின் செயலாளர் டாம் என்கிற சீஸ் கட்டர்

15. சுஜித் சோமசுந்தர்

16. தற்கொலை செய்யும் தீர்மானத்தில் 'லேட்டனா காமிரா' பூக்களை வயிறு புடைக்கத் தின்றுவிட்டு மலை உச்சியில் காத்திருக்கும் வரையாடு

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சந்தேகிக்கலாம்தானே?!

***

வெப்காமிரா வசதி இல்லாதவர்கள் தங்களது காமிரா மொபைலை வெப்கேம் ஆகப் பயன்படுத்தும் வசதியை இந்த இணையதளம் தருகிறது.
***

உறுத்தாத மழை, அழுத்தாத குளிரென கோவை ஒரு சொர்க்கமாக மாறிக்கொண்டிருந்த ரம்மிய மாலையில் ச்சின்னப்பையன், வால் பையன், தாரிணி, விஜிராம், சஞ்ஜெய், வடகரை வேலன் மற்றும் இரு வல்லவர்களுமாக ஒரு சிறிய சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பின் பலனாக கொங்கு பதிவர்கள் ஒருங்கிணைந்து கொஞ்சம் உருப்படியான நிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம். விரைவில் நல்ல செய்திகள் வரும்.

***
ஒரு சீனத் தம்பதியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை எர்கோவில் படித்தேன். கணவன், மனைவி இருவருமே 29-04-1982ல் பிறந்தவர்கள். இருவரது பெயருமே 'வேங் யெங்'. இருவருக்கும் ஓரே அலுவலகத்தில் பணியும் கூட. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் சண்டையே போடுவதில்லையாம். காரணம்: சண்டையில் இருவரும் தங்களது பெயரைச் சொல்லியே திட்டியாக வேண்டும் என்பதால்!

***

"யாவரும், கேட்பதற்கு தீவிரமாயும், பேசுவதற்கு பொறுமையாயும், கோபிக்கிறதற்கு தாமதமாயும் - இருக்க கடவர்கள்" - யோகோபு 1:19

***

" I think I am trying to make my head as empty as it was when I was born on to this damaged planet fifty years ago." - Kuri Vonnegut Jr.

Thursday, July 16, 2009

ம்

வெறுமை சூழ்ந்திருக்கிற இரவுகளில் மட்டும்தான் உன்னை நினைத்துக்கொள்கிறேனென கணிணித் திரை என்னைக் கேள்வி கேட்கிறது. சத்தியமாக இல்லை. மப்ளரை சுற்றிக்கொண்டு வேர்த்திரைப்புடன் காலைநடை பயில்பவர்கள், பேப்பர் போடும் பெரியவர், 'சார் டீ வாங்கிட்டு வரட்டுமா' எனக் கேட்கும் மேன்சன் வாட்ச்மேன், அலுவலக் கேட்டுக்குள் பைக்கை நுழைக்கும்போது விரைப்பாகி சல்யூட் அடிக்கும் செக்யூரிட்டி, உடலெல்லாம் வியர்வையில் ஊறித் திளைக்க அரிசி மூடைகளை முதுகில் சுமக்கும் கூலியாள், ஆர்யாஸில் சாப்பிட்டு வாய் துடைத்து வெளிவரும்போது கை நீட்டும் வயோதிக யாசகன், உபன்யாசத்தில் முன்னிருக்கை வெள்ளி முடிவேந்தர்கள், என எல்லோருக்குமே உன் வயது. ஒவ்வொரு வயசாளியைப் பார்க்கையிலும் எனக்கு உன் நினைவு வருகிறது.

ஜன்னல் வழி முகத்தில் விழும் தினமணி. தினமும் உன் நினைவெனும் செய்தியைத் தாங்கி வருகிறது. படித்து முடித்தவுடன் கவனமாக உன்னைப் போலவே அதன் ஓரத்தில் ஒரு 'V' வடிவம் கிழித்து படித்த பேப்பர் எனும் அடையாளம் இடுகிறேன். கட்டுரைகளில் இருந்து கவனமாகக் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறேன்.

சுடுசோறு அதை விடச் சூடான குழம்பு. பிஞ்சுக் கைகள் அதை பிசையத் தவிக்கும் ஆரம்ப காலம் தொட்டு நீதான் ஊட்டி விட ஆரம்பித்தாய். உன்னையும், ஊரையும் விட்டுப் பிரிகிற முந்தைய இரவுவரைக்கும் அதுதானே வாடிக்கை. இங்கே அத்திப்பூத்த கணக்காக எப்போதாவது என் இலையில் வந்து விழும் பால் வெள்ளைச் சுடுசோறைப் பார்க்கையில் நீ இந்நேரம் சாப்பிட்டிருப்பாயா என்ற யோசனையில் சுடுசோறு ஆறிவிடுகிறது.

உனக்கு நாக்கு இழுத்துக்கொண்டது என்று ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்தபோது ராஜா சொன்னான். காலுக்கடியில் பூமி நழுவி, நாக்குழறி, தலை சுற்றி தண்டவாளத்தில் வீழ்ந்தேன். எல்லா ரயில்களும் என் மீது ஏறி இருந்தாலும் உறைத்திருக்காத நிலை அது. 'அட அதெல்லாம் ரெண்டு நாளில் சரியாயிடுச்சிப்பா. இதுக்கே மயங்கிட்டா எப்படி. அவருக்கு வயசாவுதுங்கறத அவரும், நீயும் மறந்துடுறீங்கடே' என்ற ராஜாவிடம் 'அவரு யுலிஸஸ்டா...! ரெஸ்ட்லெஸ் ஸ்பிரிட்டா... அவருக்கு எதுனா ஒண்ணுன்னா சத்தியமா எனக்கு உலகம் இல்லைடா' என்று கதறிக்கொண்டிருந்தேன். மொத்த ரயில் நிலையமும் என்னை வேடிக்கை பார்த்தது.

உன்னோடு பேசியும், கடிதங்கள் எழுதியும் வருடங்கள் ஆகிவிட்டன. உன்னிடமிருந்து கடிதங்களும், மூலநோய்க்கான லேகியமும், முதலூர் அல்வா பார்சல்களும், விநாயகர் கோவில் விபூதியும் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோலவே நான் அனுப்பும் பணவிடையும் உங்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி நிகழும் மாற்றங்களையாவது எனக்கு எழுதி வருவது கண்ணுக்குத் தெரியாத இழைகளைக் கொண்டு என்னை ஊருடன் பிணைக்கச் செய்வதற்கான முயற்சி என்பதை நானறிவேன். 'எத்தனைச் சம்பாத்தியம் வந்தாலும் வெளியூரில் நீ அன்னியனும் பரதேசியும்தானே' என்பதைத்தான் உங்கள் கடிதங்கள் குறிப்பால் உணர்த்துகின்றன.

நான் இடது கையால் அவ்வப்போது சிப்ஸ்களை கொறித்துக்கொண்டு, ஈரம் நிரம்பிய கோயம்புத்தூர் காற்றை அனுபவித்துக்கொண்டு கணிணி தட்டிக்கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் நீ திசையன்விளை பேருந்து நிலையத்திலோ, உடன்குடி பேருந்து நிலையத்திலோ சாத்தான்குளத்திற்குச் செல்லும் கடைசிப் பேருந்திற்காய் காத்திருந்து கொண்டிருப்பாய். கடந்து செல்லும் காவலன் "யாருய்ய்யா அது?" என விசாரிக்க 'வியாபாரிங்கய்யா' என பவ்யமாகச் சொல்லி அமைதி காப்பாய். அவன் வம்படியாக பத்து ரூபாயையோ அல்லது ஒரு டஜன் தீப்பெட்டியையோ பிடுங்கிச் செல்வான். அன்றைய தினத்தின் சம்பாத்தியத்தில் சாத்தானுக்கு பங்கு கொடுக்க நேர்ந்ததை எண்ணி வருந்தும் வேளையில் "சாத்தான்குளம்" எனும் போர்டு அணிந்த பஸ் நுழைந்தால் சுமைகளோடு ஓடி ஏறி இடம்பிடித்து ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து மகன் இந்நேரம் தூங்கி இருப்பானா என்ற கவலையோடு பயணிக்கத் துவங்கி இருப்பாய். உன் கவலைகள் வீணாக வேண்டாம். நான் உறங்கச் செல்கிறேன்.

Monday, July 13, 2009

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்

கவிஞர் மயூரா ரத்தினசாமி என் முதுகிற்குப் பின்னால்தான் இருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏர்வாடியில் இருந்து ஹரிகிருஷ்ணன் வரவேண்டி இருந்திருக்கிறது. என் அறையிலிருந்து பத்து கட்டிடங்கள் தாண்டி மயூரா ரத்தினசாமியின் அச்சகம் இருக்கிறது. இத்தனை நாள் தெரியாது போனது துரதிர்ஷ்டமே. அவரது ‘நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்’ தொகுப்பினை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசனின் இயக்குனர் திரு.ஸ்ரீதரன் ஒரு தமிழர் என்று தொடந்து உள்ளூர் பத்திரிகைகள் எழுதி வருவது எதனால் என்று தெரியவில்லை. அவர் கேளராவின் கருகாபுத்தூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயரே ‘இலத்துவலப்பில் ஸ்ரீதரன்’ என்பதுதான்.

***

அப்துல்லாவை அழைத்தால் ‘என்ன பாடுறது...’ பாடலை வெல்கம் ட்யூனாக வைத்திருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்பிரவேசம் தெரிந்தவர்களுக்கு அந்த வெல்கம் ட்யூனின் மெல்லிய நகைச்சுவை புரியும். அவர் அடுத்தடுத்து மாற்றிக்கொள்ள என் சார்பில் சில பாடல்களை சிபாரிசு செய்கிறேன்...
பாட்டுப் பாடவா பாட்டுக் கேட்கவா..
பாட்டு ஒண்ணு நா பாடட்டுமா...
பாட்டாலே புத்தி சொன்னா...
பாடவா என் பாடலை...
நான் பாடும் பாடல்...
பாடும்போது நான் தென்றல் காற்று...
என்னைப் பாடச் சொல்லாதே...
பாடறியேன் படிப்பறியேன்...
ரசிகமகா ஜனங்களும் பாட்டாய் துவங்கும் பாடல்களை அவருக்காக சிபாரிசு செய்யலாம்.

***

சுயமுன்னேற்றப் பயிலரங்குகளில் அமர ஒருபோதும் விரும்புபவனல்ல நான். ஆனாலும், தொடர்ந்து பல பயிலரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறேன். ஏவனாவது ஒரு அங்கி அணிந்த மந்திரவாதி, கோல் செட்டிங், இண்டிஜூவல் எஃபெக்டிவ்னஸ் என்று என்னை சாவடிக்கிறான்.

சமீபத்தில் ஒரு பயிலரங்கில் வினாத்தாள்கள் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள்...

பெர்மணண்ட் கோல் – மனிதனாக வாழ்வது

புரொபஷனல் கோல் – மனிதனாக வாழ்வது

சோஷியல் கோல் – மனிதனாக வாழ்வது

ஸ்பிரிட்ஜூவல் கோல் – கடவுளை மனிதர்களுக்காக செயலாற்ற வைப்பது – என்று நிரப்பிக் கொடுத்தேன்.

***

நான் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் கல்யாணம் என்று சங்கல்பம் செய்திருந்த நண்பர் அமர்நாத்தின் திருமணம் கூடுவாஞ்சேரியில் நிகழ்ந்தது. ஒருநாள் மின்னல் பயணமாக ஞாயிறன்று சென்னை வந்து திரும்பினேன். கன்னட பிராமண முறைப்படி நிகழ்ந்த அத்திருமணத்தில் மணமகளின் தலையலங்காரத்தில் முன் நெற்றியின் இருபுறமும் எலுமிச்சைப் பழங்கள் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. பார்க்க பெரிய மனுஷனாய் இருக்கிறானேயென்று பக்கத்தில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் விளக்கம் கேட்டேன்.
“ஹி...ஹி...கேரா இருந்தா... புளிஞ்சு குடிக்கத்தான்”
இவனெல்லாம் கல்யாணத்துக்கு வரலன்னு... சரி விடுங்க.

Saturday, July 11, 2009

அருந்தமிழர் குடியிருப்பு, அண்ணா நகர்


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வீரபாண்டியன். அவரது தந்தையோ தலையில் பாத்திரங்களைச் சுமந்து, வீதி வீதியாய்த் திரிந்து விற்கிற ஏழைக் குடியானவர். வறுமை பிடுங்கித் திங்கும் வாழ்க்கை. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு படிப்பதைத் தவிர்த்து ஏராளமான கடமைகள் இருந்தன. துப்புரவுப் பணிகளைச் செய்வது, புரோட்டா கடைகளில் வேலை பார்ப்பது வரை எண்ணற்ற சிறு சிறு வேலைகளைச் செய்துதான் பள்ளிப்படிப்பைத் தாண்டியாக வேண்டி இருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 963 மதிப்பெண்களும், புவியியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்றார் வீரபாண்டியன். வீரபாண்டியின் வறிய நிலையைக் கேள்வியுற்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவரது கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார். கூடுதலாக, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கல்வி உதவித் தொகையாகவும் வழங்கினார். அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தியாக வீரபாண்டியன் அடிபட்டார். தன்னைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு "ஐ.ஏ.எஸ்" ஆவதே என் லட்சியம் என்றார். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் ஊடகங்களுக்கு முன் "மருத்துவம் படித்து மக்கள் சேவை ஆற்றுவேன்" என்கிற ரீதியில் சூளுரைப்பது வழமைதானே...?!

லயோலாவில் பி.ஏ - சோசியாலஜி வகுப்பில் சேர்ந்த வீரபாண்டியனுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது ஆங்கிலம். மாநகராட்சி மாணவன் ஆங்கிலம் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். கல்லூரிக் காலம் முழுவதும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதிலும், ஆங்கிலப் புலமை பெறுவதிலும் முனைப்பாக இருந்தார் வீரபாண்டியன். கல்லூரிப் படிப்பை முடித்து அரசு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். அகாடமியில் படித்துக்கொண்டிருக்கும்போதே வேறு பல இடங்களில் பகுதி நேரமாக வகுப்புகள் எடுக்கவும் செய்தார். என்ன செய்வது வயிற்றையும் கழுவியாக வேண்டுமில்லையா?!

மூன்று முறை முதன்மைத் தேர்வு எழுதி தோல்வி! இரண்டு தடவை நேர்காணல் வரை சென்று தோல்வி! வேறு யாராவது இருந்தால், இருக்கிற பிரச்சனைக்கு ஏதாவது பேங்க் எக்ஸாம் எழுதி கிளார்க் ஆகியிருப்பார்கள். முடிந்தவரை முயற்சிப்பதா முயற்சி?! எடுத்த காரியத்தை முடிக்கும் வரை முயற்சிப்பதல்லவா முயற்சி. இதோ ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து, பயிற்சிக்காக இமாச்சலப் பிரதேசத்திற்கு ரயில் ஏறிக்கொண்டிருக்கிறார் வீரபாண்டி!

மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயம் நிறைவேறும் என்று அக்னிச் சிறகுகளில் படித்திருக்கிறேன். ஆசை மட்டும் இருந்தால் ஆச்சா?! மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சாரென அயராத ஒன்பது வருட உழைப்பு நிறைவேற்றி வைத்திருக்கிறது. தக்க சமயத்தில் அவருக்குப் பொருளுதவி செய்த தமிழக முதல்வருக்கும், தன் மகனின் கனவைக் கலைக்காத பெற்றோருக்கும், அவருக்கு சிறு சிறு பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கும், தன் மீது நம்பிக்கையளித்தவர்களுக்கு வெற்றியைப் பரிசளித்த வீரபாண்டியனுக்கும் அழுத்தமான பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன். சற்றே தாமதமாக...

Sunday, July 5, 2009

ராயல் சல்யூட்!


நாடோடிகள் பார்க்க பெரும் ஆவல்! காரணம் சசிகுமாரோ, சமுத்திரக்கனியோ அல்ல. அபிநயா! வாய் பேச முடியாத அந்த தேவதையின் முதல் படம். படத்தைப் பார்த்த எவருக்கும் அபிநயா வாய் பேச முடியாதவர் என்ற சந்தேகம் வர கடுகளவும் வாய்ப்பில்லை. தேர்ந்த இயக்கத்திற்கும், திறமையான நடிப்பிற்கும் ஒரு ராயல் சல்யூட்!

தாத்தா பெயர் தெரியாத மகள், பாட்டன் பெயர் தெரியாத தகப்பன், பூட்டன் பெயர் தெரியாத பாட்டி... வேர்களைத் தேடும் கதாநாயகன் தன் பூட்டன் பெயர் ரங்கா என்றும் அவர் பர்மாவிலிருந்து வந்தவர் என்று சொல்லும்போது தியேட்டர் அதிர்கிறது. படத்தின் துவக்க காட்சியிலே என்னுடைய ஆதார பிரச்சாரங்களுள் ஒன்றான 'குடும்ப வரலாறு அறிதல்' குறித்த அருமையான, அழுத்தமான பதிவு இருந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியளித்தது. மீண்டும் ஒரு ராயல் சல்யூட்!

மத்திம வயதைக் கடந்த எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஒரு காதல் ஜோடிக்காவது உதவி செய்த அனுபவம் இருக்கும். பேயோட்டம் ஓடி, பேருந்தை மறித்து, புதுமண தம்பதிகளை பஸ் ஏற்றி, அடுத்த நொடியிலே தங்கச் சங்கிலி, கைவசம் இருக்கிற பணமெல்லாம் கொடுத்து அப்பாடா என பெருமூச்செறியும் காட்சியில் கண்ணீர் துளிர்த்தது. சசிகுமாரின் யதார்த்த நடிப்பிற்கு ஒரு ராயல் சல்யூட்!

சின்னமணி கதாபாத்திரம் ராமநாதபுரம் வள்ளலை மனதில் வைத்துப் பின்னப்பட்டது போலத் தோன்றுகிறது. சிறுபத்திரிகைகளில் 'பிம்ப அரசியல்' என்று சிக்கல் பண்ணுகிற சமாச்சாரத்தை எத்தனை கேலி செய்திருக்கிறார்கள்?! வெடிச்சிரிப்பு காட்சிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!

மிஷ்கின் கூட்டணி இல்லாமலும் ஜெயக்கொடி நாட்டமுடியும் என நிரூபணம் செய்திருக்கிறார் இசையமைப்பாளர். 'சம்போ சிவ சம்போ' நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது. படத்திற்கு ஒரு குத்துப்பாட்டு எனும் டெம்ப்ளேட்டில் இருந்து சீக்கிரம் தப்பிக்க ஐநாக்ஸ் அய்யனார் அருள் புரிய வேண்டும். பின்னணி இசை பலரும் சொல்வது போல ஏ க்ளாஸ்! அதற்கும் ஒரு ராயல் சல்யூட்!

கோவிலில் பார்த்து தகவல் சொன்னதும் "வாம்மா மின்னல்" மாதிரி பட்னு கிளம்பும் பெண்ணை இப்படியா கையை, காலை இழந்து கடத்துவது?! அரும்பாடுபட்டு சேர்த்து வைத்தார்கள் என்கிற ஓரே காரணத்திற்காக இரண்டு பேரும் பிடிக்கவில்லையென்றாலும் கூட வாழ்ந்தேதான் தீரவேண்டுமா?! ஒரு காதில் அடிபட்ட பரணிக்கு ஏன் இரண்டு காதிலும் பஞ்சை வைத்து அடைக்கிறார்கள்?! இருதரப்பு அரசியல் அழுத்தமும் இருக்கிற குற்றவாளிகளை காவல்துறை இத்தனைக் கண்ணியமாகவா விசாரிக்கும்?! என்பது மாதிரியான எனது முந்திரிக்கொட்டை கேள்விகளைத் திரைக்கதையின் விறுவிறுப்பும், பரபரப்பும் முழுங்கித் தின்றுவிடுகிறது. ராயல் சல்யூட் பாலோஸ்...!

சசிக்குமாரின் தனிப்பட்ட நட்பினால் ஒருத்தி காதலனை இழக்கிறாள், ஒருவன் காலை இழக்கிறான், மற்றொருவன் கேட்கும் திறனை இழக்கிறான், பாட்டி உயிரை இழக்கிறாள், அனைவரது பெற்றோர்களும் நிம்மதியை இழக்கிறார்கள், காவல்துறைக்கும் அடியாட்களுக்கும் அவதி....கூடா ஒழுக்கம் கேடாய் முடியும் என்பதுதான் படத்தின் சப்-டெக்ஸ்டாக எனக்குப் படுகிறது.

எந்த படத்தையும் திருட்டு விசிடியில் மட்டுமே பார்க்கும் என் நண்பரொருவர் 'நாடோடிகள்' கிடைக்கவில்லையென அங்கலாய்த்தார். என்னய்யா காரணம் என்றால், "நல்ல படங்களை தியேட்டரில் போய் பாருங்க சார்" அப்படின்னு ரெகுலர் சப்ளையர் சொல்லிட்டானாம். கடுமையான சட்டங்களால் ஒருபோதும் திருட்டு விசிடியைத் தடுக்க முடியாது. நல்ல படங்கள் மட்டுமே அதைச் செய்யும். சசிகுமார், சமுத்திரக்கனி போன்ற நல்லசினிமாவின் நண்பர்கள் அதைச் சாதிப்பார்கள்

Monday, June 29, 2009

வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்

துணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.

ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும் எடுக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஷயத்தைக் கதையாக்கி வெற்றியும் பெற ஓரே வழி யதார்த்தத்தின் வழி நிற்பதுதான் என்பதை சமீபத்திய படங்கள் தொடர்ந்து நிரூபணம் செய்து வந்தாலும் அனந்தநாராயணன் போன்றவர்கள் அதை எப்படி கோட்டை விடுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

நேர்த்தியான திரைக்கதையோடும், யதார்த்தத்திற்கான உழைப்போடும் எடுத்திருக்க வேண்டிய படம். திரைக்கதை ஓட்டையினாலும், கிண்டர்கார்டன் நடிப்பினாலும் சிக்கல் பண்ணிவிட்டார்கள். அஜயன்பாலா மாதிரியான ஜாம்பவான்கள் யூனிட்டில் இருந்திருக்கிறார்கள். ஒருதடவை ஸ்க்ரிப்டை காட்டியிருக்கலாம்.

இளையராஜா தன் தோல்வியை பகிரங்கமாக ஓப்புக்கொண்டிருக்கிறார். அவரது காலம் மெள்ள முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் பின்னூட்டத்தில் பக்தமகாஜனங்கள் அம்முவார்கள். அதற்காக சொல்லாமல் இருக்க முடியுமா?! ‘கூட வருவீயோ...’ எனும் கொடுமைக்கார பாடல் காட்சியில் ‘ஏம்மா...கூடத்தான் கொஞ்சம் போயேன்...எழவு ஏழரையைக் கொடுக்கிறானே...’ என முன்சீட்டில் முணுமுணுப்புகள் எழுந்தது. பாடல் காட்சிகளில் லேடீஸ் எழுந்து வெளியே போவதை முதன் முதலில் இந்தப் படத்தில்தான் கண்டேன். ‘என்னடா பாண்டியை...’ மட்டும் மூக்கால் பாடி நிமிர்த்தி இருக்கிறார் இசைஞானி!

அகில் இரண்டு படங்களை வெற்றிகரமாக முடித்தும் இன்னும் நடிக்கச் சிரமப்படுகிறார். கதாநாயகி ‘சைந்தவியை’ அவ்வப்போது நினைவுபடுத்துகிறார். அயோக்கிய கதாநாயகன்களைத் திருத்துவதற்காக நாயகிமார்கள் நாளது தேதிவரை பிரயோகித்து வந்த அறிவுரைகளனைத்தையும் பேசி...பேசி... சாகிறார். சாகடிக்கிறார்.

குழந்தைகளை வைத்துக்கொண்டு போடும் ‘கண்ணப்பநாயனார்’ நாடகக் காட்சிகள் இயக்குனரின் பேட்டை எதுவென்பதைக் காட்டுகிறது. நகைச்சுவை அந்தக் காட்சியோடு தேங்கிவிடுவது படத்திற்குப் பெரிய பலவீனம்.

செகண்ட் ஹீரோயின் மல்லூ வீடியோவில் வரும் முதிர்கன்னியைப் போல இருக்கிறார். கடற்கரையில் அவரைப் புரட்டி தொப்புளை கடல் மண்ணால் அடைத்து...உவ்வேக்...

அஜயன் பாலாவிற்கு நல்ல பாத்திரம். தன்மையாக நடித்திருக்கிறார். அவர் போடும் குத்தாட்டத்தைப் புன்னகையோடு ரசிக்க முடிகிறது. அவருக்காகவேனும் ஒருவாட்டி பார்க்கலாம்.

வால்மீகி – அனுபவக்குறை!