Friday, June 29, 2007

கோவையில் அக்ரி எக்ஸ்போ 2007

கோவை சுகுணா கல்யாண மஹாலில் அக்ரி எக்ஸ்போ-07 எனும் பிரம்மாண்ட விவசாயக் கண்காட்சி இன்று (29-06-07) முதல் நான்கு தினங்கள் நடைபெற இருக்கிறது. பூச்சிமருந்துகள், உரங்கள், விதைகள், விவசாய கருவிகள், பண்ணை கருவிகள் உற்பத்தியாளர்களின் எண்ணற்ற ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளது. இன்று காலை முதல் கோவை, ஈரோடு வட்டார விவசாயிகள் படையெடுத்த வண்ணம் இருக்கும் இக்கண்காட்சியில் ஸ்டால் எண் டி-44ல் பசுமை விகடன் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய இதழ்கள் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Thursday, June 28, 2007

நெய்வேலி புத்தகக் கண்காட்சி


பத்தாம் ஆண்டு நெய்வேலி புத்தகக்கண்காட்சி வரும் ஜூலை 7ம்தேதி முதல் துவங்க இருக்கிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்கள் ஸ்டால்களை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரபல எழுத்தாளுமைகள் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையிடல், மாணவர்களுக்கான போட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் என ஏற்பாடுகள் படு தீவிரமாக நடந்துவருகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் விற்பனை சாதனை படைத்துவரும் விகடன் பிரசுரம், நெய்வேலி புத்தகக்கண்காட்சியை ஓட்டி 'தில்லானாமோகனாம்பாள்' புகழ் கொத்தமங்கலம் சுப்புவின் சில நூல்களை வெளியிட தீர்மானித்துள்ளது.

Wednesday, June 27, 2007

சத்தம் போடாமல் கேளுங்கள்

"அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளித் தூக்கும்போது பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்" எனத் தவிலும், நாகஸ்வரமும் பின்னிப்பெடல் எடுக்க சங்கர் மகாதேவன் பாடும் சத்தம் போடாதே படப்பாடலை கேட்க நேர்ந்தது. " எந்த நேரம் ஓயாத அழுகை / ஏனிந்த முட்டிக்கால் தொழுகை / எப்போதும் இவன் மீது பால் வாசனை / எந்த மொழியில் சிந்திக்கும் இவன் யோசனை / எந்த நாட்டை பிடித்துவிட்டான் / இப்படியோர் அட்டினக்கால் தோரணை /- திரை இசைப்பாடல்களில் நா.முத்துக்குமார் படைத்துவரும் கவித்துவவரிகள் அசத்துகிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் இந்த வலைதளத்திலிருந்து எளிதாக டவுண்லோடு செய்யமுடிகிறது. கேட்டுத்தான் பாருங்களேன்!

Tuesday, June 26, 2007

பெரியாரின் தோல்விக்கு யார் காரணம்?

முதலில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.கவினரும் பாருங்கள் என்றார்கள். பின் அரசு அலுவலர்களிடம் டிக்கெட்டை கொடுத்து விற்றாக வேண்டும் என்றார்கள். இப்போது பள்ளிமாணவர்கள் பார்த்துவிட்டு கட்டுரை எழுத வேண்டும் என பரிசெல்லாம் அறிவித்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான விதைகளை தூவிய அற்புத தலைவர் தந்தை பெரியார். அவரது வரலாற்றை ஞானராஜசேகரன் திரைப்படமாக எடுக்கிறார் என்றபோது நான் மகிழ்ந்தேன். காரணம் ஆளுமைகளின் வாழ்வை படம்பிடிக்கும்போது அவதார புருஷர்களாக மட்டுமே காட்டாமல் அவர்களின் தனிமனித பலவீனங்களோடும் காட்சிப்படுத்தும் நேர்மையை அவரது பாரதியில் நான் கண்டிருக்கிறேன். அத்தனை கோடி தமிழர்களின் மனதிலும் ஒவ்வொரு விதமான பாரதி இருக்கிறான். அத்தனைபேரின் மனப்பிம்பத்தையும் ஈடுகட்டும் பாரதியை எடுப்பதில் இருந்த சிக்கல்களை லாவகமாக கையாண்ட திறமையான இயக்குநர் அவர். திரைப்படங்கள் எடுப்பதற்கு முன் அதற்கு தேவையான உழைப்புகளுடன் களமிறங்குபவர் என்பதால் பெரியாரும் பெருவெற்றி பெரும் என்றுதான் நிணைத்திருந்தேன். ஆனால் அவரது முந்தைய முயற்சிகளைப் போலவே பெரியாரும் ஒரு பிரமாண்ட தோல்வியை தழுவியதன் காரணம் அதற்கு பூசப்பட்ட திராவிட சாயம்தான். படத்திற்கு கலைஞர் அரசு பெருந்தொகையை அளித்ததும், அதனைத் தொடர்ந்த பெரியாரின் பிள்ளைகளின் படம் குறித்த முழக்கங்களும், போஸ்டர்களும் சுத்தமான தி.க முத்திரையை குத்திவிட்டது. பெரியார் என்றாலே கடவுள் மறுப்புதான் என்ற போதிலும் பரவலாக வெளித் தெரியாத பெரியாரின் ஏனைய முகங்களை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இருந்தது பெரியார் திரைப்படம். ஆனாலும் திராவிட கழகத்தினர் அதன்மேல் செலுத்திய ஆர்வமும் ஈடுபாடும் மிஸ்டர். பொது ஜனத்தை படத்தை பார்க்க விடாமல் செய்துவிட்டது. ஒரு இலக்கிய சந்திப்பில் ஞானராஜசேகரன் ஆக்ரோஷமாய் கேட்டார் “நான் ஜானகிராமனின் மோகமுள்ளை படமாக்கினேன். படத்தில் நடித்தவர்களுக்கு விருது கிடைத்தது. படம் ஓடவில்லை. அடுத்து நான் எடுத்த பாரதி பலத்த பாராட்டுகளைப் பெற்றது என்றபோதும் மொத்த தமிழ்நாடே அதை சன் டி.வியில்தான் பார்த்தது. இப்போ பெரியார். நல்ல சினிமா எடுக்கவேண்டும் என நிணைக்கும் என் போன்றவர்கள் கோடம்பாக்கம் தெருக்களில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா?”. இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. உங்களிடம்..?

Saturday, June 23, 2007

அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?

1. அவர் என்ன சொன்னாலும் கேட்க, செயல்படுத்த ஆர்வமுள்ள குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவாக கூறியது கூறலாகத் தொடந்து ஓரே மாதிரியான "கனவு காணுங்கள்" பிரச்சாரம்.
2. சமூகத்தில் பெரிய அத்துமீறல்கள் நடக்கும்போது நமக்கு ஏன் வம்பு என வாயை மூடிக்கொண்டிருப்பது... அது தமிழ்நாட்டில் நிகழும் 'மதுரை வன்முறையானாலும் சரி' வேறு மாநிலங்களில் நிகழும் மதக்கலவரமாக இருந்தாலும் சரி.
3. 'காந்திஜியின் எளிமை செலவினமிக்கது' என்று ஒருமுறை சரோஜினி நாயுடு சொன்னதுபோல கலாமின் எளிமையும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு முறை கலாமின் வருகைக்கு ஹெலிபேடு அமைக்க பல மரங்கள் என் கண் முன்னால் வெட்டப்பட்டபோது மனசு துடித்தது.
4. நமக்கென் வம்பு என முகமது அப்சல் விவகாரத்தில் இன்றுவரை ஒரு முடிவு எடுக்காமல் இருப்பது. ஒன்று தூக்கில் போட சொல்லுங்கள், இல்லை மன்னித்து விடுங்கள் இரண்டுமில்லாமல் அமைதியாக இருந்தால் என்ன சார் கணக்கு?
5. அரசியல்வாதிகள் அனைவரிடமும் நாகரீக போக்கை கடைபிடித்தவர். எவரோடும் உரசல் இல்லை என புகழ்கிறார்கள். அப்படி ஒருத்தர் ஐந்தாண்டுகள் காலம் தள்ளியிருப்பது ஒருவகை வெங்காய தனம். மோதி மிதித்திருக்க வேண்டும், தவறுகளை, ஊழல்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். விமர்சித்திருக்க வேண்டும்.

ஆசிப் மீரான் வீட்டருகே காண்டா மிருகம்

சு.கி. ஜெயகரன், இவர் ஒரு மண்ணியல் நிபுணர். சாத்தான்குளத்தின் காராமணி என்ற ஆற்றின் கரையில் மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, களிமண் படிவத்திலிருந்து ஒரு பெரிய எலும்புக்கூடு இவரிடம் அகப்பட்டது. அரை மீட்டர் நீளம் கொண்ட அந்த மண்டை ஓட்டு எலும்பை ஆய்வுகளுக்குட்படுத்தியதில் ஆச்சர்யமூட்டும் தகவல்கள் கிடைத்தன. பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகத்தின் எலும்பு அது. அந்த எலும்பின் அளவுகளை வைத்து கணிக்கும்போது அந்த காண்டாமிருகம் கிட்டத்தட்ட ஒரு யானையின் அளவிற்கு பெரிதாக இருந்திருக்க வேண்டும் எனக் கணித்திருக்கின்றனர் ஆய்வாளர்கள். தற்போது அந்த எலும்பு சென்னை அருங்காட்சியகத்தில் புவியியல் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. "உலகம் ஒரு காலத்தில் ஹோல்சேல் காடு, நாமெல்லாம் அந்தக் காட்டை திருத்தி அதன் மேல் வசதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம்"னு என் தந்தை அடிக்கடி சொல்வார். இப்ப விஷயம் அதுவல்ல சாத்தான்குளம்கிறது சாதாரண காடு இல்லை. காண்டாமிருகம் மாதிரி படா, படா விலங்குகள் உலவுன காடு. அந்த காட்டின் டார்ஜான்கள்தான் நானும் ஆசிப் மீரானும்! சாக்கிரதை......

Wednesday, June 20, 2007

மேலதிகாரியின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வேண்டுமா?

ஒரு சிறுகதை எழுதினாலும் எழுதினேன். என்னை நடுரோட்டில் நிற்க வைத்து பாண்டை அவிழ்க்க வேண்டும் என்றெல்லாம் பதிவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களது நீண்டநாள் பிரச்சனையான 'மேனேஜர் டார்ச்சருக்கு' ஒரு தீர்வு சொன்னால் மன்னித்து விடுவார்கள் என இப்பதிவை எழுதுகிறேன்.

1. பணத்திற்காக நீதான் இந்த வேலையை தேர்ந்தெடுத்தாய். உன்னுடைய சம்பளத்தை அவர்கள் தவறாமல் கொடுத்து விடுகிறார்கள். ஓ இவர்கள் என்னை அடிமை போல் நடத்துகிறார்கள் என ஏன் புலம்புகிறாய்?
2. சிறிய விஷயங்களையெல்லாம் ஏன் பெரிது படுத்துகிறாய்? யாரும் உன்னை அடிமைப்படுத்தவில்லை. இப்போதைய உனது சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் அதற்கு வேறு யாரையும் குறை கூறாதே.
3. நீ அவர்களின் கீழ் வேலை செய்வதும் செய்யாததும் ஒரு பொருட்டு அல்ல. உன்னை விட்டால் அந்த வேலையை செய்ய நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
4. முதலில் உனக்கு நீ நல்லவனாக இரு. அப்போது உலகமே உனக்கு நல்லதாக தெரியும்.
5. பிறரிடம் குற்றம் காணும் பழக்கத்தை விட்டுவிடு. நீ வெறுப்பவர்கள் எல்லாம் படிப்படியாக உன்னை ஏற்றுக்கொள்வதை நீ காண்பாய்.

மேற்படி ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவதில் உதவியாக இருந்தவர் திரு. சுவாமி. விவேகானந்தர், மனிதவள மேம்பாட்டாளர்.

Monday, June 18, 2007

ஒரு ஜட்டியின் கதை

இந்த தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருந்த சிறுகதை என்வரையில் மிகச் சிறந்த படைப்புதான். ஆனால், நலம் நாடும் நண்பர்கள் பலபேரும் எனது மரியாதைக்கு அது உகந்ததாக இல்லை என்பதால், பல்வேறு விவாதங்களுக்குப்பின் இதை அப்புறப்படுத்திவிட்டேன். எந்த பாலுறுப்பையும் குறிப்பிடாமல், ஆபாச வார்த்தைகளின்றி செய்யப்பட்ட ஒரு படைப்பு பிறர் மனதை புண்படுத்துகிறது என்பதனால் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை படிக்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்துங்கள். தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.

மிக்க அன்புடன்,

செல்வேந்திரன்.

Sunday, June 17, 2007

புதிய தொழில் தொடங்குகிறார் ஜெயலலிதா

ட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, ஹைதரபாத் திராட்சை தோட்டத்திற்கும் தொந்தரவு, கொடநாடு குடைச்சல் என அடுத்தடுத்த தோல்விகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க புதிய தொழில் முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா. தற்போது அவரது தோழியுடன் சேர்ந்து ஒரு டிராவல் ஏஜென்சியை துவக்கியுள்ளார். பல்வேறு பேக்கேஜ் டூர்களுக்கு அழைத்து செல்ல தீர்மானித்துள்ள அவர்கள் முதல் கட்டமாக ஜூனியர் விகடன் மற்றும் தினத்தந்தி நிருபர்களை கொடநாடு எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். டிராவல் ஏஜென்சியின் பெயர் "ஜெசிகலா டிராவல்ஸ்" . பேரைக் கேட்டா ச்சும்மா அதிருதில்ல...

Thursday, June 14, 2007

நிஜம் நிழலாகிறது

"சேரி திரளும் அன்று நாடு புரளும்" என்ற புரட்சி கோஷத்தோடு தமிழக அரசியல் வானில் திருமாவளவன் அடியெடுத்து வைத்தபோது, ஆஹா ஒடுக்கப்பட்ட ஜனங்களுக்காக ஒரு தலைவன் கண்முன்னே உருவாகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில்தான் அவரது செயல்பாடுகளும் இருந்தன. விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் எண்ணற்ற தலித் இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடும் குணமிக்கவர்களாக இருந்தனர். "அடங்க மறு, அத்து மீறு" "வாள் கைமாறினால்தான் உன் வாழ்க்கை மாறும்" என உணர்ச்சி பிழம்பாக பொதுக்கூட்டங்களில் திருமாவின் முழக்கத்தை கேட்கும்போது தமிழ்நாட்டின் ஓடுக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் நபராக இவர்கள் இருப்பார்கள் என்றுதான் தோன்றியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திருமா எம்.எல்.ஏ ஆனபோது, சட்டமன்றத்திற்குள் சேரியின் அவலங்களை கட்டவிழ்ப்பார் என நம்பினர் பலர்.

திராவிடக் கட்சிகள் கூட்டணிக்குள் சிறுத்தைகளை வளைக்க காய்களை நகர்த்த ஆரம்பித்தபோது, அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக போகிறார் என்ற நிலையில், சினிமாக்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று களம் மாறினார். கடைநிலை மக்களின் பிரதிநிதியின் இந்த திடீர் மாற்றத்தால் நல்ல விளம்பர வெளிச்சம் கிடைத்ததேயன்றி மக்களுக்கு எவ்வித பயனுமில்லை. அதற்கடுத்து பா.ம.கவினருடன் கைகோர்த்து எடுத்த தமிழ்க் காவலன் அவதாரம், குஷ்பு கற்பு சர்ச்சை எல்லாம் அவரது பயணத்தை திசை திருப்பும் காரணிகளாகத்தான் இருந்தது. இதற்கெல்லாம் மணிமகுடமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் திருமா. முதலில் அன்புத்தோழி, இப்போது கலகம் என்றொரு படம். கலகம் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்க தமிழின் முண்ணனி நடிகைகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து திருமா விகடனில் அளித்துள்ள பேட்டியில் " ஓரே ஆளு நூறு பேரை பந்தாடுற பாணி படம் இல்லை. பார்வையிலேயே பதற வைப்பேன். கட்சி ஆரம்பிச்ச இத்தனை வருஷங்களில் எதிர்பார்த்த வளர்ச்சி அடையலங்கிறது வருத்தமான விஷயம்தான். தொண்டர்கள் சோர்ந்து போகாம இருக்க ஏதாச்சும் செய்யனுமே. என் கருத்துக்களை மக்களிடன் கொண்டு செல்ல சினிமா ஒரு நல்ல ஊடகமாக இருக்கும்" என்கிறவர் 'நம்ம படம் அதிரடியா வெடிக்கும்; ஆதரவா அணைக்கும்' என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கிறார் இன்றைய வழக்கமான ஹீரோக்களின் வாய்ச்சவடால் பேட்டி போல!

சினிமாவில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம், அதற்கு இன்றைய கதாநாயகர்களே கண்முன் நிற்கும் உதாரணம். ஆனால் நிஜவாழ்வில் ஹீரோ ஆவது கடினம். ஒருபக்கம் எம்.எல்.ஏவும் கவிஞருமான ரவிக்குமார் ஆளுங்கட்சியினரோடு நல்ல உறவு கொண்டு இலங்கை அகதிகள் பிரச்சனை முதல் எத்தனையோ வெகுஜன பிரச்சனைகளை கலைஞரின் பார்வைக்கு கொண்டு சென்று தீர்வு காண்கிறார். ஆனால் கட்சியை வழிநடத்தும் திருமாவோ பன்ஞ் டயலாக், டூயட், ஆக்க்ஷன், பேட்டி என தடம் மாறுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக வீதிக்கு வந்து போராடுங்கள் அதுவே தொண்டர்களை உற்சாகப்படுத்தும். தொண்டர்களை ரசிகர்களாக மாற்றினால் அழுகின்ற பிள்ளைக்கு கிடைக்கவேண்டிய பால் கட்-அவுட்களுக்கு அபிஷேகமாகிவிடும்!


Wednesday, June 13, 2007

குரங்கு புணர்ச்சி

தொடர்மழை ஓய்ந்து கொஞ்சம் வெயிலடிக்க ஆரம்பித்திருந்த ஒரு நாளில் ஊட்டிக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். நான்கைந்து நாட்களாய் இருப்பிடம் விட்டு தலைகாட்ட முடியாத குரங்குகள் பசியும், வெயிலும் தேடி ரோட்டோரங்களில் அலைந்து கொண்டிருந்தன. குரங்குகள் எனக்கு பிடிக்கும். சில குரங்குகள் விளையாடிக்கொண்டும், சில குரங்குகள் பேன் பார்த்துக்கொண்டும், சில பிறப்புறுப்பை நோண்டிக்கொண்டும் இருந்தது. பேருந்து ஒரு நிறுத்தத்தில் உணவிற்காக நின்றது. ஓட்டுனர் சாப்பிட்டு வருவதற்குள் கொஞ்சம் காலார நடக்கலாம் என கீழிறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன். ஆச்சர்யம் ஒரு பாறைக்கு பின்னே இரண்டு குரங்குகள் புணர்ந்து கொண்டிருந்தன. கடூர சப்தம் எழுப்பியபடி வரும் கனரக வாகனங்கள், வேடிக்கை பார்க்கும் மானிட கண்கள் குறித்து எந்த சலனமும் இன்றி இயங்கி கொண்டிருந்தன குரங்குகள். எதிர்பாராத இந்தக் காட்சியினால் திகைப்பும், ஆர்வமும் கொண்ட நான் இன்னும் கொஞ்சம் நெருங்கினேன். லேசாக தலையை தூக்கி ஒரு அலட்சிய பார்வை பார்த்த ஆண்குரங்கு (ஆணாகத்தான் இருக்க வேண்டும்) மீண்டும் இயங்க ஆரம்பித்தது.பேருந்து ஓட்டுனர் ஹாரன் சப்தம் எழுப்பினார். ஓடிப்போய் பேருந்தில் இருந்த எனது பயணபையை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். 'தம்பி ஊட்டிக்கு இன்னும் ரொம்ப தூரம் போகனும்' என்றார் கண்டக்டர் கனிவுடன். தெரியும் சார் அடுத்த பஸ்ஸில வர்றேன் என்று கூறிவிட்டு குரங்குகள் புணரும் இடம் நோக்கி நடந்தேன். அங்கே மாடு மேய்க்க வந்த படுகர் இன சிறுவர்கள் அந்த குரங்குகளை கேலி செய்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். ஒருவன் கல்லெடுத்து எறிந்தான். பயந்து பிரிந்த குரங்குகளைப் பார்த்து ஹோவென கூச்சலிட்டார்கள். பொங்கி வந்த ஆத்திரத்தில் நான் சிறுவர்களை திட்டினேன். ஏதோ பாரஸ்ட் ஆபிசர் என நினைத்து பயந்த சிறுவர்கள் சரிவில் குதித்து ஓட ஆரம்பித்தனர்.ஏமாற்றத்துடன் திரும்ப யத்தனித்தபோது, அதே குரங்குகள் சற்று தொலைவில் ஒரு மரத்தின் தாழ்வான கிளையில் ஒரு விசித்திரமான கோணத்தில் புணர்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. சிரித்துக்கொண்டே சாலையின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் அமர்ந்து அவைகளை கவனிக்க ஆரம்பித்தேன். ஆண் குரங்கின் வேகமும், கிளையின் ஆட்டமும் தாங்காமல் தவறி கீழே விழுந்தது பெண் குரங்கு. அது சுதாரித்து எழுவதற்குள் அதன் மீது பாய்ந்தது ஆண் குரங்கு. அது விலக, இது விரட்ட பலவிதமான கலவி விளையாட்டுக்குப் பின் ஒரு வழியாக ஓய்ந்தது ஆண் குரங்கு. நான் ஒரு பிஸ்கட் பாக்கெட்டினை பிரித்து ஒரு பிஸ்கட்டை அந்த இரண்டுக்கும் மத்தியில் வீசினேன். பெண் குரங்கு பாய்ந்து எடுத்தது. அடுத்த பிஸ்கட் ஆண் குரங்கு எடுக்க பெண் குரங்கு அடித்து பிடுங்கியது. நான் ஒவ்வொன்றாக வீச, வீச அவை தங்களுக்குள் மூர்க்கமாக அடித்துக்கொண்டன. "புத்தர் போன்ற பெரிய மேதைகள் எப்படி குரங்கிலிருந்து வந்திருக்க முடியும்?" என்று ஒரு முறை ஜியானி ஜெயில்சிங் கூறியது நிணைவுக்கு வந்தது.

இந்த குரங்குகளைப் போலத்தான் மனிதர்களும். எவ்வளவு அசெளகர்யமான சூழலிலும், வாழ்க்கை நெருக்கடிகளிலும் புணர்வதையும் சண்டையிடுவதையும் நிறுத்துவதேயில்லை. சாலையோரங்களில், கூடாரத்தில், நீர்க்குழாயினுள், பாலத்திற்கடியில், புகைவண்டி கழிப்பறையில், இண்டர்நெட் செண்டர்களில், வைக்கோற் படப்பில், மோட்டார் ரூமில், புதரடியில் என எல்லா இடங்களிலும் புணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். டார்வின்மீதான கேள்விகளும் தீர்க்கப்படாமலே இருந்து கொண்டிருக்கிறது.

Tuesday, June 12, 2007

பெஞ்சமின் ஸஃபானியா

அந்த அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒரு மாணவனிடம் கேட்டார் " கொலம்பஸ் எப்போது அமெரிக்காவை கண்டுபிடித்தார்?". "கொலம்பஸூக்கு முன்பும் அங்கு மக்கள் வசித்தார்கள். ஆக கண்டுபிடிப்பு என்பது என்ன? "என்று பதில் வந்தது. அந்த பதிலுக்காக மாணவன் தண்டிக்கப்பட்டான். அவன் பெயர் பெஞ்சமின் ஸஃபானியா. ஜமைக்காவில் பிறந்த ஸஃபானியா, தன் குடிகார தந்தை தாயை துன்புறுத்துவதை பொறுக்க முடியாமல் அவரைக் குத்தி கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றார். "மக்களை அரசியல் ரீதியாக உலுக்கவும், அவர்களுடைய உரிமைக்காகப் போராடவும் தூண்டுகிற திட்டம்தான் கவிதை" என்ற ஆர்ப்பரிப்போடு வெளிவந்தது ஸஃபானியாவின் கவிதைகள்.

கருப்பு வீடு திரும்புதல்
அந்த நாள்
மோசமான நாள்
மைல் கணக்காய்
நடந்தேன் நான்
நானாக இல்லை நான்
புன்னகை எதையும்
திருப்பித்தர முடியவில்லை
சோர்ந்தேன்
பலவீனம்
பசி
ஆனாலும்
நான் திரும்பி
போகமாட்டேன்
சில நேரங்களில்
ஒரு டாக்ஸி கிடைப்பது சிரமம்
நீங்கள் கருப்பரெனில்!

சுதந்திரம்

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை

ஆனால்
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது!

Monday, June 11, 2007

அந்த ஒரு கோடியை யாரிடம் கொடுக்க வேண்டும்?

பசுமை விகடனில் ரஜினிக்கு கோவணாண்டி கடிதம் எழுதியுள்ளார். அதை தென்றல் 'ரஜினி ரசிகர்களின் அறியாமையை காசாக்கி சம்பாதிக்கிறார்' என்ற குற்றசாட்டுடன் பதிவிட்டுள்ளார். அதைப்படிக்கும்போது அடியேனுக்கு ஏற்படும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு நண்பர் தென்றலுக்கு எழுதியிருக்கிறேன்.

1. காவிரி ஆறும் கைகுத்தல் அரிசியும் - பாடலை எழுத சொன்னவர் - ஷங்கர்; எழுதியவர் - வைரமுத்து; அதற்கான காசு கொடுத்தவர் - சரவணன்; இசை அமைத்தவர் - ரஹ்மான்; வாயசைக்க மட்டும் போவது ரஜினி! - இந்த வரிகளுக்கு ரஜினி மட்டும்தான் பொறுப்பா?

2. நதி நீர் இணைப்பிற்கென்று முறையான அமைப்புகள் ஏதேனும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் நிதிகள் திரட்டுப்பட்டு வருகின்றதா? அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை தென்றலாகிய உங்களிடம் கொடுக்க வேண்டுமா அல்லது கோவணாண்டியிடம் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளவேண்டுமா?

3. "பெற்ற தாயை வீட்டுக்குள்ளே பூட்டி பட்டினி போட்டுட்டு புது அண்ணி ஸ்ரேயாவுக்கு மன்றம்னு" எழுதியிருக்கே அது எங்கன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க..

4. இமய மலைக்கோ, ஆல்ப்ஸ் மலைக்கோ ரஜினி ஓடிப்போனால் உங்களுக்கென்ன? தமிழ்நாட்டில் நடந்துவரும் அரசியல் கூத்துக்கள், குடும்ப சண்டைகளை விட இவரது இமயமலைப் பயணத்தால் தமிழனுக்கு ஆபத்து வந்து சேர்ந்துவிடுமா?

5. "பண்டாரம் வேஷம் கட்டிகிட்டு இமயமலைக்கு ஒடுறத..." ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவனாக தன்னைக் காட்டிக்கொண்டு தமிழகத்தை குடும்பசொத்தாக்குவதை விட இது மேலானதா? கீழானதா?

6. மத்தியில் 13 மந்திரிகள், 40 எம்.பிக்கள் வச்சுருந்தாலும், சுத்தி இருக்கிற கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்கள்கிட்ட பப்பு வேக மாட்டேங்குதே அதுக்கும் ரஜினிதான் காரணமா?

7. ரஜினி நாளைக்கு காலைல ஒரு கோடி ரூபாய் செக் கொடுத்தா... நதிநீர் இணைப்பு வேலையை என்னைக்கு ஆரம்பிப்பிங்க?

8. தொடரட்டும் இந்த பொற்காலம்னு கழுத்துல போர்டு மாட்டிகிட்டு திரிஞ்ச ஐந்து வருஷமும், இப்ப ஆட்சிக்கு வந்த பின்னாடியும் தமிழ்நாட்டில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது, எத்தனை குளங்கள் தூர்வாறப்பட்டுள்ளது. காவிரியை மட்டும் நம்பியுள்ள பகுதிகளில் அதற்கு மாற்று விவசாய வழிமுறைகள் ஏதேனும் புகுத்தப்பட்டுள்ளதா?

9. ஒரு நடிகன் வந்துதான் நதிகளை இணைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் இவர்கள் ஏதற்கு?

10. ரஜினி நடிக்கிறார். மக்கள் ரசிக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்.அது அவரது தொழில். அரசியல்வாதிகளின் பணி மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவது. அதை எப்போது செய்யப்போகிறார்கள்?

நண்பர்களே பதில் சொல்லுங்கள்.

பேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர

'ஹட்ச் அலைபேசி' நிறுவனத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர் நண்பர் மாணிக்கம். பேச்சலரான அவரது மாதக்கடைசி தொலைபேசி அழைப்புகளுக்கு பயப்படாதவர்களே இல்லை. "மச்சான் நீ எங்க இருக்க? ஒரு அர்ஜண்ட். பைவ் ஹண்டரடு ரூபிஸ் வேணும்" எனும் வெற்றிச் செய்தியை ஒவ்வொரு மாதமும் ஓங்கி ஒலிக்கச் செய்பவர். இந்த முறை அவர் பப்பு (அதாங்க பருப்பு) என்னிடம் வேகவில்லை. உறுதியாக மறுத்துவிட்டேன். ஐந்து லகரம் சம்பளம் வாங்கும் மாணிக்கத்திடம் மாதக்கடைசியில் கையேந்தாமல் இருக்க பதினைந்து யோசனைகளை சொன்னேன்.

1. பசி எடுத்தாலோ அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ கம்பெனிக்கு ஆள் தேடாமல் தனியாக போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.

2. மாதம் 5 லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடாதீர்கள். 5*60 = 300 கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் (அது உங்கள் சொந்த வேலையாக இல்லாத பட்சத்தில்) கம்பெனியில் பெட்ரோல் க்ளைம் கேட்டு வாங்குங்கள்.

3. சினிமா, ஷாப்பிங், பொருட்காட்சி, வேறு ஏதேனும் ஷோக்கள் எதுவாயினும் மாதத்திற்கு ஒன்றுதான் எனத் தீர்மானியுங்கள். திராபை படங்களுக்கும் பத்து இருபது பேரை இழுத்துச் செல்லாதீர்கள்.

4. வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம் நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.

5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம் சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.

6. பையில் 200 ரூபாய்க்கு மேல் வைத்து பழகாதீர்கள்.

7. மலிவாக கிடைக்கிறதே என தேவையில்லாததை வாங்காதீர்கள். பிறகு தேவையுள்ளதை வாங்க பணம் இருக்காது.

8. நாய் பழக்கம் வேட்டியை கிழிக்கும் என்பார்கள். பெண்களுடான பழக்கம் பர்ஸை பதம் பார்க்கும். கூடுமானவரை 'கேர்ள் பிரண்டோடு' ஊர் சுற்றுவதை தவிர்க்கவும். முடியாத பட்சம் அவளிடம் ஜபர்தஸ்த் காட்டாமலாவது இருக்க வேண்டும்.

9. சுயமாக முகச்சவரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

10. வண்டி, செல்போன், இரவல் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிருங்கள்.

11. இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். இது பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும்.

12. உங்கள் துணிகளை நீங்களே துவையுங்கள்.

13. கிரெடிட் கார்டு இருந்தால் இரண்டாக வெட்டி எந்த வங்கியில் வாங்கினீர்களோ அந்த வங்கிகே திருப்பி அனுப்புங்கள்.

14. மச்சான் ஒரு சிகரெட் வாங்கிகொடுறா, ஒரு காபி சொல்லு மாதிரி சில்லறை கேஸ்களின் சகவாசத்தை ஒழியுங்கள்.

15. அடிக்கடி எனக்கு போன் செய்யாதீர்கள்.

Friday, June 8, 2007

டிராஃபிக் ராமசாமிக்கு பதவி கொடுங்கள்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிலிருந்து கட்டிடங்களைக் காப்பாற்றும் முயற்சியாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை நியாயமற்றது, ரங்கநாதன் தெரு பணமுதலைகளைக் காப்பாற்ற முயற்சிக்கிறது என பரவலான குற்றசாட்டு எழுந்துள்ளது. நடைபாதை வியாபாரம் செய்து பிழைக்கும் சாமான்யன் 'சரோஜாக்கா சாமாநிகாலோ' என நொடியில் அகற்றப்படுகிறான். ஆனால் ஜனசந்தடிமிக்க வணிக பகுதியில் விதிகள் அலட்சியமாக மீறப்பட்டுள்ளது. சென்னையில் இவர்கள் காப்பாற்றப்பட்டால் தமிழகத்தின் பிற பெருநகரங்களின் விதிமுறைமீறல்களுக்கும் இது ஒரு முன்மாதிரி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

இம்மாதிரி கட்டிடங்களை அவரவர் சொந்த செலவில் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இடித்துவிடவும், இடிப்பதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் விதிமீறல்களுக்கு தக்க தண்டனையும் வழங்கப்படவேண்டும். சுற்றுசூழலுக்கு ஏற்படும் மாசிற்கு ஒவ்வொருவரும் ஆயிரம் மரங்களை நட்டு பராமரிக்கவும் உத்தரவிடுவதுதான் நியாயமான நடவடிக்கை. ப்ரைம் டைமில் பல லட்சம் கொட்டிக்கொடுக்கும் இந்த முதலைகள் தாங்கள் செய்த குற்றங்களுக்காகவும் கொஞ்சம் செலவழிக்கட்டுமே.

வாழ்க்கை நெருக்கடியில், சொந்த வீட்டுக்கனவில் அரும்பாடு பட்டு வீட்டுக்கடன் வாங்கி கட்டிய வீட்டை பறிகொடுக்க வேண்டுமே என பதைபதைப்பில் இருக்கும் நடுத்தரவர்க்கங்கள் பாதிக்கப்படாமல் விதிமுறை மீறல்களுக்கு அபாரதம் மட்டும் வாங்கிகொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு உரிமையாளருக்கு ஒன்றுக்கு மேல் வீடு இருந்தால் கருணை காட்டாமல் இடித்துவிட வேண்டும்.

"அலட்சியம் ஒரு பொது எதிரி" இந்த விதிமீறல்களுக்கு காரணமாய் இருந்த பல்வேறு அதிகாரிகள் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்கிறார்கள். உடனடியாக அவர்கள் சேர்த்த சொத்துக்களை முடக்குவதுடன், பென்ஷன் பணத்தையும் நிறுத்திவிட வேண்டும். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் இது போன்ற உண்மைகளை வெளியுலகத்திற்கு எடுத்து வந்த டிராஃபிக் ராமசாமிக்கு 'சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில்' உயர்பதவி அளிக்கப்படவேண்டும்.

'சட்டம் தன் கடமையை செய்ய சட்டசபை தடையாக இருக்ககூடாது'

Thursday, June 7, 2007

ஆண்டவராகிய ஏசு பாகம் - 2

கோவை சித்தாபுதூரில், அற்புத சுகமளிக்கும் பேரின்ப பெருவிழாக்களை நடத்தி வரும் மதபோதகர் சார்லஸ். மூன்று மாதங்களுக்கு முன் திருச்சியிலிருந்து அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் உடன்பிறந்த தம்பி செல்வகுமார். போன மச்சான் திரும்பி வரலியேன்னு அடிக்கடி போனில் விசாரித்திருக்கிறார் செல்வகுமாரின் மனைவி அனுராதா. அவர் ஊழியத்திற்கு போயிருக்கிறார். உடம்பு சரியில்லை என சார்லஸ் சொல்லி வந்த சால்ஜாப்புகளில் நம்பிக்கை இல்லாமல் தேடி வந்திருக்கிறார் இன்னொரு சகோதரர் ஆன ராஜேந்திரன். கதை இங்கேதான் டாப் கியர் எடுக்கிறது. வந்து பார்த்தவர் வீடு பூட்டியிருக்கிறதே என்று விசாரித்ததில் ஊழியத்திற்கு (அதாங்க அற்புத சுகம்) போயிருக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. ஊர் திரும்பி இருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்தபோதும் வீடு பூட்டியிருக்க அதே பதில் தான் வந்திருக்கிறது. 'ங்கொய்யால அது என்னடா மாசக்கணக்கா ஊழியம். பூட்டை உடைங்கடான்னு' உடைச்சு பார்த்தா உள்ளே ஆண்டவராகிய ஏசுவின் நேரடி மக்கள் தொடர்பாளர்களுள் ஒருவரான சார்லஸ் அவரது மனைவி, குழந்தைகள் எல்லாரும் ஒரு டெட் பாடிய சுத்தி உட்கார்ந்து அல்லேலுயா போட்டுகிட்டு இருந்திருக்காங்க.

டெட் பாடி யாரு? கரெக்ட். தம்பி செல்வகுமார்தான். போலீஸ்காரங்க வந்து நோண்டி நொங்கெடுத்ததில் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளது. ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஏதோ காரணத்திற்காக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார் செல்வகுமார். போதகர் சார்லஸ் தன்னுடைய பிரார்த்தனையால் அவரை உயிர் பிழைக்க வைத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் குடும்பமாய் உட்கார்ந்து குமுறி இருக்கிறார் (அதாங்க ஜெபம்) அறுபது நாட்களாய். பிணம் நாறி விடாமல் இருப்பதற்காக சில மூலிகை எண்ணெய்களை உபயோகித்ததாக சொல்கிறார்கள் (அது என்ன மூலிகைங்க!) இந்த கூத்துக்கு ஹவுஸ் ஓனரும் உடந்தையாக இருக்கிறார். சார்தான் அறுபது நாட்களுக்கும் இந்த காமெடியன்களுக்கும் கதவிடுக்கு வழியாக உணவும், நீரும் வழங்கியவர். வெளிப்பக்கம் வீட்டைப்பூட்டி விட்டு, உள்ளே இறந்தவரை உயிர்த்தெழவைக்க நடந்த முயற்சியில் எனக்கு என்ன வருத்தம்னா? ஒரு வேளை உயிரோட எந்திரிச்சார்னா 'ஆண்டவராகிய ஏசு - பாகம் 2' கிடைச்சுருப்பாரு! கெடுத்துட்டாய்ங்க....

Wednesday, June 6, 2007

எனக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

தற்செயலாக குப்பைகள் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்த போது மகாகவி பாரதியாரின் புகைப்படம் ஒரு கழிவறையில் ஆண்கள் என்று அடையாளப்படுத்த வைக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை அறிந்து மனம் வேதனைப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் கட்டண கழிப்பிடத்தில் அப்படம் தவறுதலாக வைக்கப்பட்டிருந்தால் உடனே அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையாக இந்த தகவலை பாரதியை பெரிதும் நேசிக்கும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். பார்க்கலாம்.

பரிசலோட்டி சொன்ன கதை


அலுவல்காரணமாக கொடிவேரி சென்றிருந்தேன். 'டேம் இருக்கு சார் நல்லாருக்கும்' என்றார் உள்ளூர்காரர் ஒருவர். பார்த்துவிடலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். சாத்தான்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டு, கடவுளர்கள் கடன் மேல் கடன் வாங்கி கட்டி இழைத்தது போன்று இருக்கிறது கொடிவேரி ஊர். இத்தனை அழகிய ஒரு ஊரை நான் கண்டதேயில்லை. ஊர் முழுவதும் வாய்க்கால்களில் நீர் ஓடுகிறது. வாய்க்கால்களின் இருமருங்கிலும் குல்மொஹர் மரங்கள் பூத்துக் குலுங்கி நிற்கிறது. பத்தடிக்கு ஒரு படித்துறை. அதில் உள்ளூர் மக்கள் எதுகுறித்தும் கவலையில்லாமல் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு ஜோடி குல்மொகர் மரத்திற்கு இடையே வசதியாக இருந்த சந்தில் காதல் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் காலைத் தொட்டு ஓடிக்கொண்டிந்தது ஆறு. ஓரு யூரோப்பிய ஓவியம் போல இருந்தது அந்தக் காட்சி. ஒருபக்கம் கரும்பும் மறுபக்கம் மஞ்சளும் விளைந்திருக்கும் வயல்வெளிகளைக் கடந்தால் அணை வருகிறது. பிரம்மாண்டமாய் கண்முன் விரியும் ஜலசமுத்திரம். ஆழம் அதிகமில்லை போலும், சிறுவர்களும் பெரியவர்களும் அதன் மதகில் நின்று குதித்து ஆடிக்கொண்டிருந்தனர். மதகில் வழியும் நீர் பாறைகளின் வழியே வீழ்ந்து ஒரு குட்டி நீர்விழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அதன் கீழே 'சரோஜாக்கா சாமாநிகாலோ' ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள் இளந்தாரிகள். கொடிவேரி அணையில் பரிசல் பயணம் ரொம்பவும் பிரசித்தம். அறுபதுகளை கடந்த ஐந்தாறு பரிசல் ஓட்டிகள் இருந்தார்கள். என் பரிதாப முகத்தை பார்த்து 'என்னா தம்பி பரிசல்ல போலாம் வாரீயா?' என்றது ஒரு அறுபது. நீரின் மேல் கொண்ட பயம் காரணமாக வேண்டாம் என அவசரமாக மறுத்தேன். 'தம்பி பயப்படாதீக.. சின்னதம்பி படத்துல குஷ்பு ஆடுமே அது இங்ஙனதான் எடுத்தாக, இந்த பரிசல்தான் அது' என்று மார்க்கட்டிங்கை ஆரம்பித்தது பெரிசு. சாட்சாத் குஷ்புவே பயணம் செய்த பாரம்பரியம் உள்ள பரிசல் என்பதால் மன உறுதியை வரவழைத்துக்கொண்டு ஏறினேன். அந்த அணைக்கட்டு முழுவதும் இப்போது எங்களிருவரின் வசம் இருப்பது போல இருந்தது. மீன்கள் அவ்வப்போது துள்ளிக்கொண்டிருந்தது.இன்னொரு பரிசலில் இருந்த பருவமங்கைகள் என்னையும் பெருசையும் பார்த்து 'ஓ' போட்டார்கள்.
'...டியாளுங்கோ போடூற ஆட்டத்தைப் பாருங்க ...பரிசல்ல ஆடினா என்னா ஆவும் தெரியுமான்னு ஆரம்பித்தார பெருசு. 'சின்னதம்பி படம்பிடிக்கறப்போ பரிசள்ள ஏறுன குஷில குஷ்பு திடீர்னு எந்திரிச்சி நின்னு ஆட ஆரம்பிச்சது. கால்ல போட்டிருந்த பெருஞ்செருப்பு (ஹைஹீல்ஸ்தான்) னால தடுமாறி தன்னிக்குள்ளாற விழுந்திருச்சு. எல்லாரும் திகைச்சு நின்னப்ப நாந்தான் குதிச்சு அத இழுத்துகிட்டு கரை சேர்ந்தேன். கரைக்கி வந்தப்ப வாசு (டைரக்டர் பி.வாசு) அதோட கன்னத்துல விட்டாரு பாருங்க ஒரு அறை.. இன்னிக்கும் கண்ணு முன்னால நிற்குதுங்க' என்று பெருமை பொங்க சொன்னார். தமிழ் சினிமாவின் பிரத்யேக ரகசியங்களுள் ஒன்றை அறிந்த பெருமிதம் அவருக்கு. இதுவும் ஒரு எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்தான். ஆனால் காலம் கடந்துவிட்டது. குஷ்பு கன்னத்தில் அறைந்த வாசு என்று தலைப்பு வைத்தால் எனது பிளாக்கின் டி.ஆர்.பி ரேட் ஏற ஏதேனும் வழி இருக்கிறதா?

Monday, June 4, 2007

முத்தமிழை விற்றவராம்

அலுவலக நண்பர் ஒருவர் கலைஞரின் தீவிர அபிமானி. கலைஞரின் பிறந்த நாளுக்கு தாம் குடியிருக்கும் பகுதியில் ஒரு ஹோர்டிங் வைக்க இருப்பதாகவும் அதற்கு ஒரு நல்ல கவிதை எழுதி தாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். கொஞ்சம் எழுத தெரிந்தவனாக காட்டிக்கொள்வதில் இருக்கும் பெரிய அவதி. நண்பருக்கு கல்யாணம் நோட்டிஸ் அடிக்கனும் 'கவித' வேணும் என்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் 'பூமாலை கழுத்திலாட, புன்னகை உதட்டிலாட, அடுத்த வருஷம் தொட்டிலாட' கவிதைகளை எழுதும் அளவிற்கு எனக்கு புலமை பத்தாது என எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இவரும் அந்த ரகம். நான் ஒன்றும் பெரிய கவிஞன் அல்ல தவிரவும் எனக்கு கலைஞர் மேல் ஒன்றும் நல்ல அபிப்ராயம் எல்லாம் கிடையாது என எவ்வளோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. நீங்க எழுதினா நல்லத்தான் இருக்கும் எதுனா எளுதி கூடுங்க சார் என அவர் கேட்க,

"உத்தமராம் கலைஞர்
முத்தமிழ் வித்தகராம்
முத்தமிழையும் விற்றவராம்

மும்மனைவி கண்டவன்
முனைப்பான முன்னவன்
தமிழ் நாட்டின் மன்னவன்"

என்று இரண்டு வரிதான் எழுதி இருப்பேன். பேப்பரை பிடுங்கி கடாசி 'ங்கொய்யால' குறிச்சி பக்கம் வந்தன்னா சீவகட்டை பிஞ்சிடும் என கத்திவிட்டு போனார். சீவகட்டை என்பது 'விளக்குமாறு' என்பதை விசாரித்து தெரிந்துகொண்டேன். 'ங்கொய்யால' என்றால்...!

Sunday, June 3, 2007

வெற்றிநடை போடும் விகடன் பிரசுரம்


சென்னை புத்தகக்கண்காட்சியை போலவே, நடந்து முடிந்த கோவை புத்தக கண்காட்சியிலும் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது விகடன் பிரசுரம். ஈர்க்கும் தலைப்புகள், அசத்தும் அட்டைப்படம், தரமான கிளேஸ் பேப்பர்கள், நல்ல மார்க்கெட்டிங் தந்திரங்களோடு புத்தக விற்பனையில் வெற்றி நடை போட்டு வருகிறது விகடன் பிரசுரம். அதன் சமீபத்திய பிரமாண்டமான 'பிரிட்டாணிகா தகவல் களஞ்சியம்' சூடான பக்கோடா போல விற்றுவருகிறது. ஏறக்குறைய தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலும் பிரத்யேக கண்காட்சிகளை நடத்திவரும் விகடன் பிரசுரம், தனது அடுத்தடுத்த முயற்சிகளால் பதிப்புத்துறைக்கே புது ரத்தம் பாய்ச்சுகிறது. உங்கள் ஊருக்கும் வருவார்கள் விரைவில்.

Saturday, June 2, 2007

இப்படித்தான் இருக்கிறது வலைப்பூ உலகம்

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து சில நாட்கள்தான் ஆகிறது என்றாலும், வலை உலகத்தில் நடந்து வரும் சிலவற்றைக் கணிக்க முடிகிறது. வலை திரட்டிகள் வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்கிறது. பதிவர்களுக்கிடையே மூர்க்கத்தனமான அரசியல் இருக்கிறது. சில மூத்த பதிவர்கள் 'க்ளாஸ் லீடர்' போல நடந்து கொள்கிறார்கள். கொள்கைகளில் முரண்பட்டவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்களாக அறியப்படும் பெரியாரிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தங்களது வலைப்பூவை படிக்க வைக்க சிலர் அடிக்கும் குரங்கு பல்டிகள் நகைக்க வைக்கிறது. 'ஹிட்ஸ்' களுக்காக அபத்தமாக தலைப்பு வைக்கிறார்கள். அளவுக்கதிகமான பதிவுகளை போட வேண்டும் என்பதற்காக 'இன்று மூத்திரம் மஞ்சளாக போனது' என்றெல்லாம் எழுதி இம்சிக்கிறார்கள். கொஞ்சம் முரண்பட்டு பின்னூட்டம் இட்டால், அவர்களை ஒழித்துக்கட்ட ரகசிய கூட்டம் போடுகிறார்கள். கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் என சுஜாதா, தனக்கு நேர்ந்தது, உணர்ந்தது, ரசித்தது எல்லாம் கலந்து கட்டி எழுதும் கட்டுரைகளின் அப்பட்டமான பாதிப்புகள் கிட்டத்தட்ட எல்லாரிடமே இருக்கிறது. வலையின் ஓரே பலம் அதன் சுதந்திரம்; பலவீனம் கட்டுபாடற்ற எதேச்சதிகாரம். இதெல்லாம் இல்லாமல் எந்த இசங்களுக்கும் அரசியல்களுக்கும் ஆட்படாமல் நல்ல படைப்புகளை சத்தமில்லாமல் படைத்துக்கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கிறார்கள். வெகுஜனப் பத்திரிக்கைகளில் பிரசுரமானால் பலத்த கவனிப்பை பெரும் தகுதியுள்ள எண்ணற்ற கவிதைள், கதைகள் வாசிக்க கிடைக்கின்றன. தற்போது வலையில் பிரபலமான பலரது கவிதைகள் ஆனந்த விகடன் போன்ற பலமிக்க ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருவது பதிவர்களுக்கு உற்சாகம் அளிக்ககூடும்.

Friday, June 1, 2007

ஸ்டெல்லா புரூஸ்

இந்த வார விகடனில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ், நோயுற்ற மனைவியுடன் வறுமையில் வாடுவது செய்தியாக வந்திருக்கிறது. தொண்ணுறுகளில் இளமை ததும்பும் எழுத்துக்களில் கலக்கிய எழுத்தாளர். குமுதத்தில் வெளியான இவரது ஒரிரு சிறுகதைகளை வெட்டி எடுத்து வைத்திருக்கிறேன். இவரது கதாநாயகன், நாயகியிடம் பேசும் எத்தனையோ வாசகங்களை நான் பால்யத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற அவரது நாவல்களை வயதுக்கு மீறி படித்திருக்கிறேன். நல்ல பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான். ஒரு காலத்தில் குதிரைக்கொம்பாக இருந்த டி.வி.எஸ் ஏஜென்சியை எடுத்துக் கொடுத்து எதிர்காலத்திற்கு வழி செய்திருக்கிறார் அவரது தந்தை. ஆனால் எழுத்துச் சிரங்கு பிடித்து கிறுக்கிக் கொண்டே இருந்ததில் தற்போது கவலைகள் மட்டுமே கைஇருப்பு. குழந்தைகள் இல்லை. வேறு பொருளாதார ஆதாரங்கள் ஏதுமின்றி தவிக்கிறார் ஸ்டெல்லா புரூஸ். பாரதியார், கு.ப.ரா, அழகிரி, புதுமைப்பித்தன் மாதிரி இவர் நிலை ஆகிவிடக்கூடாது என மனசு துடிக்கிறது. சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட எழுத்து அவருடையது அல்ல என்றாலும், வாசிப்பு பரிணாம வளர்ச்சியில் என்னை சில காலம் கட்டிப் போட்டு வைத்திருந்த அவருக்கு என்னால் முடிந்த ஒரு சிறிய தொகையை மணிஆர்டர் செய்வதின் மூலம் கொஞ்சம் குற்ற உணர்ச்சியை குறைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளேன்.

கவசமும் உடைவாளும்

வம்படியாக சட்டம் கொண்டு வந்து இதோ அனைவரையும் ஹெல்மட் தலையன்களாக்கி விட்டார்கள். இதுமாதிரி சட்டம் கொண்டு வந்து பணக்காரர்களனைவரையும் வரி செலுத்த வைக்க இயலுமா என அதிகாரிகள் யோசிக்க வேண்டும். தீபாவளிப் பட்டாசு கடை மாதிரி நேற்று விடிய, விடிய ஹெல்மெட் வியாபாரம் பட்டையக் கிளப்பி இருக்கிறது. என்னை மாதிரி டி.வி.எஸ் 50 ஆசாமிகளும், மணிக்கு 20 கிலோ மீட்டருக்கு மேல் ஒட்டாத ரிட்டையர்டு சந்திரமவுலிகளும் ஹெல்மெட் போட்டே ஆகவேண்டும் என்கிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஊரிலிருந்து அப்பா வந்தால் பஸ்ஸ்டாண்டிலிருந்து போன் செய்வார். நான் வண்டியில் அழைத்து வருவேன். இனி அவரிடமிருந்து போன் வந்தால், இன்னொரு ஹெல்மெட் தேட வேண்டும். என் நண்பர் ஊரிலிருந்து வந்திருந்த அவரது பாட்டியை டாக்டரிடம் அழைத்து போயாக வேண்டும். சைக்கிள்கூட உருட்டியறியாத அந்த பாமர பாட்டி தலையில் கஷ்டப்பட்டு ஹெல்மெட்டை மாட்டி க்ளினிக் அழைத்து போனார். அங்கே போய் ஹெல்மெட்டை கழட்டும்போது பாம்படம் (காதில் அணியும் ஒரு வகை மெகா சைஸ் அணிகலன்) சிக்கிக்கொண்டு அவர் பட்ட பாடு இருக்கிறதே. இன்று இரவே ஊருக்குப் போய்விடுவேன் என ஓற்றைக் காலில் நிற்கிறாள் பாட்டி. அழகு சொரூபியான நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினால், பத்துக்கு ஆறு பெண்கள் திரும்பி பார்ப்பார்கள். இனி அந்த பாக்கியம் இல்லை. சிக்னலில் பக்கத்திலிருக்கும் ஸ்கூட்டியை ரூட் விட செல்போனை காதில் எடுத்து 'ஆமா.. சோனியா அகர்வால் மேட்டர்தான்... அத எடிட் பண்ணி அனுப்பிடுறேன்னு' ஜபர் காட்ட முடியாது. அதே சமயத்துல ஸ்கூட்டில இருக்கிறது கலரா... கலவரமான்னு கண்டுபிடிக்கவும் முடியாது. காலைல கவசத்தையும், தோளில் பேக்கையும் மாட்டிட்டு கிளம்பும்போது ரூம்மேட் கிண்டலா சொன்னார் "உடைவாளையும் எடுத்துக்கொள்ளுங்கள் மன்னா"