Monday, June 11, 2007

பேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர

'ஹட்ச் அலைபேசி' நிறுவனத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர் நண்பர் மாணிக்கம். பேச்சலரான அவரது மாதக்கடைசி தொலைபேசி அழைப்புகளுக்கு பயப்படாதவர்களே இல்லை. "மச்சான் நீ எங்க இருக்க? ஒரு அர்ஜண்ட். பைவ் ஹண்டரடு ரூபிஸ் வேணும்" எனும் வெற்றிச் செய்தியை ஒவ்வொரு மாதமும் ஓங்கி ஒலிக்கச் செய்பவர். இந்த முறை அவர் பப்பு (அதாங்க பருப்பு) என்னிடம் வேகவில்லை. உறுதியாக மறுத்துவிட்டேன். ஐந்து லகரம் சம்பளம் வாங்கும் மாணிக்கத்திடம் மாதக்கடைசியில் கையேந்தாமல் இருக்க பதினைந்து யோசனைகளை சொன்னேன்.

1. பசி எடுத்தாலோ அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ கம்பெனிக்கு ஆள் தேடாமல் தனியாக போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.

2. மாதம் 5 லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடாதீர்கள். 5*60 = 300 கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் (அது உங்கள் சொந்த வேலையாக இல்லாத பட்சத்தில்) கம்பெனியில் பெட்ரோல் க்ளைம் கேட்டு வாங்குங்கள்.

3. சினிமா, ஷாப்பிங், பொருட்காட்சி, வேறு ஏதேனும் ஷோக்கள் எதுவாயினும் மாதத்திற்கு ஒன்றுதான் எனத் தீர்மானியுங்கள். திராபை படங்களுக்கும் பத்து இருபது பேரை இழுத்துச் செல்லாதீர்கள்.

4. வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம் நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.

5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம் சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.

6. பையில் 200 ரூபாய்க்கு மேல் வைத்து பழகாதீர்கள்.

7. மலிவாக கிடைக்கிறதே என தேவையில்லாததை வாங்காதீர்கள். பிறகு தேவையுள்ளதை வாங்க பணம் இருக்காது.

8. நாய் பழக்கம் வேட்டியை கிழிக்கும் என்பார்கள். பெண்களுடான பழக்கம் பர்ஸை பதம் பார்க்கும். கூடுமானவரை 'கேர்ள் பிரண்டோடு' ஊர் சுற்றுவதை தவிர்க்கவும். முடியாத பட்சம் அவளிடம் ஜபர்தஸ்த் காட்டாமலாவது இருக்க வேண்டும்.

9. சுயமாக முகச்சவரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

10. வண்டி, செல்போன், இரவல் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிருங்கள்.

11. இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். இது பல்வேறு வழிகளில் உங்களுக்கு உதவும்.

12. உங்கள் துணிகளை நீங்களே துவையுங்கள்.

13. கிரெடிட் கார்டு இருந்தால் இரண்டாக வெட்டி எந்த வங்கியில் வாங்கினீர்களோ அந்த வங்கிகே திருப்பி அனுப்புங்கள்.

14. மச்சான் ஒரு சிகரெட் வாங்கிகொடுறா, ஒரு காபி சொல்லு மாதிரி சில்லறை கேஸ்களின் சகவாசத்தை ஒழியுங்கள்.

15. அடிக்கடி எனக்கு போன் செய்யாதீர்கள்.

10 comments:

தென்றல் said...

நல்ல யோசனைகள், செல்வேந்திரன்!

நம், அன்றைய நாளின் நடவடிக்கையை ஒரு 5 நிமுடம் சிந்தித்து பார்த்து... நிவர்த்தி செய்தாலே பணத்தை சேமிக்கலாம்.

செல்வேந்திரன் said...

தென்றல் உங்களை தோரணம் கட்டி வரவேற்கிறேன். இப்போதுதான் தங்களுக்கு மிக நீண்ட பின்னுட்டம் இட்டேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.

நாகப்பன் - புகழேந்தி சொல்வது போல 'ஒரு ரூபாய் சேமிப்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம்' என்பதை மனதில் நிறுத்தினால் எவரிடமும் கையெந்த வேண்டியதில்லை.

வெங்கட்ராமன் said...

//////////////////////////
வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம் நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.
//////////////////////////

நல்ல யோசனை செல்வேந்திரன்.

வவ்வால் said...

வணக்கம் செல்வேந்திரன்,

கடன் கேட்டால் அள்ளி தர வேண்டாமோ செல்வத்திற்கே இந்திரன் ஆயிற்றே நீங்கள்!

நீங்களும் கண்ணாடியில் பட்டியல் எழுதி ஒட்டுபவரா , நான் அவ்வாறு ஒட்டி கண்ணாடி,மற்றும் சுவர் எல்லாம் வெறும் பட்டியல் தோரணம் தான் மிஞ்சியது!

ஆனால் அதனாலும் ஒரு பயன் உண்டு, செய்து முடிக்காமல் உள்ளவை எவை என்று அறிந்து கொள்ள வசதியாக போனது.புகைவண்டி கால அட்டவணை எப்போ வண்டி வரும் என்று தெரிவித்தாலும் நடைமுறையில் அது எத்தனை மணி நேரம் தாமதம் என்று அறியத்தான் பயன்படும்!

செல்வேந்திரன் said...

வவ்வால் என் விடுதியறையும் பட்டியல்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பத்மகிஷோர் said...

//5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம் சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.//

நல்ல சமையல் அறை இருந்தால் , தானே சமைத்து உண்ணலாம். ஒரு வேளையாவது.

மங்களூர் சிவா said...

"தாமிராவிற்காக" எழுதிய பதிவில் இருந்து வருகிறேன். மிக அருமையான யோசனைகள்.

புதுகைத் தென்றல் said...

அருமையான திட்டங்கள்.

உங்களோட இந்தப் பதிவை சுட்டியா கொடுக்கலாமா?

செல்வேந்திரன் said...

வருகைக்கு நன்றி மங்களூர் சிவா...

என்ன புதுகைத் தென்றல், இப்படி கேட்டுட்டீங்க... உங்களுக்கு இல்லாததா...

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2009/02/blog-post_13.html//

நன்றி செல்வேந்திரன்

பதிவு போட்டிருக்கிறேன். பாருங்கள்.