Tuesday, December 23, 2014

ஜெயமோகனுக்கு இயல் விருது - 2014

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2014) திரு
பா. ஜெயமோகன்அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமகாலத்தில்எழுத்து அசுரன்’ என்று 
வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள்அரசியல், வாழ்க்கை 
வரலாறு, காப்பியம்இலக்கியத் திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம்
அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடுதிரைப்படம்  என தமிழ் இலக்கியத்தின் 
அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் மூலம் ஆழமான முத்திரையை தொடர்ந்து பதித்து 
வருகிறார்.  இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர்  சுந்தர
ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை
எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர் பாஸ்கரன் , டொமினிக் ஜீவா  போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஜெயமோகன் 1962 ல் அருமனையில் (கன்னியாகுமரி) பிறந்தார்நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை  படிப்பை பாதியிலே விட்டுவிட்டு  இந்தியா முழுவதும் இரண்டு வருடமாக அலைந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டார். 1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச்  சேர்ந்தார்எழுத்தாளர் சுந்தர ராமசாமியால்  ஆற்றுப்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். 1987ல் அவர் எழுதிய ’நதி’ சிறுகதை முதன்முறையாக கணையாழியில் பிரசுரமாகி  அவர் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது. இவருடைய ’விஷ்ணுபுரம்’ நாவல் பரவலான வாசகர்களை அடைந்து பெரும் புகழ்பெற்றது. அதைத் தொடர்ந்து காடு, ஏழாம் உலகம், கொற்றவை, வெள்ளையானை ஆகிய 13 நாவல்களையும், 11 சிறுகதை தொகுப்புகளையும், 50 கட்டுரை நூல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார்.  1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசு, 1992  ஆண்டுக்கான கதா விருது, 1994  ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, 2008  ஆண்டு பாவலர் விருது, 2011  ஆண்டுஅறம்’ சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது ,   ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.  ஜெயமோகன் பங்கேற்று வெளிவந்த திரைப்படங்கள் கஸ்தூரிமான், நான் கடவுள் , அங்காடித்தெரு, நீர்ப்பறவை, ஒழிமுறி, கடல், ஆறு  மெழுகுவர்த்திகள், காஞ்சி, காவியத்தலைவன் ஆகியவை பெரும் வெற்றியீட்டின.

1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார்.
2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால்விஷ்ணுபுரம் இலக்கிய 
வட்டம்’ இலக்கிய ஆளுமைகளுக்கு விருது அளித்து வருகிறது.  அபூர்வமான  சொல்லழகும், பொருள் செறிவும் கொழிக்கும் மொழியில்  2014  புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரதத்தின் மறுஆக்கமாக இவர் தற்போது இணையத்தில் வெண்முரசு’  நாவலை. ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு, எழுதி வருகிறார். ஏறக்குறைய நாற்பது நாவல்களாக இது நிறைவுபெறும். தமிழில் வேறு யாருமே முயன்றிராத பிரம்மாண்டமான பணி இது.

இவருடைய மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். ’இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா 
ரொறொன்ரோவில் 2015 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.Saturday, November 29, 2014

மாஸ்டர் செல்வேந்திரன்

அசல் அட்டையினால் செய்யப்பட்டு உலோக பாகத்திற்கு சில்வர் நிற பேப்பரும் கைப்பிடிக்கு கோல்டன் பேப்பரும் ஒட்டப்பட்ட வாள்கள் அருந்தமிழ் மன்றத்தில்தான் அதிகம். பாரதி கலாமன்ற வாள்கள் பெரும்பாலும் தமிழ் மன்னர்களுடையது. சற்று லேசாக வளைந்த வாள்கள். தகரத்திலோ அல்லது மரத்திலோ செய்யப்பட்டு கொழுவிக்கொள்ளும் வசதியுள்ள கைப்பிடிகளையுடையவை. எடை அதிகம். நீளமும் அதிகம். எதிரிகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் சாய்க்க தோதுப்படாது. என் பிரியமெல்லாம் பார்க்க பட்டைக்கத்தியைப் போல நீண்டும் எளிய கைப்பிடியும் உள்ள கிரேக்க வாள்களே. எடை குறைவானவை. எடுத்துச் சுழற்ற முடிபவை. குறிப்பாக தவறியும் காயம் ஏற்படுத்தாதவை. ரோமாபுரி வீரர்கள் அணியும் தலைக்கவசமும் முதுகில் தொங்க விடும் சல்லாத்துணியும் கூட அருந்தமிழ் மன்றத்தில்தான் அதிகம் உண்டு.

          இரு வகையான நடிகர்கள் இருந்தார்கள். நடிக்கிறேன் காசு கொடு எனக் கேட்கிறவர்கள். காசு தருகிறேன் நடிக்கவிடு எனக்  கதறுபவர்கள். ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயரையோ அல்லது உச்சரித்த வசனத்தையோ அடைமொழியாகச் சுமந்தலையும் சீவன்களான ‘ஆஃபாயில்’ அண்ணாத்துரை , ‘அடேங்கப்பா’ ஆறுமுகம் என இரண்டு பேர் எங்கள் தெருவிலேயே இருந்தார்கள். ‘ரேப்பு’ கிண்ணரம் என்றும் ஒருவர் இருந்தார். இந்த அடைமொழியை யாரும் விளக்காமலே புரிந்துகொள்ளும் அளவிற்கு கருவிலே திருவுடைய சிறார்கள் யாம். இவர்களோடு ரிகர்ஸல் பார்க்க நாங்களும் வருகிறோமென ஒட்டிக்கொண்டு செல்வது வாள்களை எடுத்து பொய்ச்சண்டை போடத்தான்.

          சிந்துபூந்துறை பாலத்திற்குக் கீழே காசு கொடுத்தால் ஸ்கிரிப்ட் கொடுக்கிறவர்கள் இருந்தார்கள். நாடகத்தை வாங்கி வந்து கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றி கதை, வசனம், இயக்கம்: ‘உங்கள்’ உலகநாதன் எனப் போட்டுக்கொள்ளவேண்டியது மட்டும்தான் நம் சோலி. ‘சாணக்கிய சரிதம்’ என்றொரு நாடகத்தின் ரிகர்சல் நடந்துகொண்டிருந்தது. அரசடி மாரியம்மன் கோவிலின் ஏழாவது திருநாளுக்குப் பெருமையுடன் வழங்க உத்தேசித்திருந்தார்கள். ஏழாம் திருநாள் நாடகம் பார்க்க அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் வருவார்கள். அருந்தமிழ் மன்றத்தார்களின் மேடை அமைப்பு பிரம்மாண்டமாக இருக்கும். மேடையில் கடலை உருவாக்கி கப்பல் ஓட்டி காட்டுவார்கள். ஒரு நாடகத்தில் வில்லன் மேடையில் விமானத்தில் வந்து இறங்குவார். சீதை தீக்குளிக்கும் காட்சியில் அக்கினிக்குண்டம் தத்ரூபமாக இருக்க உணர்ச்சி வசப்பட்ட சில கிழவிகள் மேடையில் தண்ணீரைக் கோரி ஊற்றிய சம்பவமெல்லாம் கூட நடந்திருக்கின்றன.

          ஒத்திகை படு தீவிரமாக நடந்தது. கதாநாயகி அம்சமாலா என்றார்கள். மடிப்பு அம்சா என கலாரசிகர்கள் மத்தியில் அவர் வேறு சில காரணங்களுக்காகப் புகழ் பெற்றிருந்தார். புதிதாக மூன்று டூயட்டுகள் தெள்ளிசைத் தென்றல் குழுவினரால்இயற்றப்பட்டன.  ‘சசியே என் ருசியே..சகியே வந்து சுகியேன்..’ ஹார்மோனியத்தின் அத்தனைக்  கட்டைகளிலும் விரல்களின் வெறியாட்டம். திரைச்சீலைகள்  புதிதாக வரையப்பட்டன. பாடல் கட்சிகளுக்காக ஏராளமான மான்களும் மயில்களும் கிளிகளும் அட்டையில் உருவாகின. அருந்தமிழ் மன்றமே கூந்தங்குளம் சரணாலயம் போல இருந்தது. இயக்குனர் சேர்மக்கனி எந்நேரமும் தோளில் சிறிய டர்க்கியை துண்டுடன் திருப்தியில்லாத முகத்துடன் கிழக்கேயும் மேற்கேயும் அலைந்து கொண்டிருந்தார். ஒரு இயக்குனருக்கு மிகத் தேவையானது திருப்தியில்லாத முகம் என்பதை அவர் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார்.

          சரித்திர நாடகம் என்பதால் வாள்களும் கேடயங்களும் பொலிவூட்டப்பட்டன. கிழிந்த சிம்மாசனங்களுக்குள் தென்னை நார்கள் திணிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. தில்லையண்ணன் உடன்குடி மன்றத்திலிருந்து மார்புக்கவசங்களை வரவழைத்தார்.  ‘புது அயிட்டமால்லா இருக்கு..இத எங்கனடே ஸ்டேஜூல வைப்பிங்க.. டூயட்டுக்கா’ எனக்கேட்ட ஆஃபாயில் அண்ணனை சேர்மக்கனி கெட்ட கெட்ட வார்த்தைகளால் வைதார். கத்திச் சண்டையை நிறுத்தி வேடிக்கை பார்த்த என்னை சிவந்த கண்களால் அன்பொழுகப் பார்த்து ‘புடிச்சி மொழத் தெரியாது.. வாளு கேக்குதோல..’ சேர்மக்கனி அண்ணன் கேட்டது கூட வலிக்கவில்லை. அம்சமாலா  ‘களுக்’கென்று சிரித்தபோதுதான் ‘அந்த ஏந்திழையாளும் எனைச்சிரித்தாள்.. ஆண்டதொர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஓர் பொருளாமோ..’ என கண்ணீர் மல்கினேன். சேர்மக்கனி என்ன நினைத்தாரோ திடீரென ‘ஏல நாடகத்துல நடிக்கியால.. ஒரு எழவசரன் கேரக்டர் தாறம்ல..’ என்றார்.

          கதைப்படி நந்த வம்சத்து அவையில் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் வெஞ்சினம் கொள்கிறார். சூலுரைக்கிறார்.  நந்த குலத்தை வேரோடு கருவறுக்கிறார். மெளரியப்பேரரசை நிறுவுகிறார். அவரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் இரவில் கனவில் வந்து நியாயம் கேட்பதோடு நாடகம் முடியும். எவ்வளவு எளிதாக கதையை சொல்லிவிட்டேன். ஆனால் நாடகம் எழுபது சீன்களுக்கும் மேல்.  எனக்கு நந்த குலத்தின் கடைக்குட்டி இளவரசன் வேடம். மொத்தம் எட்டு சீன்கள். நான்கு சீன்களில் வசனம். கத்திச்சண்டை பிரியனென்பதால் சேர்மக்கனி இரக்கப்பட்டு ஒரு சீன் சேர்த்தார். தோட்டத்தில் மாமா வாள் வித்தை பயிற்றுவிப்பார். பயிற்சிக்குப் பின் அன்பொழுக மடியில் இருத்தி ஒரு பழத்தை புசிக்கத் தருவார். அதில் பாம்பின் விஷம் செலுத்தப்பட்டிருப்பது இருவருக்கும் தெரியாது. அவரும் ஓரிரு துண்டங்களை சாப்பிட இருவரும் துடிதுடித்துச் சாகவேண்டும்.  முதல் நாடகம் என்பதால் கடும் பயிற்சி. என் அளவிற்குப் பிற கதாபாத்திரங்களுக்கு கலைதாகம் இருக்கவில்லை. சிலர் கடை கண்ணிகளை எடுத்து வைத்து விட்டு பத்து மணிக்கு மேல் வருவார்கள். சந்தைக்குப் போகிறவர்களாக இருந்தால் வாரக்கடைசியில்தான் ரிகர்ஸல். அவர்கள் வசனங்களை மறந்துவிட்டு முழிக்கும்போது சேர்மக்கனி புதிய புதிய வார்த்தைச் சேர்க்கைகளை உருவாக்கித்  திட்டுவார்.

          செட் வேலை செய்யும் ஒரு பெயிண்டர் போதையில் பூங்கா சீன் திரைச்சீலையில் உள்ள பூக்கள் அனைத்திற்கும் கருப்பு வர்ணம் அடித்து விட்டார். ‘தொளிலு மேல பக்தி இல்லாத பயலெல்லாம் பன்னி மேய்க்கப் போவ வேண்டியதுதானல.. மாம்பட்ட போட்டுட்டு வந்து அடிக்க ஒங்க ஆத்தாளுக்க கல்லறன்னு நெனச்சியாலே இத.. தாயாளீ ‘ என ருத்திரதாண்டவம் ஆடியவர் ''தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த பூதரை எழுதி, மேல்நிலை வைத்து; தூண் நிழல் புறப்பட,மாண்விளக்கு எடுத்து,ஆங்கு ஒருமுக எழினியும், பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து-ஆங்கு ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி; விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து”ன்னு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல எழுதியிருக்காருல ஸ்கிரீன் வரையறதப்பத்தி.. கூதறப்பயலே..’ நான் சேர்மக்கனி அண்ணாச்சியின் நாடக பக்தியை நினைத்து  மெய்தான் அரும்பி விதிர் விதித்து நின்றேன். என் கண்கள் கசிந்தன.

          நாடகத்திற்கான அழைப்பிதழ்கள் இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள் நிற பேப்பரில் சிங்கிள் கலர் அச்சடிக்கப்பட்டு ஊர் முழுக்க விநியோகிக்கப்பட்டன. அதில் அறிமுகம்: மாஸ்டர் செல்வேந்திரன் என அச்சாகியிருந்ததுதான் முதலில் என் கண்ணில் பட்டது. அகில இந்திய ரேடியோ புகழ் பி.கே.பாபனாசம், கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம், பக்கோடா காதர், ஓமக்குச்சி நரசிம்மன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். அவர்களெல்லாம் ரிகர்சலுக்கே வரவில்லையே. போஸ்டரின் இறுதியில் தஞ்சாவூர் காஞ்சனா சிறப்புத்தோற்றம் என போட்டிருந்தார்கள். மொத்த ஸ்கிரிப்டிலும் ஒரு பெண் கேரக்டர்தானே.. இந்தம்மா என்ன பண்ணப் போவுது?

          நல்ல விளம்பரம் செய்திருந்ததால் கூட்டம் திமிறியது. மேடையில் விழா ஏற்பாட்டாளர்கள் மாண்புமிகு மாமா, பாசமிகு மச்சான், பெருமைமிகு பெரியப்பா, அருமை அண்ணாச்சி என ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடி மாற்றி மாற்றி மாலையைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். மேடைக்குப் பின்னே மேக்கப் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. நடிகர்களின் உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸக்கா வைத்திருப்பதைப் போன்ற பிளாஸ்டிக் ஐஸ்பெட்டிகள்  வைத்திருந்தார்கள். அதற்குள்தான் லிப்ஸ்டிக், ரூஜ், க்ரீம் உள்ளிட்ட அழகு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. நான் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

          ஒரு வழியாக பூஜை போட்டு தேங்காய் உடைத்தபோதுதான் ஒன்றைக் கவனித்தேன். சேர்மக்கனி அண்ணன் லேசாக ஆடிக்கொண்டிருந்தார். அய்யய்யோ அண்ணனுக்கு அருள் வந்துவிட்டதென பதறி அருகில் போனால் ஃபுல் மப்பில் இருந்தார். அடேய் தொழில்பக்தி..!

          சீன் நோட்டை ஃபாலோ செய்யும் நிலையில் அவர் இல்லாததால் தற்காலிக நாடக பொறுப்பு அரியபழம் நாடாருக்கு வாய்த்தது. அவர் அம்சமாலா அருகாமைக்காக பூக்குழி இறங்கவே தயாராக இருந்தவர். நாடகம் தொடங்கிய போதுதான் நடிகர்கள், பாடகர்கள்,  சீன் இழுக்கவேண்டியவர்கள் வரை அனைவரும் ஃபுல் தண்ணீரென்பது புரிந்தது. பூங்கா சீனில் போர் நடந்தது. கோவில் ஸ்கிரீன் முன்னே டூயட். ஒரு கனவுக்காட்சியில் அரங்கத்திற்குள் மேலிருந்து கீழாக ஒரு தாமரைப்பூ மெள்ள இறங்கும். அதில் கதாநாயகன் வீற்றிருப்பான். அதிலிருந்து இறங்கி சிவாஜியைப் போல தோள்களை ஏற்றி இறக்கி நடந்து கதாநாயகியை முத்தமிட வேண்டும். அவசரத்தில் அரியபழம் நாடாரை ஏற்றி கயிறு கட்டி இறக்கி விட்டார்கள். கையில் பேரேடுடன் பதறியடித்து மேடையிலிருந்து இறங்கி ஓடிவிட்டார். அம்சாவோடு டூயட் கேட்குதா ஒனக்கு என வேப்பங்காட்டுக்காரியிடம் வெளக்குமாத்து பூசையை வாங்க அவர் தயாரில்லை. காஞ்சனா நந்த குலத்து அவையில் மன்னனின் முன்பு ‘ஓ ரசிக்கும் சீமானே..’ ஆடினாள். ஸ்கிரீன் இழுப்பவர்கள் இருபக்கமும் மறைந்து நின்று பூச்சிமருந்து அடிக்கும் மெஷினில் தண்ணீரை நிரப்பி அவள் மீது மழையாகப் பொழிந்தனர். முன் வரிசை சிறுவர்கள் கும்பலாக எழுந்து நின்று ஒன்ஸ்மோர் கேட்க க்ளைமாக்ஸ் வரை காத்திருந்தால், சந்திரகுப்த மெளரியர் அவையிலும் ஒரு மழை டான்ஸ் உண்டு என மைக்கில் அறிவித்தார்கள். எவன் போவான் வீட்டுக்கு..

          என்னுடைய சீன் வருவதற்கு முன்புதான் கவனித்தேன். சிறுவன் என்பதால்  உயரம் குறைவான மைக் ஏற்பாடு செய்திருப்பார்களென எதிர்பார்த்திருந்தேன். பேரதிர்ச்சி. மைக்குகள் ஏழடி உயரத்தில் அந்தரங்கத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. சேர்மக்கனி அண்ணனிடம் கதறினேன். ‘மூதி..நீ எங்க நின்னு கத்தினாலும் கேக்கும்ல’ என ஒரே வரியில் என் நடிப்புத்திறமையை உதாசீனப்படுத்தி விட்டார். அதைக்கூட தாங்கி விட்டேன். அம்சமாலா கதைப்படி மகாராணியார். அதாவது எனக்குத் தாயார் என்பது தெரியவந்தபோதுதான் மனமுடைந்து அழுதேன்.

          நான் நன்றாகவே நடித்தேன். மயங்கி விழுந்து கெண்டை மீனைப்போலத் துள்ளி துடிதுடித்து இறந்தேன். சும்மாவா உயிர்பிரிவது அம்சமாலா மடியிலல்லவா.. சீன் முடிந்ததும் ‘ஏம்ல கெடந்து சாடுத.. தொட்டி..’ என முறைத்தாள். நாகர்கோவில்காரி..அதான் அழகா இருக்கா என நினைத்துக்கொண்டேன்.

          ஒருவழியாக அதிகாலையில் நாடகம் முடிந்தது. நடிகர்கள் அனைவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுத்தினார்கள். கோவில் தர்மகர்த்தா அனைவருக்கும் சால்வை போர்த்தினார். குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். இளவரசே என் மடியில் அமர்ந்துகொள்ளுங்கள் என சண்முகசுந்தரம் என்னை மடியில் இருத்தி படம் எடுத்துக்கொண்டார். பெருமையாக இருந்தது. சேர்மக்கனிக்கு என் ஓவர் ஆக்டிங் பிடிக்கவில்லையென்பது தெரிந்தது. ஒரு நடிகரின் டச்சப் என்னை நெருங்கி என் பெயரை ஆர்வமுடன் விசாரித்தார். ‘நல்லா நடிக்க தம்பி..சினிமாவுல நடிப்பீயா..’ நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ‘ஒன்ன மாதிரி சைல்ட் ஆர்ட்டிஸ்டுக்கு நல்ல டிமாண்டு உண்டு.. நீ ஒண்ணு பண்ணு இந்த அட்ரஸூக்கு உன்னோட போட்டோஸ் அனுப்பி வை.. எனக்குத் தெரிஞ்ச டைரக்டர்ஸ்கிட்ட சொல்றேன்’

தமிழ்நாட்டில் ஒருவனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு எனச் சொல்வது வைக்கப்படப்பிற்கு தீ வைப்பது போல. எரிந்து நாசமானால் அன்றி அணையாது.

***
எட்டாங் கிளாஸ் பி. முந்தைய இரவு ரோஸ் பவுடர் மேக்கப், காதோரம் சுழித்து வரையப்பட்ட கிருதா அழிக்காமல் வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். நாடகத்தில் நடித்தால் இரண்டு நாட்களுக்கு மேக்கப் அழிக்கக் கூடாது. அப்போதுதான் வகுப்பில் பஜாரில் பார்க்கிறவர்கள் சட்டென நினைவு வந்து ‘ஏய் நீ நல்லா நடிச்சடே’ என புகழ்வார்கள். லேசில் விட முடியுமா அந்தப் புகழை. கூடவே இன்னொரு காரணம் உண்டு. பெண் பிள்ளைகளுக்கு நாடகம் பேச்சுப்போட்டிகளில் நடிக்கிறவனை விட டான்ஸ் ஆடுகிற பையன்களைத்தான் ரொம்பவும் பிடிக்கும். டான்ஸில் சேருவதென்றால் ஃபுல் கை டிசர்ட் மற்றும் அப்போது லாங்ஸ் என்றழைக்கப்பட்ட பேண்ட், பூட்ஸ் ஆகியன இருக்க வேண்டும். டான்ஸ் ஆடும் அன்று தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து சலூனில் ஹீட்டர் போட ஐந்து ரூபாயும் வேண்டும். மேற்படி சமாச்சாரங்கள் நான்கும் என்னிடம் இல்லை. ஆகவே டான்ஸூக்கு எடுக்க மாட்டார்கள். வழக்கமாக டான்ஸ் ஆடும் குணபால், டென்னிஸன் போன்றவர்களுக்கு நான் விரைவில் சினிமா நட்சத்திரமாகப் போகிறவன் என்பதை குறிப்புணர்த்தும் கட்டாயமும் இருந்தது. லேய் அம்சாக்க மவனே என இஸ்மாயில் பொடதியில் அடித்தான். அவளுக்க முலைய அமுக்கிட்டியாமா.. கேள்விப்பட்டேன் என்றான் எட்டாவது வகுப்பை நான்காவது முறையாக எதிர்கொள்ளும் கடைசி பெஞ்ச் முண்டானி என்கிற முனியப்பன். எனக்கு அழுகையே வந்து விட்டது. இருங்கடா.. சீக்கிரமே நான் யாருன்னு உங்களுக்கெல்லாம் காட்டறேன்..

          பகலெல்லாம் கனவில் ஆழ்ந்திருந்தேன். ஐயாம் எ லிட்டில் ஸ்டார் என எகிறி ஆடும் சிம்புதான் அப்போது ஒரே சைல்ட் ஆர்ட்டிஸ்ட். நானும் அவரைப் போலவே மஸ்ரூம் கிராஃப் வெட்டிக்கொள்ள வேண்டுமென ஆசைப்பட்டேன். அப்பா தரும் வாரத்திற்கு இருபது பைசா பாக்கெட் மணியில் போஸ்ட் கார்டுதான் வாங்க முடியும். அன்புள்ள சுரேஷ் அண்ணாவிற்கு என ஆரம்பித்து என் குடும்பம் உடன் பிறந்தோர் விபரங்களை எழுதி முதலில் ஒரு போஸ்ட் கார்டு அனுப்பினேன். ஒருவன் தன் வாழ்நாளில் பப்ளிக் எக்ஸாம் எழுதவோ பேங்கில் லோன் வாங்கவோதான் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது எங்கள் ஊரின் எழுதாத விதி. கூடவே இருபது பைசா இருபது பைசாவாக சேர்த்துக்கொண்டு படம் எடுத்து அனுப்புவதெல்லாம் நடக்காத வேலை. ஒரே வழி வீட்டில் இருக்கும் ஆல்பத்தில் உள்ள படங்களை அனுப்புவதுதான் என முடிவு செய்தேன். அப்பாவுக்கு வரும் வர்த்தக கடிதங்களில் போஸ்ட்மேனின் அஜாக்கிரதையால் சரி வர சீல் அடிக்கப்படாத ஸ்டாம்புகளைக் கவனமுடன் பிரித்து புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தேன். பதிலே இல்லை. சரி ஏதாவது படப்பிடிப்பில் இருப்பார்களென ஒரு மாதம் அமைதியாக இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஸன் படங்களில் காஜா ஷெரீப்பை பார்க்கும் போதெல்லாம் கலைதாகத்தில் தொண்டை வறளும். மீண்டும் நீண்ட நீண்ட கடிதங்களுடன் படங்கள் அனுப்ப ஆரம்பித்தேன். ஒண்ணாங்கிளாஸில் அன்னம்மா டீச்சருடன் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ மட்டும்தான் மிச்சம். அதிலும் என் முகத்தைப் பேனாவால் வட்டமிட்டு அனுப்பி வைத்தேன் பதிலே இல்லை.

          நான் மிகவும் சோர்ந்து விட்டேன். இடையில் வீட்டு ஆல்பத்தில் இருந்த படமெல்லாம் எங்கேடா எனக் கேட்டு அக்கா மிரட்ட ஆரம்பித்தாள். என் நம்பிக்கைகள் முற்றாகத் தளர்ந்து போயிருந்தது. ஆருயிர் நண்பன் ஐந்து வீட்டு மணிதான் திடீரென கேட்டான் ‘அத்தன லெட்டர் போட்டியே..ஃப்ரம் அட்ரஸ் எழுதினியாடா..’ நான் வியப்புடன் ‘ஃப்ரம் அட்ரஸா அப்படின்னா..?’

          அன்புள்ள சுரேஷ் அண்ணா, இத்தனை நாள் கடிதம் எழுதின நான் என்னுடைய அட்ரஸை உங்களுக்குச் சொல்லாமல் விட்டு விட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போதுதான் புரிகிறது. என்னிடம் வேறு படங்கள் இல்லை. அரையாண்டுத் தேர்வு லீவில் எப்படியாவது மெட்ராஸ் வந்து உங்களைப் பார்க்கிறேன். இப்போது நல்ல டான்ஸூம் ஆடுவேன். பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதலாவது வந்திருக்கிறேன். அன்புடன், செல்வேந்திரன், 23/25 நின்றசீர் நெடுமாறன் தெரு, நெல்லை டவுண்.

          கடைசி போஸ்ட் கார்டுக்குப் பதில் வந்தது. ஒரு பெரிய கவரில் கொட்டை எழுத்துக்களில் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. எனக்கு வந்த முதல் கடிதம். அவசரமாக கிழித்தேன். உள்ளே நான் இதுவரை அனுப்பிய படங்கள் கடிதங்கள் இருந்தன. சில கவர்கள் உடைக்கப்பட கூட இல்லை.

          அன்புள்ள தம்பி, நான் சிந்தாதிரிப்பேட்டை போஸ்ட்மேன். நீ இதுநாள் வரை கடிதங்கள்  அனுப்பிய முகவரியே மெட்ராஸில்  கிடையாது. விலாசம் தவறானது. அனுப்புனர் விலாசம் இல்லாததால் கடிதங்கள் திருப்பி அனுப்பப்படாமல் அலுவலகத்திலேயே இருந்தன. தொடர்ந்து கடிதங்கள் வந்ததால் சில கடிதங்களைப் பிரித்து படித்துப்பார்த்தேன். பாவமாக இருந்தது. உன்னைப் போன்ற மாணவர்கள் வாழ்க்கையில் படித்து முன்னேறி பெற்றோர்களுக்குப் பெருமை தேடித்தரவேண்டும். சினிமா ஆசையால் கிளம்பி வந்து மெட்ராஸில் சீரழியும் சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஒழுங்காகப் படி. உனது படங்களை உன்னிடமே அனுப்பியுள்ளேன். இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுத வேண்டாம்.

என் கையில் நாங்கள் எடுத்த குரூப் போட்டோ இருந்தது. அதில் கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் மடியில் நான் கூச்சத்துடன் காமிராவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சுரேஷ் அண்ணன் என்னை ஏமாற்றியிருப்பார் என நான் நினைக்கவில்லை. நடிகர் சண்முகசுந்தரத்தைப் பார்த்தால் அவர் என்னவானார் என விசாரிக்க வேண்டும். 

Wednesday, October 29, 2014

விஜயின் கதை

விஜயையும் ஆவேசத்தையும் பிரிக்க முடியாதுதான். ஆனாலும் ஒரு இரண்டரை வயது புலிக்குட்டிக்கு இத்தனை ஆவேசமா? நினைக்கையில் ராஜேந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது. பத்து நாட்களில் எத்தனை களேபரங்கள். மனித மாமிசம் சுவைக்கப் பழகி விட்ட புலியை விட்டு வைத்திருப்பது மானுட  விரோதமென அப்போதே சிலர் சமூக ஊடகங்களில் திருவாய் மலர்ந்திருந்தார்கள். இப்போது பிரச்சனை இன்னும் முற்றிப்போய் விட்டது.

சம்பவத்திற்குப் பின் விஜயை நெருங்க முடியவில்லை. வழக்கமாக உணவு கொடுக்கச் செல்லும் குட்டைய்யன், கூண்டை சுத்தம் செய்பவர், பற்களையும் நகங்களையும் அவ்வப்போது பரிசோதிக்கிற மருத்துவ உதவியாளர், உடல் எடை அதிகரித்து விடாமலும், செரிமானப் பிரச்சனைகள் உருவாகி விடாமலும் இருக்க உடற்பயிற்சி அளிக்கிற நிபுணர் என எவரையும் நெருங்க விடுவதில்லை. இவ்வளவு ஏன் அவனைப் பெற்றெடுத்த பெண்புலி பெரியநாயகியாலே கூட விஜயை சமாதானப்படுத்த முடியவில்லை. பாசத்தோடு அருகில் சென்று நாவால் நக்கிய பெரிய நாயகியின் முகரையில் படாரென்று ஒரு போடு. வலது கண்ணில் நகம் கீறி ஒரு வாரமாக கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறது. சரி ஒருவேளை துணை தேவைப்படுகிறதோ என கல்கத்தாவில் இருந்து சில பெண்புலிகளை வரவழைத்து கூண்டிற்குள் விட்டார்கள். இரவுக்குள் ரத்தக்களரி ஆகிவிட்டது. கிழிந்த தாடைகளை தைப்பதற்கு நரம்புகள் மிச்சமில்லாத அளவிற்கு ருத்ர தாண்டவம்.

ராஜேந்திரன் தேசம் அறிந்த அனிமல் பிகேவியரிஸ்ட். பல காடுகளில் இந்திய அரசுக்காக உழைத்து விட்டு ஓய்வு பெற சில வருடங்கள் இருந்த போது இந்த மிருகக்காட்சி சாலையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது நெடிய அனுபவத்தில் இத்தனை முரண்டு பிடிக்கிற ஒரு காணுயிரை அவர் கண்டதேயில்லை. சர்வதேச அளவில் புகழ்மிக்க உயிரியலாளர்கள் பலர் வந்து முயற்சித்துப்பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினர். அதற்குள் விஷயம் வெளியே கசிந்து விட்டது. எவனோ ஒரு ரிப்போர்ட்டர் மிருககாட்சி சாலை பராமரிப்பாளன் ஒருவனின் மண்டையைத் தடவி விஷயத்தை வாங்கி விட்டான். இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறது கொலைகாரப் புலி? என கொட்டையெழுத்தில் கேனத்தனமான கவர் ஸ்டோரி. ஒரு புலியின் வாயில் ரத்தம் வழிந்து ஓடுகிறது. சுற்றிலும் மானுட உடல்கள். லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கியிருந்தார். பத்திரிகை செய்தியை அப்படியே லவட்டி சேனல்கள் ஸ்க்ரோலிங் ஓட்டிக்கொண்டிருக்கின்றன. புதியதலைமுறையில் சாயங்காலம் மனுஷ்யபுத்திரன் நேரலையில் இது குறித்துப் பேச இருக்கிறாராம். நினைத்தாலே வயிறு கலங்குகிறது.

காலையிலேயே மனிதவளத்துறை அமைச்சகத்திடம் இருந்து அழைத்து விளக்கம் கேட்டார்கள். பேசிய உயரதிகாரி அமைச்சர் கடும் கோபத்தில் இருக்கிறார். மனித உயிர்களுடன் விளையாட வேண்டாமென எச்சரிக்கச் சொன்னார் என்றார். இந்த அமைச்சருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சருக்கும் உட்கட்சிப்பூசல். அந்த வாய்க்கால் தகராறினை வெள்ளைப்புலி விவகாரத்தில் பைசல் செய்யப் பார்க்கிறார். ஏற்கனவே சூழல் அமைச்சர் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. காணுயிரின் உயிரைப் பறிக்கும் உரிமை எவனுக்கும் இல்லை. சொல்லப்போனால் புலி நிச்சயம் மானுடனை விட மகத்தானது. கூண்டிற்குள் விழுந்தவனைத்தான் அது தின்றது. கூடு விட்டு கூடு பாய்ந்தல்ல.. என மனிதவள அமைச்சர் அடிக்கடி பதவிக்காக கட்சி மாறுவதை சூசகமாக வைத்து ஒரு பொது விழாவில் பேசி விட்டார்.

வழக்கம்போல மிருகக்காட்சி சாலை மருத்துவர்கள் மீட்டிங் போட்டு பேசினார்கள். முந்திரி பக்கோடாக்கள் பல தட்டுகள் காலியாகியும் உருப்படியான யோசனை பெயரவில்லை. தூங்கிக்கொண்டிருந்த ஒரு சீனியர் திடீரென விழித்து நாம் ஏன் பாங்காங் புலிக்கோவிலில் இருந்து யாரையாவது வரவழைக்கக்கூடாது? புலிகளை பூனைகளாக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள் என சொல்லி விட்டு இருப்பதிலேயே பெரிய பக்கோடாத்துண்டைப் பெருமிதத்துடன் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.

***


ஏர்போர்ட்.

சில்க் விமானத்தில் வந்திறங்கிய பிட்சு சங்லீங் பார்ப்பதற்கு முழுதாக வேக வைத்து உரித்த உருளைக்கிழங்கு போல இருந்தார்.  கிராமத்து கிழவிகள் ஜாக்கெட் போடாமல் புடவையைச் சுற்றியிருப்பது போல காவி உடுத்தியிருந்தார் பிட்சு. ராஜேந்திரன் இதற்கு முன்பு பார்த்த பிட்சுகளெல்லாம் பிசைந்த பரோட்டா மாவு நிறத்தில் இருப்பார்கள். இவர் மாநிறமாக இருந்தார். இலங்கைக்காரராகக் கூட இருக்கலாம். உதடுகளைப் பிரித்து பல மாதங்களாகியிருக்குமோ என ராஜேந்திரனுக்கு சந்தேகம் வரும் அளவிற்கு பிட்சு மெளனமாக இருந்தார். எதையும் பார்வையாலே கேட்டார். அவரது முகபாவத்தைப் புரிந்து கொண்டுதான் சிசுருஷைகள் செய்யவேண்டியிருந்தது.  கருவிழிகள் எப்போதும் மேல் நோக்கியே இருந்தன. இன்னதென்று பிரித்தரிய முடியாத மெள்ளிய மணம் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருந்தது.

முதல் இரண்டு நாட்கள் பிட்சு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அறை வாசலில் புளித்த மணம் மட்டும் உலவிக்கொண்டிருந்தது. மூன்றாவது நாள் படாரென கதவைத் திறந்து தலையை ஒரு உதறு உதறினார். கண்கள் சிவந்திருந்தன. புலி எங்கே என்பதைத்தான் அப்படிக் கேட்கிறார் என்பதை உணர்ந்து விஜய் இருக்கும் கூண்டருகே அழைத்துப் போனான் குட்டைய்யன். சில நிமிடங்கள் விஜயை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். விஜயும் சங்லீங்கை உற்றுப்பார்த்தது. பிறகு உடம்பை ஒரு முறை உதறி சிலிர்த்தது. சர்ரென்று சிறுநீரைப் பீய்ச்சி விட்டு கூண்டுக்குள் இருந்த குகை போன்ற அமைப்புக்குள் சென்று விட்டது. சங்லீங் முழந்தாளிட்டு அமர்ந்து இரண்டடி நீளமுள்ள சில பத்திகளை எடுத்துப் பற்றவைத்தார். கண்களை மூடி தியானித்தார். பிறகு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதை இரண்டு நடுவிரல்களுக்கு மத்தியில் வைத்து வான்நோக்கி வணங்கினார். மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ராஜேந்திரனுக்குக் கடுப்பாக இருந்தது. இத்தனை வருடங்கள் படித்து காட்டில் அல்லாடி தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் தன்னைக் கைவிட்டதை நினைத்து ஆற்றாமை பொங்கியது. எங்கிருந்தோ வந்த ஒரு சன்னியாசி இங்கே வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார். பிட்சுவின் உடல் குலுங்கியதைப் பார்த்ததும் ராஜேந்திரனின் சிந்தனை தடைபட்டது. கண்களை மெள்ளப் பிரித்த பிட்சு கிணத்துக்கடவு எங்கே இருக்கிறது? நான் தனியாக அங்கே செல்ல உடனே ஏற்பாடு செய்யுங்களென அழகான தமிழில் சொன்னார்.

ராஜேந்திரனுக்கு வியப்புத்  தாளாவில்லை. ஸ்வாமீ தங்களுக்குத் தமிழ் தெரியுமா?

காற்றிலசையும் சருகுகளின் மொழியைக் கூட கவனிப்பவனே ஞானியாகிறான். பதிலுக்குக் காத்திராமல் காரில் ஏறி கிளம்பிவிட்டார் சங்லீங். ஃப்ளிப்கார்ட்டில் ஸென் தத்துவங்களை ஆர்டர் செய்து வாசிக்க வேண்டுமென நினைத்துக்கொண்டார் ராஜேந்திரன். கார் சென்று மறையும் வரை காத்திருந்த கூண்டு பராமரிப்பாளன் குட்டைய்யன்  'சார் ஒண்ணு கவனீச்சிங்களா சார்.. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு நம்ம விஜய் ஒரு காலை லேசா தூக்கி ஒண்ணுக்கு அடிச்சாப்பல..'

***

சங்லீங் சென்று நான்கைந்து நாட்களாகியும் அணக்கம் ஏதும் இல்லை. அவரது அறையை கூட்டிப் பெருக்கச் சென்ற குட்டைய்யன் உள்ளே கோடு போட்ட அன்டிராயர்கள் கிடப்பதாகச் சொன்னபோதுதான் ஏதோ வில்லங்கமென கிணத்துக்கடவிற்கு ஆளனுப்பினார் ராஜேந்திரன். டாஸ்மாக் பார் ஒன்றில் அலங்கோலமாகக் கிடந்த சங்லீங்கை அள்ளி வந்தார்கள். விட்ட அறையில் மப்பு தெளிந்த பிட்சு தன் கொசுவர்த்தியை கொளுத்தினான்.

எம் பேரு சங்கரலிங்கமுங்க. கிணத்துக்கடவுதானுங்க ஊரு. தாய்லாந்துல வேலைன்னு காட்டை வித்துப் போட்டு  போனேனுங்க. கூட்டிட்டுப் போனவன் ஒரு எளநீ கடையில சேத்து விட்டுட்டு ஓடிட்டானுங். ஒருநா ஒருத்தரு வந்து புங்கட்டுல ஒரு ஸூவுல வேலை இருக்கு. புலிக்கு கறி போடறது. ஆனா, மொட்டையடிச்சு காவி கட்டிக்கணும்னாரு. மூணு வேள சோறு. நல்ல சம்பளம். சரின்னு போயிட்டேனுங்க. கொஞ்ச நாள்ல புலிக்கு எப்படி டோப்பு கொடுக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேனுங்க. புலிக்கு அறுவது நமக்கு நாப்பதுங்க.. எந்நேரமும் கெரகம் மப்புதானுங்க.. இந்தாங்க இந்த மருந்தை நெதமும் அவிச்ச கோழிக்கறியில கலந்து கொடுத்தீங்கன்னா.. செல்லம் போல உங்க கூட வருமுங்க.. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அரைத்தூக்கத்துலயே கும்பகர்ணனாட்டம் கெடக்குமுங்க.. என்னய விட்ருங்க நான் தாய்லாந்துக்கே ஓடிப்போயிடறனுங்க...

***

அடுத்த மீட்டிங். சிலர் வற்புறுத்தி சொன்னதால் இந்த முறை வெங்காய பக்கோடா. பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி ராஜேந்திரன் கவலையோடு பேசிக்கொண்டிருந்தார். பூனம் பாண்டே புலியை கொல்லாதீர்கள் என கோரிக்கை விடுக்கும் விதமாக உடம்பில் மஞ்சள் வர்ணம் (மட்டும்) பூசி ட்வீட்டரில் போஸ் தட்டியிருந்ததை ஒருவருக்கொருவர் ரகசியமாக வாட்ஸப்பில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். கடுப்பான ராஜேந்திரன் 'இத விட ஒரு சூப்பரான பூனம் பாண்டே வீடியோ என்கிட்ட இருக்கு. உருப்படியான ஐடியா சொல்றவங்களுக்கு மட்டும் அதை ஷேர் பண்ணுவேன்..' என அறிவித்தார். சடாரென ஆளாளுக்கு ஐடியாக்களை அள்ளித் தெளித்தனர்.

வயதில் இளையவனான ரஞ்சித் ஒரு புது யோசனையை சொன்னான். நாம் ஏன் துறைசார் நிபுணர்களையே இதற்காகத் தேடுகிறோம். பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிற ஒரு கார்ப்பரேட் கன்சல்டண்டினை அணுகினால் என்ன? அவர் புதிய கோணத்தில் பிரச்சனையை அணுகலாம் இல்லையா என்றான். சபாஷ்..அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஐடியா.. என ராஜேந்திரன் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். இளைஞன் அவரது பாக்கெட்டைப் பார்த்து அதிர்ந்தான். ராஜேந்திரன் வைத்திருந்தது நோக்கியா 1100.

***
பீட்டர் டிரக்கரின் கலையுலக வாரிசான திரு.மீட்டர் டிராக்டர் வரவழைக்கப்பட்டார். விஜய் சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் மீட்டர் ஊன்றி வாசித்தார். சம்பவம் நடப்பதற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட வீடியோக்களை பெரிய எல்சிடி திரையில் ஓடவிட்டு ஓடவிட்டுப் பார்த்தார். அவ்வப்போது தனது லேப்டாப்பில் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பல்வேறு எக்ஸெல் ஷீட்டுகளை உருவாக்கினார். சில அகலத்தில் மூன்று மைல் தூரம் வரை வந்தன. விஜய் பிறந்த போது பிரசவம் பார்த்த குட்டைய்யனை சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எழுதச் சொன்னார். விஜயின் தாயார் பெரியநாயகி மற்றும் தந்தையார் டேமியன் மார்ட்டீன் ஆகிய இருவரது பெர்பார்மன்ஸ் அப்பரைசல் இருக்கிறதா எனக் கேட்டார். ராஜேந்திரன் முளித்தார். அப்படி ஒரு வழக்கம் இதுவரை இருந்ததில்லை இனிமேல் ஃபைல் செய்து வைக்கிறேன் என பம்மினார். மார்ட்டீன் பெரிய காதல் மன்னனாக பூங்காவில் வலம் வந்ததையும் லேடீஸ் மிருகங்கள் மத்தியில் 'புலிகேசி' எனும் செல்லப்பெயர் அவருக்கிருந்ததையும் மீட்டர் கண்டுபிடித்தார். பூங்கா ஊழியர்கள் வாயடைத்துப் போயினர்.

ஏ.சி.நீல்சனில் இருந்து சில விற்பன்னர்களை மீட்டர் டிராக்டர் வரவழைத்தார். அவர்கள் இந்தியா முழுக்க புலிகளிடம் கடி வாங்கியவர்களைத் தேடிப்பிடித்து சில தகவல்களைத் திரட்டி வந்தனர். இன்போஷிஸ்-ல் இருந்து சில மென்பொருள் வல்லுனர்கள் வந்து தோள்களைக் குலுக்கி கீழுதட்டைப் பிதுக்கி என்னென்னவோ பேசினார்கள். இவரு ஏதோ சொந்த வேலையும் சேர்த்துப் பார்க்கிறார் என குட்டைய்யன் சந்தேகப்பட்டான். ராஜேந்திரனிடம் சொன்னபோது குட்டையனை அவர் கடிந்து கொண்டார். ஏற்கனவே, நீ டோட்டல் நெகட்டிவ் அப்ரோச் என சைக்கோமெட்ரிக் டெஸ்டில் தெரியவந்துள்ளது என்றார். குட்டைய்யன் நமக்கெதுக்குடா வம்பு என ஒதுங்கிக்கொண்டான்.

மீட்டர் டிராக்டர் புலியுடனான தன் சவாலுக்கு நாள் குறித்தார். ஒரு பிரம்மாண்டமான மீட்டிங் ஹால் செட் போடப்பட்டது. விஜய் கழுத்தில் ஒரு பெரிய டை கட்டி இழுத்து வந்தார்கள். எல்சிடி ஸ்கிரீன் உயிர்பெற்றது. மீட்டர் தொண்டையை கனைத்துக்கொண்டு பவர்பாயிண்ட் பிரசண்டேசனை ஓட விட்டார்.. 'No one can in this world cannot live with past laurell.. ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டோம்.. ஒரே நாள்ல பெரிய மீடியா ஸ்டாராயிட்டோம்கிற இறுமாப்பு is just unacceptable. நான் சில தகவல்களை உனக்கு போட்டுக்காட்ட விரும்புறேன். உன் தாய்வழிப் பாட்டி  மிஸஸ் சம்பாவதி குமாவுன் ஏரியாவுல மிகப் பெரிய சொர்ணாக்கா. 436 பேரை பொடனியிலயே போட்டவர். 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மான்னு' கேட்டுக் கதறாத ஆட்களே கிடையாது. ஆனா என்னாச்சி.. சீமையிலருந்து வந்த ஜிம் கார்பெட் அண்ணாச்சி சிம்பிளா ஸ்கேச்சு போட்டுட்டார். அவ்ளோ பெரிய அக்காடக்கராலேயே சர்வைவ் ஆக முடியல.


பாப்புலாரிட்டி ஆஸ்பெக்ட்லயும் சில டேட்டாஸ் உனக்கு காட்ட விரும்பறேன். நீ பஞ்சத்துக்குப் பாப்புலர் ஆன புலி. ஆனா பரம்பரை பரம்பரையா சோஷியல் மீடியாவுல பாப்புலர் ஆன புலிகள் நிறைய்ய பேரு இருக்கிறாங்க. தென்னாப்பிரிக்காவுல ஜான் வார்டியை கடிச்சு வச்ச கல்கத்தாக்காரன், லூசியான ஸ்டேட் யுனிவர்சிட்டி சின்னத்துல பரம்பரை பரம்பரையா நாட்டாமையா இருக்கிற மைக் & சன்ஸ் குடும்பத்தார், டேவ் சல்மோனியின் வளர்ப்பு பிள்ளைகள், கெவின் ரிச்சர்ட்ஸன் தோட்டத்துல வளர்ற நம்ம செவளை இவங்கள்லாம் தினமும் லட்சக்கணக்குல லைக்ஸ் வாங்குறவங்க. அவங்களே அமைதியா இருக்கும் போது யூ ப்ளடி Non Performing culprit... ஸ்லைடுகள் ஒளிர்ந்து கொண்டே இருந்தன. மீட்டர் பேசிக்கொண்டே இருந்தார். விஜயிடமிருந்து வல்லிசாக சத்தம் வரவில்லை. அவனது கனவில் சைபீரிய அழகிப்புலி ஐரீனாவுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

***
இதற்கு மேல் செய்வதற்கொன்றுமில்லை. விதி விட்ட வழியென அனைத்து முயற்சிகளையும் கைவிட்ட நாளொன்றில் ராஜேந்திரனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தன்னால் புலியை சரி செய்து விட முடியுமென்றும் அதற்குத் தேவையானதெல்லாம் ஒரு மைக்கும் இரண்டு ஸ்பீக்கர்களும்தான் என ஒரு இளைஞன் எழுதியிருந்தான். தன்னுடைய முயற்சியினால் புலி பழைய நிலைக்குத் திரும்புவதுடன் இனி வாழ்நாளில் எந்த உயிரினையும் கொல்லத் துணியாது என்பதையும் உறுதி பட தெரிவித்திருந்தான். சல்லிப் பைசா செலவில்லை என்பதால் முயற்சித்துப் பார்க்கலாமென குட்டைய்யனும் எடுத்துச் சொல்ல ராஜேந்திரன் அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

புலி இருந்த இடத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டு ஒரு தனியறையில் இருந்த மைக்குடன் இணைக்கப்பட்டது. தான் பேசும்போது யாரும் உடனிருக்க வேண்டாமென இளைஞன் கேட்டுக்கொண்டதால் அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சிசி கேமரா மூலம் புலியின் செயல்பாடுகளை தனது மேஜையில் உள்ள கணிணி திரையில் ராஜேந்திரன் கண்காணித்துக்கொண்டிருந்தார்.

இளைஞன் கையில் சில வெள்ளைத்தாள்கள் இருந்தன. மைக்கை லேசாக விரலால் தட்டி விட்டு மெள்ள பேசத் துவங்கினான். வலது முன்னங்காலை தலை மீது வைத்து ஒருக்களித்துப் படுத்திருந்த விஜய் லேசாக தலை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு, சடாரென்று உதறி எழுந்து நின்று உடலை ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான். குரல் வரும் திசை எது என தேடினான். ராஜேந்திரன் பரவசமடைந்தார். ஸ்பீக்கரை நோக்கி விஜய் மெள்ள நடந்தான். அறைக்குள் இளைஞன் விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ஸ்பீக்கரை இரண்டு மூன்று முறை சுற்றி வந்தான் விஜய். மெள்ள சீறினான். விஜயின் உடல்மொழியில் ஏற்பட்ட மாற்றத்தினை ராஜேந்திரன் உணர்ந்தார். அவன் பதட்டமாய் இருக்கிறான். விஜயின் உடல் லேசாக அதிர்ந்தது. கண்கள் கலங்கின. அறைக்குள் இளைஞன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு பக்கங்களாக வாசித்துக்கொண்டிருந்தான். புலியின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. திடீரென நிகழ்ந்தது அந்த மாற்றம். விஜய் தன் பின்னங்கால்களை நிலத்தில் ஊன்றி முன்னங்கால்கள் இரண்டையும் மேல் நோக்கி தூக்கியபடி எழுந்து நின்றான். ராஜேந்திரன் தன் வீட்டு டாமியைப் போல விஜய் நிற்கிறானே என ஆச்சர்யம் கொண்டார். பசித்தாலும் புல்லைத் திங்காத சம்பாவதி வழி வந்த விஜய் உலகப்புலிகள் வரலாற்றில் யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தான். தன் முன்னங்கால்களால் நெஞ்சில் அடித்துக்கொண்டு கேவிக்கேவி அழுதான். ராஜேந்திரனும் குட்டைய்யனும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களது காணுயிர் வாழ்வில் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் ஒரு மிருகத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். அதன் அழுகை அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறி சுருண்டு விழுந்து விட்டது. அதன் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. புலிக்கு ஏதேனும் ஆகிவிடும் எனப் பயந்து கதவைத் தட்டி இளைஞனை நிறுத்தச் சொன்னார்கள்.

குட்டைய்யன் அலறியபடி ஓடி வந்தான் 'ஐயா… இந்த *&$%$#$% புலியக் கொன்னே புட்டான்யா..'

***
விசாரணையில் அந்த இளைஞன் தமிழிலக்கிய வாசகனென்றும், டில்லி வெள்ளைப்புலி சம்பவத்தின் போது தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய குறிப்புகள் - கவிதைகள் - அபிப்ராயங்களை வாசித்துக்காட்டியிருக்கிறான் என்றும் தெரியவந்தது. தாங்கவியலாத குற்றவுணர்ச்சி தந்த மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு புலி மரணித்திருக்கிறது என பிரேத பரிசோதனையில் ராஜேந்திரன் தெரிவித்தார். ஜெயமோகன் வெண்புலி-விவாதங்கள் எனும் தலைப்பில் புதிய இணையதளம் ஒன்றைத் துவங்கினார்.

***

முற்றிற்று (எனக்கு) 

Friday, October 24, 2014

சென்னையில் வெண்முரசு விழா!

வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. 

நவம்பர் 9 ஆம் தேதி, ஞாயிறு மாலை 5 மணிக்கு, சென்னை, எழும்பூர் மியூசியம் தியேட்டரில், வெண்முரசு நூல்களின் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்த பாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.

விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

நாள் : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம்
நேரம் : மாலை 5 மணி

தொடர்புக்கு: 


பாலா: m_bala_s@hotmail.com

Sunday, October 12, 2014

தமிழகத்தின் மண்ணியல் நிபுணர்கள்

வெள்ளிக்கிழமை காலை. அறிவொளி நகர்  பேருந்து நிறுத்தம். அருகமை அம்மன் கோவில் காற்றலைகளில் கானமழை பொழிந்து கொண்டிருந்தது. மாணவர்களும் மாதச்சம்பளக்காரர்களும் சில மாடுகளுமாக பேருந்திற்காக காத்திருந்தோம். எல்.ஆர் ஈஸ்வரியையும் மீறின வலுத்த பெண் குரல் ஒன்று பச்சை மஞ்சள் ஊதா நிற வார்த்தைகளில் திருப்பள்ளியெழுச்சி பாடத் துவங்கியது. குரல் வந்த திசையில் ஒரு பொறுப்புள்ளகுடிமகனுக்கு இடியுடன் கூடிய மழை போல வசையுடன் கூடிய அடிகள் அன்னாரது இல்லத்தரசியால் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

வசைகளின் தலைநகராம் நெல்லைச் சீமையைச் சேர்ந்த எனக்கே பல வார்த்தைகள் புதிதாக இருந்தன. தமிழில் இத்தனைப் புதிய கெட்ட வார்த்தைகள் உருவாகியிருப்பதை நினைத்து ஆச்சர்யம் கொண்டேன். மாணவர்களுக்காக அரசாங்கம் கொடுத்த  இலவச லேப்டாப்பை யாருக்கும் தெரியாமல் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு குவார்ட்டருக்காக விற்று விட்டார் என்பது வசைகளினுடாக தெரியவந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் மகள் நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கலைக்கல்லூரிக்குச் சென்று வர பயன்படுத்திய சைக்கிளை (அதுவும் தமிழக அரசு கொடுத்ததுதான்) விற்றுக்குடித்த சாதனையை செய்தவர் இவரென்பதும் தெரியவந்தது.

வெள்ளிக்கிழமை   மதியம். ஒப்பனக்கார வீதி அரசினர் மாநகராட்சி மகளீர் பள்ளி. பள்ளிக்கூட வாசலிலேயே  ஒருவர் வேட்டி விலகிக்கிடக்க விழுந்து கிடந்தார். அவ்வப்போது சிரமப்பட்டு தள்ளாடி தழும்பி எழுந்து நிற்க முயற்சித்து மீண்டும் விழுந்து, அடிவயிற்றிலிருந்து காறி காறி துப்பி யாரும் நெருங்க முடியாத மோன நிலை. இதுவே தனியார் பள்ளி வாசலெனில் செக்யூரிட்டி அடி வெதுப்பி விடுவார். சேரிடம் தேர்ந்து சேர் என்பது இதுதான் போலிருக்கிறது.

வெள்ளிக்கிழமை மாலை. வின்செண்ட் சாலை சிக்னல். பச்சை விளக்குக் காத்திருந்த போது கண்ட காட்சி இது. மூடிக்கிடந்த கடை வாசலில் ஒருவர் தன்னிலை மறந்து கிடக்கிறார். அவரை நெருங்கிய ஒருவர் விழுந்து கிடந்தவரின் சட்டைப்பைக்குள் கையை விட்டு உள்ளே இருந்தவற்றை வெளியே எடுக்கிறார். ஒரு செல்போன், ரசீதுகள், சில ரூபாய் தாள்கள். செல்போனையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு ரசீதை அவரது முகத்திலேயே எறிந்து விட்டு சாவகாசமாகக் கிளம்பிவிட்டார். பட்டப்பகலில் நடந்த இந்தப் பகல் கொள்ளையை மொத்த சிக்னலும் பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. (மேற்படி, நபர் முழு நேர தொழிலாக இதைச் செய்யும் பட்சத்தில் நாளொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். மாதக் கடைசியில் எனக்கே இப்படி கிளம்பி விடலாமா என்றிருக்கிறது. மூன்று பச்சை போர்டு கடைகளுக்குப் போனால் போதும். ஒரு கடை வாசலில் சராசரியாக நான்கு பேர் மண்ணாராய்ச்சியில் ஈடுபட்டிருப்பர். மிஞ்சிய வரைக்கும் லாபம். ரொம்ப தேவை என்றால் மத்திய பேருந்து நிலையம் போகலாம். அங்கே காவல்துறை நமது நண்பன் எனும் நம்பிக்கையில் நாற்பது பேராவது கிடக்கிறார்கள்.)

வெள்ளிக்கிழமை இரவு. உக்கடம் பேருந்துநிலைய பின்வாசல். ஈருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என் வீட்டிற்குச் செல்ல நான் தெரிவு செய்திருக்கும் பாதையில் 6 சோமபான கடைகள் மெயின் ரோட்டில் இருக்கின்றன. அவ்வளவுதானா என வாசகர்கள் கேட்பது புரிகிறது. வீடு திரும்புகையில் கண்ணில் விழும் மழைப்பூச்சிகளைத் தவிர்க்க ஹெல்மெட் அணிந்து தப்பித்துக்கொள்கிறேன். குறுக்கே விழும் குடிமகன்களிடம் தப்பிக்கவே முடிவதில்லை. உக்கடம் பேருந்து பின்புற வாசலைக் கடக்கையில் எவ்வளவு நிதானித்தும், வளைத்தும், திருப்பியும் கூட ஒருவர் குறுக்கே விழுந்து விட்டார். தடுமாறி எழுந்து நின்று சரிந்து தொங்கிய தலையை பல குத்துகள் வாங்கி சரிந்த குத்துச்சண்டை வீரர் தலையை உயர்த்துவது போல  உயர்த்தி பழரச மணம் கமழும் வாயால் 'குடிச்சிருக்கீயா..போதையில வண்டி ஓட்டற டிரங்கன் மங்கீ..' என வாழ்த்தினார்.


வெள்ளிழமை நள்ளிரவு. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என் குடும்பத்தை எழுப்பியது ஒரு அலைபேசி செய்தி! தனது அலுவலகத்திற்கே எதிரேயுள்ள கடையில் பழம் வாங்கச் சென்ற என் குடும்ப நண்பரை மரண வேகத்தில் வந்த பைக் மோதியது. மோதியது கல்லூரி மாணவன். முழுப்போதையில் முன்னால் காரை ஒட்டிச் சென்ற நண்பர்களை சேஸ் செய்து வந்திருக்கிறான். இவனும் முழுப்போதை. நண்பர் சம்பவ இடத்திலேயே மரணித்து விட்டார். பிரேத பரிசோதனைக் கூடத்தில் நண்பரது மனைவியும், பிள்ளைகளும் மார்பில் அடித்துக்கொண்டு கதறியது இன்னமும் என் காதில் ஒலிக்கிறது. முப்பதாண்டு கால இல்லறத்தை முப்பது நொடிகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது போதை.

தமிழ் நாட்டிற்குப் புதிதாக வரக்கூடியவர்களுக்கு இயல்பாக ஏழக்கூடிய சந்தேகங்கள் என சில உருவாகியுள்ளன. பகலில் எதிரி நாட்டு விமானம் ஏதும் வந்து குண்டு வீசிச் சென்றதா.. பலர் வீதிகளில் விழுந்து கிடக்கிறார்களே என்பது அதில் பிரதானமான ஒன்று. என் ஆந்திர நண்பர் தமிழர்கள் புதிய வகை நடனமொன்றை வீதியில் ஆடியபடியே செல்கின்றனர் என்கிறார். நிறைய்ய மண்ணியல் நிபுணர்கள் உண்டே உங்களூரில் நிலத்தில் குப்புறக் கிடந்து மண்ணை முகர்ந்து கொண்டே இருப்பார்களே என்கிறார் இன்னொரு வெளிமாநில நண்பர் கிண்டலாக.

தமிழகம் உலகில் குடிவெறியர்கள் மலிந்த நகரங்களான ரியோ டி ஜெனிரோவைப் போல, பிரேசிலியா போல, மெக்ஸிகோ நகரங்களைப் போல மாறி எவ்வளவோ நாட்களாகி விட்டன. தனிநபர் ஆல்கஹால் பயன்பாட்டு புள்ளி விபரங்களை  ஐநா சர்வதேச  சுகாதார நிறுவனம் வெளியீட்டு வருகிறது. தற்சமயம் நாடுகள் அளவில் நடைபெறும் இந்த ஆய்வு மாநில அளவில் நிகழ்ந்தால் தமிழகம் நிச்சயம் ரியோ டி ஜெனிரோவை பின்னுக்குத்தள்ளி விடும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

விளிம்பு நிலை மக்களில் பெரும்பான்மையான ஆடவர்கள் இன்று எந்த வேலையையும் செய்ய லாயக்கற்ற குடிநோயாளிகளாக மாறி விட்டனர். குடும்பத்திற்கும், கணவன் குடிப்பதற்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டு பல நாட்களாயிற்று. குடிவெறியினால் நிகழும் பாலியல் குற்றங்கள் தனி அத்தியாயம் எனில், குடிநோய்க்கு ஆளாகி தாம்பத்திய தகுதியை இழந்த ஆண்களால் குடும்பங்களில் பெருகி வரும் சமூகப் பிரச்சனைகளையும் கேள்விப்படுகிறோம். எளிய சமூக மனிதனாக என் கேள்வியெல்லாம் நம்மை ஆள்வோர்களின் கண்களுக்கு தமிழ் நிலத்தின் இந்த அகக் காட்சிகள்  தட்டுப்படுகின்றனவா என்பதுதான். மன்னராட்சியின் எல்லா பந்தாக்களையும் ஆள்வோர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். படைபரிவாரங்கள், தோரணங்கள், கட்டியங்கள், ஒற்றறிந்து சொல்ல உளவுத்துறை, கண்ணசைவுக்கு காத்திருக்கும் அமைச்சர் குழாம், மாநாடுகளில் மணிமகுடம் சூட்டி வீரவாளும் செங்கோலும் கூட வழங்கப்படுகிறது. ஏன் நம் பழந்தமிழ் மன்னர்களைப் போல இவர்கள் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வரக்கூடாது? ஓரெயொருநாள் ஒரெயொரு இரவு இதைச் செய்தாலே, தமிழகம் குடிநோயாளிகளின் கூடாரமாக  மாறியிருக்கிறதை தெரிந்து கொள்ளலாமே.

உண்மையின் இன்று தமிழர்க்கு தேவை அம்மா உணவகங்களோ, அம்மா மருந்தகங்களோ, அம்மா பல்பொருள் அங்காடிகளோ அல்ல. உடனடி தேவைஅம்மா குடிநோயாளிகள் மறுவாழ்வு மையங்களே. தனியார் மையங்கள் நிரம்பி வழிகின்றன. குடல் வெந்து போனவர்களுக்கு சிகிழ்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லை. வெள்ளையானை நாவலில் ஜெயமோகன் சித்தரிக்கும் தாதுவருஷத்துப் பஞ்ச காட்சிகளைப் போல மருத்துவமனைகள் காட்சியளிக்கின்றன

இந்தப் பாழ்நிலத்தின் புறக்காட்சிகளைக் காண்கிற சமகாலத்தவன் பழந்தமிழ் இலக்கியங்களின் நகரச்சித்தரிப்புகளை சுகமான பகற்கனவு என நினைத்துக்கொள்வான் இல்லையா?!

(12-10-2014 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)