மாஸ்டர் செல்வேந்திரன்
அசல் அட்டையினால் செய்யப்பட்டு உலோக பாகத்திற்கு சில்வர்
நிற பேப்பரும் கைப்பிடிக்கு கோல்டன் பேப்பரும் ஒட்டப்பட்ட வாள்கள் அருந்தமிழ் மன்றத்தில்தான்
அதிகம். பாரதி கலாமன்ற வாள்கள் பெரும்பாலும் தமிழ் மன்னர்களுடையது. சற்று லேசாக வளைந்த
வாள்கள். தகரத்திலோ அல்லது மரத்திலோ செய்யப்பட்டு கொழுவிக்கொள்ளும் வசதியுள்ள கைப்பிடிகளையுடையவை.
எடை அதிகம். நீளமும் அதிகம். எதிரிகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் சாய்க்க தோதுப்படாது.
என் பிரியமெல்லாம் பார்க்க பட்டைக்கத்தியைப் போல நீண்டும் எளிய கைப்பிடியும் உள்ள கிரேக்க
வாள்களே. எடை குறைவானவை. எடுத்துச் சுழற்ற முடிபவை. குறிப்பாக தவறியும் காயம் ஏற்படுத்தாதவை.
ரோமாபுரி வீரர்கள் அணியும் தலைக்கவசமும் முதுகில் தொங்க விடும் சல்லாத்துணியும் கூட
அருந்தமிழ் மன்றத்தில்தான் அதிகம் உண்டு.
இரு வகையான
நடிகர்கள் இருந்தார்கள். நடிக்கிறேன் காசு கொடு எனக் கேட்கிறவர்கள். காசு தருகிறேன்
நடிக்கவிடு எனக் கதறுபவர்கள். ஏற்று நடித்த
பாத்திரத்தின் பெயரையோ அல்லது உச்சரித்த வசனத்தையோ அடைமொழியாகச் சுமந்தலையும் சீவன்களான
‘ஆஃபாயில்’ அண்ணாத்துரை , ‘அடேங்கப்பா’ ஆறுமுகம் என இரண்டு பேர் எங்கள் தெருவிலேயே
இருந்தார்கள். ‘ரேப்பு’ கிண்ணரம் என்றும் ஒருவர் இருந்தார். இந்த அடைமொழியை யாரும்
விளக்காமலே புரிந்துகொள்ளும் அளவிற்கு கருவிலே திருவுடைய சிறார்கள் யாம். இவர்களோடு
ரிகர்ஸல் பார்க்க நாங்களும் வருகிறோமென ஒட்டிக்கொண்டு செல்வது வாள்களை எடுத்து பொய்ச்சண்டை
போடத்தான்.
சிந்துபூந்துறை
பாலத்திற்குக் கீழே காசு கொடுத்தால் ஸ்கிரிப்ட் கொடுக்கிறவர்கள் இருந்தார்கள். நாடகத்தை
வாங்கி வந்து கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றி கதை, வசனம், இயக்கம்: ‘உங்கள்’
உலகநாதன் எனப் போட்டுக்கொள்ளவேண்டியது மட்டும்தான் நம் சோலி. ‘சாணக்கிய சரிதம்’ என்றொரு
நாடகத்தின் ரிகர்சல் நடந்துகொண்டிருந்தது. அரசடி மாரியம்மன் கோவிலின் ஏழாவது திருநாளுக்குப்
பெருமையுடன் வழங்க உத்தேசித்திருந்தார்கள். ஏழாம் திருநாள் நாடகம் பார்க்க அக்கம் பக்கத்திலுள்ள
கிராமத்திலிருந்தெல்லாம் வருவார்கள். அருந்தமிழ் மன்றத்தார்களின் மேடை அமைப்பு பிரம்மாண்டமாக
இருக்கும். மேடையில் கடலை உருவாக்கி கப்பல் ஓட்டி காட்டுவார்கள். ஒரு நாடகத்தில் வில்லன்
மேடையில் விமானத்தில் வந்து இறங்குவார். சீதை தீக்குளிக்கும் காட்சியில் அக்கினிக்குண்டம்
தத்ரூபமாக இருக்க உணர்ச்சி வசப்பட்ட சில கிழவிகள் மேடையில் தண்ணீரைக் கோரி ஊற்றிய சம்பவமெல்லாம்
கூட நடந்திருக்கின்றன.
ஒத்திகை
படு தீவிரமாக நடந்தது. கதாநாயகி அம்சமாலா என்றார்கள். மடிப்பு அம்சா என கலாரசிகர்கள்
மத்தியில் அவர் வேறு சில காரணங்களுக்காகப் புகழ் பெற்றிருந்தார். புதிதாக மூன்று டூயட்டுகள்
தெள்ளிசைத் தென்றல் குழுவினரால்இயற்றப்பட்டன.
‘சசியே என் ருசியே..சகியே வந்து சுகியேன்..’ ஹார்மோனியத்தின் அத்தனைக் கட்டைகளிலும் விரல்களின் வெறியாட்டம். திரைச்சீலைகள் புதிதாக வரையப்பட்டன. பாடல் கட்சிகளுக்காக ஏராளமான
மான்களும் மயில்களும் கிளிகளும் அட்டையில் உருவாகின. அருந்தமிழ் மன்றமே கூந்தங்குளம்
சரணாலயம் போல இருந்தது. இயக்குனர் சேர்மக்கனி எந்நேரமும் தோளில் சிறிய டர்க்கியை துண்டுடன்
திருப்தியில்லாத முகத்துடன் கிழக்கேயும் மேற்கேயும் அலைந்து கொண்டிருந்தார். ஒரு இயக்குனருக்கு
மிகத் தேவையானது திருப்தியில்லாத முகம் என்பதை அவர் எப்படியோ தெரிந்து வைத்திருந்தார்.
சரித்திர
நாடகம் என்பதால் வாள்களும் கேடயங்களும் பொலிவூட்டப்பட்டன. கிழிந்த சிம்மாசனங்களுக்குள்
தென்னை நார்கள் திணிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. தில்லையண்ணன் உடன்குடி மன்றத்திலிருந்து
மார்புக்கவசங்களை வரவழைத்தார். ‘புது அயிட்டமால்லா
இருக்கு..இத எங்கனடே ஸ்டேஜூல வைப்பிங்க.. டூயட்டுக்கா’ எனக்கேட்ட ஆஃபாயில் அண்ணனை சேர்மக்கனி
கெட்ட கெட்ட வார்த்தைகளால் வைதார். கத்திச் சண்டையை நிறுத்தி வேடிக்கை பார்த்த என்னை
சிவந்த கண்களால் அன்பொழுகப் பார்த்து ‘புடிச்சி மொழத் தெரியாது.. வாளு கேக்குதோல..’
சேர்மக்கனி அண்ணன் கேட்டது கூட வலிக்கவில்லை. அம்சமாலா ‘களுக்’கென்று சிரித்தபோதுதான் ‘அந்த ஏந்திழையாளும்
எனைச்சிரித்தாள்.. ஆண்டதொர் அரசாமோ எனது ஆண்மையும் புகழும் ஓர் பொருளாமோ..’ என கண்ணீர்
மல்கினேன். சேர்மக்கனி என்ன நினைத்தாரோ திடீரென ‘ஏல நாடகத்துல நடிக்கியால.. ஒரு எழவசரன்
கேரக்டர் தாறம்ல..’ என்றார்.
கதைப்படி
நந்த வம்சத்து அவையில் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் வெஞ்சினம் கொள்கிறார். சூலுரைக்கிறார்.
நந்த குலத்தை வேரோடு கருவறுக்கிறார். மெளரியப்பேரரசை
நிறுவுகிறார். அவரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் இரவில் கனவில் வந்து நியாயம்
கேட்பதோடு நாடகம் முடியும். எவ்வளவு எளிதாக கதையை சொல்லிவிட்டேன். ஆனால் நாடகம் எழுபது
சீன்களுக்கும் மேல். எனக்கு நந்த குலத்தின்
கடைக்குட்டி இளவரசன் வேடம். மொத்தம் எட்டு சீன்கள். நான்கு சீன்களில் வசனம். கத்திச்சண்டை
பிரியனென்பதால் சேர்மக்கனி இரக்கப்பட்டு ஒரு சீன் சேர்த்தார். தோட்டத்தில் மாமா வாள்
வித்தை பயிற்றுவிப்பார். பயிற்சிக்குப் பின் அன்பொழுக மடியில் இருத்தி ஒரு பழத்தை புசிக்கத்
தருவார். அதில் பாம்பின் விஷம் செலுத்தப்பட்டிருப்பது இருவருக்கும் தெரியாது. அவரும்
ஓரிரு துண்டங்களை சாப்பிட இருவரும் துடிதுடித்துச் சாகவேண்டும். முதல் நாடகம் என்பதால் கடும் பயிற்சி. என் அளவிற்குப்
பிற கதாபாத்திரங்களுக்கு கலைதாகம் இருக்கவில்லை. சிலர் கடை கண்ணிகளை எடுத்து வைத்து
விட்டு பத்து மணிக்கு மேல் வருவார்கள். சந்தைக்குப் போகிறவர்களாக இருந்தால் வாரக்கடைசியில்தான்
ரிகர்ஸல். அவர்கள் வசனங்களை மறந்துவிட்டு முழிக்கும்போது சேர்மக்கனி புதிய புதிய வார்த்தைச்
சேர்க்கைகளை உருவாக்கித் திட்டுவார்.
செட் வேலை
செய்யும் ஒரு பெயிண்டர் போதையில் பூங்கா சீன் திரைச்சீலையில் உள்ள பூக்கள் அனைத்திற்கும்
கருப்பு வர்ணம் அடித்து விட்டார். ‘தொளிலு மேல பக்தி இல்லாத பயலெல்லாம் பன்னி மேய்க்கப்
போவ வேண்டியதுதானல.. மாம்பட்ட போட்டுட்டு வந்து அடிக்க ஒங்க ஆத்தாளுக்க கல்லறன்னு நெனச்சியாலே
இத.. தாயாளீ ‘ என ருத்திரதாண்டவம் ஆடியவர் ''தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த பூதரை
எழுதி, மேல்நிலை வைத்து; தூண் நிழல் புறப்பட,மாண்விளக்கு எடுத்து,ஆங்கு ஒருமுக எழினியும்,
பொருமுக எழினியும், கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்து-ஆங்கு ஓவிய விதானத்து,
உரை பெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி; விருந்துபடக் கிடந்த அரும் தொழில்
அரங்கத்து”ன்னு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல எழுதியிருக்காருல ஸ்கிரீன் வரையறதப்பத்தி..
கூதறப்பயலே..’ நான் சேர்மக்கனி அண்ணாச்சியின் நாடக பக்தியை நினைத்து மெய்தான் அரும்பி விதிர் விதித்து நின்றேன். என்
கண்கள் கசிந்தன.
நாடகத்திற்கான
அழைப்பிதழ்கள் இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள் நிற பேப்பரில் சிங்கிள் கலர் அச்சடிக்கப்பட்டு
ஊர் முழுக்க விநியோகிக்கப்பட்டன. அதில் அறிமுகம்: மாஸ்டர் செல்வேந்திரன் என அச்சாகியிருந்ததுதான்
முதலில் என் கண்ணில் பட்டது. அகில இந்திய ரேடியோ புகழ் பி.கே.பாபனாசம், கரகாட்டக்காரன்
சண்முகசுந்தரம், பக்கோடா காதர், ஓமக்குச்சி நரசிம்மன் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களும்
நடிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். அவர்களெல்லாம் ரிகர்சலுக்கே வரவில்லையே.
போஸ்டரின் இறுதியில் தஞ்சாவூர் காஞ்சனா சிறப்புத்தோற்றம் என போட்டிருந்தார்கள். மொத்த
ஸ்கிரிப்டிலும் ஒரு பெண் கேரக்டர்தானே.. இந்தம்மா என்ன பண்ணப் போவுது?
நல்ல விளம்பரம்
செய்திருந்ததால் கூட்டம் திமிறியது. மேடையில் விழா ஏற்பாட்டாளர்கள் மாண்புமிகு மாமா,
பாசமிகு மச்சான், பெருமைமிகு பெரியப்பா, அருமை அண்ணாச்சி என ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடி
மாற்றி மாற்றி மாலையைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். மேடைக்குப் பின்னே மேக்கப் ஜரூராக
நடந்துகொண்டிருந்தது. நடிகர்களின் உதவியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸக்கா வைத்திருப்பதைப்
போன்ற பிளாஸ்டிக் ஐஸ்பெட்டிகள் வைத்திருந்தார்கள்.
அதற்குள்தான் லிப்ஸ்டிக், ரூஜ், க்ரீம் உள்ளிட்ட அழகு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நான் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஒரு வழியாக
பூஜை போட்டு தேங்காய் உடைத்தபோதுதான் ஒன்றைக் கவனித்தேன். சேர்மக்கனி அண்ணன் லேசாக
ஆடிக்கொண்டிருந்தார். அய்யய்யோ அண்ணனுக்கு அருள் வந்துவிட்டதென பதறி அருகில் போனால்
ஃபுல் மப்பில் இருந்தார். அடேய் தொழில்பக்தி..!
சீன் நோட்டை
ஃபாலோ செய்யும் நிலையில் அவர் இல்லாததால் தற்காலிக நாடக பொறுப்பு அரியபழம் நாடாருக்கு
வாய்த்தது. அவர் அம்சமாலா அருகாமைக்காக பூக்குழி இறங்கவே தயாராக இருந்தவர். நாடகம்
தொடங்கிய போதுதான் நடிகர்கள், பாடகர்கள், சீன்
இழுக்கவேண்டியவர்கள் வரை அனைவரும் ஃபுல் தண்ணீரென்பது புரிந்தது. பூங்கா சீனில் போர்
நடந்தது. கோவில் ஸ்கிரீன் முன்னே டூயட். ஒரு கனவுக்காட்சியில் அரங்கத்திற்குள் மேலிருந்து
கீழாக ஒரு தாமரைப்பூ மெள்ள இறங்கும். அதில் கதாநாயகன் வீற்றிருப்பான். அதிலிருந்து
இறங்கி சிவாஜியைப் போல தோள்களை ஏற்றி இறக்கி நடந்து கதாநாயகியை முத்தமிட வேண்டும்.
அவசரத்தில் அரியபழம் நாடாரை ஏற்றி கயிறு கட்டி இறக்கி விட்டார்கள். கையில் பேரேடுடன்
பதறியடித்து மேடையிலிருந்து இறங்கி ஓடிவிட்டார். அம்சாவோடு டூயட் கேட்குதா ஒனக்கு என
வேப்பங்காட்டுக்காரியிடம் வெளக்குமாத்து பூசையை வாங்க அவர் தயாரில்லை. காஞ்சனா நந்த
குலத்து அவையில் மன்னனின் முன்பு ‘ஓ ரசிக்கும் சீமானே..’ ஆடினாள். ஸ்கிரீன் இழுப்பவர்கள்
இருபக்கமும் மறைந்து நின்று பூச்சிமருந்து அடிக்கும் மெஷினில் தண்ணீரை நிரப்பி அவள்
மீது மழையாகப் பொழிந்தனர். முன் வரிசை சிறுவர்கள் கும்பலாக எழுந்து நின்று ஒன்ஸ்மோர்
கேட்க க்ளைமாக்ஸ் வரை காத்திருந்தால், சந்திரகுப்த மெளரியர் அவையிலும் ஒரு மழை டான்ஸ்
உண்டு என மைக்கில் அறிவித்தார்கள். எவன் போவான் வீட்டுக்கு..
என்னுடைய
சீன் வருவதற்கு முன்புதான் கவனித்தேன். சிறுவன் என்பதால் உயரம் குறைவான மைக் ஏற்பாடு செய்திருப்பார்களென
எதிர்பார்த்திருந்தேன். பேரதிர்ச்சி. மைக்குகள் ஏழடி உயரத்தில் அந்தரங்கத்தில் தலைகீழாகக்
கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. சேர்மக்கனி அண்ணனிடம் கதறினேன். ‘மூதி..நீ எங்க நின்னு
கத்தினாலும் கேக்கும்ல’ என ஒரே வரியில் என் நடிப்புத்திறமையை உதாசீனப்படுத்தி விட்டார்.
அதைக்கூட தாங்கி விட்டேன். அம்சமாலா கதைப்படி மகாராணியார். அதாவது எனக்குத் தாயார்
என்பது தெரியவந்தபோதுதான் மனமுடைந்து அழுதேன்.
நான் நன்றாகவே
நடித்தேன். மயங்கி விழுந்து கெண்டை மீனைப்போலத் துள்ளி துடிதுடித்து இறந்தேன். சும்மாவா
உயிர்பிரிவது அம்சமாலா மடியிலல்லவா.. சீன் முடிந்ததும் ‘ஏம்ல கெடந்து சாடுத.. தொட்டி..’
என முறைத்தாள். நாகர்கோவில்காரி..அதான் அழகா இருக்கா என நினைத்துக்கொண்டேன்.
ஒருவழியாக
அதிகாலையில் நாடகம் முடிந்தது. நடிகர்கள் அனைவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுத்தினார்கள்.
கோவில் தர்மகர்த்தா அனைவருக்கும் சால்வை போர்த்தினார். குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.
இளவரசே என் மடியில் அமர்ந்துகொள்ளுங்கள் என சண்முகசுந்தரம் என்னை மடியில் இருத்தி படம்
எடுத்துக்கொண்டார். பெருமையாக இருந்தது. சேர்மக்கனிக்கு என் ஓவர் ஆக்டிங் பிடிக்கவில்லையென்பது
தெரிந்தது. ஒரு நடிகரின் டச்சப் என்னை நெருங்கி என் பெயரை ஆர்வமுடன் விசாரித்தார்.
‘நல்லா நடிக்க தம்பி..சினிமாவுல நடிப்பீயா..’ நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன்.
‘ஒன்ன மாதிரி சைல்ட் ஆர்ட்டிஸ்டுக்கு நல்ல டிமாண்டு உண்டு.. நீ ஒண்ணு பண்ணு இந்த அட்ரஸூக்கு
உன்னோட போட்டோஸ் அனுப்பி வை.. எனக்குத் தெரிஞ்ச டைரக்டர்ஸ்கிட்ட சொல்றேன்’
தமிழ்நாட்டில் ஒருவனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு
எனச் சொல்வது வைக்கப்படப்பிற்கு தீ வைப்பது போல. எரிந்து நாசமானால் அன்றி அணையாது.
***
எட்டாங் கிளாஸ் பி. முந்தைய இரவு ரோஸ் பவுடர் மேக்கப், காதோரம்
சுழித்து வரையப்பட்ட கிருதா அழிக்காமல் வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். நாடகத்தில்
நடித்தால் இரண்டு நாட்களுக்கு மேக்கப் அழிக்கக் கூடாது. அப்போதுதான் வகுப்பில் பஜாரில்
பார்க்கிறவர்கள் சட்டென நினைவு வந்து ‘ஏய் நீ நல்லா நடிச்சடே’ என புகழ்வார்கள். லேசில்
விட முடியுமா அந்தப் புகழை. கூடவே இன்னொரு காரணம் உண்டு. பெண் பிள்ளைகளுக்கு நாடகம்
பேச்சுப்போட்டிகளில் நடிக்கிறவனை விட டான்ஸ் ஆடுகிற பையன்களைத்தான் ரொம்பவும் பிடிக்கும்.
டான்ஸில் சேருவதென்றால் ஃபுல் கை டிசர்ட் மற்றும் அப்போது லாங்ஸ் என்றழைக்கப்பட்ட பேண்ட்,
பூட்ஸ் ஆகியன இருக்க வேண்டும். டான்ஸ் ஆடும் அன்று தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து
சலூனில் ஹீட்டர் போட ஐந்து ரூபாயும் வேண்டும். மேற்படி சமாச்சாரங்கள் நான்கும் என்னிடம்
இல்லை. ஆகவே டான்ஸூக்கு எடுக்க மாட்டார்கள். வழக்கமாக டான்ஸ் ஆடும் குணபால், டென்னிஸன்
போன்றவர்களுக்கு நான் விரைவில் சினிமா நட்சத்திரமாகப் போகிறவன் என்பதை குறிப்புணர்த்தும்
கட்டாயமும் இருந்தது. லேய் அம்சாக்க மவனே என இஸ்மாயில் பொடதியில் அடித்தான். அவளுக்க
முலைய அமுக்கிட்டியாமா.. கேள்விப்பட்டேன் என்றான் எட்டாவது வகுப்பை நான்காவது முறையாக
எதிர்கொள்ளும் கடைசி பெஞ்ச் முண்டானி என்கிற முனியப்பன். எனக்கு அழுகையே வந்து விட்டது.
இருங்கடா.. சீக்கிரமே நான் யாருன்னு உங்களுக்கெல்லாம் காட்டறேன்..
பகலெல்லாம்
கனவில் ஆழ்ந்திருந்தேன். ஐயாம் எ லிட்டில் ஸ்டார் என எகிறி ஆடும் சிம்புதான் அப்போது
ஒரே சைல்ட் ஆர்ட்டிஸ்ட். நானும் அவரைப் போலவே மஸ்ரூம் கிராஃப் வெட்டிக்கொள்ள வேண்டுமென
ஆசைப்பட்டேன். அப்பா தரும் வாரத்திற்கு இருபது பைசா பாக்கெட் மணியில் போஸ்ட் கார்டுதான்
வாங்க முடியும். அன்புள்ள சுரேஷ் அண்ணாவிற்கு என ஆரம்பித்து என் குடும்பம் உடன் பிறந்தோர்
விபரங்களை எழுதி முதலில் ஒரு போஸ்ட் கார்டு அனுப்பினேன். ஒருவன் தன் வாழ்நாளில் பப்ளிக்
எக்ஸாம் எழுதவோ பேங்கில் லோன் வாங்கவோதான் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது
எங்கள் ஊரின் எழுதாத விதி. கூடவே இருபது பைசா இருபது பைசாவாக சேர்த்துக்கொண்டு படம்
எடுத்து அனுப்புவதெல்லாம் நடக்காத வேலை. ஒரே வழி வீட்டில் இருக்கும் ஆல்பத்தில் உள்ள
படங்களை அனுப்புவதுதான் என முடிவு செய்தேன். அப்பாவுக்கு வரும் வர்த்தக கடிதங்களில்
போஸ்ட்மேனின் அஜாக்கிரதையால் சரி வர சீல் அடிக்கப்படாத ஸ்டாம்புகளைக் கவனமுடன் பிரித்து
புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தேன். பதிலே இல்லை. சரி ஏதாவது படப்பிடிப்பில் இருப்பார்களென
ஒரு மாதம் அமைதியாக இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஸன் படங்களில் காஜா ஷெரீப்பை
பார்க்கும் போதெல்லாம் கலைதாகத்தில் தொண்டை வறளும். மீண்டும் நீண்ட நீண்ட கடிதங்களுடன்
படங்கள் அனுப்ப ஆரம்பித்தேன். ஒண்ணாங்கிளாஸில் அன்னம்மா டீச்சருடன் எடுத்துக்கொண்ட
குரூப் போட்டோ மட்டும்தான் மிச்சம். அதிலும் என் முகத்தைப் பேனாவால் வட்டமிட்டு அனுப்பி
வைத்தேன் பதிலே இல்லை.
நான் மிகவும்
சோர்ந்து விட்டேன். இடையில் வீட்டு ஆல்பத்தில் இருந்த படமெல்லாம் எங்கேடா எனக் கேட்டு
அக்கா மிரட்ட ஆரம்பித்தாள். என் நம்பிக்கைகள் முற்றாகத் தளர்ந்து போயிருந்தது. ஆருயிர்
நண்பன் ஐந்து வீட்டு மணிதான் திடீரென கேட்டான் ‘அத்தன லெட்டர் போட்டியே..ஃப்ரம் அட்ரஸ்
எழுதினியாடா..’ நான் வியப்புடன் ‘ஃப்ரம் அட்ரஸா அப்படின்னா..?’
அன்புள்ள
சுரேஷ் அண்ணா, இத்தனை நாள் கடிதம் எழுதின நான் என்னுடைய அட்ரஸை உங்களுக்குச் சொல்லாமல்
விட்டு விட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போதுதான் புரிகிறது. என்னிடம் வேறு
படங்கள் இல்லை. அரையாண்டுத் தேர்வு லீவில் எப்படியாவது மெட்ராஸ் வந்து உங்களைப் பார்க்கிறேன்.
இப்போது நல்ல டான்ஸூம் ஆடுவேன். பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் முதலாவது வந்திருக்கிறேன்.
அன்புடன், செல்வேந்திரன், 23/25 நின்றசீர் நெடுமாறன் தெரு, நெல்லை டவுண்.
கடைசி போஸ்ட்
கார்டுக்குப் பதில் வந்தது. ஒரு பெரிய கவரில் கொட்டை எழுத்துக்களில் என் பெயர் எழுதப்பட்டிருந்தது.
எனக்கு வந்த முதல் கடிதம். அவசரமாக கிழித்தேன். உள்ளே நான் இதுவரை அனுப்பிய படங்கள்
கடிதங்கள் இருந்தன. சில கவர்கள் உடைக்கப்பட கூட இல்லை.
அன்புள்ள
தம்பி, நான் சிந்தாதிரிப்பேட்டை போஸ்ட்மேன். நீ இதுநாள் வரை கடிதங்கள் அனுப்பிய முகவரியே மெட்ராஸில் கிடையாது. விலாசம் தவறானது. அனுப்புனர் விலாசம் இல்லாததால்
கடிதங்கள் திருப்பி அனுப்பப்படாமல் அலுவலகத்திலேயே இருந்தன. தொடர்ந்து கடிதங்கள் வந்ததால்
சில கடிதங்களைப் பிரித்து படித்துப்பார்த்தேன். பாவமாக இருந்தது. உன்னைப் போன்ற மாணவர்கள்
வாழ்க்கையில் படித்து முன்னேறி பெற்றோர்களுக்குப் பெருமை தேடித்தரவேண்டும். சினிமா
ஆசையால் கிளம்பி வந்து மெட்ராஸில் சீரழியும் சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
ஒழுங்காகப் படி. உனது படங்களை உன்னிடமே அனுப்பியுள்ளேன். இந்தக் கடிதத்திற்குப் பதில்
எழுத வேண்டாம்.
என் கையில் நாங்கள் எடுத்த குரூப் போட்டோ இருந்தது. அதில்
கரகாட்டக்காரன் சண்முகசுந்தரம் மடியில் நான் கூச்சத்துடன் காமிராவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சுரேஷ் அண்ணன் என்னை ஏமாற்றியிருப்பார் என நான் நினைக்கவில்லை.
நடிகர் சண்முகசுந்தரத்தைப் பார்த்தால் அவர் என்னவானார் என விசாரிக்க வேண்டும்.
Comments