Saturday, April 24, 2010

கோடாயுதம் சூழ் கோவை

ரத்த பந்துக்களைத் தவிர்த்த ஏனைய அனைத்தும் எனக்கு வாசிப்பின் மூலம் கிடைத்தவையே. புத்தகங்களின் வற்றாத கருணைக்கு விசுவாசியாக இல்லையெனில் செய்நன்றி கொன்றவனாவேன். வேறெந்த தினங்களையும் விட எனக்கு முக்கியமானது உலகப் புத்தக தினம். விஜயாவில் புத்தகம் வாங்கிய கையோடு நாஞ்சில் நாடனிடம் ஆசியும் பெற்றேன்.

பழந்தமிழ் இலக்கியங்களை விடாமல் ஆய்வதாகட்டும், நவீன தமிழிலக்கியத்தின் புதிய வரவுகளை உடனுக்குடன் படிப்பதாகட்டும், சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்த எழுத்தியக்கமாகட்டும் நாஞ்சிலாருக்கு வயசுக்கு மீறின உழைப்பு.

தொ. பரமசிவம் சங்க காலத்தில் தென்னை மரம் இருந்ததில்லை. சிலப்பதிகாரத்திற்கு முன்பு வரை மார் கச்சை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்ததில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறார். புறநானூற்றில் மட்டும் ஆறு இடங்களில் தென்னை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ‘கச்சை’ பற்றிய குறிப்பு இருக்கிறது என்று கும்பமுனி பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த ஒருவர் ‘தொ.பரமசிவம் ரொம்ப நல்ல ஆளாச்சே...சார்...’ என்று இழுத்தார். ‘அதுக்காக திருக்குறளை எழுதினது தொல்காப்பியர்னு சொன்னா ஒத்துக்குவீராவே...’ இதுதான் நாஞ்சில். நெற்றிப் பொட்டில் பட்டெனச் சுடும் வார்த்தைகள் அவருடையது. தமிழாய்ந்த தமிழனிடம் கள ஆய்வு என்றெல்லாம் கல்லுருட்ட முடியாது போலிருக்கிறது.

நாங்கள் பத்து நிமிடம் பேசுவதற்குள் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்கள். ‘சார் நான் கவிஞர் மன்னாதிமன்னன்! என் தொகுப்புக்கு முன்னுரை எழுதுங்க’ என்று மிகச் சாதாரணமாகக் கட்டளையிடுகிறார்கள். அப்படி வந்த ஆறு கட்டளைகளுள் ஒரு புத்தகத்தின் தலைப்பு ‘லவ் நிலாக்கள்’ மற்றொன்று ‘வாழ நினைத்தால் வாழலாம் (தேன் சிந்தும் கவிதைகளாம்!). ஒரு எழுத்தாளனின் தரமும், இயங்குதளமும் தெரியாமல் எத்தனைத் துணிச்சலாக கவிதை நோட்டை நீட்டுகிறார்கள்? அதுவும் அதிகார தோரணையோடு. இவர்களுள் எவரும் நாஞ்சிலாரின் ஒற்றை வரிகளைக் கூட வாசித்திருக்க மாட்டார்கள் என்றேன். ஆமோதித்தார் வேலாயுதம்.

***

சூழல் சார்ந்த பிரக்ஞையை என்னுள் விதைத்தவர் தியோடர் பாஸ்கரன். புதுப்புதுத் தகவல்களோடு அற்புதமான மொழி நடையில் தியோடர் எழுதிய அத்தனைக் கட்டுரைகளையும் மீள் வாசிப்பு செய்யும் முனைப்பில் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்கு’, ‘தாமரை பூத்த தடாகம்’ மற்றும் கானுறை வேங்கை (மொழி பெயர்ப்பு) ஆகிய மூன்றையும் வாசித்து முடித்தேன்.

தியோடர், புழங்கித் தேய்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. சரியான துறைச் சொற்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிலிருந்து மறைந்த பழந்தமிழ்ச் சொற்களை வைத்துக்கொண்டு புதுமையான வாசிப்பனுபவத்தை உருவாக்குகிறார். ஆவணக் களரி, கருதுகோள்கள், கூடுகை, இயைந்து, நல்கை, பாலியல் வீரியம், இரலை, ஒற்றைக்கொம்பன் போன்ற பதப்பிரயோகங்கள் கிளர்ச்சியூட்டுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் காணுயிர்கள் பற்றிய குறிப்புகளைச் சுட்டும்போதும், ஆவணங்களிலிருந்து திரட்டிய வரலாற்றுத் தகவல்களை சுவைபடச் சொல்கையிலும் தியோடரின் வியர்வை மணம் வாசகனைக் கமழ்கிறது.

***

பாலைத் திணை காயத்ரி, அங்கிங்கெனாதபடி சித்தார்த் இருவருக்கும் அடியேன் நெடுநாள் வாசகன். தம்பதி சமேதராக கோவை ரெஸிடென்ஸியில் எழுந்தருளியவர்களை சஞ்ஜயோடும் பிரியாணியோடும் சென்று தரிசித்தோம். எந்த தமிழ்-ஆங்கில-பிரெஞ்சு-ஹூப்ரு-லிபி எழுத்தாளர் பெயரைச் சொன்னாலும், அத்தலைப்பின் கீழ் ஒருமணி நேரம் பேசுவார்கள் போலிருக்கிறது. ஆச்சிக்கும், ஐயருக்கும் வாசிப்பதொன்றே சுவாசம். சரியான இணை!

புதிதாக இணையத்தில் எழுதுகிறவர்கள் தேடிப்படிக்க வேண்டிய முக்கியமான எழுத்துக்கள் இவர்களுடையது என்பது என் அசைக்க முடியாத அபிப்ராயம்.

***

செம்மொழி மாநாட்டுப் பணிகளின் பெயரால் கோவையில் மரங்கள் கொலை செய்யப்படுவதைக் கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். விமான நிலையத்தின் இருமங்கிலும் நின்று வரவேற்கவும், வழியனுப்பவும் செய்யும் மரங்களின் தலையாட்டலை நிறுத்தி விட்டார்கள்.
மரங்களடர்ந்த ராம்நகரில் தங்கள் கைவரிசையைக் காட்டியபோது அப்பகுதி இளைஞர்கள் மரங்களில் ஏறி எங்களை வெட்டிக்கொன்ற பின் மரங்களை வெட்டுங்கள் என்றார்கள். கோடாரிகள் தளர்ந்தன. மகிழ்ந்தேன்.

என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இடையர்பாளையம் - கணுவாய் சாலையில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்றை விரிவாக்கம் என்று வெட்டி வீழ்த்தி விட்டார்கள். அம்மரத்தின் கீழ் மட்டும் சுமார் ஐம்பது கடைகளுக்கு மேல் இருந்தன. மூன்று கிராமங்களை இணைக்கும் சாலையின் சந்திப்பில் இருப்பதால் மரத்தின் கீழ் எப்போதும் ஜனத்திரள் இருக்கும். அதுதான் பேருந்து நிலையமும் கூட. எப்போதும் புள்ளினங்கள் இசை ஒலித்துக்கொண்டிருக்கும்.ஒவ்வொரு முறை அதைக் கடக்கையிலும் சுராவின் புளியமரம் நினைவில் அசையும். ஜனங்களின் முன் சூழல் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்ட உள்ளூர் கார்ப்பரேட் ஆடுகள் மாநாட்டுக் குழுக்களில் கிடைத்திருக்கும் பதவிகளால் உள்ளம் குளிர்ந்து இருக்கிறார்கள். மரமாவது மட்டையாவது!

ஊராள்வான் வழுக்கிச் செல்லும் வசதிக்காகப் போடப்படும் சாலைகளை விட, பீத்தப் பயல்கள் நடத்த இருக்கும் இம்மாநாட்டை விட, மொழியை விட, மனிதர்களை விட எனக்கு மரங்கள் முக்கியம். மரங்களுக்கு மரண சாசனம் எழுதும் மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்.

Tuesday, April 20, 2010

சிங்கரர்கள்

இரண்டே வாரத்தில் சங்கீதம் கற்றுத் தரப்படும் எனச் சத்தியம் செய்யும் போஸ்டர்கள் காணக் கிடைக்கின்றன. சரணம், பல்லவி, டெம்போ, பிர்ஹாஸ், சங்கதி, பிட்ச்சிங், பாவம், க்ளாரிட்டி, ஸ்வரம் என்றெல்லாம் தமிழர்களுக்கு நிறைய்ய புதிய வார்த்தைகள் கிடைத்திருக்கின்றன. பாட்டுப் போட்டிகளின் உறுபலன்.

ஸ்டார் சிங்கர், சூப்பர் சிங்கர், ஹரியுடன் நான் - மூன்று நிகழ்ச்சிகளையும் முடிந்த மட்டும் பார்த்துவிடுவேன். இளமையான குரல்கள் உள்ளுக்குள் உற்சாகம் நிரப்புகிறது. அதே சமயத்தில் சினிமாப் பாடல்களை அட்சர சுத்தமாகப் பாடுவதுதான் திறமையா என்ற கேள்வியும், கேட்டுச் சலித்த பாடல்களைக் கேட்கையில் மெலிதான அயற்சியும் வருவதுண்டு.

சினிமாவைத் தவிர்த்து நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவரக்கூடிய எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. என் சுயவிருப்பப் பட்டியலின் சிறு சாம்பிள்:


அருகம்புல்லின் நுனியிலே அம்மா கட்டிய வீடு ஆறு வீடு...

பாரத தேசமே... மக்கள் வாழும் நல்ல தேசமே...

ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ...

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ...

வில்லினையொத்த புருவம் வளைத்தனை...

செந்தூர் கடற்கரையில் கந்தா உனக்கு ஒரு...

மொச்சைக் கொட்டை பல்லழகி...

ஆற்றுவெள்ளம் நாளை வர தோற்றுதே குறி...

பாவம் செய்யாதிரு மனமே...

மாசில்லா கன்னியாம் மேரியாம் மாதாவாம்...

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...

காரணம் கேட்டு வாடி சகியே...

- ஆகிய பாடல்களை எவரேனும் பாடினால் எஸ்.எம்.எஸ் ஓட்டு துவங்கி கள்ள ஓட்டு வரை போடத் தயாராக இருக்கிறேன்.

***

பள்ளி நாட்களில் நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்திருக்கிறேன். சுருதி கருதியதில்லையென்பதால் வெங்கலக் கிண்ணி கூட ஜெயித்ததில்லை. பரம்பரைக்கே பாட்டு ஆகாதுடா என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லியும் கேட்டதில்லை. காரணம் இருந்தது.

நான் விரும்புகிற பாடல்களுக்கு சுய மெட்டமைப்பது என் தொட்டில் பழக்கம். ஏனோதானாவென்று வில்பர் சர்குண ராஜ் மாதிரி இருந்தாலும் அவைநாகரீகம் கருதாமல் துணிந்து விடுவேன். பிராயத்திலிருந்த பாரதிதாசன் பித்தில் ‘அறிவு கெட்டவன் பணம் படைத்தால் அணுகுண்டு செய்வான்’, பொய்க்கு காலில்லை சிறகுகள் உண்டு’, ‘கொலைவாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே’ ஆகிய பாடல்களைப் பாடி கனகசுப்புரெத்தினத்திற்குக் கணிசமான அவமரியாதை சேர்த்திருக்கிறேன். (அப்போதெல்லாம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்குப் பரிசாக குடும்ப விளக்கு, குயில் பாட்டு, அழகின் சிரிப்பு, அண்ணாவின் என் வாழ்வு போன்ற புத்தகங்களை வழங்குவார்கள். கடந்தவாரம் ஒரு பள்ளி விழாவில் வீடியோ கேம்ஸ் அடங்கிய பன்னிரெண்டு சிடிக்களைப் பரிசாக கொடுத்ததைக் கண்டு துணுக்குற்றேன்.)

‘கைத்தலம் நிறைகனியை’ - வாரியார், டி.எம்.எஸ், புஷ்பவனம் குப்புசாமி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் துவங்கி பிளேஸி, யோகி.பி வரை அவரவர் பாணியில் பாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து சுமார் 20 வகைமைகளில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். மஸாகீஸ்டுக்களுக்கு மட்டும் வேண்டுகோளின் பேரில் அனுப்பி வைக்கலாமென்றிருக்கிறேன்.

***

உடுமலை நாராயண கவி, ஊத்துக்காடு வெங்கடசுப்பு ஐயர், உளுந்தூர்பேட்டை சண்முகம் ஆகிய மூன்று பேர்களது பெயர்களும், பாடல்களும் குழப்பியடிப்பது எனக்கு மட்டும்தானா?! திக்கை நோக்கியா / உற்று நோக்கியா - ரேணுகானமா / வேணுகானமா என்றெல்லாம் வரும் வார்த்தைக் குழப்பங்கள் வேறு. எதில்தான் மனித மனம் குழம்புவதில்லை?!

***

தலைமை அலுவலகம் அளிக்கும் சிறப்புப் பயிற்சி ஒன்றிற்குத் தேர்வாகி இருக்கிறேன். அதன் பொருட்டு வருகிற 26-04-10 முதல் 02-05-10 வரை ஏழு தினங்கள் சென்னையில் இருப்பேன். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் தங்கும் உத்தேசம்.

காத்து ரட்சிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, April 16, 2010

காமப்பேய்

சிறு மண் கலயம் ஒன்றில் குல்பியை அடைத்து விற்கிறார்கள். வாங்கித் தின்ற பின் வீசியெறிய மனமின்றி கழுவிக் கவிழ்த்தினேன். கவிழ்த்திய மண்பாண்டங்களுக்குள் யட்சி குடியேறி விடுகிறாள். நள்ளிரவில் யட்சியின் ஓலம் கேட்டு சமையலறைக்கு ஓடினால், கொசுக்கள் சுற்றி வளைத்து யட்சியின் ரத்தத்தைக் குடித்துக்கொண்டிருந்தன. கொசுவர்த்தி ஒன்றினைக் கொழுத்தி வைத்த பின் யட்சி நிம்மதியானாள். தான் வரம் கொடுக்கும் வக்கற்றவளென்பதால் வேறு ஏதேனும் கேள் என்றாள்.

ஒருதலையாகவோ தறுதலையாகவோ காதலித்துப் பிரிந்த பெண்ணை பிற்காலத்தில் பாலியல் தொழிலாளியாகச் சந்திக்க நேரிடும் கதைகளை எவரேனும் எழுத முற்பட்டால் தோளில் அமர்ந்துகொண்டு தலையைப் பிடித்து ஆட்டுவாயாக...! என்றேன்.

***
அறுவடை முடிந்த நிலத்தில் வீட்டுப்பெண்களுக்குக் காமப்பேய் ஓட்டும் திருவிழா கொங்கு மண்டலத்தில் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அந்தச் சமயங்களில் பாடப்படுவதுதான் ‘சுங்கிடிச்சாம் சுங்கிடிச்சாம் சுங்கிடிச் சேலை’ எனும் பாடல் என்றும் சொல்கிறார்கள். உண்மையில் அப்படி ஒன்று இருந்ததா அல்லது கவுண்டர் இனப் பெண்களை இழிவு படுத்த எதிர்சாதியினரின் பரப்புரையா என்று தெரியவில்லை.

காமம் பேய்தான் என்பதில் ஐயமில்லை! ஓட்டுவதென்று வந்து விட்டால் ஆணென்ன பெண்ணென்ன?!

***

ரத்த அழுத்தம் உடையவர்கள் அன்னபூர்ணாவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. உங்கள் சுயமரியாதைக்கும், பொறுமைக்கும் சோதனைகள் வைத்தே சோற்றைப் போடுவார்கள். ஆனாலும் என்னைப் போன்ற தனிக்கட்டைகளுக்கு வேறு போக்கிடம் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் அவர்கள்தான் கடை விரித்திருக்கிறார்கள்.

கையில் சாருவின் ‘வாழ்வது எப்படி?’ - ஐ பிரித்து வைத்துக்கொண்டு டேபிளில் அமர்ந்தேன். சர்வர் வந்து என்ன வேண்டுமென்று வினவ 18 பக்கங்கள். ஆர்டர் செய்த தோசை வந்து சேர 22 பக்கங்கள். இரண்டாவதாகக் கேட்ட காபி வருவதற்கு 20 பக்கங்கள். பில் வந்து சேர - மிச்ச சில்லறை வந்து சேர என 86 பக்கங்களுடைய புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். வாழ்வின் எல்லாக் கடமைகளையும் முடித்தாலொழிய இனியொரு முறை இங்கு வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

சரி புத்தகத்திற்கு வருவோம். பதினெழு கட்டுரைகளில் ‘வாழ்வது எப்படி?’ என்ற மென்பொருள் இளைஞர்களைப் பற்றிய கட்டுரையும், ‘மீள முடியாத இசைக் கனவு’ என்ற மைக்கேல் ஜாக்ஸன் கட்டுரையும்தான் தேறியது. மற்றதெல்லாம் சுயபீத்தல்கள்!

***

ரஹ்மானின் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா லண்டனின் ராயல் பெஸ்டிவல் ஹாலில் நடந்தது. மொஸார்ட் போன்ற மாபெரும் மேதைகள் தங்களது இசை நிகழ்ச்சிகளை நடத்திய அரங்கம் அது. உலகெங்கிலும் இருந்து வந்த இசை ஆர்வலர்களின் முன்னிலையில் ரஹ்மானின் இசைக்கோர்வைகளை இங்கிலாந்து இசைக்கலைஞர்கள் இசைத்தனர். ரஹ்மான் ஒரு பார்வையாளராக கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

லண்டன் சவுத் பேங்க் சென்டர் ஆரம்பிக்கப்பட்ட 78 வருட வரலாற்றில் இங்கே இசைக்கும் முதல் இந்திய இசை ரஹ்மானுடையது. ரோஜா, பம்பாய் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் தீம் இசைக்கோர்வைகளை மட்டும் ரஹ்மானின் ஆஸ்தான கலைஞர்கள் நவீன் (புல்லாங்குழல்) மற்றும் கணேஷ் (வீணை) இசைத்தனர். இசையின் உன்னதங்களைத் தொட்டுத் திரும்பும் இவ்விசைக் கோர்வைகளுக்கு ‘ஸ்டண்டிங் ஒவேஷன்’

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பிபிசி மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரஹ்மான் பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒரு கேள்வி: ‘ஏதேனும் ஓர் இசைக்கருவியை நீங்கள் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’

‘இதை என் மனைவி கேட்டால் கோபித்துக் கொள்வார்’ என்று வெள்ளந்தியாகப் பதில் சொல்ல அரங்கம் அதிர்ந்தது.

***

மேற்படி சம்பவத்தை வீடியோவாக்கி எனக்கு அனுப்பி வைத்திருந்தது நிஜாம். நார்தம்ப்ரியா யுனிவர்சிட்டியில் (நியூகேஸ்டில்) மேலாண்மை படிக்கிற மாணவன். ஹாரிலால் கதையின் மூலம் சாகாவரம் பெற்ற விடுதியறைத் தோழன். நானும் அவனும் நேர்கோட்டில் சந்திக்கிற ஓரே விஷயம் ரஹ்மான்தான். ஜோதா அக்பர், டெல்லி 6 போன்ற மாஸ்டர் பீஸ்கள் வெளியான சமயங்களில் பல ராத்திரிகள் ரஹ்மானில் லயித்துக் கிடந்திருக்கிறோம். இருவருக்கும் பொதுவான லட்சியமாக இருந்தது ரஹ்மானைச் சந்திப்பதுதான். அவன் ஜெயித்து விட்டான்.

***

நிறைய வெளிநாடுவாழ் நண்பர்கள் அழைக்கிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்த வரிகளை நோக்கி நகரும் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறேன். ஆனால், பேசுகிறவர்களில் பலரும் ‘ரொம்ப நாளாப் பேசனும்னு நினைப்பேன். ஏதாவது சொல்லிடுவீங்களோன்னு தயக்கம்’ என்பதுதான் கவலையளிக்கிறது. நான் எப்போதும் உரையாடலை நேசிப்பவனாக இருக்கிறேன். எழுதுவதைக் காட்டிலும் பேசுவதுதான் பெரும் ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. நள்ளிரவு நயாகராக்களுடன் மட்டும்தான் ஒவ்வாமை. அது கூட விடிகாலைக் கவலைகளை எண்ணித்தான்!

உன் எழுத்தில் மெலிதான திமிர்த்தனம் தென்படுவதுதான் அவர்களது அபிப்ராயத்திற்குக் காரணம் என்கிறாள் கேண்டி.

***

ட்வீட்டும் நடிகைகளில் எனக்கு செலீனா ஜெட்லீ மீதுதான் காதல் பெருக்கெடுக்கிறது. ஜிம்கானா கிளப் எச்சித்தனமாக நடந்து கொண்ட விவகாரத்தில் செலீனா கொதித்தெழுந்ததும், லெஷ்மி திரிபாதிக்கு ஆதரவு திரட்டியதும் எனக்குப் பிடித்திருந்தது.

மற்ற சமூக வலைதளங்கோடு ஒப்பிடுகையில் ட்வீட்டர் அத்தனை மோசமில்லை. பல சமாச்சாரங்களை ட்வீட்டர் மூலமே தெரிந்து கொள்கிறேன்.

***

Wednesday, April 14, 2010

உலகப் பொதுநோய்


ரொம்பச் சின்ன வயதில் குமுதத்திலோ விகடனிலோ படித்த ஒரு பக்கச் சிறுகதை. கல்யாண வீட்டிற்குள் நுழைய முற்படும் பெரியவரிடத்தில் ஒரு சின்னப் பையன் இலையில் அதிகம் சாப்பாடு மீதம் வைக்கும்படி கோரிக்கை வைப்பான். எச்சில் இலை வழித்து வீட்டு உறுப்பினர்களுக்கும் சோறு கொண்டு போயாக வேண்டும் அவன். அந்தக் கதை என்னை கடுமையாகப் பாதித்தது. நாம் சாப்பிட்டு வீசியெறியும் இலையின் பயணம் அத்தோடு முடிவதில்லை. அதை மனிதனோ, காகமோ, பூனையோ, நாயோ பசியோடு அணுகுகிறது. அவை ஏமாற்றம் கொள்ளலாகாது என எப்போது சாப்பிட்டாலும் மிச்சம் வைப்பது வழக்கமானது.

கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் எத்தியோப்பியக் குழந்தை இறக்கக் காத்திருக்கும் கழுகின் படம் கண்டு அதிர்ந்தேன். அதை எடுத்தவன் தீவிர மனநோயில் செத்தான். ‘இக்கொடுமையினைக் கண்டு நீங்கள் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை. பணம் அனுப்ப வேண்டியதில்லை. உங்கள் தட்டுகளில் இருக்கும் உணவினை வீணாக்காமல் இருங்கள். இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உணவு தானே கிடைக்கும்’ என்று சொல்லி விட்டுத்தான் செத்தான். ரொம்பக் குழம்பி ஒரு முடிவெடுத்தேன். இலையெனில் கொஞ்சம் மீதம் வைப்பது. தட்டில் சாப்பிட்டால் ஒரு பருக்கை மிச்சம் வைக்காத அளவிற்கு சாப்பாட்டை வாங்கிக்கொள்வது. இப்போதும் தொடர்கிறது.

மீசை முளைத்த வயதுகளில் ‘கை, கால், கண், காது ஏன் மூக்கு கூட இல்லாமல் ஜீவராசிகள் பிறக்கிறார்கள். வயிறு இல்லாமல் யாரும் பிறந்ததில்லை’ என்கிற மு. சுயம்புலிங்கத்தின் வரிகளும், ‘வயிற்றிலொரு தீயெறிய’ எனும் ரமேஷின் பதப்பிரயோகமும் பசியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கும்.

ரொட்டி வாங்கவும் வக்கற்ற ஜிம்பாப்வே மக்கள் களிமண்ணைச் சலித்து, அரைத்து, சிறு உருண்டைகளாக்கி பசிக்கும்போது வாயில் போட்டு விழுங்கி விடுகிற ‘பிரண்ட் லைன்’ கட்டுரை பல நாட்கள் என்னைத் தன் பிடியில் வைத்திருந்தது.

இம்மாத உயிர்மையில் வெளியாகியுள்ள பால்ய வறுமையின் கவுச்சியடிக்கும் மனோஜின் ‘வெயில் வட்டம்’ சிறுகதை சத்துணவு வரிசைகளையும், சோற்றில் நெளியும் புழுக்களையும், பின்புறம் கிழிந்த கால்சட்டைகளையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது. தன் வாழ்வோடு ஒட்டிச் செல்லும் படைப்புகளுக்கு வாசகன் உயர்ந்த அந்தஸ்தை வழங்கி விடுகிறானில்லையா?!

Monday, April 12, 2010

விஜி 25

1. இதுவரை சுமார் 2000 பேர்களுக்கு மேல் விஜியிடம் எஸ்.ஏ.பி ( சேப்) பயிற்சி எடுத்து வாழ்வில் வளம் பெற்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் வீட்டு பூஜையறையில் விஜியின் போட்டோவை மாட்டி வணங்கி வருகிறார்கள்.

2. பதிவர் சங்கம் / பேரவை / சிற்றவை / குழுமம் ஆகியவற்றிற்கு முன்னோடி விஜிதான். தலைவர்: விஜி - செயலாளர்: வர்ஷா - பொருளாளர்: பப்பு என உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் சங்கத்தை ஆரம்பித்த சிங்கம் அவர்.

3. விஜியின் ஆதர்ச எழுத்தாளர் நர்சிம்தான். அவரது இன்ஸ்பிரேசனில் கருப்புக்கண்ணாடியை மாட்டிக்கொண்டு எங்கேயோ வெறிக்கும் படங்களை வீடெங்கும் மாட்டி வைத்திருக்கிறார்.

4. விஜி பயங்கரமான பெருமாள் பக்தை. திருப்பதி செல்வதென்று தீர்மானித்து விட்டால் பச்சைத் தண்ணீர் பல்லில் படாது. நடந்தே மலையேறி தரிசனம் முடியும்வரை கொலை பட்டினி கிடப்பார்.

5. சின்ன வயதில் பஸ் டிரைவராக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், கடைசி வரை சைக்கிள் கூட ஓட்டத் தெரியாமல் போய்விட்டது என்பது சொந்த சோகம். அதனால்தான் ராப்பகல் பாராமல் கூகிள் பஸ்ஸில் டூர்ர்ர்ர்ர்ர்...

6. விஜிக்கு பிடிக்கவே பிடிக்காதது காஸிப். யாராவது புறம் பேசினால் பொறுக்கவே மாட்டார். கூட சேர்ந்து பேச ஆரம்பித்து விடுவார்.

7. இரண்டாயிரம் கடன் கேட்டால் இருநூறும், இருநூறு கேட்டால் இருபதும், இருபது ரூபாய் கேட்டால் இரண்டு ரூபாயும் கொடுக்கிற நவீனப் பொருளாதார கொள்கை அவருடையது.

8. சிம்-கார்டு படிவம் நிரப்புவது எப்படி என்றொரு 400 பக்க நூலும், ‘வெளங்குமா?’ என்றொரு கவிதைத் தொகுப்பும் கொணர இருக்கிறார். ராம்மு பதிப்பகம் இரண்டு தொகுதிகளையும் வெளியிட இருக்கிறது. ‘நான் என்னவாவேன்?!’ என்றொரு புத்தகத்தை பதிப்பாளர் ராம் எழுதிக்கொண்டிருப்பதாகவும் தகவல்.

9. ஓரே வீட்டில் மூன்று பதிவர்கள் என்கிற சாதனையோடு நின்று விடாமல் ஒரு பொமரெனியன் வாங்கி அதற்கும் ஒரு பிலாக் துவங்கிக் கொடுக்க இருக்கிறார். காட்டு நாய்கள் பதிவெழுதும்போது வீட்டு நாய் பதிவெழுதினால் என்ன என்பது அவரது வாதம்.

10. ஏழை பாழைகளுக்கு அவ்வப்போது டீ-சர்ட்டுகள், நைட் பேண்டுகள் வழங்குவது வழக்கம். அவர்களும் வரிசையில் நின்று வாங்கி விட்டு வாயார வாழ்த்துவார்கள்.

11. தன் உயிர் நண்பன் பெரிய எழுத்தாளனாக இருப்பதில் வண்டி வண்டியாய் பெருமிதம். தன் தோழியரிடம் சொல்லி பெருமை அடித்துக்கொள்வார்.

12. பால்வாடி, பள்ளிக்கூடம், கல்லூரி என எங்கும் எப்போதும் முதல் மாணவி விஜிதான். அசெம்பிளிக்கு வரிசையில் நிற்கும்போது.

13. தங்க நகைகள் என்றால் விஜிக்கு அறவே ஆகாது. எப்படியோ சேர்ந்துவிட்ட 346 பவுன் நகைகளை வறிய நிலையிலுள்ள கேண்டிக்கு கொடுத்து விடலாமா என்று கனத்த யோசனையில் இருக்கிறார்.

14. திருப்பூர் பதிவர்களுக்குத் தலைவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தலைவி நான்தான் என்று மிட்-நைட்டில் மெஸெஜ் அடிப்பதைக் கண்டு வெயிலான் கலக்கத்தில் இருக்கிறார்.

15. தமிழில் அவருக்குப் பிடிக்காத ஓரே வார்த்தை ‘நற்குடி’

ஸாரி... விஜிம்மா... எவ்ளோ யோசிச்சாலும் பதினைஞ்சு பாயிண்டுக்கு மேல தேறலைம்மா... உனக்கு இவ்ளோ போதும்.

Tuesday, April 6, 2010

அன்புச் சண்டாளர்கள்என் எழுத்தூக்கம் சூம்பிப்போய் விட்டது. சும்மா இருப்பதன் செளந்தர்யங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி! என்ன ஓய் ஆச்சு எனக் கேட்டு வரும் விசாரிப்புகளுக்காகச் சத்தில்லாத இந்த எழுத்து. முன்யோசனையின்றி திறந்து விட்ட கதவுகளைச் சாத்தும் வழியறியேன். வேறு வேலைகள் ஏதும் இருப்பின் நீங்கள் கிளம்பலாம்.

***

தனியாக வாழ்வதற்கும், தனி வீட்டில் வாழ்வதற்கும் இடையேயான வித்தியாசங்களை உணர்வதற்குள் ஐம்பதாயிரம் ஆவியாகி விட்டது. தனியன் எனினும் வீடென்று வந்து விட்டால் அதன் பேச்சைத்தான் கேட்டாக வேண்டும். தண்ணீர், மின்சாரம், கேபிள், பத்திரிகை, அசோசியேசன், வீட்டைக் கூட்டினேன், தெருவைக் கூட்டினேன், காவல் காத்தேன், காத்துக் கிடந்தேன் என பதினைந்து தேதிக்குள் பஸ்மாகிறது பாக்கெட்.

வெப்பக்கோடையை நீந்திக் கடக்க ‘பள பளா... ஜிலீர் பளீர்...’ என்றெழுதிப் பிழைத்தேன். ஒற்றோ, சந்தியோ வந்து மறிக்காத எழுத்து. ‘மருந்து வாங்க மறக்காம வாங்க’ என்ற ஒற்றை வரிக்கு பத்துச் சிறுகதைகள் எழுதினால் கிடைக்கும் ரெமுனரேஷன். தமிழே உன்னை வணங்குகிறேன். என் வாழ்வும் சாவும் உன்னோடுதான்!

***

மனதின் உளறல்களைக் கவனிக்கத் துவங்கினேன். உளறல் காற்பங்கு உதறல் முக்காற்பங்கு (சுகுமாரன் இந்தப் பதத்தை நாக்கில் விதைத்து விட்டார். சனியன் விடாமல் துரத்துகிறது...). எல்லாம் வாழ்வியல் சார்ந்த பயம். சம்பாத்தியத்திற்குத் தேவையான சாமர்த்தியம் குறித்து சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும். அப்புறம் நடந்தோ, தவழ்ந்தோ, புறத்தியார் முதுகிலோ பயணிக்கலாம். நமக்கொரு சாமியார் கிடைக்காமலா போவார்?!

***

கொடுத்த பணத்தை வாங்க வழியில்லை பராபரமே எனப் புலம்பி எழுதி இருந்த வாரம் முழுக்க நான்கைந்து வெளிநாட்டு அழைப்புகள். உறக்கத்தின் அரக்கப் பிடியில் எடுக்கவில்லை. அழைத்திருந்தது ஆர்.ஆர்! பணப்பிரச்சனை என்றீர்களே ஒருவாரமாக முயற்சிக்கிறேன் எடுத்தீரில்லை என்று விசனப்பட்டார். வரைபடத்தில் அமெரிக்கா இருக்கும் திசையினைத் துழாவி நெடுஞ்சாண் கிடையாக விழுந்தேன். இந்த அன்புச் சண்டாளன் என்னை அழைக்கும் போதெல்லாம் நன்னாரி சர்பத் குடித்த மாதிரி இருக்கிறது.

உம்ம கல்யாணத்திற்குப் பணம்தான் பிரச்சனை எனில் லட்ச ரூபாய் தருகிறேன். உடனே பண்ணிக்கொள்! என்கிற இன்னொரு அன்புச் சண்டாளன் சித்தர்!

தகுதிக்கு மீறி எனக்குக் கிடைக்கின்றவற்றுள் பிரதானமானது அன்பு. அன்பை ஸ்வீகரிக்கவும் அருகதை இருக்க வேண்டுமில்லையா?! காலம் காலமாக காரணங்கள் ஏதுமின்றி கொண்டாடப்படுகிறேன். ‘முன்னம் நீ புரி நல்வினை’ என்கிறாள் கேண்டி.

***
தமிழினி சந்தா கேட்டு எழுதியதற்கு பரிசலின் பதிவிலிருந்து ஆறு பேர்களும் (விக்கி, சிவக்குமார், ராஜா, தியாகராஜன், செளந்தர்ராஜன், வெங்கட்ரமணன்) என் பதிவிலிருந்து நான் மட்டுமாக மொத்தம் சேர்ந்தது ஏழு. அனுப்பி வைத்து விட்டேன். அனேகமாக மே மாத இதழ் முதல் அவர்களுக்குக் கிடைக்கலாம்.

***

மின்சார மணியை முறைக்கும் மேளக்காரனைப் போல ஐபிஎல் போட்டிகளை வெறித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்கொயர் கட், ஆன் டிரைவ், லேட் கட் ஆடுபவனுக்கு மரியாதை இல்லை. குட் லென்த் பாலை கண்ணை மூடிக்கொண்டு ‘ங்கோத்தா’ என்று அடிக்கிறார்கள். ஸ்டைலுக்கோ, இலக்கணத்துக்கோ இடமில்லை. கீப்பரின் தலைக்கு நேர் பின்னே பறக்கிறது சிக்ஸர்!

ரத்தத்தில் அடித்துச் சொல்கிறேன் 20-20 ஆட்டங்கள் கிரிக்கெட்டைத் தின்று செரிக்கும்.

***

நடிகைகளை வேறெங்கு பார்ப்பதை விடவும் மைதானக் கும்பலில் பார்ப்பது பரவசம். வேறெந்த உடைகளை விடவும் ஜெர்ஸியில் தேவதைகளாக இருக்கிறார்கள். அழகு ராணி என்னவோ ஷில்பாதான். ஒரு நொடி காண்பித்தாலும் ‘கார்ஜியஸ்’ என முனங்கிக்கொள்கிறேன். நவீன யுகத்தில் பிறன்மனை நோக்குதல் பெரிய பாவமில்லைதானே?!

***

ஆகச்சிறந்த - சுந்தரராமசாமி
கறாரான - ஜெயமோகன்
கொடுங்கனவு - மனுஷ்யபுத்திரன்
அடாசு - சுஜாதா
யாவரும் - எஸ்.ரா
அசூயை - சாரு (பொறாமை என்பதுதான் உண்மையான அர்த்தம். இவரோ ஒவ்வாமை எனப் பொருள்பட பிரயோகிக்கிறார்)

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் சில பிரத்யேக பதப்பிரயோகங்கள் இருக்கின்றன. இதுமாதிரியே பதிவர்களுக்கும் ஒரு க்ளிஷே பட்டியல் வைத்திருக்கிறேன்.

உண்மையான உண்மை - வடகரை வேலன்

எஸ்ஸெம்மெஸ் - பரிசல்

ஸ்நானப்ராப்தி - லக்கி

கந்தாயம் - நர்சிம்

நபும்சகன் - முதுகூகை

நல்லா இருங்கடே - ஆசிப்மீரான்

வேட்கை - உமா ஷக்தி

என்னவர் / பீட்ஸா / ஹாட் டாக் - விக்கினேஸ்வரி

நாவன்மை - *****

இப்பட்டியலை நீங்கள் பின்னூட்டங்களில் தொடரலாம்.