Wednesday, February 25, 2009

கலைமாமணி

தமிழ அரசின் கலைமாமணி விருதுப்பட்டியலில் என் இனிய அண்ணன் பாஸ்கர் சக்தியின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு மற்றும் சமீபத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களின் வசனகர்த்தா அவர். 'நீ வர்ற வரைக்கும் வச்சிகிட்டா இருப்பாய்ங்க...' போன்ற எளிய, இயல்பான வசனங்களின் மூலம் 'வெண்ணிலா கபடிக் குழு'த் திரைப்படத்தில் தன் இருப்பைப் பரவலாக்கியவர்.

கோலங்கள், மெட்டி ஓலி போன்ற சாகாவரம் பெற்ற நெடுந்தொடர்களில் அவரது வசனங்களைப் பேசி நடித்தவர்கள்தான் இன்று சின்னத்திரையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அத்தி பூத்தார் போல அவ்வப்போது பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதுவார். அழகர்சாமியின் குதிரை, பழுப்பு நிறப் புகைப்படம் ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. பாஸ்கர் குறித்து ரமேஷ் வைத்யா அடிக்கடிச் சொல்லும் கொட்டேஷன் "நானும் நீயும் ஒரு கிராமத்துச் சந்தைக்குப் போனால் அதிகபட்சம் ஒரு கட்டுரை தேறும். ஆனால் பாஸ்கர் போனால் இருபது சத்தானச் சிறுகதைகள் எழுதுவான். அத்தனை நுட்பமாய் உலகைக் கவனிப்பவன்".

பாஸ்கர் சக்தி மேலும் பல தளங்களில் இயங்கி நம்மை மகிழ்விக்க இந்த விருது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன். மனதார வாழ்த்துகிறேன்.

Monday, February 23, 2009

கிளைத் தலைவன்

சித்தப்பா முப்பது வருடங்களுக்கு முன்பே மும்பைக்குப் பெயர்ந்தவர். தமிழர்களும், இஸ்லாமியர்களும் பெருமளவில் வாழும் 'காந்தி வல்லி' பகுதியில் குடியிருக்கிறார். மகேந்திரா டிராக்டர்ஸ் தொழிற்சாலை அங்குதான் இருக்கிறது.

இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்தவர் "லேய்... நம்ம அருளுக்கு சிவசேனாக் கச்சியோட காந்தி வல்லிப்பகுதி கிளைத் தலைவர் போஸ்டிங் கிடைச்சிருக்குப்பா... இந்தப் பதவி வகிக்கிற முதல் தலைவன் உங்க அண்ணம்டே... எனக்க ரொம்ப பெருமையாட்டு இருக்கு..." என்றார். அவர் குரலில் பெருமிதம் பிரவாகமிட்டுக் கொண்டிருந்தது.

நான் மெதுவான குரலில் அவரிடம் "சித்தப்பா... ஆரம்ப காலம் தொட்டு சிவசேனாவின் கொள்கைகளுள் ஒன்று மதராஸிக்களை உதைப்பது. கால வெள்ளம் சமூக மேடு பள்ளங்களை நிறைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்திலும் 'அம்ச மாட்டி' (மராத்தி நமதே!) கூச்சல்களோடு உத்தரபிரதேசத்துக்காரர்களை உதைத்துக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிக் கூட்டம் சிவசேனா. 'மஹாடா' எனப்படும் மஹாராஷ்டிர ஹவுசிங் நிர்மாணின் அத்தனை வீடுகளும் மராத்திக்காரர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் கோட்டிக்காரக் கட்சியின் தலைவரானதற்கு வெட்கப்படுவதற்குப் பதில் பெருமையா?!"

டொய்ங்..............

***

கல்லைப் பிழிந்து நீரெடுத்து
காற்றைப் பிழிந்து சாறெடுத்து
எரிமலைக்குச் சரிமலையாய்
எழுந்து நிற்கும் மக்கள் தலைவா!

மேற்படி கவிதை வாசன் மூப்பனாரின் பிறந்த நாளுக்காகத் தொண்டர்களால் ஜூனியர் விகடனில் கொடுக்கப்பட்ட வாழ்த்து. நம் சஞ்செய் இதுமாதிரிக் கவிதைகள் எழுதுவாறா?! என்று விசாரிக்க வேண்டும்.

***

விஜயா பதிப்பகம் போகின்ற சமயங்களில் 'உயிர் எழுத்து' வாங்குவது உண்டு. இருக்கிற தீவிர இலக்கியப் பத்திரிகைகளில் ரொம்பவும் தீவிரமாகச் சாவடிக்கிறார்கள். உதாரணம்...

"மருதுவின் காண்பிய மொழியானது பலவகையான காட்சிப் பண்பாடுகளின் கலப்பினால் விளைந்ததொன்றாகும்... பரந்துபட்ட காட்சி மூலங்களிலிருந்தும் வெளிப்பாட்டு முறைகளினதும் எதேச்சையானதும் இயல்பானதுமான கலப்பினால் விளைந்த பன்னலத்திரட்டான மொழியை மருது கொண்டுள்ளா."

இதுமாதிரி கிர்ர்...ரடிக்கும் மொழியில் என்பது பக்கங்களுக்கு எழுதுகிறார்கள். எழுத்து மொழியில் மாற்றமும், படைப்புகளைத் தேர்வு செய்வதில் கறார் போக்கினையும் கடைபிடித்தால் ஒழிய 'உயிர் எழுத்து' உருப்படாது என்பது என் அபிப்ராயம்.

***

இவர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆனால் நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் மூவாயிரம் ரூபாயும், மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு புரொபஷனல் வரி, வருமான வரி என எந்தக் கெடுபிடியும் கிடையாது. யாரென்று கணிக்க முடிகிறதா பாருங்கள். நாளை எழுதுகிறேன் விரிவாக...

Sunday, February 22, 2009

சாமீயோவ்...


பிச்சைக்காரர்களின் உலகம் விசித்திரமானது. அதை வார்த்தைப்படுத்தும் என் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. என் பழைய பனை ஓலைகளைப் புரட்டியதில் சிக்கிய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருக்கிறேன். விகடனில் வெளியானவை என்பதைத் தவிர யாதொரு சிறப்புமற்ற கவிதைகள்.

சாட்டை

ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஓலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்
பீறிடும் ரத்தம்
பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யுபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
என்73 என்றால் சும்மாவா?!

இரவு

இழுத்துச் சாத்தப்பட்ட
கடைவாசல்களில்
பொத்தல் துணிகளுக்குள்
உடல்குறுக்கிக் கிடக்கும்
மனிதர்களைக் கடிப்பது
குளிரா? கொசுவா?

மயக்குறு மழலை

இடைப்படக்
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக்குழந்தை
பிச்சை!

கட்டணம்

காற்றின் வழி
நுகர்ந்து விட்ட
குருட்டுப்பாடகனின்
பாடலுக்கு
ஈயும் பணம்
பிச்சையல்ல...

Saturday, February 21, 2009

சலிப்பு

"காந்தி கண்ணதாசனின் அறிக்கை சலிப்படையச் செய்வதாக இருக்கிறது" என கருணாநிதி தன் கைப்படக் கடிதம் எழுதி வருத்தம் தெரிவித்திருக்கிறார். பாவம் அவருக்குத்தான் தமிழ் எழுத்தாளர்கள் மீது எத்தனை கரிசனம்?!

திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டை கடந்த நாற்பதாண்டு காலமாக ஆண்டு வருகின்றன. இந்த நாற்பதாண்டு காலத்தில் சோற்றுக்கு வழி இல்லாமல் செத்துப்போன எழுத்தாளர்கள், நோயில் ரத்தம் கக்கிச் செத்த எழுத்தாளர்கள், எடுத்து எரிக்க நாதியற்றப் பிணமாய் நாறிப்போன எழுத்தாளர்களின் பட்டியல் இருக்கிறது என்னிடம். திராவிடக்குஞ்சுகள் தமிழ் வளர்த்த லட்சணம் ஊர் அறியும்.

கலைஞர் ரொம்பத்தான் செஞ்சு சலிச்சுட்டாரு...

***

எங்கள் குடும்பத் தொழிலான தீப்பெட்டிக் கம்பெனி லைசென்சு ரினிவல் வகைக்காக, பரம்பரைச் சொத்தை பங்கீடுவதற்காக, சிட்டை வட்டிக் கடனில் மூழ்கிய அண்ணனை மீட்கும் வகைக்காக, வாடகைக்கு வந்தவர் வீட்டைக் காலி செய்ய மறுத்த விவகாரத்திற்காக, சாலை விபத்தில் இன்ஸூரன்ஸ் க்ளேய்ம் செய்யும் வகைக்காக என வாழ்நாளில் பலமுறை பல வழக்கறிஞர்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் கூட நேர்மையோ, மனிதமோ கிஞ்சித்தும் இருந்ததில்லை. நான் அணுகிய வழக்கறிஞர்கள் எல்லாருமே மிகுந்த தந்திரசாலிகளாகவும், ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்களாகவுமே இருந்தனர்.

வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் பொது விவகாரங்களில் நடந்துகொள்ளும் முறை மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது. சமூக நிகழ்வுகளில் காத்திரமான பங்கேற்பை மேற்கொண்டு வந்த அரிய இனங்களுள் ஓன்றாக இருந்த அவர்கள், இன்று கலவரக்காரர்களைப் போலவும் பயங்கரவாதிகளைப் போலவும் செயல்படுவது கண்டு உங்களைப் போலவே நானும் திகைத்து நிற்கிறேன்.

போராட்டத்தில் கல் வீச, சக மாணவனைக் கொலை வெறியோடு அடித்து நொறுக்க, சக மனிதன் மீது அழுகிய முட்டைகளை வீச, காவலர்களின் மண்டையை செங்கல்லால் உடைக்க, காவல் நிலையங்களை, பேருந்துகளைக் கொழுத்த அவர்கள் படித்த சட்டம் தடையாக இல்லை.

கல்வி, கேடில் விழுச்செல்வமா?!

***

ரமேஷ் வைத்யாவின் 'உயரங்களின் ரசிகன்' கவிதைத் தொகுதியைக் கடந்த நான்காண்டு காலமாய் தேடிக் கொண்டிருந்தேன். பரிசல் கூரியரில் அனுப்பி வைத்தார். பக்கத்திற்குப் பக்கம் ஏமாற்றம்.

ரமேஷ் வைத்யா எனும் ஆளுமையின் சமீபத்தியச் சிறுகதைகளோடும், கவிதைகளோடும் ஒப்பிடுகையில் மேற்கண்ட தொகுப்பில் இருப்பதெல்லாம் சுவையற்ற வெற்று வரிகளே. கவிதையின் அடையாளங்கள் சிறிதும் காணப்படாத அத்தொகுப்பை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

Wednesday, February 18, 2009

கெட்ட புத்தி

இருபத்தெட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமையாக அறிவித்திருக்கிற செய்தியைக் கண்டு துணுக்குற்றேன். காரணம் கண்ணதாசன், சுந்தரராமசாமி போன்ற நட்சத்திர எழுத்தாளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்ததே. மேற்படி எழுத்தாளர்களின் வாரிசுகள் தொடர்ந்து அவர்களது புத்தகங்களைப் பதிப்பித்து வரும் வேளையில் எப்படி இதற்குச் சம்மதித்தார்கள் என்ற பெரும்கேள்வியோடு ஒரு முதுபெரும் பதிப்பாளரைத் தொடர்பு கொண்டேன். "சென்னையில் காந்தி கண்ணதாசன் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார். தமிழக அரசு எழுத்தாளர்களின் குடும்பத்தாரிடமிருந்து முறையான அனுமதியைப் பெறவில்லை எனக் கேள்வி..." என்றார் அவர்.

இதற்கு முன்பு அகிலனின் படைப்புகளை நாட்டுடைமையாக அறிவித்தது தமிழக அரசு. அகிலனின் மகன் கடுமையாக எதிர்த்ததும் அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இம்முறையும் அப்படி நிகழ்ந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. தமிழ் வளர்ச்சித் துறை...?! ப்ச்...

***

இந்த இரண்டாவது பாரா - நீக்கப்பட்டது.

***
முடியலத்துவம்

யாருக்குத்
தெரியும்
நீரோ மன்னன்
வாசித்தது
அம்ருதவர்ஷிணியோ
என்னவோ?!


அர்ஜூனா
மரம் தெரிகிறதா?
இல்லை
கிளை தெரிகிறதா?
இல்லை
இலை தெரிகிறதா?
இல்லை
இது காட்ராக்ட்தான்
அட்மிட் ஆயிடுங்க...

Monday, February 16, 2009

திக்விஜயம்

ஐ.வி எனப்படும் 'இண்டஸ்ட்ரீயல் விசிட்'டுக்காக கேண்டி இன்று ஹைதரபாத் செல்கிறாள். நான்கைந்து நிறுவனங்களைப் பார்வையிடுவதாகத் திட்டம். நவீன யுகத்தில் ஐ.வி ஒரு அனுமதிக்கப்பட்ட சுற்றுலாவாகக் கொண்டாடப்படுகிறது. எங்களுடைய நிறுவனத்திற்கு ஐ.வி வரும் கல்லூரி மாணவர்களில் 99% பேர் அடி முட்டாள்தனமான கேள்விகளை கேட்பார்கள். கேண்டிக்கு கீழ்க்கண்ட டிப்ஸ்களை வழங்கினேன்.

1) ஒரு நிறுவனத்திற்குள் நுழைவதற்கு முன் அந்நிறுவனம் பற்றிய குறைந்தபட்ச தகவல்களை இணையத்தின் மூலமாகத் தேடித் தெரிந்து கொள்ளுதல். கீழ்க்கண்ட தகவல்கள் அவசியம்

அ) நிறுவனம் எப்போது, யாரால், எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது?

ஆ) நிறுவனத்தின் தயாரிப்புகள் எவை எவை? அதன் கிளை நிறுவனங்கள், உபதொழில்கள் என்னென்ன?

இ) சந்தையில் நிறுவனத் தயாரிப்புகளுக்கான இடம் என்ன? அதன் போட்டியாளர்கள் யார்?

ஈ) தன் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் 'மார்க்கட்டிங் ஸ்டர்ஜி' என்ன?

உ) நிறுவனத்தின் 'கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி' செயல்பாடுகள் எத்தகையது?

ஊ) நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எ) நிதி நிர்வாகம், மனிதவள நிர்வாகம் எப்படி செயல்படுகிறது?

ஏ) நிறுவனம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்கள்

2) ஐ.வி என்பது சுற்றுலா அல்ல. சாமான்யர்கள் எளிதில் நுழைய அனுமதி கிடைக்காத தொழிற்கூடங்களில் கல்லூரி மாணவர்கள் என்ற ஓரே காரணத்தினால் பார்வையிட கிடைத்திருக்கும் வாய்ப்பு அது. வெற்றுக் காமெண்டுகளை அடித்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்.

3) தொழிற்சாலை அதிகாரிகளை எரிச்சலடைய வைக்கும் கேள்விகளைக் கேட்காதீர். (உ.ம்) மொத்த டர்ண் ஓவர் எவ்வளவு? ஒழுங்கா 'டாக்ஸ்' கட்டறீங்களா? பங்குச்சந்தையில உங்க பங்குகள் வீழ்ச்சியாமே...? உங்க சம்பளம் எவ்வளவு?

4) ஐ.வி சென்று திரும்பியதும் நீங்கள் பார்த்தவற்றையும், தெரிந்து கொண்டவைகளையும் ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து உங்களை அழைத்துச் சென்ற ஆசிரியரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

5) உங்களை அனுமதித்த தொழிற்சாலை நிர்வாகிகளின் ஈ-மெயில் ஐ.டியைப் பெற்று நன்றி தெரிவித்து மெயில் அனுப்புங்கள். முடிந்தால் நீங்கள் எடுத்த புகைப்படங்களோடும் மேற்கண்ட ரிப்போட்டுடனும். உங்களைக் குறித்தும், உங்கள் கல்லூரி குறித்தும் நல் அபிப்ராயம் ஏற்பட உதவும்.

6) நீங்கள் போக இருக்கும் ஊரின் பாரம்பரிய சிறப்புகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு சக மாணவர்களை அசத்தலாம். (உ.ம்: ஹைதரபாத் என்பது கார்க்கி போன்ற சிந்தனையாளர்களும், வா. மணிகண்டன் போன்ற பெருங்கவிஞர்களும் வாழும் ஊர்... சானியாமிர்ஸா அவதரித்த திருத்தலம், நிஜாம்கள், ராமலிங்கராஜூக்கள், ரோஜா, சிரஞ்சீவி...)

7) ஐ.விக்களில் அறிவார்த்தமான கேள்விகளைக் கேட்ட பல பேருக்கு 'ஆன் தி ஸ்பாட் - அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்' கிடைத்த வரலாறு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்.

அவளிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது "ஐ மிஸ் யூ" :(

Sunday, February 15, 2009

தோழியரே...

பிரதீபா திருக்குளத்தரசன், அனோஜா ரத்தினவேல் என்று மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு தோழிகள் எனக்கு 'பேனா நண்பர்களாக' இருந்தனர். பிரதீபா திருச்சியை பூர்விகமாகக் கொண்ட தமிழ்க்குடும்பத்துப் பெண். பிரதீபாவின் தந்தை இலங்கை அரசாங்கத்தில் கல்வித்துறையில் உயர் பதவி வகித்து வந்தார். ஏர்மெயில் ஸ்டாம்பு வாங்க இடம் கொடுக்காத வறுமையிலும் பிரம்மப் பிரயத்தனங்களோடு அவர்களுக்குக் கடிதம் எழுதுவேன். ஒவ்வொரு கடிதங்களும் சுமார் பத்து முதல் பதினைந்து பக்கங்கள் வரை. பதில் மடல்கள் இருபது பக்கத்திற்குக் குறையாமல் வரும். இருவருக்கும் தேர்வு மொழிப் பாடமான தமிழ் மீது தனியாத ஆர்வம் இருந்தது.

கொடிய பணப் பஞ்சத்தில் துயர்மிகு வரிகளோடு இறுதிக்கடிதம் ஒன்று எழுதினேன் "கடல் கடந்து பேனா நட்பு வைத்துக்கொள்ளும் சலூகையை வாழ்க்கை எனக்கு வழங்கவில்லையென". அத்தோடு நின்று போனது அவர்களுடனான நட்பு.

அன்றாடக் கவலைகள் ஒருவழியாக ஓய்ந்துவிட்ட என் இன்றைய நிலையில் பழைய நட்புகளின் வேர்களைத் தேடி வருகிறேன். பிரதீபா குறித்து யாதொரு தகவலும் இல்லை. அனோஜா ரத்னவேல் (Anoja Ratnavel) 'ஃபேஸ் புக்'ல் இருப்பதைக் கண்டுகொண்டேன். என் சொற்ப கணிணி அறிவில் ஃபேஸ் புக்கில் அவளைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. என்னுடைய இணைய நண்பர்களே யாராவது என் தேடலை அவளுக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ்....

***

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு லைசென்ஸ் தேவையில்லை. ரிஜிஸ்ட்ரேஷன் எண்களும் தேவையில்லை. ஓட்டுவதும் சுலபம். இதுபோன்ற காரணங்களுக்காக இதன் பயன்பாடு பெருத்திருக்கிறது. நிறைய பள்ளி மாணவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு பேராவது என் ஓடுபாதையில் விழுகிறார்கள். இண்டிகேட்டர் சிக்னல் இல்லாமல் திடீரெனத் திருப்புகிறார்கள். இடித்து விட்டு நிற்காமல் ஓட்டுகிறார்கள். எண்களைக் கூட குறித்து வைக்க முடியாது. குறைந்தபட்ச சாலை விதிகள் கூட தெரியாமல் நெடுஞ்சாலையில் ஓட்டுகின்ற இந்தச் சிறுவர்கள் லாரிச்சக்கரங்களுக்குள் நசுங்கி விடும் அபாயம் குறித்து கவலை கொள்கிறேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சைக்கிளைத் தவிர்த்த வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம், ரிஜிஸ்ட்ரேஷன் எண்கள் வழங்கப்பட்டால் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கலாம்.

***

சே குவேராவைப் பற்றி படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருபத்து மூன்று வயதில் ஏற்பட்டது. 'சே'வைப் பற்றிய புத்தகங்கள் எல்லாம் தலையணை அளவிலும் என் மாதச்சம்பளத்தின் விலையிலும் இருந்தது. ஒவ்வொரு புத்தகக்கண்காட்சியிலும் 'சே'வை ஆசையோடு எடுத்துப் பரிசித்துவிட்டு எடுத்த இடத்தில் வைத்து விடுவேன்.

ஈரோடு புத்தகக்கண்காட்சியில் வெறும் நாற்பது ரூபாய் விலையில் ஒரு சேகுவேரா புத்தகம் இருந்தது. புத்தகத்தின் தலைப்பு "அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...'. விடுவேனா?!. ஓரிரவில் படித்து முடித்தேன். 'சே' யாரென்று கேட்கும் நண்பர்களுக்கு விளக்கவும், படித்துப்பார் எனக் கொடுக்கவும் மிகவும் உதவிகரமாக இருந்தது. புத்தகம் முழுதும் ஆவணங்களால் ஆனது. ஒரு தமிழ் எழுத்தாளன் இத்தனை ஆதாரங்களை எப்படித் திரட்டினான் என்பதே நேற்றிரவு வரை என் கேள்வியாக இருந்தது.

அப்புத்தகத்தின் ஆசிரியர் ஜா. மாதவராஜ், வடகரை அண்ணாச்சி மூலம் எண்களைப் பெற்று நான் நன்றாக எழுதுவதாகப் பாராட்டினார். நானும் யாரோ ஒரு மாதவராஜ் என்று பேசிவிட்டு வைத்துவிட்டேன். திடீரென 'ஸ்ட்ரைக்' ஆகி அண்ணாச்சியை போனில் பிடித்து உறுதி செய்து கொண்டு மாதவராஜின் எண்களைப் பெற்றேன். அவரை அழைத்து ஒன்றே ஒன்றுதான் சொன்னேன் "கிண்டலாக இருக்கிறதா.... யாரை யார் பாராட்டுவது....?!"

சந்திப்பு

திறந்தவெளிப் பல்கலைத் திட்டத்தில்தான் பட்டம் பெற்றேன். மாணவர்களின் பயன்பாட்டிற்காக 'பிசிபி' எனப்படும் 'பெர்சனல் காண்டாக்ட் புரொக்ராம்' நடத்துவார்கள். படிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் தவறாது கலந்துகொள்வேன். அப்படிப்பட்ட ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வந்தவர் "லால் பகதூர் சாஸ்திரி" குறித்து தவறான ஒரு தகவலைச் சொல்ல, அதை நான் கடுமையாக மறுத்தேன். "தம்பி... நான் இந்த அரசியல் அறிவியல் துறையின் தலைவர். அமெரிக்கத் தேர்தல்களுக்கு சிறப்புப் பார்வையாளனாக அழைக்கப்படுபவன். ஹில்லாரி கிளிண்டன் வீட்டில்தான் சாப்பிடுவேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசியல் விளக்கப் புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். என்னிடம் விவாதம் பண்ணாதே... உட்காரு..." என்றார். அவமானத்தோடு அமர்ந்தேன்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் வகுப்பு துவங்கியது. வேறொரு ஆசிரியர் குறிப்புகளை வழங்கிக்கொண்டிருந்தார். 'செல்வேந்திரனை ஹெச்.ஓ.டி கூப்பிடுறார்' என்றொரு தகவல் வந்தது. என்னடா இது வம்பு எனப் பயந்துகொண்டே அவரது அறைக்குச் சென்றேன்.

"தம்பி, நீங்க சொன்னதுதான் கரெக்ட். இப்பத்தான் ரெஃபர் பண்ணினேன். உனக்கு எப்படிப்பா இந்தத் தகவல் தெரியும்...?"

"புக்ல... படிச்சுருக்கேன்..."

"அரசியல்னா அவ்வளவு ஆர்வமா...?!"

"இல்ல சார்... புத்தகம்னா ஆர்வம்..."

"என்ன மாதிரி புக்ஸ் படிப்பீங்க...?"

"கையில எது கிடைச்சாலும் படிப்பேன் சார்"

"அட... சரி... சாயங்காலம் என்னைப் பாத்துட்டுப் போ"

"ஓ.கே சார்"

மாலையில் எனக்கு சில புத்தகங்களையும், தேர்வில் நிச்சயம் இடம் பெறும் என சில கேள்விகளையும் ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார். புத்தகங்களை வாங்கிக்கொண்டு கேள்விகள் எழுதிய பேப்பரை அவரிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுச் சொன்னேன் "இதெல்லாம் இல்லாமலே எனது அவரேஜ் 70%. என்னுடைய உழைப்பில் கிடைக்கும் மார்க்குகள் எனக்குப் போதும்"

மேற்படி சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. மேற்படி பேராசிரியரை வேறொரு புகழ் மிக்க பல்கலைக்கழகத்தின் இயக்குனராக நேற்று சந்திக்க நேர்நது. பெயரைக் கேட்டதுமே நேற்று நடந்தது போல அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விடைபெறுகையில் சொன்னார் "தம்பி நீங்க ஒரு லெக்சரராகவோ, ஐ.ஏ.எஸ் ஆபிஸராவோ வருவீங்கன்னு நெனச்சேன்...ஆனா அதையெல்லாம் விட நல்ல இடத்துலதான் இருக்கீங்க... என்றார் மதுரைத் தமிழில்..."

வாழ்க்கை ஒரு விசித்திர வட்டம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?!

Thursday, February 12, 2009

உதாசீனன்


மேற்கண்ட படத்திற்குக் கீழே...

* செல்வா,
நீயொரு பொய்யன்
பித்தலாட்டம் உனது மொழி
அன்பை சுவீகரிக்கும்
அருகதையற்ற உதாசீண புருஷன்
உன்னைப்போலவே
மிகுந்த போலியானவை
உனது சமூக அக்கறைகள்
எவரும் அறியாதவை
உனது குரூரங்கள்
ஆனாலும்
உன்னைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்
நான் மட்டுமே அறிவேன்
நீ எத்தனை நல்ல 'காதலன்' என்று...

தீராத முத்தங்களுடன்,
கேண்டி
என்று எழுதி அனுப்பி இருந்தாள் கேண்டி. அவள் ஒரு திமிர் பிடித்த பெண் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?!

***

ஊரில் நாங்கள் குடியிருந்த வீடு ஊர்க்கோவிலுக்குச் சொந்தமானது. கோவிலை ஓட்டிய அந்த வீட்டின் முற்றத்தில் வில்வமரம் இருக்கிறது. வில்வங்காய்கள் விழுந்து ஓடுகள் தினசரி உடைந்து கொண்டிருக்கும். வில்வமரம் புனிதமாகக் கருதப்படுவதால் அதை வெட்ட எவரும் சம்மதிப்பதில்லை. மழைக்காலங்களில் வீட்டில் ஒண்ட இடம் இல்லாமல் ஓழுகும். நள்ளிரவு தூக்கத்தில் 'சுர்ரென்று' வலியெடுக்கும். திடுக்கிட்டு முழித்தால் போர்வைக்குள் 'முசுக்கட்டாண்' பூச்சிகள் ஊரும். விதம் விதமான பூச்சிகளின் கடிக்கு ஆளாகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் தெரியாது. உழைத்த களைப்பில் அடுத்த நிமிடமே உறங்கிப் போய்விடுவேன். இப்போதோ ஒரு கொசு கடித்தால் கூட ஒரு அங்குல பரப்பளவிற்கு சிறிய தடிப்பு ஏற்பட்டு அரை மணி நேரம் கழித்து மறைகிறது. ஏதுவும் புதுவிதமான நோயாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

***

பரிசல் வீட்டிற்குள் நுழைந்தால் எவரையும் பொறாமைப்பட வைக்கும் ஒரு புத்தக அலமாரி உங்களை வரவேற்கும். சோபாவில், டீப்பாயில், சாப்பாட்டு மேஜையில், கணிணியில், படுக்கையில் என புத்தகங்களால் நிறைந்திருக்கிறது அவரது வீடு. பொறாமையாய் இருக்கிறது. எனக்கு 'கோணல் பக்கங்களை' பரிசளித்தார்.

"பரிசலில் பதிவுகள் ஜனரஞ்சகமாய் இருக்கிறது. எல்லாப் பதிவர்களும் வாசிப்பாளர் குறித்த அக்கறையின்றி தங்களது சொந்த அனுபவங்களை எழுதிக் குவித்துக்கொண்டிருக்க பரிசல் ஒரு வெகுஜனப்பத்திரிகைப் போல தனது வலைதளத்தை நடத்துகிறார்." என்கிறாள் கேண்டி. அது உண்மைதான். அவரது வலைதளத்தில் என்னைக் குறிப்பிட்டு எழுதிய பின் நாளொன்றுக்கு சுமார் அறுநூறு பேர் வருகை தருகிறார்கள் என் வலைப்பூவிற்கு. பரிசல் பிராண்ட் ஆகிவிட்டார்.

***

குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்தால் என் இதயத்தில் ரத்தம் வடிகிறது. என் வாழ்நாள் முழுவதையும் குழந்தைத் தொழிலாளர்களுக்காகச் செலவு செய்ய தயாராக இருக்கிறேன். நானும் கேண்டியும் மாலைப் பொழுதைக் கழிக்கும் வ.ஊ.சி மைதானத்தைச் சுற்றி இருக்கும் பேல்பூரி கடைகளில் பால் மணம் மாறாத பாலகர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது இயலாத காரியம் என்பது அவர்களது குடும்பச் சூழலைக் கேட்டறிந்து புரிந்துகொண்டோம். குறைந்தபட்ச கல்வியும், உலக அறிவும் அவர்கள் பெற எங்களது மாலை வேளையை பயன்படுத்த இந்தக் காதலர் தினத்தில் சங்கல்பம் கொண்டிருக்கிறோம்.

***

நீண்ட இடைவேளைக்குப் பின் அடியேனின் கவிதைகள் நடப்பு இதழ் (காதலர் தின சிறப்பிதழ்) விகடனில் இடம்பெற்றுள்ளது. முடியலத்துவ ரசிகர்களுக்கான வழக்கமான 'குசும்புச் சுவை' உண்டு. இந்த நேரத்தில் கவிமடத்தையும் அதன் அராஜக தலைவனையும் நன்றியோடு நினைவு கொள்கிறேன்.

***

காதலர் தின சிறப்பு முடியலத்துவம்

*எங்கெல்லாம்
காதல் இருக்கிறதோ
அங்கெல்லாம்
கவிதையும் இருக்கிறது
யாதொரு பயனுமின்றி...

* காதலெனும்
பெருநோயின்
ஆரம்ப அறிகுறி
கவிதை

* நான் உன்னைக் காதலிக்கிறேன்
நானும் உன்னைக் காதலிக்கிறேன்
நான் உன்னையும் காதலிக்கிறேன்
நான் உன்னையே காதலிக்கிறேன்
முடியல.. விட்ரு...

Tuesday, February 10, 2009

தாமிராவிற்காக...

அன்பிற்குரிய தாமிரா மற்றும் சமீப நாட்களாக என் வலைப்பூவிற்கு
வருகை தரும் புதிய நண்பர்களின் வசதிக்காக கொஞ்சமேனும் பரவாயில்லை என்று நான் நினைக்கிற பத்து பதிவுகளின் லிங்குகளை இணைக்கிறேன். இவை அளவில் கொஞ்சம் பெரியவை என்பதால் சற்று அயற்சியூட்டலாம்.

எனது எழுத்துக்களை ல.மு, ல.பி என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஏராளமான எழுத்துப்பிழைகளோடும் தாராளமான சந்திப்பிழைகளோடும் எழுதி வந்த அடியேனின் 'உற்றுப்பிழைகளை' உற்றுப்பார்த்து திருத்தியவர் லதானந்த். அவரோடு பல விஷயங்களில் முரண்பட்டாலும், முரண்டு பிடித்தாலும் எவரும் சுட்டாத எனது பிழைகளைச் சுட்டிய ஆசான் அவர். இந்தப் பழைய பதிவுகளில் பல எழுத்துப்பிழைகள் இருக்கும். பொறுத்தருள்க...

மெலட்டூர் மேஜிக்

செல்லெனப்படுவது

தாயோளீ

காட்டின் ஒரு துண்டு

வெளிச்ச நகரம்

பச்ச புரட்சி

கதைகளை தின்பவன்

சுவையற்றவை

பேச்சலர்ஸ் பர்ஸில் பணம் சேர

துப்பாக்கி தேவை

இவைகளைத் தவிர்த்து எனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த ரஜினியும் அப்பாவும், பதுங்கு குழி போன்ற கதைகளும், முடியலத்துவம் என்ற பெயரில் நான் அடித்த கொட்டமும் முழுக்க அடாஸூ என்பதால் அவற்றை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.

Friday, February 6, 2009

மனிதர்களே

உங்களைப் பற்றிய என் அபிப்ராயம் என்னவென்று எப்போதும் கேட்கிறீர்கள். நான் கேட்கிறேன் 'உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் என்ன?' முதலில் அதைச் சொல்லுங்கள். உங்களைப் பற்றிய உங்களது அபிப்ராயம் மிகத் துல்லியமானதும் மிகுந்த கசப்பானதுமாய் இருப்பதால் அதை கேட்க நீங்கள் ஒருபோதும் செவிமடுப்பதே இல்லை. அதற்காகவே அடுத்தவரிடத்தில் 'அபிப்ராயப் பிச்சை' எடுக்கிறீர்கள். உங்களைப் பற்றிய என் அபிப்ராயங்கள் உயர்வானதாய் இருந்தால் உச்சி முகர்வீர்கள். உண்மையானதாய் இருந்தால் பிய்த்து எறிவீர்கள். உங்களைப் பற்றிய என் மொத்த அபிப்ராயமும் இது ஒன்றுதான் உலகத்தீரே.... ஏற்பது இகழ்ச்சி!

- பிரதியங்காரக மசானமுத்து

Sunday, February 1, 2009

மீதமிருக்கும் சொற்கள்எஸ்பிஐ வங்கியின் டெலி மார்க்கட்டிங் பெண்ணிற்கும் வாடிக்கையாளருக்கும் இடைய நிகழ்ந்த சம்பாஷனை ஒன்றினை மசினகுடி பதிவர் சந்திப்பில் ஒலி பரப்பினார்கள். ஆங்கிலத்தில் (?!) நிகழ்ந்த அந்த உரையாடலைக்கேட்டு மூச்சடைக்க சிரித்தோம். அந்த உரையாடல் ஓலி வடிவமாக இங்கே கிடைக்கிறது. இந்த உரையாடல் வெறும் நகைச்சுவை மட்டுமல்ல. நுட்பமான பல விஷயங்கள் இதில் இருக்கின்றது. இதை விரிவான விவாதத்திற்குட்படுத்த வேண்டும் வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைத்தேன்.

1) வங்கியில் இருந்தல்லவா பேசுகிறார்கள்? பெண் அல்லவா பேசுகிறாள்? அதுவும் ஆங்கிலத்தில் அல்லவா பேசுகிறாள்? என்று தயங்காது எதிர்கொண்டது முரட்டுத் துணிச்சல் அல்லவா?! அதை வரவேற்போம்.

2) நாவன்மையும் மொழியறிவும் எல்லா இடத்திலும் செல்லுபடியாகாது. கற்றறிந்த அந்த பெண்ணால், தான் சொல்ல வந்ததை கடைசிவரை சொல்ல இயலவில்லை. ஆனால், சரியோ தப்போ சரத் தான் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி முடித்துவிட்டார்.

3) டெலிமார்க்கட்டிங்கில் தேன் குரல் கேட்டால் ஜொள் ஒழுக்காமல் வி.ஐ.பி சூட்கேஸ் விவகாரத்தில் என்னை ஏன் சிக்க வைக்கவைக்கிறீர்கள் என்ற தொனியில் ஏக்கச்சக்கக் கேள்விகளைக் கேட்கிறார் சரத். இத்தனைக்கும் அவரது ஸ்டேட்டஸ் "சிங்கிள்"

4) மொழியை ஆயுதமாகப் பயன்படுத்துவது சரத் மற்றும் என்னைப் போன்ற சாமான்யர்கள் மீது நிகழ்த்தும் வன்முறை. எதிராளி தடுமாறுகிறார் என்றால் உங்களுக்கு எந்த மொழி சவுகர்யப்படும் என்று கேட்டு அந்த மொழியில் பேசினால்தானே நியாயம்?!

5) அதிலும் ஓரிடத்தில் அந்தப் பெண் மெலிதாக சிரித்துவிடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்னதான் இருந்தாலும் சரத் வி.ஐ.பி கஸ்டமர் தகுதிக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பதை நினைவுறுத்திக்கொள்கிறேன்.

6) இறுதியில் சரத் சொல்கிற "ஓ.கே. டாட்டா" இன்று போய் நாளை வா என்று சொல்வது போல இல்லையா?! தோற்று ஓடியது அந்தப் பெண்தானே தவிர சரத் இல்லையே...!

சிறு கோரிக்கை:
எப்பாடு பட்டாவது சரத்தை தேடி கண்டுபிடித்து அடுத்த பதிவர் சந்திப்பு சிறப்பு விருந்தினராக அழைத்துவரும் பெரும்பொறுப்பு கும்கீக்கும் கார்க்கிக்கும் இருக்கிறது.