சாமீயோவ்...


பிச்சைக்காரர்களின் உலகம் விசித்திரமானது. அதை வார்த்தைப்படுத்தும் என் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. என் பழைய பனை ஓலைகளைப் புரட்டியதில் சிக்கிய கவிதைகள் சிலவற்றைப் பதிவிட்டிருக்கிறேன். விகடனில் வெளியானவை என்பதைத் தவிர யாதொரு சிறப்புமற்ற கவிதைகள்.

சாட்டை

ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஓலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்
பீறிடும் ரத்தம்
பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யுபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
என்73 என்றால் சும்மாவா?!

இரவு

இழுத்துச் சாத்தப்பட்ட
கடைவாசல்களில்
பொத்தல் துணிகளுக்குள்
உடல்குறுக்கிக் கிடக்கும்
மனிதர்களைக் கடிப்பது
குளிரா? கொசுவா?

மயக்குறு மழலை

இடைப்படக்
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக்குழந்தை
பிச்சை!

கட்டணம்

காற்றின் வழி
நுகர்ந்து விட்ட
குருட்டுப்பாடகனின்
பாடலுக்கு
ஈயும் பணம்
பிச்சையல்ல...

Comments

//இடைப்படக்
குறுகுறு நடந்து
இட்டும் தொட்டும்
சிறுகை நீட்டி
கேட்கிறதக்குழந்தை
பிச்சை!
//

குழந்தைகளைப் பிச்சைக் காரர்களாக நினைக்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.. இதுக்கு ஏதாவது செய்யணும் செல்வேந்திரன்.
மயக்குறு மழலையும், கட்டணமும் கவிதைக்குரிய தன்மைகளோடு இருக்கின்றன.
selventhiran said…
அடடே... வாங்க சீமாச்சு... என்ன இந்தப்பக்கம் ரொம்ப நாளா வரத்து இல்லையே...

நன்றி மாதவராஜ்.
Thamira said…
மனதை பாதிக்கும் விஷயங்களை அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள்..
Thamira said…
மயக்குறு குழந்தை மனதைப்பிசைந்தது.. அப்படி ஒரு குழந்தையை காணும்தோறும் ஏற்படுவதைப்போல..
இனம் புரியாத சோகத்தினிடையில் ரசிக்க கூடிய கவிதைகள்.
Anonymous said…
ஜன்னலுக்கு வெளியே
காலில் சலங்கை கட்டிய
கழைக்கூத்தாடியொருவன்
ஓலிக்கும் உருமிக்கேற்ப
சாட்டையைச் சுழற்றுகிறான்
பீறிடும் ரத்தம்
பதிவாகிறதென் நோக்கியாவில்
யூ ட்யுபில் பதியலாம்
ஆர்க்குட்டில் போடலாம்
வலைப்பூவில் எழுதலாம்
என்73 என்றால் சும்மாவா?!.....



ரசிக்கும்படி இருந்தாலும் குற்றுணர்வு மனதை பிசைகிறது ...
N73யும் கட்டணக் கவிதையும் முகத்தில் அறைகிறது செல்வா!
:)) நல்லா இருக்கு...
/விகடனில் வெளியானவை என்பதைத் தவிர யாதொரு சிறப்புமற்ற கவிதைகள்./

ம்ஹூம். தப்பு..தப்பு...தப்பு.

சாட்டையும், கட்டணமும் எனக்குப் பிடித்திருக்கிறது.சாட்டை ரொம்ப.
தலைப்பும் பொருத்தம்.