Monday, December 30, 2013

2013-ஆம் ஆண்டின் டாப் டென் முகநூல் மோஸ்தர்கள்!

1. அட்டைப்பட அல்லுசில்லுகள்:

 புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கும் என்னுடைய கவிதை தொகுப்பின் முகப்பு என்கிற அறிவிப்புடன் படங்களைப் போஸ்ட் செய்வது; இமேஜைப் பெரியதாக்கி உற்றுப் பார்த்தால் கைலாச பதிப்பகம் என்றிருக்கும். 200 லைக்குகளும், 100 வாழ்த்துக்கள் பாஸ்!-ம் வாங்கியிருக்கும் அந்தக் கவிதை தொகுதியை கைலாசம் வரை சென்று தேடினாலும் கிடைக்காது. ஆன்லைன் ஃபோட்டாஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட அட்டையை நம்பி நீங்கள் பு.க.கா-ல் கடை கடையாய் ஏறி இறங்கினால் அதற்கு நாங்களா பொறுப்பு?!

2. அத்தியாய அலப்பறைகள்:

எழுதிக்கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு பகுதியென நான்கைந்து பாராக்களைப் பதிவிடுவது. மொத்த நாவலே நான்கைந்து பாராக்கள்தான் என்பதை யூகிப்பவனே கலியுகத்தில் வாழும் தகுதியுடைத்தவன்.

3. உங்களுள் யார் இந்துத்துவா?

நீங்கள் பிறப்பால் இஸ்லாமியராக இருக்கலாம். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுபவராக இருக்கலாம். மூன்று முறை ஹஜ் யாத்திரை மேற்கொண்டவராகக் கூட இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் எதைப்பற்றியும் கருத்து சொல்லியவராகவோ எழுதியவராகவோக் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஒளிந்திருக்கக்கூடிய இந்துத்துவ கூறுகளைக் கண்டெடுத்து களையெடுப்பதே இப்போதைய ஃபேஷன். உதாரணமாக, ’ரெவரெண்ட் ஃபாதர் அந்தோணி சிலுவைராஜ் பிறப்பால் கிறிஸ்துவராக இருந்தாலும், பாதிரியாராகப் பணியாற்றினாலும் அவர் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக காலை எழுந்ததும் தவறாமல் வாசிப்பது ஹிண்டு நாளிதழே. எனவே அவர் ஓர் இந்துத்துவா’ என ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தலாம். போலவே வலதுசாரி, இடதுசாரி துவங்கி பூனம் சாரி, பனாரஸ் சாரி வரை க்ளாஸிபிகேஷன் செய்வதே தற்போதைய டிரெண்ட்.

4. உலக சினிமா உலக்கையடிகள்.

திரைப்பட விழாவில் இன்று காணவாய்த்த படம் ‘தி யானிங்’. ’கொரிய இயக்குனர் ஜிங் மங் ஜங் இயக்கிய இப்படம் மானுட மனங்களில் அட்டைக்கரியென அப்பிக்கிடக்கும் இருண்மைகளினுடாக வாழ்வின் ஒளிமிக்க தரிசனத்தை அலசுகிறது; பிறகு நம் மீதே காயப்போடுகிறது. உக்கிரமான கவித்துவ தருணங்கள் ’ நீயெல்லாம் ஏம்ல படம் பார்க்க வந்த...’ என நம்மை விசாரிக்கிறது’ எனப் போட்டுத்தள்ளும் ஸ்கிரினிங் ஸ்டேட்டஸூகள்.

5. டிஸ்கார்டு டிக்கிபேர்டுகள்:

புத்தகக் கடைகளிலோ, இலக்கிய கூட்டத்திலோ தற்செயலாக ஒரு எழுத்தாளரைப் பார்த்தால் பாம்பாய் படமெடுத்து ஆடுவார்கள். அவசர அவசரமாய் கையிலிருக்கும் புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள் (சமீபத்தில் பிரபல எழுத்தாளரிடம் ஒருவர் ரேசன் கார்டைக் காட்டி கையெழுத்து போடும்படி சொல்லியிருக்கிறார்). 2எம்பி மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இணையம் என்று வந்து விட்டால் ‘நானும் பெருமாள், அவரும் பெருமாள். போட்டுத் தள்றா அந்த எழுத்தாளர...’ என தகிக்கும் தன்னம்பிக்கையுடன்  ’ஒண்ணும் தேறல, குப்பை, மரண மொக்கை, டொக்காயிட்டாரு’ - போன்ற டிஸ்கார்டு ஸ்டேட்மெண்டுகளை அள்ளி விடுவது. ’ஸாரி ஜெமோ’வில் ரத்தம் குடித்து விட்டு அரவிந்த் கெஜ்ரிவாலை அமைதிப்படை சத்தியராஜாக்கும் வேள்வியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.

6. ’ஐ சப்போர்ட்’ ஐஸோடோப்புகள்:

நாட்டாமைக்குத் துண்டு எப்படியோ அப்படித்தான் இவர்களுக்கு ஐ சப்போர்ட் டேக்குகள். காஞ்சிபுரம் தேவநாதனுக்கும், சயனைடு மோகன்குமாரையும் தவிர்த்து இவர்கள் ‘ஐ சப்போர்ட்’ போட்டு தூக்கி விடாத ஆட்களே தமிழ்நாட்டில் கிடையாது. இந்தியாவில் எட்டு கோடி பார்வையற்றவர்களுக்கு எட்டாயிரம் கண்கள்தான் தானமாகக் கிடைக்கின்றன. ‘ஐ சப்போர்ட்’ போடுகிற நேரத்தில் ஐ தானத்திற்கு சப்போர்ட் செய்தாலாவது விழியற்றவர்களுக்கு ஒளி கிடைக்குமென இந்நேரத்தில் கட்டுரையாளர் தன் கட்டு சாதத்தை அவிழ்க்கிறார்.

7. நூல் விடுதல்:

ஒரு ஸ்டேட்டஸ் கூட போட முடியாவிட்டால் ஒரு நூலை வாசிப்பதன் பயன்மதிப்பென்பது என்ன? நாம் வாசித்திருக்கிறோம் என்கிற ஒரு வரலாற்றுக்காரணம் போதாதா ஒரு புத்தகம் முக்கியமானதாகி விட? கைக்கு அகப்பட்டதையெல்லாம் பத்து பத்து பக்கமாகப் புரட்டி அங்கங்கே இரண்டிரண்டு வரிகளை உருவி இறுதியாக மிக முக்கியமான நூல். நல்ல வாசிப்பனுபவமென முடித்தால் நிறைய்ய வாசிக்கிறவர் என்கிற இமேஜையும் தக்க வைக்கலாம். கூடவை லைக்குகளையும். (ஏராளமான பாத்திரங்கள் இடம்பெற்றிருப்பதும், அவர்களுக்கிடையே நிலவும் நுண்ணிய வேறுபாடுகளுமே இந்நூலின் சிறப்பு என Yellow Pages-க்கு ஒருவர் முகநூலில் நூல் அறிமுகம் எழுதியிருப்பதாக கேள்வி!)

8. அறிவிப்பு அய்யாச்சாமிகள்:

நூல் வெளியீடு, ஆவணப்படம் திரையிடல், கவியரங்கம், ஓவியக் கண்காட்சி துவங்கி ஓய்வு பெற்ற நூலகருக்கு பாராட்டு விழா என எங்கே என்ன நடந்தாலும் அறிவிப்பு போட்டு அசத்துவார். அந்தக் கூட்டத்திற்கெல்லாம் இவர் போவாரா என ஃபாலோயர்ஸ் கேட்கக்கூடாதென்பது முகநுல் நியதி. இந்த அறிவிப்புகளின் மூலமே தானொரு இலக்கியச் செயற்பாட்டாளரென உறுதியாக நம்புவதை யாரென்ன செய்தும் தடுக்க முடியாது.

9. வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள்:

அணில், நடராஜன், காடு ப்ளஸூ, ஃபார்மெட்டாலஜிஸ்ட் என சினிமாப் பிரபலங்களுக்கு கன்னாபின்னாவென கலாய்த்தல் பெயர் சூட்டி,  படம் ரிலீஸாவதற்கு முன்பே ஃப்ளாப்பாமே என ஸ்டேட்டஸ் போட்டு, புரொடியூஸருக்கே தெரியாத கலெக்‌ஷன் புள்ளி விபரங்களை அள்ளி விட்டு இது ரத்த பூமிடாவென உருமியபடி திரியும் வெட்டிச் சண்டை வெங்கலக்கிண்ணிகள். இவர்கள் அடித்துக்கொண்டு கிடக்கும் போது சம்பந்தப்பட்ட இரண்டு பிரபலங்களும் கன்னத்தோடு கன்னம் ஒட்டி செல்ஃபி எடுத்து ட்வீட்டரில் போட்டு கட்டையை கொடுத்து விடுவது அந்தோ பரிதாபம்.

10. எ.மா.ச.வா?!

என்னக் கொடுமை சரவணன் வசனத்தை தமிழகமே வதக்கிக்கொண்டிருந்த காலத்தில் பிரபுவின் மீட்பராக ஆட்டத்துக்கு வந்தவர் மனுஷ்யபுத்திரன். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என இவர் சேனல்களில் கேட்டுத் தொலைக்க ’என்ன மாதிரியான சம்மூவம் சார்?!’ என கருகின தோசைக்கெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டு சாவடிக்கிறார்கள். ’என்னது ஒரு முழம் பூ முப்பது ரூவாயா... என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?’ எனும் உரையாடலை நான் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியம்மா சொல்லக் கேட்டேன்.

Monday, December 23, 2013

வினைநலம்

முந்தைய ஆண்டுகளை விட இந்த விழாவிற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று தெளிவத்தை ஜோசப் தமிழ் வாசகப் பரப்பு அதிகம் அறியாததோர் ஆளுமை. மேலதிகமாக இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையில் புலிகள் அல்லது ’சிங்கள காடையர்கள்’ ஆகிய இரண்டு தரப்பு மட்டுமே வசிக்கிறார்கள் என்பது நம்மவர்களின் மனப்பதிவு. இன்னொரு காரணம் எழுத்துரு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஜெயமோகனை ஒரு கை பார்க்கவேண்டுமென சில திடீர் தமிழுணர்வாளர்கள் விடுத்திருந்த அறைகூவல். எனவே முறையான காவல்துறை அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. விரிவாக விளம்பரம் செய்ய வேண்டியிருந்தது. இரண்டையும் கச்சிதமாகவே செய்து முடித்தோம். குறைந்த பட்சம் 400 பேர்களாவது விழாவிற்கு வரவழைப்பதை லட்சியமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அரங்கத்திலிருந்த 540 இருக்கைகள் போக மண்டபத்திற்கு வெளியேயும்  சுமார் 100 பேர் வரை பார்வையாளர்கள் இருந்தனர். இந்த வெற்றி முழுக்க முழுக்க விஜயசூரியன், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையே சேரும். அத்தனை உழைத்திருந்தனர்.

***

இஃதொர் விருது விழா மட்டுமல்ல. மொழியின் மூத்த படைப்பாளர்கள் முதல் இளம் தலைமுறை படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், ஓவியம், புகைப்படம், நாடகம், இசை, சினிமா போன்ற பிற கலைகளில் துறை போனவர்கள், வாசர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி விவாதித்து, சந்தேகங்கள் அபிப்ராயங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து, பாடல்கள் பாடி, கவிதைகளை வாசித்து, ஒன்றாக உண்டு, உறங்கி, நடை பயின்று இரண்டு நாட்கள் நிகழும் மாபெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் அல்லது ஊடகங்கள் பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்து நடத்துகிற லிட்ரரி ஃபெஸ்டுகளுக்கு இணையானதொரு கலாச்சார நிகழ்வு.

இந்த ஆண்டு மேலும் கூடுதலாகப் புதிய நண்பர்கள். இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன், சு. வேணுகோபால், தேவதேவன், பிரேதன், சாம்ராஜ், ரவி சுப்ரமணியம், சுரேஷ்குமார் இந்திரஜித், மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், இசை, மொழிபெயர்ப்பாளர்கள் நிர்மால்யா, விஜயராகவன், எம்.ஏ.சுசீலா, பதிப்பாளர்கள் எழுத்து அலெக்ஸ், நற்றிணை யுகன், சொல்புதிது சீனு, காந்தி டுடே சுனீல் கிருஷ்ணன் என இந்தாண்டு பலரையும் சந்தித்து அளவளாவுகிற வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. தமிழில் இத்தனை எழுத்தாளர்கள் ஒன்றுகூடுகிற வேறு விழா ஏதேனும் இருக்கிறதா என்ன?!

***

இந்திரா பார்த்தசாரதிக்கு 84 வயதாகிறது. தெளிவத்தைக்கு 80 வயது. நாஞ்சில் எழுபதை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், இரண்டு நாட்களும் உற்சாகம் குன்றாமல் சளைக்காமல் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தனர். இந்த அசாத்திய எனர்ஜியை வியந்தோதிக்கொண்டிருந்தபோது ஜெ ஒரு அப்சர்வேஷனைச் சொன்னார். பொதுவாக அறுபதைக் கடந்தவர்களெல்லாம் மிகப்பெரிய அனத்தல்களாக, விட்டால் போதுமென நம்மைத் தெறித்து ஓடச் செய்பவர்களாக, யாரையும் கடித்து துப்பக்கூடியவர்களாகத்தான் பெரும்பாலும் காணக்கிடைக்கிறார்கள். ஆனால், இலக்கியத்தை துறையாகக் கொண்டியங்கியவர்களில் பெரும்பான்மையானோர் இந்த வயதிலும் கச்சிதமாக இயங்கக்கூடியவர்களாகவும், உரையாடக்கூடியவர்களாகவும் இருப்பதைக் குறிப்பிட்டார். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், ஞானி, ஆ.மாதவன் போன்றவர்கள் மேலதிக உதாரணங்கள்.

***

ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் இப்பெரும் படைப்பாளிகள் மீது மறுவாசிப்பை ஏற்படுத்தியது என்றால் தெளிவத்தைக்கு வழங்கப்பட்ட விருது அவருக்கு புதுவாசிப்பை ஏற்படுத்தியது. சுமார் நூறுக்கும் மேற்பட்ட குழும நண்பர்கள் வரவழைக்கப்பட்ட அவரது படைப்புகளை ஊன்றி வாசித்திருந்தனர் என்பது இணையத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளிலிருந்தும், அவருடன் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு புதிய நல்லெழுத்துக்காரனைக் கண்டடைந்த பரவசத்தினை அனைவரிடமுமே காண முடிந்தது. குறிப்பாக கோபி, சுனீல் கிருஷ்ணன், ராஜகோபாலன் ஆகியோரது கட்டுரைகளும், வி.சுரேஷின் வாழ்த்துரையும் மிக முக்கியமான ஆக்கங்கள்.

தெளிவத்தை எழுதிய, எழுதி இன்னும் அச்சு வடிவம் காணாத படைப்புகள் தமிழில் வெளி வந்திருப்பதும் வரவிருப்பதுமே இவ்விழாவின் மிக முக்கியமான மற்றொரு அம்சம்.

***

மேடையில் பெரிய ஆளுமைகள் இருக்கிறார்கள். நான் முன் வரிசையில் அமர்ந்து கொள்கிறேன் என்ற இயக்குநர் பாலாவின் கோரிக்கையை முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் ’நான் பேசல’ என வைத்த கோரிக்கையைப் போலவே இரக்கமற்று நிராகரித்தேன். எழுத்தாளர்கள் அமர்ந்திருக்கிற சபையில் சினிமாவுலகின் பிரதிநிதிகளாகத் தாம் இருப்பதில் இவர்கள் ஏதோ ஒரு வகையில் கூச்சம் கொள்கிறார்கள். அப்படி கூச்சமடைய வேண்டிய எவ்வளவோ மண்ணாந்தைகள் நாட்டில் வெட்கமில்லாமல் மேடைகளில் முன்நின்று சொல் வென்றவர்களாக இருக்கையில் இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமான படைப்புகளை உருவாக்கும் இந்த தனிக்குரல்களுக்கென்ன தயக்கமென்பதே என்னுடைய அபிப்ராயமாக உள்ளது.

சட்டென்று நான் மேடைக்கழைத்த அதிருப்தி பாலாவின் முகத்தில் தெரிந்தது. ஆனால், பிரமாதமாகப் பேசினார். தன்னுடைய படைப்புகள் எந்தெந்த சிறுகதைகள்/நாவல்களின் பாதிப்பில் உருவானவை என்பதைப் பற்றி, தன் படங்களில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பங்களிப்பதைப் பற்றி, எழுத்தாளர்கள் தயக்கம் தவிர்த்து சினிமாவில் அதிகம் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவருக்கே உரித்தான குறைவான சொற்களில் நிறைவாகப் பேசியமர்ந்தார்.

உண்மையில் அவர் தெளிவத்தையின் கதைகளை கேட்டுப்பெற்று வாசித்திருந்தார். தான் மேடைப்பேச்சாளனோ அல்லது இலக்கியப் பேச்சாளனோ இல்லையென்பதால் அதிகம் பேசவில்லை. நேர்பேச்செனில் இன்னமும் விரிவாக உங்களிடம் என் அபிப்ராயங்களைச் சொல்லியிருப்பேன் என தெளிவத்தையிடம் சொன்னார். பாலாவுடன் ஒளிப்பதிவாளரும் கவிஞருமான செழியனும் விழாவிற்கு வந்திருந்தார்.

***

இந்திரா பார்த்தசாரதியின் தலைமையுரையும், வி.சுரேஷின் வாசகானுபவமும்,  ஜெயமோகனின் வாழ்த்துரையும், ஆகியன விழாவின் ஹைலைட். ரவி சுப்ரமண்யம் சுள்ளிக்காடின் கவிதைகளுக்கு (மொழிபெயர்ப்பு: ஜெயமோகன்) தானே மெட்டமைத்துப் பாடினார். சுரேஷ்குமார இந்திரஜித் ஜோசப்பின் நான்கு கதைகளைக் குறித்த தன் திறனாய்வைப் பேசினார். தெளிவத்தையின் நெடிய ஏற்புரை ஈழ இலக்கிய சூழலைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்கியது.

***

ஒவ்வொரு  முறை விழா முடிந்ததும் கவனிப்பேன் அரங்கசாமிக்குப் புதிதாக ஒரு ஐம்பது நண்பர்கள் உருவாகியிருப்பார்கள். இது என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இணைய தளங்களில்  ஜெயமோகனை யாராவது வசைபாடுகிறார்களென்றால் அங்கே களமாடப் போவது நானும் அரங்கனும்தான். ஜெயனை ஓர் இழிசொல் சொன்னார்களெனில் நான் அவர்களுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டவர் மானசீகமான என் எதிரியாக மனதிற்குள் உருவெடுத்து விடுவார். என்னைக் காட்டிலும் அதிகம் முட்டி மோதுகிற அரங்கனுக்கு அவர்கள் பிற்பாடு நெருங்கிய நண்பர்களாகி விடுவதைக் கண்டிருக்கிறேன். எவரோடும் நல்லுறவை உருவாக்கிக்கொள்ளக்கூடிய கலை அறிந்தவர் அவர்.

விழா முடிந்ததும் ஓர் இலங்கை எழுத்தாளர் அரங்கனின் கையைப் பிடித்து  ‘எங்கட நாட்டிலருந்து ஆரேனும் இந்தியாவிற்கு வந்தா அரங்கசாமின்னு நம்மட ஆளு ஒருத்தர் உண்டுன்னு சொல்லியனுப்புவோமென’ கண்ணீர் மல்கிக் கொண்டிருந்தார்.

***

நான்தான் விழாத்தொகுப்பாளன் என்பதில் இளவெயினிக்கு உடன்பாடில்லை. நண்பர்களே என முதல் வார்த்தையை துவங்கியதும் அழுது கூப்பாடு போட்டு அரங்கத்தை விட்டு அம்மாவுடன் வெளியேறினாள். அவளாவது பரவாயில்லை. கும்பகோணக் கவிராயன் சென்ஷியின் மகன் விழாவிற்கு வந்த குழந்தைகள் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவில்லையென தன் அதிருப்தியை விழா முழுக்க வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தான்.

***

விழாவிற்கான அனுமதிகளைப் பெற காவல்துறையை அணுகிய போதும், ஊடகங்களைச் சந்தித்த போதும், விழாவிற்கு அழைக்க கல்லூரிகளுக்கு, உள்ளூர் அமைப்புகளுக்குச் சென்ற போதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கென்று தனியான அறிமுகம் ஒன்று தேவையில்லாத நிலை உருவாகியிருப்பதை உணர்ந்தோம். உண்மையான அக்கறையுடனும், சரியான திட்டமிடலுடனும், மனம் ஒப்பி செய்கிறப் பணிகளுக்கு சமூகத்தில் உருவாகிற அங்கீகாரமும் மரியாதையும் அது.

சகல விதங்களிலும் விழா சிறப்புற நிகழ்ந்தேற உழைத்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் மானசீகமான நன்றியைச் சொல்லி நிறைந்த மனத்துடன் உறங்கச் செல்கிறேன்.

***

Thursday, December 12, 2013

யேசு கதைகள்

பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது.
யேசுவை ஒரு கடவுளாக அன்றி தத்துவஞானியாகப் புரிந்துகொள்ள இளமையில் வாசிக்கக் கிடைத்த ஓஷோவின் நூல்கள் உதவின. அவை ஒரு புதிய புரிதலை உருவாக்கின. ஸக்காரியாவின் யேசு திருச்சபைகளின் வேதப்புத்தகங்களின் வழியாக உருவாகி வந்த யேசு அல்ல. முற்றிலும் மதத்திற்கு அப்பாற்பட்ட, பரிதாபத்திற்குரிய, மீட்கப்பட வேண்டிய, அன்பும் கருணையும் காட்டப்பட வேண்டிய ஒரு சக நண்பனான யேசு.

'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியுனூடேதான் ஒரு ரட்சகன் வருகிறானா?!' என்ற படைவீரனின் கேள்வியில் உச்சம் பெறுகிறது 'யாருக்குத் தெரியும்?' எனும் முதல் கதை (இக்கதையினை ஏற்கெனவே எம்.எஸ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்)

அன்னம்மா டீச்சரின் நினைவுக்குறிப்புகள் கதையில் யேசு மீது தீவிர பிடிப்பு கொண்ட முதிர்கன்னி அன்னம்மா டீச்சர் தன் முப்பத்து மூன்றாம் பிறந்த நாளுக்குப் பிறகு 'இன்று முதல் நீ எனக்கு தம்பிதான்; என் வயதில் நீ இறந்து விட்டாய். இனி எனக்குத்தான் வயது கூடும். இனி நான் உன் அக்கா' என்கிறாள்.
கண்ணாடி பார்க்கும் வரை கதையில் தினமும் குளிக்க வாய்ப்பற்ற பாலஸ்தீன வாழ்வில் வேர்வையினாலும், தூசியினாலும் யேசுவின் தாடியில் பேன் பற்றிக்கொள்கிறது. கசகசப்பும் அரிப்பும் தாளவில்லை. முகச்சவரம் செய்து கொள்ள நினைக்கிறார். சல்லிக்காசு இல்லை. கூடவே, நீண்ட நாட்களாக ஒரு அடையாளமாக நிலைப்பெற்று விட்ட தாடியும், மீசையும் எடுத்து விட்டால் தான் எப்படி தோற்றமளிப்பேன் என்கிற மனக்கிலேசமும். ஒருவழியாக நாவிதரின் கடைக்குச் சென்ற யேசு முதன்முதலாகக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து பதட்டமடைந்து கடையை விட்டு குழப்பத்துடன் வெளியேறி மரியத்தின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அந்தோணியஸூக்கு போந்தியஸ் பிலாத்து கடிதம் எழுதுவதாக வரும் கதையில் 'வரலாறு யாரிடமும் கருணை காட்டுவதில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களையும் நம்ப வேண்டாம். ஏனெனில், அவர்களும் சரித்திரத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்டவர்கள்தாம்' என ஆரம்பித்து 'தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாதவர் ஒரு மீட்பரா?! ஒரு கணம் மீட்பவராகவும், மறுகணம் மீட்கப்பட வேண்டியவனாகவும் ஒருவனே எப்படி இருக்க முடியும்?!' என கேள்வி எழுப்புகிறார்.
செயலாளர் நினைவிழக்கிறார் கதையில் உயிர்த்தெழுந்து வரும் யேசுவை வழியில் சந்திக்கும் மரியம் 'உங்களுடைய தந்தையின் வீட்டில் உங்கள் ஆடைகளைத் துவைத்துத் தர ஒருவரும் இல்லையா?' என பரிதாபத்தோடு கேட்கிறாள்.

மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்கச் செய்கிறது இச்சிறிய நூல். ஸக்காரியாவின் பாய்ச்சல் மொழியும், இயல்பான சித்தரிப்புகளும், கூரிய அங்கதமும் நல்ல வாசிப்பனுபவத்தை தருகின்றன. 'குருத்தோலை நுனிகள் நிறைந்த தேவாலயத்தின் உட்புறம் கதிர் முற்றிய வயல்வெளி போலிருந்தது' போன்ற கொட்டிக்கிடக்கிற உவமைகளுக்காகவும், 'அவருடைய மூக்கின் நுனியிலிருந்து அவர் எதைப் பார்க்கிறாரோ அதுதான் அவருக்கு வாழ்க்கை' போன்ற சிரிப்பை வரவழைக்கும் வரிகளுக்காகவும் பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.
மூலமொழியில் வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது கே.வி. ஜெயஸ்ரீ-ன் மொழிபெயர்ப்பு. ஸக்காரியாவுக்கு இணையாக தமிழில் அதிகமும் யேசு பற்றிய கதையாடல்களை உருவாக்குகிற இன்னொருவர் ஜெயமோகன். அவரது யேசு கதைகளும் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே.

நூல்: யேசு கதைகள்
மலையாள மூலம்: பால் ஸக்காரியா
தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ
விலை: ரூ.150/-
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை

Monday, December 9, 2013

எண்ணிச் சுட்ட பணியாரங்கள்

இன்றோடு கோவை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்தது. முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகையில் படுதோல்வி என்றே சொல்லலாம். கடை விரித்தேன் கொள்வாரில்லை எனக் கதறாத கடைக்காரர்கள் இல்லை. சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குரியாகி வருகின்றன. மதுரை விதிவிலக்கு என்கிறார்கள். அங்கே உள்ளூர் ஊடகங்களின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதால், கூட்டம் அலைமோதுகிறது என்கிறார்கள். கூடுமானவரை ஸ்பான்சர்களைப் பிடிப்பது, நல்ல முறையில் விளம்பரப்படுத்துவது, உள்ளூர் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகளை வரவைப்பது, குழந்தைகள் மற்றும் பெண்களைக் கவரும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், கல்லூரிகளில் சலுகைக் கூப்பன்கள் விநியோகிப்பது என இன்னும் கொஞ்சம் இறங்கி வேலை செய்தாக வேண்டுமென்பது என் அபிப்ராயம்.

ஏழு நாட்கள் எங்களது அலுவலக ஸ்டாலில் இருந்தேன். எதிரிலேயே தமிழினி அண்ணாச்சி கடை. மாலை வேளைகளில் நாஞ்சில் நாடன், சு. வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், கால சுப்ரமணியம், க. ரத்தினம், பாதசாரி, புலம் லோகு, திரைவிமர்சகர் ஆனந்த் என கச்சேரி களை கட்டும். மிக மகிழ்ச்சியான நாட்கள். குறிப்பாக சு.வேணுகோபாலுடன் அவரது முனைவர் பட்ட ஆய்வு குறித்த உரையாடலும்; கால.சுப்ரமணியனுடன் பிரமிள் குறித்த உரையாடலும் ஓர் இளம் வாசகனுக்குப் புதிய வெளிச்சத்தை தரக்கூடியதாக இருந்தன.

புத்தகங்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. பேப்பர் விலை, மின் பற்றாக்குறை, போக்குவரத்து என பதிப்புத் தொழிலின் முட்டுவழிச் செனவினங்கள் ஏறிப்போய் கிடக்கின்றன. விலையேற்றம் நியாயம்தான். வாசகனின் ஏழ்வை என ஒன்றிருக்கிறது. எண்ணிச்சுட்ட பணியார வாழ்வில் வாங்க நினைத்ததையெல்லாம் வாங்க வாழ்க்கை இடம் கொடுப்பதில்லை. கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் ஏதாவது லாட்டரி விழுந்தால், இயக்குனர்கள் அட்வான்ஸ் கொடுத்தால், அரங்கசாமியின் பினாமியாகும் அதிர்ஷ்டம் அடித்தால், முடியலத்துவம் மூவாயிரம் பிரதிகள் விற்றால் இன்னும் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கலாம்.

பட்டியல்:

1) விஷக்கன்னி - எஸ். கே. பொற்றேக்காட் - நேஷனல் புக் டிரஸ்ட்
2) இனி நான் உறங்கட்டும் - பி.கே. பாலகிருஷ்ணன் - சாகித்திய அகாதெமி
3) வனவாசி - விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய - விடியல் பதிப்பகம்
4) பறவை உலகம் - ஸலீம் அலி & லயீக் ஃபதேஹ் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்
5) பறவைகள் - ப.ஜெகநாதன் & ஆசை - க்ரியா
6) ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சலீம் அலி - நேஷனல் புக் டிரஸ்ட்
7) சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - சாகித்திய அகாதெமி
8) க. நா. சுப்பிரமண்யனின் தேர்ந்தெடுத்த கதைகள் - சாகித்திய அகாதெமி
9) மெளனியின் கதைகள் - சாகித்திய அகாதெமி
10) கு. அழகிரிசாமி கதைகள் - சாகித்திய அகாதெமி
11) பிரமிள் கவிதைகள் - லயம் வெளியீடு
12) லயம் இதழ்கள் - முழுத்தொகுப்பு - லயம் வெளியீடு
13) கால்புழுதி - கனக தூரிகா - சந்தியா பதிப்பகம்
14) கடல்புரத்தில் - வண்ணநிலவன் - பரிசல் பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)
15) வெண்ணிற இரவுகள் - தஸ்தவஸ்கி - புலம் வெளியீடு (கைப்பிரதி காணமற் போனதால்)
16) தர்பாரி ராகம் - ஸ்ரீ லால் சுக்ல - நேஷனல் புக் டிரஸ்ட்
17) திணையியல் கோட்பாடுகள் - பாமயன் - தடாகம் பதிப்பகம்
18) அக்னி நதி - குர் அதுல்ஐன் ஹைதர் - நேஷனல் புக் டிரஸ்ட்
19) பாட்டுத் திறம் - மகுடேஸ்வரன் - புலம் வெளியீடு
20) அங்கே இப்ப என்ன நேரம்? - அ. முத்துலிங்கம் - தமிழினி பதிப்பகம் (கைப்பிரதி காணாமற் போனதால்)
21) இராசேந்திர சோழன் குறுநாவல்கள் - தமிழினி பதிப்பகம்
22) அனுபவங்கள் அறிதல்கள் - நித்ய சைதன்ய யதி - யுனைடட் ரைட்டர்ஸ்
23) மீண்டெழுதலின் ரகசியம் - சுகந்தி சுப்ரமணியன் - யுனைடட் ரைட்டர்ஸ்
24) செந்நிற விடுதி - பால்ஸாக் - தமிழினி
25) நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் - மலையாளக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு (ஜெயமோகன்) - யுனைடட் ரைட்டர்ஸ்
26) வண்ணம் பூசிய பறவை - ஜெர்ஸி கோஸின்ஸ்கி - புலம் வெளியீடு
27) ஜஸ்டின் - மார்க்விஸ் தே சாட் - புலம் வெளியீடு
28) மகிழ்ச்சியான இளவரசன் - ஆஸ்கார் வைல்டு - புலம் வெளியீடு
29) இசைக் கருவிகள் - பி. சைதன்ய தேவ - நேஷனல் புக் டிரஸ்ட்
30) நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா - சிந்தன் புக்ஸ்
31) ஈஷா ருசி - சமையல் புத்தகம் - ஈஷா யோகா மைய வெளியீடு

Tuesday, November 26, 2013

நானும் புத்தகங்களும்

அப்பாவிற்கு வாசிக்கிற பழக்கம் இருந்தது. முழு விலை கொடுத்து புத்தகங்கள் வாங்கிப் படிக்க அவர் வளர்ந்த சூழலும், பொருளாதாரமும் இடமளிக்கவில்லை. புத்தகங்களை எடை போட்டு விற்கிற பழைய புத்தகக் கடைகளை ஒவ்வொரு ஊரிலும் கண்டுபிடித்து வைத்திருந்தார். குறிப்பாக பெங்களூர், மைசூரிலுள்ள பழம் புத்தகக்கடைகளில் தமிழ்ப் புத்தகங்களுக்குப் பெரிய மரியாதை இல்லையென்பதால் ரொம்பவும் சல்லிசான விலைக்கு அள்ளி வருவார். பலதரப்பட்ட புத்தகங்களும் அதில் இருக்கும். புனைவெழுத்தாளர்களில் அப்பாவிற்கு மு.வ பிடிக்கும். வேறு யாரையும் அவர் சிலாகித்து பார்த்ததில்லை.

இளைய அண்ணன் ராஜா பள்ளி நாட்களிலேயே புகழ்மிக்க பேச்சாளனாக இருந்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசைத் தவிர வேறு எதையும் அவர் வென்றதாக சரித்திரம் இருந்ததில்லை. அவர் பரிசுகளாக வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டை நிறைத்தன. அப்படித்தான் அண்ணாத்துரை, பாரதிதாசன், விவேகானந்தர், பரமஹம்சர் எல்லாம் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

பிற்பாடு நானும் நண்பன் விஸ்வராஜனும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து புத்தகங்களை வாங்கி வாசிப்பில் திளைத்த காலகட்டத்தில் கொஞ்சம் புத்தகங்கள் சேர்ந்தன. எனது தோழனும், ஆக்கிரமிப்பிற்கும் போருக்கும் எதிரான இளையோர் அமைப்பை கனடாவில் தோற்றுவித்தவனுமான ஆரோன் பரிசளித்த அரசியல் புத்தகங்களும், தோழி கிரா டேலி இந்தியாவை விட்டுக் கிளம்புகையில் அன்பளித்த ஏராளமான ஆங்கிலப்புத்தகங்களும் எங்கள் வீட்டு நூலகத்தைச் செறிவாக்கின. கிரா கொடுத்த புத்தகங்களில் முக்கியமானது கர்ட் வான்கர்ட்-ன் நூல்கள். சொல்லப்போனால் ஆங்கிலத்தில் நான் முற்று முழுசாக ஊன்றி வாசித்த ஒரே எழுத்தாளர் வான்கர்ட்தான். லோலிதாவை மட்டும் வேண்டி கேட்டுக்கொண்டாள் என்பதற்காக கனடாவிற்கே திருப்பி அனுப்பினேன். பிரான்ஸை சேர்ந்த தோழி வெரோனிக் மெனோ ஏராளமான லோன்லி பிளானட் புத்தகங்களைப் பரிசளித்து உலகின் சாளரங்களைத் திறந்து விட்டாள். பிற்பாடு அவளே லோன்லி பிளானட்டில் ஊழியராகி உலகம் சுற்றி வந்தாள்.

ஊரை விட்டு வெளியேறி கோவையில் திருவேங்கடம் மென்சனில் வாழ்ந்தது வாசிப்பின் பொற்காலம். ஹிண்டுவின் பிரிண்டிங் செக்‌ஷனில் (நான் அப்போது விகடன் ஊழியன்) பணியாற்றும் ஆரூயிர் நண்பர் கணபதியும், பழனிவாசனும் தீவிர புத்தக ஆர்வலர்கள். அறையை புத்தகங்களால் நிரப்பி வைத்திருப்பார்கள். வாரம் இருமுறை, மாதாமாதம் சம்பளம் வாங்கியதும் ஒருமுறை, எங்கே என்ன புத்தகக்கண்காட்சி நடந்தாலும் அங்கும் ஒருமுறை என புத்தகங்களை வாங்கி குவிப்பார்கள். அவர்களிடமிருந்தே நான் அதிக அளவில் புத்தகங்களை காசு கொடுத்து வாங்கவும், சினிமா பார்க்கவும், சிக்கன் சாப்பிடவும் கற்றுக்கொண்டேன்.

பதிவுலக தொடர்புக்குப் பின் அறிமுகமானவர்களில் முக்கியமானவர் வடகரை அண்ணாச்சி. வெர்ஸடைல் ரீடர். அவர் நிறைய்ய எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார். கொஞ்சம் பொருளாதார ஸ்திரத்தன்மை வந்த பின் நானே புத்தகங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தேன். வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை புத்தகங்களுக்காகச் செலவழிக்க ஆரம்பித்தேன். பிற்பாடு விஜயா வேலாயுதம் சாரும், அரங்கசாமியும் எப்போதும் புத்தகங்களால் என்னை ஆசீர்வதிப்பவர்கள் ஆனார்கள். கண்டதும் கழியதுமாக வாசித்துக்கொண்டிருந்த என்னை நெறிப்படுத்தியது வசந்தகுமார் அண்ணாச்சி. அவர் அள்ளி அள்ளி கொடுத்த புத்தகங்கள்தாம் இன்றென் நூலகத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன. அரிய சிற்றிதழ் சேமிப்புகளை அள்ளி அள்ளி கொடுத்த ஜல்லிப்பட்டி பழனிச்சாமியும் நன்றிக்குரியவர். என்னிடம் இருக்கும் பாஸ்கர்சக்தி எழுதிய நூல்கள் அனைத்தும் அவர் அன்பளித்தவை.

ஒரு கட்டத்தில் இரண்டாயிரம் புத்தகங்களுக்கு மேல் சேர்ந்து விட்டன. பரண், பீரோ, கட்டிலுக்குக் கீழே, கட்டிலுக்கு மேலே என மேன்சன் அறை முழுக்க புத்தகங்கள். ஓர் ஆள் விரைத்தபடி படுத்திருக்க (புரண்டு படுக்க முடியாது) மட்டுமே இடம். மழை வந்தால் ரூமுக்குள் தண்ணீர் வந்து விடும். புத்தகங்களை நனையாமல் பாதுகாப்பது மரண அவஸ்தையாகி விடும். அவ்வப்போது அறைக்கு வடகரை வேலன் அண்ணாச்சி முதலில் இந்த கோழிக்கூண்டிலிருந்து வெளியே வா என இழுத்துப் போய் அவரது அச்சகம் அருகே ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தினார். புத்தகங்களை அடுக்கி வைக்க ஹாலில் மிகப்பெரிய ஷெல்ஃப் இருந்த வீடு. தனி மனிதனாக அந்த 1500 சதுர அடி வீட்டில் புத்தகங்களோடும், டிவிடிக்களோடும் மூன்று வருடங்கள் அங்கு வாழ்ந்தேன். வீடு மாறுவதாக இருந்தால் பெரிய ஷெஃல்புகளும், வாசிக்கத் தனியறையும் உள்ள வீட்டிற்கே மாற முடியும் என்கிற அளவிற்கு நிலைமை உண்டானது. பாப்பா பிறந்த பிறகு ரேவதி நகரில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டிற்கு மாறி ஒரு படுக்கையறையை நூலகமாக மாற்றினோம்.

நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், ராஜன் ராமசாமி, கபிலமாறன் மற்றும் ராம் சிவபிரகாஷ் ஆகியோரது பேருதவியால் மதுக்கரை மலையடிவாரத்தில் அடுக்ககம் வாங்கி குடியேறிய போது இந்தப் புத்தகங்களை என்ன செய்வது என மலைப்பாக இருந்தது. புத்தகங்களின் எண்ணிக்கையை பாதியாக்குவதென்றும் இரண்டு படுக்கையறைகளுள் ஒன்றை நூலகமாக்கி விடுவது என்றும்  முடிவெடுத்தோம். பாக்கித் தொகை கொடுத்து வீட்டை கையகப்படுத்த முடியாத நிலையிலும், பெருந்தொகையினை வட்டிக்கு வாங்கி அலமாரிகள் அமைத்தோம். நண்பர் செந்தில் கலையுணர்வோடு அவற்றை செய்து கொடுத்தார்.

புத்தகங்களின் எண்ணிக்கையை குறைப்பது உடலின் ஒரு பாகத்தை வெட்டிக் கொடுப்பதைப் போன்ற அனுபவமாக இருந்தது. கூடவே அருமை தெரியாதவர்களிடம் நம் சேமிப்பு போய்ச் சேர்ந்து விடக்கூடாதே என்கிற கவலையுடன் தக்காரைத் தேடி அலைந்தோம். சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் எழுதிய விகடன் தொடர்களின் பைண்ட் வால்யூம் நிறைய்ய இருந்தன. வடவள்ளியில் ஒரு சாண்டில்யன் பக்தையைக் கண்டுபிடித்து திருப்பித் தரக்கூடாதென்கிற கண்டிஷனோடு அளித்தோம். அச்சுப்பிச்சு கவிதைத்தொகுப்புகளை சமகால அச்சுப்பிச்சுக் கவிதைகளை இணையத்தில் எழுதி வந்த எங்களூர் தோழி ஒருத்திக்கும் பெங்களூர் தோழி ஒருத்திக்கும் ‘நோ ரிட்டர்ன்’ பேஸிலில் ஒப்படைத்தோம். சிற்றிதழ்களை புத்தகங்களின் மீது பெருமதிப்பு கொண்ட கவிஞர் சக்தி செல்வியிடம் ஒப்படைத்தோம் (அதற்குப் பின் சேர்ந்த இரண்டு கட்டு இதழ்கள் அவருக்காக காத்திருக்கின்றன). பயன்மதிப்பென்று ஒன்று இல்லாத வணிக எழுத்தாளர்களின் படைப்புகள், சுயமுன்னேற்ற நூல்கள், கார்ப்பரேட் சாமியார்களின் நூல்களையெல்லாம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் தலையில் கட்டினோம். கல்யாணம், கிரகப்பிரவேசங்களுக்கு அதைச் செய்வது எப்படி? இதைச் செய்வது எப்படி வகையரா லைஃப் ஸ்கில் புத்தகங்களை கலர் தாளில் பொதிந்து எடுத்துச் சென்று போட்டோவிற்குச் சிரித்தபடியே மணமக்களை ஆசீர்வதித்தோம். சில ஆங்கிலப் புத்தகங்களை என் தங்கை ஜீவிகாவிற்கு அனுப்பினேன்.

மிச்ச புத்தகங்களை அட்டைப்பெட்டிகள் வாங்கி அடுக்கி கட்டி தனி ஆட்டோவில் புது வீட்டிற்கு எடுத்து வந்தோம். பால் காய்ச்சிய சமயத்தில்  நிறைய்ய வேலைகள் இருந்ததால், புத்தகங்களை அலமாரியில் வகை பிரிக்காமல் அப்படியே அடுக்கிவைத்து விட்டேன். மிஷ்கின் புத்தகங்களுடன் இருக்கும் படம் வெளியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். புத்தகங்கள் மீது பெருமதிப்பும் விருப்பும் கொண்ட (இவரது புத்தக ஆர்வம் என் காதலில் விளையாடி இருக்கிறது; அதைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்) இவர் ஏன் புத்தகங்களை இப்படி அலட்சியமாக குவித்து வைத்திருக்கிறார் என ட்வீட்டினேன். ஜ்யோவ்ராம் வீட்டில் இடம் இல்லாத தன் பிரச்சனையை சொன்னார். புத்தகங்களை இன்னும் வகைப் பிரித்து அடுக்காமல் இருக்கிறோமே என புத்திக்கு உறைத்தது. இந்த ஞாயிறை அதற்காக ஒதுக்கினேன்.

அனைத்து புத்தகங்களையும் ஹாலுக்கு கொண்டு வந்து எளிதாக தேடி எடுக்கும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் பிரித்தேன்.

* அடிக்கடி ரெஃபரென்ஸ் (திருக்குறள், பைபிள், சங்க இலக்கியங்கள், பாரதியார், பட்டினத்தார் வகையரா)

* மொழிபெயர்ப்புகள் (ரஷ்ய இலக்கியம், பிற இந்திய மொழி படைப்புகளின் தமிழாக்கம் வகையரா)

* தமிழ் கிளாசிக் (என்னுடைய அபிப்ராயத்தில் க்ளாசிக் என கருதும் தமிழ் நாவல்கள் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால், புளியமரத்தின் கதை, மணல்கடிகை, ஆழிசூழ் உலகு, கன்னி, ரத்த உறவுகள் வகையரா)

* ஜெயமோகன் (ஜெயன் எழுதிய அனைத்து நூல்களும்)

* நவீன தமிழிலக்கியம் (பிற நவீனத்துவர்களின் எல்லா படைப்புகளும்)

* தத்துவம் மற்றும் ஆன்மிகம் (ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர் வகையரா)

* கவிதைகள் 

* வணிக எழுத்தாளர்கள் (சுஜாதா, பாலகுமாரன், தேவன், சாவி இன்னபிற)

* முக்கியமில்லாதது ஆனால் நினைவுகளைச் சுமந்திருப்பது (வாழ்க்கையில் முக்கியமானவர்களால் பரிசளிக்கப்பட்டவை. உ.ம்: மாமன் மகள் பரிசளித்த தண்ணீர் தேசம் வகையரா)

* முக்கியமில்லாதது ஆனால் நண்பர்களால் எழுதப்பட்டது

* ஆங்கில நூல்கள்

* பொது (வரலாறு, சூழலியல், மருத்துவம், காந்தி, நகைச்சுவை வகையரா)

ஏன் இந்த வேலையைத் துவக்கினேன் என எண்ணும்படி ஆகிவிட்டது. பெரும்பாலான புத்தகங்களைக் காணவில்லை என்பது இனம் வாரியாக பிரித்ததும் புத்திக்கு உரைத்தது. சுமார் 200 புத்தகங்கள் வரை இருக்கலாம். எல்லாமே வாசித்து விட்டுத் தந்து விடுகிறேனென இரவல் போனவை. சில புத்தகங்கள் மிக முக்கியமானவை. அவற்றை வாங்கியதும், வாசித்ததும் நினைவை விட்டு அகலாமல் இருந்ததாலேயே இந்த இழப்பை சட்டென்று உணர முடிந்தது.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு நூல் கூட இல்லை. ஜேஜே சில குறிப்புகள், கொங்குதேர் வாழ்க்கை முதல் பாகம், சங்க சித்திரங்கள், ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் முதல் பாகம், சேகுவேரா புத்தகங்கள், லா.ச.ராவின் நூல்கள், நாஞ்சில் நாடனுடைய முதல் மூன்று நாவல்கள், தியோடர் பாஸ்கரனின் மூன்று நூல்கள், சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை மற்றும் ஏன் எதற்கு எப்படி, மதனின் மனிதனுக்குள் ஒரு மிருகம், பாலாவின் தன் வரலாற்று நூல், ராகுல் சாங்கிருத்யாயனின் பயண நூல், ஓஷோவின் புதியகுழந்தை மற்றும் நான் உனக்குச் சொல்கிறேன், ஜீவாவின் திரைச்சீலை, க.சீ.சிவக்குமாரின் புத்தகங்கள், ராஜூவ்காந்தி கொலைவழக்கு - ஏதோ ஒரு வகையில் புகழ் பெற்ற நூல்கள். வாசித்து விட்டு தருகிறேனென வாங்கிச் சென்றவர்களில் யாரிடம் எதைக் கொடுத்தேன் என்று கூட ஞாபகம் இல்லை. ஒரு சில ஞாபகம் இருந்தாலும் கேட்டுப் பெற கூச்சமும் தயக்கமும் உண்டு.

இப்படி இரவல் வாங்கிச் சென்றவர்களில் பல நண்பர்கள் முகநூலிலேயே இருக்கிறார்கள். நான் அவர்கள் மனம் புண்படுவதற்காக எழுதுகிறேனென தயவு செய்து நினைத்து விட வேண்டாம். உங்கள் எவரிடமும் எனக்கெந்த வருத்தமும் இல்லை. என்னுடைய பிரச்சனையெல்லாம் எதையாவது ரெஃபர் செய்ய அலமாரிகளைக் குடையும்போது குறிப்பிட்ட புத்தகம் கிடைக்காமல் போய் விடுவது என்னை அயற்சியடைய வைக்கிறது. ஏற்கனவே காசு கொடுத்து வாங்கி வாசித்த புத்தகத்தை திரும்பவும் காசு கொடுத்து வாங்க என் பொருளாதாரமும் இடம் கொடுப்பதில்லை.

ஒரு முறை புகழ் மிக்க இயக்குனர் நண்பர் கேட்டுக்கொண்டாரென நாஞ்சில் நாடனின் மொத்தப் புத்தகங்களையும் வாசிக்க கொடுத்தேன்.  அவர் அவற்றைப் படித்த கூறு ஒன்றும் அவரது படைப்புகளில் தட்டுப்படவில்லை. திருப்பியும் தரவில்லை. ஒரு பதிப்பாள நண்பரிடம் இதைச் சொன்னபோது கோபித்துக்கொண்டார். ஒரு படத்திற்குப் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறவருக்கு புத்தகங்கள் வாங்க முடியாதா என்றார். அத்தோடு, பிரபலங்களிடமிருந்து புத்தகங்களைக் கேட்டு வரும் அழைப்புகளுக்கு செவி சாய்ப்பதே இல்லை.

இது ஒரு வகை என்றால் புத்தகங்களை வாங்கி சீரழித்து தருவது இன்னொரு வகை. கன்னியும் புத்தகமும் கடனாய்ப் போனால் கசங்காமல் வீடு திரும்பாது என்பார் சுரதா. சாத்தான்குளத்தில் இருந்தபோது ஹிம்சாகர் எழுதிய கோட்ஸே எனும் நூலை வைத்திருந்தேன். ஒரு பழைய புத்தகக்கடையில் கிடைத்த அருமையான நூல் அது. ஊரில் பலரும் இரவல் வாங்கிப் படித்தார்கள். ஒரு இந்துத்துவர் ஆர்.எஸ்.எஸ் எதிரான கருத்துக்கள் இருக்கிறது என பல பக்கங்களைக் கத்தரித்து விட்டு திரும்ப கொடுத்தார். 1965ல் வாசகர் வட்டம் பதிப்பித்த ’இன்றைய தமிழ் இலக்கியம்’ இரவல் வாங்கிய சூழலியல் ஆர்வலர் ஒருவர் மா.கிருஷ்ணன் எடுத்திருந்த யானை படங்களை நைசாக கத்தரித்து எடுத்திருப்பதை வெகு நாட்கள் கழித்துதான் கண்டுபிடித்தேன். ஊரில் இரவல் வாங்கிய புத்தகத்திற்கு நேர்ந்த அனுபவத்தை முப்பெருந்தேவியர் என குறுங்கதையாக்கி இருக்கிறேன்.

இரவல் விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் ஓரளவுக்கு நாணயமானவர்கள் என்பதென் சுயகண்டுபிடிப்பு. இன்னும் டிவிடி வட்டுக்களை இனம் பிரிக்கவில்லை. அதைச் செய்தால் மாரடைப்பே வந்து விடுமோ என்னவோ?!

- செல்வேந்திரன்

பின்குறிப்பு: கட்டுரையாளர் கவிஞர் சக்திசெல்வியிடமிருந்து அபகரித்த காவல் கோட்டத்தையும், உள்ளூர் நூலகத்தில் எடுத்த முத்துலிங்கத்தின் இரு புத்தகங்களையும், கவிஞர் உமாசக்தியிடமிருந்து வாங்கிய சுமார் 30 உலகசினிமா டிவிடிக்களையும் இரண்டு வருடங்களாகத் திருப்பித் தரவில்லை என்பதை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்கிறார்.


Tuesday, November 5, 2013

தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது

2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப்புக்குவழங்கப்படுகிறது. இலங்கை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்.
விஷ்ணுபுரம் விருது தகுதியான கவனம்பெறாத மூத்த தமிழ்படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்காக அடுத்த தலைமுறை வாசகர்களின் கூட்டமைப்பால் வழங்கப்படுவதாகும்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை அளிக்கிறது.
இதுவரை ஆ.மாதவன் [2010] பூமணி [2011] தேவதேவன் [2012] ஆகியோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது
தெளிவத்தை ஜோசப்பின் இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். பெப்ரவரி 16, 1934 இலங்கை தோட்டம் ஒன்றில் பிறந்தவர்.கொழும்பு நகரில் ஒரு சாக்லேட் நிறுவன ஊழியராக இருந்து ஓய்வுபெற்றார்.இப்போது கொழும்பு நகரில் வசிக்கிறார்.
தெளிவத்தை ஜோசப்பை கவனத்துக்குக் கொண்டுவந்த முதல் நாவல் 1974ல் வெளிவந்த காலங்கள் சாவதில்லை. வீரகேசரி வெளியீடாக இந்நாவல் வெளிவந்தது. 1979ல் வெளிவந்த நாமிருக்கும் நாடேசிறுகதைத் தொகுதிக்காக இலங்கையின் சாகித்திய விருது பெற்றார்
இலங்கையின் மலையக இலக்கியம் என்ற இலக்கிய வகைமையை நிலைநாட்டிய முன்னோடி என தெளிவத்தை ஜோசப்பைச் சொல்லலாம். ‘மலையகச் சிறுகதைகள்’ உழைக்கப் பிறந் தவர்கள்’ என்ற இரு தொகைநூல்கள் வழியாக மலையக இலக்கியத்தை கவனப்படுத்தியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ அவ்வகையில் முக்கியமான கொடை.
தெளிவந்தை ஜோசப்பின் குடை நிழல் என்ற நாவல் 2010 ல் வெளிவந்தது. இந்நாவல் கோமல்சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா மாத இதழும் தேசிய கலையிலக்கியப்பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப்போட்டியில் பரிசுபெற்ற படைப்பு .இப்போது எழுத்து பிரசுரம் அதை தமிழகப்பதிப்பாக வெளியிடவிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகள்
1 காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2 நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3 பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4 மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
5 இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (மூன்றாவது மனிதன் வெளியீடு)
6 குடை நிழல் (நாவல், 2010)
*
பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெறும்.
இம்முறை விருதுத்தொகை இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது. ரூ ஒருலட்சமும் நினைவுச்சிற்பமும் வழங்கப்படும்.
இந்திரா பார்த்தசாரதி விருதை வழங்கி கௌரவிப்பார்.
மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார்.
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ,
இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் பேசுவார்கள்
வழக்கம்போல இது ஒரு இரண்டுநாள் இலக்கியக் கொண்டாட்டம். சனியன்றே நண்பர்கள் கூடுவார்கள்.நாஞ்சில்நாடன், தேவதேவன், யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களுடன் இளம் படைப்பாளிகளும் இருப்பார்கள். அவர்களுடனான சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து இரவெல்லாம் நடக்கும்.
அனைவரையும் வரவேற்கிறோம்
தொடபுக்கு vijayaragavan.victory@gmail.

Sunday, October 27, 2013

சதுப்பு நில குறிப்புகள்

மஞ்சள் மூக்கு ஆள்காட்டியையும், உள்ளானையும் ரொம்ப நாட்களுக்குப் பிறகு திருவண்ணாமலை வயல்வெளிகளில்தான் கண்டேன். அத்தோடு தையல் சிட்டு, ஊதாத் தேன் சிட்டு, உண்ணிக் கொக்கு, அரிவாள் மூக்கன், குக்குறுவான், கொண்டு கரிச்சான்களையும் கூட. இவையெல்லாம் எப்போதாவது தட்டுப்படக் கூடியவைதான். நான் பார்த்துப் பார்த்து வியந்த சில அபூர்வ பறவைகள் திருவண்ணாமலையில் உள்ளன. பெயர்கள் முறையே பவா, ஷைலஜா, உருத்திரகுமார், ஜெயஸ்ரீ, சுகானா, மானஸி மற்றும் வம்சி. வானத்துப் பறவைகளின் குணாம்சங்களை முற்று முழுசாக உள்வாங்கிய மனிதர்கள். இவர்களது விருந்தோம்பல்களைப் பற்றி தமிழில் பல நூறு வரிகள் எழுதப்பட்டு விட்டன. ஒரு கச்சிதமான வரி ‘பவாவுக்கு எந்த மனிதர்களும் அற்பமானவர்கள் அல்ல’ எனும் டாக்டர் ஜெயகரனின் வரிகள்.

வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சதா பெய்து கொண்டிருந்த மழை அன்பெனும் சதுப்பு நிலத்தில் புரண்டெழுந்த உணர்வைத் தந்து கொண்டிருந்தது. மொத்தக் கூட்டத்தில் தன்னை மட்டும் தனிப்பட்டு உபசரிக்கிறார்களோ எனும் சம்சயத்தை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்தி விடுவது பவா குடும்பத்தாரின் இயல்பு.

திருவண்ணாமலை என்றாலே வறண்ட மலையும் வெப்பமும் புழுக்கமும் என்பதே மனப்பதிவாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல்வெளிகள், சமைந்த குமரிகளைப் போல தளும்பிச் சிரிக்கும் நீர் நிறைந்த கிணறுகள், சதா மீட்டிக்கொண்டே இருக்கும் மழைத்தூறல் என திருவண்ணாமலையின் இன்னொரு முகம் ரசிக்க வாய்த்தது. இந்த இரு நாட்களில் மிக நீண்ட தூரம் நடந்தேன். மொட்டைக் கிணறுகளில் குளித்தேன் (நீச்சல் தெரியாது; குரு கிணற்றுக்குள் இருக்கும்போது உயிரைப் பற்றி என்ன கவலை) வயிறு புடைக்க உண்டேன். நிறைய்ய சிரித்தேன். சமீபத்தில் என் நாட்கள் இவ்வளவு மகிழ்ச்சிகரமாக கழிந்ததே இல்லை.

நாய்கள், பசு மாடுகள், கோழிகள், வான்கோழிகள், கினி பறவைகள், வாத்துகள் முயல்கள் இவற்றோடு ஒரு குதிரையும் பவா வீட்டில் வளர்ந்து வருகிறது. வயல் நடுவே வீடு, வீட்டைச் சுற்றி தோட்டமும், கிணறுகளும், தங்கும் குடில்களும். பருவம் பார்ப்பவர்களும் அங்கேயே உண்டு உறங்கும் ஒரு நவீன கூட்டுப்பண்ணை விவசாயம். விளைபொருட்களை விற்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. வீட்டிற்குப் போக மீதமுள்ளதெல்லாம் பாடு பார்த்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் போய்ச் சேரும். உரையாடலில் கினி கோழி முன்னூறு முட்டையிடும் என்றார் ஒரு நண்பர். 300 முட்டையை வைத்துக்கொண்டு பவா என்ன செய்வார் என்றேன் நான். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவருக்கு உள்ளூரிலே 3000 நண்பர்கள் இருப்பார்கள் என்றார் மற்றொருவர். வேட்டி நுனி காற்றில் பறக்க வரப்பில் பவா பைக் ஓட்டி வரும் காட்சி காலையிலும், மாலையிலும் பார்க்கக் கிடைக்கும். அசல் சம்சாரி மாதில்லாவே இருக்காரு என்றேன் அரங்கனிடம். இல்லை “நாட்டாமை” என்றார் அரங்கன். இன்னொருவர் ‘அவர் ஒரு கம்யூனிஸ்டு பண்ணையார்’ எனக் கேலி செய்தார்.

ஜெயஸ்ரீயின் லாரிபேக்கர் பாணி கல்வீட்டைப் பற்றி ஜெ விரிவாக எழுதியிருக்கிறார். இல்லங்களை அந்நியமாக உணரச் செய்யும் சோபாக்கள், உணவு மேஜைகள், டீப்பாய்கள் அந்த வீட்டில் கிடையாது. மூங்கிலால் செய்த கட்டில்கள், நாற்காலிகள், வரவேற்பறையில் விரிக்கப்பட்டிருக்கும் கோரம்பாய்கள், வராண்டாவில் தொங்கும் பெரிய ஊஞ்சல் மனதுக்கு நெருக்கமளிக்கின்றன.

ஊட்டி கவியரங்கங்களில் கவனித்திருக்கிறேன். நிர்மால்யா எப்போதும் பதற்றமாகவே இருப்பார். வந்திருக்கும் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்களா, டீ கிடைத்ததா, எல்லோருக்கும் படுக்கை விரிப்புகள் ஏற்பாடு செய்வது என கடும் கைங்கர்யத்தில்  தீவிரமாக பரபரப்பாக ஓடிக்கொண்டே இருப்பார். பலருக்கும் அவர் எழுத்தாளரென்பதோ,  மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவரென்பதோ தெரியாது. அதே மாதிரி நிர்மால்யாக்கள் பவாவின் நண்பர்களாக இருக்கிறார்கள். மிஷ்கினின் உதவியாளர், பரிதி, ஃபீனிக்ஸ், ஜெய் போன்ற நிர்மால்யாக்கள்.

ஊர் திரும்பிய பின் தினமும் இவர்களைப் பற்றியே திருவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அதன் காரணிகளை இப்போது ஆராய்கையில் அந்த வீடு என் அப்பாவின் குணங்களைக் கொண்டிருக்கிறது. தூவெள்ளை அன்பு, எளிமை, நேர்மை, தயாளம், இயற்கை விருப்பு, விருந்தோம்பல், அறிவுத் தேடல் என. அந்தக் கூரையின் கீழ் இருப்பது அப்பாவின் மடியில் தூங்குவது போல. 

Friday, October 18, 2013

பொதுப்போக்குவரத்தெனும் மானக்கேடு!

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க அரசுக்கு உதவும் வகையில் குடிமக்கள் வாரத்திற்கு ஒருநாளேனும் சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்று கடந்த மாதத்தில் ஒருநாள் மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சிகள், இதழாளர்கள், பொதுமக்கள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரும் ’மாற்றத்தை விரும்பினால் அதை உன்னிலிருந்தே துவங்கு’ என்பதற்கேற்ப அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் தானும் தன்னுடைய துறை ஊழியர்களும் பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்தப் போகிறோமென அறிவித்தார். சொன்னபடியே மெட்ரோ ரெயிலில் பயணித்து ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு நல்ல மீடியா மைலேஜ் கிடைத்தது. பொதுப்போக்குவரத்தால் எனக்கு என்னவெல்லாம் கிடைத்தது?! பார்ப்போம்.

நான் வாழும் கோவையில் மெட்ரோ ரயில்கள் கிடையாது. அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னரே என்னளவில் சமூகத்திற்கு உதவலாமென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருந்துகளைப் பயன்படுத்த துவங்கினேன். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 15 கிலோமீட்டர். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு என் ஈருளி விசுவாசமாக 60 கிலோமீட்டர்கள் ஓடும். இரண்டு நாட்கள் அலுவலகம் சென்று வர ரூ.75/- ஆகும். நான் வாழும் அறிவொளி நகரிலிருந்து கோவைப்புதூர் பஸ் டெர்மினல்ஸ் வர ரூ.5/- கோவைப்புதூரிலிருந்து காந்திபுரம் வர ரூ.15/- காந்திபுரத்திலிருந்து அலுவலகமிருக்கும் எல்.ஐ.சி நிறுத்தம் வர ரூ.5/- ஒருநாளைக்கே ஐம்பது ரூபாய் செலவானது. சரி பரவாயில்லை. மாதம் 375 ரூபாய்தானே அதிகம் ஆகிறது என சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

ஈருளியில் அலுவலகம் செல்லும்போது காலை 9:15-க்கு வீட்டை விட்டு கிளம்பினால் எவ்வளவு பராக்கு பார்த்துக்கொண்டே வண்டி ஓட்டினாலும் 9:45 மணிக்குள் அலுவலகத்தை அடைந்து விடுவேன். பேருந்து நாம் நினைத்த நேரத்திற்கு கிடைக்காதல்லவா எட்டு மணிக்கே அறிவொளி நகரில் பஸ் பிடிக்க வேண்டும். மாறி மாறி அலுவலகம் வரும்போது மணி பத்தை தாண்டி விடும். சரி சீக்கிரம் வந்துதான் என்ன சரித்திர சாதனையைப் படைத்து விடப்போகிறோமென இந்த நேர விரயத்தையும் கூட பொறுத்துக்கொண்டேன். (மேலதிகமாக வாரத்திற்கு ஒருமுறை பஞ்சர், செல்ஃப் எடுக்கலை, ராடு கட்டாயிடுச்சி என நட்டாற்றில் இறக்கி விடுவதையும் கட்டுரையாளர் கருணை கூர்ந்து பொருத்துக்கொள்கிறார்)

காலை நேரத்தில் உட்கார இடம் கிடைக்காது. தோளில் தொங்கும் பையை வைத்துக்கொண்டு நிற்பது நமக்கும் நமக்கடுத்து நிற்பவருக்கும் சிரமம். தலா 6 ரூபாய் கொடுத்து இஸ்திரி போட்ட சட்டையும், பேண்டும் கசங்கி விடும். குளித்ததும் அடித்த கோடாலி (ஆக்ஸ்) திரவியமும் பரிதாபமாகச் செயலிழந்து கசகசத்து உடல் நாறத் தொடங்கி விடும். நாமென்ன ஆணழகன் போட்டிக்கா போகப்போகிறோமென இதையும் கூட பொறுத்துக்கொள்ளலாம்.

பொறுத்துக்கொள்ளவே முடியாத ஒன்றுண்டு. அது ஓட்டுனர்கள், நடத்துனர்களின் வசவு. ’யோவ் மேல வாய்யா... மேல வாய்யா..., உள்ளே போ, படியில நிக்காதே, சில்லறை இல்லாம ஏன்யா எழவு எடுக்கற, இடிச்சா தள்ளி நில்லும்மா, யோவ் கெழவா எறங்கித் தொலையா...’ வயது பாரபட்சமின்றி ஒருமையில் விளிக்கப்பட்டு, அருவருக்கத்தக்க ஒன்றைப் பார்ப்பது போல பார்க்கப்பட்டு, பார்வையாலே செல்லுமிடம் வினவி, மூஞ்சில் எறிவதைப் போல கிழித்து ஏறியப்படும் டிக்கெட்டை காற்றில் பறந்து விடும் முன் எட்டிப்பிடித்து - சுயமரியாதை உள்ள எவனும் நகரப் பேருந்தில் பயணிக்க விரும்பமாட்டான்.

பத்து வருடங்களுக்கு முன்னர் நான் ஊர் ஊராகச் சென்று கடைகளுக்கு தீப்பெட்டி சப்ளை செய்து வந்த காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பதினைந்து பேருந்துகள் வரை மாறி மாறி பயணிப்பேன். அவ்வமயம், டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு சில்லறை பிறகு தருகிறேனெனச் சொல்லி ஏமாற்றிய, லக்கேஜ் ஏற்ற டிக்கெட் தொகை போக லஞ்சம் கேட்ட, நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற நடத்துனர்கள் ஒட்டுனர்கள் மீதெல்லாம் அஞ்சலட்டையில் புகார் எழுதி அனுப்புவேன். சம்பந்தப்பட்டவர்களே வீடு தேடி வந்து புகார்களை வாபஸ் வாங்கச் சொல்லி கெஞ்சிய அனுபவங்கள் உண்டு. இன்று அப்படியொரு நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன் இன்று இத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை?! சமீபத்தில் கோவையில் இலவச பஸ் பாஸ் வைத்திருந்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து நடத்துனரால் தள்ளி விடப்பட்டார். பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். கொந்தளித்த பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தினால் நடத்துனர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முயலும்போது சம்பவ இடத்திற்கு வந்த நடத்துனரின் தொழிற்சங்கத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இதர ஒட்டுனர்கள், நடத்துனர்களைத் திரட்டி போராட்டம் நடத்தி நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தார். பல மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.

இதே போல ஈருளியில் வந்த இளைஞர்கள் இருவர் தங்களை வேகமாக உரசிச் சென்ற பேருந்தினை விரட்டிப் பிடித்து ஓட்டுனருடன் தகராறில் ஈடுபட்டதையும் பொதுப்பிரச்சனையாக்கி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தினர்  கோவை நகரையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

இன்று எந்தவொரு போக்குவரத்து ஊழியர் மீதும் பொதுமக்களோ, அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம். எங்கள் மீது கைவைத்தால் சிட்டியையே அல்லோலப்படுத்திவிடுவோம் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்களின் மூலம் அவர்கள் சொல்ல வரும் செய்தி.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். உரிமைகளைப் போராடிப் பெற்றுத் தருகிற அதே சமயத்தில் கடமைகளில் தவறுபவர்களைக் கண்டிக்கவும் செய்தால்தான் அது நியாயம். மாறாக சம்பந்தப்பட்டவர்கள் சொந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த குற்றம் செய்தாலும் அணி திரண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வது காக்கா கூட்டத்தினைத்தான் நினைவு படுத்துகிறது. இதுவரை எந்த தொழிற்சங்கமாவது தானாக முன்வந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்களா?!

ஈரோட்டில் கண்பார்வையற்ற இளைஞர் நள்ளிரவில் அத்துவான நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே கலங்கச் செய்தது. பேருந்து எண்களை தனது கைப்பேசியில் அந்த இளைஞர் படம் பிடித்து ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில்,  ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பது ஒருவருக்கும் தெரியாது. இலவச பஸ்பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் நிறுத்தத்தில் காத்திருந்தால் நிற்காமல் செல்வது குற்றமென உயர்நீதிமன்றமே கண்டித்தது. அப்படிச் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்போமென கோர்ட்டில் உறுதியளித்த அதிகாரிகள் இதுவரை எத்தனை பேரை தண்டித்திருக்கிறார்கள் எனத் தெளிவில்லை. சட்ட விரோதமாக தரமற்ற தனியார் மோட்டல்களில் அரசுப்பேருந்துகள் நிறுத்தப்படுவது, பணத்தை வாங்கிக்கொண்டு கூரியர்காரர்களைப் போல தபால்கவர்களை, பார்சல்களை வாங்கி பட்டுவாடா செய்வது, லக்கேஜ் பாஸ்களில் குறிப்பிட்டதைவிட அதிக எடையுள்ள பார்சல்களை ஏற்றிக்கொள்வது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது என நீள்கிறது  குற்றப்பட்டியல்கள்.

ஒரு பொறுப்புள்ள பிரஜையாக, பத்திரிகையாளானாக, அகத்தில் நல்ல குடிமகனாகத் தன்னை உணர்பவனாக என்னால் அன்றாடம் பேருந்தில் நிகழும் இந்த அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தோல்வியுற்றவனாக பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்துவதைக் கைவிட்டேன்.

வீரப்ப மொய்லிக்கு மேற்கண்ட அனுபவங்கள் நிகழாமல் இருக்க எல்லாம் வல்ல வித்துவக்கோட்டம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

- செல்வேந்திரன்

கொசுறு செய்தி:

கடந்த ஆண்டு மத்தியபிரதேசம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபம்சிங் ஐந்து ரூபாய் சில்லறை பிரச்சனைக்காக ஓடும் பேருந்திலிருந்து நடத்துனரால் தள்ளி விடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tuesday, August 20, 2013

மனக்காளான்

* ஒரு சிந்தனையாளனின் எடை தோராயமாக எவ்வளவு இருக்குமென எவராவது கேட்டால் 72 கிலோ 300 கிராம் என பதில் சொல்லுங்கள் # இப்பத்தான் எடை பார்த்தேன்.

* இணையத்தில் ஒருவர் எழுதி சொந்த காரணங்களுக்காக அவரே அழித்து விட்ட விஷயத்தை தேடி அலைவது என்ன மாதிரியான மனநிலை?!

* slept?! என நடுநிசியில் வரும் குறுஞ்செய்திகளை இக்னோர் செய்யாமல் அழைத்துப் பேசுங்கள்; ஒரு தற்கொலை தடுக்கப்படலாம்.

* ஊத்தாம்பட்டி - நாகர்கோவில் ஜில்லாவில் பலூனின் பெயர்!

* சந்தகை - கொங்கு மண்டலத்தில் இடியாப்பத்தின் பெயர்!

* சென்ஸார் போர்டு உறுப்பினர்கள் மிச்சர் தின்ன தடை விதிக்க வேண்டும்! - செல்வேந்திரன் கோரிக்கை

* பிரதி மாதம் 25-ஆம் தேதி துவங்கி சம்பளம் கிரெடிட் ஆகும் 5-ஆம் தேதி வரை இல்லங்களில் ஒலிப்பதுதானே 'பஞ்ச'ரத்ன கீர்த்தனைகள்...?!

* ஒரு சிந்தனையாளனை இவ்வளவு காலம் தாழ்த்தி பின்தொடர்வதில் உங்களுக்கு மனவருத்தம் ஏதுமில்லையே...?!

* தெலுங்கில் பவன் கல்யாணும், கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரும், தமிழில் சீனிவாசனும் பவர் ஸ்டார்களாக அறியப்படுகிறார்கள் # டி.என்.பி.எஸ்.சி-ல கேட்டாலும் கேட்கலாம்!

* நாராயணசாமி பேசும்போது பிரம்மானந்தம் முகம் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும்தானா...?!

* பொதுவாக திருநெல்வேலி ஜில்லாவில் எம்.எல்.எம் பஜனை குறைவு. காரணம் சிம்பிள்: ஏமாத்துனா இழுத்துப் போட்டு வெட்டுவாங்க!

* வாத்யார்களைக் கேலி செய்பவர்களை பிற்பாடு வாழ்க்கை கேலி செய்துவிடுகிறது.

* விசாகா சிங் அழகியல்ல; ஆனால், மொழியால் உணர்த்தி விட முடியாததொரு கவர்ச்சி உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

* தமிழகத்தில் திருட்டு வட்டுக்கள் தழைத்தோங்க அவற்றை ஓட விட்டு (ஃபார்வர்டு) பார்க்க முடியுமென்பதும் பிரதான காரணம்!

* கடல் உயிரினங்களை சமைப்பதில் ஒவ்வொரு பத்து கிலோ மீட்டருக்கும் இடையில் பரவசமூட்டும் வேறுபாடுகள் தமிழகத்தில் உண்டு.

* 'வலையில் பாய்ந்த இளம்பெருவழுதி' என ஒரு விருதினை தோற்றுவிக்கலாமென்றிருக்கிறேன்...

* எவனோ ஒரு பக்கி பூட்டுன வீட்டுக்கு முன்னாடி TOLETனு என்னோட நம்பர எழுதிட்டு போயிருக்கான்; இதுவரைக்கும் 26 கால்ஸ்.. டேய்ய்ய்ய்ய் முடியலடா...

* Iannis Xenakis-ன் இசையை கவனத்துடனும், மனத்தயாரிப்புடனும் கேட்டேன்; ஸெனாகிஸ்,சாரு,நான் - மூவரில் யார் பைத்தியம் என்ற குழப்பம் வந்துவிட்டது!

* நீஎபொவ - பார்த்து மருமகன் சொன்னான் “போடா போடியை அவசரப்பட்டு திட்டிட்டனே”ன்னு!

* பிரயாணி விட்டுச் சென்ற டைம்பாஸ் இதழை எதிர் இருக்கை சிறுவன் எடுத்துப் புரட்டுகிறான்; எனக்கு பதட்டமாக இருக்கிறது!

* மீன்கள் மிதப்பதனாலே மட்டும் ஒரு குழம்பு மீன் குழம்பு ஆகிவிடாது என்கிற சிந்தனையோடு சாப்பாட்டு மேஜையிலிருந்து எழுகிறேன்...

* டேய் அத்தை ஊருக்குப் போய் ஒருவாரம் ஆச்சேடான்னு கேட்டா ‘அவசரப்படாதீங்க பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்’கிறான் மருமகன்...

* டைமிங்சென்ஸ் எனும் பிரச்சனையை பிரக்ஞையுடன் கைவிட்டாகவேண்டும்; இல்லையெனில் இந்த இளம்பெண்கள் தொல்லையிலிருந்து தப்பிக்கமுடியாது.

* கற்பூர முல்லையொன்று... ஓயாமல் தொல்லை செய்து... உறங்காமல்... உசிர் வாங்குதே... # இளவெயினி ராகங்கள்

* நடுக் கடலுல நாய் வண்டிய ஓட்ட முடியுமா... நாற வாயன் எதிரே நின்னா பேச முடியுமா...

* எதிர்ல இருக்கிறவன் கவனிக்கிறானா இல்லையாங்கிறத பத்தி கவலையே படாம பேசுறதும் ஒரு வரம்தான் போலருக்கு. முடியலடா சாமீகளா!

* டேய் தமிழன்ஸ்... இனிமே பீகார்காரங்கள நக்கல்ஸ் பண்ணுவீங்க...?! # நோ பவர்; நோ வொர்க்; நோ மணி..

* ராஜ் டிஜிட்டல் பிளஸூக்கும், டிஜிட்டல் எனும் வார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை.

* இறைக்கிற கிணறு ஊறும்; கரைக்கிற கிணறு நாறும். # ஏம்பா... உனக்கு ஏதாவது புரிஞ்சுது...?

* சங்கீதம் பாட... சப்பை மூக்கு உள்ளவர்கள் வேண்டும்... # இளவெயினி ராகங்கள்

* சூடாய் இருப்பின் கேடாய் முடியும்!

* சுற்றி வளைத்த சில்க் போர்டு ஆட்டோக்காரர்களிடம் 'மாங்குடி மருதனார் சாலை' என்றேன்; விட்டு விட்டார்கள் # பெங்களூரு

* பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் சாலையில் காட்டும் வேகத்தைப் பார்த்தால் வீட்டில் மனைவி இருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

* இரவில் சுவர்ணலதா கேட்கையில் தன்னையறியாமல் ஒரு துளி கண்ணீர் சுரந்து விடுகிறது.

* எங்கும் பவர்கட் என்பதே பேச்சு... நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு.... சங்கு கொண்டே ஈ.பிக்கு ஊதுவோமே...

* இந்த இரவில்... ஓடும் ரயிலில்... கதவைத் திறந்து... படியில் அமர்ந்து 'பிறை தேடும் இரவிலே...' கேட்கிறேன்; சைந்தவி ஒரு மேஜிக்!

* இந்த பிக்பாக்கெட் வல்லுனர்களெல்லாம் என்னவானார்கள்...?!

* உள்ளொன்று வைத்து புறமொன்று ட்வீட்டுவார் உறவு கலவாமை வேண்டும்.

* நமக்கு ரொம்பவும் வேண்டாதவந்தான் நல்லா ட்வீட்டுறான்; ஆர்டியோ, மென்சனோ போட்டுற முடியுமா? ரோசம் தடுக்குதுல்லா.

* எப்பயாச்சும் கேட்ச் விட்டா பரவாயில்லை; எப்பயுமே கேட்ச் விடுவேன்னா எப்படி?!

* மக்காயமா... மக்காயமா... மக்காயமாமா... மக்காசோளம் மக்காசோளம் விக்க போலாமா...

* அக்காள் என்பவள் அன்னையின் மினியேச்சர்.

* எனக்குநண்பனாய்இருக்கதகுதி தேவையில்லை;எதிரியாய்இருக்கவும்தகுதி தேவையில்லை.அவனவன்காசில் குடிக்கிறவனாய் இருந்தால் போதும்-ஸேம் டிரெய்ன், ஸேம்கவிதை

* ஏன் தம்பீ சேவிங் பண்ணாம இருக்கீயோ?!
நான்: ஹாலிடே மூட் போயிறக் கூடாதுல்லா...
நல்லது... ஜட்டியாச்சும் போடுகேளா... இல்ல அதும்...

* கும்பாட்டத்திலிருந்து சினிமாவிற்கும், சினிமாவிடமிருந்து கும்பாட்டத்திற்கும் பரஸ்பர கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்திருக்கிறது;

* தொடர்பு எண்களைக் கொடுத்து இவர் கிட்ட பேசுங்கன்னு சொன்னா... பேசறதுக்கே நாள் நட்சத்திரம் பாக்கறீங்களேடா... பொறவு எப்படி தொழில் வெளங்கும்?

* வெம்பக்கோட்டை மன்னன் கட்டிய இக்கோவிலை புதுப்பித்தவர் பெயர் 'ஒளிநூல் புலவன் உளமுடையான்'...! # கோவில்பட்டி செண்பகவல்லியம்மன்

* சூடு எனும் வார்த்தையை ஜூடு என்று உச்சரித்தால் பார்ட்டிக்கு ஊரு கோயம்புத்தூர்னு தெரிஞ்சுக்கணும்.

* மழை தேவதையின் பரிசு... யாரும் கவிதை எழுத வேண்டாம்...

* வாழ்க்கை லட்சியங்கள்ல ஒண்ணு: ஶ்ரீசாந்தை ஒரு ஓவர் போடவிட்டு நொங்கெடுக்கணும்கிறது 

* ஐஆர்சிடிசி வெப்சைட்டுல ஃப்ளைட் டிக்கெட்டும் புக் பண்ணலாமாம். # ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்கமுடியாதாம்கிற சந்திரமுகி டயலாக் ஞாபகம் வருது.

* என்னுடைய 2500 வது ஃபாலோயரை என் நாவலின் கதாபாத்திரமாக்கி என்றும் வாழச்செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

* ஒரு கிணற்றின் நீரையே குடித்து வளர்ந்தவனின் மூளையைப் போல அது மந்தமாகவே இயங்கியது. # from my novel

* எழுதிக் களைத்த பேனா நிப்பு சொட்டு மையை வெறியோடு உறிஞ்சுவதை போல உறிஞ்சினான் # from my novel

* இடியின் முழக்கத்தை இரவெல்லாம் மொழி பெயர்க்க வேண்டியவனின் முகம் போல இருண்டு கிடந்தது. # from my novel

* செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே செரிலாக் சாப்பிட தயங்கறீயே...நெசவு செய்யும் திருநாட்டில் ஜட்டியில்லாம திரியறயே... # இளவெயினி ராகங்கள்

* எந்த கழுதையும் நல்ல கழுதைதான் மண்ணில் பிறக்கையிலே... அது பேப்பரை தின்பதும், போஸ்டரை தின்பதும் அன்னை வளர்ப்பினிலே # இளவெயினி ராகங்கள்

* இரண்டு வரிகளுக்கு மேல் சிந்திக்கவோ, சித்தரிக்கவோ முடியாத என் இயலாமைக்கு ட்வீட்டுலக வாழ்வும் ஒரு காரணியா?!

* யாராலும் காதலிக்கப்படாமல் இருப்பது குற்றமில்லை; யாரையும் காதலிக்காமல் இருப்பவர்கள் பூமிக்குப் பாரம்!

* 'டா'வென்று உரிமையோடு அழைக்க ஆளில்லாத ஊரில் வசிக்கிறவன் அந்நியனும் பரதேசியுமே...

* உமர் குல்லோட தம்பிதான் அஜ்மல் கஸாப்போன்னு எனக்கு அடிக்கடி தோணும்.

* பாட்டி,அம்மா,அத்தை,சித்தி,அக்கா,தங்கை,மனைவி,மகள் - இவர்களோடுதான் வாழ்கிறோம் என்பதை ட்வீட்டருக்கு வரும்போது மட்டும் மறந்து விடுகிறார்கள்.

* தீயதை ட்வீட்டாதே; தீயதை ரீட்விட்டாதே; தீயவனை ஃபாலோ செய்யாதே!

* பொது நல நோக்கமற்ற டீசர் விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று; பொதுமக்களை குழப்ப, திகைப்பில் ஆழ்த்த எவருக்கும் உரிமையில்லை.

* அப்போ 'லைஃப் ஆஃப் பை' என்பது கேக் சம்பந்தப்பட்ட படம் இல்லையா...?!

* செல்லினத்தில் 'அன்டோ' ஆப்ஷன் வைக்காமல் விட்டவரை என் பாவம் சும்மா விடாது!

* மெலடியில்சிறந்தவர் பறவைமுனியம்மாவா அல்லது தேனிகுஞ்சரம்மாளா என இரு பிரிவாக அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் உடனே மைதானத்திற்கு வரவும்!

* தடயமில்லா குற்றம் இன்னமும் செய்யப்படவில்லை.

* மேஜிக்னா என்னங்கியோ... அவியல்ல மாங்கா செய்கதுல்லா அதுதாம்வே...!

* ஆர்ஏசி சீட்டில் அமர்ந்து சற்று நேரம் நூல் விட்ட சீமாட்டி ஸ்லீப்பர் கன்பார்ம் ஆனதும் சொல்லிக்காமல் கிளம்புகிறாள்; இதுதான் வாழ்க்கை!

* பிராயத்தில் யானையோடு ஆற்றில் குளித்த ஆழ்வார்திருநகரி; ஆனையும் இருக்கிறது, ஆறும் இருக்கிறது... நீர்தான் இல்லை.

* லேய் பிள்ளே...காப்பானுக்கு ஆயிரத்தெட்டு வேல... கள்ளனுக்கு ஒரே வேலதான்..களவெடுக்குகது...'

* எந்த அலுவலகத்தின் வரவேற்பறையில் மனிதர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதில்லையோ அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் தேசத்தை முன்னகர்த்துகிறவர்கள்.

* சரக்கடிப்பதற்காகவே 40 பக்க நோட்டுடன் களமிறங்கும் வசூலிஸ்டுகளிடம் 'நானே வீட்டோட மாப்பிள்ளை பாஸ்...' என தப்பிப்பது என் வழக்கம் # டிப்ஸ்

* எவ்வளவு பெரிய எழுத்தாளன் ஆகிட்டாலும் செய்தி சானல்களில் உட்கார்ந்து கருத்து சொல்லக் கூடாது செல்வேந்திரா..எவ்வளவு தூரம் எக்ஸ்போஸ் ஆகிறோம்?!

Friday, July 26, 2013

விஜயா பதிப்பகம் வேலாயுதத்திற்கு விருது

கோயம்புத்தூரின் வரலாற்று சிறப்பு மிக்க அமைப்புகளுள் ஒன்று கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம். 1944-ல் துவக்கப்பட்டது. ஜிடி நாயுடு, ஆர்.கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அங்கம் வகித்த அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் தத்தம் துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள்.

அவ்வகையில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தவரும், புத்தக விற்பனையில் பல்வேறு புதுமைகள் செய்து தமிழ் வாசகப் பரப்பினை அதிகரிக்கச் செய்தவரும், தீவிர இலக்கிய ஆர்வலருமான விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு. வேலாயுதம் அவர்களுக்கு ‘தொழிற்துறை சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

நான் கோவைக்குப் பிழைக்க வந்த ஆரம்ப நாட்களிலேயே அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்து விட்டது. திக்கு தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவர் பதிப்பித்து வெளியிடும் கோவை டைரி உதவியாக இருந்தது. விகடனில் வேலைக்குச் சேர்ந்த நாட்களில் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் துணையெழுத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அறிமுக கூட்டமே நான் பார்வையாளனாக கலந்து கொண்ட முதல் கூட்டம். அவரது கடையில்தான் முதன் முதலில் நாஞ்சில் நாடனை சந்தித்தேன். முதன்முதலில் ஜேகே எனும் சிங்கத்தின் கர்ஜனையை அவர் ஏற்பாடு செய்திருந்த ஞானபீட விருது பாராட்டுக்கூட்டத்தில்தான் கேட்டேன்.

ஒவ்வொரு சந்திப்பிலும் அவரது அனுபவத்திலிருந்து சுவையான சம்பவங்கள் சிலவற்றை, தான் மிகவும் ரசித்த இலக்கியப் பிரதியை, எழுத்தாளுமைகள் பற்றிய அறியப்படாத தகவல்களைப் பகிர்ந்துகொள்வார். மதுரை - திண்டுக்கல் சாலையில் பஞ்சர் ஒட்டும் சுப்பிரமணி என்பவரது தொழில் ஈடுபாடு குறித்து இவர் சொன்ன ஒரு சிறிய சம்பவத்தை பல நூறு பேர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். அவரோடு பேசுவது ஒரு ஸ்பூனில் உற்சாகத்தை எடுத்து உண்பது போல.

படைப்பாளிகள் உரிய முறையில் கவுரவிக்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமானவர். 1996-முதல் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுவிழாக்கள் எடுத்து வருகிறார். கவனிக்கப்பட வேண்டிய படைப்பு என தீர்மானித்து விட்டால் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் கோவையில் அறிமுக விழாக்கள், விமர்சன அரங்குகளுக்கு ஏற்பாடு செய்வார். சமீபத்திய சந்திப்பின்போது கூட கோவைக்கு அதிகம் வராத விட்டல்ராவ், பாவண்ணன், இமயம் போன்ற எழுத்தாளர்களை அழைத்து வரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார். வாசிப்பை ஊக்கப்படுத்த இன்னும் ஏகப்பட்ட யோசனைகள் வைத்திருக்கிறார். ’அழுதுக்கிட்டு இராதே... உழுதுக்கிட்டு இரு’ என அப்பா அடிக்கடி சொல்வார். எவன் சார் இந்தக் காலத்துல எலக்கியம் படிக்கிறானென ஒருபோதும் வேலாயுதம் புலம்பியதில்லை. உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி - வியாழக் கிழமை முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப., (அரசு முதன்மைச் செயலர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (பயிற்சி) துறை ) அவர்களது முன்னிலையில் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!Saturday, May 4, 2013

குழந்தை வளர்ப்பு கருத்தரங்கம்குழந்தைகள் மனநலம் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த மிகச்சிறப்பான கருத்தரங்கம் ஒன்றிற்கு திருப்பூர் ஸ்பிரிங் மவுண்ட் பப்ளிக் ஸ்கூல் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மாண்டிசோரி பயிற்சியகத்தின் இயக்குனர் ஷோபனா வைத்யநாதன், இசைக்கவி ரமணன் ஆகிய இருவரும் உரையாற்ற உள்ளனர். 

நாளை (05-05-2013) காலை 10:30 முதல் மதியம் 1:00 மணிவரை திருப்பூர் வேலன் ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது. திருப்பூர் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு: 7373299999 | 7373244099

Thursday, March 28, 2013

மனக்காளான்


* ரமேஷ் வைத்யாயும் இளவெயினியும் மணிக்கணக்கில் போனில் பேசிக்கொள்கிறார்கள்; எதைப் பற்றி பேசுகிறார்களென்றுதான் பிடி கிடைப்பதில்லை.


* வேலைகளில் பிந்தினாலும், ரிப்போர்ட் அனுப்புவதில் முந்துபவனே கார்ப்பரேட் வாழ்வின் செல்லப்பிள்ளை.

* மணிக்கணக்கில் வாசித்தாலும் இணைய தள வாசிப்பு ஒருபோதும் புத்தக வாசிப்புக்கு மாற்றல்ல.

* கடனெனப்பட்டதே இல்வாழ்க்கை.

* ஒன்றைப் பற்றி எழுதவேண்டுமென தீர்மானித்து, யோசித்து மனதிற்குள் தொகுத்து விட்டு, எழுத உட்காருகையில் எனக்கே அது  பழசாகி விடுகிறது.

*  சர்றா...
  காதலிக்கேன்
  காசு தருவேல்ல... - மதுமிதா கவிதைகள்

* டாஸ்மாக் வழங்கும் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி...!'

* அவர் ஒரு வணிகன். நான் ஒரு வணிகன். நீ ஒரு வணிகன். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வணிகத்திற்கு என்ன ஆகப்போகிறது?! - பிரதியங்கார மாசனமுத்து

* முத்து கிருஷ்ணனும், யமுனா ராஜேந்திரனும் சூரத்தாண்டவம் ஆடிய பின் உயிர்மையில் எஞ்சியிருப்பது நல்லி சில்க்ஸ் விளம்பரம் மட்டுமே.

* மூளை தீக்குளிப்பை மடத்தனம் என்றாலும் இதயம் அதனை வீரமென்றே மானசீகமாக தலை வணங்குகிறது.

* ங்கோத்தா..அவன் சங்க அருக்கறேன்டா..சீறியபடி பைக்கில் கிளம்பியவன் தெருமுனையை திரும்புவதற்குள் சரிந்து விழுந்தான். கழுத்தில் மாஞ்சா நூல்!# மீச்சிறு கதை

* பெண்ணுக்குப் பேராசை வைத்தான்... புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் பெரும் ஜவுளிக் கடைகளைத் திறந்தார்...

* வெல்லம் கொள்ளை போகுதே... வாங்கி வந்த நாள் முதல்...
இல்லம் வந்த எறும்புகள்... ஏந்திக் கொண்டு செல்லுதே...


* அக்சுவலா ’ஆனந்த் சார்’ என்கிறவர் யார்?! தொண்டைக்குள் இறங்கி தூர் வாருவாரா...?!

* ’ரைட்டர் மடையன்’ என்றொருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். ’கேட்ச் புடி’ ‘நடு சென்டர்’ மாதிரி வார்த்தைக் கோர்ப்பு இது.

* நீங்க எவ்ளோ ஜிபிக்கு எழுதியிருக்கீங்க... # சமகால தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்களாம்!

* சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதெல்லாம் ஓவர் ஆக்டிங் கூடாது என்பதைத்தான். நடிகை சுஜாதாவைச் சொன்னேன்.

* சேதன் பகத்துக்கு மூக்கு புடைப்பாக இல்லை; இருந்தாலும் எவ்வளவு ஐடியாக்கள் வருகிறது பாருங்கள்?!

* மிஸ்டேக்காக எழுதுவதை சுதந்திரமாகவும் மிஸ்டிக்காக எழுதுவதை தந்திரமாகவும் கொள்வதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் -பிரதியங்கார மாசானமுத்து

* கவிதைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர புலவர் நாஞ்சில் நாடனை சமீபத்திய செய்யுள்களோடு களமிறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

* சரவலென்னவோ சாத்தானுக்கும் கடவுளுக்கும்...
சங்கடமெல்லாம் பக்தனுக்குத்தான்!

* டெக்கான் சார்ஜஸை ஏன் விற்க நேர்ந்தது என்பதை காயத்ரி ரெட்டியின் கிரிக்கெட் ட்வீட்டுகளை வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

* கர்ணன் தன் கவச குண்டலத்துடன் ஜோய் ஆலுக்காஸ் விளம்பர மாடலாகி இருப்பார் #IfMahabharatHappenedNow

* ராமரும், சீதாவும் ஹெஸ்ட் ரோலில் க்ளைமாக்ஸில் அப்பியராகி இருப்பார்கள் #IfMahabharatHappenedNow

* யாரோடும் ஏழைமை பேசேல்...!

* நீ தமிழிலக்கியத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தால், எழுதாமலிரு! - பிரத்தியங்கார மாசானமுத்து

* ஹவுஸ் ஓனரின் டார்ச்சர் தாங்காமல் அவரை கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளனவா?!

* உலக தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு கார்ட்டூன் பாத்திரமும் சேர்ந்து நடிப்பது சரவணன் மீனாட்சியில்தான் # குயிலி

* தமிழ் நாவலொன்றின் ஆங்கிலமொழியாக்கத்தை மெய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறேன்; பெட்டிக்கடை என்பதை பொட்டீக் ஷாப் என பெயர்த்திருக்கிறார்.ம்...ம்...டிவைன்

* சிலர் யோ யோ ஹனிசிங்கின் மண்டை ஹோசிராப்பூர் மேப் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஸ்டைல். அவ்வளவுதான்.

* 'விஷ் யூ எ ஹேப்பி ஹர்த்தால்' - இப்படியொரு மெஸெஜ் கேரள நண்பனிடமிருந்து வந்திருக்கிறது!

* க்ரீன் டீ-ல் நாட்டுச் சர்க்கரையை கொட்டி அரங்கசாமி அலுவலகத்தில் ஒரு திரவம் கொடுக்கிறார்கள்; குடலை சுத்தம் செய்ய இதைவிட வேறு மாற்று இல்லை!

* அம்சவேணிக்கு நல்ல ஆம்சு பவருடா... அசைஞ்சு வருகையில் அவளொரு ஆடி காருடா...

* அழுக்கு சாக்ஸை விட கிழிந்த சாக்ஸ் மேலானது! # ஒரு ட்வீட் தேத்தினேன் பார்த்தீங்களா...?!

* என்னுடைய லட்சியமெல்லாம் இந்தியாவின் முதல் சுமோ மல்யுத்த வீரனாகி நாட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.

மனக்காளான்


* ரமேஷ் வைத்யாயும் இளவெயினியும் மணிக்கணக்கில் போனில் பேசிக்கொள்கிறார்கள்; எதைப் பற்றி பேசுகிறார்களென்றுதான் பிடி கிடைப்பதில்லை.


* வேலைகளில் பிந்தினாலும், ரிப்போர்ட் அனுப்புவதில் முந்துபவனே கார்ப்பரேட் வாழ்வின் செல்லப்பிள்ளை.

* மணிக்கணக்கில் வாசித்தாலும் இணைய தள வாசிப்பு ஒருபோதும் புத்தக வாசிப்புக்கு மாற்றல்ல.

* கடனெனப்பட்டதே இல்வாழ்க்கை.

* ஒன்றைப் பற்றி எழுதவேண்டுமென தீர்மானித்து, யோசித்து மனதிற்குள் தொகுத்து விட்டு, எழுத உட்காருகையில் எனக்கே அது  பழசாகி விடுகிறது.

*  சர்றா...
  காதலிக்கேன்
  காசு தருவேல்ல... - மதுமிதா கவிதைகள்

* டாஸ்மாக் வழங்கும் 'நீங்களும் செல்லலாம் தெருக்கோடி...!'

* அவர் ஒரு வணிகன். நான் ஒரு வணிகன். நீ ஒரு வணிகன். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து வணிகத்திற்கு என்ன ஆகப்போகிறது?! - பிரதியங்கார மாசனமுத்து

* முத்து கிருஷ்ணனும், யமுனா ராஜேந்திரனும் சூரத்தாண்டவம் ஆடிய பின் உயிர்மையில் எஞ்சியிருப்பது நல்லி சில்க்ஸ் விளம்பரம் மட்டுமே.

* மூளை தீக்குளிப்பை மடத்தனம் என்றாலும் இதயம் அதனை வீரமென்றே மானசீகமாக தலை வணங்குகிறது.

* ங்கோத்தா..அவன் சங்க அருக்கறேன்டா..சீறியபடி பைக்கில் கிளம்பியவன் தெருமுனையை திரும்புவதற்குள் சரிந்து விழுந்தான். கழுத்தில் மாஞ்சா நூல்!# மீச்சிறு கதை

* பெண்ணுக்குப் பேராசை வைத்தான்... புவி பேணி வளர்த்திடும் ஈசன்... மண்ணுக்குள்ளே சில மூடர் பெரும் ஜவுளிக் கடைகளைத் திறந்தார்...

* வெல்லம் கொள்ளை போகுதே... வாங்கி வந்த நாள் முதல்...
இல்லம் வந்த எறும்புகள்... ஏந்திக் கொண்டு செல்லுதே...


* அக்சுவலா ’ஆனந்த் சார்’ என்கிறவர் யார்?! தொண்டைக்குள் இறங்கி தூர் வாருவாரா...?!

* ’ரைட்டர் மடையன்’ என்றொருவர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார். ’கேட்ச் புடி’ ‘நடு சென்டர்’ மாதிரி வார்த்தைக் கோர்ப்பு இது.

* நீங்க எவ்ளோ ஜிபிக்கு எழுதியிருக்கீங்க... # சமகால தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இப்படித்தான் கேட்டுக்கொள்கிறார்களாம்!

* சுஜாதாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டதெல்லாம் ஓவர் ஆக்டிங் கூடாது என்பதைத்தான். நடிகை சுஜாதாவைச் சொன்னேன்.

* சேதன் பகத்துக்கு மூக்கு புடைப்பாக இல்லை; இருந்தாலும் எவ்வளவு ஐடியாக்கள் வருகிறது பாருங்கள்?!

* மிஸ்டேக்காக எழுதுவதை சுதந்திரமாகவும் மிஸ்டிக்காக எழுதுவதை தந்திரமாகவும் கொள்வதை எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டும் -பிரதியங்கார மாசானமுத்து

* கவிதைப் புயல்களைக் கட்டுக்குள் கொண்டு வர புலவர் நாஞ்சில் நாடனை சமீபத்திய செய்யுள்களோடு களமிறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

* சரவலென்னவோ சாத்தானுக்கும் கடவுளுக்கும்...
சங்கடமெல்லாம் பக்தனுக்குத்தான்!

* டெக்கான் சார்ஜஸை ஏன் விற்க நேர்ந்தது என்பதை காயத்ரி ரெட்டியின் கிரிக்கெட் ட்வீட்டுகளை வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகிறது.

* கர்ணன் தன் கவச குண்டலத்துடன் ஜோய் ஆலுக்காஸ் விளம்பர மாடலாகி இருப்பார் #IfMahabharatHappenedNow

* ராமரும், சீதாவும் ஹெஸ்ட் ரோலில் க்ளைமாக்ஸில் அப்பியராகி இருப்பார்கள் #IfMahabharatHappenedNow

* யாரோடும் ஏழைமை பேசேல்...!

* நீ தமிழிலக்கியத்திற்கு ஏதாவது செய்யவேண்டுமென நினைத்தால், எழுதாமலிரு! - பிரத்தியங்கார மாசானமுத்து

* ஹவுஸ் ஓனரின் டார்ச்சர் தாங்காமல் அவரை கொலை செய்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளனவா?!

* உலக தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் ஒரு கார்ட்டூன் பாத்திரமும் சேர்ந்து நடிப்பது சரவணன் மீனாட்சியில்தான் # குயிலி

* தமிழ் நாவலொன்றின் ஆங்கிலமொழியாக்கத்தை மெய்ப்பு பார்த்துக்கொண்டிருக்கிறேன்; பெட்டிக்கடை என்பதை பொட்டீக் ஷாப் என பெயர்த்திருக்கிறார்.ம்...ம்...டிவைன்

* சிலர் யோ யோ ஹனிசிங்கின் மண்டை ஹோசிராப்பூர் மேப் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு ஸ்டைல். அவ்வளவுதான்.

* 'விஷ் யூ எ ஹேப்பி ஹர்த்தால்' - இப்படியொரு மெஸெஜ் கேரள நண்பனிடமிருந்து வந்திருக்கிறது!

* க்ரீன் டீ-ல் நாட்டுச் சர்க்கரையை கொட்டி அரங்கசாமி அலுவலகத்தில் ஒரு திரவம் கொடுக்கிறார்கள்; குடலை சுத்தம் செய்ய இதைவிட வேறு மாற்று இல்லை!

* அம்சவேணிக்கு நல்ல ஆம்சு பவருடா... அசைஞ்சு வருகையில் அவளொரு ஆடி காருடா...

* அழுக்கு சாக்ஸை விட கிழிந்த சாக்ஸ் மேலானது! # ஒரு ட்வீட் தேத்தினேன் பார்த்தீங்களா...?!

* என்னுடைய லட்சியமெல்லாம் இந்தியாவின் முதல் சுமோ மல்யுத்த வீரனாகி நாட்டின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான்.