விஜயா பதிப்பகம் வேலாயுதத்திற்கு விருது

கோயம்புத்தூரின் வரலாற்று சிறப்பு மிக்க அமைப்புகளுள் ஒன்று கோயம்புத்தூர் ரோட்டரி சங்கம். 1944-ல் துவக்கப்பட்டது. ஜிடி நாயுடு, ஆர்.கே. சண்முகம் செட்டியார் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அங்கம் வகித்த அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் தத்தம் துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள்.

அவ்வகையில் 500-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்தவரும், புத்தக விற்பனையில் பல்வேறு புதுமைகள் செய்து தமிழ் வாசகப் பரப்பினை அதிகரிக்கச் செய்தவரும், தீவிர இலக்கிய ஆர்வலருமான விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. மு. வேலாயுதம் அவர்களுக்கு ‘தொழிற்துறை சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்குப் பெருமகிழ்ச்சியளிக்கிறது.

நான் கோவைக்குப் பிழைக்க வந்த ஆரம்ப நாட்களிலேயே அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்து விட்டது. திக்கு தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவர் பதிப்பித்து வெளியிடும் கோவை டைரி உதவியாக இருந்தது. விகடனில் வேலைக்குச் சேர்ந்த நாட்களில் நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் துணையெழுத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அறிமுக கூட்டமே நான் பார்வையாளனாக கலந்து கொண்ட முதல் கூட்டம். அவரது கடையில்தான் முதன் முதலில் நாஞ்சில் நாடனை சந்தித்தேன். முதன்முதலில் ஜேகே எனும் சிங்கத்தின் கர்ஜனையை அவர் ஏற்பாடு செய்திருந்த ஞானபீட விருது பாராட்டுக்கூட்டத்தில்தான் கேட்டேன்.

ஒவ்வொரு சந்திப்பிலும் அவரது அனுபவத்திலிருந்து சுவையான சம்பவங்கள் சிலவற்றை, தான் மிகவும் ரசித்த இலக்கியப் பிரதியை, எழுத்தாளுமைகள் பற்றிய அறியப்படாத தகவல்களைப் பகிர்ந்துகொள்வார். மதுரை - திண்டுக்கல் சாலையில் பஞ்சர் ஒட்டும் சுப்பிரமணி என்பவரது தொழில் ஈடுபாடு குறித்து இவர் சொன்ன ஒரு சிறிய சம்பவத்தை பல நூறு பேர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். அவரோடு பேசுவது ஒரு ஸ்பூனில் உற்சாகத்தை எடுத்து உண்பது போல.

படைப்பாளிகள் உரிய முறையில் கவுரவிக்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமானவர். 1996-முதல் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுவிழாக்கள் எடுத்து வருகிறார். கவனிக்கப்பட வேண்டிய படைப்பு என தீர்மானித்து விட்டால் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் கோவையில் அறிமுக விழாக்கள், விமர்சன அரங்குகளுக்கு ஏற்பாடு செய்வார். சமீபத்திய சந்திப்பின்போது கூட கோவைக்கு அதிகம் வராத விட்டல்ராவ், பாவண்ணன், இமயம் போன்ற எழுத்தாளர்களை அழைத்து வரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்தார். வாசிப்பை ஊக்கப்படுத்த இன்னும் ஏகப்பட்ட யோசனைகள் வைத்திருக்கிறார். ’அழுதுக்கிட்டு இராதே... உழுதுக்கிட்டு இரு’ என அப்பா அடிக்கடி சொல்வார். எவன் சார் இந்தக் காலத்துல எலக்கியம் படிக்கிறானென ஒருபோதும் வேலாயுதம் புலம்பியதில்லை. உற்சாகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி - வியாழக் கிழமை முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப., (அரசு முதன்மைச் செயலர் - பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் (பயிற்சி) துறை ) அவர்களது முன்னிலையில் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெறும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!



Comments