Wednesday, March 31, 2010

ஊர் சுற்றி வந்த ஓசை

ரம்யாக்கா, கலைச்செல்வி அக்கா, விஜிராம், சஞ்ஜெய் அண்ணா மற்றும் சித்தர் கைங்கர்யத்தில் திருவேங்கட மலை சென்று வந்தேன். திருப்பதியில் பக்தர்கள் வசதிக்கென எவ்வளவோ செய்கிறார்கள். ஆனால் சுற்றுச்சூழல் சமாச்சாரத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள்.

திருவேங்கட மலையில் அரியவகை மான்கள், குரங்குகள், பாம்புகள், புனுகுப்பூனைகள், காட்டுக்கோழிகள் என ஏராளமான காட்டுயிர்கள் வசிக்கின்றன. நாராயணகிரி மலைப்பகுதியில் இருக்கும் மர அணில்கள் முக்கியமானவை. கருப்பும் சிவப்பும் கலந்த வண்ணமும், பஞ்சுப்பொதி போன்ற வாலும் உடைய மர அணில்கள் கீரி அளவிற்கு பெரியவை. இந்த முறை மனித பயமற்ற மர அணில் ஒன்றை மிக நெருக்கத்தில் காண நேர்ந்தது. பக்தர்கள் வீசி ஏறியும் ரோபஸ்டாக்களைத் தின்று கொண்டிருந்தது அந்த அணில். ரசாயனங்களால் விளைவிக்கப்பட்ட பழங்களைத் தின்ன பழகிக்கொண்ட அணில் என்னவாகும் என்கிற அச்சம் மலை இறங்கிய பின்னும் மனதிலே இருந்தது.

எத்தனையோ காட்டுயிர்கள் ரசாயனம் கலந்த விளை பொருட்களால் அருகி விட்டன. சமீபத்திய உதாரணம் பிணந்தின்னிக் கழுகுகள். கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகளின் தாக்கத்தால் இவற்றின் இனப்பெருக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருமலையின் ஏழு சிகரங்களிலும் எங்கு திரும்பினாலும் பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆந்திர வனத்துறை கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும் என மலை குனிய நின்றானை வேண்டிக்கொண்டேன்.

***

திருமலையில் உடனே கொண்டு வர வேண்டியது உடை கட்டுப்பாடு. "Mine is 8 1/2 inch" வாசகங்கள் உடைய பனியனும், அரை டிராயருமாக வலைய வரும் ஜெல் மண்டையன்களும், ஸ்லீவ்லெஸ் மென்தோள் மலர் மார்பினள்களும் பக்தியை ஏகத்துக்கும் குலைக்கிறார்கள்.

***

நிருபர் நடந்ததை எழுதுவார். பத்திரிகையாளரோ நடந்தது, நடப்பது, நடக்கப்போவதை எழுதுவார். ஞாநி இரண்டாவது வகை ஆசாமி. நான் புடலைங்காய்த் தனமாக ஒரு காரியம் செய்யத் துணிந்தேன். வருத்தப்பட்டு பாரம் சுமப்பாய் என்று எச்சரித்தார். கேட்டேனில்லை. சுமக்கிறேன்.

எப்போதும் ஞாநி வீட்டில் இருபது இளைஞர்களாவது இருக்கிறார்கள். எந்நேரமும் விவாதம், உரையாடல், நாடக ஒத்திகை என ரசனையான வாழ்க்கை. தமிழ்நாட்டில் இவரளவிற்கு இளைஞர்கள் புடை சூழ வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்ன?!

***

பாஸ்கர் சக்தி, ஈஸ்வரிக்கா, பத்மா, உமா ஷக்தி, அண்ணாமலை, மோட்டார் விகடன் பாலா, தேனி ஈஸ்வர், தீபா, நேகா, சந்தன முல்லை, பைலட் சஞ்ஜெய் என நல்லோர் பலரைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியாக முடிந்தது சென்னைப் பயணம்.

***

மேனி வருடும் குளிர் நாணி ஓடும் அனல். உலைக்குத் தப்பி மலைக்குள் புகுந்தேன். சீசன் துவங்கியதன் அடையாளமாக ஊட்டி முழுவதும் ஜனத்திரள்.

எந்தத் தருணத்திலும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அரசு இயந்திரங்களை வளைக்கக் கூடாது. குடிக்க கூடாது. பிளாஸ்டிக் கூடாது. கூச்சல் கூடாது என பல கூடாதுகளுக்கு ஒப்புக்கொண்டு உடன் வந்த நண்பர்கள் ஈரக்காற்றில் வாக்குறுதிகளைக் கரைத்தனர்.

கோடை வாசஸ்தலங்கள் ‘பார்’ இல்லை. குடித்து, வாந்தியெடுத்து, உளறி, அடுத்தடுத்த நாட்களில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார மலையேறி வர வேண்டுமா?! உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பார்களை வாழ வையுங்கள்.

Monday, March 15, 2010

பரிசல் புத்தகம் - தொடரும் விவாதம்

பதிலூட்டமாகத்தான் எழுதினேன். என் வலையில் ஏதோ கோளாறு. பதிலூட்டம் இட முடியவில்லை என்பதனால் தனிப்பதிவாக்க வேண்டியதாகி விட்டது:
பொதுவாக வலையுலகில் விமர்சன நோக்கிலோ அல்லது விவாதங்களை முன்னெடுத்துச் சொல்லும் வகையிலோ பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. அரிதாக வரும் மாற்று அபிப்ராயங்களும் நாகரீக மொழியில் பேசுவதுமில்லை. நண்பர் சரவணகார்த்திக்கேயனின் நீண்ட பின்னூட்டத்தினை வரவேற்கிறேன்.

எழுத்தின் தரத்தை அவனவன் தரத்தின்படி வாசகனே தீர்மானிக்கிறான். எழுத்தாளனைக் கொண்டாட அல்லது முற்றிலும் நிராகரிக்கிற உரிமை வாசகனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அதன் தரத்திற்காக எந்தமாதிரியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது கதைகளை வாசித்தாலன்றி உணர முடியாது.

ஜனரஞ்சகக் கதைகளை எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் அக்கதைகள் அதன் தர்மங்களுக்குள்ளாவது கட்டுப்பட்டு இருக்க வேண்டும். வெற்று உரையாடல்கள் அதன் இறுதியில் ஒரு திடுக் திருப்பம் என போகிற போக்கில் எழுதிச் செல்வது சிறுகதை ஆகா. சிறுகதையில் வாசக பங்கேற்பு ஒரு நியதி. ‘உங்கள் கதைகளை வாசகனுக்குச் சொல்லாதீர்கள். காணப்பண்ணுங்கள்’ என்பார் நீங்கள் குறிப்பிடுகிற ஜெயமோகன். கதைகள் வேறு. அனுபவப் பத்திகள் வேறு. கோணல் பக்கங்களும், கற்றதும் பெற்றதும் ஒருபோதும் கதைகள் என்கிற வகைமைக்குள் வராது.

ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது. ஆனால் அப்படி இடம்பெறுகிற படைப்பில் வாசகச் சுவை இல்லையென்றால் அதற்கு அப்பத்திரிகையின் படைப்புகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளரும் முக்கிய காரணம். ஆனால், அக்கதைகளைப் பற்றிய சுயமதிப்பீடு அதை எழுதியவனுக்கு எப்போதும் இருந்தாக வேண்டும். பிற்காலத்தில் தொகுதி கொண்டுவரும் முயற்சியின் போது அந்தக் குப்பைகளைக் கவனத்தோடும் கறாரோடும் ஒதுக்கியே தீரவேண்டும். ஆனந்தவிகடனில் வருவதை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. கூடாது.

கணிணிமொழி கவிதை மட்டுமல்ல இதுவரை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய நூத்திச்சொச்ச கவிதைகளிலும், சிற்சில சிறுகதைகளிலும் இலக்கியத்தரம் சிறிதும் இல்லை என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். வணிகப்பத்திரிகைகளின் டிமாண்டிற்கும், அதன் வாசகத்திரளுக்கும் ஏற்ப எழுதப்பட்டவை அவை. ஒரு பத்திரிகையில் ஊனமுள்ள படைப்பு இருக்குமாயின் அதை இட்டு நிரப்ப வாசகனுக்கு பத்திரிகையின் வேறு பக்கங்கள் உதவலாம். ஆனால், புத்தகம் அப்படி அல்ல. அதன் பயணம் நீடித்தது. அதன் ஆயுள் கெட்டியானது. ஆரோக்கியமான புத்தகம் பலரால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் சிபாரிசு செய்யப்படும். குறைந்த பட்சம் பரணிலாவது வாழ வேண்டும். பழைய புத்தகக் கடைகளில் அல்ல. (சிலர் பெரும் ஆளுமைகளின் படைப்புகள் கூட பழைய புத்தகக்கடைகளில் கிடைக்கின்றன என்கின்றனர். வெளியாகி ஒரிரு மாதங்களே ஆன புத்தகம் பழைய கடையில் கிடைப்பதும் 70களில் வெளிவந்த புத்தகம் கிடைப்பதும் ஒன்றா?!)

பரிசல் ஒரு ஆரம்பநிலை எழுத்தாளர் இல்லை. பதினெட்டு வருடங்களாக பத்திரிகைகளிலும், இணைய பக்கங்களிலும் எழுதி வருகிறார். நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு அளிக்கின்ற சலுகையை பரிசலுக்கு அளிக்க வேண்டியதில்லை. அவரது முதல் புத்தகம் என்றளவில் நண்பனாக அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியது மட்டும் நம் கடமை அல்ல. தொடர்ந்து உழைப்பின்மை மிளிரும் சாரமற்ற படைப்புகளோடு மட்டுமே அவர் மகிழ்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். என் விமர்சனங்களெல்லாம் படைப்பின் மீதுதானே அன்றி. படைப்பாளன் மீது அல்ல.

புத்தகம் வெளியிடும்போது அங்கீகாரமும் கவன ஈர்ப்பும் கிடைக்க முதலில் அப்புத்தகம் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்பட்டு - இன்னொரு எழுத்தாளனால் பெற்றுக்கொள்ளப்பட்டு - மற்றொரு எழுத்தாளனால் அறிமுகப்படுத்தப்பட்டு - பிறிதொரு எழுத்தாளனால் விமர்சிக்கப்பட்டு – சக எழுத்தாளர்களால் வாசிக்கப்படுவதனால் கிடைக்குமேயன்றி சினிமாக்காரர்களின் திருக்கரங்களால் வெளியிடப்படுவதால் அல்ல.

அப்புறம் புத்தகம் போட விரும்பும் எழுத்தாளன் என்கிற பதம் வியப்பளிக்கிறது. எழுத்தாளன் ஏன் பதிப்பகத்தைத் தேடிப் போக வேண்டும்? மாணவன் தயாராகிவிட்டால் ஆசிரியர் தானே கிடைப்பார் என்பதைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் எழுத்தில் சரக்கு இருந்தால் நீங்கள் பதிப்பகங்களைத் தேட வேண்டிய அவசியமே இருக்காது. வம்சி, தமிழினி, உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கியத்தரமான புத்தகங்களைப் பதிப்பிக்கிற எத்தனையோ பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வரத்தான் செய்கிறார்கள். இந்த புத்தகக்கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகங்களும் எத்தனை புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறது என்று பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொகுதியை வாசித்த பின் உங்கள் அபிப்ராயம் கொஞ்சம் மாறலாம் என்பது என் எண்ணம்.

Sunday, March 14, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - வாசக அபிப்ராயம்

எந்தவொரு புத்தகத்தையும் முன் தீர்மானங்கள் இன்றி வாசக பரிவோடு அணுகுவது என் வழக்கம். அப்படித்தான் ஆசை ஆசையாகக் காத்திருந்து ‘டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுதியையும் வாசித்தேன்.

தொகுப்பிலுள்ள 17 கதைகளுள் பெரும்பாலானவை கதாசிரியனே கதையினை விவரிக்கும் பாணியிலானவை. அதிலும் அனுபவக் குறிப்புகளே அதிகம். உரையாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உரைநடையே நூலாசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

பரிசல்காரன் பெரும்பாலும் வெகுஜன தன்மையோடு இயங்குகிற எழுத்துக்காரர் என்பதால் உத்தி, நடை, கலையம்சம் போன்ற கறாரான அளவுகோல்களை விடுத்து வெகுஜனக் கதைகளுக்குறிய வரையறைகளுக்குள்ளாவது மட்டுப்படுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத்திரம் ஆகிய ஐந்து கதைகளைத் தவிர்த்து ஏனைய பன்னிரெண்டு கதைகளும் ‘நாட் ஸோ பிரிண்ட் ஓர்த்தி’ வகையரா. ‘காதல் அழிவதில்லை’ கதையை அதன் தேர்ந்த நகைச்சுவைக்காக மன்னிக்கலாம். ஜெனிஃபர் கதையில் வரும் ‘திருமணவாதி’ என்கிற பதப்பிரயோகம் ருசிகரமானது.

பின்னட்டையில் நூலாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதனை எழுதிய கரங்களுக்குத் தங்க காப்பு. மூன்றே வாக்கியங்களில் எழுத்தாளரின் பெயர் உட்பட ஆறு பிழைகள்.

நூலாசிரியர் பதினெட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது என்னுரையில் தெரிகிறது. கதைகளில் தெரியவில்லை.

***

பல காலமாக இசை கேட்கிறோம். நல்ல இசை வடிவங்களை நம்மால் பகுத்தறிய முடிகிறது. அதற்காக யாராவது ஒரு இயக்குனர் தன் படத்திற்கு இசை அமைக்கச் சொன்னால் ஒத்துக்கொள்வோமா?!

இணையத்தில் அதிகம் இயங்குகிறோம். பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். மைக்ரோசாஃப்டிலிருந்து அழைத்து அடுத்த புரொஜெக்டுக்கு நீங்கதான் ஹெட் என்றால் ஒப்புக்கொள்வோமா?!

சமூக மாற்றம் பற்றி பேசுகிறோம், விவாதிக்கிறோம். பிரதமரே அழைத்து திட்டக்குழுத் தலைவராக நீங்களே இருந்து விடுங்கள் என்றால் உடனே டில்லி கிளம்பி விடுவோமா?!

நிச்சயம் மாட்டோம். மேற்கண்ட பணிகளுக்கு நாம் தகுதியானவர் இல்லை என்கிற உறுதியான சுயமதிப்பீடு. ஆனால், ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம். பல வருடங்களாக எழுத்தியக்கத்தில் இயங்குகிறவர்களுக்கு தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் எழுத்துப்பயிற்சியின் மூலமும் எது நல்ல எழுத்து என்கிற அளவுகோல் உருவாகவில்லை என்றால் அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்.

மஞ்சள் துண்டு கிடைத்ததும் மளிகைக்கடை வைக்க நினைத்த சுண்டெலி போல பின்னூட்டங்களின் அளவையும், வியந்தோதலையும் மனதிற்கொண்டு புத்தகம் போட துணிவது அபாயகரமானது. பிரதியின் பயணம் நீண்ட தூரம் கொண்டது. பலரால் பலகாலத்திற்கும் வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுவதுதான் புத்தகத்தின் கவுரவம். பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை!

Tuesday, March 9, 2010

குசலம்!

தொலைபேசி அழைத்தது. எதிர்முனையில் அப்பா.

‘சொல்லுங்கப்பா...’

‘சங்கரா... எங்கப்பா இருக்கே... ஆபிஸ்லயா... வீட்லயா... ஏதும் வேலையா இருக்கியாப்பா...?!’

‘இல்லப்பா வீட்டுலதான் இருக்கேன். சொல்லுங்க... என்ன விஷயம்?’

‘ஒண்ணுமில்லடே... லெச்சுமி வீட்டுக்கு வந்தேன்...ஒங்கிட்ட பேசி மாசமாச்சேன்னு சும்மாதான் கூப்பிட்டேம்பா.’

‘ஏம்பா... சும்மா ஊரு சுத்தாதீங்கன்னு உங்களுக்கு எத்தனவாட்டி சொல்றது. இப்ப லெச்சுமி வீட்டுக்குப் போகலன்னு யாரு அழுதா...இந்த வயசுல இப்படி ஊர் சுத்தாட்டி என்ன?’ என் எரிச்சலைக் கொட்டினேன்.

‘பேரப்புள்ளைகள பாக்கனும்போல இருந்திச்சு... என்னால மெட்ராசுக்கு வந்து உன்னத்தான் பாக்க தோது படல... அதான் திருநெல்வேலிக்கு வந்துட்டேன். ஒங் மருமவன் கண்ணன் கட்டுரைப் போட்டியில பர்ஸ்ட் வந்துருக்கான்டே! அவனுக்கு என்னதாச்சும் வாங்கிக்கொடுக்கனுமேன்னு கிளம்பி வந்தேன்.’

‘என்ன வாங்கிக் கொடுத்தீங்க...?!’

‘காதிகிராப்ட்ல ஒரு நல்ல கடசல் பேனா வாங்கிக் கொடுத்தம்டே’

‘வௌங்கிரும். பத்து ரூவா பேனா வாங்கிக்கொடுக்க பதினைஞ்சு ரூவாக்கி டிக்கெட் வாங்கிட்டு திருநெல்வேலி போகனுமா... அதுவும் கடசல் பேனா... எந்தக் காலத்துல இருக்கீங்க...?’

‘கோவப்படாதா சங்கரா... பேனாவா முக்கியம்... ஒரு நா பேச்சுப்போட்டில இதே கடசல் பேனாவ ஆறுதல் பரிசா வாங்கிட்டு வந்து எங்கிட்ட உனக்குத்தான் மொத பரிசுன்னு பொய் சொன்னே... ஞாபகமிருக்கா...?!‘

‘அப்பா... இந்த நக்கலுக்கு ஒண்ணும் கொறைச்ச இல்ல... இந்த எழவுக்குத்தான் உங்களுக்கு போன் பண்றதே இல்லை’

‘கோவப்படாத சங்கரா... பங்குனி உத்திரத்துக்கு எப்ப வர்ற... டிக்கெட் போட்டுட்டியா... லீவு எத்தன நாள்...?’

‘டிக்கெட்டெல்லாம் போடலை. போன வருஷம் வந்துட்டு பட்ட பாடு போதாதா... வீடெல்லாம் ஒழுகல், பச்சை விறக வச்சிகிட்டு அடுப்படில மல்லுக்கட்டி மல்லுக்கட்டி உஷாவுக்குக் காய்ச்சலே வந்திருச்சி...நாங்க வரலைப்பா...’

‘ஏய் அப்படிச் சொல்லாதடே... நல்ல நாளும் பொழுதுமா ஒத்தப்பயலா நான் வீட்டுக்குள்ள கெடக்கனுமாடே...உனக்கு என்ன வசதி வேணுமோ சொல்லு அதை பண்ணி வச்சிடுதம்டே... பொண்டாட்டி பிள்ளைகளோட ஊருக்கு வாடே...’

‘இப்படித்தான் போனவாட்டியும் சொன்னீங்க...மொதல்ல ஒடைஞ்சி கிடக்கிற ஓடெல்லாம் மாத்துங்க... புள்ளைக வெளையாடுற தார்சாவுல வெயில் விழுது... நல்ல தென்னங்கிடுகாப் பாத்து வேயுங்க... ’

‘செஞ்சுடுறேன் சங்கரா...’

‘யார் கால்ல விழுந்தாவது ஒரு சிலிண்டருக்கு ஏற்பாடு பண்ணுங்க... அடுப்பு நம்ம கணேசன் கடையில வாடகைக்கு எடுத்துக்கலாம்... ரெண்டு நாளைக்கு முன்னாடியே தண்ணி வண்டிக்கு சொல்லி தொட்டிய நெறைச்சி வையுங்க... சுடலிய வரச்சொல்லிடுங்க... பாத்திரம் கழுவ, வீடு பெருக்க ஒத்தாசையா இருக்கும்.’

‘சரிடே’

‘உஷா கன்னியாகுமரி போவனும்னு சொல்லிக்கிட்டே இருக்கா... ஒரு வண்டிக்கு சொல்லிடுங்க... நம்ம மகராசன் வண்டி பஜார்ல நிக்கும். அவன்கிட்டயே சொல்லிடுங்க...அப்புறம் நடுவீட்டு டியூப் லைட்டெல்லாம் ஒழுங்கா எரியுதா... முடுக்குல ஒரு லோ வாட்ஸ் பல்பு போட்டு வையுங்க....’

பேசிக்கொண்டிருக்கும்போதே வாசலில் ஆட்டோ வந்து நின்றது. தினேஷ் ஸ்கூல் பேக், தண்ணீர் பாட்டில், லஞ்ச் கூடை சகிதம் இறங்கினான். இரண்டாம் வகுப்பு படிக்கிற பயலுக்கு எத்தா பெரிய புத்தக மூட்டை என்று நினைத்துக்கொண்டே அப்பாவுடனான உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘அப்பா... தினேஷூக்கு பல்லு பெலமில்லாம இருக்கு... பதனி கொடுக்கலாம்னு உஷாவோட அப்பா சொன்னார். பண்டாரபுரத்துக்கு போனீங்கன்னா ஜேபி பதனி தருவான். வாங்கி பாரதி மைனி வீட்டு பிரிட்ஜூக்குள்ள வெச்சிருங்க... கெட்டுப்போகாம இருக்கும்’

போனில் இருப்பது தாத்தாதான் என்பதைத் தெரிந்து கொண்ட தினேஷ் என்னிடமிருந்து போனைப் பிடுங்கினான்.

‘தாத்தா! தினேஷ் பேசறன். எப்படி இருக்கீங்க?’

‘ம்... நா நல்லா இருக்கேன். லெச்சுமி அத்தை எப்படி இருக்காங்க? கண்ண மச்சான் இருக்கானா?’

‘ம் இப்பத்தான் வந்தேன் தாத்தா! நீங்க சாப்பிட்டீங்களா?’

‘என்ன சாப்பிட்டீங்க தாத்தா?’

‘கால் வலின்னு சொன்னீங்களே எப்படி இருக்குது தாத்தா?’

‘அன்னிக்கு கண்ணாடிய தொலைச்சுட்டேன்னீங்களே... கிடைச்சுதா தாத்தா?’

சமயங்களில் இரண்டாம் வகுப்பிடம் எம்.பி.ஏ தோற்கும். எனக்கு கொஞ்சம் அழவேண்டும் போல் இருக்கிறது.

Friday, March 5, 2010

தமிழினி


பாதசாரிக்கு அறிமுகம் தேவையில்லை. நம் காலத்தின் மகத்தான எழுத்தாளர்களுள் ஒருவர். அவரது ‘காசி’யினால் கவரப்படாதவர்கள் தமிழிலக்கிய உலகில் இல்லை ( “கடவுள் இல்லைன்னு சொல்லலை... இருந்தா நல்லாருக்குமே..” என்கிற தசாவதார க்ளைமாக்ஸ் டயலாக் காசியில் இருந்துதான் டூமில் செய்யப்பட்டது!) கவிதைகள், கதை, கட்டுரை என தொடர்ந்து எழுத்தியக்கத்தில் இருப்பவர். தமிழினியின் ஆசிரியர்.

தமிழினியில் தொடர்ந்து அவர் எழுதி வரும் ‘மன நிழல்’ பத்தி எழுத்தில் பெரும்புதுமை. அப்பத்திகள் ‘பேய்க்கரும்பு’ என்றும் ‘அன்பின் வழியது உயிர் நிழல்’ என்றும் இரு தொகுதிகளாக வெளி வந்திருக்கின்றன. அற்புதமான புத்தகங்கள்.

தமிழின் முதன்மையான இரு இலக்கியப் பத்திரிகைகளுள் ஒன்று பிறர் நுழைய இயலா சிறு குழுவாகவும் மற்றொன்று படைப்பிலக்கியத்தை பொடனியில் அடித்து விரட்டி விட்டு சினிமாவைப் பற்றியே அதிகம் பேசும் வண்ணத்திரையாகவும் மாறி விட்டது. உயிர் எழுத்து, தமிழினி, வார்த்தை போன்றவை படைப்பிலக்கியத்திற்கான நல்ல தளமாக இருந்து வந்தன. துரதிர்ஷ்டவசமாக ‘வார்த்தை’ நிறுத்தப்பட்டு விட்டது.

தமிழினியின் சர்க்குலேசன் மெச்சும்படி இல்லை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் அண்ணாச்சிக்கும் மிகுந்த வருத்தம் தருவதாக இருந்தது. இலக்கிய ஆர்வம் மிக்கவர்கள் பெருமளவில் இயங்கும் வலையுலக நண்பர்களிடமிருந்து சந்தாக்கள் திரட்டி தருவதாக பாதசாரியிடம் வாக்களித்திருக்கிறோம்.

ஓராண்டு முழுவதும் தமிழினியைத் தபாலில் பெற ஆண்டுச் சந்தா ரூ.240/- மட்டுமே.

***

ஜெயந்தா எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியொன்றினை நட்ட நடு ராத்திரியில் பொதிகையில் ஒளிபரப்புகிறார்கள். கவிதை, சிறுகதைகள் எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறைகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்களே அதன் மூலம் ஒருவர் படைப்பாளி ஆகிவிட முடியுமா என்கிற கேள்விக்கு எழுத்தாளர் சங்கர நாராயணன் பரமஹம்சரின் கதையொன்றினை பதிலாகச் சொன்னார்.

‘எனக்கு எப்போது ஸ்வாமி ஞானம் கிடைக்கும்?’ என்றான் சீடன் ஒருவன். தினமும் மந்திர உச்சாடனம் செய்து அதன் பின் திராட்சை பழமும் தின்று வந்தால் ஞானம் கிட்டும் என்றார் ராமகிருஷ்ணர். எத்தனை திராட்சை பழங்கள் தின்ன வேண்டும் என்று கேட்டான் சீடன். எத்தனை தடவை மந்திரம் சொல்ல வேண்டும் என்று கேட்காமல் திராட்சையைப் பற்றி கேட்கிறாயே... உனக்கு ஞானம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்றாராம் பரமஹம்சர்.

***

வ.ஸ்ரீனிவாசன் வார்த்தை இதழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். நல்ல கட்டுரைகளாலும், சிறுகதைகளாலும் வார்த்தையை அலங்கரித்து வந்தவர். இவர் கோயம்புத்தூரில்தான் வசிக்கிறார் என்பதை ஜெயமோகன் சந்திப்பின் போதுதான் தெரிந்து கொண்டேன். பன்னெடுங்காலமாக இலக்கியத் தளத்தில் இயங்கும் வ.ஸ்ரீனிவாசனின் வலைப்பக்கங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சொல்வனத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

***

ஆத்தூர் செந்தில் குமார் என்கிற பெயர் விவசாயிகள் மத்தியில் பிரபலம். விவசாய பத்திரிகைகளின் வாயிலாக உழவர்களோடு உரையாடிக்கொண்டிருப்பவர். விவசாயம் அவரது பன்முகங்களுள் ஒன்றுதான் பேசத் துவங்கினால் சாகுந்தலம், மிர்தாத், நீட்ஷே, ஓஷோ என நீளும் அவரது அறிவின் நீட்சி பிரமிப்பூட்டும். அவரும் வலை எழுதி வருகிறார்.