பரிசல் புத்தகம் - தொடரும் விவாதம்

பதிலூட்டமாகத்தான் எழுதினேன். என் வலையில் ஏதோ கோளாறு. பதிலூட்டம் இட முடியவில்லை என்பதனால் தனிப்பதிவாக்க வேண்டியதாகி விட்டது:
பொதுவாக வலையுலகில் விமர்சன நோக்கிலோ அல்லது விவாதங்களை முன்னெடுத்துச் சொல்லும் வகையிலோ பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. அரிதாக வரும் மாற்று அபிப்ராயங்களும் நாகரீக மொழியில் பேசுவதுமில்லை. நண்பர் சரவணகார்த்திக்கேயனின் நீண்ட பின்னூட்டத்தினை வரவேற்கிறேன்.

எழுத்தின் தரத்தை அவனவன் தரத்தின்படி வாசகனே தீர்மானிக்கிறான். எழுத்தாளனைக் கொண்டாட அல்லது முற்றிலும் நிராகரிக்கிற உரிமை வாசகனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அதன் தரத்திற்காக எந்தமாதிரியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது கதைகளை வாசித்தாலன்றி உணர முடியாது.

ஜனரஞ்சகக் கதைகளை எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் அக்கதைகள் அதன் தர்மங்களுக்குள்ளாவது கட்டுப்பட்டு இருக்க வேண்டும். வெற்று உரையாடல்கள் அதன் இறுதியில் ஒரு திடுக் திருப்பம் என போகிற போக்கில் எழுதிச் செல்வது சிறுகதை ஆகா. சிறுகதையில் வாசக பங்கேற்பு ஒரு நியதி. ‘உங்கள் கதைகளை வாசகனுக்குச் சொல்லாதீர்கள். காணப்பண்ணுங்கள்’ என்பார் நீங்கள் குறிப்பிடுகிற ஜெயமோகன். கதைகள் வேறு. அனுபவப் பத்திகள் வேறு. கோணல் பக்கங்களும், கற்றதும் பெற்றதும் ஒருபோதும் கதைகள் என்கிற வகைமைக்குள் வராது.

ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது. ஆனால் அப்படி இடம்பெறுகிற படைப்பில் வாசகச் சுவை இல்லையென்றால் அதற்கு அப்பத்திரிகையின் படைப்புகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளரும் முக்கிய காரணம். ஆனால், அக்கதைகளைப் பற்றிய சுயமதிப்பீடு அதை எழுதியவனுக்கு எப்போதும் இருந்தாக வேண்டும். பிற்காலத்தில் தொகுதி கொண்டுவரும் முயற்சியின் போது அந்தக் குப்பைகளைக் கவனத்தோடும் கறாரோடும் ஒதுக்கியே தீரவேண்டும். ஆனந்தவிகடனில் வருவதை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. கூடாது.

கணிணிமொழி கவிதை மட்டுமல்ல இதுவரை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய நூத்திச்சொச்ச கவிதைகளிலும், சிற்சில சிறுகதைகளிலும் இலக்கியத்தரம் சிறிதும் இல்லை என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். வணிகப்பத்திரிகைகளின் டிமாண்டிற்கும், அதன் வாசகத்திரளுக்கும் ஏற்ப எழுதப்பட்டவை அவை. ஒரு பத்திரிகையில் ஊனமுள்ள படைப்பு இருக்குமாயின் அதை இட்டு நிரப்ப வாசகனுக்கு பத்திரிகையின் வேறு பக்கங்கள் உதவலாம். ஆனால், புத்தகம் அப்படி அல்ல. அதன் பயணம் நீடித்தது. அதன் ஆயுள் கெட்டியானது. ஆரோக்கியமான புத்தகம் பலரால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் சிபாரிசு செய்யப்படும். குறைந்த பட்சம் பரணிலாவது வாழ வேண்டும். பழைய புத்தகக் கடைகளில் அல்ல. (சிலர் பெரும் ஆளுமைகளின் படைப்புகள் கூட பழைய புத்தகக்கடைகளில் கிடைக்கின்றன என்கின்றனர். வெளியாகி ஒரிரு மாதங்களே ஆன புத்தகம் பழைய கடையில் கிடைப்பதும் 70களில் வெளிவந்த புத்தகம் கிடைப்பதும் ஒன்றா?!)

பரிசல் ஒரு ஆரம்பநிலை எழுத்தாளர் இல்லை. பதினெட்டு வருடங்களாக பத்திரிகைகளிலும், இணைய பக்கங்களிலும் எழுதி வருகிறார். நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு அளிக்கின்ற சலுகையை பரிசலுக்கு அளிக்க வேண்டியதில்லை. அவரது முதல் புத்தகம் என்றளவில் நண்பனாக அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியது மட்டும் நம் கடமை அல்ல. தொடர்ந்து உழைப்பின்மை மிளிரும் சாரமற்ற படைப்புகளோடு மட்டுமே அவர் மகிழ்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். என் விமர்சனங்களெல்லாம் படைப்பின் மீதுதானே அன்றி. படைப்பாளன் மீது அல்ல.

புத்தகம் வெளியிடும்போது அங்கீகாரமும் கவன ஈர்ப்பும் கிடைக்க முதலில் அப்புத்தகம் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்பட்டு - இன்னொரு எழுத்தாளனால் பெற்றுக்கொள்ளப்பட்டு - மற்றொரு எழுத்தாளனால் அறிமுகப்படுத்தப்பட்டு - பிறிதொரு எழுத்தாளனால் விமர்சிக்கப்பட்டு – சக எழுத்தாளர்களால் வாசிக்கப்படுவதனால் கிடைக்குமேயன்றி சினிமாக்காரர்களின் திருக்கரங்களால் வெளியிடப்படுவதால் அல்ல.

அப்புறம் புத்தகம் போட விரும்பும் எழுத்தாளன் என்கிற பதம் வியப்பளிக்கிறது. எழுத்தாளன் ஏன் பதிப்பகத்தைத் தேடிப் போக வேண்டும்? மாணவன் தயாராகிவிட்டால் ஆசிரியர் தானே கிடைப்பார் என்பதைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் எழுத்தில் சரக்கு இருந்தால் நீங்கள் பதிப்பகங்களைத் தேட வேண்டிய அவசியமே இருக்காது. வம்சி, தமிழினி, உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கியத்தரமான புத்தகங்களைப் பதிப்பிக்கிற எத்தனையோ பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வரத்தான் செய்கிறார்கள். இந்த புத்தகக்கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகங்களும் எத்தனை புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறது என்று பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொகுதியை வாசித்த பின் உங்கள் அபிப்ராயம் கொஞ்சம் மாறலாம் என்பது என் எண்ணம்.

Comments

பத்மா said…
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
நண்பனாயினும் சிறந்ததே வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு இல்லை .அது அவர் எழுத்து மேலும் உயர வகை வகுக்கும் .
அதே சமயம் திரு சரவணகார்த்திகேயனின் கருத்தும் சரியென படுகிறது .ஒரு விமர்சனம் எழுத எத்தனை யோசிக்க வேண்டும் ?
பரிசல்காரனின் ஏற்பு அவர் கருத்துக்களை வரவேற்று ஏற்றுகொள்கிறவர் என்று தெரிகிறது
நேர்மையான எழுத்தையும் அதனை சரியான முறையில் எதிர்கொள்ளுதலும் காணும் போது ஒரு நம்பிக்கை வருகிறது .
hats off to both of u.
Ashok D said…
இதையும் சுவாரஸ்யமா எழுதியாச்சு குட் :)

//ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது//

என்னுடைய படைப்பும்(?) எந்த பத்திரிக்கையிலும் வந்ததில்ல.... ஏன்னா நான் அனும்ச்சதில்ல.. ஹிஹிஹி.... அனும்ச்சாலும் அப்டியே பப்ளிஷ் பண்ணிடுவாங்க..அப்டின்னு எல்லாரும் சொல்லறது காதுல கேக்குதுங்கோ...
Thamira said…
பின்னூட்டங்களுக்காக..
Sindhan R said…
ஒரு கருத்துக்கு வர புத்தகத்தைப் படிக்க வேண்டும் ...
This comment has been removed by a blog administrator.
selventhiran said…
தோழர் கார்க்கி அவர்களே, ஒரு உரையாடலின் குறுக்கே பாய்ந்து போகிற போக்கில் உணர்ச்சிகரமான பின்னூட்டங்களைப் போடுவது உங்கள் நட்பைப் பலப்படுத்த உதவலாம். விவாதத்தினை அல்ல!

நர்சிம் எழுத ஆரம்பித்த காலமும் பரிசல் எழுத ஆரம்பித்த காலமும் ஒன்றல்ல.

வம்சி அதற்கு மேல் காமெடி என்கிறீர்கள். புத்தகம் கொணர்வதில் பவா தம்பதியினரின் தியாகமும் இழப்பும் தெரியாதவர்களிடத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி சமர் செய்ய முடியாது.

விவாதிப்பவனை எரிச்சல் படுத்தாத உரையாடலுக்கு நீங்கள் தயாரெனில் இது குறித்து தொடர்ந்து பேசலாம்.
எளிதில் உணர்ச்சிவசப்பட்டு எரிச்சல் அடையும் ஒருவர் , என்னை உணர்ச்சிவசப்படுவதாக சொன்ன பிறகு நான் என்ன பேச? இதோடு அப்பீட் ஆகிக்கிறேன்

வம்சி.. எல்லா புத்தகத்தையும் சொல்லவில்லை. 100 பேரின் கதை என்ற புத்தகத்தில், பக்கங்களையே மாற்றி அச்சடித்திருக்கிறார்கள். அதை தொகுத்தவர்களே 100 கதைகளையும் படிக்கவில்லை. நிரூபிக்க நான் தயார். மின்னஞ்சலில் அனுப்பிய எல்லா கதைகளும் அச்சு தகுதி பெற்றுவிட்டன. அதை சொன்னேன்

ஜெமோவின் புத்தகத்திலும் ஏகப்பட்ட குளறுபடிகள். தஙக்ளுக்கு தெரியவில்லை என்றால் தகவல் தருகிறேன். இது பற்றி மட்டும் மேலதிக உரையாடலுக்கு வருகிறேன். பரிசல் விஷயத்தை விட்டு விடுகிறேன்
selventhiran said…
கார்க்கி, நான் விசாரித்து அறிந்த வகையில் வம்சி 100 பேரின் கதை என்ற ஒரு தொகுப்பையே கொணரவில்லை.

ஜெயமோகனின் புத்தகத்தில் என்ன குளறுபடி என்று சொன்னால் தன்யனாவேன்.
அந்த தொகுதியின் பெயர் மரப்பாச்சியின் சில ஆடைகள்.அது 100 ஆசிரியர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பு. இப்போது விசாரித்து பாருங்கள்.

ஜெயமோகன் அவர்களின் புத்தகத்தை (பெயர் மறந்துவிட்டது) வம்சி வெளியிட்டது. படித்தீர்களா?

(பெயர் சொல்லாமல் படித்தீர்களா என்று கேட்பதாக நினைக்க வேண்டாம். 2010 வம்சி வெளியிட்ட புத்தகம் ஒன்றோ, இரண்டோதான்)
selventhiran said…
கார்க்கி, அடுத்தடுத்து தவறான தகவல்கள். மரப்பாச்சியின் சில ஆடைகள் - நூறு பேர்களது சிறுகதைத் தொகுப்பல்ல. அத்தொகுப்பு மின்னஞ்சல் மூலமாகப் பெறப்பட்டதும் அல்ல. தோழர் ஜா.மாதவராஜ் வலைப்பக்கங்களில் இருந்து வாசித்து தொகுத்தது. அந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன். அதன் பக்கங்கள் கோர்க்கப்பட்டதில் தவறு இருந்ததாக நினைவு இல்லை. மீண்டும் எடுத்து சோதிக்க புத்தகம் கைவசம் இல்லை. இரவல் போய்விட்டது.

ஜெயமோகன் புத்தகம் வம்சியில் இன்னும் வெளியாகவில்லை என்றுதான் தகவல். அதையும் உறுதி செய்ய வேண்டும். செய்கிறேன்.
Rajan said…
//இரவல் போய்விட்டது. //

டோன்ட் லேந்து யுவர் புக்ஸ் !

புத்தகத்தையும் பெண்களையும் யாரிடமாவது விட்டுச் சென்றால் கவரைப் பிரித்து கந்தலாக்கிடுவாங்க !
100 பேர்களின் கவிதையோடு குழம்பிவிட்டேன். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கதைகளுக்கு பதில் கவிதை தொகுப்பு என்று சொல்லியிருந்தால் சரியாகியிருக்கும். மற்றபடி விஷயம் அதுதான்

கதை தொகுப்பில், பக்கங்கள் மாறித்தான் இருக்கின்றன.
// மீண்டும் எடுத்து சோதிக்க புத்தகம் கைவசம் இல்லை. இரவல் போய்விட்டது.//

இரவல் போகும் புத்தகம் தான் பழைய புத்தகக்கடைகளுக்கும் போகிறது.பரணில் இருக்கும் புத்தகம் போவதில்லை.
// நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு அளிக்கின்ற சலுகையை பரிசலுக்கு அளிக்க வேண்டியதில்லை.//

செல்வேந்திரன் இதை கொஞ்சம் விளக்க முடியுமா.ஏன் நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு இந்த சலுகை.அவரது முதல் புத்தகம் என்பதாலா.
ஒரு பதிவருடைய புத்தகத்தை சுற்றறிவிக்கை என்று சொல்லும் போது அதில் நிச்சயம் எல்லா பதிவர்களும் அடங்குவார்கள் என்பது என்னுடைய கருத்து.சரி உங்களுடைய "புத்தகம்" எப்போது வெளி வரும்.
தகவலுக்காக: ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு என்ற ஜெயமோகனின் நூல் வம்சி பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.
//100 பேரின் கதை என்ற புத்தகத்தில், பக்கங்களையே மாற்றி அச்சடித்திருக்கிறார்கள். அதை தொகுத்தவர்களே 100 கதைகளையும் படிக்கவில்லை. நிரூபிக்க நான் தயார். மின்னஞ்சலில் அனுப்பிய எல்லா கதைகளும் அச்சு தகுதி பெற்றுவிட்டன.//

தவறான தகவல் கார்க்கி.
மொத்தக் கதைகள் 17.
என் வலைப்பூவில் கதையை படித்துவிட்டு அதை பயன்படுத்திக்கொள்ளவா என்று மாதவராஜ் கேட்டார்.சரியென்றேன்.
நிரூபிக்க அவர் அனுப்பிய மின்னஞ்சல் என்னிடம் இருக்கிறது நண்பரே. "எல்லா கதைகளும் அச்சு தகுதி பெற்றுவிட்டன" என்று நீங்கள் சொல்வது அவதூறு.

//பக்கங்களையே மாற்றி அச்சடித்திருக்கிறார்கள்//

பக்கங்கள் ஒன்றும் மாறவில்லையே. (இதற்காகவே அனைத்து பக்கத்தையும் புரட்டினேன் :(
என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !
நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி !
அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????
செல்வா, நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது.

பத்திரிக்கைகளின் வீச்சு அதிகம் என்ற போதிலும் ஆயுளும் கம்மி. புத்தகங்கள் அதற்கு vice-versa. அதனால் புத்தகம் போடுகையில் ஒரு எழுத்தாளன் - அதுவும் அனுபவமிக்க எழுத்தாளன் - தர வேண்டிய மரியாதையும், முக்கியத்துவமும், க‌வனமும் நிச்சயம் அதிகமாய்த் தானிருக்க வேண்டும். தவிர, இவ்வளவு எழுதியும் நீங்கள் இன்னமும் புத்த‌கம் போடவில்லை எனும் போது மற்றவர்க்கு நீங்கள் வைக்கும் அளவுகோலையே உங்களுக்கும் வைத்திருக்கிறீர்கள் என்கிற நேர்மையும் புலப்படுகிறது. அதுவே divine ஆன விஷயம்.

மற்றொரு விஷயம், நீங்கள் குறிப்பிடும் பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களால் இருக்கும் தரமான எழுத்தாளர் எல்லோரையும் தேடிப் பிடித்து பதிப்பிக்க முடியும் எனத் தோன்றவில்லை. தமிழில் குறைந்தது ஐயாயிரம் பேர் வலைப்பூக்களில்‌ எழுதுகிறார்கள் (இது தவிர கணிபொறி வசதியின்றி இன்னமும் தாளில் எழுதுபவர்கள் தனி) என்பதனால் தேடுதலில் வரும் சிக்கல் மற்றும் ஒவ்வொரு பதிப்பகமும் பதிப்பிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வரையறை போன்றவை பிரதான காரணங்கள். உங்கள் உதாரணப்படி தயாராகும் எல்லா நல்ல மாணவர்களுக்கும் உடனடியாய் ஆசிரியர்கள் அமைவார்கள் என சொல்ல முடியாது (அங்கும் எண்ணிக்கை விகிதாச்சாரம் தான் பிரச்சனை). அத‌னால் எழுத்தாளனும் தம் பக்க முயற்சிகளை மேற்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் (இதில் குறிக்கிடும் ஈகோ புடலங்காயெல்லாம் தயக்கமின்றித் தூக்கிக் கடாசலாம்).

மற்றப‌டி, பின்னுட்டங்களில் விவாதம் தொடர்பின்றி வேறு திசைகள் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் - தொகுதியை வாசிக்க வாய்ப்பு கிடைக்கும் போது மேற்கொண்டு பேசுகிறேன்.

நன்றி!
selventhiran said…
கார்க்கியின் முதல் பின்னூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து ஆட்சேபங்களும், கடும் கண்டனங்களும் கிளம்பி இருக்கின்றன என்பதனால் தவிர்க்க இயலாத காரணங்களால் அப்பின்னூட்டம் நீக்கப்படுகிறது.
நன்றி செல்வா.

அவர்களை குறை சொல்வதல்ல என் நோக்கம். அச்சு தகுதியைப் பற்றி பேசியபோது இயல்பாய் சமீபத்தில் வெளிவந்த பதிவர்கள் புத்தகம் என்பதாலே அதைக் குறிப்பிட்டேன்.

என்னால் இப்போதும் அந்த 100 பேரின் கவிதைத் தொகுதி தொகுக்கப்பட்டதன் பின்னால் இருக்கும் அலட்சியப் போக்கை நிரூபிக்க முடியும். அதே போல் ஜெ.மோ புத்தகத்தை தவறாக அச்சடிக்கப்பட்டதையும் நிரூபிக்க முடியும். என்னிடம் பகிருந்தவர் நம் இருவருக்கும் தெரிந்தவரே.

நான் சொல்ல வந்தது முதல் தொகுதி வெளியிட்டுருக்கும் ஒருவரை இப்படி கைமா செய்ய வேண்டுமா?நர்சிம்முக்கு தரபப்டும் சலுகையை முதல் தொகுதிக்கும் கொடுத்த்திருக்கலாம். இது அக்கறை என்பதை என்பதை ”என்னால்” ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் பின்னூட்டத்திலே அந்த ”எனக்கு” என்பதை நோட் செய்யும்படி சொல்லியிருந்தேன்.

நான் சொல்லியதில் தவறிருந்தால் மறுப்பு சொல்லலாம். அழித்து விடுவேன் என்பது சரியா எனத் தெரியவில்லை. போகட்டும். இது உங்கள் இடம்.

இறுதியாக மீண்டும் ஒன்றை சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தபட்டவர்கள் பெரிய ஆட்கள். நல்ல பணி செய்து கொண்டிருப்பவர்கள். அவர்களை சிறுமைப்படுத்த நான் நினைக்கவில்லை. அபப்டி செய்வதாக நினைக்கும் பட்சத்தில் மட்டும் இந்த மன்னிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்
நான் பல இடங்களில் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன்.

இந்த வார குமுதமும் ஆ.வியும், அடுத்த வாரம் பழைய பேப்பர் கடையில். ஆனால் புத்தகங்கள் நம் வாழ்வோடு பயணிப்பவை.

இந்த குறிப்பிட்ட புத்தகம் படிச்ச பிறகு, கண்டிப்பாய் என் கருத்தை இங்கு வந்து பதிகிறேன்.
கார்க்கி

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அடுக்கடுக்காக நீங்கள் முன் வைக்கும் அபத்தங்களை பலர் சுட்டியிருந்தாலும் என் பங்கிற்கு நானும் சொல்ல வேண்டியிருப்பதற்கே இப்பின்னூட்டம்.

இந்த வருட புத்தக விழாவினுக்கு வம்சி 38 புத்தகங்களை கொண்டு வந்தது. என்னையும் சேர்த்து பெரும்பாலானோர் அறிமுக எழுத்தாளர்களே. நமது இலக்கிய சூழல் குறித்தோ எழுத்தாளர்கள் குறித்தோ இங்கே நிலவும் அரசியல் குறித்தோ உங்களுக்கு எந்த அளவிற்கு பிரக்ஞை இருக்கும் எனத் தெரியவில்லை. பொதுவாய் சொல்ல வேண்டுமெனில் நம் இலக்கிய சூழல் உங்களின் நெருக்கமான நண்பர்களைப் போல அத்தனை நல்ல விதமாக இல்ல.இதில் எனக்கு தெரிந்து குறைந்த பட்ச நேர்மையும் அன்பும் கொண்டவர்கள்தாம் நீங்கள் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருக்கும் அப்பாவிகள்.

பவா மற்றும் ஷைலஜாவின் வாழ்வு குறித்தோ அல்லது வம்சி குறித்தோ உங்களுக்கு விளக்கப் போவதில்லை ஆனால் எந்த ஆதாரமுமில்லாமல் பொதுவெளியில் உளறுவதை தயவு செய்து நிறுத்துங்கள். உங்கள் நண்பர்களுக்கு நன்றியை/அன்பை காட்ட வேண்டிய விதம்/அனுகுமுறை இதுவல்ல.
This comment has been removed by the author.
மீண்டும் வருவான் பனித்துளி !
@அய்யணார்,
தவறுதான் சகா. திருத்திக் கொள்கிறேன்.
@அய்யணார்,

தங்களின் பின்னூட்டம் வெளிவரும் முன்பே நான் இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி கீழே.

//இறுதியாக மீண்டும் ஒன்றை சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சம்பந்தபட்டவர்கள் பெரிய ஆட்கள். நல்ல பணி செய்து கொண்டிருப்பவர்கள். அவர்களை சிறுமைப்படுத்த நான் நினைக்கவில்லை. அபப்டி செய்வதாக நினைக்கும் பட்சத்தில் மட்டும் இந்த மன்னிப்பை எடுத்துக் கொள்ளுங்க////

என் நோக்கம் அதுவல்ல. தடம் மாறிப் போய்விட்டதை ஏற்கிறேன். ஆனால் தங்களின் விளக்கம் என் நோக்கமே வம்சியை மட்டும் குறிவைப்பது போல் இருப்பதாக தோற்றமளிக்க வைப்பதால் மட்டுமே இந்த விளக்கமும்.

மேலும் என் நட்பை இப்படி காட்ட வேண்டிய நிலையில் நானில்லை. பரிசலும் அதை எதிர்பார்ப்பவர் இல்லை என்பது செல்வாவுக்கும் தெரியும்.

அச்சு தகுதி பற்றி செல்வா சொன்னதால் அந்த 100 பேரின் கவிதை தொகுப்பும், 17 பேரின் சிறுகதை தொகுப்பும் குறித்து ஒப்பீட்டு தற்செயலாய் வந்து அது அந்த பதிப்பகத்தை நோக்கி திருப்பிவிட்டது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை குறை சொல்ல நான் நினைக்கவில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்
அன்பின் செல்வேந்திரன்

அணுகாது விலகாது தீக்காய்தல் போல
வாசிக்கப் பழகவில்லை போல நான் . அய்யனாரின் பின்னூட்டத்தில் இருக்கும் வலி மிகுந்த துயரைத்தருகிறது அறிந்து நேசிக்கும் மனிதர்கள் என்பதால்...

நன்றி
Nat Sriram said…
செல்வேந்திரனிடம் எனக்கு ஒரே கேள்வி தான். "print worthy" என்பதற்கு எது அளவுகோல்? ஒவ்வொருவரின் தர மதிப்பீடு, ரசனை அளவு வேறல்லவா? ரமணி சந்திரன் 'பெஸ்ட் செல்லராக' உள்ள நாடு இது. உங்கள் புத்தகத்தை ஒரு 50 பேரு குப்பை என்றால், உங்கள் புத்தகங்களை கடைகளில் இருந்து recall செய்யவா போகிறீர்கள்?
வெயிலான் கிட்ட அய்யனார் கம்மாக்களைக் கொடுத்து நண்பர்கள் கிட்ட கொடுத்துடுங்கன்னு சொன்னா அவரு நேரப் போய் பழைய பேப்பர் கடைல போட்டாரா.. மிஸ்டர் வெயிலான் சென்னைக்கு வந்தா கால் பண்ணவும்..;););)
/புத்தகம் வெளியிடும்போது அங்கீகாரமும் கவன ஈர்ப்பும் கிடைக்க முதலில் அப்புத்தகம் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்பட்டு - இன்னொரு எழுத்தாளனால் பெற்றுக்கொள்ளப்பட்டு - மற்றொரு எழுத்தாளனால் அறிமுகப்படுத்தப்பட்டு - பிறிதொரு எழுத்தாளனால் விமர்சிக்கப்பட்டு – சக எழுத்தாளர்களால் வாசிக்கப்படுவதனால் கிடைக்குமேயன்றி சினிமாக்காரர்களின் திருக்கரங்களால் வெளியிடப்படுவதால் அல்ல.//

சினிமாக்காரர்கள் எழுத்தாள்ர்கள் இல்லையா..? யார் சொன்னது.. திரைக்கதை, வசனம் எழுதுபவரை நாஙக்ள் எழுத்தாளர் என்றுதான் அழைக்கிறோம். வேண்டுமென்றால். அவர்களை குறிப்பிட்ட துறையுடன் சேர்த்து திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா என்று கூப்பிடுகிறோம். சினிமாவில் இருப்பதால் மட்டுமே அவர்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள்.இல்லை. என்பதை தெரிவித்து கொள்ள விழைகிறேன்.
பேசியதெல்லாம், பின்னூட்டம்தான்..!
(சொந்தக்கதை தவிர்த்து) :)
butterfly Surya said…
ஆரோக்ய்மாக தொடரட்டும்.