Thursday, December 25, 2008

'பச்சப்' புரட்சி
டாஸ்மாக் குறித்து எழுத கொஞ்சம் உழைப்பு தேவைப்பட்டது. கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஊராக இருக்கட்டும் என விளாத்திகுளம் என்கிற தெக்கத்தி டவுணைத் தெரிவு செய்தேன். அந்தச் சிறிய ஊரில் நான்கு டாஸ்மாக் கடைகள். இப்போது மீண்டும் குழப்பம். நான்கில் எதைத் தேர்வு செய்வது? அளவில் சிறியதும் ஊரை விட்டுத் தொலைவில் இருப்பதுமான ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தேன். கடை எண் 10121.

அக்கடை திறந்த நாளன்று ரூ.5,000/-ற்கு வியாபாரம் ஆகியுள்ளது. தற்போது வாரநாட்களில் சராசரியாக ரூ.45,000/-மும், சனிக்கிழமையன்று ரூ.50,000/-மும் ஞாயிறன்று ரூ.60,000/-க்கும் குறையாமல் வியாபாரம் ஆகிறதாம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனை சில பல லட்சங்களைத் தொட்டு நிற்கிறதாம். எப்படி இந்த அசாத்திய வளர்ச்சி சாத்தியம்?! என அதன் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களான கடை ஊழியர்களைக் கேட்டேன்.

மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என்று குடித்துக்கொண்டிருந்த தேசாபிமானிகள் அங்கங்கு கடை திறந்துவிட்ட அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டாமேயென தினசரிக் குடியர்களாகி இருக்கிறார்கள். முன்னெப்போதும் இருந்ததை விட குடிப்பது ஒரு தகுதி என்ற எண்ணம் 15 முதல் 18 வயதுள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாங்கிளாஸ் பையன்கள் கடைவாசலில் பழரசம் குடிப்பது போல ஓரே டேக்கில் பீரைச் சாத்துகிறார்கள். புகையிலை, பான்பராக், சுருட்டு போன்றவற்றை மட்டுமே உபயோகிப்படுத்தி வந்த விளிம்பு நிலைப் பெண்களும் (மலம் அள்ளுபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், நரிக்குறவர்கள்) குடிக்கத் துவங்கி இருக்கிறார்கள். எங்கேயும் எப்போதும் நியாய விலையில் கிடைப்பதே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணம் என்றார்கள். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.

தமிழகத்தின் தெற்கு மூலையில் இருக்கிற சிற்றூரின் மிகச் சிறிய கடையில் சேகரித்த விபரங்கள் இவை. இதுவே இப்படி என்றால், பெருநகரங்களில் தெருவுக்கு ஒரு கடை இருக்கிறதே அங்கெல்லாம் விற்பனை எப்படி கொடி கட்டிப் பறக்கும் என்பதையும், எத்தனனக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கும் என்பதையும் உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

'குழந்தையின் வருமானம்; குடும்பத்தின் அவமானம்' என்று ஊர் முழுக்க எழுதி வைக்கும் மானம் கெட்ட அரசு மக்களை குடிகாரர்களாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு பிணம் தின்னி நாய் போல அலைகிறது. தண்ணீர் இல்லை, பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை என்று எத்தனையோ இல்லைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து எந்த டாஸ்மாக் கடையிலும் சாராயம் இல்லை என்ற தகவல் மட்டும் வந்ததே இல்லை.

இத்துடன் டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் லிங்கை இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் இத்தனைக் கட்டுக்கோப்பாக விற்பனை வளர்ச்சிக்கென்று பாடுபடும் வேறு ஏதாவது அரசுத்துறை இருக்கிறதா என்று சொல்லுங்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து சாராயம் விற்பது என்பது எத்தனைச் சிறப்பானது. அது சரி தமிழில் அப்பணியை 'குடி'மைப் பணி என்றுதானே சொல்கிறார்கள்.

ராமதாஸ் படைதிரட்டிக்கொண்டு போய் கேட்டதால் பெரிய மனது பண்ணி ஒரு மணி நேரம் விற்பனையைக் குறைத்திருக்கிறார். பாவம் அவருக்கு ஏழாயிரம் கோடி வருவாயும் தேவைப்படுகிறது, வர இருக்கிற தேர்தல்களுக்கு ராமதாஸூம் தேவைப்படுகிறது.

Tuesday, December 23, 2008

பஸ்ஸூக்குக் காத்திருந்தேன்'நிற்கத் தடுமாறுகிற
பெண்களின்
இடுப்புச் சதை பார்த்து
மூளை எச்சில் விழுங்கும் - என்ற கவிதைதான் 'கவிதை என்பது நான் எழுதிக்கொண்டிருப்பது அல்ல. அஃது வேறொன்று' எனக்குப் புரியவைத்தது. கலாப்ரியாவை நோக்கி என்னை இழுத்து வந்தது.
வெகுஜனப்பத்திரிகைகளில் கலாப்ரியாவின் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். நடப்பு இதழ் 'கல்கி'யில் வெளியான ஒரு கவிதை என்னை ஈர்த்தது.

ஒரு குறும்பாவுக்கான
குளிர்ந்த
படிமங்களுடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருப்பவன்
தலையில்
சூடாய் எச்சமிடும்
ஏதோ ஒரு பறவை.

***

"Don't say 'yes' when you want to say 'no' - இது நான் நண்பர்களிடத்திலும், சக ஊழியர்களிடத்திலும் அடிக்கடிச் சொல்லும் வாசகம். இப்படிச் சொன்னாலே பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த இதழ் குமுதத்தில் டாக்டர் ஷாலினி மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க கொடுத்த யோசனைகளில் ஒன்று "Don't say 'yes' when you want to say 'no'. நாங்கள்லாம்.....

***

அவள் விகடனில் ச. தமிழ்ச்செல்வனின் பேட்டி போன்றதொரு கண்றாவி வந்திருந்தது. அதில் 'ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' என்ற புத்தகத்தை எழுதியவர் என்றொரு அறிமுகம் வேறு. விட்டால் 'செட்டிநாட்டு முட்டைத் தோசைகள்' எழுதியவர் என்று சமையல்குறிப்பு எழுத்தாளனாய் ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது. அவர் எழுதியது 'ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது' என்ற நூல். அது சமையல் குறிப்பு நூல் அல்ல என்பதை குறைந்தபட்சம் இந்த இணைப்பைப் படித்தாவது தெரிந்து கொள்ளட்டும்.

***

வர வர சாருவுக்கும் முனை மழுங்கிப் போய்விட்டதோ என்றதொரு ஐயம் அவரது சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் தோன்றுகிறது. முன்னெல்லாம் தமிழ்ச் சினிமாக்களை மானாங்கன்னியாகக் கிழித்துக்கொண்டிருந்தவர் வாரணம் ஆயிரத்தையெல்லாம் சிலாகிக்க ஆரம்பித்திருக்கிறார் (உயிர்மை - டிசம்பர்) அவரது விமர்சனங்களுக்குப் பின் இருக்கும் அரசியல் குறித்த எனது சந்தேகங்களை எழுதினால் 'அம்பலத்தில் நிறுத்தி அன் - டிராயரைக் கழற்றிவிடுவார்' என்ற பயம் இருப்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

***

ஐ வில் டூ இட் அகெய்ன்

தன் தேசம் கண் முன்னே சூறையாடப்படுவதைக் காணப்பொறுக்காத ஒரு இருபத்தொன்பது வயது இளைஞனின் எதிர்வினையாகத்தான் புஷ்ஷின் மீது ஷூ ஏறியப்பட்ட சம்பவத்தைக் கருதுகிறேன். வரலாறு தன்னை மாவீரனென்று பதிவு செய்யும் என்றோ, ஓரே நாளில் உலகப்புகழ் அடைந்துவிடலாம் என்றோ நிச்சயம் அவர் இதைச் செய்திருக்க மாட்டார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு அல்-ஜெய்தி நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரது கரங்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. அவரது வலது காது சிகரெட் நெருப்பினால் பொசுக்கப்பட்டிருக்கிறது. பற்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது. வெற்றுத் தரையில் படுத்திருக்கும் அவர் மீது குளிர்ந்த நீர் கொட்டப்படுகிறது. இதெல்லாம் சிறையில் அவரைச் சந்தித்துவிட்டு வந்த அவரது சகோதரர் ஊடகத்திற்குச் சொன்னவை. மேலும் இவ்வழக்கில் அல்-ஜெய்திகு ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்றும் தெரியவருகிறது.

நடந்து சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தும், ஒரு தீவிரவாதியின் தூண்டுதலில்தான் தாம் அப்படிச் செய்ததாகவும் அல்-ஜெய்தி கடிதம் எழுதி இருப்பதாக 'யுனைட்டட் ஸ்டேட் ஆஃப் ஈராக் அரசாங்கம்' தெரிவித்திருக்கிறது. ஆனால், சிறைக்கு வந்த சகோதரரிடம் உறுதியாக அதை மறுத்த அல்-ஜெய்தி , இந்த உலகத்திற்கு ஒரு செய்தியும் சொல்லி அனுப்பி இருக்கிறார். அது "மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் 'ஐ வில் டூ இட் அகெய்ன்' "

இந்தச் செய்தியைப் படித்ததும்,

வீடு இல்லை
பணம் இல்லை
பால் இல்லை
தேன் இல்லை
ஆனால்...
இந்த நிலம் எங்களுடையது
கடலோடிப் போங்கள்
இந்த நிலம் எங்களுடையது
- என்ற பெஞ்சமின் ஸஃபானியாவின் கவிதை (சுதந்திரம்) நினைவுக்கு வந்தது.

தன் காலணி நாடு ஒன்றிலிருந்து புதிய காலணிகளோடு நாடு திரும்பிய புஷ் 'ஈராக்கியர்கள் ஷூ அணிய தடை' என்று இன்னும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. ஒருவேளை ஓபாமா சொல்வார் என்று விட்டிருப்பாரோ?!

Monday, December 22, 2008

மன்னியுங்கள்

இன்றோடு இந்த விடுதியறை ஏகி நான்காண்டுகள் ஆகிறது. நேற்றுத்தான் வந்தது போல் இருக்கிறது. ஓரே அறை. ஓரே நபரோடுதான் பகிர்வும் கூட. புதுமைப்பித்தன் துவங்கி பவுத்த அய்யனார்வரை வறண்ட மேன்சன் வாழ்க்கைக் குறித்து கழிவிரக்கம் பொங்க எத்தனையோ படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், இந்த விடுதியறை வாழ்க்கை குறித்து என்னிடம் யாதொரு புகாரும் இல்லை. இந்த அறை எனக்கு சொர்க்கம். இங்குதான் மிகுந்த பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உணருகிறேன். இதைவிட்டு வெளியேற வேண்டிய நாள் ஒருபோதும் வரவேண்டாம் என பிரார்த்திக்கிறேன்.

இத்தனை நாட்களில் என் அறை நண்பரோடு எனக்கு கடுகளவு மனஸ்தாபம்கூட வந்ததில்லை. சின்ன உரத்தக்குரல் உரையாடல் கூட இருந்ததில்லை. பிரம்மாண்ட அமைதியும் நற்குணங்களையும் படைத்த அவர் எனது அழிச்சாட்டியங்களைத் தாயன்போடு பொறுத்துக்கொண்டு என்னோடு வசிக்கிறார்.

எங்களிருவரையும் பார்த்து இந்த ராம்நகரே வியக்கிறது. என்ன ரகசியம் என்று கேட்கிறது. ஓரே பதில் "எங்களுக்குள் அர்த்தமுள்ள மவுனங்கள் நிறைந்திருக்கிறது. அதை அசிங்கமான வார்த்தைகளைக் கொண்டு அநாவசியமாகக் கலைப்பதில்லை"

ஆனாலும் இந்த நான்காண்டுகளில் ஒருமுறைக் கூட நான் இந்த அறையை சுத்தம் செய்ததில்லை. தண்ணீர் பிடித்து வைத்ததில்லை. உறங்கும் முன் விளக்கை, டி.வியை அணைத்ததாக நினைவு இல்லை. நள்ளிரவில் எனது கைப்பேசி அலறாத நாளில்லை, அவரது கட்டிலில் எனது உள்ளாடைகள் கிடக்காத நாளில்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். இந்தக் கட்டுரையை எழுதும் இக்கணத்தில் என் நடவடிக்கைகள் எனக்கு பெருத்த வெட்கத்தை ஏற்படுத்துகிறது. "என் இனிய விடுதியறை நண்பனே என்னை மன்னித்துக்கொள்"
***
என்னதான் நான் ஒரண்டை இழுத்துத் திரிந்தாலும், இணையவெளியில் சிண்டைப் பிடித்து இழுத்தாலும் தனிப்பட்ட பழக்கத்திற்கு அற்புதமான மனிதர் லதானந்த்.மலையை விட்டு இறங்கும்போது எளியேன் என்னையும் அன்போடு மறக்காமல் அழைத்துவிடுவார். கடந்த சனிக்கிழமை கோவை வந்திருந்தார். ஞாயிறு மாலை ஆட்டத்திற்கு சினிமாவிற்குப் போகலாம் என்றழைத்திருந்தார். நானும் வருவதாக உறுதியளித்திருந்தேன். ஆனாலும் தூக்கமின்மை காரணமாக எனக்குள் உறைந்திருந்த நூற்றாண்டு உறக்கத்திற்கு பலியாகிவிட்டேன். பலமுறை தொலைபேசியில் அவர் அழைத்ததுகூடத் தெரியாத மரணத்தூக்கம். விழித்ததும் மிகவும் வெட்கமாகிவிட்டது. பகிரங்கமாய் அவரிடம் ஒரு மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
***
கேண்டிக்கும் எனக்கும் பொதுவான எகிப்திய நண்பன் 'சுகி'. கோவையில் ஒரு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவத்தில் உயர்கல்வி பயின்று வருகிறான். இருபத்தைந்து வயதிற்குள் பல நாடுகளில் கல்விக்காக வாழ்ந்த அனுபவமுடையவன். சுதந்திரமான சிந்தனையை உடையவன். அமெரிக்கா குறித்தும் பொதுப்புத்தியில் உறைந்துவிட்ட இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிம்பங்களைக் குறித்தும் ஆணித்தரமாக அற்புதமான ஆங்கிலத்தில் விவாதிப்பான். எகிப்திய உணவுவகைகளைப் பிரமாதமாக சமைப்பான். தமிழ் சினிமாப் பாடல்களை விசித்திரமான குரல்களில் விதம்விதமான மெட்டுக்களில் பாடிக் காண்பிப்பான். ஞாயிறு மதியம் என்னையும் கேண்டியையும் தனது அறைக்கு விருந்திற்கு அழைத்திருந்தான். தூக்கத்தினால் அவர்கள் இருவரையும் ஏமாற்றமடைய வைத்துவிட்டேன். அவர்களும் என்னை மன்னிப்பாராக.
***

Monday, December 15, 2008

டெஸ்டிமோனியல்

ஆர்க்குட்டில் அத்துவிட்டது மாதிரி நான் திரிந்த காலத்தில் எழுதிய டெஸ்டிமோனியல்களில் சில...

யுவராஜ் (மென்பொருளாளர்)

புவன ராஜா (வெல்க தமிழ்!) பிறந்த ஊரைக் கேட்டா தமிழ்நாடே அதிரும். அவர் நமீதா, ஸ்ரேயா, நயன்தாரா, த்ரிஷா போன்றவர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ஆல்பத்தில் போடவில்லை என்பதிலிருந்தே அவரது பெருந்தன்மையை புரிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் நாள் ஹைதரபாத்தில் இருந்திருந்தால் நிஜாம் ஆகியிருப்பார்.

ஜனனி (விளம்பர மாடல்)

கண்களால் சிரிக்கிறாய்
இதயத்தால் பேசுகிறாய்
புன்னகையால் வருடுகிறாய்
பொய் சொன்னால்
நம்பித் தொலைக்கிறாய் :)

சி. முருகேஷ் பாபு (பத்திரிகையாளர்)

கனிவான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்ந்துவிடலாமென நினைக்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் இனிய மனிதர். பால்யத்தின் நினைவுகளைத் தூண்டும் அற்புத சிறுகதைகள், கவிதைகளுக்குச் சொந்தக்காரர். எழுத்தைத் தவிர உபதொழிலாக செய்வது பிறரை உற்சாகப்படுத்துவது. சமீப காலமாக ரொம்ப 'நாணயமானவராகவும்' இருக்கிறார். (பின்குறிப்பு: டெஸ்டிமோனியலுக்காக தாங்கள் மணியார்டரில் அனுப்பிய தொகை ரூபாய் நூறு போதுமானதாக இல்லை. ஒரு ஐம்பது ரூபாய் சேர்த்து அனுப்பியிருக்கலாம்)

தி. விஜய் (புகைப்படக் கலைஞன்)

தம்பி விஜய்க்கு இன்னும் ஏன் டெஸ்டிமோனியல் எழுதவில்லையென்று கேள்வி கேட்டு உலகெங்கிலுமிருந்து பல ஸ்க்ராப்புகள் வந்துகொண்டிருப்பது நீங்களனைவரும் அறிந்ததே! சிறிய டெஸ்டிமோனியலில் அடங்கி விடுவதல்ல அவரது புகழ். அவருடைய புகழை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதிவைத்துவிட்டு அதன் பக்கத்திலேயே அவரை உட்கார வைப்பதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும்.

ஜீவிகா (எனது தங்கை)

ஜீவி எனது ஓரே அருமைத் தங்கை. அமைதியான பெண். எங்கள் குடும்பத்தின் குலவிளக்கு. அத்தனை வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்பவள். சமையலில் நளபாகம். ரங்கோலி, எம்ப்ராய்டரி, இண்டிரியர் என எதைச் செய்தாலும் கலைநயத்தோடு செய்வாள். மிகவும் கலகலப்பாகவும், பழக எளிமையானவளாகவும் இருக்கும் எனது சகோதரிக்கு டெஸ்டிமோனியல் எழுதுவதில் இருக்கும் ஒரே சிரமம் அடுத்தடுத்து பல பொய்களை சொல்ல வேண்டி இருப்பதுதான்..... ஸ்...ஸ்.... அப்பாடா...முடியலம்மா... ஜீவி...

கேண்டி (தோழி)

1) எத்தனவாட்டிதான் ஒனக்கு டெஸ்டிமோனியல் எழுதுறது.... ஒன்னோட இம்சை தாங்கமுடியாம... நீ தூங்கிட்டியான்னு ஒங்க அம்மாச்சிகிட்ட போன் பண்ணி கேட்டுட்டுதான் குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்புவாங்கன்றத டெஸ்டிமோனியல்ல எழுதினா நீ கோபப்படுவியா என்ன?!

2) இவள்புகழைப் பாட
மொழிக்குப் போதியவலிமை இல்லை...
வயலின் கொடுங்கள்
வாசித்துக் காட்டுகிறேன்...

- எழுத ஒன்றும் கிடைக்கவில்லை என்பதை பகிரங்கமாக ஓப்புக்கொள்ளும் உத்தமஜாதி எழுத்தாளன்

Sunday, December 14, 2008

காலம் கடந்த கேவல்

'சுஜாதா எக்ஸ்பைர்டு' என தோழியிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தபோது நேரம் இரவு பத்தரையை தாண்டி இருந்தது. 'எக்ஸ்பைர்டு' என்றால் காலாவதியாகிவிட்டது என்று பொருளா அல்லது காலத்தைக் கடந்து விட்டது என்று பொருளா என்ற குழப்பம் ஒருபுறமிருக்க, மரணமெனும் பெருஞ்செய்தியைக் கூட காலம் 'குறுஞ்செய்தி'யாகக் குறுக்கி விட்டதை பார்த்தீர்களா?!
இந்த செய்தியை உறுதி செய்துகொண்ட பின்னரே வேறு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தேன் நான். எனக்குத் தெரிந்த ஓரிரு எழுத்தாள நண்பர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்து விசாரித்தால் யாருக்கும் உறுதியான தகவலில்லை. பல பேருக்கு அகாலத்தில் எழவு சொன்ன பெருமையோடும், சுஜாதா குறித்த சிந்தனைகளோடும் படுக்கையில் சாய்ந்த வேளையில் கணபதி சுப்ரமண்யம் அழைத்தார். பின்னனியில் ஒலிக்கும் பிரிண்டிங் மிஷின் இரைச்சலைத் தாண்டியும் அவரது கேவல் சத்தமாய் இருந்தது. அவரை ஒருவழியாய் சமாளித்து முடிக்கையில் தொடர்ந்து ஜல்லிபட்டி பழனிசாமி, பிரசாத், விஸ்வம், ஜெயராஜ் என தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எப்படி மரித்தார்? எப்போது மரித்தார்? எப்போது அடக்கம்? போன்ற கேள்விகள் மறுநாள் காலைவரை என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தது. இறப்பதற்கு முன் சுஜாதா என்னைத் தன் இலக்கிய வாரிசாக அறிவித்துவிட்டாரோ என்ற இயல்பான சந்தேகம் எழுந்து அடங்கியது.
அவருக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு வரலாமென மாணிக்கம் அழைத்தபோது உறுதியாக மறுத்து விட்டேன். நல்ல வாசகன் எழுத்தாளனை ஒருபோதும் தேடி வருவதில்லை என்ற வரிகளை வாசித்த எவரால்தான் போக முடியும்?!
தீர்க்கதரிசனம் என்கின்ற வார்த்தை பகுத்தறிவிற்கு முரணானதுதான் என்றபோதும் சுஜாதாவின் கட்டுரைகளை அவர் எழுதிய காலம் தாண்டி வாசிக்கையில், இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், சினிமா குறித்த அவரது அவதானிப்புகள் அனைத்தும் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருவதைப் பார்க்கையில் அவர் எதிர்காலத்தைக் கூறும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாரோ என்ற எண்ணம் வருகிறது.
எழுத துவங்கும் அல்லது எழுதப் பழகும் எவருக்கும் தன் அபிமான எழுத்தாளன் தனது எழுத்தை ரசிப்பானா என்கிற வினா ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே வந்துவிழும். அந்த வகையில் எனது எழுத்தாசானாகவும், ஆதர்சமாகவும் விளங்கிய சுஜாதாவை அசத்திவிடும் சிறந்த படைப்போடு வெளிவரவேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் இருந்து வந்தது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட எழுத்தாளனில் ஒருவனாக அறியப்படவேண்டும் என்ற எனது தீராதவேட்கை அவரது மரணத்தின் மூலம் ஒருபோதும் நிகழாத ஒன்றாகி விட்டது.
சுஜாதா எழுத்தாளர்களை உருவாக்குபவராக இருந்தார். அவரது எழுத்தில் இருந்த எளிமை எவரையும் எழுதத் துண்டுவதாக இருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்களில் துவங்கி கற்றதும் பெற்றதும்வரை அவர் தனது அன்றாடங்களையும் அனுபவங்களையும் பத்திகளாக்கியது பெரும் வாசகப் பரப்பை ஈர்த்தது. இதுமாதிரியான அனுபவ கட்டுரைகளை, டைரி குறிப்பு போன்ற பதிவுகளை எழுதும் ஆயிரமாயிரம் பதிவர்களை உருவாக்கியது. அவரது பாதிப்பு இல்லாத பதிவர்களே இல்லை என்பது எனது அபிப்ராயம்.
பின்குறிப்பு:
டைம்ஸ் இன்று - தீபாவளி மலரை நண்பர் சுப்ரமணியம் நேற்று பரிசளித்தார். அதில் சிறப்புப் பகுதியாக 'சுஜாதா - சொல்லில் ஒளிரும் சுடர்' என்ற பகுதி மனுஷ்யபுத்திரனால் தொகுக்கப்பட்டு இருந்தது. அவரது எழுத்துக்களைப் போலவே நினைவுகளையும் ஓரே மூச்சில் படித்து முடித்ததனால் ஏற்பட்ட காலம் கடந்த கேவல் இது.

Saturday, December 13, 2008

கடுதாசிகள்

சந்தியா,
மிக நீண்ட நாட்களுக்குப் பின் என் அன்றாடக் கவலைகளை மறந்து இருந்தேன். ஒரு குழந்தையின் குதுகலத்தை எனக்குப் பரிசளித்தாய். என் இனிய தங்கையே கள்ளங்கபடமற்ற உன் அன்பில் அகம் மகிழ்கிறேன்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
அன்பின் அண்ணா,
பரிசல்காரன் பதிவில் இடம்பெற்ற உங்களது புகைப்படங்களைப் பார்த்தேன். டி-சர்ட் அணிந்து, முகச்சவரம் செய்து அழகாக இருக்கிறீர்கள். வி. செந்தில் குமாருக்கு பத்து நிமிடத்திற்கு முன்பு பிறந்த அண்ணனைப் போன்றதொரு இளமையான தோற்றம். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
பி.கு:
நீங்கள் என்னை அடிக்கடி அழைத்துப் பேசாவிட்டாலும் நண்பர்கள் புடைசூழ உங்கள் நாட்கள் கழிவதில் மகிழ்கிறேன்.
***
அன்புள்ள அண்ணனுக்கு,
காலம் ஒரு பெரும் அலையைப் போல என்னிடத்தில் அன்பானவர்களிடத்திலிருந்து என்னைப் பிரித்துப்போட்டு விட்டது. முன் ஜாமத்தில் துவங்கி நள்ளிரவில் முடியும் நெடிய நாட்களை கடப்பது தினமும் ஒரு வாழ்கை வாழ்ந்து முடிந்த அயற்சியை அளிக்கிறது. ஆனபோதும், ஆனபோதும் புதிய திசையில் பயணிப்பதும் புதிய மனிதர்களைக் கொண்டாடுவதும் மீண்டும் ஒரு நாள் வாழ்வதற்கான ஆசையைத் தருகிறது.
உங்களை அழைத்து பேசாமல் இருந்துவிட்டது மெல்லிய வெட்கம் அளிக்கிறது. தம்பியின் இந்தப் பிழையைப் பொறுத்து எப்போதும் போல் என் மேல் அன்பாய் இருப்பீராக!
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
பெண்ணேஸ்வரன் குறித்த தங்களது பதிவைப் படித்தேன். இன்றும் பெண்ணேஸ்வரன் டெல்லிக்கு வரும் தமிழிலக்கியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்பவராகவே இருக்கிறார். டெல்லி என்றாலே பெண்ணேஸ்வரனின் முகமே நினைவுக்கு வருகிறது. அவரது வடக்கு வாசல் இதழும் பெருத்த பொருளாதார நஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் இடையே தொடர்ந்து நடத்தும் அவரது பிடிவாதமும் பிரமிக்க வைக்கிறது.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
***
கிரா டேலி என்கின்ற எனதருமை கிரா,
இதை நான் அதிசயம் என்றுதான் கொண்டாட இருக்கிறேன். கம்யூட்டர் கிட்டத்தட்ட ஒரு கடவுள் என்ற எனது எண்ணம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது கிரா... ஏழு ஆண்டுகளுக்கு முன் தொலைத்துவிட்ட மூன்று நண்பர்களை தேடித் தந்திருக்கும் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் எத்தனை நன்றிகளை சொன்னாலும் குறைவுதானே.
போர்களற்ற உலகம், சமாதான சகவாழ்வு, அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற கொள்கைகளில் மிக்க உறுதியும், அமைதியின் மீது தீராத நம்பிக்கையும் உடைய ஒரு சகதனிமனிதனாக உங்களது முயற்சியும், இயக்க பணிகளும் அர்ப்பணிப்பு உணர்வும் எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது.
செல்வேந்திரன் என்ற ஒற்றைப்பெயரைக் கொண்டு என்னை நினைவு கொண்ட உனது ஞாபகசக்தியும் அன்பும் பிரமிக்க வைக்கிறது. என்னுடைய யூனிவர்சிட்டி தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகள் தமிழ்நாட்டின் முன்னனி பத்திரிகை ஒன்றின் விற்பனை பிரிவில் பணியில் சேர்ந்தேன். பணி விற்பனை தொடர்பானது என்ற போதும் எழுத்தின் மீதும் படைப்பிலக்கியத்தின் மீதும் உள்ள ஆர்வத்தால் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என சமூக அக்கறை மிளிரும் எழுத்துக்களை எழுதி கொஞ்சம் புகழடைந்தேன். தற்போது தி ஹிந்து என இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகி வரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் விற்பனைப் பிரிவு அதிகாரியாக பணியில் இருக்கிறேன். நன்றாக சம்பாதிக்கிறேன். இப்போதும் அலுவல் தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாடும் பொழுதுகளில் உங்களோடு பேசும்போது நான் நிகழ்த்தும் மொழிக்கொலைகள் நினைவுக்கு வந்து சிரிப்பூட்டும்.
உண்மையில் என்னோடு பழகிய தினங்களுக்காவும், எனக்கு நீங்கள் செய்த உதவிகளுக்கும் காட்டிய அன்பிற்கும் என்றென்றும் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் கிரா... தாமஸோடும், ஆரோனுடனும், உன்னுடனும் மெனோவுடனும் பழகிய அற்புத தினங்களை எப்படித்தான் ஒருவன் மறக்க இயலும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கிரிக்கெட் மைதானங்கள், கோவில்கள் (நீ அந்த தீ மிதி விழாவை மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். அன்றிரவு பீட்டர் குடும்பத்தார் நிகழ்த்தியவற்றையும் சேர்த்து) நூலகங்கள், எனது வீடு (தீப்பெட்டிக் கம்பெனி) என எதையும் நீ மறந்திருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். இன்றளவும் நீ பரிசளித்து விட்டுச் சென்ற புத்தகங்களையும் என்னுடைய ஒவ்வொரு இடப்பெயர்ச்சியிலும் என்னோடு எடுத்துச் சென்றுதான் வருகிறேன்.
புஷ்ஷின் கொடிய கரங்கள் இந்தியாவிலும் நீண்டு கொண்டுதானிருக்கிறது. ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக் கொண்டு அணுசக்தி ஓப்பந்தத்தை இந்தியாவுடன் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார். பணவீக்கம், தானியத் தட்டுப்பாடு, வறுமை என தேசம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆள்பவர்களோ யாதொரு கவலையுமின்றி அணு சக்தி ஓப்பந்தத்திற்கு மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.
நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையத்தில் தொடந்து எழுதி வருகிறேன். அநேகம் பேர் விரும்பி படித்து வருகிறார்கள். பிராந்திய மொழியில் இருப்பதால் அவற்றை உங்களால் படிக்க இயலாதுதான். இன்று உங்கள் இயக்கம் குறித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்ன எழுதுவது என்ற இனம் புரியாத நிலையில் ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறேன். தாமஸின் மெயில் ஐடியையும் தெரியப்படுத்தவும். அவன் எனக்கு சூட்டிய 'ஸ்லிக் ரிக்' என்ற பெயரைத்தான் இன்னமும் என் நண்பர்கள் உபயோகப்படுத்தி என்னை அழைக்கிறார்கள். அதனைக் கொஞ்சம் விளக்கவும். ஆரோன் அநேகமாக கனடாவின் சிறந்த 'சீஸ் கட்டராக' மாறி இருப்பான் என்று நம்புகிறேன். அடிக்கடி பரஸ்பரம் தொடர்பு கொள்வோம் கிரா...
வாழ்த்துக்களுடன்,
செல்வேந்திரன்.
(மீனா, இக்கடிதத்தையும் வழக்கம்போல் உன் வளமிக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாயாக...)
***
ப்ரியமுள்ள மீனாவுக்கு,
இதை மாற்றிக்கொடு, அதை மாற்றிக்கொடு என்று உன்னைப் பணிப்பதற்கு வருத்தமாகவும் மெல்லிய அவமானமாகவும் இருக்கிறது. ஒருவரைப் பணிப்பதே குரூர வன்முறை என்கிறார் ஓஷோ. அந்த வகையில் அருமைத் தங்கையை விடாது துன்புறுத்துகிறேனோ என்ற கவலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் உன்னை சிரமப்படுத்துவதற்கு வருந்துகிறேன். தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக தடியங்காய் அல்வா வாங்கி வருகிறேன் :)
ஒரு சேஞ்சுக்கு செண்டிமெண்ட் ரோல் பண்ணலாம்னு பாத்தேன். முடியல.... :)
அன்புடன்,
அண்ணன்.
***
அன்பு நண்பன் சுஜித்திற்கு,
உனக்கு கடிதம் எழுதுவதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் என்ன சமாதானம் சொன்னாலும் அதில் எனக்கே உடன்பாடு இல்லை. பொதுவாக நண்பர்கள் ஏதாவது உதவி கேட்டால் உடனே ஓடிச் செய்பவனாகத்தான் பால்யம் தொட்டு இருந்து வருகிறேன். ஆனால் அகலத் திறந்த வாயோடு எனை முழுங்கும் என் அன்றாடத்தில் உறவுகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் பெரும் கெட்ட பெயரை பெற்று வருகிறேன்.
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.
என்ற வரிகள் வெறுமனே பிளாக்கில் எழுதிய வெற்று வரிகள் அல்ல. எனது அன்றாடம் இப்படித்தான் இருக்கிறது. தவிரவும் என்னை கோவை, கேரளா என்று பந்தாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
உன் தங்கைக்கான வரனை பல முறை நீ நினைவுப்படுத்தியும் விசாரிக்க இயலாத என் கையாலாகாத தனத்தை எண்ணி வெட்கமுறுகிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். வேண்டுமென்றே உதாசீனப்படுத்தி விட்டேன் என்று மட்டும் தயவு செய்து தவறாக நினைத்து விட வேண்டாம். எனேனில், உதாசீனம் நான் அறியாதது...
மிக்க வருத்தத்துடன்,
செல்வேந்திரன்.

Friday, December 5, 2008

கண்ட்ரோல் சியும், கண்ட்ரோல் வியும்

பிடிக்கிறதோ இல்லையோ மீடியாவில் இருப்பதால் 'அப்டேட்' செய்து கொள்ள குமுதம் மாதிரியான இதழ்களைப் படித்துதான் ஆகவேண்டி இருக்கிறது. அரசு பதில்களை தவிர்த்து வேறு எதுவும் தேறாது. எப்போதாவது தளவாய் அண்ணன் இலக்கியவாதிகள், கலைஞர்கள் யாரையாவது நேர்காணல் செய்திருப்பார். மிச்சதெல்லாம் மிகுந்த எரிச்சல் ஏற்படுத்தும் பகுதிகளும் பக்கங்களும்தான். நடப்பு இதழ் குமுதத்தில் தளவாயும் தன் பங்கிற்கு என்னை எரிச்சலாக்கினார். நவம்பர் மாத உயிர்மையில் அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுளின் உதவியாளர்கள்' என்ற கட்டுரையை அப்படியே கட், காப்பி பேஸ்டாக்கி கூடுதலாக முத்துலிங்கத்தின் மகன் சஞ்சயின் புகைப்படத்தை மட்டும் இணைத்து கிட்டத்தட்ட ஒரு நேர்காணலைப் போன்ற தோற்றமளிக்கும் ஒரு வஸ்துவை எழுதி இருந்தார்.

'பாம்புகளுக்கு என்னைப் பிடிக்கும்' என்ற அந்த செய்தியை நீங்களும் வாசித்திருப்பீர்கள். சில்லாயிரம் பேர் படிக்கும் இலக்கியப் பத்திரிகையிலிருந்து பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகைக்கு செய்தியைக் கடத்துவது ஒன்றும் புதிதல்ல என்ற போதும் அதற்காக ரீரைட் கூட செய்யாமல் அப்படியே பயன்படுத்தி இருப்பதுதான் என் கோபத்திற்கு காரணம்.

இலக்கியவாதிகளை நேர்காணல் செய்வதில் சுகதேவ், கடற்கரய், மணா போன்ற ஸ்பெஷலிஸ்டுகளுக்கு இணையானவர் தளவாய் சுந்தரம். தமிழ்நாட்டு வெகுஜனப்பத்திரிகைகளில் தமிழிலக்கிய செய்தியாளர்களாகவே அறியப்பட்டவர்கள் இருவர்தான். ஒருவர் தளவாய் அண்ணன் மற்றொருவர் மு.வி. நந்தினி. மு.வி. நந்தினி தற்போது அச்சு ஊடகத்தில் இயங்குவதில்லை என அறிகிறேன். எஞ்சி இருக்கும் இவரும் இப்படி போட்டுத் தாக்கினால் வருத்தப்படாமல் என்ன செய்வது?!

Thursday, December 4, 2008

விடியல் ரசிக்கவில்லை

விகடன் தீபாவளி மலரை கேண்டி எடுத்துச் சென்றிருந்தாள். அதன் கடைசிப்பக்கங்களில் வெளியாகி இருந்த லதானந்தின் 'மச்சா போரடிக்குதுங்...' என்ற சிறுகதை மிகவும் அருமையாக இருந்ததாகவும் குறிப்பாக "அதுதான் புளுவ எடுத்து எறிஞ்சு போட்டீங்கல்லோ? அப்புறம் ஏன் என்ற காலைச் சொறிஞ்சிட்டிருக்கீங்?" என்ற வாசகத்தை நினைத்து நினைத்து சிரிப்பதாகவும் சொன்னாள். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. "அவரு என்னமோ நல்லாதான் எழுதுறாரு... நீதாங் தேவையில்லாம ஓரண்டை இழுக்கிற... நீ ஒரு மார்க்கமா எழுதிகிட்டுத் திரியறதையும், தப்புத்தப்பா எழுதறதையும் அவரு கண்டுபிடிச்சித் தட்டிக் கேக்குறதாலதான் ஒனக்கு ஷிவரிங் ஆவுது.." என்றாள். "போடி உன் சங்காத்தமே வேண்டாம்" என்று உறுமிவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மையும் இருக்குமோ என்று வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

படைப்பை முன்வைத்து படைப்பாளியின் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பதும் தவறு. படைப்பாளியை முன்வைத்து படைப்புகளை விமர்சிப்பதும் தவறுதான். படைப்பாளி வேறு. படைப்பு வேறு. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான இடைவெளிகள் இல்லாத இலக்கியவாதிகள் இறந்தகாலத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு எல்லாவிதமான படைப்புகளையும் நியாயதராசு மன நிலையிலேயே அணுகுவதுதான் நல்ல வாசகனுக்கு அழகு.
***
'தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு இல்லை. எழுத்தை நம்பி பிழைப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் விடை கண்டுபிடிக்க முடியாத கேள்விகளைக் கொண்டிருக்கிறது.' என்ற புலம்பல் புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றைய சாருநிவேதிதா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக எழுத்துக்கு கிடைக்கும் சன்மானம் மிகவும் சொற்பமானது என்ற கருத்தும் நிலவுகிறது. எழுத்தாளனுக்கு கிடைக்கும் மதிப்பிற்கும் எழுத்திற்கு கிடைக்கும் சன்மானத்திற்கும் கேரளா துவங்கி அமெரிக்காவரை பல்வேறு உதாரணங்களை இவர்கள் குறிப்பிடத் தயங்குவதில்லை.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தெருவிற்கு தலா மூன்று கவிஞர்களும், நான்கு சிறுகதையாசிரியர்களும் பெருத்துக் கிடக்கிறார்கள். காகிதம், பேனா, கணிணி இவற்றும் ஏதாவது ஒன்று சிக்கினால்கூட என்னைப் போன்றதொரு 'எழுத்துப்போலி' தோன்றிவிடும் அபாயம் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு சுமார் இருநூறு முதல் ஐநூறு வரையிலான தமிழ் நூல்கள் வெளியாகின்றன. அவற்றுள் ஒன்றிரண்டு கூடத் தேறுவதில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் அவரவர் தர வரிசைக்கேற்ப பிரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதைப் போல தமிழ் எழுத்தாளர்களையும் படைப்பு, இலக்கியப் பங்களிப்பு அடிப்படையில் தரம் பிரித்து சன்மானம் வழங்கினால் உண்மையான எழுத்தாளர்கள் நிம்மதியாக வாழ்வார்கள். வேதனையும் புலம்பலும் குறையும். விருப்பமே இன்றி வாழ்க்கைத் தேவைகளுக்காக கிடைத்த வேலைகளில் ஓட்டிக்கொண்டிக்கின்ற எழுத்தாளர்கள், நம்பிக்கையோடு முழு நேர எழுத்துப்பணிக்குத் திரும்ப முடியும். ஜெயமோகன் சாணித்தாள் கோப்புகளில் மூழ்கி இருப்பதையும், சாருநிவேதிதா கருப்புப்பூனையாக மாறுவதையும், நாஞ்சில் நாடன் நகரப்பேருந்துக்குள் நசுங்கிக்கொண்டே இருப்பதையும் ஜீரணிக்க சிரமமாய் இருக்கிறதில்லையா?!
***
தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுகின்றேன். நாளிதழ் பணி என்பதால் இந்த அதிகாலை பள்ளியெழல் அவசியமாகிறது. ஏஜெண்டுகளின் பாயிண்டுகளுக்குச் சென்றுவிட்டு அலுவலகம் சென்று பணியில் மூழ்கினால் இரவு எட்டு மணிக்குத்தான் விடுதி அறை திரும்புகிறேன். அதற்குப்பின் அன்றைய தினத்தின் அறிக்கையை தயார் செய்து அனுப்புவது, அடுத்த நாள் பணிகளுக்காக தயார் செய்வது, துணிகளைத் துவைப்பது, ஏதேனும் வாங்க வேண்டி இருந்தால் பஜார் போய் வாங்கி வருவது என்று பத்து மணியைக் கடந்த பின்தான் கணிணியில் அமர முடிகிறது. முதலில் அபிமான பதிவர்களின் புதிய பதிவுகளைப் படித்துவிட்டு, பின் ஜெயமோகன், சாருநிவேதிதாவை மேய்ந்துவிட்டு பின்னூட்டம், பதிலூட்டமெல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்குச் செல்ல குறைந்தது பன்னிரெண்டு மணி ஆகிவிடுகிறது. சில நாட்களில் ஒரு மணி. பின் மீண்டும் மூன்றரை மணி சுப்ரபாதம். நண்பர்களை சந்திப்பதோ, காலார நடப்பதோ, ஒரு புத்தகத்தை வாசிப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ, தொலைக்காட்சி பார்ப்பதோ, உறவுக்காரர்கள் வீட்டுக்குச் சென்று வருவதோ சாத்தியமேப் படாத ஒரு மிக நீண்ட அயற்சியூட்டும் வாழ்க்கை. ஒவ்வொரு அதிகாலையிலும் படுக்கையை விட்டு பதறி துள்ளி எழுந்து அலாரத்தை அமர்த்தி விட்டு அவசர அவசரமாக பல் துலக்குகையில் ஓரே ஒரு கேள்விதான் எஞ்சி இருக்கிறது.

கள்ளந்தே பெருசு

பணி நிமித்தமாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கோயம்புத்தூர் விமான நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது. நேற்று எங்களது நிறுவனம் வைத்திருந்த விளம்பர பலகைகளுக்கான காலக்கெடு முடிந்து அவற்றை அகற்றியாக வேண்டிய தினம். அதற்கான அனுமதியைப் பெற வேண்டி காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை அல்லாடி டைரக்டர் முதல் அட்டெண்டர்வரை பார்த்து கடிதம் கொடுத்து அனுமதி பெற்றேன். நான் கேட்டதை விட குறைவான நபர்களுக்கும், அவர்கள் அனுமதித்த உபகரணங்களை மட்டுமே எடுத்துச் செல்வதற்கும், விமானங்கள் எல்லாம் வந்து போன நள்ளிரவில் வரும்படியுதான் அனுமதி கிடைத்தது. நள்ளிரவில் வேலையாட்களைக் கூட்டிக்கொண்டு போனால் "நாளை ஸ்டாலின் வருகிறார். செக்யூரிட்டி ரிசன்ஸ். இன்னிக்கு அலோ பண்ண முடியாது" என்றார்கள். "பொதுமக்களை பயங்கரவாதிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் பொதுமக்கள் போலவும் நடத்துகிறீர்கள்" என்று ஆத்திரத்தோடு ஏடிஎம்மிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
***
பயங்கரவாதிகள் கடல் வழி வந்ததால் எல்லோரும் கடலோரக் காவல் படையைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 314400 சதுர கி.மீ கடல் பரப்பைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் சுலபமானது அல்ல. இத்தனைப்பெரிய கடற்பரப்பை பாதுகாக்கும் அளவிற்கும் நம்மிடம் அதி நவீன ரேடார்கள் இல்லை என்றும் தெரிய வருகிறது. 'கள்ளன் பெருசா காப்பான் பெருசான்னா கள்ளன்தான் பெருசு' என்று எங்களூரில் ஒரு சொல்லாடல் உண்டு. வரவேண்டும் என்று ஒருவன் நினைத்துவிட்டால் அவன் நீந்திக்கூட வந்துவிடுவான். ஆனால் அதற்காக 'சுப்பையாத் தேவர் காவல்ல சுடுதண்ணிய நாய் நக்காது'ங்கற கதையா தேசம் திறந்த மடமாகிவிடவும் கூடாது.
***
பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் கூட ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. தொழிலில் லாபத்தைப் போலவே நஷ்டமும் உண்டுதான். நாலு கால் பாய்ச்சலில் பொருளாதாரமும், சந்தை நிலவரங்களும் இருந்த போது கோடி, கோடியாய் சம்பாதித்தவர்கள் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கொஞ்சம் நஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள அரசு தொழில் அதிபர்களை நிர்பந்திக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடோடி வரும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி கும்மாங்குத்தில் பிஸியாக இருக்கிறார்கள் போலும்.
***
சந்தோஷம், துக்கம், கோபம், தேசபக்தி போன்ற உணர்வுகளுக்கு வடிகாலாக எஸ்.எம்.எஸ் இருக்கிறது. மும்பை சம்பவத்தை மையப்படுத்தி தினமும் நான்கைந்து எஸ்.எம்.எஸ்கள் வருகின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒன்று...
"போட்டில் வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களை நம் கமாண்டோக்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் வோட்டில் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்"

Wednesday, December 3, 2008

பாலக்காட்டில் ஓர் அப்பாவி


லாரிகளில் நின்றபடி பயணிக்கும் அடிமாடுகளின் பரிதாபக் கண்களை பார்த்தபடியே என் இருசக்கர வாகனத்தை விரட்டி கேரளத்தை எட்டிப்பிடித்தேன். ஒவ்வொரு கேரள டிரான்ஸ்போர்ட் பேருந்துகளும் பேய் வேகத்தில் வந்து ஈவு இரக்கம் இல்லாமல் என்னை ஓரம் கட்டினார்கள். இப்படி வண்டி ஓட்டுறானுங்களே என்று விடுதியறைச் சிப்பந்தியிடம் கேட்டால், "தமிழ்நாட்டில் ரோடு நல்லா இருக்கும். பஸ் நல்லா இருக்காது. கேரளாவில பஸ் நல்லா இருக்கும். ரோடு நல்லா இருக்காது" என்றான்.

கல்பாத்தி கோவில் 1450ல் கட்டப்பட்டது என்கிறார்கள். ஆனால் அதன் ஒரு அங்குலத்தில் கூட பழமையின் சாயலைக் காண இயலவில்லை. மொசைக்கில் இழைத்திருக்கிறார்கள். வெளிநாட்டுச் சம்பாத்தியம். முற்றிலும் வைதீக பிரமாணர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி அக்கிரஹாரம். அக்கிரஹாரம் முழுக்க அழகுப் பெண்களும் கொழுத்த ஆண்களும். எங்கும் செழுமை எதிலும் வளமை.

கேரள கோவில்களில் இசைக்கப்படும் 'எடக்கா' எனும் வாத்தியத்தை சற்று சிறிய அளவில் செய்து கல்பாத்தியில் விற்றுக்கொண்டிருந்தார்கள். தோல் இசைக் கருவிகள் மீது பெரும் ஈர்ப்பு என்பதால் பேரம் பேசி வாங்கினேன். அன்றிரவு அதை இசைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தபோது இண்டர்காம் அலறியது. இண்டர்காமில் ஒரு நாயர் "இந்த நள்ளிரவில் உங்களுக்கு வேறு எங்கும் அறை கிடைக்காது. மூடி (வைத்துவி) ட்டு தூங்குங்கள்" என்றார். எடக்கு பண்ணாமல் தூங்கிவிட்டேன்.

தமிழ்நாட்டைப்போல மனித சக்தியை மட்டுமே நம்பி தேர் இழுப்பதில்லை. யானைகள் தேரை முட்டித்தள்ள மனிதர்கள் இலகுவாக இழுக்க சொற்ப பிரயத்தனத்தில் முடிகிறது தேரோட்டம். இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் இருக்கின்றன. எத்தகைய இரைச்சலிலும் மிரளாமல் கருமமே கண்ணாயினராக தேர் தள்ளுகின்றன யானைகள்.

கேரள போலீஸார் மரியாதையானவர்கள் என்பதை சபரி மலையில் கண்டிருக்கிறேன். மக்களுக்கும் போலீஸ் மீது ஏக மரியாதை. லட்சக்கணக்கான மக்கள் கூடும் கல்பாத்தியில் மொத்தமே ஐம்பது போலீஸ்தான். அவர்களும் திருவிழா உற்சாகத்தில் நிகழும் சிறு சிறு அலும்புகளைக் கண்டுகொள்ளவில்லை.

புல்லாங்குழல் விற்பவன் தொடர்ந்து 'எண்ட கையிலே வெண்ணிலாவிலே நல்ல பாட்டுக்காரா....' வாசித்துக்கொண்டே இருந்தான். இருபது ரூபாய் கொடுத்து நானும் ஓரு குழல் வாங்கி ஊதி, ஊதி வாய்தான் வலித்தது. அவனை வழியில் பிடித்து என்னால் மட்டும் ஏன் வாசிக்க முடியவில்லை என்றேன். ஒரு நாளைக்கு இருபது புல்லாங்குழல் விற்றால்தான் சாப்பாடு என்றால் உங்களுக்கும் வாசிக்க வரும் என்றுவிட்டு இடத்தை காலி செய்தான். கோவை திரும்பியதும் கண்ணாடி தாளில் சுற்றிக் கேண்டிக்கு பரிசளித்தேன். வாங்கியவள் 'என்னது இது ஈருளி மாதிரி இருக்கு...' என்றாள்.

கேரளாவின் எதிர்கால பிரச்சனை இளைஞர்கள்தான். நம்மூர் இளைஞர்கள் திருவிழா என்றால் என்ன செய்வோம்? அதிகபட்சம் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு குரூப்பாய் திரிவோம். கூச்சலிடுவோம். பாட்டுக் கச்சேரியில் ஆடுவோம். வயசுப்பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி ஒரண்டை இழுப்போம். கேரள இளைஞர்கள் அப்படி அல்ல. மூக்கு முட்டக் குடித்து விட்டு மூச்சு முட்ட ஆடுகிறார்கள். மொத்தக் குரலில் கெட்ட வார்த்தையை அலற விடுகிறார்கள். வயசுப்பெண்ணை கூட்டமாய் சுற்றிக்கொண்டு சூறையாடுகிறார்கள். என் கடைக்கு ஒரு வயதான மரத்தச்சன் போர்டு அடித்துக்கொண்டிருந்தார். ஒரு இளைஞன் 'இதையாவது ஒழுங்கா அடி தாத்தா....' என்றபடி சென்றான். அவனுக்க அம்மயதான் அடிக்கோனும் என முணு முணுத்தார் பெரியவர்.

நம்மூரில் 55 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோல் கேரளாவில் விலை 52 ரூபாய் 53 பைசாதான். பத்து ரூபாய் மிச்சம் என்பதால் நான்கு லிட்டர் நிரப்பிக் கொண்டு திரும்பினேன்.
"மலையாளிகள் கறிவேப்பிலையைக் கூட உற்பத்தி செய்ய துப்பில்லாதவர்கள்" என்று நேர்காணல்களிலும், கட்டுரைகளிலும், கனகாலமாய் குறை கூறி வருகிறார் பால் சக்காரியா. அசின், நயன்தாரா, பாவனா, கோபிகா, காவ்யா மாதவன், ரேணுகா மேனன், நவ்யா நாயர், பத்மப்ரியா, மீரா ஜாஸ்மீன், ரம்யா நம்பீசன், ஜோதிர்மயி என கணக்கற்ற அழகுத் தொழிற்சாலைகளை உற்பத்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதால் மற்றவற்றிற்கு நேரமில்லை என்பதை அகில இந்திய சேச்சிமார் ரசிகர் மன்றத்தின் சார்பாகத் தெரியப்படுத்தியே தீரவேண்டும்.