'பச்சப்' புரட்சி




டாஸ்மாக் குறித்து எழுத கொஞ்சம் உழைப்பு தேவைப்பட்டது. கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஊராக இருக்கட்டும் என விளாத்திகுளம் என்கிற தெக்கத்தி டவுணைத் தெரிவு செய்தேன். அந்தச் சிறிய ஊரில் நான்கு டாஸ்மாக் கடைகள். இப்போது மீண்டும் குழப்பம். நான்கில் எதைத் தேர்வு செய்வது? அளவில் சிறியதும் ஊரை விட்டுத் தொலைவில் இருப்பதுமான ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தேன். கடை எண் 10121.

அக்கடை திறந்த நாளன்று ரூ.5,000/-ற்கு வியாபாரம் ஆகியுள்ளது. தற்போது வாரநாட்களில் சராசரியாக ரூ.45,000/-மும், சனிக்கிழமையன்று ரூ.50,000/-மும் ஞாயிறன்று ரூ.60,000/-க்கும் குறையாமல் வியாபாரம் ஆகிறதாம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனை சில பல லட்சங்களைத் தொட்டு நிற்கிறதாம். எப்படி இந்த அசாத்திய வளர்ச்சி சாத்தியம்?! என அதன் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களான கடை ஊழியர்களைக் கேட்டேன்.

மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என்று குடித்துக்கொண்டிருந்த தேசாபிமானிகள் அங்கங்கு கடை திறந்துவிட்ட அரசாங்கத்தை ஏமாற்ற வேண்டாமேயென தினசரிக் குடியர்களாகி இருக்கிறார்கள். முன்னெப்போதும் இருந்ததை விட குடிப்பது ஒரு தகுதி என்ற எண்ணம் 15 முதல் 18 வயதுள்ள இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாங்கிளாஸ் பையன்கள் கடைவாசலில் பழரசம் குடிப்பது போல ஓரே டேக்கில் பீரைச் சாத்துகிறார்கள். புகையிலை, பான்பராக், சுருட்டு போன்றவற்றை மட்டுமே உபயோகிப்படுத்தி வந்த விளிம்பு நிலைப் பெண்களும் (மலம் அள்ளுபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், நரிக்குறவர்கள்) குடிக்கத் துவங்கி இருக்கிறார்கள். எங்கேயும் எப்போதும் நியாய விலையில் கிடைப்பதே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணம் என்றார்கள். புதுமையெனின் இது புதுமை; புரட்சியெனின் இது புரட்சி.

தமிழகத்தின் தெற்கு மூலையில் இருக்கிற சிற்றூரின் மிகச் சிறிய கடையில் சேகரித்த விபரங்கள் இவை. இதுவே இப்படி என்றால், பெருநகரங்களில் தெருவுக்கு ஒரு கடை இருக்கிறதே அங்கெல்லாம் விற்பனை எப்படி கொடி கட்டிப் பறக்கும் என்பதையும், எத்தனனக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கும் என்பதையும் உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

'குழந்தையின் வருமானம்; குடும்பத்தின் அவமானம்' என்று ஊர் முழுக்க எழுதி வைக்கும் மானம் கெட்ட அரசு மக்களை குடிகாரர்களாக்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு பிணம் தின்னி நாய் போல அலைகிறது. தண்ணீர் இல்லை, பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை என்று எத்தனையோ இல்லைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து எந்த டாஸ்மாக் கடையிலும் சாராயம் இல்லை என்ற தகவல் மட்டும் வந்ததே இல்லை.

இத்துடன் டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் லிங்கை இணைத்துள்ளேன். தமிழ்நாட்டில் இத்தனைக் கட்டுக்கோப்பாக விற்பனை வளர்ச்சிக்கென்று பாடுபடும் வேறு ஏதாவது அரசுத்துறை இருக்கிறதா என்று சொல்லுங்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து சாராயம் விற்பது என்பது எத்தனைச் சிறப்பானது. அது சரி தமிழில் அப்பணியை 'குடி'மைப் பணி என்றுதானே சொல்கிறார்கள்.

ராமதாஸ் படைதிரட்டிக்கொண்டு போய் கேட்டதால் பெரிய மனது பண்ணி ஒரு மணி நேரம் விற்பனையைக் குறைத்திருக்கிறார். பாவம் அவருக்கு ஏழாயிரம் கோடி வருவாயும் தேவைப்படுகிறது, வர இருக்கிற தேர்தல்களுக்கு ராமதாஸூம் தேவைப்படுகிறது.

Comments

/தண்ணீர் இல்லை, பெட்ரோல் இல்லை, மின்சாரம் இல்லை என்று எத்தனையோ இல்லைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து எந்த டாஸ்மாக் கடையிலும் சாராயம் இல்லை என்ற தகவல் மட்டும் வந்ததே இல்லை. /

டாஸ்மாக் கடைகளில் கேக்கற சரக்கும் இல்லைங்க :)
selventhiran said…
நன்றி கபீஷ்.

டாஸ்மாக் கடைகளில் கேக்கற சரக்கும் இல்லைங்க :) // ஜ்யோவ்ராம், அவரவர் கவலை அவரவர்க்கு...
Karthikeyan G said…
தீவிர இலக்கியவாதிகள் மற்றும் தீவிரமாகிவரும் இலக்கியவாதிகள் குடித்தால் தான் சிந்தனை கிளை கிளையாய் பிரியும் என்பதை எல்லாம் தெளிந்தபின் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பதிவுகள் மற்றும் பதிவுகளுக்கான பின்னூடங்கள் மூலம் குடியை ஒரு FSAHION போல் ஆக்கிவருகிறார்கள்.

இது போன்ற செயல்களும் குடிப்பழக்கம் பெருக சிறு காரணமாக அமைந்துள்ளதா??
செல்வேந்திரன்,

நான் வசிக்கும் அம்பத்தூரில் தனியார் மயமாக இருந்தபோது இருந்த கடைகளைவிட இப்போது அதிகமாகிவிடவில்லை. நான் வேலை செய்யும் பாரிமுனையிலும் இதே நிலைமைதான். (இதை நீங்கள் உங்கள் தொடர்புகளின்மூலம் உறுதிசெய்து கொள்ளலாம்).

தனியார் விற்கலாம், அரசு விற்கக்கூடாது என்பது எந்த விதத்தில் சரியாயிருக்கும்?

ஐஏஎஸ் அதிகாரிகள் விற்கிறார்கள் என்றால்.. மல்லையாக்களிடம் என்ன படிக்காதவர்களா வேலை செய்கிறார்கள்?

availability இருந்தால் பழக்கம் அதிகரிக்கவே செய்யும் - அது அரசாங்கம் விற்றாலும் சரி, தனியார் விற்றாலும் சரி.
கோவையில் டாஸ்மாக் மேனேஜருக்கு சிவாஸ் கம்பெனி 2 கோடிக்கு வீடு கட்டி கொடுத்திருகிறது.

காரணம் இந்த வட்டாரத்தில் அவரகளது சரக்கு(கார்டினால்) மட்டுமே விற்பனை ஆகிறது.
Anonymous said…
குடிகார லதானந்த் நண்பரா நீங்க

இங்கே குடிப்பேன், அங்கே குடிப்பேன் என்று எழுதறாரே அவரை கண்டிக்க மாடியளா
கிடைப்பதாலேயே குடிப்பவர்களின் எண்ணிக்கை பிரமாண்டமாகப் பெருகிவருகிறது. இது தொடர்பாக உதட்டளவிலாவது பேசும் ராமதாசை மதிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
selventhiran said…
சற்றே பெரிய பதிலுட்டம்:

தீவிர இலக்கியவாதிகள் மற்றும் தீவிரமாகிவரும் இலக்கியவாதிகள் குடித்தால் தான் சிந்தனை கிளை கிளையாய் பிரியும் என்பதை எல்லாம் தெளிந்தபின் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பதிவுகள் மற்றும் பதிவுகளுக்கான பின்னூடங்கள் மூலம் குடியை ஒரு FSAHION போல் ஆக்கிவருகிறார்கள். //
அப்படிச் சொல்லிவிட முடியாது கார்த்திகேயன். வாசகன் வேறு. ரசிகன் வேறு. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் க்ரைக் கதைகள் எழுதிய ராஜேஷ்குமாருக்கு பெருத்த வாசகர் வட்டம் இருக்கிறது. அவர்களெல்லாம் கொலை, கொள்ளை செய்துகொண்டா இருக்கிறார்கள்? ஆனால் சினிமா ரசிகனை இந்த அளவுகோலை வைத்து அளவிடமுடியாது. தன் அபிமான நடிகனுக்காக கத்தியைத் தூக்க தயங்காதவன்.

ஐஏஎஸ் அதிகாரிகள் விற்கிறார்கள் என்றால்.. மல்லையாக்களிடம் என்ன படிக்காதவர்களா வேலை செய்கிறார்கள்?

availability இருந்தால் பழக்கம் அதிகரிக்கவே செய்யும் - அது அரசாங்கம் விற்றாலும் சரி, தனியார் விற்றாலும் சரி. //

ஜ்யோவ், இந்திய ஆட்சிப் பணியும், விஜய் மல்லையாவிடம் வேலை செய்ய தேவையான படிப்புகளும் ஒன்றுதானா?! எப்படியோ "availability இருந்தால் பழக்கம் அதிகரிக்கவே செய்யும்" என்ற எளிய உண்மையை ஓப்புக்கொண்டீர்கள். குடித்துச் சீரழிந்து கொண்டிருப்பது நம்முடைய அப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, மகன்கள், பேரன்கள்தான் என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் கோபம் வரும் தோழரே!

கோவையில் டாஸ்மாக் மேனேஜருக்கு சிவாஸ் கம்பெனி 2 கோடிக்கு வீடு கட்டி கொடுத்திருகிறது. //
அட இது பயங்கரமான மேட்டரா இருக்குதே....வால்பையன்

குடிகார லதானந்த் நண்பரா நீங்க

இங்கே குடிப்பேன், அங்கே குடிப்பேன் என்று எழுதறாரே அவரை கண்டிக்க மாடியள //
அணாணி, யாகாவராயினும் நாகாக்க. குடிகார லதானந்த் என்ற உங்களது வார்த்தையை வன்மையாகக் கண்டிக்கிறேன். குடித்தல் ஒவ்வொருவரவது தனிப்பட்ட சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. தலையிடவும் கூடாது. ஆனால், ஒரு அரசாங்கம் தன் குடியை குடிக்கத் துண்டுவதையும், சாராயம் விற்பதை ஊக்கப்படுத்தவும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குடித்தல் குறித்து நாஞ்சில் நாடனின் நேர்காணல் ஒன்றின் சிறுபகுதி:

"கள், நம்ம ஊர் சரக்கு; உணவும் மருந்தும் சேர்ந்த இயற்கையான போதைப் பொருள். ஆனா, அதைத் தவறுன்னு தடை பண்ணியிருக்காங்க. கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு நம்மைச் சுற்றியிருக்கிற எல்லா மாநிலங்கள்லயும் கள் இறக்கலாம், குடிக்கலாம். அந்த மாநிலங்கள்ல சரியா இருக்கிற ஒரு விஷயம் நம்ம மாநிலத்துல மட்டும் எப்படி தப்பா போச்சி? கள் இறக்க அனுமதிச்சா ஏழாயிரம் கோடி வருமானம் பாதியாக ஆயிரும். கள் இறக்கினா ஒரு சமூகமே வாழும். 150 ரூபாய்க்குக் குடிக்கிறவன், 50 ரூபாயில் திருப்தியா குடிச்சிட்டு மிச்ச 100 ரூபாயை வீட்டுல கொண்டு போய் கொடுப்பான். அந்த 100 ரூபாயை அவனிடம் இருந்து பிக்பாக்கெட் அடிக்கத்தான் கள்ளைத் தடை செய்து, ஐ.எம்.எஃப் சரக்குகளை அரசாங்கமே விற்குது.

"சரி, ஏழாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் வருமானம் தருகிறவங்கன்னு குடிமகன்களை இந்த அரசாங்கம் மரியாதையா நடத்துதான்னா அதுவும் இல்லை. மூன்று ரூபாய் கொடுத்து டீ குடிக்கும் போது கிடைக்கிற மரியாதை டாஸ்மாக் பார்களில் கிடைப்பதில்லை. டீ கடையில், போன உடனே ‘வாங்க’ங்கிறான்; டேபிளைத் துடைக்கிறான்; தண்ணீர் கொண்டு வந்து வைக்கிறான்; லைட், ஸ்ட்ராங், சுகர் கம்மி, சூடு குறைவான்னு நாம சொல்றதுக்கு தக்கபடி போட்டு தர்றாங்க. ஆனா அரசாங்கம் நடத்துற டாஸ்மாக் பார்ல... உலகத்துல உள்ள மொத்த சாக்கடை ஈக்களும் அங்கதான் இருக்கு. டேபிளைத் துடைப்பதேயில்ல; குடிச்சி போட்ட பாட்டில் அங்கேயே கிடக்கும். எலி, பெருச்சாளி, குப்பைக்கு குறைவே கிடையாது. கொசுக் கடி இருக்க முடியாது. பாட்டில், சைடு டிஸ் சேர்த்து இவன் கொடுக்கிற தொன்னூறு ரூபாய்க்கு அரசாங்கம் தருகிற பரிசு இவ்வளவு துன்பங்களும். வேற எந்தத் தொழில்லயாவது வாடிக்கையாளனை இவ்வளவு கேவலமா நடத்த முடியுமா? மூன்று ரூபாய் மதிப்புள்ள சைடு டிஸை பத்து ரூபாய்க்கு விற்கிறான்; ஏழு பைசா மதிப்புள்ள பிளாஸ்டிக் கப்பு ஒரு ரூபாய். தண்ணீர் இலவசம் கிடையாது. ‘குடி குடியைக் கெடுக்கும்‘னு பிரசாரம் செய்கிற அரசாங்கமேதான் இந்த கொள்ளைகளை கண்டுக்காம அனுமதிக்குது. கொத்து வேலைக்காரன், பஸ் கண்டக்டர், சாதாரணக் கூலித் தொழிலாளி போன்றவங்கதான் இங்க குடிக்க வர்றாங்க. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி பேசுகிற சோசலிஷ அரசாங்கம் தன் குடிமக்களையே பன்றியைவிடக் கேவலமா நடத்துகிறதை டாஸ்மாக் பார்ல பார்க்கலாம்.

"எப்படி இத்தனைக் கொடுமைகளையும் குடிமகன்கள் பொறுத்துகிறாங்க? குடிப்பதை அவன் ஒரு குற்றவுணர்வோடு செய்கிறான். அப்படி செய்ய அவன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். ஏன் குடிக்கிறது சம்பந்தமா ஒருவர் குற்றவுணர்வு அடையனும்? குடிக்கிறது ஒன்னும் கொலை மாதிரியான குற்றம் கிடையாதே. அசைவம் சாப்பிடுவது எப்படி என் தேர்வோ, அதுபோல குடிப்பதும் என் தேர்வு. குடி சரியா, தப்பா என்பது அடிப்படையில் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும் விஷயம். இங்கிலீஷ்காரன் குடிப்பது சரி, நான் குடிப்பது தப்புன்னா எப்படி? குடி, ஒழுக்கம் சார்ந்த ஒரு விஷயமே தவிர, அறம் சார்ந்த விஷயம் இல்லை. முன்னெல்லாம், ‘குடிக்கலைன்னா இவர் செத்துப் போயிருவாரு’ங்கிற மாதிரி டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் இருந்தாதான் பிரண்டி ஷாப்களில் பிராண்டி வாங்க முடியும். அப்புறம் அதைத் தளர்த்தி, ஆறரை கோடி தமிழர்களில் பத்து வயசுக்கு மேல் நாற்பது வயசுக்குள் உள்ள ஒரு தலைமுறைக்கு குடியை அறிமுகம் செய்தது யார்? அரசாங்கம்தானே. இந்த முரண்பாடு உண்மையிலேயே எனக்குப் புரியமாட்டேங்குது.”

உதட்டளவிலாவது பேசும் ராமதாசை மதிக்கத்தான் வேண்டியிருக்கிறது.//
ரமேஷ் அண்ணா, யார் யார்வாய் கேட்பினும்....
Anonymous said…
tasmac chairperson Malathi IAS. vaazhga tamil arasu..!
selventhiran said…
வாங்க பாபு சார்
Anbu said…
காவேரி கணேஷ் மூலம் உங்கள் பதிவுகள் அறிமுகம் கிடைத்தது.

டாஸ்மாக்க நல்லா கலக்கிட்டீங்க!
பன்னாட பரதேசிங்ககிட்ட கொள்ளையடிக்கிற நவீன திட்டம் இந்த டாஸ்மாக். எத்தனையோ ஆயிரம் கடைகளை திறந்தப்றம், இனிமே கடைகளை புதுசா திறக்கமாட்டாங்களாம், என்னய்யா கேலிக்கூத்து இது!
ஒரு மணிநேரம் நேரத்த குறைக்கறாங்களாம், என்ன கேப்மாரித்தனம்!
அரசாங்கம் நாட்டு மக்கள் நலனுக்கு என்பது போய்....... தூ.....காரி முழியலாம் .... நாட்டு நலன்மேல அக்கற உள்ள எல்லோரும்....அர(சு)சன் மூஞ்சியில........
selventhiran said…
அன்பு நம்மளவிட ரொம்ப கோவக்காரரா இருப்பாரு போலருக்கே :)
selventhiran said…
காவேரி பொங்குனாப்பல இருக்குது...