பாலக்காட்டில் ஓர் அப்பாவி
லாரிகளில் நின்றபடி பயணிக்கும் அடிமாடுகளின் பரிதாபக் கண்களை பார்த்தபடியே என் இருசக்கர வாகனத்தை விரட்டி கேரளத்தை எட்டிப்பிடித்தேன். ஒவ்வொரு கேரள டிரான்ஸ்போர்ட் பேருந்துகளும் பேய் வேகத்தில் வந்து ஈவு இரக்கம் இல்லாமல் என்னை ஓரம் கட்டினார்கள். இப்படி வண்டி ஓட்டுறானுங்களே என்று விடுதியறைச் சிப்பந்தியிடம் கேட்டால், "தமிழ்நாட்டில் ரோடு நல்லா இருக்கும். பஸ் நல்லா இருக்காது. கேரளாவில பஸ் நல்லா இருக்கும். ரோடு நல்லா இருக்காது" என்றான்.
கல்பாத்தி கோவில் 1450ல் கட்டப்பட்டது என்கிறார்கள். ஆனால் அதன் ஒரு அங்குலத்தில் கூட பழமையின் சாயலைக் காண இயலவில்லை. மொசைக்கில் இழைத்திருக்கிறார்கள். வெளிநாட்டுச் சம்பாத்தியம். முற்றிலும் வைதீக பிரமாணர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில். கோவிலைச் சுற்றி அக்கிரஹாரம். அக்கிரஹாரம் முழுக்க அழகுப் பெண்களும் கொழுத்த ஆண்களும். எங்கும் செழுமை எதிலும் வளமை.
கேரள கோவில்களில் இசைக்கப்படும் 'எடக்கா' எனும் வாத்தியத்தை சற்று சிறிய அளவில் செய்து கல்பாத்தியில் விற்றுக்கொண்டிருந்தார்கள். தோல் இசைக் கருவிகள் மீது பெரும் ஈர்ப்பு என்பதால் பேரம் பேசி வாங்கினேன். அன்றிரவு அதை இசைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தபோது இண்டர்காம் அலறியது. இண்டர்காமில் ஒரு நாயர் "இந்த நள்ளிரவில் உங்களுக்கு வேறு எங்கும் அறை கிடைக்காது. மூடி (வைத்துவி) ட்டு தூங்குங்கள்" என்றார். எடக்கு பண்ணாமல் தூங்கிவிட்டேன்.
தமிழ்நாட்டைப்போல மனித சக்தியை மட்டுமே நம்பி தேர் இழுப்பதில்லை. யானைகள் தேரை முட்டித்தள்ள மனிதர்கள் இலகுவாக இழுக்க சொற்ப பிரயத்தனத்தில் முடிகிறது தேரோட்டம். இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் இருக்கின்றன. எத்தகைய இரைச்சலிலும் மிரளாமல் கருமமே கண்ணாயினராக தேர் தள்ளுகின்றன யானைகள்.
கேரள போலீஸார் மரியாதையானவர்கள் என்பதை சபரி மலையில் கண்டிருக்கிறேன். மக்களுக்கும் போலீஸ் மீது ஏக மரியாதை. லட்சக்கணக்கான மக்கள் கூடும் கல்பாத்தியில் மொத்தமே ஐம்பது போலீஸ்தான். அவர்களும் திருவிழா உற்சாகத்தில் நிகழும் சிறு சிறு அலும்புகளைக் கண்டுகொள்ளவில்லை.
புல்லாங்குழல் விற்பவன் தொடர்ந்து 'எண்ட கையிலே வெண்ணிலாவிலே நல்ல பாட்டுக்காரா....' வாசித்துக்கொண்டே இருந்தான். இருபது ரூபாய் கொடுத்து நானும் ஓரு குழல் வாங்கி ஊதி, ஊதி வாய்தான் வலித்தது. அவனை வழியில் பிடித்து என்னால் மட்டும் ஏன் வாசிக்க முடியவில்லை என்றேன். ஒரு நாளைக்கு இருபது புல்லாங்குழல் விற்றால்தான் சாப்பாடு என்றால் உங்களுக்கும் வாசிக்க வரும் என்றுவிட்டு இடத்தை காலி செய்தான். கோவை திரும்பியதும் கண்ணாடி தாளில் சுற்றிக் கேண்டிக்கு பரிசளித்தேன். வாங்கியவள் 'என்னது இது ஈருளி மாதிரி இருக்கு...' என்றாள்.
கேரளாவின் எதிர்கால பிரச்சனை இளைஞர்கள்தான். நம்மூர் இளைஞர்கள் திருவிழா என்றால் என்ன செய்வோம்? அதிகபட்சம் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு குரூப்பாய் திரிவோம். கூச்சலிடுவோம். பாட்டுக் கச்சேரியில் ஆடுவோம். வயசுப்பெண்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி ஒரண்டை இழுப்போம். கேரள இளைஞர்கள் அப்படி அல்ல. மூக்கு முட்டக் குடித்து விட்டு மூச்சு முட்ட ஆடுகிறார்கள். மொத்தக் குரலில் கெட்ட வார்த்தையை அலற விடுகிறார்கள். வயசுப்பெண்ணை கூட்டமாய் சுற்றிக்கொண்டு சூறையாடுகிறார்கள். என் கடைக்கு ஒரு வயதான மரத்தச்சன் போர்டு அடித்துக்கொண்டிருந்தார். ஒரு இளைஞன் 'இதையாவது ஒழுங்கா அடி தாத்தா....' என்றபடி சென்றான். அவனுக்க அம்மயதான் அடிக்கோனும் என முணு முணுத்தார் பெரியவர்.
நம்மூரில் 55 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோல் கேரளாவில் விலை 52 ரூபாய் 53 பைசாதான். பத்து ரூபாய் மிச்சம் என்பதால் நான்கு லிட்டர் நிரப்பிக் கொண்டு திரும்பினேன்.
"மலையாளிகள் கறிவேப்பிலையைக் கூட உற்பத்தி செய்ய துப்பில்லாதவர்கள்" என்று நேர்காணல்களிலும், கட்டுரைகளிலும், கனகாலமாய் குறை கூறி வருகிறார் பால் சக்காரியா. அசின், நயன்தாரா, பாவனா, கோபிகா, காவ்யா மாதவன், ரேணுகா மேனன், நவ்யா நாயர், பத்மப்ரியா, மீரா ஜாஸ்மீன், ரம்யா நம்பீசன், ஜோதிர்மயி என கணக்கற்ற அழகுத் தொழிற்சாலைகளை உற்பத்தி செய்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதால் மற்றவற்றிற்கு நேரமில்லை என்பதை அகில இந்திய சேச்சிமார் ரசிகர் மன்றத்தின் சார்பாகத் தெரியப்படுத்தியே தீரவேண்டும்.
Comments
ஒரு சூபப்ர் சிறுகதை இருக்கு தல இதுல.. எழுதுங்களேன். ப்ளீஸ்
கடைசி படம் அருமை. ஹி..ஹி..
-அகில இந்திய சேச்சிமார் ரசிகர் மன்ற திருப்பூர் கிளை
கேரளா பெண்களா அழகை சொல்லவே வேண்டாம்
மக்களுக்கும் போலீஸ் மீது ஏக மரியாதை. லட்சக்கணக்கான மக்கள் கூடும் கல்பாத்தியில் மொத்தமே ஐம்பது போலீஸ்தான்.
நம்மூர்ல அரசியல்வாதிகளின் பின்னாடி போகவே நேரம் சரியாருக்கு போலிசுக்கு
ஒரு நாளைக்கு இருபது புல்லாங்குழல் விற்றால்தான் சாப்பாடு என்றால் உங்களுக்கும் வாசிக்க வரும் என்றுவிட்டு இடத்தை காலி செய்தான்.
ஏழ்மையை இவ்வளவு அழகா சொல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
காவேரி கணேஷ்
மிகச் சரியாகவே கவனித்திருக்கிறீர்கள்.