கள்ளந்தே பெருசு

பணி நிமித்தமாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது கோயம்புத்தூர் விமான நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது. நேற்று எங்களது நிறுவனம் வைத்திருந்த விளம்பர பலகைகளுக்கான காலக்கெடு முடிந்து அவற்றை அகற்றியாக வேண்டிய தினம். அதற்கான அனுமதியைப் பெற வேண்டி காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை அல்லாடி டைரக்டர் முதல் அட்டெண்டர்வரை பார்த்து கடிதம் கொடுத்து அனுமதி பெற்றேன். நான் கேட்டதை விட குறைவான நபர்களுக்கும், அவர்கள் அனுமதித்த உபகரணங்களை மட்டுமே எடுத்துச் செல்வதற்கும், விமானங்கள் எல்லாம் வந்து போன நள்ளிரவில் வரும்படியுதான் அனுமதி கிடைத்தது. நள்ளிரவில் வேலையாட்களைக் கூட்டிக்கொண்டு போனால் "நாளை ஸ்டாலின் வருகிறார். செக்யூரிட்டி ரிசன்ஸ். இன்னிக்கு அலோ பண்ண முடியாது" என்றார்கள். "பொதுமக்களை பயங்கரவாதிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் பொதுமக்கள் போலவும் நடத்துகிறீர்கள்" என்று ஆத்திரத்தோடு ஏடிஎம்மிடம் சொல்லிவிட்டு வந்தேன்.
***
பயங்கரவாதிகள் கடல் வழி வந்ததால் எல்லோரும் கடலோரக் காவல் படையைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 314400 சதுர கி.மீ கடல் பரப்பைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் சுலபமானது அல்ல. இத்தனைப்பெரிய கடற்பரப்பை பாதுகாக்கும் அளவிற்கும் நம்மிடம் அதி நவீன ரேடார்கள் இல்லை என்றும் தெரிய வருகிறது. 'கள்ளன் பெருசா காப்பான் பெருசான்னா கள்ளன்தான் பெருசு' என்று எங்களூரில் ஒரு சொல்லாடல் உண்டு. வரவேண்டும் என்று ஒருவன் நினைத்துவிட்டால் அவன் நீந்திக்கூட வந்துவிடுவான். ஆனால் அதற்காக 'சுப்பையாத் தேவர் காவல்ல சுடுதண்ணிய நாய் நக்காது'ங்கற கதையா தேசம் திறந்த மடமாகிவிடவும் கூடாது.
***
பெரிய பெரிய நிறுவனங்களெல்லாம் கூட ஆட்குறைப்பில் ஈடுபடுகிறது. பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. தொழிலில் லாபத்தைப் போலவே நஷ்டமும் உண்டுதான். நாலு கால் பாய்ச்சலில் பொருளாதாரமும், சந்தை நிலவரங்களும் இருந்த போது கோடி, கோடியாய் சம்பாதித்தவர்கள் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கொஞ்சம் நஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள அரசு தொழில் அதிபர்களை நிர்பந்திக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடோடி வரும் கம்யூனிஸ்டுகள் கூட்டணி கும்மாங்குத்தில் பிஸியாக இருக்கிறார்கள் போலும்.
***
சந்தோஷம், துக்கம், கோபம், தேசபக்தி போன்ற உணர்வுகளுக்கு வடிகாலாக எஸ்.எம்.எஸ் இருக்கிறது. மும்பை சம்பவத்தை மையப்படுத்தி தினமும் நான்கைந்து எஸ்.எம்.எஸ்கள் வருகின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒன்று...
"போட்டில் வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களை நம் கமாண்டோக்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் வோட்டில் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்"

Comments

\\'சுப்பையாத் தேவர் காவல்ல சுடுதண்ணிய நாய் நக்காது'ங்கற \\

:-)))))))
//"போட்டில் வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களை நம் கமாண்டோக்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் வோட்டில் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்"//

அருமை.

அப்புறம், அந்த ரெண்டு பழமொழிகளும் நல்லாயிருந்துச்சு. நீங்க ஏ.டி.எம்-மிடம் சொன்ன அனுபவமொழியும் நல்லாயிருந்தது.

'முடியல'த்துவம்!
பாபு said…
sms சூப்பர்
DHANS said…
பொதுமக்களை தீவிரவாதிகளை போலவும் தீவிரவாதிகளை பொதுமக்கள் போலவும் நடத்துகின்றீர்கள்

சரியாய் சொன்னீர்கள்

இந்த அரசியல் வாதிகளின் பந்தாவிர்க்காக நாம் படுகின்ற அவஸ்தை சொல்லி மாளாது
Ganesan said…
எப்பவுமே கள்ளன்தான் பெருசு.
செல்வேந்திரன்
\\'சுப்பையாத் தேவர் காவல்ல சுடுதண்ணிய நாய் நக்காது'ங்கற \\

எப்படிங்க இதெல்லாம் :)
uvaraj said…
"போட்டில் வந்தவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர்களை நம் கமாண்டோக்கள் பார்த்துக்கொள்வார்கள். உங்கள் வோட்டில் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்"

அருமையான சொன்னீர்கள். ரசித்து படித்தேன்.