பஸ்ஸூக்குக் காத்திருந்தேன்
'நிற்கத் தடுமாறுகிற
பெண்களின்
இடுப்புச் சதை பார்த்து
மூளை எச்சில் விழுங்கும் - என்ற கவிதைதான் 'கவிதை என்பது நான் எழுதிக்கொண்டிருப்பது அல்ல. அஃது வேறொன்று' எனக்குப் புரியவைத்தது. கலாப்ரியாவை நோக்கி என்னை இழுத்து வந்தது.
வெகுஜனப்பத்திரிகைகளில் கலாப்ரியாவின் நடமாட்டம் மிக அரிதாகவே இருக்கும். நடப்பு இதழ் 'கல்கி'யில் வெளியான ஒரு கவிதை என்னை ஈர்த்தது.
ஒரு குறும்பாவுக்கான
குளிர்ந்த
படிமங்களுடன்
பேருந்து நிறுத்தத்தில்
காத்திருப்பவன்
தலையில்
சூடாய் எச்சமிடும்
ஏதோ ஒரு பறவை.
***
"Don't say 'yes' when you want to say 'no' - இது நான் நண்பர்களிடத்திலும், சக ஊழியர்களிடத்திலும் அடிக்கடிச் சொல்லும் வாசகம். இப்படிச் சொன்னாலே பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த இதழ் குமுதத்தில் டாக்டர் ஷாலினி மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க கொடுத்த யோசனைகளில் ஒன்று "Don't say 'yes' when you want to say 'no'. நாங்கள்லாம்.....
***
அவள் விகடனில் ச. தமிழ்ச்செல்வனின் பேட்டி போன்றதொரு கண்றாவி வந்திருந்தது. அதில் 'ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' என்ற புத்தகத்தை எழுதியவர் என்றொரு அறிமுகம் வேறு. விட்டால் 'செட்டிநாட்டு முட்டைத் தோசைகள்' எழுதியவர் என்று சமையல்குறிப்பு எழுத்தாளனாய் ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது. அவர் எழுதியது 'ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது' என்ற நூல். அது சமையல் குறிப்பு நூல் அல்ல என்பதை குறைந்தபட்சம் இந்த இணைப்பைப் படித்தாவது தெரிந்து கொள்ளட்டும்.
***
வர வர சாருவுக்கும் முனை மழுங்கிப் போய்விட்டதோ என்றதொரு ஐயம் அவரது சினிமா விமர்சனங்களைப் படிக்கையில் தோன்றுகிறது. முன்னெல்லாம் தமிழ்ச் சினிமாக்களை மானாங்கன்னியாகக் கிழித்துக்கொண்டிருந்தவர் வாரணம் ஆயிரத்தையெல்லாம் சிலாகிக்க ஆரம்பித்திருக்கிறார் (உயிர்மை - டிசம்பர்) அவரது விமர்சனங்களுக்குப் பின் இருக்கும் அரசியல் குறித்த எனது சந்தேகங்களை எழுதினால் 'அம்பலத்தில் நிறுத்தி அன் - டிராயரைக் கழற்றிவிடுவார்' என்ற பயம் இருப்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.
***
Comments
பணம்ணே...பணம்...!!!
பதவிண்ணே..பதவி...!!!
பயம்ணே..பயம்...!!!
”அஃது வேறொன்று” என்பது பிழை.
அது வேறொன்று என்பதே சரி!
பிழைகள் முற்றாகக் குறையும் நாள் நெருங்குகிறது.
அது வேறொன்று என்பதே சரி! // சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார். பிழைகளே இல்லாமல் ஒரு பத்தி எழுதிவிடலாம் என்றுதான் முயற்சிக்கிறேன். முடியவில்லை.