Saturday, March 29, 2008

நடிகை த்ரிஷா தற்கொலை முயற்சி!

நடிகை த்ரிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தற்கொலை முயற்சியே அதற்கு காரணம் என்றும் மேலதிக விபரங்களுக்கு சன் நியூஸ் தொலைக்காட்சியை உடனே பார்க்கவும் என குறுஞ்செய்தி வந்திருந்தது. இன்னும் கொஞ்சம் கீழே அழுத்தி, அடுத்த வரியை பார்த்தால்...


பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று த்ரிஷா செல்வேந்திரனிடம் தன் காதலை சொன்னதாகவும், அதற்கு நான் மறுத்ததுமே காரணம் என ஸ்மைலியுடன் முடிந்திருந்தது அந்த குறுஞ்செய்தி. இதுமாதிரி குறுஞ்செய்திகள் வருவதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால், அதை அனுப்பியதே த்ரிஷாதான் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். :)

Monday, March 24, 2008

நேயர் விருப்பம்

கதைகள்
வாழ்க்கையிலிருந்தே
சுரண்டப்படுகிறதென
சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்த
கிழட்டு எழுத்தாளனொருவனை
பிணவறையில் சந்தித்தேன்
அவன் நகக்கண்களில்
சுரண்டிய கதைகள்
தேங்கி இருந்தது.
முட்டாப்பய
ஒழுங்கா கைகழுவுனா என்னடே?!

பக்கா முடியலத்துவம்
வேண்டுமென வந்தவளிடம்
எத்தனை பக்காவென? வினவினேன்
முழித்த முழி
மூணு பக்கா தேறும்.

மைதானத்தில்
வாய்பிளந்து கிடக்கும்
ரப்பர் பந்துகளுக்குள்
தேங்கி நிற்கும் மழைநீருக்கும்
மைதுனத்தை தாங்கி நிற்கும்
நிறம் மங்கிய நிரோத்திற்கும்
தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது
எவனாவது கோட்டிக்காரன்
கையில் கம்ப்யூட்டர்
சிக்குகையில்...

ரமேஷ்
என்றைக்காவது
செத்துவிடுவான்
என்பதை விட
இன்றைக்கு அவன்
சாகவில்லை என்பதில்
எத்தனை ஆறுதல்?!
போடலாம் என்றுதான்
போகிறார்கள்
போட்டுக்கொண்டிருந்ததால்
போட்டுத்தள்ளிவிடுகிறார்கள்
வந்தே மாதரம்.
- செல்வேந்திரன்.

தன்னிலை விளக்கம்

அனுசுயா. நான் அறிந்த ஓரே பெண் பதிவர். பதிவுலகிலும், நிஜ உலகிலும் எனக்கிருக்கும் 'காசனோவா' இமேஜ் குறித்து கவலைகளோ, பயங்களோ இன்றி பழகிய இனிய தோழி. என்னுடைய கவிதைகள் வெளியாகிறது என்பதற்காக தொடர்ந்து விகடன் வாங்கி (பக்கத்து வீட்டில்...) வாராவாரம் விமர்சனம் என்ற பெயரில் ரம்பம் போட்டவர். மொக்கை பதிவுகளை மட்டுமே எழுதுபவர் என்றபோதும் அவரிடத்தில் இருந்த தேர்ந்த ரசனை இருந்தது (உதாரணம்: ஆர்யாஸில் காபி / ஆனந்தபவனில் ரசமலாய் / பாட்டி மெஸ்ஸில் ரவா ரோஸ்ட் என்பன...) அவருக்கு திருமணம் என்றபோது இயல்பாகவே அவரது வருங்கால கணவன் மீது பரிதாபம் ஏற்பட்டது. டான்சானியாவிலிருந்து வந்து ஒரு பெண்ணுரிமைப் போராளியிடமிருந்து சிக்கி, மொக்கை கவுஜைகளை வாசித்தாக வேண்டிய ஊழ்வினையில் மாட்டிக்கொண்டவராகி விட்டார்.
அனுவின் டான்சானியா தனிமையை போக்கும் வகையில் திருமணப்பரிசளிக்க முடிவு செய்து விஜயாவில் 'கருவாச்சி காவியத்தை' வாங்கினேன். அனுவை மறைமுகமாக கிண்டல் செய்வதாக அவள் எடுத்துக்கொள்ளும் அபாயம் தலைப்பில் அதிகம் இருப்பதாக பட்டது. இதை பரிசளித்து பகை வளர்க்க வேண்டாமென எனது கருவாச்சியும் சொன்னதால் அப்பரிசை அளிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
அழைப்பிதழை கீதா கேண்டீனில் சகோதரர் சகிதமாக வந்து கொடுக்கையில் பதிவுலகமே படை திரண்டு வர இருப்பதாக தெரிவித்தார்கள். தயவு செய்து எழுதாதீர்கள் என சில பதிவர்களிடம் மன்றாடி கேட்டு மனு கொடுக்க ஏற்கனவே ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கி வைத்திருப்பதால் அவர்களை பார்த்துவிடும் ஆவல் அன்றே ஏற்பட்டது. எனவே திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு அழைப்பிதழில் இருந்த மண்டப முகவரிக்கு கிளம்பினேன். இன்னும் கொஞ்ச தூரம் வந்தால் திருச்சியே வந்துவிடும் என்ற நிலையில் ரேணுகா திருமண மண்டபத்தைக் கண்டறிய முடியவில்லை. எதிர்வந்த ஆட்டோக்காரரிடம் கேட்டேன். இருபத்தைந்து வளைவுகளையும் மூன்று மெயின்ரோடுகளையும் கடந்தாக வேண்டும் என்றார். ஒரு மலையேற்ற முனைப்புடன் வண்டியைக் கிளப்பி மண்டபத்தை அடைந்தபோது ரயில் எஞ்சீன் டிரைவர் போல ஆகியிருந்தேன். மண்டபத்தில் தெரிந்த முகம் என்று யாரும் இல்லை. ஜி3, பாப்பா சங்கம் என பல பெயர்களில் எழுதி வரும் யாராவது தெரிந்தால் பெண்ணுரிமைப்பேரியக்க உறுப்பினராக கட்டணம் எவ்வளவு என விசாரிக்கலாம் என தேடினேன். நிறைய்ய அழகிய பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் அழகாக இருந்ததால் இவர்களுள் எவரும் பதிவராக இருக்க மாட்டார்கள் என ஏகமனதாக முடிவெடுத்துவிட்டு பந்தி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தேன். இட்லி வடை எதிர்பார்த்த எனக்கு சூடான சாதம் ஏமாற்றமளித்தது என்ற போதும் ஊடுகட்டி அடித்தேன். மூன்றாவது முறை சாம்பார் கேட்டபோது பரிமாறுபவர் முறைத்தார். அவர் முடியலத்துவம் படிக்க கடவது.
வெகுநேரம் காத்திருந்தும் மணமகன், மணமகள் இருவரும் மேடைக்கு வருகிற அறிகுறியே இல்லாததால், பொங்கி எழுந்த மனோகரனாய் மணமகள் அறை புகுந்தேன். அங்கே வெட்கம் கிலோ என்ன விலை என ஆக்ரோசமாய் கேட்டுக்கொண்டிருந்தாள் அனு. கிலோ கணக்கில் நகை அணிந்திருந்த அனுவிடம் நான் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட கேள்வி 'மூன்று முறை சாம்பார் கேட்டால் தப்பா?!'
அனுவிடம் விடைபெற்றுவிட்டு திரும்புகையில் நேரம் ஒன்பதை கடந்து விட்டது. முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று ஏதேச்சதிகாரமாக ஒரு யூ அடிக்க... அடியேனின் கரங்கள் இரண்டு பிரேக்குகளையும் சேர்த்து பிடிக்க ஆட்டோ மீது இடிக்க வேண்டிய அவசியம் ஏதுமின்றி நடுரோட்டில் கவிழ்ந்தேன். வண்டியின் ஒரு பக்கம் முழுவது சோரியாஸிஸ் வந்த சொரிநாய் போலாகி விட்டது. எனக்கு வலது காலில் அடி. சிங்காநல்லூரில் இருக்கும் நண்பனை தொலைபேசியில் அழைத்து வண்டியை ஒப்படைத்துவிட்டு, ஆட்டோ பிடித்து விடுதி திரும்பினேன்.
மேற்படி காயம் காரணமாக மறுநாள் நிகழ்ந்த அனுவின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. ஆனால் மொய் கொடுக்க வக்கு இல்லாத பயல் என அனு நினைத்துக்கொள்ளும் அபாயம் அதிகம் இருப்பதால் குறைந்தது பத்து புத்தகங்களையாவது பரிசளிக்கலாம் என நினைத்திருக்கிறேன்.

கதைகளைத் தின்பவன்!

குழந்தைகளை மிகவும் விரும்புபவனாகவும், குழந்தைகளால் பெரிதும் விரும்பப் படுபவனாகவும் பல காலங்களாக இருந்து வருகிறேன். குழந்தைகளை ஒருவன் விரும்புவதில் சிறப்போ, வியப்போ இல்லைதான். ஆனால் எந்தக் குழந்தையும் முதல் சந்திப்பிலேயே அட்டையென ஒட்டிக்கொள்வதும், விடைபெற்றுப் பிரிகையில் வீறீட்டு அழுவதும் அந்த பிரியத்தின் காரணிகள் என்னவாக இருக்கும் என்கிற யோசனையை கிளற செய்கிறது.

நான் கதைகளின் கிட்டங்கி. பால்யத்திலிருந்தே நினைவின் மடிப்புகளில் ஆயிரமாயிரம் கதைகளைச் சேமித்து வந்திருக்கிறேன். எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தாம். சிறுவயதில் அம்புலிமா, பாலமித்ரா, கோகுலம், பூந்தளிர் இதழ்களில் வாசித்த கதைகளும் கதாபாத்திரங்களும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. என் மடியேறும் எந்தக் குழந்தையும் கதைகளைச் சுவைக்காமல் இறங்கியது இல்லை. எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கின்றன. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. புத்தகங்களில் இருக்கிற கதைகளை விட்டு விடுங்கள். நாம் அறிந்திருக்கிற பக்தி கதைகளையோ, நமது குடும்ப வரலாற்றினையோகூட சுவைபட சொல்ல வழியற்றவர்களாக இருக்கிறோம்.

நம் காலத்தின் சிறந்த கதைசொல்லிகளான தாத்தாவும், பாட்டிகளும்கூட தங்களது பொழுதையும் கவனத்தையும் சின்னத்திரைக்கு தாரை வார்த்துவிட்ட பின் குழந்தைகள் பவர் ரேஞ்சரையும், டோராவையும் தேட வேண்டியவர்களாகி இருக்கின்றனர். ஒரிரு விதிவிலக்கு பாட்டிமார்களிடமும் கையிருப்பு கதைகளாக தந்திர நரியும், திருட்டு காகமும்தான் இருக்கின்றன.

‘என் பையன் எப்பவும் டி.விதான் பார்க்கிறான்’ என்ற குற்றசாட்டை உதிர்க்கும் பெற்றோரிடம் நான் தவறாமல் சொல்வது ‘நீங்கள் கொஞ்ச நேரம் அவனை பாருங்கள்; அவன் எதையுமே பார்க்க மாட்டான்’ என்பதுதான். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க கதைகளோ, பாடல்களோ, விடுகதைகளோ நம்மிடம் இல்லை. ஆனால், அந்த கையாளாகாத நிலையை மறைக்க அப்பாவி குழந்தைகள் மீது கை நிறைய புகார்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.

ஒரு நாற்காலி உயரம் கூட வளர்ந்திராத எட்டு வயதில், என்னை ஒரு கிளைநூலகத்தின் உறுப்பினராக்கினார் என் தந்தை. யாராவது ஒரு பெரியவர் உதவியின்றி நூலக அலமாரியை அணுகக் கூட முடியாத வயதில் வாசிப்பு ஆரம்பமாகியது. வாண்டுமாமா என் கதையுலகின் வாசலைத் திறந்துவிட்டார். இன்றளவும் வெளியேறும் வழியறியாத ஆட்டினைப்போல கதைகளைத் தின்று கொண்டே இருக்கிறேன். இத்தனை குரூரமான வாழ்க்கையை, அயற்சியூட்டும் அன்றாடங்களைக் கடக்க கதைகளைவிட வேறென்ன துணை இருக்க முடியும்?!

கதைகளைத் தவிர்த்து எதிர்படும் குழந்தைகளுக்கு வரைந்து காண்பிக்க ஏராளமான கேலிச்சித்திரங்களைக் கற்று வைத்திருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கும், செய்து காண்பிப்பதற்குமான எளிய மேஜிக்குகள், சிறிய பேப்பர் விளையாட்டுகள், புதிர்கள், என எனது கையிருப்பு அதிகம். இவைகளைத் தவிர்த்து பலகுரலில் பேசுவது, வேடிக்கை கதைப்பாடல்கள், சிறிய நாடகங்கள் என மழலைகளை மகிழ்வூட்டும் பலவற்றை போகிற போக்கில் தெரிந்து வைத்திருக்கிறேன். வேலுசரவணன் போன்றோ, கூத்தபிரான் போன்றோ குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு இவைகளைக் கற்கவில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்குறியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தெரிந்து கொண்டவை. ஏனெனில், குழந்தைகளுக்கு மட்டுமே மனிதர்களைப் புரிந்து கொள்ளும் குணம் இருக்கிறது.

என்னிடம் கதை கேட்டலையும் குழந்தைகள் எல்லாம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளை அடைந்துவிட்டபின்னும், இன்றும் நான் ஊர் திரும்புகையில் ‘கனாக்காணும் காலங்களை’ மறந்துவிட்டு அதே மாறாத குதுகலத்துடன் ‘செல்வாண்ணே..’ என வாஞ்சையோடு அழைப்பதும், செக்கடித் தெரு மதினிமார்கள் ‘செல்வா எத்தன வருசமானாலும்... புள்ளைக ஒன்ன மறக்குதா பாரு...’ என வியப்பதும் எத்தனை மகிழ்ச்சிகரமானது. நாடகம், நடனம், கிரிக்கெட், சைக்கிள், ஓவியம், செஸ், கணிதம், பக்திபாடல்கள் என ஒவ்வொன்றிலும் இன்று அக்குழந்தைகள் பெறும் பரிசுகளை என் ஒவ்வொரு வருகையிலும் காட்டி மகிழ்கிறது. ‘ஓரே பொஸ்தகங்களை கட்டி அழுறீயே... பைசா பிரயோசனம் உண்டாவென...’ நேற்று கேட்ட அறை நண்பனுக்கு இந்த பரிசுகளையும், அதைக் காட்டிச் சிரிக்கும் பிள்ளைகளையும் காண்பிக்கலாமா?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

Thursday, March 13, 2008

செளந்தர விஜயன்

ஜூனியர் விகடன் இதழின் சேலம் பகுதி புகைப்படக்காரர் செளந்தர விஜயன் இன்று காலை சாலை விபத்தில் காலமாகி விட்டார். அவரது மரண செய்தியை கேள்வியுற்ற பொழுதிலிருந்து உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அஞ்சலி கட்டுரைகளை ஒருபோதும் எழுதகூடாது என்பது எனக்கு நானே விதித்துக்கொண்டிருந்த கட்டுப்பாடு. ஒருவன் பழுத்திருக்கும்போது பழம் தின்னாமல், பட்ட பின் வந்து புழுக்கொத்துவதாகத்தான் இரங்கல் கூட்டங்களும், அஞ்சலி கட்டுரைகளும் இருக்கின்றன. ஆனால் மரண செய்திகள் நினைவைக் கிளறிவிடும் வல்லமை பெற்றவை. அதை எதிர்கொள்ளும் எல்லாரது ஞாபக அறைகளும் சடக்கென திறந்துவிடுகிறது. எதையாவது செய்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டால் ஒழிய அதன் கதவுகளை பூட்ட முடிவதில்லை.
விஜயன் நல்லவர். அதற்கு ஆதாரம் அவர் என்னை வெறுத்ததே. விஜயனால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர்களுள் முதன்மையானவனாக நான் இருந்தேன். என்னை வெறுப்பவர்கள் நல்லவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது நானே கண்டறிந்த உண்மை. பால் பேதமில்லாமல் பழகக்கூடிய கன்னியம் அவரது மிகப்பெரிய அலங்காரமாக இருந்து துருத்திக்கொண்டே இருந்தது. மென்மையான வார்த்தைகளை மட்டும்தான் பிரயோகிப்பார். அவருடனான எனது நான்காண்டு கால தொடர்பில் ஒரு நிமிடத்திற்கு மேல் உரையாடல் நீடித்ததே இல்லை. அளவாக பேசுபவர் என்று எனக்கு படவில்லை. என்னிடம் ஒரு நிமிடத்தை அளவாக வைத்துக்கொண்டிருந்தார் என்பது புரிய ஆரம்பித்தபின் தொடர்புகள் முற்றாக அறுந்தது.
என் குறித்து அவர் முன் தீர்மானம் செய்திருந்த சிலவற்றில் பல தவறானவை என்பதை அவர் உணரத்தொடங்கிய கடைசி காலங்களில் என்னோடு மணிக்கணக்காக பேசுபவராக மாறியிருந்தார். கடந்த வாரம் விருகம்பாக்கத்தில் ஒரு ரோட்டோரத்தில் எனது இருசக்கர வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவிட்டு அவர் பேசுவதை 'ஊம்..' மட்டும் கொட்டி மணிக்கணக்காக கேட்டுக்கொண்டிருந்தேன்.
புகைப்படம் எடுப்பதை பொறுத்தவரை அவர் ஒரு சராசரி புகைப்படக்காரர்தான். ஆனால், புலனாய்வுப் பத்திரிகைகளுக்கேற்ற 'டீடெய்ல்டு போட்டாகிராஃபி'யில் வல்லுனராகத்தான் இருந்தார். புகைப்படம் எடுப்பதோடு தன் பணிகள் நிறைவடைந்ததாக நினைப்பவரல்ல அவர். அவரிடம் எழுதுவதற்கான வேட்கை இருந்தது. தயக்கம்தான் தடுத்துக்கொண்டிருந்தது. நன்மையில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். எவரோடும் புகார்களோ, வன்மங்களோ இல்லாதவர். அவரது மரணம் மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது.

Tuesday, March 11, 2008

கவிதைகளை தின்னும் கவிதை

ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலொரு தீயெறிய
கைக்குழந்தை சுமையோடு
கார் கதவை சுரண்டுகிறாள்
உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான் அயோக்கியன்
- ரமேஷ் வைத்யா