Monday, March 24, 2008

கதைகளைத் தின்பவன்!

குழந்தைகளை மிகவும் விரும்புபவனாகவும், குழந்தைகளால் பெரிதும் விரும்பப் படுபவனாகவும் பல காலங்களாக இருந்து வருகிறேன். குழந்தைகளை ஒருவன் விரும்புவதில் சிறப்போ, வியப்போ இல்லைதான். ஆனால் எந்தக் குழந்தையும் முதல் சந்திப்பிலேயே அட்டையென ஒட்டிக்கொள்வதும், விடைபெற்றுப் பிரிகையில் வீறீட்டு அழுவதும் அந்த பிரியத்தின் காரணிகள் என்னவாக இருக்கும் என்கிற யோசனையை கிளற செய்கிறது.

நான் கதைகளின் கிட்டங்கி. பால்யத்திலிருந்தே நினைவின் மடிப்புகளில் ஆயிரமாயிரம் கதைகளைச் சேமித்து வந்திருக்கிறேன். எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தாம். சிறுவயதில் அம்புலிமா, பாலமித்ரா, கோகுலம், பூந்தளிர் இதழ்களில் வாசித்த கதைகளும் கதாபாத்திரங்களும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. என் மடியேறும் எந்தக் குழந்தையும் கதைகளைச் சுவைக்காமல் இறங்கியது இல்லை. எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கின்றன. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. புத்தகங்களில் இருக்கிற கதைகளை விட்டு விடுங்கள். நாம் அறிந்திருக்கிற பக்தி கதைகளையோ, நமது குடும்ப வரலாற்றினையோகூட சுவைபட சொல்ல வழியற்றவர்களாக இருக்கிறோம்.

நம் காலத்தின் சிறந்த கதைசொல்லிகளான தாத்தாவும், பாட்டிகளும்கூட தங்களது பொழுதையும் கவனத்தையும் சின்னத்திரைக்கு தாரை வார்த்துவிட்ட பின் குழந்தைகள் பவர் ரேஞ்சரையும், டோராவையும் தேட வேண்டியவர்களாகி இருக்கின்றனர். ஒரிரு விதிவிலக்கு பாட்டிமார்களிடமும் கையிருப்பு கதைகளாக தந்திர நரியும், திருட்டு காகமும்தான் இருக்கின்றன.

‘என் பையன் எப்பவும் டி.விதான் பார்க்கிறான்’ என்ற குற்றசாட்டை உதிர்க்கும் பெற்றோரிடம் நான் தவறாமல் சொல்வது ‘நீங்கள் கொஞ்ச நேரம் அவனை பாருங்கள்; அவன் எதையுமே பார்க்க மாட்டான்’ என்பதுதான். குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க கதைகளோ, பாடல்களோ, விடுகதைகளோ நம்மிடம் இல்லை. ஆனால், அந்த கையாளாகாத நிலையை மறைக்க அப்பாவி குழந்தைகள் மீது கை நிறைய புகார்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.

ஒரு நாற்காலி உயரம் கூட வளர்ந்திராத எட்டு வயதில், என்னை ஒரு கிளைநூலகத்தின் உறுப்பினராக்கினார் என் தந்தை. யாராவது ஒரு பெரியவர் உதவியின்றி நூலக அலமாரியை அணுகக் கூட முடியாத வயதில் வாசிப்பு ஆரம்பமாகியது. வாண்டுமாமா என் கதையுலகின் வாசலைத் திறந்துவிட்டார். இன்றளவும் வெளியேறும் வழியறியாத ஆட்டினைப்போல கதைகளைத் தின்று கொண்டே இருக்கிறேன். இத்தனை குரூரமான வாழ்க்கையை, அயற்சியூட்டும் அன்றாடங்களைக் கடக்க கதைகளைவிட வேறென்ன துணை இருக்க முடியும்?!

கதைகளைத் தவிர்த்து எதிர்படும் குழந்தைகளுக்கு வரைந்து காண்பிக்க ஏராளமான கேலிச்சித்திரங்களைக் கற்று வைத்திருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கும், செய்து காண்பிப்பதற்குமான எளிய மேஜிக்குகள், சிறிய பேப்பர் விளையாட்டுகள், புதிர்கள், என எனது கையிருப்பு அதிகம். இவைகளைத் தவிர்த்து பலகுரலில் பேசுவது, வேடிக்கை கதைப்பாடல்கள், சிறிய நாடகங்கள் என மழலைகளை மகிழ்வூட்டும் பலவற்றை போகிற போக்கில் தெரிந்து வைத்திருக்கிறேன். வேலுசரவணன் போன்றோ, கூத்தபிரான் போன்றோ குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு இவைகளைக் கற்கவில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்குறியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தெரிந்து கொண்டவை. ஏனெனில், குழந்தைகளுக்கு மட்டுமே மனிதர்களைப் புரிந்து கொள்ளும் குணம் இருக்கிறது.

என்னிடம் கதை கேட்டலையும் குழந்தைகள் எல்லாம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளை அடைந்துவிட்டபின்னும், இன்றும் நான் ஊர் திரும்புகையில் ‘கனாக்காணும் காலங்களை’ மறந்துவிட்டு அதே மாறாத குதுகலத்துடன் ‘செல்வாண்ணே..’ என வாஞ்சையோடு அழைப்பதும், செக்கடித் தெரு மதினிமார்கள் ‘செல்வா எத்தன வருசமானாலும்... புள்ளைக ஒன்ன மறக்குதா பாரு...’ என வியப்பதும் எத்தனை மகிழ்ச்சிகரமானது. நாடகம், நடனம், கிரிக்கெட், சைக்கிள், ஓவியம், செஸ், கணிதம், பக்திபாடல்கள் என ஒவ்வொன்றிலும் இன்று அக்குழந்தைகள் பெறும் பரிசுகளை என் ஒவ்வொரு வருகையிலும் காட்டி மகிழ்கிறது. ‘ஓரே பொஸ்தகங்களை கட்டி அழுறீயே... பைசா பிரயோசனம் உண்டாவென...’ நேற்று கேட்ட அறை நண்பனுக்கு இந்த பரிசுகளையும், அதைக் காட்டிச் சிரிக்கும் பிள்ளைகளையும் காண்பிக்கலாமா?!

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.

5 comments:

கோபிநாத் said...

\\Labels: சுயதம்பட்டம் \\

அருமையான சுயதம்பட்டம் ;)

ramesh vaidya said...

இதைப் படித்ததும் தின்பதைக் கதைப்பவன் பற்றிய நினைவு எழுந்தது. தாயிஃப்ல மீன் குழம்பு நல்லா இருக்கும். சங்கத்துல போன்லெஸ் பெப்பர் சிக்கனுக்கு நம்பி சந்தாவே கட்டலாம். மயிலாப்பூர் மாமி மெஸ்ல சாப்பிடப் போயித்தான் கர்நாடிக் மியூஸிக்ல ஆர்வம் பிறந்துச்சு.
இது அத்தனையும் கதை. ஆள் சட்டையைக் கழற்றிப் போட்டால் நாய் தூக்கிவிடும். இவன் தீவனத்தைப் பற்றிப் பேசுவதனைத்தும் நபும்சகனின் காம வரலாறு.

புதுகைத் தென்றல் said...

சத்தியமாக என் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுக்கு.

EXODUS CAR RENTALS said...

இது எஸ் ரா வின் எழுத்துக்கள் ஆயிற்றே நண்பரே !

EXODUS CAR RENTALS said...

இது எஸ் ரா வின் எழுத்துக்கள் ஆயிற்றே நண்பரே !